அத்தியாயம் 1
சூரியன் கூட தன் ஆளுமையை நிலைநிறுத்த தயங்கும் யாரும் இல்லாத அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்து செல்ல ஆரம்பித்தான் அவன். பூச்சிகளின் ரீங்காரம் மெல்ல மெல்ல காதுகளை கிழித்துக்கொண்டு மனதின் அடியில் அமைதியாய் இருக்கும் பயத்தை தட்டிப் பார்க்க தயாராகி கொண்டிருந்தது.
அவனது கால்கள் அவன் மனதின் பேச்சை கேட்காமல் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டு இருந்தன. சுற்றிலும் தனது பார்வையை கவனமாக சுழற்றியபடியே நடக்க ஆரம்பித்தான்.
சட்டென்று ஏற்பட்ட பேரமைதியில் திரும்பி பார்க்க, "ஏன் நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்கிற?. உனக்கு தேவையானத தொலைச்சுட்டு இருக்க, சீக்கிரம் போ." என்ற பெண் குரலில் ஸ்தம்பித்து நின்றான்.
சிறிது நேரத்தில் நிதானத்தை அடைந்தவனோ, "நீ சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்ல. என்மேல உனக்கு என்ன அக்கறை? முதல்ல யார் நீ?" என்று கத்த ஆரம்பித்தான்.
"நான் யாரா இருந்தா உனக்கு என்ன? நீ எனக்கு முக்கியம்!. அதனால தான் உன்ன சுத்தி சுத்தி வரேன். புரிஞ்சுக்கோ"
"நீ யார்னே தெரியல. மரியாதையா போய்டு. கண்ணு முன்னாடி நிக்காத. இல்லனா கொலையே பண்ணிடுவேன்!" என்று திரும்பி நடக்க ஆரம்பிக்க,
"நான் நினைச்சா தான் நீ இப்போ இங்க இருந்து போக முடியும். உன்ன கொல்ல பாக்குறாங்கடா. சொன்னா கேளு" வழிமறித்து மீண்டும் மீண்டும் சொன்ன அந்த பதுமையின் மொழிகளில் எரிச்சலுற்றவனோ!!
"ஏய்! சும்மா சொல்லிகிட்டே இருக்கேன். விட்டா ஓவரா பேசிட்டே போற. நான் ஒரு பாக்ஸர். எத்தன பேரு வந்தாலும் அடிச்சு பறக்க விட்டுட்டு போயிட்டே இருப்பேன். நீ இப்போ வழிய விடுறியா! இல்ல என் கோபத்த பாக்குறியா?" தன் கைகளை முறுக்கி கொண்டு அவளை நெருங்க,
"இப்ப கூட நான் சொல்றத கேட்க மாட்டீயா? என்னோட கடைசி நம்பிக்கை நீ மட்டும் தான். உன்ன விட்டா யாரும் எனக்கு இல்ல. உன்னைய காப்பாத்த வேண்டியது என்னோட கடமை." பெண்ணவளோ அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடும் முடிவில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.
"உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? கடைசி தடவையா சொல்றேன். ஒரு பொண்ண அடிச்சிட்டேனு யாரும் சொல்லிட கூடாதுன்னு பாக்குறேன்." என்று ஓங்கிய கையை அவள் கன்னத்தின் அருகில் வைத்துக்கொண்டு முறைத்து கொண்டே பேசினான்.
"உனக்கு தான் புரியல. கடைசியில நீ வருத்தப்படுவ. உங்கப்பா நிலைமை உனக்கும் வரக்கூடாதுன்னு தான் இவ்வளவு நேரமும் பொறுமையா பேசுறேன்!" என்று அவளும் கோபத்தை மறைத்து வைத்துக்கொண்டு பேசினாள்.
"அந்த ஆளு பத்தி பேசுனா எனக்கு புடிக்காதுன்னு தெரியாதா? உன்னைய!" என ஓங்கி அடித்தவனோ, வலி தாங்கமுடியாமல் "அம்மா!" என்று கத்தினான்.
"டேய்... டேய்... ஆதி... ஆதி... என்னடா ஆச்சு. ஏன்டா இப்படி கத்துற?" அவனின் அம்மா வித்யா அவனை உலுக்க, சட்டென்று எழுந்தவன் சுற்றியும் தன் பார்வையை சுழற்றினான்.
