கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேடல்4

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
Vaquita

உலகின் அரிதான கடல் பாலூட்டியான
வாகிடா அதன் கண்களைச் சுற்றி ஒரு பெரிய கருமையான வளையம் மற்றும் அதன் உதடுகளில் கருமையான திட்டுகள் உள்ளன, அவை வாயிலிருந்து பெக்டோரல் துடுப்புகள் வரை மெல்லிய கோட்டை உருவாக்குகின்றன. அதன் மேற்புற முதுகுப்புற மேற்பரப்பு அடர் சாம்பல் நிறத்திலும், அதன் பக்கங்கள் வெளிர் சாம்பல் மற்றும் அதன் கீழ் பகுதி மற்றும் மேற்பரப்பும் நீண்டு, வெளிர் சாம்பல் அடையாளங்களுடன் வெண்மையானது. இவ்வளவு அழகான வாகிடா அழிவின் விளிம்பில் உள்ளது. திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் ஆகியவற்றின் அவலநிலை ஒட்டுமொத்தமாக மெக்ஸிகோவில் வாகிடாவின் விரைவான வீழ்ச்சியால் எடுத்துக்காட்டுகிறது, சுமார் 10 மட்டுமே எஞ்சியுள்ளது.

- வருணின் வரிகள்

தீரேந்திரன் தனது உணவகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். மியாமி வந்தும் அதே வெள்ளை வேட்டி சட்டையில் பளிச்சென்று திருநீறு அணிந்த அவன் முகம் காட்டும் பேரொளி அங்கிருந்த மக்களை அவன் பக்கமாக சுண்டி இழுத்தது என்றால் மிகையல்ல.

தனது வீட்டிக்கு பக்கத்திலேயே உணவகம் இருந்ததால் அவனுக்கு வாகனம் எதுவும் தேவை இருக்கவில்லை. அவனிடம் மகிழுந்து இருந்தாலும் அது பெரும்பாலும் நதியாவுடன் வெளியே செல்ல மட்டுமே பயன்படுத்துவான். அதிலும் மார்டினை பார்க்க இருவரும் செல்வது தான் அதிகமாக அவர்கள் மேற்கொள்ளும் பயணமே.

கடலுக்கு அடியில் சென்று நீந்திப் பழகிய நதியாவால் அதை விட முடியாததால் இன்னும் அவள் ஸ்கூபா டைவிங் சென்று கொண்டு தான் இருக்கிறாள். அப்போது மட்டும் தீரேந்திரன் தனியே ஒரு நாள் சாலையில் வாகனத்தை செலுத்தி தனது நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ளுவான். அது அவனுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் அவனுக்குள் ஏதோ குறைந்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்த தீரேந்திரன் விரும்புவதில்லை. தன் மகள் இப்போது தான் சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கிறாள். அவளுடன் இருக்கும் எந்த நிமிடத்தையும் அவன் இழக்கத் தயாராக இல்லை. அவனின் அந்த குறைந்தது போன்ற உணர்வை நதியாவுக்காக நினைக்காமல் ஒதுக்கி வைத்தான்.

ஆனாலும் தனியே மேற்கொள்ளும் பயணங்களில் அந்த உணர்வு அதிகரித்து வெறுமை படரும். காரணம் தேட மனம் விழைந்தாலும், அது இன்னும் ஏதேனும் பெரிய வருத்தத்தில் தள்ளி விடுமோ என்ற பயமே தீரேந்திரனை அதற்கு மேல் சிந்திக்க விடாமல் தடை போட்டிருந்தது.

அன்று உணவகம் செல்லக் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தவன் பால்கனியில் இன்னும் கல்லூரிக்குச் செல்லாமல் வெளியே பார்வையை வீசிக்கொண்டிருந்த மகளைப் பார்த்து புருவத்தைச் சுருக்கினான்.

நதியா இப்படி நின்று பார்த்தது அவனுக்கு அவள் மகள் என்று தெரியாத காலத்தில் தான். என்று தந்தையும் மகளும் இணைந்தனரோ அன்றே நதியாவின் பல நாள் வெறுமை தொலைந்து எந்நேரமும் தீராவின் கைகளுக்குள் கைகளை கோர்த்துக்கொண்டு சிரிப்பும் பேச்சுமாகவே இருப்பாள்.

