கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேடல் 3

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
பிளாஸ்டிக் உற்பத்தியில் 40% பிளாஸ்டிக் பொருட்கள் பேக்கேஜிங் எனப்படும் அடைப்புகளுக்காகவே அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகம் செய்யும், எண்ணெய், ஷாம்பு, பாடிவாஷ், வாட்டர் பாட்டில், உணவு வைக்க பயன்படும் கண்டெய்னர், பார்சல் பொருட்களுக்கான டப்பாக்கள், பல்துலக்கும் பிரஷ் என்று சிறியது முதல், பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் மூலக்கூறுகளுக்கான கண்டெய்னர்கள், வாகன உதிரி பாகங்கள் என்று பெரியது வரை நாம் கண்விழித்து கண்ணுறங்குவது வரை பயன்படுத்தும் முக்கால்வாசி பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை.

-நதியாவின் குறிப்பேட்டிலிருந்து

வருண் யோசனையோடு தங்கள் அலுவலகம் செல்ல, ஏற்கனவே பேக் செய்து வந்த பதப்படுத்தப்பட்ட மீன்களை ரக வாரியாக பிரித்து, பெட்டிகளில் அடுக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அவன் கண்கள் யாரயோ தீவிரமாகத் தேட, அவனின் தேடலுக்கு உள்ளானவளோ அவனின் அறையில் கோப்புகளை அடுக்கிக்கொண்டிருந்தாள்.

வேகமாக அறைக்குள் அவன் நுழைய, அலமாரியில் கோப்பு ஒன்றை வைக்க முற்பட்டவள் அவனின் வேகத்தில் திகைக்க கோப்பு தரையில் விழுந்து சிதறியது.

தரை முழுவதும் வெள்ளைத் தாள்கள் பரவிக் கிடைக்க, வெள்ளை சுடிதார் அணிந்த அவளும் குனிந்து அதை எடுப்பது பார்க்க அழகாக இருந்தது.

"நான் தானே என் ரூமுக்குள்ள வருவேன்? இதுல நீ பயப்பட என்ன இருக்கு?" என்று கேட்டபடி பேப்பர்களை அவனும் சேகரிக்க ஆரம்பித்தான்.

"சார், கஷ்டப்பட்டு ஒரு மணி நேரமா அரேஞ் பண்ணின பைல் சார். ஒரு செக்கெண்ட்ல இப்படி ஆயிடுச்சு. கொஞ்சம் மெதுவா உள்ள வந்தா உங்க தலையில உள்ள கொம்பு காணாம போய்டுமா?" என்று எரிச்சலாக வினவினாள் அவனின் செயலாளரான மேகா.

"நீ கவனமில்லாம இருந்துட்டு என்னை சொல்றியா மேகா?" என்று கொஞ்சம் அதட்டலாக வருண் வினவவே மேகாவின் முகத்தில் பயம் துளிர்த்தது.

அதைக் கண்ட வருணுக்கு சிரிப்பு வர, "ஏய் நான் சும்மா கேட்டேன். உடனே எப்படி மூஞ்சி வெளுத்து போகுது உனக்கு?" என்று கேட்டு எடுத்த காகிதங்களை மேஜையில் வைத்துவிட்டு அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.

"சார்.." என்று பேச்சை ஆரம்பித்த மேகாவை கைநீட்டி தடுத்தவன்,

"வருணன்னே கூப்பிடு மேகா. இங்க தான் யாரும் இல்லையே" என்று கண்களை அறை முழுவதும் சுழற்றிக் காட்ட,

தன் கையிலிருந்த காகிதங்களை மேஜையில் பொத்தென்று போட்டுவிட்டு அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள் மேகா.

"என்னால முடியல வருண். கஷ்டப்பட்டு எடுத்து வச்சேன். எல்லாம் போச்சு." என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள்.

