கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேடல் 2

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
கடலாமை ( கடல் ஆமை) என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டித் தான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.
உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.

-வருணின் வரிகள்

தன் எதிரில் இருந்த வெள்ளைச் சுவரை வெறித்தபடி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் அறிவுடைநம்பி.

பெயர் மட்டும் அறிவோடு இருந்து என்ன புண்ணியம்? பெயரில் இருக்கும் அறிவு அவர் மூளையின் மூலையிலும் கொஞ்சமேனும் இருந்திருக்க வேண்டுமல்லவா?

சொந்த குடும்பத்தைக் குழப்பி, பணம், சொத்து, மதிப்பு, மரியாதை என்று ஏதேதோ நினைத்து தன் மகனின் கையாலேயே தண்டனை பெற்று மூலையில் அமர்ந்திருக்கும் அவருக்கு வெற்றிடத்தை வெறிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆரம்பத்தில் மீன் உணவின் பாதிப்பு கையை மட்டும் முடமாக்கி இருக்கு, நாள்பட அவரின் வலது காலும் செயலிழந்தது. மகனே இப்படி செய்துவிட்டானே என்று அவருக்கு உள்ளே கொதிப்பு மட்டும் அடங்காமல் இருந்தது .

உள்ளே கொதித்து என்ன பயன்? கை, கால் விழுந்துவிட்ட நிலையில் ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்து, என்ன கொதித்தாலும் அது அவருக்குள்ளேயே தான் இருக்கும். அதை யாரிடமும் காட்ட முடியாது.

கல்பனா அவரை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார். அவர் இருக்கும் அறைப் பக்கம் கூட அவர் வருவதில்லை. அவர் கல்பனாவின் மேல் உயிரையே வைத்திருந்தார் என்பது தான் உண்மை. மாமியாரைப்பற்றி அவர் ஏதும் நினைக்கவில்லை. மகனின் வாழ்க்கையை கலைத்துவிட்ட தனக்கு மாமியார் சாதகமாக பேச மாட்டார் என்பது அவர் அறிந்ததே.

ஆனால் அவருக்கு மிகவும் துன்பமாக இருந்தது, அவரைக் காண வரும் வருண் முகம் கொடுத்து பேசாமல் சென்றால் கூட நன்றாக இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு மனதை தைக்கும் வார்த்தைகளால் அவரை வதைப்பது தான்.

உணவை கொடுத்து விட்டு பின்னோடு வந்து, இது என் மாமா காசுல வாங்கினது, சாப்பிடு சாப்பிடு உனக்கெல்லாம் சொன்னா உறைக்கவா போகுது என்று குத்திவிட்டுச் செல்வான்.

அந்த அறையை முடிந்தவரை இருளில் வைத்துக்கொள்வார் அறிவுடைநம்பி. என்றாவது ஒருநாள் அவர் அந்த அறைக்குள் வெளிச்சம் வருமென்று நம்பினார்.

நம்பிக்கை மனிதனை முன்னேறி செல்ல வைக்க மிகப்பெரிய உந்து சக்தி ஆகும். ஆனால் தவறு செய்பவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏனோ நல்லது செய்வோருக்கும், பல இடர்கள் வந்தாலும் தாண்டிச் செல்ல வேண்டிய நல்லவர்களுக்கும் இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ உலகில் பல நன்மைகள் நடந்தேறினாலும் தவறுகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் இருக்கிறதோ!

இவர் யாரைப்பற்றி அதிகம் நினைத்துக் கொண்டிருந்தாரோ அந்த வருண் அந்த வீட்டின் கீழ் பகுதியில் தன் பாட்டிக்கு முன்னே அமர்ந்து உணவைக் கொறித்துக் கொண்டிருந்தான்.

