5. சாக்லேட்
"அம்மா அம்மா! இங்க பாரும்மா இது நம்ம அப்பா தானே?" என்ற மகனின் குரல் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அஸ்வினுக்கு தூரத்தில் கேட்டது. தூக்கம் கலைந்து அப்படியும் இப்படியுமாகப் புரண்டான். உதடுகளில் ஒரு சிறு புன்னகை உறைந்திருந்தது. உடலும் மனமும் மகிழ்ச்சியாக, நிறைவாக இருப்பது போல் தோன்றியது. வெளியே நடக்கும் உரையாடல் தெரியாமல், இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரிய பிரளயம் வெடிக்கப் போவதையும் அறியாமல் முந்தைய இரவின் நினைவில் நன்றாகவே சிரித்தான்.
மகள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். 'எவளை நினைச்சு சிரிச்சுகிட்டு இருக்கீங்க?" என்று அஸ்வினி கேட்டபோது கோபம் பொத்துக் கொண்டு தான் வந்தது. இங்கு இருக்கப்போகும் சில நாட்களையும் சண்டையிட்டுக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தவன், உடனடியாக முகத்தை மாற்றி, "உன்னை தான் நினைச்சேன்னு சொன்னா நம்பவா போறே?" என்றான் ஒரு மந்தகாசப் புன்னகையுடன். அது எப்போதும் போல அஸ்வினியை ஈர்க்கத்தான் செய்தது.
அதைக் காட்டிக்கொள்ளாமல் தன் கடுகடுப்பான பாவனையால் மறைத்தவள், "நீங்க சொல்றதை நான் நம்பணும்?" என்றாள். "நான் சொன்னா நீ உடன்ன்ன்னே நம்பிடுவியே.. எனக்குத் தெரியுமே" என்றான். முந்தைய காலங்களில் பல விஷயங்களில் அஸ்வினி அஸ்வினை நம்பவில்லை தான். அவன் நக்கலாகச் சொன்ன விதத்தில் நம்பியிருந்தால் நன்றாக இருக்கும், பல பிரிவுகள் வந்திருக்காது என்று அவளுக்கும் தோன்றத்தான் செய்தது.
ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தாள். "இப்படி சும்மாவே உட்கார்ந்து இருந்தா எப்படி? ஏதாவது சொல்றது.." என்றான் அஸ்வின். அவனுடைய கிண்டல் நக்கல் பேச்சுக்களை ஒரு காலத்தில் அஸ்வினி மிகமிக ரசிப்பாள். இப்போது பல சமயங்களில் அவை அவளுக்கு எரிச்சலைத் தான் கொடுக்கின்றன.
அதற்கும் அஸ்வினியிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அஸ்வினை நேராகப் பார்க்காமல் முறைத்துக் கொண்டிருந்தாள். "எப்பவும் போல சண்டையாவது போடு.. எனக்கு போர் அடிக்குது இல்ல.. அப்புறம் போனை எடுத்து நோண்டினேன்னா அதுக்கும் ஏதாவது சொல்லுவ" என்று அஸ்வின் கூறினான். சொல்லி முடித்த பின்தான் ஐயையோ தப்பா சொல்லிட்டோமா என்று நினைத்தான்.
நல்லவேளையாக அன்று அஸ்வினியை ஏதோ காதல் தேவதை வந்து ஆசிர்வாதம் செய்திருந்தது. "நானா சண்டை போட வந்திருக்கேன்.. உங்களுக்காக சாக்லேட் எடுத்துட்டு வந்தேன்.. பாருங்க என்னைச் சொல்லணும்" என்று தன் நைட்டியின் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்த கேட்பரீஸ் டெம்பட்டேஷன்ஸ் பட்டையை வெளியே எடுத்தாள்.
இரண்டு பிள்ளை பெற்ற பின்பும் அஸ்வினியிடம் மிச்சமிருக்கும் குழந்தைத்தனம் அஸ்வினுக்கு மிகவும் பிடிக்கும். "உங்க பொண்டாட்டியை சாக்லேட் கொடுத்துக் கூட ஏமாத்திடலாம் பாஸ்.. என் பொண்டாட்டிய ஏமாத்துறது கஷ்டம்" என்று அவனது சகலை, அஸ்வினியின் அக்கா கணவன் கூட சொல்வான்.