"நான் முக்கியமான விஷயமா உன்னை தேடி வந்தேன். அதை முழுசா இந்த பேப்பர் மழையில மறந்தே போயிட்டேன்." என்று முகத்தை தீவிரமாக வருண் வைத்துக்கொள்ள,

இவ்வளவு நேரம் சோகமாக முகத்தை வைத்திருந்த மேகா நிமிர்ந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு வருண்? எனி ப்ராப்ளம்?" என்று கேட்க,

"எஸ்" என்று தன் கையில் இருந்த கவரை அவளிடம் கொடுத்தான்.

அதில் அவர்கள் நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட மீன் இருக்க,

"நம்ம கம்பெனி பேக்கேஜ்" என்று திறந்தவள், அது ஏற்கனவே திறக்கப்பட்டிருப்பதை கவனித்தாள்.

"என்னாச்சு வருண்? அல்ரெடி ஓபன் பண்ணின பேக்கெட்.. எதுவும் கம்பலைன்ட்டா?" என்று முகத்தை தீவிர பாவத்துக்கு மாற்ற,

"ஆமா மேகா, உள்ள பாரு" என்று வருண் சொல்லவும்,

ஒருவேளை கெட்டு விட்டதோ? புழு எதுவும் வந்து விட்டதோ? என்ன நடந்தது என்று யோசித்தபடி திறந்தவள், அதில் இருந்த சுறா மீன் இறைச்சியை எடுத்து முன்னும் பின்னும் திருப்பி பார்க்கலானாள்.

ஒன்றும் புலப்படாமல் போகவே, 'என்ன வருண்? ஒன்னும் இல்லையே!" என்று விழிக்க,

அதை அவளிடமிருந்து பறித்தவன், மூன்றாவதாக இருந்த இறைச்சி துண்டை எடுத்து அவள் முன்னே நீட்டினான். அதனிடையில் ஒரு பிளாஸ்டிக் துண்டு இருக்கவே அவள் திகைத்தாள்.

"என்ன வருண் இது? எப்படி பேக்கிங் பண்ணின மீனுக்குள்ள பிளாஸ்டிக் வரும்?" என்று விழிக்க,

"நானும் அதே தான் கேட்டுட்டு இருக்கேன்? ஏன் பேக்கேஜிங் செக்ஷ்ன் இவ்ளோ கேர்லெஸ்சா வேலை பாக்கறாங்க? இது நம்ம தீரா'ஸ் க்கு போன பேக்கேஜ்ல இருந்ததால நமக்கு ஆபத்து இல்ல. வேற யாருக்கும் போயிருந்தா இந்நேரம் நம்ம மேல கேஸ் போட்டிருப்பாங்க." என்று தன் நாற்காலியில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்தான்.

எழுந்து அவனருகில் வந்த மேகா, "சரி விடு வருண். நான் ஷிப்புக்கு கூப்பிட்டு டீம் கிட்ட பேசுறேன். இதுக்கா நீ இவ்ளோ அப்செட் ஆன?" என்று அவன் இடது கையை பிடித்துக்கொண்டாள்.

"உட்காரு மேகா" என்று வருண் சலிப்போடு கூற,

நாற்காலியை அவனுக்கு அருகில் இழுத்து போட்டுகொண்டு அமர்ந்தாள்.

"எனக்கு மாமாவை பார்க்கணும் போல இருக்கு மேகா" என்று சொன்னவன் குரல் குழந்தையின் ஏக்கத்தை பிரதிபலித்தது.

மேகாவின் மனதில் மெல்லிய வலி பிறந்தது. அவளுக்கு வருணை பல வருடங்களாகத் தெரியும். அவனுடன் பள்ளி கல்லூரியில் ஒன்றாக பயின்றவள் தான் மேகா.

அவளுக்கு அவன் மேல் கொள்ளை பிரியம். கல்லூரி முடிந்ததும் வீட்டின் சூழ்நிலை காரணமாக வேலைக்கு அலைந்தவளை ஒருநாள் பார்த்துவிட்டு அவன் நிறுவனத்தில் வேலையில் அமர்த்தினான்.

தன் நண்பன் என்ற எண்ணம் இல்லாமல் இந்த நிறுவனத்தின் முதலாளி என்று ஒதுங்கியே பழகிய மேகாவை அவ்வப்போது கண்டித்து இயல்பாக பேசுவான் வருண். அவளும் தனது எல்லை எது என்று தெரிந்து வைத்திருந்தாள்.

