கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேடல் 5

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
நீங்கள் நினைப்பது போல் பிளாஸ்டிக் எளிமையானது அல்ல. அவை ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை. அவற்றில் சில மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மற்றவை பல பயன்பாடுகளுக்குப் பிறகு அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சில எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடியவை, மற்றவை அதன் மறுசுழற்சி செயல்பாட்டில் மிகவும் அதிநவீன மற்றும் சிக்கலான கையாளுதல்கள் தேவை. பிளாஸ்டிக்கில் மறுசுழற்சியை குறிக்கும் ஏழு பிரிவுகள் இருக்கிறது.

-நதியாவின் குறிப்பேட்டிலிருந்து


தன் கண்களை நம்பமுடியாமல் இமைக்க மறந்தவளாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் நதியா.

தோள் பையை சரி செய்துகொண்டு கண்களில் தேடலோடு வீட்டிற்குள் பார்த்த வருணை கண்களால் வா என்று உள்ளே அழைத்தாள்.

அவள் கண்களில் திகைப்பு இன்னும் மாறாமல் இருக்கக் கண்டான் வருணேஷ். அவனுக்கு மாமாவைக் காணும் ஆவல் இருப்பதை நதியாவும் உணர்ந்தாள்.

இருவருக்கும் இடையில் ஒரு பேச்சற்ற மௌனம் ஆட்சி புரிந்தது.

வருண் தீராவின் அறை பக்கம் நகர, வேகமாக அவன் கைகளைப் பற்றித் தடுத்தாள் நதியா.

புரியாமல் அவளை யோசனையாக பார்த்த அவனிடம் 'வேண்டாம்' என்று தலையை மட்டும் அசைத்தாள்.

அவன் மெல்ல தன் கையை அவளிடமிருந்து விடுத்துக்கொள்ளப் பார்க்க,

அவ்ளோ அழுத்தமாகப் பற்றி பால்கனிக்கு அவனை அழைத்துப்போனாள்.

ஏன் வந்தான்? ஏன் சொல்லவில்லை? இப்படி எந்த கேள்வியும் நதியாவிடம் இல்லை. விடை தெரிந்த கேள்விகளைக் கேட்பது வீண் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

மனிதர்கள் அடிக்கடி செய்யும் ஒரே தவறு விடை தெரிந்த கேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு சாதகமாக பதில் வரும் வரை அதைத் தொடர்வது தான்.

நதியாவைப் பார்க்காமல் பால்கனி வழியாக தெரிந்த இருண்ட வானத்தை வெறித்தபடி இருந்தான் வருண்.

அவன் கரத்தை அவள் விடுவிப்பது போல தெரிய அவனிடம் பெருமூச்சு ஒன்று எழுந்தது. அவன் நிலையை அவனே எண்ணி நொந்து கொண்டான்.

இதே போல ஒரு பால்கனியில் நின்று நதியாவைக் கண்ட நினைவு பசுமையாக நேற்று நடந்தது போல நினைவில் ஊஞ்சல் ஆடியது.

அவன் நினைவுகளோடு கழித்த நொடியில் நதியா அவன் கையை வளைத்து அதன் மேல் தலை சாய்த்து வீட்டைப் பார்த்தபடி நின்றாள்.

இருவரும் எதிரும் புதிருமாக அமைதியாக இருந்தனர். அவன் தலையும் அவனையும் கேளாமல் நதியாவின் தலைமேல் தன்னை பதித்துக்கொண்டது.

இரவில், அரவமற்ற அவ்விடத்தில் இருவேறு எண்ணங்களில் மூழ்கிய அவ்விதயங்கள் பேசாமல் நிறைய பேசின.

குளிர் அதிகமாகத் துவங்கியதும்,

"வா உள்ள போகலாம்" என்று பால்கனியில் இருந்து அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் வருண்.

