கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 13

அத்தியாயம் 13


வீட்டிற்குள் வேகமாய் நுழைந்தவனை பார்த்தவருக்குள் ஏனோ ஒரு கலக்கம். வாஞ்சை கலந்த பயத்தோடு அவளை அணைத்தவராய் வித்யாவின் கண்கள் நீர் விட தொடங்கியது.


“அம்மா எதுக்கு இப்போ அழற? எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு. நம்ம வம்சத்து சாபத்த நீக்கிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. எனக்கு ஒன்னும் ஆகாது. சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை.” என்றான்.

“ஏன்டா அம்மா சமையல் வரவர சரியில்லனு சொன்ன?”

“நான் எப்படா சொன்னேன். நீயா ஏதாவது பிட்டு ஓட்டாதடா. என் உடம்பு தாங்காது?” என்றான் ஆதி.

“அப்படியா சொன்னான் ராகேஷ் இவன்?”

“ஆமாம்மா. நல்ல சாப்பாடு வேணுமாம். சீக்கிரம் உங்க பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பீங்களாம். ஞாபகப்படுத்த சொன்னான்.” ராகேஷ் அவனாக விசயத்தை உடைக்க ஆரம்பித்தான்.

“என்னடா ஆதி இது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே. பொண்ணு பார்க்கலாம்.”

“அதெல்லாம் எதுக்குமா. உங்களுக்கு சிரமம் தரக்கூடாதுன்னு பையனே பொண்ண பாத்துட்டான். அந்நியன் படம் அம்பி மாதிரி சொல்லாம வச்சிருக்கான்மா.”

“ஆதி யார்டா அந்த பொண்ணு. சொல்லு அவ வீட்டுல போய் பொண்ணு கேட்கலாம்.” என்ற வார்த்தையில் நம்ப முடியாமல் திகைத்து பார்த்தான்.

“அம்மா... அது... அது வந்து... யா... யாசிகா தான்!”

“நல்ல பொண்ணு. ரொம்ப சமத்து. உனக்கு ஏத்த ஜோடி தான். பேசாம சொல்லிடு. இல்ல நான் வேணும்னா பேசவா?” வித்யாவின் பேச்சில் உறைந்து போனான்.


“அம்மா இன்னைக்கு அவனே அவகிட்ட சொல்லுவான். சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க.” என்று சொல்லி காலை உணவை முடித்தார்கள்.

வேலைக்கு சென்றவன் யாசிகாவை பார்த்து புன்னகை சிந்திட அவளுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்தது.

“யாசி உன்கிட்ட பேசனும். கேன்டீன் போலாமா?’’

“ம்ம்ம். ஆனா நீ தான் வாங்கி தரனும்.”

“எவ்வளவு ஆசையா கூப்பிடுறேன். தின்னிமூட்டை எப்ப பாரு திங்குறதுலயே இருக்கு.” என முனுமுனுத்துகொண்டே அழைத்து சென்றான்.

“யாசி ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே?”

“சாப்டறத தவிர என்ன வேணும்னாலும் கேளு. ஆனா அது நீ கேக்குற விசயத்த பொறுத்து.”

“என்னைய உனக்கு பிடிச்சிருக்கா?” என்றதும் கண்கள் சுருக்கி அவனை உற்று பார்த்தாள்.

“ஆதி கொஞ்சம் தெளிவா கேளு. எனக்கு புரியல!”

“யாசி எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு. உனக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என வேகமாக சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டான்.

அவன் பேசியதும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தவளை தலையில் தட்டினான் செல்வா.


“ஹேய் லூசு. அவன் தான் லவ் பண்றதா சொல்றான்ல. உன்னோட மனசுலயும் அவன் இருக்காங்கறத சொல்லு. இதவிட்டா வேற சான்ஸ் கிடைக்காது.” என்று செல்வா சொல்லவும் இருவருக்குமே கண்கள் விரிந்தது.

“சொல்லு யாசி” என்று அவளின் தோளை தொட்டாள் சாரா.

அவளின் உதடுகளில் பிறக்கும் அந்த ஒற்றை வார்த்தைக்காக ஏங்கி தவித்தான் ஆதி. “ஆதி நானும் உன்ன லவ் பண்றேன்.” என்று சொன்ன மறுகணமே அங்கிருந்து எழ முயன்றவளை இழுத்து அமர வைத்தான் செல்வா.

“ரெண்டு பேரும் மனசுலயே வச்சிகிட்டு எதையும் சொல்லாம ஏமாத்தி இருக்கீங்க. இனி சீக்கிரம் கல்யாணம் தான்.” என சாரா சொல்லவும் இருவருமே நாணம் கொண்டார்கள்.


