அத்தியாயம் 19
"ஆதி இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிருந்தேன். டாக்டர் சொன்னாங்க. நீ சாதிச்சிடுட்ட ஆதி. குழந்தை வளர்ச்சியும் நல்லா இருக்காம்." என்று நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றாள்.
"யாசி! அடுத்த ரெண்டாவது மாசம் நாலாவது தெய்வத்தோட கட்டையும் உடைச்சிடுவேன். அதுக்கு அப்புறம் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை."
"தங்கமே அப்பா சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு. அப்புறம் ஜாலியா இருக்கலாம்." என்று வயிற்றை தடவி கொடுத்துக்கொண்டே சொன்னாள்.
வேகமாக பாத்ரூமுக்குள் சென்றவன் கதறி அழ ஆரம்பித்தான். எப்படி உண்மையை அவளிடம் சொல்வேன் என்று தண்ணீரை திறந்துவிட்டு புலம்பினான்.
குளித்துவிட்டு வந்து அமைதியாக படுத்து உறங்குவது போல நடித்தான். தான் படித்த விசயங்களை எண்ணி அடிக்கடி சத்தமில்லாமல் அழுதான்.
அவனுக்கு மட்டும் ஒரு பெண் குரல் கேட்டது. அது உக்கிரவீரமாத்தி அம்மனின் குரல். "ஆதித்யா! நீ அழுதாலும் பயன் இல்லை. விதி வலியது. நீ வன்னியம்மனின் கட்டை உடைக்க வேண்டியதும் அவசியம். விரைவில் தயாராகு. மகாகாளி தேவியின் கோபத்தை விரைவில் குறைப்பது அவசியம். மாற்ற முடியாத விசயங்களை எண்ணி கவலை கொள்ளாதே." என்று சொல்லிவிட்டு மறைந்து அந்த குரல்.
நான்காவதாக மீதம் இருக்கும் மேற்கு மலையில் உள்ள வன்னியம்மன் கட்டை உடைக்க தேவையான மூலிகை வேர்களை தயார் செய்தான்.
சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரமும் நவமி திதியும் கூடிய நாளில் மலையின் மீது நண்பர்களோடு ஏற ஆரம்பித்தான். முன்பே சாமி இருக்கும் இடத்தை ஆய்வு செய்து வைத்திருந்தார்கள்.
ராகு காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் 108 எலுமிச்சை பழங்களை குலசேகரனின் வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டினான். பிறகு 108 முறை மந்திர உச்சாடனம் செய்தவுடன் யந்திரத்தின் சக்தி அழிந்து மண்ணுள் புதைந்தது.
குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து மந்திரம் சொல்லி வன்னியம்மனையும் வசியம் செய்தான். பிறகு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு திரும்பினான்.
நான்கு மலைகளிலும் உள்ள காவல் தெய்வங்களின் மந்திரகட்டும் உடைக்கப்பட்ட நிலையில் தற்போதைய விடாரபுரத்தில் துஷ்ட சக்திகள் வெளியேறின.
அன்று இரவு தர்மசீலனுக்காக காத்திருந்தார்கள் மூவரும் அங்கு. நள்ளிரவை தாண்டிய வேளையில் அங்கு வந்து சேர்ந்தான் தர்மசீலன்.
"வா ஆதித்யா எல்லை தெய்வங்களின் மந்திரகட்டை உடைத்துவிட்டு வசியம் செய்து கொண்டாய். காளி தேவியின் உக்கிரத்தை தணிக்க வேண்டுமே?"
"எனக்கு உதவி செய்யுங்க. மனசு நொந்து போய் இருக்கேன். என்ன செய்யறதுன்னு புரியல?" என்று ஆதி சொல்ல,
"உன்னால் எதுவும் செய்ய இயலாது. நீ அழ வேண்டும். அந்த குலசேகரனும் அழ வேண்டும். என் நாட்டு பெண்ணால் உன் உயிர் அழிய வேண்டும். உன் மரணம் கண்டு நான் சிரிக்க வேண்டும் ஆதித்யா. நான் மனம் குளிர சிரிக்க வேண்டும்!" என கர்ஜித்தாள் தெய்வானை.