"இந்த சாக்லேட் உனக்கு பிடிக்கும் இல்ல குடு குடு சாப்பிடுவோம்" என்று அஸ்மின் எழுந்து வசதியாக உட்கார்ந்து கையை நீட்ட, "நான் குடுக்க மாட்டேன்.. என்னை சண்டைக்காரின்னு சொன்னீங்கல்ல.. இது எனக்குத் தான்" என்று அவள் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். "அச்சி குட்டி.. அதை ஒரு வாரத்துக்கு வச்சு சாப்பிடலாம்டி.. முழுசா ஒரே ஆள், ஒரு நாள்ல சாப்பிடக்கூடாது.. நல்லதில்ல.." என்று அஸ்வின் பதறினான்.
"அது உங்க குடும்பத்துக்கு.. நாங்கள்லாம் ஒரே நாள்ல முழுசா சாப்பிடுவோம்" என்றாள். அஸ்வினுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது. இது ஒன்றும் புதிதான பேச்சு இல்லையே என்று உடனேயே தோன்ற, "ஆமா எங்க அம்மா அப்பா அண்ணன் எல்லாருக்கும் சுகர் இருக்கு.. அதனால கம்மியா சாப்பிடுவோம்.. உங்க வீட்டில தான் யாருக்கும் சுகர் இல்லையே.. அதனால நீ முழுசா சாப்பிடலாம். சாப்பிடு சாப்பிடு" என்று கூறிவிட்டு போர்வையை தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திப் படுத்தான்.
உண்மையில் அஸ்வினின் வீட்டில் யாருக்கும் சுகர் கிடையாது. அஸ்வினியின் தாய் தந்தை இருவரும் தான் சர்க்கரை நோயாளிகள். சர்க்கரை பாதிப்பு அதிகமாகி தான் அவள் அப்பா இறந்து போனார். அஸ்வினிக்கும் தான் சொன்னது தவறு என்று பேசிய பின் தான் உறைத்திருக்கும் போலும்..
"இந்த கோர்ஸ் முடிச்சுட்டு வந்து இங்கேயே இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க.. அப்பதான் நான் சாக்லேட்டைக் கொடுப்பேன்" என்றாள்.
எப்போதும் குடும்பத்தில் சண்டை வருவதும் அதன்பின் ஏதாவது படிக்கப் போகிறேன் என்று அஸ்வின் வெளியூர் போவதும் வாடிக்கை. போதும் இந்த கண்ணாமூச்சி என்று தோன்றத் துவங்கியிருந்தது. அவர்கள் சண்டைபோட்டு வெகுநாட்கள் ஆகியிருந்தன. போனமுறை எதற்காக சண்டையிட்டோம் என்பதையும் அஸ்வின் மறந்திருந்தான். வழக்கமாக அவன் சண்டைக்கான காரணங்களை நினைவு வைத்திருப்பதும் இல்லை. அஸ்வினி தான் நினைவு வைத்திருப்பாள். 'எதுக்கு நான் சண்டை போட்டேன்கிறதையே மறந்துட்டீங்க.. அப்புறம் நான் சொல்றதுக்கு, என் ஃபீலிங்ஸுக்கு என்ன மதிப்பு இருக்கு?" என்று அதற்கும் சண்டை போடுவாள் அஸ்வினி.
இங்கேயே வந்துடுங்க என்று கூறியதும் அவனுக்கு மனது குளிர்ந்து விட்டது. ஏற்கனவே உல்லாசமான மனநிலையில் தான் இருந்தான். "நீ என்ன சாக்லேட் கொடுக்கிறது.. நானே எடுத்துக்கிறேன்.." என்று அவன் அஸ்வினியின் அருகில் போக, அஸ்வினி கையிலிருந்த சாக்லெட்டை வேகமாகக் கடித்துவிட்டு பின்பக்கமாக மறைக்கப் போனாள். அதன் பின் கையில் இருந்து எடுக்காமல் வேறு இடத்திலிருந்து எடுக்க வேண்டியதாயிற்று அஸ்வினுக்கு. அதன்பின் எப்போதும் அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி, சில ரசாயன மாற்றங்களை நிகழ்த்த அந்த இரவு இனிமையான இரவாகிப்போனது. "எப்படிடா 365 நாளும் சண்டை போடுறீங்க.. நடுவுல ஒண்ணு ரெண்டு நாள் ராசி ஆகிடுறீங்க.. அப்படியே புள்ளக் குட்டியையும் பெத்துப் போடுறீங்க.. முடியலடா உங்களோட.. சண்டை போட்டேன் சண்டை போட்டேன்னு வந்து என்கிட்ட புலம்புறவன் சமாதானமான கதைகளை என்னைக்காவது சொல்லி இருக்கியாடா?" என்பாள் ஜெயந்தி.
