அத்தியாயம் 20
இறந்து போன குழந்தையை வாங்கிக்கொண்டு வந்தான் ராகேஷ். “அம்மா குழந்தைய கடைசியா ஒரு தடவ பாத்துக்கறீங்களா?” என்றதும் கதறி அழ ஆரம்பித்தார் வித்யா.
சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்த ராகேஷ் அவரின் மனநிலையை புரிந்து கொண்டு காரை நோக்கி நகர்ந்தான். குழந்தையை ஐஸ் பெட்டியில் வைத்து காரின் டிக்கியில் வைத்தான்.
“செல்வா கார நான் ஓட்டறேன். இதுல இருக்குற ரிஸ்க் உனக்கு தெரியும். நாம போறப்ப என்ன வேணாலும் நடக்கலாம்.”
“புரியுது மச்சி. இப்போ நேரா விடாரபுரம் தானே?”
“இல்ல மச்சி. நேரா ஆதி வீட்டுக்கு போறோம். அங்க வாள் இருக்கு. அத எடுத்துகிட்டு போலாம். ஏன்னா ரெண்டு வாளும் அங்க அவசியம்.” என்று காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
செல்வா வீட்டிற்குள் சென்று வாளை எடுத்துக்கொண்டு வந்தான். ஒரு கருப்பு கோழியை வாங்கி கழுத்தை அறுத்து காரை மூன்று முறை சுற்றி வந்து வீசினான் செல்வா.
செல்வா, “மச்சி பயமா இருக்கா?”
ராகேஷ், “கொஞ்சம் படபடன்னு தான் இருக்கு மச்சி. பின்னாடி குழந்தை. இங்க ஆதி. போறப்ப தெய்வானையோ இல்லன்னா வேற என்ன வேணாலும் நடக்கலாம். அதான் நானே ஓட்டுறேன்னு சொன்னேன்.”
“எனக்கு புரியுது மச்சி. உன்னால பயத்த கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு. கடவுள் நம்மள காப்பாத்துவாரு. தைரியமா விடுடா!”
கார் சென்னையின் புறநகர் பகுதியை தாண்டி இருந்தது. இரவு நேரத்தில் எப்போதும் இருக்கும் வாகன வேகங்களை அன்று காணமுடியவில்லை.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சில இடங்களில் அந்த இரவில் சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்கள் கூர்ந்து கவனிக்க தவறவில்லை.
நிலா வர தாமதமாகும் அந்நாளில் திடீரென பயணப்பட்டு கொண்டிருந்த கார் சட்டென்று நின்றது. “மச்சி என்ன ஆச்சு? ஏன் கார் நின்னுருச்சு?”
“தெரியல மச்சி. இரு பாக்கறேன். நீ கார விட்டு இறங்காத.” என்று கூறிவிட்டு காரின் பேனட்டை திறந்து என்ன பிரச்சினை என்று தேட ஆரம்பித்தான்.
'எல்லாம் சரியாக இருக்க என்ன ஆச்சு? ஏன் வண்டி நின்றது? என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இது தெய்வானையின் செயலாக இருக்குமோ?' என்ற பயம் அவனுள் வந்தது.
மீண்டும் காரில் ஏறி அமர்ந்தவன் காரை ஸ்டார்ட் செய்ய முயன்று சில முறைகள் தோற்றான். ஏசி காருக்குள் அவனுக்கு குப்பென்று வியர்த்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய கார் ஸ்டார்ட் ஆனது.
ஊருக்கு செல்லும் வரை எந்த தொந்தரவும் இல்லை. ஊரில் உள்ள யாருக்கும் தெரியாமல் கார் காட்டு பகுதியின் முன்பு சென்றது. அங்கே பொனனாத்தா நின்று கொண்டிருந்தார்.
“பாட்டி நீங்க எங்க இங்க இந்நேரத்தில?” செல்வா கேட்க
“எனக்கு எதுவும் தெரியாது என நினைச்சீங்களா? குழந்தைய புதைக்கனும்னு வந்துட்டீங்க. ஆனா அதுக்கான இடத்த எப்படி கண்டு பிடிக்கறதுன்னு தெரியாம எங்க போய் புதைப்பீங்க?” என்று கேட்கவும் அமைதியாகி போனார்கள்.
“ஆதித்யாவை எழுப்புங்க.”