"ஆதி என்று ஒன்று இருந்தால் அந்தம் என்று ஒன்று இருக்கும் தெய்வானை.இது ஈசன் கட்டளை. சற்று அமைதி கொள். உன் நாட்டு பெண்ணின் மாங்கல்யத்தை பறிக்க நீ ஆசை கொள்கிறாயா?" என தர்மசீலன் கேட்க,
"தர்மசீலா! உனது தர்மத்தால் இன்று நீ பேசுகிறாய். அனைத்தும் அறிந்தவன் நீ. மாற்ற முடியாத விசயத்தை மாற்ற எண்ணுகிறாயே, ஏன்?" என கேட்டாள்.
"தெய்வானை வார்த்தைகளும் வலிகளுக்கும் பிரபஞ்சத்தில் சக்தி அதிகம். உனக்கு ஏற்பட்டது அநியாயம். நீ கொல்லப்பட்டாய். நான் என்னையே கொன்று கொண்டேன். தன்னை தானே அழித்து கொள்வதில் உள்ள வலியினையும் நீ அறிவாய். அப்போது வெளிப்படும் வார்த்தைகளின் வலிமையையும் நீ அறிவாய்!" என்றான்.
"தாயே மகாகாளி! நான்கு காவல் தெய்வங்களின் கட்டையும் அவிழ்த்துவிட்டான். இவன் மரணம் எப்போது நிகழும் தாயே? காண ஆவலாக இருக்கிறேன்." தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினாள்.
இருள் சூழ்ந்த காட்டுக்குள்ளே மலைகளுக்கு நடுவே ஒரு நெருப்பு தோன்றியது. கோபம் கொண்ட காளிதேவி அசரிரீயாக பதில் சொன்னாள்.
"தெய்வானை தர்மசீலன் சொல் மிகுந்த சக்தி வாய்ந்தது. என் கோவில் வெளியே வர வேண்டியது அவசியம். நீ வலியோடு கொடுத்த சொற்களை விட அவன் வலியை ஏற்படுத்தி சொன்ன வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். அதைவிட முக்கியம் அவன் தன்னை தானே ரத்த பலி கொடுத்து என்னை கட்டி வைத்துள்ளான். முதலில் அவன் வேண்டுதலை நிறைவேற்றுவது எனது கடமையாகும் தெய்வானை."
"தாயே எனக்கு நடந்த கொடூரம் நீ அறிவாய். ஒன்றும் அறியாத என் குழந்தையின் அழுகுரல்." என்று சொல்லும் முன்பே அவளின் ஓலக்குரல் மலைகளை சுற்றி ஒலித்தது.
"தாயே நான் செய்தது மிகப்பெரிய தவறு தான். ஆனால் அதற்கு தண்டனையாய் இருநூறு உயிர்களுக்கு மேல் வாங்கிக்கொண்டாள். இந்த உயிரையாவது விட்டுவிடுங்கள்" என்று கதறினான் குலசேகரன்.
"நடப்பதை எண்ணி அழுது பயனில்லை. பிரபஞ்சத்தில் சிலவற்றை மாற்றவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது. கர்மாக்களுக்கான எதிர்வினை நடந்தே தீரும். ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கட்டும்." என்று சொல்லிவிட்டு மறைந்தார் மகாகாளி.
"ஆதித்யா நீ செல். வரும் சூரியன் கிரகணம் காளியின் கோவிலை வெளிக்கொண்டு வருவாய். சென்று வா. அனைத்தும் விதிப்படி நடக்கும்." என்று சொல்லி தர்மசீலன் குதிரையில் ஏறி சென்றார்.
ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார்கள். நாட்களும் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது.
"டேய் ஆதி. யாசிகாக்கு வளைகாப்பு நடத்திடலாம்டா. நம்ம வீட்டுல நடக்கிற முதல் விசேசம். எல்லாம் சரி ஆகிடுச்சு. க்ராண்டா பண்ணலாம்." என்றார் வித்யா.
