கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே - 9

SudhaSri

Moderator
Staff member
Hi all,
Thanks 🙏🏻 for your likes and comments! Keep reading. Share your thoughts with me.

Anbudan,
Arthy Ravi

தேன் மழையிலே
ஆர்த்தி ரவி

அத்தியாயம் 09:

அன்று கல்லூரிவிட்டுப் பின் மதியமே வீட்டுக்கு வந்துவிட்டார் வெற்றிமாறன். அவரிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழையும் போதே நல்ல பசியுடன் இருந்தார்.

போக்குவரத்து அலைச்சலும் மத்தியான வெயிலும் சேர்ந்து தாக்கியதில் களைப்பாக இருந்தவருக்குத் தலைவலியும் சேர்ந்து வந்துவிட்டது. அப்படியே மின்விசிறியை இயக்கிவிட்டு ஹால் சோஃபாவிலேயே சாய்ந்து உட்கார்ந்துவிட்டார்.

காலையில் எட்டு மணிக்கே அன்று ஒரு வகுப்பெடுக்க வேண்டியிருந்தது. அதனால், எப்போதும் காலை எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கல்லூரிக்குக் கிளம்பிச் செல்பவர், அன்று ஏழு இருபதுக்கே கிளம்பியிருந்தார்.

காபியை மட்டும் குடித்துவிட்டு, அவதி அவதியாக மனைவி வனிதா அடைத்துக் கொடுத்த டிஃபென்னை எடுத்துக் கொண்டு போனவருக்கு, அதைச் சாப்பிட பத்தரை மணி வரை நேரம் கிட்டியிருக்கவில்லை.

இரவே வனிதாவிடம் மறுநாள் கல்லூரிக்குச் சீக்கிரமே போக வேண்டும் என்பதைச் சொல்லாமல் விட்டதால், காலையின் பரபரப்பில் வனிதாவால் சாப்பாட்டைச் சரியாகக் கட்டித் தர இயலாமல் போனது!

சுட்டக் கத்திரிக்காய் கொத்சில் ஊறிப் போய் நொச நொசத்த இட்லிகளைச் சாப்பிட முடியாமல் பாதியிலேயே உணவை முடித்துக் கொண்டிருந்தார்.

மதியச் சாப்பாட்டு வேளையும் இப்போது கடந்துவிட்டதில் சோர்வில் அப்படியே கண் மூடிக்கொண்டது. நிமிடங்கள் கேட்பாரற்றுக் கடந்து கொண்டிருந்தன.

இதமான அமைதியும் காற்றும் அவரைச் சற்று அசந்து போகச் செய்திருக்க வேண்டும். ஏதோ சத்தமும் தொடர்ந்து இதமாக யாரோ அவர் தலையைப் பிடித்துவிட, தூக்கம் கலைந்து கண் விழித்தார்.

“என்னங்க காலேஜ்ல இருந்து வந்து அப்படியே உட்கார்த்துட்டீங்களா? உங்க பேக் கூட இங்கேயே இருக்கு. டிரெஸும் மாத்திக்கலை. எப்ப வந்தீங்க? எதுவும் சாப்பிட்டீங்களா? முகத்தைச் சுளிச்சிட்டுத் தலையை அழுத்திட்டிருந்தீங்க… தலை வலிக்குதா?”

வனிதா தான் பக்கத்தில் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர் வேலை முடிந்து பள்ளியில் இருந்து வீடு திரும்பியிருந்தார். வந்ததுமே கணவரின் சோர்ந்தத் தோற்றம் தென்பட்டிருக்க, அக்கறையில் தலை பிடித்துவிட, வெற்றி அசையவும் பேச்சுக் கொடுத்து விசாரித்தார்.

“ஸ்ஸ்… ஏற்கெனவே வலி மண்டையைப் பிளக்குது. ஏன்டீ வந்ததும் வராததுமா இப்படிக் கேள்வியா கேட்டுட்டு நிக்கிற? போ போ… போயி டீ போட்டு வை. நானும் பாத்ரூம் போயிட்டு டிரெஸ் மாத்திட்டு வர்றேன்.”

வெற்றி சுள்ளென்று விழ,

“ம்கூம்… அக்கறையா விசாரிச்சா கூடக் குத்தம்மாய்யா? நானும் வேலைக்குப் போயிட்டு இப்பத்தானே வந்தேன். எனக்கும் உங்களுக்கு மேலே உடம்புலேயும் மனசுலேயும் அலுப்பிருக்கு.