இருவரும் உணவு மேசையில் அமர,

"அப்பாவை பார்க்கத் தானே வந்த வரு?" என்று மனம் கேளாமல் அவளிடமிருந்து கேள்வி வந்துவிட்டது.

ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் வருணின் தலை 'ஆம்' என்று அசைய, நதியா முகத்தில் முறுவல் ஒன்று பூத்தது.

"வாய் வார்த்தைக்குக் கூட என்னையும் தான் பாக்க வந்தேன்னு சொல்ல மாட்டியா வரு?" என்று அவன் தலையில் முட்டினாள்.

"எனக்கு மாமாவை பார்க்கணும், அதான் வந்தேன் .இதுல சும்மா சொல்ல என்ன இருக்கு?" என்று மெதுவாக பேசினான்.

"ஏன் வரு அப்போ என்னை பார்க்கவும் இப்படி வருவ தானே?" என்று கண்களில் நம்பிக்கையை தேக்கி கேட்டாள்.

ஏன் கேட்டாள் என்று அவளுக்கு சத்தியமாகத் தெரியாது. அந்த நிமிடம் அவனிடம் அது தான் கேட்கவேண்டும் என்று மனம் கூறியது.

வருணிடம் விரக்தியாக ஒரு புன்னகை உதிர்ந்தது. 'ஆம்' என்பது போல தலையை மட்டும் அசைத்தான்.

நதியாவுக்கு மனதில் மெல்லிய வலி பரவியது. வாய் திறந்து சொல்ல மாட்டானா? நான் அவன் வாழ்வில் முக்கியமானாவள் இல்லையா? எனக்காக வருவேன் என்று சொல்வதில் என்ன தயக்கம்? என்று மனதிற்குள் கேள்விகள் வரிசை கட்ட, அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு,

"அப்பா உன்னை பார்க்க சென்னை போயிருக்காரு." என்று சொன்னதும்,

இவ்வளவு நேரம் இருந்த இலகுபாவம் மாறியது.

"என்ன சொல்ற? மாமா என்னைப்பார்க்க சென்னை போயிருக்காரா? ஒ காட். இதை வந்ததும் சொல்லிருக்கலாம்ல?" என்று வேகமாக எழுந்தவனைக் கரம் பற்றித் தடுத்தாள்.

"ஏய் லூசு வரு.. எங்க கிளம்புற? இப்போ போய் என்ன பண்ண போற? நான் டிக்கெட்ஸ் பார்த்து போட்டு தரேன். கொஞ்சம் உட்காரு உன்கிட்ட பேசணும்" என்று நிதானமாகக் கூறினாள்.

வருணுக்குள் அபாய மணி அடிக்க, "இல்ல டி பீன்ஸ் நான் போகணும்." என்று வேகம் காட்டினான்.

நதியாவுக்கு நொடியில் கோபம் துளிர்த்தது.

"ஏய் உட்காரு டா" என்று அழுத்தி அமர வைத்தாள்.

"என்ன டா நெனச்சிட்டு இருக்க? நீ பண்றது எதுவும் தெரியாதா? நானும் சரி நீயா சொல்லுவன்னு பாக்கறேன். ஓவரா பண்ணிட்டு இருக்க? நல்லா தான் பேசுற, அக்கறையா இருக்க, ஆனா ஏன் டா என்னை விட்டு விலகி விலகி போற?" என்று மனதில் தேக்கி வைத்த பல நாள் கேள்வியை கேட்டுவிட்டாள்.