"அம்மா அதெல்லாம் வேணாம். சிம்பிளா நம்ம ஃபேமிலி, செல்வா, ராகேஷ் அப்புறம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க போதும்மா."
"டேய் கல்யாணம் தான் அவசர அவசரமா ஊர்ல நடந்திச்சு. என்னோட ஆபிஸ்லயும் எல்லோரும் கேட்டாங்க. முதல் விசேசம்டா!"
"அம்மா கண்ணுப்பட்டு போய்டும். அதெல்லாம் வேணாம். அடுத்த குழந்தைக்கு வேணா க்ராண்டா பண்ணலாம். இப்ப வேணாம்." என்று ஆதி வேகமாக சொல்ல,
"டேய். அம்மாகிட்ட பேசுற!" என்று வெட்கத்தோடு அவனை பின்னாடி இருந்து கிள்ளினாள். அதுக்கு அப்புறம் தான் அவனுக்குமே புரிந்தது.
"என்ன யாசி வெட்கமா?" என்று சாரா உள்ளே வந்தாள்.
"மச்சி அம்மா சொல்ற மாதிரி நல்லா பண்ணலாம்!" என்றான் செல்வா. இங்கே தான் பேசினால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று ராகேஷ் அமைதியானான்
எல்லோரும் சேர்ந்து ஆதியை சம்மதிக்க வைத்தார்கள். நல்ல சுபநாளில் யாசிகாவிற்கு வளைகாப்பு நடந்தது. முதல் வளையலை சாராவே போட்டாள். செல்வா முறைக்காக தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தான்.
கை நிறைய வளையலும் கண்ணத்தில் சந்தனமும் தலையில் பூவும் சூட அவளின் சிரிப்பிலும் வெட்கத்திலும் கட்டுண்டு போனான் ஆதி.
ஆதியின் பின்னால் வந்து நின்ற ராகேஷ், "சார் அது உங்க பொண்டாட்டி. இப்படி தள்ளி நின்னு சைட் அடிக்க கூடாது. உரிமையோட பக்கத்தில நின்னு நல்லா ரசி. வா!'' என்று இழுத்துக்கொண்டு சென்று அருகில் அமர வைத்தான்.
தன் அலுவலக நண்பர்கள், சுற்றார் என வீடு மட்டுமல்ல, அந்த தெருவே நிறைந்திருந்தது.
கண்ணாடி வளையல்களை காதோரேம் வைத்து அதன் சத்தத்தில் நெகிழ்ந்து போனாள் யாசிகா.
"யாசி போலாமா?" சாரா கேட்க,
"சாரா நான் அங்கேயே பிரசவம் வரைக்கும் இருக்கேன்." என்றாள்.
"எது? போன உடனே வரோம். முறைக்காக தான் கூட்டிட்டு போறாங்க." என்று வேகமாக பதில் கூறினான்.
சாரா, "ஆதி அவ்வளவு பாசமா பொண்டாட்டி மேல. பிரியவே மாட்டியோ?"
"எப்படி பொங்குறான் பாரு. மத்த நேரத்தில தீனிமூட்டை, குட்டி பிசாசுன்னு சொல்வான். இப்ப பாரேன்!" என்று செல்வா கூற வெட்கத்தில் சிரித்தவாறே தலை குனிந்தான் ஆதி. அந்த மொத்த இடமும் சிரிப்பினில் மூழ்கியது.
தினமும் அவள் அவனை கொஞ்ச அவனும் அவளை கொஞ்ச நாட்கள் நகர்ந்தன. அவள் வயிற்றில் கை வைத்து பார்ப்பதும், உதைக்கும் போது பார்ப்பதும், காது வைத்து கேட்பதும் என மொத்தமாய் திளைத்து போயிருந்தான்.
ஒரு திருமணத்திற்காக வித்யா வெளியூர் சென்றிருந்தார். அன்று இரவு திடீரென யாசிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. துடிதுடித்து மருத்துவமனை சென்று சேர்க்க, அவளின் சத்தத்தில் நொறுங்கி போனான்.