மயக்கத்தில் இருந்த ஆதிக்கு ராகேஷ் மயக்கம் தெளிய ஊசி போட்டான். பதினைந்து நிமிடம் கழித்து கண்களை திறந்தான். அவனுக்கு அந்த மயக்கத்தில் இருந்து தெளிவு பெற ஒருமணிநேரம் தேவைப்பட்டது.
சுய நினைவுக்கு வந்தவுடன் தான் எங்கு இருக்கிறோம் என்பதை பொன்னாத்தா முகத்தை வைத்து அவனால் யூகிக்க முடிந்தது.
வேகமாக தன் போனை எடுத்தவன் வித்யாவிற்கு கால் செய்தான். “அம்மா யாசி எப்படி இருக்கா?” என கேட்டான்
“இன்னும் கண்ணு முழிக்கலடா. ட்ரிப்ஸ் எறங்குது. மூச்சு திணறல் நின்னுருச்சு. ஆக்ஸிஜன் இல்லாம தான் மூச்சு விடுறா. பயப்பட தேவையில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.” என்றார் மறுமுனையில்.
போனை துண்டித்துவிட்டு, “ராக்கி இப்படி மயக்க மருந்து கொடுத்து கொடுத்து கூட்டிட்டு வந்துட்டியேடா. நிம்மதியா அழ கூட விடாம பண்ணிட்டியேடா?” அவன் சட்டையை பிடித்து அழுதுகொண்டே கேட்டான்.
“மச்சி நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்த. உன்னால இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. எனக்கு வேற வழி தெரியல மச்சி.”
பொன்னாத்தாவிடம் சென்றவன் பேச மொழிகள் இன்றி கண்ணீரால் மட்டும் அங்கு அவரிடம் கொடுத்தான். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. தன் வம்சத்து குருத்துகள் 200 பேருக்கு மேல அவர் கண் முன்னாடியே இறந்து போய் இருக்காங்க. அதனால் இந்த வலி அவருக்கு பெரியது இல்லை.
“ஆதித்யா இந்த ஆட்டுக்குட்டி இன்னைக்கு தான் பிறந்துச்சு. இத எடுத்துட்டு போய் விடாரபுரத்து மண்ணுல நிறுத்து. இதோட தலையிலயும் நாலு கால் குளம்புலயும் இந்த வீபூதிய போட்டுட்டு இடத்த காட்ட சொல்லு. குட்டி எங்க போய் நின்னு நீர் வார்க்குதோ அந்த இடத்தில் குழந்தைய புதைச்சிடு. தர்மசீலன் வாளால ஆட்டுக்குட்டிய வெட்டி குழிக்குள்ளயே போட்டுரு.” என்றார்.
அவரின் குரலில் நடக்க இருப்பதை தீர்க்கமாக சொல்ல ஸ்தம்பித்து நின்றான் ஆதி. அவன் தோளை தொட்டு செல்வா அழைக்க அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.
“ராக்கி குழந்தைய என் கையில கொடுடா. நான் தூக்கிட்டு வர்றேன்!”
“வேணா மச்சி. அந்த பெட்டிய பாத்துகிட்டு உன்னால நடக்க முடியாது. அதுவும் இல்லாம நீ இப்போ ரொம்ப வீக்கா இருக்க. உன்னால வெயிட்டும் தூக்க முடியாது.”
“ப்ளீஸ்டா! என்னால முடியும் மச்சி. ப்ளீஸ்டா!” என கெஞ்சினான்.
“ஆதி நீ தான் அப்பா. எல்லா காரியமும் நீ தான் பண்ணனும். அங்க போன உடனே குழந்தைய தரேன். எவ்வளவு நேரம் வேணாலும் வச்சிரு. இப்போ நான் சொல்றத கேளு.” என்று சொல்லி அவனை சமாதானம் செய்தான்.
ஆதி வாள் பெட்டியை மட்டும் எடுத்துக்கொள்ள, செல்வா கடப்பாரை மண்வெட்டியை எடுத்துக்கொண்டான். ராகேஷ் குழந்தை உள்ள பெட்டியையும் ஆட்டுக்குட்டியையும் தூக்கி கொண்டு டார்ச் லைட் உதவியோடு நடக்க ஆரம்பித்தார்கள்.