'கரெக்ட்டு தான்.. மாதாஜி சொல்ற கெமிஸ்ட்ரி தான் எங்க ரெண்டு பேரையும் பிரிய விடாமல் பிடிச்சு வச்சிருக்கு.. அஸ்வினி எதுவும் சொல்லிட்டுப் போட்டும்.. எனக்காக, பிள்ளைகளுக்காக, ஏன் அவளுக்காகவும் சேர்த்து இனிமே ஓடிப்போகாம இருக்கப் பார்ப்போம்" என்று அஸ்வின் முடிவு செய்தபோது கதவு தடாலடியாகத் திறந்தது.
"கடைசில உங்க புத்தியைக் காட்டிட்டீங்க இல்ல..?" என்று ஆவேசமாக அஸ்வினி கூற, மகிழ்ச்சியான சங்கிலித் தொடராக இருந்த நினைவுகள் அறுபட்டு எழுந்து அமர்ந்தான் அஸ்வின்.
"இங்க பாருங்க.. என்னென்ன போட்டு இருக்கான்னு.. மத்தவங்க எல்லாம் ஆயிரம் சொல்லும்போது நான் நம்பலை.. எங்க அம்மாகிட்ட கூட உங்களுக்காக சண்டை போட்டேன்.. இப்பப் பாருங்க உங்க வண்டவாளத்தை எல்லாம் இதுல நியூஸா போட்டுருக்காங்க" என்று மொபைலைக் காண்பித்து தையா தக்கா என்று குதித்தாள் அஸ்வினி.
திறந்திருந்த கதவு வழியே அங்கு ஓரமாக அவளுடைய அம்மா ஈஸ்வரி நின்று சண்டையை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. நிச்சயம் இதற்கு கொஞ்சம் முன்னால் அவருடைய தூபமும் நிச்சயம் இருக்கும். "என்ன நியூஸ்? என்ன போட்டுருக்கான்? என்னைப் பத்தி நியூஸ் போடுற அளவுக்கு நான் பெரிய ஆளா என்ன?" இன்று அஸ்வின் மொபைலுக்கு கைநீட்ட, "இது யாரு புது கேரக்டர்? இதுவரைக்கும் நான் நீங்க சொன்னதே இல்ல.. பிரீத்தின்னா யாரு?" என்று அஸ்வினி கேட்க,
"ப்ரீத்தியா? யாரது?" என்றான் அஸ்வினும்.
கல்லூரியில் படிக்கும் போது அவனுக்கு பிரீத்தியுடன் அதிக பழக்கம் இல்லை. முந்தைய நாள் ஜெயந்தியுடன் ப்ரீத்தியை சந்தித்ததையே மறந்து விட்டிருந்தான். "ஏதோ ஃபாரின்ல இருந்து வந்த பொண்ணாம்.. டைவர்ஸ் ஆயிடுச்சாம்.. அவளுடைய கோர்ட் கேஸ் ஏதோ உலக ஃபேமஸாம்.. அந்தப் பொண்ணை நீங்க தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாம்.. இந்த சேனல்ல சொல்றான்?" என்று அஸ்வினி ஆவேசமாகக் கூற,
"நானா?!" என்று அதிர்ந்த அஸ்வின் அந்த மொபைலை வெடுக்கென்று பிடுங்கி அவள் சொன்ன வீடியோவை மறுமுறை ஓடவிட்டான். அது அவனது மாமியாரின் மொபைல். இப்போதெல்லாம் சீரியல்கள், யூடியூப் வீடியோக்கள் அனைத்தையும் மொபைலில் தான் பார்க்கிறார். 'நல்ல வேளை இதைப் பார்த்துப் பொழுதைக் கழிக்கிறதால அதிகமா சண்டை மூட்டக் கூட நேரம் இருக்கிறதில்லை' என்று ஒரு சமயமும், 'இப்படி கழிசடை ப்ரோகிராம்களைப் பார்த்துதான் இந்த அம்மா குடும்பத்துக்குள்ள கூனி வேலை பார்த்து சண்டை மூட்டி விடுது' என்றும் மற்றொரு சமயமும் நினைப்பான் அஸ்வின்.