காலையிலே சமைச்சி வச்சி, சமைலறையை ஏறக்கட்டி வேலைக்காரிக்குப் பாத்திரங்களை ஒதுக்கிப் போட்டுட்டு, உங்களையும் கவனிச்சிட்டு, வீட்டையும் பூட்டிக்கிட்டு அரக்கப் பறக்கப் புறப்பட்டுப் போனேன்.

வீட்டுக்கு வந்ததும் எம் பாட்டுக்கு அக்கடான்னு இருக்க மாட்டாம, சோர்வுல காஞ்சி போயி உட்கார்ந்திட்டு இருந்த உங்களுக்குப் போயி பாவம் பார்த்தேனே!

என் அக்கறைக்கு உங்க அதிகாரந்தான் பதில்னா உங்க டீயை நீங்களே போட்டுக் குடிங்க… நானும் ரிஃப்ரெஷ் பண்ணப் போறேன்.”

வனிதா கோபத்தில் பட படவெனப் பொரிந்து தள்ளினார்.

வெற்றிமாறன் மனைவியின் பேச்சைக் கேட்டபடி சட்டையைக் கழற்றிக்கொண்டு இருந்தவர், வனிதாவிற்குப் பதில் தரத் தயாராகும் முன்னரே கணவரை முந்திக் கொண்டு வனிதா குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

“நீங்க தேனு ரூம்ல இருக்கிற பாத்ரூமை யூஸ் பண்ணப் போறதா இருந்தா நம்ம ரூம் கதவைச் சாத்திட்டுப் போங்க. நான் மாத்துத் துணி கொண்டு வரலை!”

பாத்ரூமுக்கு உள்ளிருந்த வனிதா சத்தமாகக் குரல் கொடுக்க,

“என் நேரம்டி! சதிகாரி!”

வெற்றிமாறன் மனைவியைத் திட்டிக் கொண்டே தங்களது படுக்கையறைக் கதவை அடித்துச் சாத்தினார்.

“நல்லவேளை… அந்த மஞ்ச கலர்ல பச்ச கட்டம் போட்ட நைட்டியை எடுத்து வைங்க… ரோஸ்ல கருப்புக் கரை வச்ச குர்தி டாப்பும் கருப்பு லெகிங்ஸும் எடுத்துக் கட்டில்ல போட்டுட்டுப் போங்கன்னு எனக்கு அடிஷனல் வேலைத் தராம விட்டுட்டா.”

புலம்பிக்கொண்டே தன் துண்டு துணிகளுடன் மகளின் அறைக்குள் போனார். அங்கிருந்த குளியலறையை உபயோகித்துவிட்டு வெளியே வந்தவர் சமையலறையை எட்டிப்பார்க்க, தேநீர் தயாரிப்புக்கான எந்த அறிகுறியும் அங்குத் தென்படவில்லை.

“சண்டாளி என்னைப் பழி வாங்க நல்ல நேரம் பார்த்தாப்புல! என் வாயும் சும்மா இருக்கா. கட்டிக்கிட்டவ குணந் தெரிஞ்சும் சாமர்த்தியசாலியா பிழைக்கத் தெரிஞ்ச எந்தப் புருசனும் வாயை விடுவானா?”

தன்னையும் சேர்த்துக் குத்தம் சொன்னபடி வெற்றிமாறனே தனக்கும் மனைவிக்கும் சேர்த்து டீ வைத்தார்.

தண்ணீரில் தேயிலையையும் ஏலத்தையும் சேர்த்தவருக்கு இஞ்சிக் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. குளிர் சாதனப்பெட்டியைப் போட்டு அந்தக் குடை குடைய,

“இல்லாத இஞ்சி எங்கிருந்து தட்டுப்படும்? நகருங்க நான் போட்டுக் கொண்டு வர்றேன்.” என்று கிட்சனுக்குள் உள்ளே நுழைந்தார் வனிதா.

அவரைப் பார்த்ததும் அதுவரை இருந்த மனநிலை வெற்றிமாறனுக்கு மாறியது. சத்தமாகச் சிரித்துவிட்டார்.