ராகேஷ் செல்வா வந்துவிட கதறி அழுதான். செல்வா ஆறுதல் மொழிகள் சொன்னான். எல்லாம் தெரிந்த ராகேஷ் அமைதியாகவே இருந்தான்.
உள்ளே அவள் துடிக்க, வெளியே கடவுளை வேண்டியபடி அழுதான். அப்போது அவனுக்கு உரைத்தது விதியின் செயல்கள்.
யாசிகா ஆண் மகனை பெற்றெடுத்தாள். "சார் ஆண் குழந்தை பிறந்திருக்கு!" என்று நர்ஸ் வந்து சொன்னவுடன் கதறி அழ ஆரம்பித்தான்.
டாக்டர், நர்ஸ் அனைவரும் அவனை குழப்பத்தோடு பார்த்தனர். அவன் வலி அவனுக்கு மட்டுமே.
ராகேஷ் கட்டியணைத்து, "மச்சா விடுடா. தெரிஞ்சது தானே! புரிஞ்சுக்கோடா." என சமாதான மொழிகளை கூறினான்.
"முடியலடா மச்சி. எல்லாம் தெரிஞ்சும் இப்படி நடக்கும் போது வலிக்குதுடா. ஏதாவது ஒரு ரூபத்தில கடவுள் மாத்த மாட்டாரான்னு தினமும் அழுதேன்டா. முடியல ராக்கி. யாசிக்கு என்னடா பதில் சொல்வேன்?" என்று கதறி அழுதான்.
குழந்தையை அவன் முன்னே நீட்ட, கைகள் நடுங்க ஆரம்பித்தது. "சார் புடிங்க சார்." என்று நர்ஸ் நீட்ட, அவன் கண்களில் நீர் வழிந்தது.
"கொஞ்ச நேரம் கழிச்சு அவங்கள பார்க்கலாம்." என்று நர்ஸ் சொன்னவுடன், "டேய் மச்சா! அவள எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலடா. செத்திடலாம் போல இருக்கு." என்று அழுதான் கையில் தன் மகனை வைத்துக்கொண்டு.
ஒரு மணிநேரம் கழித்து தன் மனைவியை கண்ணீரோடு சென்று பார்த்து நெற்றியில் முத்தமிட்டான். அதிலேயே அவள் புரிந்து கொண்டாள் நடக்க இருப்பதை.
"ஆதி என் பையன என்கிட்ட காட்டாதடா. என்னால பாக்க முடியாது!" தலையை திருப்பி கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளை தலையோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
பத்து மாசம் கனவுகளோடு சுமந்தவள் இன்னும் சில நிமிடங்களில் தன் கனவுகளோடு அழிந்து போகும் நிஜங்களை எண்ணி கதற ஆரம்பித்தாள். அந்த வலியை விட வேறு வலி உண்டா?
உடல் வலியை தாண்டி அவளின் மனதில் மரணவலி தோன்றியது.
"யாசி என்னைய மன்னிச்சிடு யாசி. எதையும் சொல்லாம விட்டுட்டேன். நீ தாங்க மாட்டனு எனக்கு தெரியும். அதான் யாசி. சாரிடி!" என்று அவளை அணைத்து அழுதான்.
"ஏமாத்திட்ட ஆதி நீ. எவ்வளவு கனவோட நான் இருந்தேனுக்கு உனக்கு தெரியும் ம்ம்ம்." சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.
"டாக்டர் டாக்டர்" என ஆதி கத்தியவுடன் வேகமாக அறைக்குள் வந்தவர்கள் அவள் மூக்கில் ஆக்ஸிஜனை மாட்டிவிட்டு ஆதியை அறையை விட்டு வெளியே அனுப்பினார்கள்.
கண்ணாடி கதவில் உள்ள வட்டத்தின் வழியே கண்ணீரோடு பார்த்து அழுதுகொண்டு இருந்தான் ஆதி. வித்யா அந்த நேரத்தில் அங்கு வர அனைத்தையும் ராகேஷ் சொல்ல உறைந்து போனார்.