"உங்க அம்மா பார்க்கிற நியூஸ் சேனல் தானே.. நிச்சயம் விளங்காததாத் தான் இருக்கும்" என்று முணுமுணுத்தபடி அதைப் பார்த்தான். Behind doors என்று கிசுகிசுவுக்கென்றே பிரபலமான, பெயருக்கேற்றாற் போல் கதவுக்குப் பின் எட்டிப் பார்க்கும் யூடியூப் சேனல் அது. வழக்கமாக சினிமா, டிவி நடிகர்களின் பின்புலத்தைத் தான் அலசி ஆராய்ந்து காயப் போடுவார்கள். இப்போது கண்டெண்ட் கிடைக்கவில்லையோ என்னவோ, சாதாரண மனிதர்களின் வாழ்விலும் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தனர்.
'இந்தியாவையே உலுக்கிய பிரபல வழக்கு! சாதித்துக் காட்டிய சாதனைப் பெண்மணி மீண்டும் இந்தியா விஜயம்! ஏன்? மறுமணம் காரணமா?' என்று தலைப்பையே முழநீளத்திற்குப் போட்டிருந்தார்கள். 'என்ன?! இந்தியாவையே உலுக்கின வழக்கா? நமக்கு எதுவும் தெரியாதே?' என்று அதைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
'எட்டு வருடங்களுக்கு முன்..' என்று ஆரம்பித்து இழு இழு என்று இழுத்து முந்தைய நாள் அவர்கள் ரெஸ்டாரண்டில் அமர்ந்தபடி எடுத்திருந்த புகைப்படம், அதில் ஜெயந்தி, அவள் பிள்ளைகள், அஸ்வின், ப்ரீத்தி, ப்ரீத்தியின் மகள் எல்லாரும் தெரிந்தார்கள். அஸ்வினையும் ப்ரீத்தியையும் மட்டும் பெரிதாக்கி மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டினார்கள். அந்த ஒற்றைப் புகைப்படத்தையே பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஓட்டி ஏதேதோ கதை சொல்ல, இறுதியாக அஸ்வினுக்குப் புரிந்தது இதுதான்.
எட்டு வருடங்களுக்கு முன்பாக லண்டனில் வைத்து ப்ரீத்திக்கும் அவள் கணவனுக்கும் ஒத்துக் கொள்ளாமல் போய் விவாகரத்தாகி இருக்கிறது. இருவரும் அந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருந்தவர்கள். அங்கேயே குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு அந்த நாட்டுக் குடியுரிமை. குழந்தை ப்ரீத்தியுடன் இருக்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவன் பார்க்கலாம் என்று அந்த நாட்டு நீதிமன்றம் அவள் எக்ஸ் கணவனுக்கு அனுமதி அளித்திருந்தது. ஒரு வயதே நிரம்பியிருந்த வைதேகியை ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பார்க்கப் போன எக்ஸ் கணவன், 'பக்கத்துல பார்க்குக்கு கூட்டிட்டுப் போறேன்' என்றுவிட்டு அப்படியே குழந்தையை விமானம் ஏற்றி இந்தியாவிற்குக் கொண்டு வந்திருக்கிறான். குழந்தைக்கு விசா, டிக்கெட் எடுப்பதற்கான ப்ரீத்தியின் கையெழுத்தை சிலபல ஆவணங்களில் ஃபோர்ஜரி செய்து அவனே போட்டிருக்கிறான். குழந்தையைக் காணாமல் தவித்த ப்ரீத்தி, விஷயம் அறிந்து பெரும் போராட்டங்களுக்கு இடையில் தனியே இந்தியாவிற்குக் கிளம்பி வந்திருக்கிறாள். தனியாக இந்தியாவில் அப்போது இருந்து வந்த அவளது அம்மாவின் வாயிலாக ஆட்கொணர்வு மனு (Habeas corpus petition) ஒன்றை ஹை கோர்ட்டில் சமர்ப்பித்து அதில் குறுகிய காலத்தில் வெற்றியும் பெற்று பின் குழந்தையை மீட்டு தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறாள்.