ஏன் வருண் இப்படி கிள்ளி கிள்ளி சாப்பிடுற? நல்லா அள்ளி சாப்பிடு டா. நாள் முழுக்க ஓடுற, சரியா சாப்பிடலான்னா எப்படி என்று வருத்தம் தெரிவிக்க,

அவனோ முகத்தில் மெல்லிய புன்னகையை தாங்கிக்கொண்டு, ஏ பியூட்டி எனக்கு இதுவே போதும். நான் நல்லா தான் சாப்பிடுறேன். நீ சாப்பிடு என்று பாட்டியின் எதிரில் கவிழ்ந்திருந்த தட்டை அவருக்கு நேராக திருப்பி வைத்தான்.

என்னவோ போ டா. வர வர மீ சரியா இருக்கிற மாதிரி எனக்கு தோனவே இல்ல. என்று புலம்பியபடி உணவை தட்டில் வைத்தார் அமுதவாணி.

என்னம்மா இன்னிக்கும் அதே புராணமா? அவனை சாப்பிட விடு. என்று வந்து அமர்ந்தார் கல்பனா.

அவரைக் கண்டு வாணிக்கு நெஞ்சில் பாரம் ஏறியது. கணவனுடன் கைகோர்த்து அங்கும் இங்கும் மகிழ்ச்சியாக அலைந்து திரிந்த தன் மகள் நான்கு ஆண்டுகளாக வெறுமையான முகத்துடன் தொழில் ஒன்றே கதி என்று இயந்திரமாக மாறிவிட்டது அந்த முதியவளை வெகுவாக பாதித்தது.

என்ன செஞ்சு தொலைக்க, நான் பெத்த ரெண்டும் என் பேச்சை கேட்கல. அதான் அதுங்க பெத்தது கிட்ட கேட்க சொல்லி போராடுறேன் என்று அலுத்தவரை அதற்கு மேல் அலுப்பாக நோக்கினார் கல்பனா.

உன் பையன் கல்யாணம் பண்ணிக்கலன்னு வருத்தப்பட்டா ஒரு நியாயம் இருக்கு. என்னை ஏன் குடையற என்று முகத்தை சுளித்தார்.

பியூட்டி சும்மா இரு. நான் நல்லா தான் சாப்பிடுறேன். நார்மலா தான் இருக்கேன். என்று சிரித்த வருணை அருகே அழைத்து அணைத்துக்கொண்டார்.

கண்ணா எனக்கு வாழ்க்கையில இருக்கற ஒரே ஆறுதல் நீயும் நதியாவும் தான். அவளோட எப்போ வீடியோ கால் பேசினாலும் படபட பட்டாசா பொரியறா. நீ எப்படி இருந்த, அவளுக்கு மேல வாயடிப்ப, ஆனா இப்போல்லாம் ரொம்ப அமைதியா இருக்க கண்ணா என்று கண்கலங்க,

இப்படி ஒரு அப்பனுக்கு பிறந்திருக்கோம்னு தெரிஞ்சா என் பையன் இப்படி தான் அம்மா இருப்பான். அப்பறம் வேற எப்படி இருப்பான்? பேசாம போ மா என் வாயை கிளராத என்று கல்பனா பாதி உணவில் எழுந்து கொள்ள,

அம்மா என்ன நீங்க? உட்காருங்க. அப்பா எப்படி இருந்தா என்ன? எனக்கு அம்மா எப்படி இருக்காங்க அதை பார்க்க வேண்டாமா? மாமா.. அவரு தங்கமா இருக்கும் போது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்களா எல்லாரும் அவங்கவங்க மனசுக்கு தோன்ற காரணத்தை எடுத்துக்கிட்டு ஆளுக்கு ஒரு உலகத்துல இருந்தா நான் என்ன செய்வேன்? படிப்பு, தொழில், கூடவே அப்பப்போ கப்பல்ல செக்கிங் போகன்னு எனக்கு நேரம் சரியா இருக்கு. பியூட்டிக்கு நான் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலன்னு வருத்தம். அதான் பேசுறாங்க. ஆனா நீங்க ஏன் மா எதையோ ஏதோடயோ சேர்த்து பேசுறீங்க? என்று கல்பனாவை அமர்த்தி அவளுக்கு உணவை ஊட்டினான்.