தீரேந்திரனும் பதின்பருவ மகளின் திடீர் தந்தையானதால் தந்தை என்று ஆளுமை செலுத்தாமல் நண்பனாகவே இருக்க, இன்று வரை அவள் இப்படி நின்று எதையும் வெறிக்க வேண்டிய காரணம் இருந்ததில்லை. அப்படியிருக்க, இன்று மட்டும் என்ன நேர்ந்தது??

சிந்தித்தபடி மகளுக்கு அருகில் வந்தவன், அவளுக்கு அவன் கலந்து கொடுத்த சத்து பானம் கேட்பாரற்று பால்கனி டேபிளில் இருக்கக் கண்டு அவனின் குழப்பம் இன்னும் அதிகமானது.

"நதிம்மா.. என்ன டா கஞ்சி குடிக்கலையா?" என்று அவளை அருகே சென்று திருப்ப,

அவளோ கண்களில் வலியோடு, "நீ சென்னை போயிட்டு வா தீரா. நான் ஒரு வாரம் மேனேஜ் பண்ணிப்பேன்." என்று சமந்தமில்லாமல் பேச, தீரேந்திரன் குழப்பம் கொண்டான்.

"என்ன நதிம்மா என்னவோ சொல்ற? வின்டர் வருது. இங்க இது நம்ம ரெஸ்டாரெண்ட்டுக்கு கவனம் செலுத்தவேண்டிய நேரம். இப்போல்லாம் முன்னாடியே டின்னருக்கு டேபிள் புக் ஆகுது. இங்க இவ்ளோ வேலை இருக்கு டா. இப்ப எப்படி அப்பா சென்னை போக முடியும்?" என்று கேட்க,

"உனக்கு இந்த ஹோட்டல் தான் ரொம்ப முக்கியமா தீரா? நான் சொல்றேன்ல நீ சென்னை போய் ஒரு வாரம் வருண் கூட இருந்துட்டு வா" என்று சொல்லும்போது நதியா உடைந்து விட,

"டேய் நதி.. என்ன டா ஏன் அழுகறயா? வருண் கூட இருக்கணுமா? அதான் தினமும் அவன் கூட ரெண்டு தடவை வீடியோ கால் பேசுறேன். அடுத்த மாசம் போக தான் போறோம். இப்ப எதுக்கு டா?" என்று கேட்டாலும் அவனுக்கும் உள்ளே வருணுடன் சென்று சில நாள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

"அப்பா உனக்கு புரியுதா இல்ல எனக்காக நீ அமைதியா இருக்கியா? வீடியோ கால்ல பேசிட்டா நீ அவனோட இருந்த மாதிரி ஆகிடுமா? அவன் உன்னை தேடுறான். உனக்கு தெரியலையா?" என்று கோபமாக கேட்டுவிட்டு,

"அப்பா, அம்மா என்னை உனக்கு தெரியாம மறைச்சு வச்சத்துக்கு பிராயச்சித்தம் பண்றதா நெனச்சு என்னோடவே இருந்துp அவன் மனசை ஏங்க வைக்காத பா. ப்ளீஸ் தீரா.. போ.. போய் அவனோட கொஞ்ச நாள் இரு." என்று கண்ணீர் முட்டும் விழிகளோடு மகள் கூற,

தீரேந்திரனுக்கும் தனக்கு வெறுமையாக தோன்றிய உணர்வின் காரணம் புலப்பட்டது.

"உன்னை விட்டுட்டு எப்படி போவேன் நதி? நீ தீஸிஸ் சம்மிட் பண்ணினதும் ரெண்டு பேருமே இந்தியா போயிடலாம். "என்று கூறி மகளை சமாதானம் செய்ய முயன்றான் தீரேந்திரன்.

"அப்பா.. இந்த நாலு வருஷமா நீ என் அப்பாவா மட்டுமே தான் இருக்க. நான் வருத்தப்படக் கூடாதுன்னு நீ பார்த்துப் பார்த்து, விட்ட பதினேழு வருஷத்தைப் பிடிக்க ஓடுற. எனக்கும் இதெல்லாம் புரியுது பா. ஆனா அந்த பதினேழு வருஷமும் உன் கூடவே இருந்தான்ல, அவனை நீ அப்படியே விட்டுட்ட பா. பாவம் அவன். அதை சொல்ல முடியாம ரொம்ப தவிக்கிறான்." என்று நதியா அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர,

"அப்படி இருந்தா அவன் இந்நேரம் என்கிட்ட ஓடி வந்திருப்பான் டா. வருண் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு தனியா உலகம் இருக்கு. இன்னும் என் மருமகனை கைக்குள்ள பிடிச்சு வைக்க எனக்கு விருப்பம் இல்ல டா." என்று அவளின் காலடியில் அமர்ந்து அவளின் கரத்தை பற்றிக்கொண்டான் தீரேந்திரன்.

