கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 2

அத்தியாயம் 2


பல இடங்கள் சுற்றி திரிந்த ஆதி, கனவுகளில் காரில் எங்கோ சென்றுகொண்டிருந்தான். அந்த இடங்கள் அவனுக்கு புதிதாக தெரிந்தது. காரின் வேகம் நூற்றி இருபது கிலோமீட்டரை தாண்டி இருந்தது.

வளைவுகளில் கூட காரின் வேகத்தை குறைக்காமல் திருப்பினான். அவன் முகத்தில் தெரிந்த வியர்வை துளிகளில் மழையென அவனது உடலை ஈரப்படுத்தியது. அவ்வளவு வேகத்தில் சென்ற காரின் முன்னால் சட்டென்று ஒரு குழந்தை ஓடிவர அப்படியே பிரேக் பிடித்தான்.

சக்கரத்தின் கருப்பு நிறம் சாலையிலே தனியாக பதிய, இடதுபுறம் திரும்பி காரின் பின் சக்கரம் சென்று குழந்தை அருகில் நின்றது.

சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஏர்பேக் திறந்து அவன் முகத்தை தாங்கிட சில நொடிகளுக்கு பின்பு நிமிர்ந்து பார்த்தான்.

குழந்தையின் மேல் வண்டி படவில்லை என்றாலும் குழந்தையின் உடல் முழுவதும் ரத்தம் வடிந்தது. யாருமே இல்லாத சாலையில் அந்த குழந்தையை தூக்கி கொண்டு அந்த பெண் அழுதுகொண்டு இருந்தாள்.

இவனால் காரை விட்டு இறங்க முடியவில்லை. கதவுகள் அனைத்தும் லாக் ஆகியது. சில நிமிடங்கள் அழுத பெண் சட்டென்று அவனை நோக்கி கண்ணீர் சிந்தினாள்.

“உன்னோட உயிர காப்பாத்திக்க இன்னும் எத்தன உயிர தான் காவு கொடுப்ப? நீ சாக போற. துடிதுடிக்க சாவ நீ!” என்றாள்.


“இல்லங்க. கார் குழந்தை மேல படல. ஆனா ரத்தம் எப்படின்னு புரியல‌. நம்புங்க. நான் எதுவும் பண்ணல” கத்தினாலும் கண்ணாடிகளை தாண்டி சத்தம் வெளியே செல்லவில்லை.


“உன் சாவு நிச்சயம். நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் உன்னோட சாவு என்னோட கையில தான். ஓடு... ஓடு... விடமாட்டேன்டா” அவனை நோக்கி ஓடி வந்தாள்.

அவனுக்கே தெரியாமல் அந்த கார் வேகமாக நகர ஆரம்பித்தது. அவனை நோக்கி ஓடி வந்த பெண்ணின் மீது மோதி கண்ணாடிகளில் ரத்தம் பட்டது.

திரும்பி பார்க்க ரத்த வெள்ளத்தில் அவள் உடல் அந்த சாலையில் கிடந்தது. அந்த குழந்தையும் அருகில் இருந்தது. அதே நேரத்தில் வேகமாக சென்ற இவனது கார் வேப்ப மரத்தில் மோதி அவன் தலையில் அடிப்பட்டு இரத்தம் வடிய கண்கள் மூடினான்‌.

“ஆதி! ஆதி!” ஏதோ ஒரு பெண் குரல் அவனை உலுக்கியது. உடலெல்லாம் வலி. கண்களை திறக்க முடியவில்லை. அவனது செவிகளில் மீண்டும் மீண்டும் அந்த குரல் அவனை பெயரை அழைத்தது.


“டேய் எரும. எந்திரிச்சு தொல.” என்ற குரலில் திடுக்கிட்டு எழுந்து சுற்றியும் பார்த்தான். வேகமாக பெட்டில் இருந்து எழுந்து கண்ணாடி முன் நின்று தன் தலையினை பார்த்தான்.


தலைமுடியை தள்ளி தள்ளி தலையில் ஏதாவது அடிபட்டுள்ளதா என ஆய்வு செய்தான். குழப்பத்தில் திரும்ப அவனை கூரிய விழிகளில் தேடிக்கொண்டு இருந்தார் வித்யா.