“ஆதி நேத்து போன விசயம் என்ன ஆச்சு”


“சாபம் இருக்குடா. ஆனா ஏன் அந்த சாபம் கொடுக்கப்பட்டுச்சுனு தெரியல. எல்லாம் சொன்ன அந்த மலையில இருந்த சாமியார் அதுக்குள்ள அழைச்சிட்டு வந்துட்டார்”

“ஆதி சாபத்துக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?”

“அமாவாசை அப்போ உன்னையும் யாசிகாவையும் அழைச்சிட்டு வர சொன்னாரு.”

“ஆதி அன்னைக்கு தான் எங்க குலதெய்வம் கோவிலுக்கு போறோம். பத்திரிகை சாமி முன்னாடி வைக்க. சாரி ஆதி” சாராவின் பேச்சில் சரியென்று தலையாட்டினான்.

அந்த ஒருவார இடைவெளியில் யாசிகாவும் ஆதியும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். வித்யாவும் விரைவில் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யும் எண்ணம் கொண்டார்.

“அம்மா இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம். முதலில் அந்த சாபத்தை நீக்கனும். அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் யாசி கூட ரொம்ப நாள் வாழனும்.”

“ஏன் கல்யாணம் பண்ணிட்டு வாழ முடியாதா?”

“வாழலாம். ஆனா பயந்து வாழ்க்கையை ஆரம்பிக்கணும். பாட்டி நாளைக்கு வர சொல்லி இருக்காங்க. நானும் யாசியும் போறோம். ராகேஷூம் வர்றான்.”


“பாத்து போய்டு வா. மறக்காம போன் பண்ணு எனக்கு அங்க போய்ட்டு.”


“ஆதி அன்னைக்கு எனக்கு அந்த லேடி வாய்ஸ் கேட்டுச்சு. ஏன்னு நான் தெரிஞ்சுக்கனும்!” என சொல்லும் போதே அவள் உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது.


“யாசி என்ன ஆச்சு? ராகேஷ் இவள பாரு!” என்றதும் காரை நிறுத்திவிட்டு அவள் கண்களை பார்த்தவுடன் அவள் பயத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டான்.

“யாசி... யாசி... ஒன்னுமில்ல. இங்க பாரு. யாசி!“ என கன்னத்தை தட்டி அவளை சமாதானம் செய்தான். சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடியற்காலையில் வந்து சேர்ந்தார்கள் பொன்னாத்தாவின் வீட்டுக்கு.


“பாட்டி இன்னைக்கு அமாவாசை. வர சொல்லிருந்தீங்க. அந்த மலைமேல இருந்த சாமிய போய் பாக்கலாமா? மீதியும் நான் தெரிஞ்சுக்கனும்”

“முடியாது ஆதித்யா. அவர் ஜீவசமாதி அந்த குகையிலயே அடைந்துவிட்டார். உனக்கு ரகசியத்தை சொல்லும் அனைவரும் அன்று இரவே இறக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் பிரம்மேந்திரர் ஏகாதசி அன்று இரவு தன் முக்தி நிலையில் ஐக்கியமானார்.”


“பாட்டி அப்போ நடந்தவற்றை எப்படி அறிய முடியும்?”

“இங்கிருந்து இந்த பாதை வழியா போனா அங்க பெரிய காட்டுவில்வ மரம் இருக்கும். அங்க உன்னோட இடது பக்கம் ஒரு ஒத்தையடி பாதை வரும். அதுல ரெண்டு மணிநேரம் நடந்தா பெரிய முள்ளுகாடு இருக்கும். அங்க உனக்கு வழி சொல்ல ஆள் இருக்கும். கருப்பனை துணைக்கு கூட்டிட்டு போ.” என்றார் பொன்னாத்தா.


“பாட்டி யாரு கருப்பன்? எப்போ வருவாரு?” யாசியின் கேள்வியால் அவளை சில நொடிகள் பார்த்தவர் தன் மடியில் சுற்றி வைத்திருந்த எலுமிச்சை பழத்தை எடுத்து வாய்க்குள்ளேயே முனகினார்.


“கருப்பா போற வழி வார வழி பக்கத் துணையிருந்து பாதுகாத்து செல்லும் இடத்தில் சிறப்பு கொடுத்து நல்லபடியா போய்ட்டு வர கூடவே வரனும்ப்பா.” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் இங்கிருந்து கிளம்பு என்றார்.

ஆதியும் சொல்லி நகர யாசியும் ராகேஷூம் பின்னால் நடந்தார்கள்.

