கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேடல் 1

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
பிளாஸ்டிக் என்பது பாலிமர்களை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் பரந்த அளவிலான செயற்கை அல்லது அரை-செயற்கை பொருள் ஆகும். அவற்றின் பிளாஸ்டிசிட்டி ( வளையும் தன்மை) பிளாஸ்டிக்குகளை பல்வேறு வடிவங்களில் திடப் பொருட்களாக வார்ப்பது, அழுத்தத்தால் வடிவம் பெறுவது போன்றவற்றை சாத்தியமாக்குகிறது. இந்த தகவமைப்புத் தன்மை, இலகுரக, நீடித்த, நெகிழ்வான மற்றும் உற்பத்தி செய்வதற்கு மலிவானது போன்ற பலதரப்பட்ட பிற பண்புகள், அதன் பரவலான பயன்பாட்டிற்கு வழிவகுத்தது.

-நதியாவின் குறிப்பேட்டிலிருந்து

மியாமி கடற்கரையில் தான் லாங் ஸ்கர்ட் நனையும் படி நின்று தீரேந்திரன் வருகைக்காக காத்திருந்தாள் நதியா. தீரா'ஸ் திறந்ததில் இருந்து தீரேந்திரனின் கடல் உணவுகள் மியாமியில் வெகு பிரசித்தமானது. அன்றைய கடைசி வகுப்பை முடித்துக்கொண்டு தந்தையை கடற்கரைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பிவிட்டு தன் மனத்திற்கினிய கடலன்னையோடு உறவாடிக் கொண்டிருந்தாள் நதியா.

என்ன நதி மா கண்ணு அந்த பக்கமே பார்க்குது. பாய் பிரெண்ட் யாரும் வரணுமா? என்று அவள் முதுகுப்பக்கம் நின்று தீரேந்திரன் கேட்க, சட்டென்று திரும்பி, தீரா.. உன்னை என்று தன் காலில் மோதிய நீரை வாரி தந்தை மேல் இரைத்தாள்.

டேய்.. டேய் என்று தீரா நகர, மகிழ்ச்சியில் மேலும் மேலும் நீரை இரைத்து இனிமே பாய் பிரெண்ட் அது இதுன்னு பேசுவியா? என்று அவன் காதைத் திருக,

இல்ல இல்ல சொல்ல மாட்டேன். வருங்கால மாப்பிள்ளையான்னு டையரெக்டா கேட்டுடுறேன். ஓகே வா? என்று கண்ணடித்தான்.

தீரா.. என்று அவள் தன் லாங் ஸ்கெர்டை தூக்கிப் பிடித்தபடி அவனைத் துரத்த, தீரேந்திரன் தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

தந்தையும் மகளும் ஆடி ஓடி ஓய்ந்து ஓரிடத்தில் அமர்ந்ததும்,

தீரா சும்மா சும்மா எனக்கு பாய் பிரெண்ட், உனக்கு மாப்பிளைன்னு உளராத. எனக்கு இப்போ தான் இருபத்தி ஒன்னு. முதல்ல உனக்கு ஒரு ஜோடியை செட் பண்ணனும். இல்லன்னா இப்படி தான் என்னை வம்பு பண்ணிக்கிட்டே இருப்ப என்று தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள்.

எனக்கு ஜோடியா? ஹாஹா.. காமெடி பண்ணக்கூடாது கண்ணம்மா. யாராவது அரைக் கிழவனுக்கு பொண்ணு தருவங்களா? என்று சிரிக்க,

என் தீராவுக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிடுவாங்களா? நான் தான் விட்ருவேனா? அது மட்டும் இல்லாம நீ எந்த காலத்துல இருக்க தீரா. இப்போல்லாம் கல்யாணம் பொண்ணுங்களோட இஷ்டம் தான். பொண்ணு ஓகே சொன்னா அடுத்து தீராவுக்கு டும் டும் டும் தான் என்று கண்களில் கனவு காணத் துவங்கினாள்.