“எ… ன்… ன? என்ன ஆச்சு உங்களுக்கு இந்தச் சிரிப்புச் சிரிக்கிறீங்க?” வனிதா கணவரை ‘லூசாய்யா நீ’ பார்வையை வேறு பார்த்து வைக்க,

“மஞ்ச கலரு சிங்குசா ரோஸ் கலரு மங்குஸான்னு இப்ப தான் குளிக்கப் போறப்ப உன்னைப் பற்றி நினைச்சேன். நீ இப்படி வந்து நிக்கிற! அப்ப நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன் வனி?”

“உங்களை…” கணவரை அடிப்பது போலக் கை ஓங்கிய வனிதா தன் உடையை மேலும் கீழும் பார்க்க, அவருக்குமே சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

அவர் வெற்றிமாறன் கமெண்ட் பண்ணிய அதே பச்சை மஞ்சள் சிங்குசா நைட்டியை அணிந்திருந்தார்.

கணவரின் கிண்டலுக்குக் கூடச் சேர்ந்து சிரித்துவிட்டால் அவர் வனிதா அல்லவே! வந்த சிரிப்பை உள்ளே தள்ளிவிட்டு வெற்றியை முறைக்க,

“இந்த முறைப்புத்தான் என் பொண்டாட்டிக்கு அழகு! உன் டிரேட் மார்க்கை விட்டுட்டு நீ கொஞ்சம் போலச் சிரிச்சியா பயந்துட்டேன்டீ!” மனைவியின் காலை மீண்டும் வாரினார்.

“என்னைய பேசாம உங்க நாள் அஸ்தமனம் ஆகாதே! போங்க போயி உங்க பேப்பரை மேஞ்சிட்டு இருங்க. டீ ஆத்தி நானே கொண்டிட்டு வர்றேன்.”

“பேப்பரை மேயவா? போடி நா என்ன ஆடா மாடா? என்னை அஃறிணை ஆக்கிய உன்… னை!”

சமையலறையைவிட்டுத் தன்னைப் பத்திவிடாத குறையாகத் துரத்திய வனிதாவை வெற்றி கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார்.

“பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையால்ல இருக்கு! கிட்சனை விட்டு வெளியே போங்க முதல்ல… உங்களோட!”

“யாரைப் பார்த்துக் கிழவன்னு சொல்ற?” மீசையை முறுக்கியபடி நின்ற வெற்றியை அதற்கு மேல் அங்கே இருக்க விடவில்லை வனிதா. அப்படியே வெளியே பிடித்துத் தள்ளிவிட்டார்.

ஐந்தே நிமிடத்தில் மதியத்திற்குச் செய்து வைத்திருந்த மொச்சைக் குழம்பைச் சூடு செய்து, இன்னொரு பர்னரில் கொஞ்சமாக மீதியிருந்த ஆப்பம் மாவில் சின்ன சின்ன ஊதாப்பம் போலத் தோசைச் சுட்டுக் கொண்டு வந்து வெற்றியின் முன்னே வைத்தார்.

இருந்த பசிக்குக் கபளீகரம் செய்வார் என்று வனிதா நினைக்க, “குடிக்கச் சூடா டீ கேட்டா, நீ எதையோ நீட்டுற?” என்று வெற்றி கேட்டு வைத்தார்.

“இது டூ மச்ப்பா! ஒழுங்கா எடுத்துச் சாப்பிடுங்கச் சொல்லிட்டேன்.” இருந்த கடுப்பில் வனிதாவே ஒரு வாய்த் தோசையைப் பிட்டு மொச்சைக் குழம்பில் தோய்த்து வெற்றியின் வாயில் வைத்துவிட, அதன் பின்னர் அவரே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

வனிதா டீயை வடிகட்டி இருவருக்கும் ஊற்றி எடுத்து வர, “உனக்குத் தோசை?” வெற்றி அக்கறையாகக் கேட்க, “எனக்கு டீ போதும். மதியம் குழம்புச் சாதம் எடுத்திட்டுப் போய்ச் சாப்பிட்டேனே.” என்று வனிதா சொன்னார்.

“மத்தியானம் சாப்பிட்டது தானே… இந்தா ஒரு வாய்ச் சாப்பிடு.”

உண்மை தானா? கணவர் தனக்குப் பிரியமாய் ஊட்டச் செய்கிறாரா?