“என்னடா. என்ன கனவு கண்ட?”

“கனவா. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. முடி எப்படி இருக்குன்னு பாத்தேன். அவ்வளவு தான்.”


“நடிக்காத. நீ ஓடுன ஓட்டத்துக்கு பண்ணுன விசயத்தையும் பாத்து கண்டுபிடிக்க முடியாத குழந்தை இல்ல நானு. உன்னோட அம்மாடா. சொல்லு உண்மைய” அதட்டலுடன் கேட்க,

“உண்மைய சொன்னா நீ திட்டக்கூடாதுமா.”

“சொல்லுடா. ஆனா உண்மையா இருக்கனும்.”

“நான் நல்லா தூங்கிட்டு இருக்கேன். நீ வந்து என் தலையில எண்ணை தேச்சு விடுற. உடனே முடி எல்லாம் கொட்டி போகுது. இதுதான் கனவு. இத சொன்னா நீ அரை மணி நேரம் பேசுவ‌ தாயே.”

“இப்படியே எண்ணை தேய்காம சுத்திகிட்டே இரு. கடைசியில மொத்தமாக விழுந்து சொட்டை தலையா தான் திரிவ பாரு?” என்று செல்லமான சாபம் இட,

“அம்மோவ் அதெல்லாம் என் கவலை. உன்னோட யூடியூப் ஆயில் தயாரிப்பு சோதனைக்கு நான் தான் ஆளா? நீ போய் பெட்காபி கொண்டு வா. அது வரைக்கும் நான் ஒரு குட்டி தூக்கத்தை போடுறேன்.” என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான்.

அந்த நாள் அவனுக்கு அவ்வளவு சாதாரணமாக செல்லாது என்று அவன் உணர்ந்திருக்கவில்லை. எப்போதும் போல தன் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.அவன் வண்டியை வெளியே எடுத்தபோது காகம் ஒன்று அவன் வண்டி முன் சக்கரத்தில் அடித்தது.

கண்டுகொள்ளாமல் எப்போதும்போல நகர ஆரம்பித்தான். சில கிலோமீட்டர்கள் செல்லவும் அவன் முன் சென்ற சைக்கிள்காரன் சாலையே கடக்க எதிரே வந்த வாகனம் அவரை தூக்கி வீசியது.

அந்த சைக்கிள் பறந்து வந்து ஆதியின் வண்டியின் முன் விழ பிரேக் பிடித்தும் சக்கரம் நிற்காமல் இழுத்து சென்றது.

'ஆதி இன்னைக்கு சோலி முடிஞ்சுதுடா. ஆம்புலன்ஸ் தான்' என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே செல்ல சைக்கிள் வண்டியின் முன் சக்கரத்தில் பட்டு மீண்டும் முன்னோக்கி பாய்ந்தது. இவனும் அருகில் சாலையோரத்தில் விழுந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு கூடி நின்ற கூட்டம் அவனை எழுப்பி தண்ணீர் கொடுத்து அனுப்பி வைத்தது.

சென்ற அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. நேற்று வந்த கனவுக்கும் காலையில் நடந்த சம்பவத்திற்கும் என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டே நேரம் மதியத்தை கடந்திருந்தது.

மதியம் உணவு உண்டு விட்டு லேசாக கண்களை மூட தூக்கம் ஆட்கொண்டது.

“ஆதித்யா இந்த முறை நீ தப்பித்து விட்டாய். பேராபத்து காத்திருக்கிறது. பெரும் குருதிக்கு தயாராகு. சுதாரிக்காமல் விட்டால் உன்னையே நீ இழக்க நேரிடும்”

“ஆதித்யா அவளை தேடிச் செல். உனக்காக காத்திருக்கிறாள். உன் கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் உள்ள தொடர்பை அவள் சொல்வாள். விழித்துக்கொள் ஆதித்யா. இதுவே கடைசி வாய்ப்பு” என்று அவன் கனவில் தோன்றி அசரிரி மறைய சட்டென்று விழித்து கொண்டான்.