இருவர் மட்டும் இருக்கும் இடங்களில் நண்பனாக வருண், வா போ என்று பேசும் மேகா பணியாளர்கள் முன்னிலையில் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வாள்.

இன்று அவன் வாட்டமான முகம் அவளுக்குள் வருத்தத்தையும் வலியையும் கொடுக்க, அதன் காரணத்தை ஆராயாமல் அவன் வாட்டத்திற்கு காரணம் தேடினாள்.

அவன் மாமாவை அவன் எவ்வளவு நேசிக்கறான் என்பது ஊரே அறிந்தது என்பதால்,

"மாமா தானே! போய் பார்த்துட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வா. கம்பெனி பத்தி கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன். இந்த பேக்கிங் பிரச்சனையெல்லாம் நீ ரொம்ப யோசிக்காத. ஊருக்கு போறியா? டிக்கெட் போடவா?" என்று கையை பற்றி அன்புடன் வினவினாள்.

யோசனையில் மூழ்கிய வருண், மெல்ல 'இல்லை' என்று இடம் வலமாக தலையசைக்க,

"ஏன் வருண்? அவ்ளோ மிஸ் பண்றன்னா போய் அவரை பார்த்துட்டு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வா." என்று சொல்ல,

வருண் கண்கள் பனித்தது.

அதே நேரம் மியாமியில் தந்தையோடு அமர்ந்து மாலை உணவை எடுத்துக்கொண்டிருந்த நதியாவுக்கு புரை ஏறியது.

"நதிம்மா இந்தா தண்ணி குடி." என்று தீரேந்திரன் வாட்டர் பாட்டிலை நீட்டும்போது அவனுக்கும் புரை ஏற,

"இந்த ரெயினுக்கு எப்பவும் நம்மளைப்பத்தி யோசனை தான். சாப்பிடக்கூட விட மாட்டேங்குது." என்று திட்டியவள் உடனே செல்போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.

வருணின் செல்போன் விடாது மெல்லிய நீரின் ஓசை கொண்ட ரிங்டோனை வெளியிட,

மேகாவின் கைகளுக்குள் இருந்த தன் கையை சட்டென்று உருவிக்கொண்டு கண்களை துடைத்து அழைப்பை ஏற்றான்.

"சொல்லு டி பீன்ஸ்" என்று கிண்டலாக ஆரம்பிக்க,

"உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ரெயின்? ஒரு வேளை கூட சாப்பிட விட மாட்டேங்குற?" என்று கோபமாக வந்த அவளின் கேள்வி புரியாமல்,

"என்ன தியா சொல்ற? எனக்கு ஒண்ணுக்கே புரியல." என்று வருண் விழிக்கவும்,

"தினமும் சாப்பாடு புரை ஏறுது டா. மூக்குக்குள்ள போனா நாங்க என்ன டா பண்றது? எங்களை பார்த்தா பாவமா இல்லையா ரெயின் உனக்கு?" என்று சிரிப்பை ஒளித்து வைத்து கடினக் குரலில் அவள் வினவ வருண் சட்டென்று சிரித்துவிட்டான்.

"போ டி பீன்ஸ்.. நான் கூட என்னவோன்னு பயந்துட்டேன்." என்று சொல்ல,

"ஏன் நதிம்மா அவனை வம்பு பண்ணுற?" என்ற தீரேந்திரன் குரலில்

"மாமா" என்று தழுதழுத்த வருணை மேகா கரம் பற்றி ஆறுதல் சொல்ல,

நதியாவின் மனதின் ஏதோ முள் தைத்த வலி.

"என்னாச்சு வரு மாமா?" என்றாள் நதியா.

அவள் வருணை அவ்வளவு எளிதில் மாமா என்று அழைப்பதில்லை. அவளை அவனும் அப்படி அழைக்க விடுவதில்லை.