கையில் இருந்த குழந்தையை ராகேஷ் கொடுக்க, தன் முதல் குழந்தையினை அவர் பறிகொடுத்த போத உணர்ந்த வலியினை உணர்ந்து உடைந்து போனார்.
கண்ணீர் மல்க குழந்தையை பார்த்துகொண்டு இருந்தவரிடம் இருந்து நர்ஸ் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று தொட்டிலில் வைத்தார்கள்.
சுயநினைவு இல்லாமல் மரணத்தை நோக்கி யாசி சென்று கொண்டிருந்தாள். ஆதியும் வித்யாவும் நடக்க இருப்பதை எண்ணி அழுதுகொண்டு இருந்தார்கள்.
ராகேஷூம் செல்வாவும் பேச வார்த்தைகள் இன்றி முகம் வாடி சுவரோடு சுவராக இருந்தார்கள். சைக்கார்ட்டிஸ்ட் டாக்டர் என்றாலும் அந்த சூழலில் இருந்து வெளியே வர ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான்.
தாயின் கண்ணில் காட்டாமல் குழந்தையை விடாரபுரம் சென்று புதைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ராகேஷின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வேகமாக டாக்டரும் நர்ஸூம் குழந்தைகள் இருந்த அறைக்குள் ஓடியவுடன் ராகேஷ் புரிந்து கொண்டான்.
முப்பது நிமிடங்கள் கழித்து ஆதியை டாக்டர் அழைத்து, "சாரி ஆதி. எப்படி சொல்றதுன்னு தெரியல?" என்றதும் அவனுக்கு புரிந்துவிட்டது.
"திடீர்னு குழந்தைக்கு மூச்சு திணறல் வந்திருச்சு. நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணோம். குழந்தைய காப்பாத்த முடியல. ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஆதி!" என்று டாக்டர் சோகமாக சொல்ல, அமைதியாய் எழுந்து வெளியே சென்றான்.
"டாக்டர் நீங்க ஃபர்தரா என்ன ப்ரொசிஜெர் பண்ணணுமோ பண்ணுங்க. எப்ப குழந்தைய எங்களுக்கு கொடுப்பீங்க. ஏன்னா மத்த காரியம் எல்லாம் இருக்கு. அதுவும் இல்லாம யாசி எழுந்து கேட்டா நிலைமை எக்ஸ்ப்ளைன் பண்ணனும். சோ சீக்கிரம் எல்லாமே முடிச்சா பரவாயில்ல." என்றான் ராகேஷ்.
"ஓகே சார். பட் யாசிகாவ எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. அவங்க செக்கப் வரும்போதே ரொம்ப ஆசையோட இருந்தாங்க டாக்டர். இத எப்படி தாங்குவாங்கனு எனக்கு தெரியல. அவங்க பாடியும் ரொம்ப வீக்கா இருக்கு."
"டாக்டர் யாசி எப்படி சரி செய்யனும்னு எனக்கு தெரியும். நீங்க அவ பாடி கண்டிஷன் மட்டும் இம்பூர்வ் பண்ணி கொடுங்க." என கூறிவிட்டு அறைக்கு வெளியே வந்து ஆதியின் நிலையை பார்த்தான்.
சில நிமிடங்களில் நர்ஸ் சில ஃபார்ம்களை நீட்டி ஏதோ ஒன்றை தொலைத்தது போல எங்கேயோ பார்த்துக்கொண்டு கையெழுத்திட்டான்.
ராகேஷிடம் நர்ஸ், "சார் குழந்தைய வாங்கிக்கலாம்." என்றார்.
ஆதியின் நிலையை உணர்ந்த ராகேஷ் மெல்ல அவனருகில் சென்று தட்டி கொடுத்தான். "ஆதி தெரிஞ்ச விசயம் தானே. ஃபீல் பண்ணாதடா. வாடா போலாம்." என்றான்.
மெல்ல அவனை திரும்பி பார்த்தவன், "எங்கடா போலாம்னு சொல்ற?" என கேட்டான்.
