அத்தியாயம் 10
அந்த பாறை இடைவெளிக்குள் புதைந்து கிடக்கும் நீண்ட குகையினை கண்ட ஆதியும் ராகேஷூம் பிரம்மித்து போய் நின்றார்கள்.
“ஆதித்யா ஒருத்தர் கைய ஒருத்தர் கெட்டியா புடிச்சிட்டு நடக்கனும். கொஞ்சம் எட்டி வைச்சா கிடைக்குற கொஞ்ச வெளிச்சமும் கிடைக்காது. முக்கியமா பேசக்கூடாது.”
“அண்ணா அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல. எங்ககிட்ட செல்போன் இருக்கு. அதுல ஃப்ளாஷ் ஆன் பண்ணி போலாம்” என தன் அலைபேசி மூலம் அந்த இருள் சூழ்ந்த பகுதிகளில் வெளிச்சத்தை பரவவிட்டான் ஆதி
“வேணாம் தம்பி. அந்த வெளிச்சம் பலரை தொந்தரவு செய்யும். இங்க நாம சுத்தி பார்க்க வரல!”
“அண்ணா அதுக்காக இந்த இருட்டுல எப்படி வர முடியும்?”
“ஆதித்யா உன் மரணம் விரைவில் நடக்கும். இந்த மலையில் ஏறிய நீ இறங்க மாட்டாய். அந்த பைத்தியக்காரன் உன்னை கொல்வான். எமன் வந்துட்டான்.ஹாஹாஹா! ஹாஹாஹா!” பாறைகளில் எதிரொலித்தது தெய்வானையின் அந்த சப்தம்.
“ஆதித்யா நீ அவளை பற்றி பயப்படாமல் முன்னேறி செல். உன்னை எதுவும் பண்ண முடியாது.” குலசேகரன் தன்னம்பிக்கை கொடுக்க அபிமன்யு கைபிடித்து நடக்க ஆரம்பித்தான்.
மூவரும் நடக்கும் வேளையில் கற்களுக்கு நடுவில் அவ்வப்போது கால் மாட்டி தடுமாறுவார்கள். பாறை சுவர்களில் மீது மோதி லேசான காயங்களும் இருவருக்கும் ஏற்பட்டது.
ஒரு இடத்தில் ஸ்தம்பித்து நின்றான் அபிமன்யு. அடுத்து எந்த திசையில் செல்வது. இரண்டாக பிரியும் குகை பாதையில் எப்படி செல்வது என்று தெரியாமல் இருக்க அங்கு அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது மின்மினி பூச்சியின் வெளிச்சம்.
சிறிது தூரம் நடக்க நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. தாங்கள் போகும் பாதை சரியென முடிவு செய்து வேகமாக நடக்க அவர்களுக்கு ஏதுவாக சூரியன் ஒளியோடு காத்துக்கிடந்தான்.
அதன் வழியாக மேலே வந்தவர்கள் அங்கிருந்த பாறை குழிக்குள் நிரம்பி இருந்த தண்ணீரை குடித்தார்கள்.
“ராக்கி உன் கால்ல ரத்தம் வருது. என்னென்னு பாரு.” ஆதி ஓடி சென்று பார்க்க, “பாறைகள் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது.” என்றான் அபிமன்யு
“ஆதித்யா இதெல்லாம் சாதாரண விசயம். உடனே சரியாகிடும்.” தன் கையில் சில இலைகளை வைத்து பிழிந்து அதன் சாறை காயத்தின் மீது விட சில நிமிடங்களில் காயம் ஆறிப்போனது.
“கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு. வந்திடறேன்.” சென்ற அபிமன்யு சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.
ஆதி, “அண்ணா ஒரு சந்தேகம்?”
“கேளுங்க!”
“லைட் வெளிச்சம் பலபேர தொந்தரவு பண்ணுன்னு சொன்னீங்க. யார் இருக்கா அந்த குகையில்?”
“தம்பி அந்த குகையில சில புண்ணிய ஆத்மாக்கள் தியானம் செய்கின்றன. அவர்களை தொந்தரவு செய்ய கூடாதுன்னு தான் இந்த கஷ்டம்!”
ராகேஷ், “அண்ணா நாம பாக்க வந்தவரு இங்க தான் இருக்காரா?”
“இல்ல. இன்னும் ஒன்றரை மணி நேரம் நடக்கனும்”
ராகேஷ், “ஆதி நீ மட்டும் அவர் கூட போயிட்டு வா. நான் இங்கேயே கொஞ்ச நேரம் தூங்கிட்டு இருக்கேன். நீ பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் இரண்டு பேர் சேர்ந்து போலாம்.”
“தம்பி இங்க படுத்து தூங்குனா அதான் கடைசி தூக்கம். வாங்க போலாம்.” என அபிமன்யு கூறி அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.