"இல்ல.. இல்ல தியா.. ஒன்னும் இல்ல. மாமாவை பார்க்கணும் போல இருந்துச்சு." என்று உண்மையை அவன் கூறிவிட,

"வர வேண்டியது தானே? யாரு உன் கையை பிடிச்சிருக்கிறது?" என்று சாதாரணமாக அவள் வினவ,

மேகாவிடம் சிக்குண்டிருந்த தன் கரத்தை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டவன்,

"இல்ல.. யாரும் இல்ல.." என்று எழுந்து வெளியே சென்றான் வருண்.

அவன் போவதைக் கண்ட மேகாவுக்கு வருத்தம் வந்தாலும் அமைதியாக அந்த கோப்பை அடுக்குவதில் கவனமானாள்.

"என்னவோ எங்க கிட்ட நீ மறைக்கிற வரு.. எனக்கும் அது புரியுது. நீயா சொல்லுவன்னு பாக்கறேன். என் அப்பாகிட்ட கதை சொன்ன மாதிரி உன்னால என்கிட்ட சொல்ல முடியாது. ஒன்னு உண்மையை சொல்லு. இல்ல இனிமே என்கிட்ட பேசாத." என்று நதியா அழுத்தமாகக் கூறினாள்.

"இல்ல தியா" என்று அவன் மழுப்பலாக பேச,

"ஓகே நான் தான் உன்னை ரொம்ப நெருக்கமா நினைக்கிறேன். ஆனா நான் உனக்கு அப்படி இல்லை போல. விடு." என்று போனை வைத்துவிட்டாள் நதியா.

அவள் இணைப்பை துண்டித்ததும் வருணுக்கு மனதில் வெறுமை படர்ந்தது.

மனம் அவனின் பொன்வண்டை தேடியது. ஆனால் அதை அவனால் வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை நிலவுவதை நினைத்து நொந்து போனான்.

கண்கள் சுற்றிலும் தனக்கு ஆறுதல் தரும் ஏதேனும் உள்ளதா என்று தேட,

தள்ளி நின்றிருந்த கடலன்னை கைகளை விரித்து அவனை வாவென்று அழைப்பது போல தோன்றவே, அவன் கால்கள் அவளை நோக்கி நகர்ந்தது.

வந்து செல்லும் கடலலைகள் கரையோர எச்சங்களை வாரிச் செல்வது போல தான் மனதின் வலிகளை வாரிச் செல்லாதோ என்று ஏங்கி நின்றான் வருணேஷ்.

அன்னை, தந்தை, பாட்டி என்று பலரும் அவனுடன் இருந்தும் சிறுவயது முதலே அவன் தேடியது அவனின் மனம் விரும்பும் மாமனைத் தான். இன்று வாலிபப் பருவம் வந்தும் சிறுபிள்ளை போல மாமனின் கரம் பற்றி நடக்க நினைக்கும் தன் ஆசையை வெளியே சொல்ல முடியாமல், அப்படி சொல்லி தன் மாமனை அருகே வைத்துக்கொள்வது நதியாவுக்கு அவன் செய்யும் துரோகம் என்று நினைத்து ஒதுங்கி நின்றான்.

வாய் விட்டு அழத் தோன்றியது வருணேஷுக்கு. தீரேந்திரனின் அன்பான சிகை வருடலுக்காக அவன் தலை ஆசையோடு தாழ்ந்திருந்தது. அவனின் அன்பான அணைப்புக்காக வருணின் ஒவ்வொரு செல்லும் ஏங்கிக்கொண்டிருந்தது.

அவன் ஏக்கங்கள் வார்த்தைகளில் வடிக்க இயலாதவை. கேட்டால் பலரும் சிரிக்கலாம். ஆனால் அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்?

அன்னையும் தந்தையும் தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லையே. பிஞ்சுக்கு நீர் வார்க்கும் எந்த உறவுக்கு உயிருக்கு நெருக்கமல்லவா? அப்படித்தான் வருணேஷுக்கு தீரேந்திரன்.


அவன் கண்களை அழுத்தமாக மூடி நிற்க அவன் பாதத்தை வந்து தீண்டிச் சென்ற கடலன்னை அவன் கண்ணீரையும் தீரேந்திரனிடம் கொண்டு சேர்ப்பாளா?

- தேடல் தொடரும்.
 
Top