சூரியன் தனது வெளிச்சத்தை மெல்ல மெல்ல அந்த மலைகளுக்கு இடையே இருந்த சமவெளியை நோக்கி பரவவிட்டான். ஆதியும் கண்ணீரோடு ஏன் தனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று புலம்பிக்கொண்டே நடந்தான்.
இவர்கள் மூவரும் சமவெளியை அடைந்தவுடன் ஆதியின் கையில் விபூதியை கொடுத்து விட்டு ஆட்டுக்குட்டியைப் பிடித்து கொண்டார் ராகேஷ்.
“மச்சி நமக்கு வேற வழியில்லை. ஃபீல் பண்ணாம பண்ணுடா” செல்வாவின் வார்த்தைகளில் நொந்து போனான். ஆட்டுக்குட்டி தலையில் விபூதியை போட்டுவிட்டு நான்கு காலிலும் விபூதியை பூசிவிட சில நிமிடங்கள் ஆட்டுக்குட்டி அங்கேயே நின்றது.
தலையை அங்குமிங்கும் ஆட்டி கொண்டிருந்த குட்டி மெல்ல நடக்க ஆரம்பித்தது. வேறு திசைகளில் நடந்த குட்டி ஒரு இடத்தில் நின்றது. அதே இடத்தில் சுற்றி சுற்றி குதித்த ஆட்டுக்குட்டி சிறிது நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை வட்டமிட ஆரம்பித்தது.
அந்த இடத்தின் மத்தியில் வந்து நின்று மெல்ல தலையை அங்குமிங்கும் திருப்பி பார்த்து கொண்டிருந்த குட்டி சட்டென்று நீர் வார்த்தது.
பிறகு அங்கே ராகேஷ் கடப்பாரை கொண்டு தோண்ட ஆரம்பிக்க குத்தியவுடன் கருமேக கூட்டங்கள் மொத்தமாய் அந்த இடத்தை மறைக்க ஆரம்பித்தது. அவனுக்கு உதவிட மண்வெட்டியோடு செல்வா சென்றான்.
பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்த ஆதி பிஞ்சு முகத்தை பார்த்து கதறி அழ ஆரம்பித்தான். “அப்பாவ மன்னிச்சிடுடா. உன்னையே என்னால காப்பாத்த முடியல. எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ண முடியாத பாவியாகிட்டேன்டா!” என்று கத்தி அழ ஆரம்பித்தான்.
“மச்சி ஆதி ரொம்ப எமோஷனலா இருக்கான்டா. போய் சமாதானம் பண்ணுடா. நான் பறிக்கிறேன்.” செல்வா சொல்ல,
“அழட்டும் மச்சி. ஒரு அப்பாவா நல்லா அழட்டும். இத்தன மாசமா தனக்குள்ளேயே வச்சிகிட்டு வெளியே சொல்ல முடியாம அழுதுட்டு இருந்தான். குழந்தை செத்து அப்புறம் கூட அவன் கண்ணுல காட்டாம தான் இங்க கூட்டி வந்தோம்!”
“அதுக்கில்ல மச்சி. அவனுக்கு ஏதாவது ஆகிட போகுதுடா!”
“காளி கோவில் வெளிய வர்ற வரைக்கும் அவனுக்கு எதுவும் ஆகாது. மனுசனோட வலிய குறைக்கறதுக்கு தான் கடவுள் அழுகை ஒன்னு வச்சாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல இனிமேல் அந்த முகத்த வாழ்க்கை முழுசும் பார்க்க முடியாது. பார்த்து அழட்டும். விடு மச்சி.”
குழந்தையை தன் மார்போடு அழுத்தி அங்கேயே படுத்து அழ ஆரம்பித்தான். எதுவும் தெரியாமல் யாசிகா அங்கு குழந்தையை பற்றி கனவு கண்டு மகிழ்ச்சி அடைந்த போது, குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தும் கனவு கோட்டை கட்டியவன் ஆதி.
கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து விடாதா என்ற எண்ணத்தோடு தினம் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான். ஆனால் விதியின் பயனாய் இது எதுவும் மாறாமல் இருந்து விட்டது.
இறுகி போன மண்ணில் ரொம்பவும் சிரமப்பட்டு பறித்தார்கள். இருவரின் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டது. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தோல்கள் உரிந்தன.
குழி பறித்து முடித்துவிட்டு ஆதியை பார்க்க, “வேணாம்டா மச்சி!” என்றான்.