"உஸ்..." என்று பெரிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்,

"உனக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது போல தீரா. என்னோட அதிரடி தான் வேலை செய்யும். இந்தா" என்று தன் பேண்ட் பேக்கெட்டில் இருந்த கவரை நீட்டினாள்.

"என்ன டா நதி இது?" என்று அதை தீரேந்திரன் வாங்க,

"உள்ள பாரு" என்று வெளியே வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

அதில் இந்தியா செல்ல அன்று இரவுக்கான விமான டிக்கெட்டுடன், இரண்டு நாட்களுக்குப்பின் திரும்பி வர டிக்கெட்டும் இருந்தது.

"நதி என்னை இன்னிக்கே ஊருக்குப் போக சொல்றியா?" என்று கேட்க,

"இல்ல தீரா இன்னிக்கு டிக்கெட் வச்சு அடுத்த வருஷம் போக சொல்றேன்" என்று அவரைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"நதிம்மா.." என்று தீரா வருத்தமாக அழைக்க,

"நீ அங்க போ பா. உனக்கே நான் சொல்றது புரியும்." என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

யோசனையோடு கையில் விமான பயணச்சீட்டை ஏந்திக்கொண்டு முன்னும் பின்னும் நடந்தான் தீரேந்திரன்.

யோசனை ஒரு முடிவை அடைந்து விட்டது போல வேகமாக தனது உணவகம் நோக்கி நடந்தான்.

மீண்டும் மாலை மகளிடம் சொல்லிக்கொண்டு விமான நிலையம் புறப்பட்டான் தீரேந்திரன்.

விமானப் பயணம் முழுவதும் அவனது எண்ணம் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நின்று தத்தளித்து.

ஆனால் எல்லாம் இன்னும் சில நாட்கள் தானே, நதியா படிப்பை முடித்துவிட்டால் இந்தியா சென்று விடலாம். வருணும் அவனுடனே இருப்பான் என்று அவன் மனம் முடிந்தவரை அனைவரையும் அரவணைக்க நினைத்தாலும் மகளுக்கு முன்னுரிமை வழங்கியது. தந்தைக்கு மகள் என்றால் உலகில் நிகர் வேறு இல்லை என்று சொல்வது இதனால் தானோ என்னவோ!

நதியா அவளின் அறையில் தனியே அமர்ந்திருந்தாள். அவளது எண்ணங்கள் சற்றே பின்னோக்கிச் சென்றது.

அறிவுடைநம்பியின் சுயரூபம் அறிந்து கூட மன்னிக்க மனமிருந்தது அவளிடம். ஆனால் இயற்கைக்கு மாறாக அவர் நடப்பதை பொறுக்க முடியாமல் கோபத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனால் வருண் அப்படியல்ல. அவனுக்கு மாமாவின் வாழ்வை தந்தை கலைத்து விட்டார் என்பதோடு, மாமாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அனைத்து வேலைகளையும் தந்தை செய்து வைத்திருக்கிறார் என்று அறிந்ததும் அவனால் அதை ஏற்க முடியவில்லை. அன்று என்ன செய்தானோ இன்று வரையிலும் நம்பி படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவில்லை. அவளுக்கு அன்று மட்டும் தான் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் குடும்பம் சிதைந்திருக்காதோ என்று எப்பொழுதாவது தோன்றும்.

அன்று அவளின் கோபத்தால் தான் நம்பி தனது திட்டத்தை வெளியிட்டார். அதனால் தான் குடும்பம் கலைந்தது என்று அவளுக்குள் நெருடல் இருந்தபடி இருக்கும்.

இதை விட அவளுக்கு நெருடலாக இருப்பது வருணின் செயல்கள் தான். அதுவும் போன முறை அவள் சென்னை சென்ற அன்று கடலுக்குள் கப்பலில் சென்று விட்டான் என்று கேட்டறிந்து மனம் வருந்தினாள்.

முதன் முதலில் அவள் சந்தித்த அவளின் ரெயின் இன்று இல்லை. அது மட்டும் அவளுக்குத் திண்ணமாகத் தெரிந்தது.