“ஆத்தா உக்கிரவீரமாத்தி உன் புள்ளைய நீ தான் காப்பாத்தனும். கருப்பா காப்பாத்தி கூட்டிட்டு வா.” பொன்னாத்தா கூறி அனுப்பி வைத்தார்.


“ஆதி என்ன தைரியத்தில பாட்டி சொன்ன வழியில போற? எதாவது இந்த காட்ட பத்தி தெரியுமா?”

“தெரியல ராக்கி. எல்லாம் சரிசெய்யனும். இந்த குரல் இனி என் தூக்கத்தை கெடுக்கவே கூடாது. அது மட்டும் தான் என் மனசுல இப்ப இருக்கு.”

“ஹாஹா... ஹாஹா... ஆதித்யா உன் மரணம் நோக்கி செல்கிறாய். நீ மடிவது உறுதி. எதையும் உன்னால் சரிசெய்ய முடியாது!” தெய்வானையின் குரலை மூவருமே கேட்டார்கள்.


“ஆபத்து நிறைந்த பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறாய் ஆதித்யா. மன தைரியம் மட்டுமே உனக்கு உதவும். எதற்கும் கலங்காமல் உள்ளே செல்.” குலசேகரனின் குரல் கேட்டதும் திருப்தி அடைந்தான்.


காட்டுவில்வம் மரத்தை அடைந்ததும் அங்கிருந்து இடதுபக்கம் திரும்ப சிறிய ஒற்றையடி பாதை சென்றது. நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால் தேவையான உணவு மற்றும் தண்ணீரை எடுத்து வந்தார்கள்.


ஒற்றையடி பாதைக்குள் நடந்த சில நிமிடங்களில் பெரிய பாம்பு ஒன்று தரையில் வழிவிடாமல் தடுத்தது. இவர்கள் முன்னே நடக்க நினைத்து முன்னேற தலையை பின்னிழுத்து கொத்துவதை போல எச்சரிக்கை செய்தது அந்த கருநாகம்.

“ஆதி வேணாம். நாம திரும்பி போயிடலாம். சொன்னா கேளு!” யாசிகா சொன்ன வார்த்தைகளை காதில் வாங்காமல் முன்னேறி சென்றான் மெதுவாக.

ஆதியின் கால்கள் அருகில் சென்றவுடன் கருநாகம் வழிவிட்டு விலகி சென்றது. “இன்னைக்கு முடிவு தெரியாம நான் இங்கிருந்து வரமாட்டேன். எனக்கு எல்லாம் தெரியனும்!” என வேகமாக ஓட ஆரம்பித்தான்.


வேறு வழியின்றி யாசிகாவும் ராகேஷூம் ஓட ஆரம்பித்தார்கள். அங்கங்கே இருந்த சூரிமுட்கள் அவர்களை அவ்வப்போது பதம் பார்த்தது‌. இரண்டு மணிநேரம் கடந்த பின்பு பாதை முடிந்து பெரிய முள்மரங்கள் வளர்ந்திருந்தது.


“இதுக்கு மேல நடந்து போ ஆள் இருப்பாங்கனு பாட்டி சொன்னாங்க. இந்த காட்டுக்குள்ள யாரு இருக்க போறா ஆதி?”

“கொஞ்ச நேரம் காத்திருப்போம். கட்டாயம் யாராவது வருவாங்க!” என்றதும் கருமேக கூட்டங்கள் வேகமாக வந்தது. சூரியனை மறைத்து அடர்ந்த பகுதியில் இருளை புகுத்தியது.

கையில் இருந்த போனின் வெளிச்சத்தில் அவர்கள் நிற்க லேசான தூறல் ஆரம்பித்தது. அந்த இடைவெளியில் துரித உணவுகளை கொண்டு பசியாற்றி கொண்டார்கள். அங்கிருந்த மரத்தின் அடியில் அவர்கள் அமர்ந்துவிட ஒரு ஆட்டுகுட்டியும் அங்கே வந்து சேர்ந்தது.

“அழகா இருக்கு பாரு ஆதி!” என அதை பிடித்து கொஞ்சிட, திமிறிய ஆட்டுக்குட்டி சில அடி தூரம் நகர்ந்து அவர்களை பார்த்தது. அது அங்கிருந்து நகர முயற்சித்ததும் “பாட்டி சொன்ன ஆளு இந்த ஆட்டுக்குட்டி தான்.” என ஆதியும் பின்னால் செல்ல ஆரம்பித்தான். நடக்க நடக்க மழை நின்று சூரியனும் காட்சி தந்தாலும் அந்த அடர்ந்த காடுகள் வெளிச்சத்தை அனுமதிக்க மறுத்தது.