உச்சி சூரியன் மெல்ல மெல்ல சாய்ந்து கொண்டிருந்தான். மலையின் வடக்குப் பக்கத்தில் சுற்றியும் பாறைகள் நிறைந்து இருக்க நடுவில் உள்ள சிறிய குன்றில் இருந்த குகைக்கு முன்பு வந்தார்கள்.
“இங்கேயும் பேசாம தான் வரனுமா?”
அபிமன்யு அங்கிருந்த ஒரு உடுக்கை ஒன்றை எடுத்து அடிக்க ஆரம்பித்தான். அந்த சத்தத்தில் அங்கிருந்த பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் மொத்தமாய் பறந்தன.
பிறகு பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு கட்டையை எடுத்து மடியில் இருந்த சில இலைகளையும் கொடிகளையும் சுற்றிவிட்டு அங்கே இருந்த தீக்குச்சி மூலம் நெருப்பை ஏற்படுத்தினான்.
“டேய் இந்த மனுசன் சுத்த லூசுடா. நம்ம கையில தான் மொபைல் இருக்கு. டார்ச் இருக்குன்னு தெரியும்ல. அப்புறம் ஏன்டா இப்படி பண்றாரு” ராகேஷ் கேட்க,
“என்கிட்ட மட்டும் சொல்லிட்டா பண்றாரு. இந்த ஆளு தான் லூசுன்னு தெரியும்ல. பாட்டி சொன்னாங்கனு தான் நம்பி பின்னாடி வந்தேன். வா போலாம்.” என்றான்
மூவரும் சிறிது தூரம் குகைக்குள்ளே பயணிக்க ஆரம்பித்தார்கள். திடீரென ஒரு ஓசை கேட்டது. நொடிகள் செல்ல செல்ல அந்த சத்தமானது அதிகரித்தது.
அபிமன்யு ஏதும் பேசாமல் கீழே அமர ஆதியும் ராகேஷூம் பின்னால் அமர்ந்து தங்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள். சில நொடிகளில் அந்த ஓசை அவர்களை கடந்து வெளியே சென்றுகொண்டு இருந்தது.
ஆதியும் ராகேஷூம் மாறி மாறி கேள்விகள் கேட்க பதிலேதும் சொல்லாமல் முன்னேறி நகர்ந்து சென்றான் அபிமன்யு.
உள்ளே போக போக பாதை குறுக ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அமர்ந்த நிலையில் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தார்கள்.
“அண்ணா! என்னண்ணா முட்டு சந்துல கொண்டு வந்து விட்டுருக்கீங்க” ஆதி கேட்க,
“பொறுடா. அலிபாபா குகை மாதிரி ஏதாவது மந்திரம் இருக்கும். அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம். நீங்க பொறுமையா மந்திரம் போடுங்க”
இவர்கள் பேசிய எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அதை நோக்கி நடந்தான் அபிமன்யு. அந்த பாறையின் அருகில் சென்றவன் வலது பக்கத்தில் திரும்பி நகர மறைந்து போனான்
“ராக்கி அவர் என்ன ஆனாருன்னு தெரியல. வாடா!” ஆதியும் அபிமன்யு சென்ற திசையில் மறைந்து போனான்.
பதறிய ராகேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே விழித்துக் கொண்டு இருக்க சில நிமிடங்களில் தைரியம் வந்தவனாய் அதே திசையில் பயணிக்க ஆரம்பித்தான்.
அவனும் வலப்பக்கம் திரும்பியன், “ஏன்டா இங்க ஏதோ மாயவலை இருக்கு. நீங்க மறைஞ்சு போயிட்டீங்கனு நினைச்சேன். இங்க பாத்தா பெரிய வழி இருக்கு. ச்சை.”
“அமைதியாய் இரு.” என்றவன் அங்கு இருந்த அக்னி மூலையில் வெளிச்சத்தை பரவவிட்டான். அங்கு பத்மாசனத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
ஒட்டிய வயிறோடு தோல் சுருக்கம் விழுந்து எழுந்து நிற்பதற்கு கூட முடியாத நிலையில் இருப்பவர் போல இருந்தார்.
அவரின் முடி சடை போட்டு செம்பட்டையாக காட்சி அளித்தது. தாடியும் அவரின் முகத்தை அலங்கோலமாக காட்டியது.
“அண்ணா! அண்ணா!” அபிமன்யுவின் முதுகை சுரண்டினான் ராகேஷ்
“என்ன தம்பி?”
“யாருண்ணா இவரு?”