ஆச்சரியத்தில் கண்களையும் வாயையும் விரித்தார் வனிதா. அந்தப் பிளந்திருந்த வாயில் வெற்றி தோசையை அடைக்க, உண்மையில் வனிதா நெகிழ்ந்து தான் போனார்.

எத்தனை காலமாயிற்று? இப்படிப் புருசன் தன்னைக் கவனித்து?

அந்த வீட்டின் சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்தது. மக்களின் வாழ்வு நன்றாக இருந்தால் அதைவிடப் பெற்றோருக்கு வேறு என்ன வேண்டும்?

தேன்மொழிக்குக் கல்யாணம் கூடி வருவது போலிருக்க, வெற்றியும் இதமான மனநிலையில் இருந்தார். என்ன தான் புருசனும் பொஞ்சாதியும் அவ்வப்போது டாம் அண்ட் ஜெரியாக அவதாரம் எடுத்தாலும் அவர்களுக்குள்ளே நேசம் மலர்ந்து தான் கிடந்தது!

சாப்பிட்டுவிட்டு இருவரும் அப்படியே காற்றாட வாசலில் உட்கார்ந்து இருந்தனர்.

வாசலில் நட்டிருந்த முல்லைக் கொடி காற்றில் அசைந்து அசைந்து பால் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்து எதிரே நின்று கொண்டிருந்த செடிகளில் மலர்ந்தும் மலராமல் இருந்த பாரிஜாதப் பூக்கள் வெட்கத்தில் குளித்துக் கொண்டிருந்தன.

உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் நான்கும் நம் வீட்டு ஆண்கள் சிலரைப் போன்று கண்களுக்குத் தெனாவெட்டாகத் தெரிந்தன!

அந்நேரம் தேன்மொழி ஃபோன் செய்தாள்.

“ஹலோ தேனு எப்படிடா இருக்க?”

“நல்லா இருக்கேன் பா. நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க… என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அம்மா எங்கப்பா?”

“நாங்க நல்லா இருக்கோம்டா. இப்ப தான் உங்கம்மாவுக்கு ஊட்டி விட்டேன். ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டு அக்கடான்னு வாசல்ல உட்கார்ந்திட்டு இருக்கோம்.”

“என்னப்பா சொல்றீங்க? நீங்க… அம்மாவுக்கு ஊட்டிவிட்டீங்களா? ஏன் என்னாச்சு அம்மாக்கு?” பதற்றத்துடன் மகள் கேட்க,

“எதுவும் ஆனாத்தான் அவளுக்கு நான் ஊட்டணுமா என்ன? சும்மா ஒரு ஆசையிலே ரெண்டு வாய் ஊட்டுனேன் டா.” என்று சொல்லி வெற்றி சிரித்தார்.

“போங்கப்பா ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்.”

“என்னது பயந்திட்டியா? ஆமாமில்ல உங்க அம்மாவுக்கு நான் ஊட்டினேன்னு சொன்னா பயந்து தான் வரும். டெரர் பீஸ் அவள்!”

இப்படி மகளிடம் தன்னைப் பற்றிக் கிண்டல் செய்த கணவரை முதுகிலே ஒன்று போட்டுவிட்டு,

“பெரிய ஜோக்கு! இதுக்கு அஹ் ஹ ஹ்ஹான்னு சிரிப்பு வேற. இங்க கொடுங்க அந்த மொபைலை!”

வனிதா மொபைலை பிடுங்கிக் கொண்டார். மகளிடம் அவர் பேசவாரம்பித்தார்.

“சொல்லுடி…”

“நீ தான் சொல்லணும்… என்ன ரொமான்ஸ் சீன்ல நான் பில்லியா (பூனை) வந்துட்டேனா?”

“போடி விவஸ்தையில்லாம உங்க அப்பா தான் ஏதோ சொல்றாருன்னா நீயும் கூடச் சேர்ந்திட்டு… சரி சொல்லு நீ என்ன பண்ண இன்னைக்கி… டின்னர் சாப்பிட்டியா இல்லையா?”

“வெளிய இருந்து நூடில்ஸும் ஹூனான் சிக்கனும் வாங்கிட்டு வந்தேன் மா. இன்னும் சாப்பிடலை. இனி மேல் தான் சாப்பிடணும்.”