அவளும் அவனிடம் அன்பாக, விளையாட்டாக, கேலியாக, கோபமாக மிரட்டலாக கேட்டுவிட்டாள். இன்று வரையிலும் அவளுக்கு அவனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. 'அப்படி இல்ல டி பீன்ஸ்' என்று சிரிக்கும் அவன் வெகு சில தருணங்களில் மட்டுமே அவளை தியா என்று அழைக்கின்றான்.

இது அவளுக்குத் தெரியாமல் இல்லை. கேட்டாலும் என்ன பதில் கிடைக்கும் என்று தெரிந்ததால் கேட்பதை தாமதப்படுத்துகிறாள். என்று மனம் அவனை நினைத்து கசிந்து உருகுகிறதோ அன்று மனம் கேளாமல் அவனிடம் கேட்டு அதே பதிலை பெற்றுக்கொள்வாள்.

ஆனால் இம்முறை அவளுக்கு அவனது பதிலோ விளக்கமோ தேவையாக இருக்கவில்லை. அவள் மனம் சொன்னது அவனுக்கு அவனின் மாமனின் அருகாமை தேவையென்று. வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனது தந்தைக்கு சென்னை செல்ல விமான டிக்கெட் போட்டு விட்டாள்.

தந்தையை பேசி ஊருக்கும் அனுப்பியாகி விட்டது. ஆனால் அவளுக்குள் தோன்றும் விசித்திரமான எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவளுக்கு தீரா உயிரென்றால் வருண் சுவாசம் போல. ஆனால் அவள் சில வருடங்களாகவே சுவாசத்துக்கு திணறி வருகிறாள் என்று அவளுக்கு மட்டுமே தெரிந்தது.

இன்று தந்தை கிளம்பிச் சென்றதும் தனியே வீட்டில் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்குமான இடைவெளி நீண்டு விட்டது போல, ஒவ்வொரு நிமிடங்களும் பிடித்து தள்ளினாலும் நகராமல் நிற்பது போல நரகமாக இருந்தது.

அவளுக்குள் ஒரே ஒரு கேள்வி முளைந்து அவளை வாட்டி எடுக்கிறது. அதற்கு பதில் தேடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் அமர்ந்திருக்கிறாள்.

தந்தையை போராடி அனுப்பி வைக்க முடிந்த அவளுக்கு ஏன் அவரோடு தானும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை?

தோன்றவில்லையா அல்லது அவளே அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்தாளா? என்று கேட்டால் அவளிடம் பதில் கிடைக்கவில்லை.

எதேதோ யோசனைகளோடு அவளையும் அறியாமல் நித்ராதேவியின் கிருபையால் கண்ணயர்ந்தாள் அந்த கண்மணி.

கனவுலகில் எங்கோ தொலைவில் நின்று அவளை ஏக்கமாகப் பார்க்கும் வருண் தெரிய, அவளையும் அறியாமல் கால்கள் அவனை நோக்கி ஓடியது. ஆனால் அவனோ அவள் அவனை நெருங்க நெருங்க தூரத்தில் விலகியபடியே இருந்தான்.

அவனை அடையவே முடியாதா என்று மனம் ஓய்ந்து நா வறண்டு ஓரிடத்தில் மண்டியிட்டு அமர, கண்கள் நான் மாரி பொழிந்து உன் தாகத்தை தணிக்கவா என்று கேட்டது.

அதற்கு அவள் மனம் பதில் கூறும் முன் மெல்லிய குழலோசை காதில் வந்து மோதியது.

ஆரம்பத்தில் இனிமையாகத் தோன்றிய இசை, அதே ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்க, இனிமை போய் எரிச்சல் மிக்கப் பெற்று அவளையும் அறியாமல் கண் விழித்தாள்.

குழலோசை எங்கே என்று கவனிக்க அது அவள் வீட்டின் அழைபொலி என்பதை உணர்ந்ததும், தலையில் அடித்துக்கொண்டாள்.

வேகமாக முகத்தில் வழிந்த கூந்தலை தன் கையில் மாட்டி இருந்த மிகப்பெரிய ரப்பர் பேண்டில் அடக்கியபடி,

"ஊருக்கு போக சொல்லி டிக்கெட் கொடுத்தா போகாம திரும்பியா தீரா வந்திருக்க? உனக்கு ரெயின் மேல பாசம் இல்லையா?" என்று திட்
டிக்கொண்டே கதவைத் திறந்தவள் திகைத்து நின்றாள்.

அங்கே வாசலில் தோள் பையுடன் நின்றிருந்தான் வருணேஷ்.

- தேடல் தொடரும்
 
Top