எல்லாமே ஓகே நதி மா. ஆனா பொண்ணு ஓகே சொன்னா போதுமா? நான் சொல்ல வேண்டாமா? என்று தீரா மகளிடம் வம்பு வளர்க்க,

நீ ஓகே சொல்லாத அளவுக்கா தீரா நான் பொண்ணு பார்ப்பேன் என்று முகத்தை தூக்கி கொண்டவளைக் கண்டு சிறிது விட்டான் தீரேந்திரன்.

யாரு நீ? எனக்கு எந்த அளவுக்கு பார்த்தன்னு நானா தான் போன மாசமே பார்த்தேனே! உன் ரிசர்ச்க்கு உதவி செய்யற அந்த பிலாண்ட் ஹேர் பிலோமினாவை என் தலையில கட்டப்பார்த்த ஆள் தானே நீ.. என்று தீரா சொல்லிக்கொண்டு எழுந்து கொள்ள,

ஐயோ தீரா பார்க்க தான் அது கொஞ்சம் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும். மனசு சுத்த தங்கம் மாதிரி என்று தனக்கு உதவி செய்ய வந்த அந்த பெண்மணியாக நற்சான்றிதழ் வழங்கினாள் நதியா.

நல்லா சொன்ன போ. அந்த பிலோமினா என்கிட்ட கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? ஏன் இன்னும் உன்னோட பொண்ணு தனியா இல்லாம உன்னோடவே தங்கி இருக்கான்னு தான் என்று கூறி நதியாவை முறைத்தான்.

அவள் தனது சைக்கிள் நின்ற பகுதியை அடைந்து, அது இந்த ஊர் வழக்கம் தீரா. அதான் கேட்ருப்பாங்க. இதுக்கெல்லாமா நீ அவங்களை தப்பா நினைக்கிறது என்று சப்பைக் கட்டு கட்ட,

ஒழுங்கா எனக்கு பொண்ணு பாக்கற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு உன்னோட ரிசர்ச் வேலையில கவனமா இரு கண்ணம்மா. எனக்கு இன்னொரு துணை தேவையில்லை. உங்க அம்மாவையே நினைச்சிட்டு இருக்கேன்னு நாடகத்தனமா சொல்ல மாட்டேன். ஆனா அவளைத் தேடி பதினேழு வருஷமா அலஞ்சிருக்கேன். அவளையே மனைவியா மனசு முழுக்க வடிச்சிருக்கேன். இன்னொரு பொண்ணை அந்த இடத்தில் நிறுத்தி பார்க்க எனக்கு விருப்பம் இல்ல மா. எனக்கு என் நதி குட்டி இருக்கியே. அதுவே போதும். நீ, வருண், அக்கா, அம்மா உங்க நாலு பேரை பார்த்துட்டு, என்கிட்ட வேலை செய்யற குடும்பங்களோட மகிழ்ச்சியில பங்கெடுத்து நான் நிம்மதியா இருக்கேன். அதுவே எனக்கு நிறைவா இருக்கு என்று கூறி முடித்தபோது அவர்கள் தங்கி இருக்கும் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தது.

நீ வருண்னு சொல்லவும் தான் எனக்கு ஞாபகமே வருது தீரா. ரெயின் எப்போ இங்க வருவான் என்று கேட்டபடி கதவைத் திறந்தாள்.

அவனுக்கு ஏதோ வேலை இருக்காம் நதிம்மா. அவன் வரல. எப்படியும் அடுத்த மாசம் நாம இந்தியா போவோம்ல. அப்போ பார்த்துக்கலாம். என்று சொல்லி அவன் அறைக்குள் செல்ல,

வர வர இந்த ரெயின் ரொம்ப அநியாயம் பண்ணுது தீரா. வராம கொடுமை பண்ணுது. நிஜ ரெயின் மாதிரியே மாறிட்டு வருது. எப்போ வருது, வராம போகுதுன்னு ஒன்னும் தெரியல. வரும்ன்னு எதிர்பார்த்தா ஏமாத்துது. வராதுன்னு நெனச்சா.. என்று அவள் இழுத்துக்கொண்டே திரும்ப, தீரா முகத்தில் சிரிப்போடு அவள் முன்னே தனது செல்போனை நீட்டினான்