ராகேஷ் மட்டுமே தொடர்ந்து அங்கிருந்த செடிகளையும் குறுகிய கிளைகளையும் உடைத்து திரும்புவதற்கு வழியினை உறுதி செய்து கொண்டான்.

ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வந்த இடம் நான்கு மலைகள் சுற்றி இருந்த அன்றைய விடாரபுரம். சுற்றிலும் புல் முளைக்காது வறண்ட தரிசு நிலமே அவர்களுக்கு காட்சியளித்தது.

ராகேஷ் “இங்க எதுவும் இல்ல. வெறும் பொட்டல் காடா கிடக்குது. இங்க வந்து இந்த ஆடு நிக்குது ஆதி. இதுக்கு அடுத்து எங்க போக?”

“ஆமா ஆதி. இங்க மனுசங்க வருவாங்கனு எனக்கு தோணல. எதுவும் கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல. வெயில் வேற மண்டைய பொளக்குது.”

ஆதி, “இல்ல. அந்த சாமியார் சொன்னாரு. எனக்கான பதில் அமாவாசை அன்னைக்கு கிடைக்கும்னு. அதுவும் அந்த நெருப்பு தெரிஞ்ச இடம்னு‌. சுற்றிலும் நான்கு மலைகள். மிகப்பெரிய சமவெளி. இது கட்டாயம் விடாரபுரம் தான்.”


“அது எப்படி சொல்ற? இப்ப இங்க எங்க நெருப்பு தெரிஞ்சதுனு உனக்கு தெரியுமா? ஆதி நம்பிக்கையை மதிக்கறேன். ஆனா” ராகேஷ் சொல்ல சொல்ல ஆட்டுக்குட்டி கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தது. அதை கண்ட யாசிகா ஓடிச்செல்லவும்,


“யாசி நில்லு‌! எனக்கு வழி சொன்னா அவங்க உயிர் இருக்காதுன்னு சாபமாம். அதனால இந்த ஆட்டுக்குட்டியும் இறந்திடும்.”


“அதுக்குன்னு இந்த வாயில்லாத ஜீவன் கூடவா ஆதி. அப்போ நீ உண்மைய தெரிஞ்சுக்க ஆவிங்ககிட்ட தான் கேட்கனும்.” அவள் கூறியவுடன் சட்டென்று திரும்பியவன்.

“இந்த மாதிரி ஐடியா தர தான் உன்னைய கூட்டிக்கிட்டு வர சொன்னாருபோல. நான் ஏன் யாரோ சொல்வாங்கனு எதிர்பார்க்கனும். குலசேகரன் கிட்டயே கேட்கலாமே. அவர் தானே ஆரம்பிச்சவரு”


குலசேகரன், “அதை என்னாலும் சொல்ல முடியாது ஆதித்யா. அதற்கான உரிமை எனக்கு இல்லை. ஆனால் நீ கண்டுபிடித்த விஷயம் உண்மை. நீ அதை தெரிந்துகொள்ள இங்கே இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து செல். விடை கிடைக்கும்.”

“அம்மா தாயே. என் சாபம் நிறைவேற வேண்டும். இவன் மரணத்தை நான் காண வேண்டும். கண்கள் கலங்க ரத்த ஆறாக இவன் குருதி ஓட வேண்டும். அதுவரை நான் நிம்மதி அடைய மாட்டேன் தாயே. இவன் இறக்க வேண்டும்.” என கத்தினாள் தெய்வானை.


“ஆதி இங்க இருந்து போயிடலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சொன்னா கேளுடா.” யாசிகாவின் பேச்சை கண்டுகொள்ளாமல் நடக்க ஆரம்பித்தான்.

“நில்லுடா. நான் அவ்வளவு சொல்லியும் நீ போறல. நான் தான் உன் உலகம்னு சொன்ன. இப்போ நான் சொல்றத கேட்காம போற. அப்போ நான் உனக்கு தேவையில்லனு தானே அர்த்தம். உன் இஷ்டத்துக்கு நடப்ப அப்படி தானே.”

“யாசி புரியாம பேசாத. சாபம் ஏன் வந்துச்சு. எப்படி அதை சரிசெய்யனும்னு நான் தெரிஞ்சுக்கணும். அதை சரி செஞ்சு உன் கூட கடைசி வரைக்கும் சந்தோசமா வாழனும். அதுக்கு தாண்டி போறேன். புரியாம கத்தாத.” என்று பதிலுக்கு கத்தினான்.

“உன் கூட ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். வா போலாம்!”