இந்த வழக்கை நடத்தியது தியாகராஜன் என்ற திறமைவாய்ந்த வக்கீல் என்றும் ஓரிரு வரிகள் சேர்த்து அந்த வீடியோவில் சொன்னார்கள். கூடவே அந்த எக்ஸ் கணவனின் அரசியல் பின்புலம், அவன் கண்ணில் இவர்கள் விரலைவிட்டு ஆட்டினார்கள் என்றெல்லாம் அந்த செய்தியில் கோர்த்துவிட்டார்கள். இங்கிலாந்து நாட்டுக் குடியுரிமை பெற்ற குழந்தையை கடத்திய குற்றத்திற்காகவும், ஆவணங்களை ஃபோர்ஜரி செய்த குற்றத்திற்காகவும் அந்த எக்ஸ் மேல் இன்னும் இங்கிலாந்தில் வழக்கு நடக்கிறது என்பதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லி விட்டு, இந்தப் புகைப்படத்தையும் போட்டு ஏதோ அஸ்வினை சந்திக்கத் தான் அவள் இந்தியா வந்திருக்கிறாள் என்பது போல் பற்றவைத்து இவன் குடும்பத்தில் கும்மாங்குத்து ஆடிவிட்டது அந்த மொக்கை சேனல்.
தன்னை சம்பந்தப்படுத்தி ஏதோ வேண்டாத செய்திகளைப் போட்டிருக்கிறார்கள் என்பது அஸ்வினுக்குப் பெரிதாக உரைக்கவில்லை. 'அட ப்ரீத்திக்கு இப்படி ஒரு பேக்ரவுண்ட் இருக்கா? எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவ்வளவு சென்சேஷனல் நியூஸா அது? அப்ப நான் எங்கே இருந்தேன்.. இந்த மாதாஜி நம்ம கிட்ட சொல்லவே இல்ல குறைந்தது மாசம் இரண்டு தடவையாவது அவ கிட்ட பேசுறேன்.. ஒரு வார்த்தை மூச்சு விட்டாளா பாரு!' என்று நினைத்தவன் உடனடியாக தன் மொபைலை எடுத்து ஜெயந்தியை அழைத்தான்.
"இங்கே கேட்ட கேள்விக்கு கொஞ்சமாவது பதில் சொல்றாரா பாரு? நமக்கு பதில் சொல்லாம அங்க ஃபோனை எடுத்து யாருக்கோ டயல் பண்ணிக்கிட்டு இருக்காரு!" என்று ஈஸ்வரி அஸ்வினியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
"என்னங்க உங்களைத் தானே.. கேட்கிறது காதுல விழுதா விழலையா? நேத்து நேரா நீங்க ஏர்ப்போர்ட்ல இருந்து இங்க வரலையா? நினைச்சேன்! சூப்பர் மார்க்கெட் பில்லை பார்க்கிற போதே நினைச்சேன்.. சரி ஏதோ டெல்லியில வாங்கணும்னு மறந்து போனதை இங்கே வந்து வாங்கிட்டு வந்திருக்கீங்கன்னு பாத்தா ஊரெல்லாம் சுத்திட்டு வந்திருக்கீங்க.. அந்த டெம்ப்டேஷன்ஸ் சாக்லேட் கூட அந்த கவர்ல தான் இருந்தது. அதைப் புதுசா பாத்த மாதிரி பாத்தீங்க.. நீங்க வாங்கலேல்ல? ஏன் என்கிட்ட சொல்லல?" என்று அஸ்வினி கேட்டுக்கொண்டிருக்க, அங்கு அஸ்வினின் அழைப்பை ஏற்க சற்றுத் தாமதமானது ஜெயந்திக்கு.
'காலங் கார்த்தால ஏன் கூப்பிடுறான்?' என்று நினைத்து அந்த ரிங்டோன் முடிவதற்கு சற்று முன்பு அந்த அழைப்பை ஏற்றாள் ஜெயந்தி. அஸ்வின், "மாதாஜி! ஊர்க்கதையெல்லாம் பேசுவியே.. இதைச் சொல்லல நீ? இந்த ப்ரீத்தி பொண்ணு அவ்வளவு ஃபேமஸா? நேத்து கூட சொல்லலையே நீ?" என்றான்.
என்ன ஏது என்று புரிந்து ஜெயந்தி பதில் சொல்ல வாயெடுக்கும் முன், இந்தப் புறம் அஸ்வினி, "ஓஹோ! இன்னமும் நீங்க 'இது' கூட ரெகுலரா ஊர்க்கதை பேசிகிட்டு தான் இருக்கீங்களா? எவ்வளவு சொல்லியும் கேக்கலைல்ல?" என்று அங்கு மேஜையில் இருந்த பொருட்களைத் தூக்கித் தரையில் போட ஆரம்பித்தாள். அதுவரையிலும் தூங்கிக்கொண்டிருந்த அவர்களது மகள் இரண்டு வயது ஈஷா எழுந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
குழந்தையின் அழுகுரலும் அஸ்வினியின் சத்தமும் ஜெயந்திக்குக் கேட்க, ஏதோ சண்டை என்பது மட்டும் புரிந்தது. "அதெல்லாம் ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்ல.. அப்புறம் பார்க்கலாம்" என்று கூறி வைத்து விட்டாள்.