அதில் வருணேஷ், ம்ம் சொல்லு டி வராதுன்னு நெனச்சா இப்படி வீடியோ கால்ல வந்து நிற்குமா? என்று முடிக்க,

போடா என்று முகத்தில் வெட்கம் மேலோங்க தனது அறைக்குள் ஓடினாள்.

என்ன வரு கண்ணா, என் பொண்ணு என்ன சொல்றான்னு முழுசா கேட்காம கலாட்டா பண்றியா என்று தீரேந்திரன் தன் மருமகனை கேள்வியால் துளைப்பது போல பாவனை செய்ய,

ஆமாமா உங்க பொண்ணு அப்படியே உலக பட்ஜெட் மாநாட்டில பேசுறா. முழுசா கேட்காம கிண்டல் பண்ணிட்டேன். போங்க மாமா என்று தான் முத்துப்பற்கள் தெரிய வீடியோ காலில் சிரித்தான்.

அவளுக்கு மட்டும் இல்ல வரு, எனக்குமே உன்னை ரொம்ப மிஸ் பண்ற மாதிரியிருக்கு. நாலு வருஷமா நீ என்னென்னவோ காரணம் சொல்லி ஒன்னு வர மாட்டேங்குற, இல்ல வந்தா உடனே கிளம்பி போய்டுற. என்று மருமகன் மேல் குற்றப்பத்திரிகை வாசித்தான்

அப்படி சொல்லு தீரா. என்று அவன் முதுகில் வந்து தொற்றிய நதியா வீடியோ காலில் தெரிந்த வருணைப் பார்த்து வேவ்வேவ்வே என்று உதட்டை அசைத்துக் காட்ட,

போடி போடி பீன்ஸ் என்று அவளை கேலி செய்து சிரித்தான் வருணேஷ்.

அவனின் புன்னகையை ரசித்துப் பார்த்தவள், அழகா சிரிச்சு உன் மேல உள்ள கோபத்தை எல்லாம் காலி பண்ணிடு டா சதிகாரா என்று கோபமும் சிரிப்பும் கலந்து முறைக்க,

அதான் வரலையே, அப்பறம் ஏன் டி ரொம்ப ட்ரை பண்ற.. விடு என்று அவளை மடக்கியவனை சரியாக பிடித்தான் தீரேந்திரன்,

பேச்சை மாத்தாத வரு கண்ணா. உன்னோட ஹையர் ஸ்டடீஸ் முடியற வரை வர முடியாதுன்னு சொன்ன, சரின்னு நாங்க உன்னைப் பார்க்க வந்தா, ஐ.வி, பீல்டு ட்ரிப்ன்னு ஆள் காணாம போய்டுற. படிப்பு முடிஞ்சதும் வருவன்னு பார்த்தா,ஏதோ எக்ஸாம்ன்னு படிக்கிறேன். அது இதுன்னு ஒரு வருஷமா காரணம் சொல்ற. இடையில் வந்துட்டு அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு இரண்டு நாள்ல ஊருக்கு போயிட்ட. எனக்கும் உன்னையும் நதியையும் விட்டா யாரு வரு இருக்காங்க. ஏன் நீ மாமாவை அவாய்ட் பண்ணுற? என்று வருத்தமாக வினவினான்.

ஐயோ மாமா. அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல. நீங்களா எதையாவது நினைக்காம இருங்க என்று சமாதானம் செய்ய முன்வர,

உங்க அப்பாவை நான் மன்னிக்கலன்னு உனக்கு வருத்தமா? என்று தயங்கியபடி கேட்டுவிட்டான் தீரேந்திரன்.