“ஆதி குழந்தை இறந்துடுச்சு. எப்படி இருந்தாலும் மண்ணுக்கு கொடுத்து தாண்டா ஆகனும். ஆக வேண்டிய காரியத்தை பாரு மச்சி!”
“யாசிக்கு என்னடா பதில் சொல்லுவேன்? எங்கடா என் குழந்தைன்னு கேட்டா என்ன பண்ணுவேன்? ஓடி ஓடி எல்லாம் பண்ணினது இதுக்கு தானா?”
ராகேஷ், “மச்சி உன்னோட வலி புரியுதுடா. ஆனா இப்படி எதுவுமே பண்ண முடியாது. நடந்தது நடந்து போச்சு. யாசினு ஒருத்தி இருக்காளே. அவளுக்காக நீ வாழ்ந்துதான் ஆகனும். குழந்தைய கொண்டு வாடா”
“மாட்டேன்டா. வா சென்னைக்கு போலாம்.” என்று எழுந்தவனை இருவரும் பிடித்தார்கள். குழந்தையை மார்போடு சேர்த்து வைத்திருக்க செல்வா அவனை வயிற்றோட சேர்த்தி பிடித்து நகர முடியாமல் தடுத்தான்.
ராகேஷ் ஆதியின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து, “அங்க போனா மட்டும் உன் குழந்தை பிழைச்சுக்குமா? இது உன் வம்சத்தோட சாபம். எல்லாருக்கும் பிறக்கிற முதல் குழந்தை செத்துப் போகும் தானே வாங்கி வச்சிருக்கீங்க. இனி பிறக்கிற அடுத்த குழந்தையாவது நல்லா இருக்கட்டுமே. நீயும் சுயநலமா யோசிக்காதே. காரியம் பண்ணு.”
அவனின் வார்த்தைகளில் கட்டுண்டு கண்ணீரோடு குழந்தைய பார்த்துக்கொண்டே குழியை நோக்கி நடந்தான். குழிக்குள்ளே ராகேஷ் குழந்தையை கேட்டான். அவன் தர மறுக்க செல்வா வலுக்கட்டாயமாக வாங்கி கொடுத்தான். அந்த நிமிடம் மின்னல் வெளிச்சத்தில் அந்த இடம் சில நொடிகள் வெளிச்சம் பெற்றது.
“உன் வம்சத்தோட மொத்த சாபத்தை தீர்க்க வந்தவன் நீ. நிம்மதியா இங்க உறங்கு” என்று குழிக்குள் வைத்து விட்டு கண்ணீரோடு அழத ஆதியின் கையில் தர்மசீலன் வாளை கொடுத்தான்.
‘ஏன்டா இப்படி நீங்களும் என்னைய கஷ்டப்படுத்துறீங்க?’ என்று கருவளையம் தோன்றிய கண்ணாலேயே கேட்டான் ஆதி.
செல்வா ஆட்டுக்குட்டி பின்னங்காலை பிடித்துக்கொள்ள கழுத்தில் ஒரு கயிறு கட்டி குறியின் மறுபுறம் நின்று அதை பிடித்துக்கொண்டான் ராகேஷ். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அதை வெட்ட குழிக்குள் தள்ளினார்கள்.
இதற்காகவே காத்திருந்தது போல மேக கூட்டங்களும் அங்கே கண்ணீர் சிந்த ஆரம்பித்தன. அவ்வப்போது வந்த மின்னல்களும் இடியும் வானமே ஓலமிட்டு அழுவதை போல காட்சியளித்தது.
“ஆதி மண்ணெடுத்து போடுடா!” என்றதும் மண்ணை எடுத்து குழிக்குள் போட்டான். செல்வா அவனை அங்கிருந்து அழைத்து செல்ல ராகேஷ் குழியை மூடினான். கொட்டும் மழையில் ஆதியை அனைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தான் செல்வா.
“ஏய் காளி. உனக்கு சந்தோஷமா? என் குழந்தைய கொண்டு வந்து புதைச்சுட்டேன். தெய்வானை வா அடிக்கடி வந்து கத்துவியே! வா வந்து என்ன எடுத்துக்கோ! இன்னும் எத்தனை குழந்தை உசுர நீ எடுப்ப?” என்று கத்தினான்.