மகன் கையால் உணவை வாங்கிய கல்பனாவின் கண்கள் பனித்தது.

வருண், இந்த சொத்து உனக்கு வரும் நீ ராஜா போல இருப்பன்னு நான் கனவு கண்டுட்டு இருந்தேன் டா. உங்க அப்பா தொழில்ல நல்லா வரவும், தீராவோட வாரிசா நீ இருப்பன்னு நெனச்சேன் என்று கல்பனா கூற,

ஏன் மா அப்ப இந்த பணமெல்லாம் எனக்கு வராதுன்னு தான் நீங்க வருத்தப்படுறீங்களா? என்று கோபமாக வருண் எழுந்து கொண்டான்.

இல்லவே இல்ல வருண். அப்போ உங்க அப்பாவோட உழைப்பு இந்த வீட்டுல இருக்கு, தீராவும் கல்யாணம் வேண்டாம்ன்னு பிடிவாதம் பிடிச்சதால தான் அப்படி நெனச்சேன். ஆனா இன்னிக்கு தீராவே நமக்கு இந்த சொத்துல பங்கு கொடுத்தாலும் அதை வாங்கிக்க முடியாத அளவுக்கு உங்க அப்பா நமக்கு தலைகுனிவை ஏற்படுத்திட்டார். அதை சொல்ல வந்தேன் என்று கல்பனா கூறியதும் வருண் அவளருகில் வந்து

அம்மா மாமா என்னை அப்படியே விடுற ஆளும் இல்ல, அவரே கொடுத்தாலும் எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கற ஆள் நானும் இல்ல. எனக்குன்னு வாழ்க்கையில ஒரு தேடல் இருக்கு மா. நான் அதை நோக்கி தான் போறேன். என்று சொன்ன வருணின் கண்களில் கண்ணீர்.

அவன் குரலில் இருந்த வலியை உணர்ச்சியின் பிடியில் இருந்த கல்பனா கவனிக்காமல் இருந்தாலும் அவனை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்த அமுதவாணிக்கு வலித்தது.

அவர் மகன் வழியிலும் இன்பத்தைக் காணாதவர், மகள் வாழ்வும் பட்டுப்போய் நிற்பதைப் பார்த்து துடித்துக்கொண்டிருப்பவர். அவரின் ஆறுதல் என்று அவர் நினைக்கும் வருணும் நதியும் சிந்தும் புன்னகையில் உயிர் வாழ்பவர். இன்று வருணிடம் தென்படும் வலிக்கான காரணம் அறியாது அவர் மனம் வருந்தியது.

அடுத்தமுறை நதியா அழைக்கும்போது அவளிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

வருண் பெண்கள் இருவரிடமும் விடைபெற்று பதப்படுத்தப்பட்ட மீன் கிடங்கிற்கு செல்ல, வழியில் தீராஸ் வந்து விட்டுச் செல்லுமாறு கபிலன் அவனை போனில் அழைத்தான்.

கல்பனா தீராஸ் பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு வருண் அவருக்கு பக்கத்துணையாக அங்கே செல்வானே அன்றி அவன் எதிலும் தலையிடுவது இல்லை. அப்படியிருக்க இன்று கபிலன் அழைப்பதன் காரணம் புரியாது அங்கே விரைந்தான்.

வாசலில் ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த அவனைக் கண்டு அப்படியே உள்ளே சென்ற வருண், அங்கிருந்த மீன் தொட்டியில் அதற்கான உணவையிட்டான்.

கபிலன் பேசி விட்டு உள்ளே நுழைந்தவன், அப்படியே உங்க மாமா மாதிரியே இருக்கீங்க வருண் என்று சிரிக்க,

எல்லாம் அவர் சொல்லிக்கொடுத்து தானே கபிலன் சார் என்று கூறி அவரின் சிரிப்பில் வருணும் கலந்து கொண்டான்.