இப்படியான நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காத வருண் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

"விடு தியா" என்று அவன் கைகளை பிரிக்க முயல,

"ஓ இப்போ தான் நான் தியான்னு உனக்கு நினைவுக்கு வருதா வரு? இத்தனை நாளா பீன்ஸ் பீன்ஸ்னு என்னை கூப்பிட்டப்போ தெரியல நான் தியான்னு" என்று கண்கள் கலங்கினாலும் அதைக் காட்டாமல் மறைத்தபடி கோபமாக அவள் வினவ,

"ஐயோ உன்னோட விளையாடினேன் டி" என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

"இங்க பாரு, உன்னோட நான் ரொம்ப பிரீசியஸ் டைம்ஸ் செலவு பண்ணி இருக்கேன். ஐ நோ யூ. அண்ட் ஐ நோ திஸ் இஸ் நாட் யூ" என்று அவனை குளமான விழிகளோடு மேலும் கீழும் பார்க்க,

அதற்கு மேல் அவனால் அவளைப் பார்க்க முடியாமல், "தியா" என்று அவளை அணைத்திருந்தான்.

அவனின் அகண்ட மார்புக்குள் சிறு பூனையான நதியா தஞ்சமானாள். ஏன் அந்த அழுகை, ஏன் அந்த அணைப்பு என்று காரணத்தை இருவரும் தேடவில்லை. ஆனால் அந்த அணைப்பு தந்த இதம் அவர்களுக்கு வேறு எதுவும் தர முடியாது என்று மட்டும் உணர்ந்தனர்.

மௌனமாக நதியா கண்ணீர் வடிக்க, வருண் அவள் முகத்தை நிமிர்த்தி,

"ப்ளீஸ் டி" என்றான்.

'அப்போ காரணம் சொல்லு" என்று அவன் மார்பில் அவள் அடிக்க,

"என்ன சொல்ல சொல்ற? காரணம்ன்னு ஏதாவது இருக்கணும்ல.. அப்பா தான் காரணம். பெருசா வேறு காரணம் ஒன்னும் இல்ல. உன்னை எனக்கு பிடிக்கும் டி" என்று அவள் கன்னங்களை தன் கைகளுக்குள் தாங்கிக்கொண்டு அவன் கூற,

"ப்ரூவ் பண்ணு.. உனக்கு என்னை பிடிக்கும் என்னை அவாய்ட் பண்ணலன்னு ப்ரூப் பண்ணு டா." என்று அவன் சட்டையை பற்றிக்கொண்டாள்.

அவன் விழிகள் அவன் விழிகளோடு மோத, அவள் கருவண்டுக் கண்மணிகள் அசையாது அவனையே நோக்கியது.

அவன் மனதிற்குள் அழுத்தி வைத்திருந்த அதே பொன்வண்டு விழிகள்.. மிக அருகில் அவன் பருகிடும் தொலைவில்..

மெல்ல அவன் முகம் அவளை நோக்கிக் குனிந்தது. அவன் கண்கள் அவளிடம் வேறு ஏதோ கதை பேச, அதை உணரத் துவங்கி இருந்தாள் பாவை.

அவளுக்குள் சொல்லத் தெரியாத பரவசம். முதல் முறை நதியாவின் மனதிற்குள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள்.

மனதிற்குள் யாரோ மத்தாப்பு வைத்தது போல ஒரு மினுமினுப்பு. அவன் அவளை நெருங்க நெருங்க இதயத்தின் ஓசை வெளியே பலமாகக் கேட்பது போல ஒரு பிரமை.

மனதிற்குள் எழுந்த உணர்வுக் குவியலுக்கு இடையில் வருணின் இதழ்கள் நதியாவின் இதழ்களை சமீபித்திருந்தது.

நதியாவின் கண்களோ ஆச்சரியம், அதிர்ச்சி, பரவசம், மகிழ்ச்சி என்று உணர்வுகளை மாற்றி மாற்றி பிரதிபலித்தது. அவன் விழி கூறும் மொழி அனைத்தையும் கண்ட வருணுக்குள்ளும் உணர்வுகள் மெல்ல கட்டவிழ்த்தத் துவங்கியது.

கன்னத்தில் இருந்த விரல்கள் அன்போடு அவளை வருட, இதழ்களுக்கு இடையில் இடைவெளி குறைந்து மெல்ல காணாமல் போக இருந்த அந்த அழகிய கவிதையான நேரத்தில் கவிதையாக பாடி அதை கெடுத்தது வருணின் கைபேசி.