அவனின் தந்தையின் நினைவு தாக்க, நதியா அமைதியாக எழுந்து தனது அறைக்குள் தஞ்சமானாள்.

அவள் போவதை மிகுந்த வலியோடு வீடியோவில் கண்டவன்,

மாமா எனக்கு நீ தான் மாமா எல்லாமே. உன் தோள்ல ஏறித்தான் மாமா நான் உலகத்தையே பார்த்தேன். உன்னை அவாய்ட் பண்ணிட்டு நான் என்ன பண்ணுவேன் சொல்லு. காலேஜ் டைம்ல இருந்தே தொழில்ல பாதிக்கு பாதி அம்மா கூடவே இருந்து நானும் பார்த்துட்டு வர்றேன் மாமா. மீன்பிடி காலம் தவிர எல்லா நேரமும் பிஸியா தான் இருக்கு. ஷிப்பிங் கம்பெனில மூச்சு விட நேரம் கிடைச்சா தீரா'ஸ்ல வேலை வந்துடுது. நான் என்ன மாமா செய்வேன்? அம்மாவுக்கு அப்பாவை பார்க்கவே பிடிக்கல. அதனால அவரோட தேவைகளை ஆட்கள் வச்சு கவனிச்சிட்டு இத்தனையும் செய்யும்போது அங்க அவரை நேரமில்ல மாமா. அதுவும் இல்லாம, இது எல்லாமே உங்களோடது மாமா. நான் எனக்கான அடையாளத்தை தேட தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்த மருமகனை பெருமையோடு பார்த்த தீரேந்திரன்,

நீ சொல்றது எல்லாமே வாஸ்தவம் தான். ஆனா அதுக்காக நாலு வருஷமா எங்களை விட்டு நீ இவ்ளோ தள்ளி இருக்கிறது கஷ்டமா இருக்க வரு கண்ணா. உன்னை என் கையிலே வச்சு வளர்த்துட்டேன். நதி ஒரு நேரம் போன் பண்ணலன்னா கூட எனக்கு அவளோ பதட்டம் வராது. ஆனா நீ ஒரு நாள் போன் பண்ணலன்னாலும் மாமா வாடி போயிடுவேன் என்று வருத்தம் தெரிவிக்க,

ஆமா ரெயின் எங்க அப்பா வாடும்போதெல்லாம் இப்படித்தான் நான் தண்ணி ஊத்துவேன் என்று வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் விடும் பூவாளியில் இருந்த நீரை தீரேந்திரன் மீது ஊற்றினாள் நதியா.

ஏய் வாலு என்று போனை டேபிளில் போன் ஸ்டேண்டில் வைத்துவிட்டு மகளை தீரா துரத்த, அவள் தந்தை கைக்கு சிக்காமல் ஓட, இவர்கள் விளையாட்டை பார்த்த வருண் கண்கள் பணித்தது.

தன் மாமாவின் வாழ்வை மகிழ்ச்சியாக்க வந்தவள் தான் அவனின் தியா. அவளை எந்த காரணம் கொண்டும் மனம் நோகச் செய்யக்கூடாது என்று தெளிவாக இருந்தான் வருணேஷ்.

அவர்கள் மகிழ்ச்சியை கண்களில் நிறைத்துக்கொண்டு, மாமா எனக்கு ஷிப்பிங் ஆபிஸ் போகணும். நாளைக்கு கால் பண்றேன் என்று சொல்ல, தந்தையும் மகளும் விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு வருணேஷுக்கு விடை கொடுக்க திரை அருகில் வர, வருணேஷ் தன் காந்த புன்னகையை சிந்தியபடி அழைப்பை துண்டித்தான்.

ஒவ்வொரு முறையும் தனக்காக மாமனும், மாமன் மகளும் ஏங்குவதைக் கண்டு அவன் மனம் வாடினாலும் தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றான் வருணேஷ். அவனின் பொன்வண்டு அவன் மனதிற்குள் மட்டும் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.

-தேடல் தொடரும்.

 
Top