'இவ்வளவு நேரம் தான் கண்டது கனவு தான்' என மனதில் நினைத்துக் கொண்டாலும் அவளை அடிப்பதாக நினைத்து அருகில் இருந்த சுவற்றில் அடித்ததில் வந்த கையின் வலி தான் என அறிந்து கொள்ள முடிந்தது அவனால்...
"என்னடா பேந்த பேந்த முழிக்கற!என்ன ஆச்சு?" குழப்பத்துடனே வித்யா கேட்க,
"கெட்ட கனவுமா! "
"அது தான் தெரியுதே நீ கத்துனதுலயே. என்ன கனவு கண்ட?"
"ஒரு பொண்ணு விடாம தொரத்திட்டே வரா. நான் போக சொன்னாலும் போகாம என்னைய சுத்தி சுத்தி வராம்மா"
"டேய் இது கனவா.. இல்ல உனக்குள்ள இருக்க ஆசையா? ஒழுங்கா உண்மைய மட்டும் சொல்லு?" கையை நீட்டி எச்சரிக்கை செய்தபடியே கேட்டார்.
"சத்தியமா உண்மைய தான் சொல்றேன்மா. ஆனா ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருக்கு. யாருனு கண்டுபிடிக்க முடியலம்மா."
"இப்படி தான் உங்கப்பாவும் அவங்க அம்மாகிட்ட என்னைய லவ் பண்றத சொன்னாரு. அதுக்கு உங்க பாட்டி வெளக்கமாத்த எடுத்து அடிச்சாங்க. உனக்கு எப்படி வசதி?" என்று கேட்க
"சமத்தா அமைதியா தூங்குறேன்மா." போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு மீண்டும் நித்திரையில் மூழ்க ஆரம்பித்தான்.
ஏதேதோ எண்ணங்கள் மனதில் கடலலைகள் போல ஓயாமல் முற்றுகை இட்டாலும் அவன் மனது அந்த பெண்ணை காண ஏங்கியது. கனவுகளில் மீண்டும் வர மாட்டாளா என தேடியது.
ஆனால் நித்திரை தேவன் நெடுநேரம் காத்திருந்து அவனை அரவணைத்து கொண்டான். அவனின் ஆசையை நிராசை ஆக்கிவிட கதிரவன் ஒளி நாடாக்களை வீச ஆரம்பித்தான்.
"டேய் எந்திரிடா! நைட் ஃபுல்லா செல்போன் நோண்ட வேண்டியது. காலங்காத்தால இழுத்து போத்திகிட்டு தூங்க வேண்டியது. எந்திரிடா " கிட்சனில் இருந்து காஃபி டம்ப்ளரை கையில் எடுத்ததில் இருந்து தனது சுப்ரபாதத்தை ஒலித்துக் கொண்டே அவன் ரூமுக்குள் புகுந்தாள் வித்யா எப்பவும் போல.
"அம்மா இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம். காஃபிய அப்படி வச்சிட்டு போ." போர்வைக்குள் சுருண்டு படுத்து கொண்டான்.
"அப்போ உன் போன கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிக்கிறேன்,பரவாயில்லயா?" என்றதும் ஒற்றை நொடியில் எழுந்து போனை எடுத்தான்.
"அப்படியே தான். போய் சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பி வா. தோசை சாப்டுட்டு கிளம்பு. சட்னி பிரிட்ஜில இருக்கு. நான் ஆபீஸ் கிளம்பறேன்" வித்யா கூறிவிட்டு நகர்ந்தார்.
ஆதியோ எப்பவும் போல கிளம்பி அவசரம் அவசரமாக உணவை விழுங்கிவிட்டு தனது ஆர்எக்ஸ் பைக்கை எடுத்துக்கொண்டு ஊரே திரும்பி பார்க்கும் சத்தத்துடன் அலுவலகம் சென்றான்.
"ஹாய் டூயூட்! என்ன இன்னைக்கு ரொம்ப லேசியா இருக்க? நைட் தூக்கம் இல்லையா?"
"இவன் வீட்டுல போய் ப்ராஜெக்ட் பண்ணி அந்த வேகாத மண்டையன்கிட்ட நல்ல பேரு வாங்க ஏதாவது ஐடியா பண்ணிருப்பான்!"