“என்ன ஆதி. ஆஃபீஸ்ல நல்ல தூக்கம் போல. நீங்க தூங்குறதுக்கு தான் நாங்க சம்பளம் கொடுக்கிறோமா? எந்திரிச்சு சீக்கிரம் வேலைய பாருங்க. நீங்க எல்லாம் ஒரு ப்ராஜெக்ட் லீடர்” மேனேஜர் கத்திவிட்டு செல்ல,

“டே எரும... அப்படி என்னடா தூக்கம் உனக்கு. அந்த ஆளு உன் மேல கடுப்புல தான் இருக்கான். இதுல இது வேற”

“வாடி கேன்டீன் போலாம்... ஒரே தலைவலி, காலைல வேற ஆக்சிடென்ட். உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது. அதான் அசந்துட்டேன். போலாம்” யாசிகாவை இழுத்து சென்றான்.


“என்னடா ஒரு மாதிரி இருக்க? என்னதான் உன் பிரச்சனை? ஒரு வாரமா நீ சரியா இல்லை.. என்ன ப்ராப்ளம்னு சொல்லு” என ஆவி பறக்கும் காஃபியை தன் உதடுகளில் பதித்தாள்


“கடந்த பத்து நாளா எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. என்னென்னே தெரியல. ரொம்ப டிப்ரஸனா இருக்கு”


“மச்சி அப்போ டூர் போலாம்டா. லாங் டிரைவ். ஹில்ஸ்டேஷன். கார்ல யுவன் மெலோடி. சில்லுன்னு காத்து. செமயா இருக்கும்டா. ” பின் நின்று செல்வா சொல்ல,

“அவன் காசுல ஊர் சுத்த ப்ளான் போடுறியாடா தடிமாடு. வெட்கமா இல்ல.” என்றாள்.

“என் நண்பன் காசுல ஊர் சுத்த எனக்கு என்னடி வெட்கம். மச்சி கொல்லிமலை ஆன்மீக பூமி. அந்த மலையில எட்டுக்கை துர்க்கை அம்மன், மாசி பெரியண்ணன் கோவில், இன்னும் பல சித்தர்கள் நடமாடுற ஏரியா. அதே மாதிரி கிளைமேட்டும் நல்லா இருக்கும்!”


“ஆமாடா. நானும் போயிருக்கேன். மொத்தம் 70 ஹேர்பின் பெண்ட். செம த்ரில்லிங்கா இருக்கும் டிரைவிங். உனக்கும் ஒரு சேஞ்ச் இருக்கும். இந்த வீக் வெள்ளிக்கிழமை நைட் கிளம்பலாம். ஓகேவா”

சில நிமிடங்கள் யோசித்தவன் “சரி நாம கிளம்பறோம். சாட்டர்டே அங்க ஸ்டே. என் கார்லயே போலாம். யாசி உனக்கு ஓகே தானே?” என்றான் ஆதி.

“அப்போ யாசிக்கு துணைக்கு நான் சாராவ வரச் சொல்லவா” என்ற செல்வாவை முறைத்து பார்த்தனர் இருவரும்.

“டேய் கார்ல இடம் இருக்கு. அவளுக்கும் ஒரு ஹெல்பா இருக்கும். என்னோட லவ்க்கு உங்கள விட்டா வேற யார்டா இருக்கா”

“கூட்டிட்டு வாடா. ஆனா அங்க வந்து நானும் என் ஆளும் ஒன்னா ஸ்டே பண்ணிக்கறோம்னு சொன்ன செருப்பாலயே அடிப்பேன். ஓகே தான?”

“நீயும் கமிட் ஆக மாட்ட கடைசி வரைக்கும். கூட இருக்கறவனையும் சந்தோஷமா இருக்க விட மாட்ட. சரி டீல் ஓகே.” என்றான் செல்வா.

“டேய் சீக்கிரம் கேபின் போலாம். இல்லன்னா அந்த தாடிக்காரன் வந்து அய்யோ குய்யோன்னு கத்துவான்.“ அங்கிருந்து அழைத்து சென்றாள்.


அப்போது அவனை சுற்றி இருந்த அந்த அருவமான உருவங்கள் தங்களின் நோக்கம் சரியான பாதையில் செல்வதை எண்ணி மகிழ்ச்சி கொண்டார்கள். அதே நேரத்தில் அந்த பெண்ணும் அவன் வருகைக்கு தடையை ஏற்படுத்த தயாராக இருந்தாள்.

வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் 4 மணி கொல்லிமலை நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்க்கிறது என்ற பலகையை ரசித்த படியே மலை பகுதியில் ஏற ஆரம்பித்தான். சில நொடிகளில் கார் மலைப்பகுதியில் இருந்து உருண்டது. யாசிகா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாள். செல்வாவும் சாராவும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அங்கே தோன்றிய அந்த கருப்பு உருவம் அவன் அருகில் சென்று சிரித்தது.

திடுக்கிட்டு கண் விழித்தவன் தனது செல்போனை பார்க்கும் போது நேரம் சரியாக 4.30... அதிகாலை கனவு பற்றி அம்மா சொல்வதை கேட்டு அவனுக்குள் இன்று செல்லலாமா வேண்டாமா என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது.

அன்று இரவு 7.00 மணிக்கு ஆதியின் கார் சென்னையில் இருந்து கொல்லி மலை நோக்கி நகர ஆரம்பித்தது. நாமக்கல் அருகே அவர்கள் வரும் போது மணி நள்ளிரவு 2.00...

“அண்ணா கொல்லிமலைக்கு இன்னும் எவ்வளவு தூரம்?” என்று கேட்டவுடன்,

“தம்பி இந்த நேரத்தில மலை ஏறுறது அவ்வளவு சாதாரணம் இல்ல. ரொம்ப ரிஸ்க். ரோட்டுல ஏதாவது நிக்கும். அதுவும் இல்லாம ரோடு பெண்டு அதிகம். ரெகுலரா போறவங்களே யோசிப்பாங்க. உங்கள பாத்தா வெளியூர் மாதிரி இருக்கு. காலையில நேரமே போங்க. இப்ப போனாலும் செக் போஸ்ட்ல விட மாட்டாங்க” என்றார் அந்த இரவு நேர கடைக்காரர்.


செல்வா, “மச்சி நைட் கார்லயே தூங்கலாம். அதான் நமக்கும் நல்லது. டயர்டு கார் ஓட்ட முடியாது நாளைக்கு. சுத்தியும் பள்ளம் வேற”

காலையில் கண்ட கனவை ஒரு நிமிடம் நினைத்தவன் அமைதியாக காரினுள் தூங்க ஆரம்பித்தான்.

“ஆதித்யா இங்க நீ தூங்கறது சரியில்ல. எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பு. மலையில ஏறு. இங்க இருக்கற ஒவ்வொரு நிமிடமும் உன்னோட உயிருக்கு ஆபத்து. விரைவாக கிளம்பு ஆதித்யா” பெண்ணின் குரல் கேட்க எழுந்தவன் சுற்றியும் பார்த்தான்.

மற்ற மூவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். ஏசி காரில் அவனுக்கு குப்பென்று வியர்த்தது. தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கண் அயர்ந்தான்.

“ஆதித்யா இங்கேயே இரு. உனக்கு இப்போது மன அமைதி தேவை. நிதானம் தேவை. நீ எதிர் பார்க்காத பல அமானுஷ்யம் இந்த மலையில் காண்பாய். சீக்கிரம் என்னை வந்து பார்” என சொல்லிவிட்டு அந்த பெண்ணின் உருவம் மறைந்தது.

'ச்ச்சை! என்னடா இது மாத்தி மாத்தி கனவா வருது. பேசாம தூக்க மாத்திரை போட்டுருக்கலாம்' தனக்கு தானே புலம்பிக்கொண்டான். அதன் பிறகு அவனுக்கு தூக்கம் வரவே இல்லை.

“செல்வா நீ வண்டி ஓட்டுறியா? எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீ மேலே வரை ஓட்டிட்டு வா. மதியம் நான் கார் ஓட்டிக்கிறேன்.” தன் கனவு பலிக்காமல் இருக்க அவனிடம் மாற்றினான்.


குரங்குகள் சாலையில் சுற்றி திரிய அன்புடன் வரவேற்றது கொல்லிமலை மலைப்பாதை. சூரியன் தான் கதிர்களை வீச ஆரம்பித்த தருணம் சாலையில் வண்டி நகர்ந்தது. ஆழமான பள்ளத்தாக்குகளை பார்த்தவாறு தன் கனவு பலிக்க கூடாது என்று நினைத்துக்கொண்டே வந்தான்.