“உனக்கு இப்ப ராத்திரி ஒன்பதே முக்கால் இருக்குமே! இன்னுமா சாப்பிடலை? இப்படி வெளியிலே வாங்கிட்டு வர்ற எண்ணெய்ப் பதார்த்தத்தை எல்லாம் நேரத்தோட சாப்பிட்டிடணும். நேரங்கெட்டுச் சாப்பிட்டிட்டு வயித்துக்கு ஒத்துக்காம போச்சுன்னா என்னடி செய்வ? தனியா வேற இருக்க.”

“அம்மாஆ ஆரம்பிச்சிட்டியா! தனியா இருக்க… தனியா இருக்கன்னு எத்தனை தடவை இப்படியே பேசுவ? உன் லெக்சரை கேட்காம நான் தூங்கப் போகக் கூடாதுன்னு வரம் வாங்கிட்டு வந்திருக்கேன் போல.

அது தான் எனக்கு ஜோடி சேர்க்க ஒரு ஆளை அனுப்பி வைக்கப் போறேல்ல… வயித்து வலியிலே துடிச்சா அவன் வந்து என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய், மருந்து மாத்திரைய வாங்கித் தந்து, கூட இருந்து என்னைய கவனிச்சிக்கட்டும்.”

தேன்மொழி என்னமோ சாதாரணமாகத்தான் சொன்னாள். எப்பவும் போல் அம்மாவின் பேச்சைக் கேட்டு எரிச்சலாகி வார்த்தைகளை விட்டிருந்தாள்.

ஆனால், அதுவே உண்மையாகிப் போகும் என்று அவள் கண்டாளா என்ன? நம்மைச் சுற்றித் தேவதைகள் உலாப் போகுமாம்… நம் பேச்சோ விருப்பமோ அத்தேவதைகளின் செவிகளை எட்டிவிட்டால், ‘அதுவே நடக்கக்கட்டும்!’ என்று ஆசீர்வாதம் தருமாம்.

அம்மாதிரி எந்தத் தேவைதையோ தேன்மொழியின் பேச்சைக் கேட்டுவிட்டதோ என்னவோ!

“தேனூ என்னடி இது? மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்லிட்டிருக்க… பார்த்துப் பேசு!” மகளை அதட்டினார் வனிதா.

மகளின் பேச்சும் விட்டேத்தியான குணமும் அவரைக் கலவரப்படுத்தியது!

வெற்றிமாறனும் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். மொபைல் ஸ்பீக்கர் மோடில் தானிருந்தது. வெற்றிக்கும் மகளின் பேச்சுக் கவலையளித்தது.

இருந்தாலும் மகளைக் குறை சொல்லவில்லை அவர். இத்தனை காலமும் தன் கூட்டுக்குள்ளேயே நத்தையாய்ச் சுருண்டிருந்தாள். இப்போது மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்புகிறாள்.

பேசட்டும்… அவள் மனம் திறந்து பேசுவதே பெரிய நிம்மதி! காலப்போக்கில் சரியாகி விடுவாள். எப்படியும் மூன்றாம் மனிதர் முன்னே மரியாதையில்லாமல் பேச மாட்டாள் என்றே நினைத்தார்.

மனைவியிடமும் மகளின் மாற்றத்தைச் சுட்டிக்காட்டிப் புரிய வைக்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டார்.

வெற்றிமாறனின் நினைப்பும் சரி தான். ஆனால், அவர் மூன்றாம் மனிதர்களின் முன் தானே தேனு மரியாதை குறைவாக நடக்க மாட்டாள் என்று எண்ணுகிறார்?

அவளுடைய கணவனாகப் போகிறவன் திருமணத்தின் பின்னர் அவளுக்கு மூன்றாம் மனிதன் அல்லவே!

யூ அண்ட் மீ என்கிற ரிலேசன்ஷிப்பிற்குள் வந்துவிட்டால் தேன்மொழி எப்படி நடந்து கொள்வாள் என்கிற நினைப்பு வெற்றிக்கு வரவே இல்லை.

மகளை அந்தளவு நம்பினார்.

“அவன்னு தான் நான் சொன்னேன். நீங்க தான் இவன்னு கூடச் சேர்த்துக்கிட்டீங்க.”

“நீ விளையாடிட்டே இரு. எனக்குத் தான் இங்க பக்குப் பக்குன்னு இருக்கு.”

“ம்மாஆ…”

“என்னடி?”