"என் நண்பன பத்தி அப்படி யாரும் சொல்லாதீங்கடா? அவன்! அவன்!" எல்லோரும் சிரித்துவிட,
"இதுவரைக்கும் இங்க எனக்கு மோர்தென் ஃபிஃப்டி ப்ரப்போஸல் வந்திருக்கு. இப்போ கூட நிஷா காலையில லிப்ட்ல ப்ரப்போஸ் பண்ணினா. ஆனா கடைசி வரைக்கும் எந்த பொண்ணும் அக்செப்ட் பண்ணாம பின்னாடியே போய் வீணா போன பசங்க யாருன்னு நான் சொல்லனுமா?" என்ற ஆதியின் வார்த்தையில் சிரிப்புகள் தவிடுபொடியானது.
"போங்கடா. போய் வேலைய பாருங்கடா" என்றவன் தன் கேபினில் அமர்ந்து தன் கனவை பற்றி யோசிக்கலானான்.
"யார் அவள்? எதற்கு என்னை பின்தொடர்ந்து வரனும்? என்னைய முக்கியம்னு சொல்லனும்? ஏதோ பழக்கப்பட்ட குரல் போலவே இருக்கே!" யோசனையில் இருந்தவனை சட்டென்று கலைத்தது யாசிகாவின் குரல்.
"என்ன மச்சி ரொம்ப யோசனையிலயே இருக்க. யார் அந்த பொண்ணு? " அவள் சொன்னவுடன் அதிர்ச்சியில் அவன் முகம் மாறியது.
"அதெப்படி உனக்கு தெரியும்?"
"அப்போ நிஜமாவே ஏதோ ஒரு பொண்ண பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கியா? யார்டா அது?"
"அப்போ நானா தான் உளறிட்டேனா?"
"சரி சொல்லு. யார் அந்த பொண்ணு. உன்னோட இந்த சிங்கிள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த அதிசய பெண் யார்?" கண்கள் உயர ஆவலோடு காத்திருந்தாள் அவன் பதிலுக்காக.
"எவளும் இல்ல. ஒரு கனவு. அதுல வந்த பொண்ண பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்" தன் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு கூறினான்.
"என்னது கனவா? அதுல வந்த பொண்ண பார்த்தியா இவ்வளவு யோசனை? சரி விடு. அந்த பொண்ணு யார்னு தெரியுமா?"
"இல்லடி. அந்த முகத்த இப்ப தான் பாக்குறேன். ஏதோ பழகின முகம் மாதிரி இருக்கு. எங்கையோ போக சொல்றா. கூட வருவேன்னு சொல்றா! ஆனா ஒன்னும் புரியல. அதுக்குள்ள கனவு கலைஞ்சிடுச்சு"
"இதுக்கு தான் இவ்வளவு யோசனையா? டேய் கனவுன்னா ஆயிரம் வரும். சப்ப மேட்டருக்கு இவ்வளவு சீன் தேவையில்ல. வாடா கேன்டீன் போலாம்" அவனின் கையை இழுத்துக் கொண்டு அழைத்து சென்றாள் யாசிகா.
"ஏய் தின்னி மூட்டை... நீ நல்லா திங்க என்னைய கூட்டிட்டு வந்துட்டியா. டீ மட்டும் தான் வாங்கி தருவேன்"
"போடா எரும. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. நம்ம செண்பகம் மேம் கைபக்குவத்தை ரசிக்க தெரியாத மங்குனி அமைச்சர் நீ. அக்கா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?"
இன்றைய ஸ்பெஷல் மெனுவையும் எப்போதும் தான் சாப்பிடும் உணவு ரெசிபிகளை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தாள்.
"இதோ வந்துட்டான்டி என் பார்த்தா. உன்னைய வச்சு செய்யறதுக்காகவே வந்துட்டான் பாரு. வாடா... வாடா... வாடா.." தன் நண்பன் செல்வாவை அழைத்தான் ஆதி.