“சாரா உங்க வீட்டுல என்ன சொல்லிட்டு வந்த? இந்த தடிமாட பார்க்க.” யாசிகா பேச ஆரம்பித்தாள்.

“எல்லாம் ப்ரெண்ட் மேரேஜ்னு தான் யாசி. எனக்கு தான் இவன் தாலி கட்ட மாட்டேங்குறான்.”

“பேசாம இப்படியே காரோட தள்ளிவிட்டரலாமா?” என்று அவள் கேட்ட நேரம் ஆதி பயந்து போனான்.

கீழே இறங்கிய லாரி அந்த செங்குத்து பாதையில் ஏறிய அவர்களின் காரை ஒரு பக்கம் ஒதுக்கிவிட முன்பக்க ஒரு சக்கரம் பள்ளத்தாக்கில் அந்தரத்தில் நின்றது. அனைவரும் பதறி போக, காரை மெல்ல நகர்த்தி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தான் செல்வா


“என்ன வாய்டி உன்னுது?”

“கார ஒழுங்கா ஓட்டுடா. பேச வந்துட்டான்”

பசுமையான சாலைகளில் சுற்றி திரிந்த குரங்குகளையும் பறவைகளையும் ரசித்த படியே மலை செம்பேடு என்னும் பகுதியை அடைந்தது.

ரம்மியமான காட்சிகளை ரசித்த ஆதியின் மனதில் ஏகப்பட்ட மாற்றங்கள். மகிழ்ச்சியாக உணர்ந்தான் சில நிமிடங்கள். தங்களுக்கு அறைகளை பதிவு செய்து குளித்துவிட்டு வெளியே கிளம்பினார்கள்.

“செல்வா இப்ப நாம எங்க போறோம்டா?”

“சீக்குபாறை போயி வியூ பாத்துட்டு மாசில்லா அருவி. அப்புறம் அப்படியே வாசலூர்பட்டி படகு சவாரி. அப்புறம் மத்த இடம்”

“டேய் அதெல்லாம் வேணாம். நேரா ஆகாய கங்கை போலாம். செம்மயா இருக்கும்!” யாசி சொல்ல,

“கோரக்கர் குகை எங்க இருக்கு?” என்று கேட்க ஆதியை அனைவருமே சற்று ஏற்ற இறக்கமாக தான் பார்த்தார்கள்.

“அதபத்தி ஏன்டா கேட்குற? அதெல்லாம் ஏதாவது காட்டுக்குள்ள இருக்கும். ரிஸ்க் இருக்கும். அதுவும் இல்லாம உனக்கு தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே. அப்புறம் எதுக்கு இதப்பத்தி?” இழுத்தான்.

“நேத்து மலைய பத்தி படிச்சேன். அப்போ வந்துச்சு கோரக்கர் குகை, புலிப்பாணி குகை, இடைக்காடர் குகைன்னு. அதான் கேட்டேன். சரி வாங்க போலாம்” என்று அவன் முன்னே செல்ல அங்கு காத்திருந்தது அவனுக்கே தெரியாத பல மர்மங்கள்.

மெல்ல மெல்ல திட்டம் சரியான பாதையில் செல்கிறதை உறுதி செய்த அந்த ரகசிய ஆண் உருவம் மகிழ்ச்சியில் அவனை பின் தொடர்ந்து சென்றது.


வண்டி நேராக அறப்பளீஸ்வரர் கோவில் முன்பு வந்து நின்றது. கூட்டம் இல்லாத நாள் என்பதால் இவர்களை நோக்கி வந்த அந்த பிச்சைக்காரன் “காசு கொடுங்க” என்று கேட்டான்.

ஆதி, “யோவ் போயா”

“காசு கொடு. இல்லன்னா கஷ்டப்படுவ”

ஆதி, “உனக்கு காசு கொடுத்தா தான் கஷ்டமே. ஆனா வூனா குளிக்காம முடிய வளர்த்திகிட்டு வந்து காசு கொடு, பணம் கொடுன்னு கேட்கிறது. போயா!”