"அழகா எங்க வழியில ஆயிரம் மாப்பிள்ளை வந்துச்சு.. உங்க அப்பாதான் ஒரே பிடிவாதமா ஊர்ல இல்லாத மாப்பிள்ளைன்னு பார்த்து இவரைக் கட்டி வச்சுட்டுப் போயிட்டாரு.. இப்ப என் பொண்ணுல்ல கண்ணைக் கசக்கிட்டு நிக்கிறது..?" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஈஸ்வரி பேச,
"அத்தை! கொஞ்சம் நிறுத்துறீங்களா? எப்பவும் சின்ன விஷயத்தை பெருசாக்குறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.. இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் ஏன் பார்க்கறீங்க? ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் குடுத்தது தப்பாப் போச்சு உங்களுக்கு" என்றான் அஸ்வின்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு மிகப் பெரிய சண்டையைத் தீர்க்கும் விதமாக 'அவனவன் பொண்டாட்டியை சமாதனப்படுத்துறதுக்காக ஏதாவது கிஃப்ட் வாங்கி சமாளிப்பான்.. நாம் மாமியாருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியதா இருக்கு' என்று சலித்துக் கொண்டே ஈஸ்வரிக்கு அவன் வாங்கிக் கொடுத்த ஸ்மார்ட்போன் தான் அது. அதுவரை தொலைக்காட்சிகளில் ஓடும் தினசரி சீரியல்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. நாள் முழுவதும் எதற்கு அழுகையையும் சண்டையையும் வளரும் குழந்தைகள் வரவேற்பறை டிவியில் பார்க்கவேண்டும்.. அவர் இதிலாவது பார்த்துத் தொலைக்கட்டும் என்று தான் அஸ்வின் வாங்கிக் கொடுத்திருந்தான்.
அவன் சொன்ன மற்றவற்றை எல்லாம் விட்டுவிட்டு, "பாத்தியா பாத்தியா? இவரு போய் ரெண்டு பொம்பளப் பிள்ளைக கூட கூத்தடிச்சுட்டு வந்தது தப்பில்லையாம்.. நான் ஃபோன் பார்க்கிறது தான் குத்தமாம்.. இவர் வாங்கிக்குடுக்கப் போய்த்தானே இப்படி பேசுறாரு.. என் புருஷன் எனக்குன்னு கொஞ்சம் பணத்தை எழுதிவச்சுட்டுப் போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? என் வாழ்க்கைதான் இப்படியே போச்சுன்னா, உனக்கும் இப்படி ஆயிடுச்சே அஸ்வினி!" என்று ஈஸ்வரி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, அஸ்வினிக்குக் கோபம் பெருக்கெடுத்தது.
தன் மேல் கோபம், அஸ்வினின் மேல் கோபம், அம்மாவின் மேல் கோபம், அந்த எல்லாக் கோபங்களும் சேர்ந்து குழந்தைகள் மேல் திரும்ப, "காலங்காத்தால உனக்கு என்ன போன் வேண்டிக்கிடக்கு? பாட்டி ஃபோனை நீ என் தொட்ட?" என்று மகன் க்ருத்திக்கிற்கு முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டாள். அழுது கொண்டிருந்த ஈஷாவை வெடுக்கென்று தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
அவளும் விழித்தது இதமான மனநிலையில்தான். பல் துலக்கி, முகம் கழுவி, பாத்ரூம் கண்ணாடியில் முகம் துடைத்துக் கொண்டே தன் பூரித்த முகத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள். முந்தையநாள் அஸ்வின் காண்பித்த நெருக்கமும் கொட்டிய காதலும் இனிமேல் நானும் கொஞ்சம் மாறிக்கொள்ள வேண்டும் என்று அவளை முடிவு செய்ய வைத்திருந்தது. அந்த இதம் நீர்க்குமிழி போல் பட்டென்று உடைந்து போனதை அவளால் தாங்க முடியவில்லை. குழந்தையுடன் தரையில் அமர்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
'சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லத்தான் துடிக்கிறேன் இறுதிவரை வாய்ப்பிருந்தும் வார்த்தையின்றி தவிக்கிறேன்'