"தளபதி என்னடா இந்த குட்டி பிசாசு கூட உக்காந்து இருக்க. என்னவாம் இவளுக்கு பிரச்சினை? ஏன்டி உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா?" செல்வா ஆரம்பிக்க,
"அப்படி கேளுடா பார்தா. மனுசியே இல்ல இவ. அப்புறம் எப்படி மனசாட்சி இருக்கும்"
"பின்ன என்ன தளபதி. சாப்ட போகும் போது கூப்டுடி. நானும் வர்றேன்னு சொன்னேன். விட்டுட்டு வந்து தனியா திங்குறா பாருடா" என்று சொல்லி கொண்டே அவளின் தட்டில் இருந்து முந்திரி கேக்கை எடுத்தான்.
"தப்புதான் பார்த்தா. அன்னைக்கே எங்கம்மா உன் கூட சேரக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் தான் கேட்கல. எல்லாம் என் தலையெழுத்துடா" தலையில் அடித்து கொண்டான்.
செல்வா, "எங்க அப்பாவும் தான் சொன்னாரு. எப்ப மட்டைய தூக்கிட்டு கிரிக்கெட் ஆடுறேன்னு மேற்க போனியோ அன்னைக்கு தெரியும்டா நீ உருப்படமாட்டனு" என்றான் பதிலுக்கு.
அரட்டையில் சிறிது நேரம் மகிழ்ந்தவன் வேலை மும்மரத்தில் அத்தனையும் மறந்து போனான். ஏதோ கனவு என்று தானாக ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"டேய் என்னடா மதியம் சாப்டலயா?" என வித்யா கேட்க,
"யாசி செல்வா கூட சாப்டேன்மா. சித்ரா ஆண்டி எனக்குன்னு ராகி புட்டு செஞ்சு கொடுத்திருந்தாங்க. அதான் சாப்டலா"
"உனக்கு பல தடவை சொல்லி இருக்கேன். சாப்பாடு மாதிரி இந்த உலகத்தில விலையுயர்ந்த பொருள் எதுவுமே இல்லன்னு. ஒருவேளை நீ சாப்பிட முடியாத சூழ்நிலை வந்தா உன்னோட சாப்பாட யாருக்காவது கொடுத்திரு. எத்தனையோ பேர் பசியோட இருக்காங்கடா" என்ற அம்மாவின் அதே வார்த்தைகளை கேட்டு பழகியவனுக்கு காது வலித்தது.
இரவின் நிலவொளியில் பால்கனியில் அமர்ந்து எஸ்பிபி இசைஞானியின் ஒலிகளில் லயித்து இருந்தான். சில்லென்று வீசிய இளம் தென்றல் காற்றில் கண்கள் மூடியவன் விழித்து பார்த்த போது அதிர்ந்து போனான்.
ஏதோ ஒரு சுடுகாடு. சுற்றிலும் புகை மண்டலங்கள் காட்சி கொடுத்தன. அங்கங்கே எரியும் பிணங்கள். அழுகுரலின் மிச்சமென்று அனத்த சப்தங்களும் ஓலங்களும் அவனை ஏதோ செய்தது.
பல கண்கள் அவனை கொலைவெறியுடன் பார்த்தன. சிலர் காறி உமிழ்ந்தனர். "ஏன்டா உன்னோட சுயநலத்துக்காக இப்படி எங்கள அனாதை ஆக்கிட்டியேடா. நீ நாசமா போய்டுவ. நீ விளங்காம போய்டுவ. உன்." தொடர்ந்து எத்தனையோ பேர் இவனை சபிக்க எதுவும் புரியாமல் நடந்தான்.
அவன் நேசித்த அம்மா அங்கு கண்ணீரோடு கலைந்த கூந்தலோடு அமர்ந்திருப்பதை பார்த்தவன் ஓடோடி வந்தான். "அம்மா!அம்மா!" என்று கத்திக்கொண்டே எழுந்தான்.
சுற்றியும் பார்த்தவன் நிதர்சனத்தை உணர்ந்து கனவில் இருந்து வெளிவந்தான். வேகமாக சென்று தன் தாயின் அறையை பார்த்தவன் அங்கு நிம்மதியாக உறங்கும் தாயை பார்த்து ஆசுவாசம் அடைந்தான்.
ரசித்த நிலவொளியோ அவனுக்கு பயத்தை தந்துவிட, தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.
கதவின் முன்னால் தன் ஆட்டத்தை ஆரம்பித்த மகிழ்ச்சியில் புன்னகை சிந்த ஆரம்பித்திருந்தது அருவமாய் இருந்த அந்த மாய உருவம்....
தொடரும்…