சட்டென்று அறுபட்ட உணர்வுகளுடன் இருவரும் நிற்க, வருண் தான் செய்ய இருந்த காரியத்தின் வீரியம் புரிந்தவனாக மனதிற்குள் தன்னையே நொந்து கொண்டான்.

வேகமாக கைபேசியைப் பார்க்க, அதில் மேகாவின் அழைப்பு.

"சொல்லு மேகா" என்று காதில் பொருத்தியபடி, தன் கைப்பையை எடுத்துக்கொண்டவன், நதியாவை நேரடியாகப் பார்க்காமல் அவளுக்கு அருகில் வந்து கைபேசியை அகற்றிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"வரேன்" என்று மட்டும் முணுமுணுப்பாக சொல்லிவிட்டு பின் மோகவுடன் பேசியபடி வீட்டை விட்டு வெளியேறினான்.

ஒரே நிமிடத்தில் அங்கிருந்த சூழ்நிலை மாறி மீண்டும் தனிமையில் நின்றாள் நதியா.

தனக்குள் எழுந்த உணர்வுகளுக்கு அவளால் பெயர் வைக்க முடியாமலும் தெரியாமலும் தவித்தாள்.

வருணின் அருகாமை அவளுக்கு புதிதல்ல. ஆனால் அவனின் இன்றைய நெருக்கம். அவன் கண்கள் அவளுக்குச் சொன்ன செய்தி. அதில் இருந்த தவிப்பு, தன்னை நெருங்கையில் அந்த கண்களிடம் தெரிந்த நிம்மதி...

எல்லாமே.. எல்லாமே... ஒரே நொடியில் வெயில் கண்ட பனியாக காணாமல் போனதில் அவளுக்கு வருத்தம் என்பதைத் தாண்டி மனதின் ஓரத்தில் ஏமாற்றம்.

அவள் என்ன எதிர்பார்த்தாள்? என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்? எந்த கேள்விக்கும் அவளிடம் விடையில்லை.

இன்றைய இரவு வராமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றும் அளவுக்கு அவளுக்கு மனச்சுமையை வாரி அளித்திருந்தது.

அவன் கடந்து சென்ற வாயிலை வெறித்தபடி வந்து வெளியே நிற்கிறானா என்று பார்த்தாள்.

அவன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அவள் உள்ளம் உள்ளுக்குள் உடைந்தது. அவனிடம் போனில் இது பற்றி கேட்டு விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை ஒதுக்கினாள்.

என்ன கேட்பது? என்னை முத்தமிட வந்துவிட்டு ஏன் நிறுத்தினாய் என்றா? வருணை அப்படியான எண்ணத்தில் நதியா இன்று வரை நினைத்துப் பார்த்ததில்லை.

ஆனால் இன்றைய நிகழ்வில் அவளுக்கு புரிந்ததெல்லாம் அவளுக்குள்ளும் வருண் மீது அன்பையும் மீறி ஏதோ எட்டிப்பார்த்தது என்பது தான். ஆனால் அதற்கு பெயர் உறவுக்குள் எழும் ஈர்ப்பா? பருவத்தில் வரும் ஈர்ப்பா? வெறும் ஈர்ப்பு மட்டும் தானா?

கேள்விகள் அவளை தலைக்குள் வண்டாக குடைய, அறைக்குள் சென்று தனது மெத்தையில் விழுந்து தலையணையைக் கொண்டு முழுவதுமாக முகத்தை மறைத்துக்கொண்டாள்.

இருளாகத் தெரிந்த அவ்விடத்தில் எதையும் தேடாமல், எதையும் நினைக்காமல் அப்போது உள்ளே எழுந்த அந்த பரவச உணர்வை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டிருந்தாள் நதியா.

அவள் ஆராய்ந்து அறியப்போவது எதை? அதை அவள் என்ன செய்யக் காத்திருக்கிறாள்?
 
Top