“ஆதி அமைதியா இருடா”
“என்னடா அமைதியா இருக்க சொல்ற. காப்பாத்த வேண்டிய சாமியே பச்சப்புள்ள உசுர கேட்டா என்ன பண்றதுடா? எவனோ அறுநூறு எழுநூறு வருஷத்துக்கு முன்னாடி பண்ணுன தப்புக்கு என் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு. அது ஏன்டா சாகணும்?” என்று அவன் கத்த செல்வா பேசாமல் இருந்தான்.
“ஹேய் தெய்வானை எங்க ஓடி ஒளிஞ்சுகிட்ட. வா இங்க ஏதோ என்னோட மரணம் நிச்சயம் நிச்சயம்னு கத்துவியே! வந்து இப்போ பேசு. ஏன் என் முன்னாடி வர பயமா இருக்கா?” என்று கத்தினான்.
“யோவ் குலசேகரா அப்போ அப்போ வருவியே. எங்க போய் தொலைஞ்ச. வா வந்து பாரு. உன்னோட ஆசைக்கு என்னோட மகன நான் இழந்து அழுகனுமா? வந்து பதில் சொல்லுயா?” கொட்டும் மழையில் விடாமல் பேசினான். ராகேஷ் குழியை மூடி சமன் செய்துவிட்டு வந்தான்.
அவனை எவ்வளவோ முயற்சி செய்தும் சமாதானப்படுத்த முடியவில்லை. “மச்சி வாடா போலாம். யாசிய போய் பாக்கனும். இங்க கத்த வேணாம்.” என்று ராகேஷ் இழுத்தான்.
ஆதி இருந்த கோபத்திற்கு அவனை தள்ளிவிட்டு, “போயி, என்ன சொல்ல சொல்ற? நம்ம குழந்த செத்துரும்னு எனக்கு தெரியும். அம்மா பாக்காம எடுத்துட்டு போய் அங்க புதைச்சா சாபம் தீரும். அதனால நாங்க போய் புதைச்சுட்டோம்னு சொல்ல சொல்றியா?”
“இல்ல நீ ஆசையா வளர்த்த குழந்தயை என்னோட உயிர காப்பாத்திக்க காவு கொடுத்துட்டேன். போனா போவுது குழந்தை தானே. இன்னொன்னு பெத்துகிட்டா போவுதுன்னு சொல்ல சொல்றியா? சொல்லுடா. இவனுக எல்லோரும் அவனவன் சுயநலத்துக்காக என்னோட குழந்தை கொன்னுட்டாங்கடா?” என்று கதறி அழுதான்.
“ஏய் காளி. இப்போ நீ வர்றியா? இல்ல நான் உனக்கு சாபம் தரவா?” சும்மா சும்மா சுத்திக்கிட்டே இருந்தானே தர்மசீலன்னு ஒருத்தன். அவன கூட காணோமே.”
வானத்தை பார்த்து கண்கள் மூடி “ஆஆஆஆஆஆஆஆஆ” என எவ்வளவு நேரம் கத்த முடியுமோ அவ்வளவு நேரம் தன் மொத்த பலத்தையும் சேர்த்து கத்தினான். அந்த சத்தத்திற்கு மழை பொழிவை மேகங்கள் நிறுத்தியது போல மழை நின்றது.
நிதானமடைந்து பின்னால் பார்க்க தர்மசீலன் நின்றுக்கொண்டு இருந்தார். “சந்தோஷமா! சொல்லுயா உனக்கு சந்தோஷமா” என கத்திக்கொண்டே அருகில் சென்றான்.
“ஆதித்யா அமைதி கொள். இது விதியின் விளையாட்டு. இதை நீயும் முன்பே அறிவாய்” என்றான் தர்மசீலன்.
“எதுயா விதியோட விளையாட்டு. அந்த ஆளு இந்த மண்ணு மேல ஆசைப்பட்டு கோவில மூடுனான். நீ பெருசா முன்னாடி வந்து கழுத்து அறுத்துட்டு செத்துப்போன. தெய்வானை வலியில சாபம் கொடுத்தா. நீங்க மாத்தி மாத்தி பண்ணின தப்புக்கு நான் என்னடா பண்ணேன். என்னோட மகன் போய்டானே.”