"ஊருக்கு."
"எதுக்கு?"
அவன் குரலில் உள்ள கோபத்தையும் வலியையும் உணர்ந்த ராகேஷ், "சாபம் தீர குழந்தைய அங்க புதைக்க தான்" என்றதும் சட்டென்று அவன் சட்டை பிடித்தான் ஆதி
"இனி எதுக்குடா வாழனும்? என் குழந்தைய கொண்டு போய் புதைச்சு சாபத்த தீத்துக்க சொல்றியா? இந்த நிலைமையில எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது?'' என கத்தினான்.
"ஆதி உன் கஷ்டம் புரியுதுடா. நமக்கு வேற வழி இல்ல ஆதி!"
செல்வா, "என்ன மச்சி. இந்த நேரத்திலயா இத பேசுவாங்க. அவனே குழந்தை இறந்திடுச்சுன்னு கவலையில இருக்கான்."
"மச்சி இந்த விசயம் மத்தவங்களுக்கு வேணா கஷ்டமா இருக்கலாம். ஆனா இது நடக்குமுனு அவனுக்கு முன்னாடியே தெரியும். இன்னும் சாபம் தீரல!"
"என்னடா சொல்ற. ஆதிக்கு இது தெரியுமா?"
"சாபம் மட்டுமில்ல. அந்த குழந்தைய அம்மா பாக்காம எடுத்துட்டு வந்து அந்த மண்ணுல புதைக்கனும். இது தான் அந்த கோவில வெளிய கொண்டு வர்ற வழி. இது முன்னாடியே அவனுக்கு தெரியும். அவன் தான் மனச தேத்திக்காம இருந்துட்டான்."
"ஆதி குழந்தை இறந்திடும்னு உனக்கு தெரியும். நீ எப்ப சாவன்னு உனக்கு தெரியாது. அடுத்த குழந்தை பத்தி யோசிக்கவே வேணாம். யாசிய யோசிச்சு பாரு. எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிகிட்டா. இப்போ உள்ள உயிருக்கு போராடிட்டு இருக்கா!" என அவன் கூற அவள் இருக்கும் அறையை கண்ணீரோடு பார்த்தான் ஆதி.
"இது தான் நடக்கும்னு உனக்கு தெரியும். நடந்துருச்சு. இப்போ அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கலாம் மச்சி. எப்படியும் குழந்தைய புதைக்கனும். அதுல ஏதும் மாறப்போறது இல்ல. அங்க பண்ணி கோவில வெளிய எடுத்தா உங்க வாழ்க்கையாவது நல்லா இருக்கும்டா ஆதி. போனவங்கள பத்தி நினைச்சு இருக்கறவங்கள அழ விட்ராத ஆதி!" என்றான்.
எதுவும் பேச முடியாமல் அழுதுகொண்டே அங்கேயே அமர்ந்தான். தொண்டை வறண்டு போனது. வித்யாவும் அழுதுகொண்டே இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் செல்வாவும் ராகேஷூம் திகைத்து போய் நின்றார்கள்.
"ஆதி" என்று அமர்ந்திருந்தவன் தோளை தொட்டான் செல்வா.
"ராக்கி சொல்றது தான் சரி. உன்னோட உயிர் அம்மாக்கும் யாசிக்கும் முக்கியம். வாடா போலாம்" செல்வா சொல்ல, தன் மகன் முகத்தை பார்த்தார் வித்யா.
"ஆதி நீ கிளம்பி போ." என்று அவரின் கண்கள் கண்ணீரோடு சொல்வதை ஆதியால் உணர முடிந்தது.
"யாசிய விட்டுட்டு எப்படிடா?"
"அம்மா பாத்துப்பாங்க. அவ கன்டிசன் நல்லா தான் இருக்கு ஆதி. பயப்பட ஒன்னும் இல்ல. நான் டாக்டர் கிட்ட பேசிட்டு தான் வந்தேன். வா போலாம்." என அழைத்தான்.