“அவன் மட்டும் என்னை அவங்க, இவங்க, வாங்க, போங்கன்னா சொல்லப் போறான்?”

ஹரி தேன்மொழியை மரியாதையாகத்தான் சுட்டிக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாதே!

“நீ கிண்டலாத்தான் சொல்ற… ஆனா…”

“ப்ளீஸ் மா இனி மேலாவது உன் லெக்சரை விட்டுட்டு என்கிட்ட நல்லாப் பேசு. எனக்கு யாருகிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதாம்மா?”

“என் மகள் அறிவாளி தான்!”

“அப்ப கவலையை விட்டுட்டு நிம்மதியா இரு. சரிம்மா நேரமாச்சு. சாப்பி்டணும். கொஞ்ச நேரம் வேலையும் பார்க்கணும். சாப்பிட்டு முடிச்சிட்டு ஒரு வாக் போயிட்டே தூங்கப் போறேன் போதுமா? இப்ப வச்சிடவா?”

“வாக்கா இந்த நேரத்திலேயே?”

“த்சு நீ சும்மா இரு வனிதா! அங்க என்ன பயம்? சேஃப்டி இல்லைன்னா தேனுவே நைட் நேரத்திலே வெளியே போக மாட்டாள்.”

“அப்பான்னா அப்பா தான். சோ ஸ்வீட்!” தொலைவில் இருக்கும் அப்பாவைக் கொஞ்சிக் கொண்டாள் தேன்மொழி.

“என்னங்க அவளுக்கு ஒரு தடவை ஞாபகப்படுத்துங்க…”

“என்னம்மா அப்பாட்ட குசு குசுன்னு ரகசியம் பேசுற?”

“ம்கூம் அப்படியே உங்கப்பா எனக்குக் காதைக் கொடுத்திட்டாலும்…”

“சும்மாவே இருக்க மாட்டியா வனிதா!” மனைவியை அதட்டிவிட்டு வெற்றி மகளிடம், “அம்மாடி அந்த மாப்பிள்ளை பையன் இன்னும் ரெண்டு நாளிலே உன்னை வந்து மீட் பண்ணுறதா சொல்லியிருக்காரில்ல. அன்னைக்கி நீ ஃப்ரீ பண்ணிக்கோடா.” எனவும்,

“ம்ம் ஏற்கெனவே சொல்லிட்டீங்களே ப்பா. பார்த்துக்கறேன். பை!”

தேனின் குரல் அப்படியே உள்ளே போய்விட்டது. அதுவரைக்கும் கல கலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே யோசனைக்குள் போய்விட்டாள்.

“சுரத்தை இல்லாம பதில் சொல்லுறாங்க.”

“சரியா போயிடும் வனி. உன் பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா கல்யாணத்துக்குத் தயாராகிட்டிருக்கா. அவ மனசு முழுசா மாறும்னு நீயும் நம்பிக்கை வை.”

தன் மனதில் கருத்தில் தோன்றிய விசயத்தை மனைவிக்கு எடுத்துரைத்தார் வெற்றிமாறன்.

அன்றிரவு வனிதா மறுநாள் காலை சமையலுக்காக முட்டைகோஸ், பீன்ஸ் என வெட்டி வைத்துக் கொண்டிருந்தார். சமையலறையையும் சுத்தம் செய்ய வேண்டியதாய் இருக்க, அவர் அதில் பிஸியாக இருந்தார்.

வெற்றி அவர்கள் இருவருக்குமான மறுநாள் அணிய வேண்டிய உடைகளை அயர்ன் செய்து வைத்துவிட்டு, ஓய்வாக டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மொபைல் ஒலித்தது. வெற்றி எழுந்து போய் சார்ஜரிலிருந்த ஃபோனை எடுத்துப் பார்க்க, தேவானந்த் தான் கூப்பிட்டிருந்தான்.

“ஹலோ ஆனந்த் சொல்லுப்பா!”

“அப்பா… நல்லவேளை நீங்க ஃபோன் எடுத்தீங்க.”

“என் ஃபோனுக்கு கூப்பிட்டா நான் தானே எடுத்துப் பேசுவேன்.”

ஹாஸ்யமாக வெற்றி மகனுக்குப் பதில் கொடுக்க, அவன் அதை இரசிக்கும் மனநிலையில் இல்லை.