“இவரு பேரு சதாசிவம். இந்த மலையில தான் பத்து வருசமா இருக்காரு”
“எப்படி இங்க பத்து வருசமா? தண்ணி சாப்பாடு எல்லாம் எப்படி? அவர பாத்தாலே பாவமா இருக்கு.” ஆதி சொன்ன மறுகணமே,
“உன்னை பாத்த தான் எனக்கு பாவமா இருக்கு. முதலில் உன் பிரச்சினை எண்ணி கவலைப்படு ஆதித்யா.” அந்த சாமியார் கண்களை திறக்காமல் கூறினார்.
“என் பெயர் எப்படி உங்... உங்க உங்களுக்கு தெரியும்?”
“உன் ஜனன ரகசியங்களை தேடி தானே வந்திருக்க. அப்புறம் எப்படி எனக்கு தெரியும்னு கேட்கற. அதுவும் நம்பிக்கை இல்லாத உன் நண்பனோடு.”
“என்ன சொல்றீங்க? எனக்கு நம்பிக்கை இல்லையா?”
“ஆமா ராகவேந்திரா!” என்றதும் அதிர்ச்சியில் உறைந்து போனான். ராகேஷ் பிறந்தபோது வைத்த பெயர் ராகவேந்திரன். மார்டன் பெயர் வேண்டும் என்று மாற்றிய பெயரே ராகேஷ்.
“உன் நண்பனின் நினைவில் ஏதோ மாற்றம் நடந்துள்ளது. அதன் ரகசியம் என்னவென்று கண்டுபிடிக்க தானே இங்கு வந்துள்ளாய்?” என்றார்.
“இல்லயே! என் நண்பனுக்காக வந்தேன்” ராகேஷ் மறுமொழிகளை கூறிக்கொண்டே இருந்தான்.
“அவன் வந்த நோக்கத்தில் கலப்படம் இல்லை. உனது உளவியலை தாண்டி இந்த பிரபஞ்சம் ஏகப்பட்ட மாயையையும் விசித்திரத்தையும் ரகசியத்தையும் உள்ளடக்கியது.”
“எங்க உளவியல் தான் எல்லாமே. ஆழ் மனசுல பதியற விசயத்தை தான் உங்க ஆன்மீகம் பக்தின்னு சொல்லி பலபேரு ஏமாத்துறீங்க.” அவன் கூறியதும் அங்கிருந்த பாறைகளில் எதிரொலிக்கும்படி சத்தமாக சிரித்தவர்,
“நீ சொன்னதில ஒரு விசயம் உண்மை தான். ஆழ் மனதில புகுந்த எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.”
“சாமி உங்ககிட்ட நிறைய கேட்கனும்!” ஆதி குறுக்கிட,
“அதற்கு தானே பொன்னாத்தா அனுப்பி வைச்சிருக்கா? என் அப்பன் ஈசனும் குருநாதர் கோரக்கரின் ஆசியும் உனக்கு உண்டு. கொல்லிமலையில் இருந்து உத்தரவும் எனக்கு கிடைச்சிருக்கு.”
“என்ன சுத்தி என்ன நடக்குது? எனக்கு கேட்குற அந்த குரல் யாரு? அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள விசயம் என்ன? ஏன் அவங்க குரல் எனக்கு மட்டும் கேட்டிச்சு.? இன்னும் எத்தனையோ கேள்வி இருக்கு?”
சிறிது நேரம் சிரித்தவர், ஆதித்யா நீ தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கு”. அமைதியாய் அவரின் முன்பு கைகட்டி அமர்ந்திருந்தான் ஆதி.
“ஆதித்யா தெய்வானை யார்? குலசேகரன் யார்? என்பதை நீ அறிந்து கொள்வதற்கு முன் உன் வம்சத்தின் சாபத்தை அறிந்து கொள்.”
திகைத்து நின்றவன் குழப்பத்தோடு, “என்ன சாபம் சாமி” என கேட்டான்.
“உன் திருமணமும் உன் மரணமும் தான் சாபத்தின் முடிவு” என்றதும் புரியாமல் நிற்கும் குழந்தை போல விழித்தான்.
“ஆதித்யா என்னுடன் வா. கிட்டத்தட்ட 700 வருசத்துக்கு முன்பு போகவேண்டும்” என்று அழைக்க, அவனும் மறுமொழி பேசாமல் பின்தொடர்ந்தான். பின்னால் ராகேஷூம் அபிமன்யுவும் சென்றார்கள்.
மலையின் உச்சிக்கு அழைத்து சென்றவர் கிழக்கு, “ஆதித்யா அந்த சமவெளி தெரிகிறது பாத்தியா? அது தான் ரத்தினபுரி. மிகப்பெரிய சமஸ்தானம். வீரம் விளைந்த மக்கள் வாழ்ந்த பகுதி. அதை ஆட்சி செய்தவன் குலசேகரன்”
“அந்த குலசேகரனின் ரத்தம் தான் உன் உடலில் ஓடுகிறது. உன்னிலிருந்து ஈரேழு தலைமுறை எண்ண அவனே முதலானவன். 14 தலைமுறையாக தான் உன் வம்சத்தின் சாபம் தொடர்கிறது. அதில் எச்சம் தான் நீ.”