"மச்சி சாரா கொஞ்ச நேரத்தில வந்திடுவா. அவளும் அம்மாக்கு துணையா இருப்பா?" செல்வாவும் சொன்னான்.
"நான் பாத்துக்கிறேன் ஆதி. அதான் சாராவும் வர்றதா செல்வா சொல்றான். இந்த வலிய நானும் அனுபவிச்சுருக்கேன். அதனால நான் யாசிய பாத்துக்கறேன்." என்றார் வித்யா. வேறு வழியின்றி ஆதி எழுந்து வெளியே சென்று காரில் அமர்ந்தான்.
டாக்டர் அறைக்குள் சென்ற ராகேஷ், "டாக்டர் ஆதிக்கு அனஸ்தீஷியா கொடுக்க முடியுமா?" என்று கேட்டது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. செல்வாவுக்கும்.
"சார் நீங்க என்ன சொல்றீங்க?''
"எஸ் டாக்டர். குழந்தைய அவன் சொந்த ஊருக்கு கொண்டு போறோம். அங்க தான் எல்லா காரியமும் பண்ணனும். யாசிய பாத்துக்க அம்மா இங்கயே இருக்காங்க. அதான்!"
"ஆனா அதுக்கு அவர் சம்மதிக்கனுமே டாக்டர்?"
"அவனுக்கு தெரியாம தான் போடனும். ஜஸ்ட் ஸ்ட்ரெந்த்க்காகன்னு சொல்லி போடுங்க டாக்டர்."
"சார் நீங்க ஒரு டாக்டர். உங்களுக்கு தெரியும் இதுல இருக்குற ரிஸ்க்"
"டாக்டர் நாங்க இங்கிருந்து 6,7 மணிநேரம் போகனும். நாங்க மூனு பேரும் தான் போக போறோம். குழந்தைய பாத்தா அவன கண்ட்ரோல் பண்ண முடியாது. யாசியோட நிலைமைய பாத்து நொந்து போய் இருக்கான். இப்போ அவன சரி செய்யவும் எனக்கு டைம் இல்ல." என சொன்னதும் டாக்டர் யோசிக்க ஆரம்பித்தார்.
"டாக்டர் டிராவல் பண்ணும் போது அவனுக்கு இருக்கற ஸ்ட்ரெஸ்க்கு கீழே குதிச்சாலும் குதிச்சிடுவான். இல்லன்னா ஓவர் ஸ்ட்ரெஸ்ல அவனுக்கு என்ன ஆகும்னு உங்களுக்கு நான் சொல்ல தேவையில்ல டாக்டர். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!"
"சார் இது ஹைலி ரிஸ்க் தான்!"
"டாக்டர் நான் போட்டா அவன் கண்டுபிடிச்சிடுவான். போட்டுக்க மாட்டான். அதனால்தான் உங்கள போட சொல்றேன். எனக்கு 8 மணிநேரம் அவன் மயக்கத்தில இருந்தா போதும். அவன அங்க எந்திரிக்க வைக்க என்கிட்ட மெடிசின் கூட இருக்கு. எல்லா கிட்டும் இருக்கு. இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க டாக்டர்."
சிறிது நேரம் யோசித்த டாக்டர், "சரிங்க சார். நான் பண்றேன். ஆனா வேற யாருக்கும் இது தெரிய கூடாது. ஹாஸ்பிட்டல் நேம் கெட்டு போய்டும்."
"டாக்டர் எங்களுக்கு பெரிய உதவி பண்ண போறீங்க. நான் கட்டாயம் சொல்ல மாட்டேன் டாக்டர்." என்றான் செல்வா.
ஆதி அமர்ந்திருக்கும் காருக்கு டாக்டர் சென்று, "ஆதி நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க. ஸ்ட்ரெந்த்க்கு நான் இன்ஜெக்ஷன் போட்டுவிடுறேன்." என்று சொன்னவுடன் எதுவும் பேசாமல் சரி என்று தலையசைத்தான். டாக்டர் ஊசி போட்ட சில நொடிகளில் தனது சுயநினைவை இழந்தான் ஆதி.