“நான் கால் பண்ணினால் அம்மா பார்த்தா எடுத்துப் பேசுவாங்க.” மகனின் பதில் வந்த தொணியில் வெற்றி சுதாரித்தார்.

“அப்படி உங்க அம்மாக்குத் தெரியாம என்ன விசயம் சொல்லப் போற?”

“அப்பா…” தேவானந்த் விசயத்தைச் சொல்லத் தயங்கவும் வெற்றி அவனை என்னவென்று சொல்லுமாறு ஊக்கினார்.

“சும்மா சொல்லுப்பா என்ன தயக்கம்… அம்மா கிட்சன்ல இருக்காள். நான் வெளியே வந்துட்டேன்.”

“அம்மாவுக்குத் தெரியாமன்னு எதுவும் இல்லைப்பா. விசயத்தைக் கேட்டதும் உடனே ரொம்ப ரியாக்ட் பண்ணுவாங்க…”

“சரி நீ விசயத்தைச் சொல்லு.”

“தேனைப் பார்க்கச் சிங்கப்பூர் போறேன்னு சொன்ன அந்த மாப்பிள்ளை போகலியாம்.”

“இப்ப போகலையா இல்லை…”

“இந்தச் சம்பந்தம் சரி வராதுப்பா. நாம வேற பார்க்கலாம்.”

“ஏன்… என்னாச்சு ஆனந்த்?”

“மாப்பிள்ளையோட அத்தை ஃபோன் பண்ணாங்கப்பா. மாப்பிள்ளை வீட்ல யாருக்கும் அவர் சிங்கப்பூர் போய்ப் பொண்ணைப் பார்க்கிறது பிடிக்கலையாம். முதல்ல மாப்பிள்ளை விருப்பத்துக்காகச் சம்மதம் சொன்னாங்களாம். மற்றபடி இந்த மாதிரி ஒரு… ஒரு…”

“என்னப்பா…”

“செகண்ட் ஹேண்ட் பொண்ணை அவங்க வீட்டுப் பையனுக்குக் கல்யாணம் செய்ய அவங்க வீட்ல யாரும் இஷ்டப்படலையாம்!”

“என்ன… என்ன… ஈஸ்வரா! அப்படியா சொன்னாங்க? அப்புறம் எதுக்கு மேட்ரிமோனியல்ல விருப்பம் தெரிவிச்சுப் பேசினாங்கன்னு கேட்டியா நீ?”

வெற்றிமாறனின் மனது அவ்வளவு பதறியது! தெரிந்து தானே முன் வந்தனர். இப்போது என்ன வந்தது?

“கேட்டுட்டேன் ப்பா. அது அந்த ஆள் அவன் விருப்பத்துக்குப் பார்த்து ரெஸ்பாண்ட் பண்ணதாம். அவன் வீட்ல யாருக்கும் இதுல விருப்பமில்லையாம்.”

“அப்படி விருப்பமில்லாதவங்க அப்புறம் எதுக்கு என்னோட ஃபோன்ல எல்லாம் பேசணும்? நல்லா தானே பேசினாங்க. அவங்க குடும்பமும் நல்ல குடும்பமா தெரிஞ்சதாலே தானே புரொஸீட் பண்ணேன்.”

“ம்ப்சு விடுங்கப்பா! நான் தான் நேரிலே அவங்களை இங்க பார்த்தேனே! நல்ல ஜனங்கள்னு தான் எனக்கும் பட்டது. இப்போ… இப்படிச் சொன்னதும் அந்த வீட்டு ஆளு தான்.

முதலிலேயே அவங்க குணத்தைத் தெரிஞ்சிக்கிட்டோமே. நல்லதுன்னு நினைங்கப்பா. நீங்க டென்ஷன் ஏத்திக்க வேண்டாம். அம்மாவுக்கும் மெதுவா சொல்லுங்க. அவங்க டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்கப்பா.”

“சரிப்பா நான் பார்த்துக்கிறேன். ஆமா அவங்க அத்தை எதுக்கு உன்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க? விசயம் எதுவா இருந்தாலும் அவங்க என்னை இல்ல கூப்பிட்டுச் சொல்லணும்?