“ஆதித்யா உந்தன் வலியை நான் அறிவேன். இதை நீ ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். உனக்கு இந்த ரகசியங்கள் அனைத்தும் தெரிந்ததால் நீ இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாய். இல்லையெனில் அனைவரையும் போல சாதாரணமாக அழுதுகொண்டே சென்று இருப்பாய் ஆதித்யா. தவறு எங்களுடையதாக இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டிய கர்மவினையோடு தான் நீயும் ஜனித்து இருக்கிறாய்!” என்றார் தர்மசீலன்.
“யோவ்! நீங்க பண்ணின பாவத்துக்கு தான்யா எல்லாரும் இன்னும் பேயா அழையுறீங்க. எத்தன பச்சப்புள்ள உசுர எடுத்து இருக்கீங்க. நீங்களெல்லாம் என்னைக்குமே நிம்மதியா இருக்க முடியாது” என்று அழுதான்.
சற்று நேரம் அமைதி நிலவிய நேரத்தில், “ஹேய் தெய்வானை. அன்னைக்கு உன்னோட குழந்தைய பாக்க முடியல. உன் கண்ணு முன்னாடி செத்து போச்சுன்னு தானே எங்க வம்சத்துக்கு சாபம் கொடுத்த, இப்போ அதே வலியோட இருக்க நான் தரேன்டி உனக்கு சாபம்”
“வேண்டாம் ஆதித்யா. அமைதி கொள். அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதே. பிறகு சரி செய்ய முடியாது. இந்த நேரத்தில் உனக்கு நிதானம் முக்கியம்.” என்றான் தர்மசீலன்.
“உனக்கென்ன? சொல்லிட்ட. அன்னைக்கு நீ நிதானமா இருந்திருந்தா இந்த பிரச்சினை வந்தே இருக்காதுல. நான் கோவில வெளிய எடுக்கறது உறுதி ஆகிடுச்சு. ஆனா நல்லா கேட்டுக்க நீ. நீ கடைசி வரைக்கும் இந்த மலைப்பகுதிக்குள்ள தான் அந்த குதிரையில சுத்தனும். இது என்னோட சாபம்”
“ஹேய் தெய்வானை. உன்னோட சுயநலத்திற்காக இன்னைக்கு தெரிஞ்சும் காப்பாத்த முடியாம மண்ணுக்கு கொடுத்த ஒரு அப்பாவோட வலியில வர்ற வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததுன்னு உனக்கு தெரியும். நல்லா கேட்டுக்கோ. என்னோட சாபம் முடிந்தாலும் உன்னால முக்தி அடைய முடியாது. எத்தனை குழந்தைகள் உயிர எடுத்தியோ அத்தனைக்கும் சேர்த்து இந்த உலகம் அழியும் வரை நீ இங்கயே கடைசி வரைக்கும் அழுதுட்டே இரு. இது உன்னால அழற ஒரு அப்பாவோட சாபம்!” என்று கத்தினான்.
மறுநொடியே மொத்த மேகக்கூட்டங்களும் கலைந்து சூரியன் அவர்களின் உடல் மேல் பரவியது. சில நிமிடங்களில் அங்கே மழை பெய்ததற்கான அறிகுறிகள் இல்லாமல் போனது.
ராகேஷ், “மச்சி அவசரப்பட்டுட்டியேடா. எல்லாம் தெரிஞ்சும் கடைசி நேரத்தில இப்படி பண்ணி வச்சிருக்க. நீ கொடுத்த சாபத்தோட பின்விளைவுகள் என்னவா இருக்கும்னு கூட யூகிக்க முடியல?” என்றான்.
“மச்சி இப்போ இத பத்திலாம் பேச வேணாம். முதல்ல சென்னை போவோம். அங்க யாசி நிலைமை என்ன ஆச்சுன்னு நமக்கு தெரியல. வாங்கடா போலாம். சிக்னல் கிடைச்ச உடனே போன் பண்ணி கேட்கனும் முதல்ல.” என்று செல்வா அழைக்க நிதர்சனம் உணர்ந்து மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
தான் கொடுத்த சாபத்தை எண்ணி வருத்தப்படவோ, யோசிக்கவோ ஆதிக்கு நேரமில்லை. அவன் நினைவு முழுவதும் அங்கே இருக்கும் யாசியின் உடல்நிலையும், அவளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று எண்ணம் மட்டும் தான்.
தொடரும்...