என்ன விஷயமா வர சொன்னிங்க என்று நேரடியாக வருண் விஷயத்துக்கு வர,

ரும்ப முக்கியமான விஷயம் தான் வருண், உள்ள வாங்க என்று அழைத்து போய் சில விஷயங்களை காட்டினான் கபிலன்.

அதைக் கண்டு வருணுக்கு அதிர்ச்சியானது.

என்ன சார் இது இப்படி இருக்கு? வாய்ப்பே இல்லையே! என்று அதிர,

நீங்களே பாருங்க வருண். இது நான் இங்கே இப்படி பண்ண முடியாது இல்லையா? அல்ரெடி பேக்டு தான் என்று கபிலன் தயக்கமாக கூற,

ஐயோ உங்களை தப்பா நினைக்கல சார். நான் என் பக்கம் எதுவும் தப்பா இருக்கான்னு பாக்கறேன். என்று கூறி அதையும் கையோடு பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

அவன் போவதை கவனித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கல்பனா.

என்ன கபிலன், வருண் எதுக்கு இங்க வந்துட்டு போறான்? என்னை பார்க்கவும் இல்ல, எதுவும் பிரச்சனையா? என்று விசாரிக்க,

இல்ல மேடம் அவர் ஒரு வேலையா இந்த பக்கம் வந்தாரு. நான் வாசல்ல ஒரு கஸ்டமர் கூட பேசிட்டு அப்படியே வரையும் பார்த்து பேசுனேன். என்னோட உள்ள வந்துட்டு சும்மா மீனுக்கு சாப்பாடு போட்டு கொஞ்சிட்டு போறாரு என்று சொல்லி சமாளித்தார்.

என்னவோ இப்படி சின்ன சின்ன விஷயத்துல தான் என்னால பழைய வருணை பார்க்க முடியுது. இன்னிக்கு அதையும் நேர்ல பார்க்க முடியல. என்று வருத்தமாக கூறி அவருடைய அறைக்குள் சென்ற கல்பனாவை பரிதாபமாக பார்த்தான் கபிலன்.

அறிவுடைநம்பி தொழிலில் இருக்கும் வரை அவர் ராணி மாதிரி வருவார். ஆனால் அவரின் சாயம் வெளுத்த பின் கல்பனா மிகவும் ஒடுங்கிப் போனார் என்று கபிலனுக்கு நன்றாகத் தெரியும். அவரை ஒடுங்க விடாமல் அவனும் தொழிலில் அவருக்கான சவாலை வைத்துக்கொண்டே இருப்பான்.எல்லா வேலைகளையும் முடித்து வைத்தாலும், இல்லை பிரச்சனை என்று கல்பானவிடம் சொல்லி, அவரை அதற்கான தீர்வை யோசிக்க வைப்பான். முடிந்தவரை கல்பனா ஏதோ வேலையில் மூழ்கி இருப்பது போலவே பார்த்துக்கொள்வான்.

இத்தனைக்கும் தீரேந்திரன் அவனிடம் ஒன்றே ஒன்று தான் சொல்லிச் சென்றான்.

இந்த தொழிலை விட, அக்காவோட நிம்மதி தான் முக்கியம் அவங்க கண்டதையும் யோசிக்க கூடாதுன்னு தான் இங்கே விடுறேன் கபிலன். கொஞ்சம் கவனிச்சுக்கோ என்று மட்டுமே கூறினான்

விசுவாசத்தின் மறுஉருவான கபிலன் அவர் தமக்கையை தன் தாய் போல பார்த்துக்கொள்கிறான்.

வருண் வழி நெடுகிலும் கபிலன் காட்டியதை பற்றி யோசித்துக்கொண்டே சென்றான். அவனுக்கு அது எப்படி சாத்தியம், தங்கள் இயந்திரத்தில் ஏதேனும் பழுது இருக்குமோ என்று ஆயிரம் குழப்பம். ஆனால் அவன் குழப்பதுக்கெல்லாம் விடை கடலன்னையிடம் இருக்கிறது என்பதை வருண் அறியவில்லை.

-தேடல் தொடரும்

 
Top