அந்த மாப்பிள்ளைப் பையனும் என்ன ஏதுன்னு என்னைக் கூப்பிட்டுச் சொல்லலை. என்னடா இது? என்ன குடும்பம் இவங்க? அந்தப் பையன் தானே,

‘நான் ஒரு வேலையா சிங்கப்பூர் போக வேண்டியதா இருக்கு. அப்படியே உங்களுக்கு விருப்பம்னா தேன்மொழியை அங்கே நேர்ல சந்திச்சுப் பேசிட்டு வர்றேன்.’ னு பெர்மிஷன் கேட்டார்.

இப்ப நான் தேனுக்கிட்ட என்ன சொல்ல? ஒரு வழியா இப்பத்தான் உன் அக்கா மெல்ல மெல்ல இன்னொரு வாழ்க்கைக்கு ரெடி ஆகிட்டு வர்றா. எடுத்ததும் இப்படி ஒரு தடங்கல், பேச்சு வருதுன்னு தெரிஞ்சா… ஈஸ்வரா!”

“அக்காட்ட இதை எல்லாம் எதுக்குச் சொல்லிட்டு இருக்கணும்? இன்ன விசயம்னு சொல்ல வேண்டாம் ப்பா. அந்த மாப்பிள்ளையின் சிங்கப்பூர் டிரிப் கான்செல் ஆகிடுச்சின்னு மட்டும் சொல்லுங்க. அப்புறம் பார்த்துக்கலாம்.

இங்க பங்களூருவிலே தானே மாப்பிள்ளையின் அத்தை வீடு இருக்கு. ஒரு தடவை என்னை அங்க போகச் சொல்லியிருந்தீங்களே. என்னை நேரிலே பார்த்ததால் அவங்க என்கிட்டேயே பேசிட்டாங்க போல.

இனி இந்த மாப்பிள்ளை பேசினா கூட கட் பண்ணி விடுங்கப்பா. அக்காவுக்கு வேற அலையன்ஸ் பாருங்க. நல்ல குணமுள்ளவங்க அமையற வரைக்கும் பொறுமையா இருங்க. நீங்களோ அம்மாவோ அவசரப்பட வேண்டாம் ப்பா.

சூர்யா மாமா இடத்தை அவ்வளவு சீக்கிரம் நாம நிரப்ப முடியுமா? அவரை மாதிரி ஒருத்தர் இனி கிடைக்கிறது கஷ்டம் தான். அதுக்காக நாம ரொம்பவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டியதில்லைப்பா!”

“சரி கண்ணா… பொறுமையாவே பார்த்துப் பண்ணுவோம். நீ சாப்பிட்டியா? இதைப் பற்றியே நினைச்சிட்டு இருக்காத. நிம்மதியா தூங்கு. வீக்கெண்ட் வீட்டுக்கு வர்றியா?”

அப்பாவும் மகனும் சிறிது நேரம் பேசினர். ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாய்… மருமகன் சூர்யாவையும் மாமா சூர்யாவையும் பற்றிய பகிர்தலுடன்… அந்த நிமிடங்களும் கரையலுடன் கரைந்தன!

அதே நேரம் கடலூரில்…

“பானு, நீ எடுத்திருக்க இந்த முடிவுல உறுதியா இருக்கியா?”

கோபாலகிருஷ்ணன் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

இருவரும் தங்கள் படுக்கையறையின் தனிமையில்… இரவு விளக்கொளியின் மந்தகாசத்தில் தங்கள் எண்ணங்களை அலசிக் கொண்டிருந்தனர்.

சென்னையில் ஹரி கிருஷ்ணன்…
 
Last edited:

Chitra ganesan

Well-known member
எந்த மாப்பிள்ளை போய் பார்க்கிறேன் என்று சொன்னதாம்?நல்லது..தேனுவுக்கு தான் நம்ம ஹரி இருக்கான்ல..
 

Latha S

Administrator
Staff member
தேனுவுக்கு ஹரி இருக்கிறான். ஹரியின் அம்மா என்ன முடிவு எடுத்து இருப்பாங்க? ஹரிக்கு வேறு பெண் பார்த்து விட்டார்களா? Waiting for next epi
 

Arthy

Member
தேனுவுக்கு ஹரி இருக்கிறான். ஹரியின் அம்மா என்ன முடிவு எடுத்து இருப்பாங்க? ஹரிக்கு வேறு பெண் பார்த்து விட்டார்களா? Waiting for next epi
Thank you Latha! 💐
 
Top