ஆதி, “சாமி எனக்கு எதுவும் புரியல?”
“ஆதித்யா ஒரு சாபம் பொதுவாக மூன்று தலைமுறைகளை பாதிக்கும். சில சாபங்கள் ஏழு தலைமுறைகள் தொடர்ந்து வரும். மிகப்பெரிய வலியோடு தலைமுறைகளை குறிவைத்து கொடுக்கப்படும் சாபங்கள் ஈரேழு தலைமுறையாக தொடரும் ஆதித்யா!”
“சாமி எனக்கு ஒரு சந்தேகம்!” ராகேஷ் குறுக்கிட,
“அன்று அவர்கள் செய்த தவறுக்கு அவர் தலைமுறை என்ன செய்யும் என்பது தானே உனது சந்தேகம். ஆனால் இது சாபத்தின் தன்மை. மேலும் தாத்தா சொத்து பேரனுக்கு என்பதன் அர்த்தம் அவர்கள் செய்த பாவ புண்ணிய சொத்து பேரனுக்கு என்பது தான் அதன் அர்த்தம்.”
“ஆனா!” அவன் பேச்சை முடிக்கும் முன்பே தடைபோட்ட சதாசிவர்,
“இந்த பிறப்பு என்பது கர்மாவை கழிக்க தானே என நீ கேட்க நினைப்பது புரிகிறது. அதனால் தான் அன்று முன்னோர்கள் சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்று கர்மாவை பிரித்தார்கள்.”
“அதுக்கு என்ன அர்த்தம் சாமி?”
“தற்போது அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை ஆதித்யா. நீ தெரிந்து கொள்ள வேண்டிக்கொண்டியது உன் பிறப்பின் ரகசியமே!”
“குலசேகரன் சிறந்த வீரன். போர் கலையில் சிறந்தவன். மக்களோட மக்களா சந்தோஷமாக சேர்ந்து வாழக்கூடியவன். ஜாதி வெறிகள் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனால் அப்போது திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தனது நண்பனை சேனாதிபதி ஆக்கினான்.”
“அதுமட்டுமல்ல அவனுக்கு சாஸ்திர அறிவும் அதிகமாக இருந்தது. தனது பதினெட்டாவது வயதில் சமஸ்தானத்தில் அரசனாக அமர்ந்தான்!”
“சுற்றியிருந்த குட்டி குட்டி தேசங்களையும் சமஸ்தானங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து சரியான முறையில் ஆட்சி செய்து வந்தான்.” என்றார்.
“இதோ பார் ஆதித்யா. இந்த மலைகளை ஒட்டிய பகுதி முதல் அந்த காடுகள் தெரியும் பகுதி வரை உன் கண்ணுக்கு தெரியும் இடமெல்லாம் விடாரபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி. அதை ஆட்சி செய்தவன் நரேந்திரன்” என்று அவர் சொன்ன மறுநொடியே வானத்தில் மறைவதற்கு சென்றுகொண்டிருந்த சூரியனை காரிருள் மேகங்கள் சிறை பிடித்தன.
“விடாரபுரம் பல ரத்த சரித்திரங்கள் நிறைந்த தேசம். பல ஆண்டுகளாக மற்ற அரசர்களை எதிர்த்து நிற்கும் தேசம். மற்ற சமஸ்தானங்களை அவர்கள் இணைப்பது இல்லை. அதே போல எந்த அரசுக்கும் கீழே அவர்கள் இருப்பதற்கும் விரும்பவில்லை!”
“நரேந்திரன் பல போர் வியூகங்கள், தந்திரங்கள், மந்திரங்களை அறிந்தவன். ஆனால் அவனால் போர் கலையில் பெரிய அளவில் செயல்பட முடியவில்லை. அவனுக்கு மிகப்பெரிய பலம் ருத்ரன். மகாபாரதத்தில் சொல்லப்பட்ட பீஷ்மரை போல அந்த ராஜ்ஜியத்தின் முன்னின்று வழி நடத்தினான். அந்த ருத்ரனின் மகள் தான் தெய்வானை!”
அங்கங்கே மின்னல்கள் வெட்ட ஆரம்பித்தன.
“பின்னாளில் நரேந்திரனின் காதல் மனைவியானாள் தெய்வானை!” என்று சொல்லி முடிக்கும் முன்பே மேகங்கள் அந்த கண்ணீர் காவியத்தை நினைத்து மழைநீரை மண்ணோடு சேர்க்க ஆரம்பித்தது.