ராகேஷ், “யாசி இது சினிமா இல்ல. வாழ்க்கை. ஒருநாள், கொஞ்சநாள்னு டயலாக் பேசலாம். வாழ்றது கஷ்டம். அவன் எடுத்த முடிவு தான் சரி. ஒருவேள அவன் செத்துட்டா அப்புறம் நீ சந்தோஷமா வாழ முடியுமா?”


ஆதி, “ஆமா யாசி. எப்படி இருந்தாலும் சாகத்தான் போறேன். அது கொஞ்சம் போராடி ஒருவேளை சாபத்தை உடைக்கிற மாதிரி ஏதாவது கண்டுபிடிச்சிட்டா? தலைக்கு மேலே வெள்ளம் போகுது. நீச்சல் அடிச்சு தான் பார்த்துவிடுவோமே. வா போலாம்.” என்று அவள் கைகளை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

வழி தெரியாத அந்த நிலத்தில் அவர்கள் சென்ற வழி மலையடிவாரத்தில் வந்து முடிந்தது. அதற்கு மேல் வழி தெரியாமல் இருந்தவன் குலசேகரனை பலமுறை அழைத்தும் அவன் குரல் கேட்காததால் மனமுடைந்து போனான்.

“ஆதி மணி இப்பவே ரெண்டு ஆச்சு. இப்ப கிளம்பினா தான் நாம நைட்டுக்குள்ள ஊருக்குள்ள போக முடியும்‌. வா போலாம்!”

“இல்ல ராக்கி. அந்த சாமியார் சொன்னாரு‌. ஏதாவது கிடைக்கும். நான் இங்க இருக்கேன். நீ யாசிய கூட்டிட்டு போ. நாளைக்கு வாங்க!”

“லூசு மாதிரி பேசாத ஆதி. நீ மட்டும் இங்க என்ன பண்ண போற. தண்ணி இல்ல. சோறு இல்ல. அங்கங்க விஷப்பூச்சி சுத்துது. நீ பாட்டுக்கு இருக்குறேன்னு சொல்ற. நாளைக்கு வரலாம். ஊர்க்காரங்க யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வரலாம். வா.” என கையை பிடித்து இழுக்க, கையை உதறினான் ஆதி.

பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்த ராகேஷ், “உனக்கென்ன பைத்தியமா? ஏன்டா இப்படி பண்ற. சொன்னா புரியாதா?” கத்தினான்.

“ஆமாடா. பைத்தியம் தான். எல்லா உண்மையும் தெரியுற வரைக்கும் பைத்தியம்தான். எனக்கு இந்த மண்ணோட ரகசியம் தெரியனும்.”

“ஆதி சொன்னா கேளுடா. ராகேஷ் தான் அவ்வளவு சொல்றான்ல”

“முடியாது யாசி. இந்த விடாரபுரத்தோட ரகசியம் தெரியனும். இந்த மண்ணு வேணும் எனக்கு.” என்று கண்களை இறுக மூடி கத்தினான்.

“இந்தா வச்சுக்கோ. இந்த மண்ண கட்டிக்கிட்டு அழு. இந்தா பிடிடா!” என மண்ணை அள்ளி அவன் கையில் கொடுத்தாள் யாசிகா.

மீண்டும் வானம் இருட்ட தொடங்கியது. இடியும் மின்னலும் அங்கே கொக்கரித்தன. மேகங்களின் ஆதிக்கத்தில் அந்த இடம் இரவாகி போனது. பட்டென்று இந்த மாற்றத்தை கண்ட மூவருமே பயந்து போனார்கள்.

“ஆதித்யா உன் வம்சமே இந்த மண்ணை பிடிக்க அத்தனை ஆசைகளை கொண்டிருந்தது. அதே ரத்தத்தில் வந்த உனக்கும் இந்த விடாரபுரத்தின் மீது ஆசை தீரவில்லையா?” என்ற குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தார்கள்.

“அரசர் குலசேகரன் வந்து நின்ற பிறகு இந்த மண்ணில் கால் வைத்தவன் நீ தான். அந்த மண்ணும் உன் கையில் இருக்கிறது. போதும் ஆதித்யா! இந்த மண் மீதான வெறி எப்போது தான் முடியுமோ?” என்று குரல் ஓங்கி ஒலிக்க,

“அது என் மரணத்திற்கு பிறகு நடக்கும். அதற்கு முன் ரகசியத்தை அறிந்தே தீருவேன். இது இந்த மண்மேல சத்தியம்!” என்று அவனும் முழங்க அவன் முன்னால் வெள்ளை குதிரையின் மீது அமர்ந்தவாறே வந்து நின்றது ஒரு உருவம்.

தொடரும்...
 
Top