“ஹாஹாஹா…! ஹாஹாஹா...!” பெரிய சத்தத்துடன் சிரித்த அந்த பிச்சைக்காரன், “நீ தேடி வந்த எதுவும் இங்கு கிடைக்காது. ஆனா உன்னைய பாதுகாக்க உனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கும். எங்கப்பன் கோரக்கரை பாக்க போறியா?” என்றதும் பிரமித்து போய் நின்றான்‌ ஆதி.


“டேய்... டேய்... என்னடா அந்த ஆள அப்படி பாத்துட்டே நிக்கற. அவனுக்கு எப்படி நீ கோரக்கர் குகை பற்றி கேட்டது தெரியும்னு பாக்குறியா? நாங்க பேசிட்டு இருந்தோம் கடையில. அப்போ தான் அந்த ஆளு அங்க பிச்சை எடுத்தான். வாடா போலாம்.” என இழுத்து சென்றான்.


1200 படிக்கட்டுகள் கொண்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியினை அடைய பார்க்க வளைந்து நெளிந்து செங்குத்தாக இறங்கும் படிகட்டில் மூச்சிரைக்க இறங்கினார்கள்.

இறங்கும் வழியில் ஒரு பெரிய பாறை அடியில் ஒரு சிறு கல்லும் அதன் மீது விபூதியும் கற்பூரம் எறிந்த தடயங்களும், தீர்ந்து போன ஊதுபத்தி குச்சிகளும் படி ஒட்டியே இருந்தது.


அங்கு பாறையில் ரக்கர் குகை என்று மட்டும் கருப்பு மையில் பாதி அழிந்த நிலையில் தெரிந்தது. அதை பார்த்த ஆதியின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் நண்பர்களின் பேச்சில் நடக்கலானான்.

சில தூரங்களுக்கு முன்பாகவே நீரின் சத்தம் காற்றை கிழித்து கொண்டு அவர்களின் செவிகளில் எட்டியது.

காற்றில் மிதந்து வந்த நீர் துளிகள் அவர்களை லேசாக உரசி செல்ல ஆதியின் மனம் அமைதியாக இருந்தது.

“செல்வா சில்லுன்னு இருக்கு. அப்படியே ரொம்ப நேரம் இங்க உன் கூடவே இருக்கனும் போல” சாரா அவன் கைகளை இறுக்கி பிடித்து சொல்ல,

“போதும்டி.. விட்டா இங்கையே இருக்க சொல்லுவ போலயே. 1200 படி ஏற முடியாதுன்னு தானே இந்த பிட்டு போடுற” யாசிகா வம்பிழுத்து கொண்டே நகர்ந்தாள்.

கரடு முரடான பாறைகள் மீது ஏறி இறங்கி அங்கே சுமார் 200 அடி உயரத்தில் இருந்து காடுகளில் பல மூலிகை மரங்கள் செடிகள் மீது தழுவி மருத்துவ நீராக கொட்டும் ஆகாய கங்கையின் முழு அளவையும் கண்டு மெய் மறந்து போனார்கள்.

பால் போல வெண்மை நிறத்தில் காற்றோட்டு காற்றாக சீறி பாய்ந்து பட்டு தெறிக்கும் அருவியை கண்டால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.

“ஆதி குளிக்கலாம்டா... செம்மயா இருக்கும்... சாரா வாடி” செல்வா அழைத்து செல்ல,

“வேண்டாம் ஆதி. இப்போ நீ அந்த தண்ணீரில இறங்காதே. பிறகு துன்பம் வந்து சேரும். உன்னை குழப்ப அவன் வருவான். விடை உள்ளது வா என்று அழைப்பான்... வேண்டாம் ஆதி.” அவனுக்கு மட்டும் கேட்கும் பெண்குரல் மெல்லியதாக அந்த நீர் விழும் சத்தத்தில் கேட்டது.

கண்களை மூடி யோசித்தவன், “மறக்காம மாசி பெரியசாமி கோவில் போகனும்டா. கருப்பண்ணசாமி துணைக்கு வருவாரு. தைரியமா போ.” என்று அம்மா சொன்ன வார்த்தை ஞாபகம் வர நீரில் தன் கால்களை வைத்தான்.

தொடரும்...
 
Last edited:
Top