கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 21

அத்தியாயம் 21

இறந்துபோன தன் குழந்தையை எண்ணி கலங்கியவன் தற்போது தன் மனைவியை நினைத்து கலங்க தொடங்கினான். செல்போன் சிக்னல் கிடைத்தவுடன் வித்யாவிற்கு போன் செய்தான்.

“அம்மா யாசி எப்படி இருக்கா?”

“கண்ணு முழிச்ச உடனே உன்னைய தான் கேட்டா. நீ வீடு வரைக்கும் போய்ருக்க வந்திடுவன்னு சொன்னேன். குழந்தை பத்தி கேட்டா. வெளியே நர்ஸ் எடுத்துட்டு போய்ருக்காங்கனு சொன்னேன் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாடா. திடீர்னு அழ ஆரம்பிச்சா. கொஞ்ச நேரத்தில மயக்கம் போட்டுட்டா. ரொம்ப பயமா இருக்கு ஆதி. சீக்கிரம் வாடா.” என்றார்.


மறுமொழி பேசாமல் போனை துண்டித்தான். அவன் கண்களில் இருந்து வந்த நீரின் மூலம் ஏதோ நிலை சரியில்லை என்பதை உணர்ந்த செல்வா உடனே சாராவிற்கு போன் செய்து அனைத்தையும் அறிந்து கொண்டு ராகேஷிடமும் சொன்னான். ராகேஷ் உடனடியாக டாக்டரிடம் போன் செய்து யாசிகாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தான்.


காருக்குள் சென்றவுடன், “மச்சி நீ யாசிய பத்தி கவலப்படாத. அவள பிசிக்கலி சரி பண்ணிட்டா மெண்டலி நான் பாத்துக்கறேன். கொஞ்ச நாள் தான் ஆதி. எல்லாம் சரி ஆகிடும்”


எவ்வளவு ஆறுதல் கிடைத்தாலும் ஆதிக்கு யாசிகாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்துடனே நேரத்தை கடத்தினான். ஆனால் அவனுக்கு வேறு வழியும் இல்லை. மருத்துவமனைக்கு வந்தவன் வேகமாக இறங்கி ஓடினான் யாசிகா இருந்த அறைக்கு.


“வா ஆதி. எந்திரிச்சு மேல கொஞ்ச நேரம் வெறிக்க பாத்துட்டு இருந்தா. அதுக்கப்புறம் என்ன நினைச்சாலோ தெரியல கண்ண மூடுனா இப்ப வரைக்கும் திறக்கவே இல்லை.” என்ற வித்யாவின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே அறைக்குள் சென்றான்.
அவள் தலை அருகில் அமர்ந்தவன் தலையை தடவிக் கொண்டே கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தான்.


“ஆதி” என்று சட்டென்று அவள் குரலில் திரும்பி கண்களை பார்த்தவனிடம், “நம்ம குழந்தை எங்க?” என்ற அவளின் அழுத்தத்தில் அவளுக்கு உண்மை புரிந்துவிட்டது என்று அவனால் உணர முடிந்தது.

“அது.. அது.. ந.. நம்ம்ம்.. நம்ம குழந்தை இற...” அவன் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கி தவித்தன. சற்று நேரம் சிரமப்பட்டு, “குழந்தை இறந்திடுச்சு!” என்றான்.

அவன் முகத்தை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. முகத்தை அங்குமிங்கும் திருப்பி கொண்டே இருந்தான்.

தன் முகம் திருப்பி மேலே பார்த்தவளாய், “மலையில இருக்கிற சாமி கட்ட உடைச்சிட்ட. இனி பயப்பட தேவையில்லன்னு சொன்னியே ஆதி?”

“என்ன மன்னிச்சிடு யாசி. என்னால நம்ம குழந்தைய காப்பாத்த முடியல.” என்றதும் அந்த இடத்தை ஒரு மயான அமைதி சூழ்ந்தது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “என் குழந்தை எனக்கு பாக்கணும் ஆதி!” என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிக்கி தவித்தான்.

“யாசி. குழந்தைக்கு செய்ய வேண்டிய காரியம் எல்லாம் பண்ணியாச்சு.” என்று அவன் திக்கி திணறி சொன்னபோது அவனை அவள் பார்த்த பார்வையில் கோபம் ஏக்கம் வலிகள் என்று அனைத்தும் இருந்தது. மறுநிமிடம் அவள் மூர்ச்சையாகி போனாள்.


ஒருவாரம் தொடர்ந்து சிகிச்சை அளித்தது மருத்துவமனை. அவள் கண் விழிக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்றை தொலைத்தது போல இறுகிப்போன முகத்துடன் யாரிடமும் பேசாமல் இருப்பாள். அவள் உடல்நலத்தில் ஓரளவு முன்னேற்றம் அடைந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

தனது அறையை விட்டு அவள் வெளியே வராமல் முடங்கி போய் இருந்தாள். அவ்வப்போது தனது கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், சாரா என பலரும் அவளை மாற்ற முயற்சி செய்து தோற்று போனார்கள்.

தன் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டில் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிவிடும் தாயை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்த ஆதி, “யாசி கிளம்பு கொஞ்சம் வெளிய போகனும்.”

“எங்க ஆதி?”

“எங்கன்னு சொன்னா தான் வருவியா யாசி?”

“எனக்கு கொஞ்சம் தனிமை வேணும் ஆதி. நீ போய்ட்டு வா.”

“பீச் போலாம் யாசி. எனக்கு உன் கூட போகனும்னு ஆசையா இருக்கு. ப்ளீஸ் வா!” கெஞ்சி அவளை வெளியே அழைத்து வந்தான்.

மெரினா கடற்கரையில் அலைகள் துள்ளி வருவதை அவன் பார்த்து ஆசுவாசம் அடைய யாசிகாவோ அங்கு விளையாடும் குழந்தைகளையும், குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களையும் பார்த்து மீண்டும் மீண்டும் இறுகிப் போனாள். அவள் முகத்தைப் பார்த்த ஆதி அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு அழைத்து வந்தான்.

நடந்த அனைத்தையும் ராகேஷிடம் சொல்லி அழுத ஆதியிடம், “மச்சி நாளைக்கு காலையில பத்து மணிக்கு யாசிய இங்க கூட்டிட்டு வந்திடு. ட்ரீட்மென்ட் ஸ்டார் பண்ணனும்” என்றான் ராகேஷ்.

மறுநாளும் காலையில் அதேபோல் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்த யாசிகாவிடம், “யாசி கிளம்பு போகணும்.” என்றான்.

“எங்க?” என்ற கேள்வியை தன் பார்வை மூலமாக கேட்டாள்.

“ராகேஷ் வர சொன்னான்.”

“நான் என்ன பைத்தியமா ஆதி. எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க நினைக்குறீங்க?” என அவன் மனதில் இருந்ததை படித்தது போல கேட்டாள்.

“யாசி நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்க. இன்னும் நீ அழல. எனக்கு பயமா இருக்கு யாசி. ப்ளீஸ் வா. கெஞ்சி கேட்கறேன்டி.”

“நான் எதுக்கு அழனும் ஆதி. எல்லாம் தெரிஞ்சு தானே உன்ன கல்யாணம் பண்ணேன். முதல் குழந்தை இறந்திடும்னு தெரிஞ்சு தானே வளர்த்திருக்கனும். ஆனா அத ஏன் நான் மறந்தேன்னு எனக்கு தெரியல ஆதி. அது என்னோட தப்பு தான். அதுக்கு நான் தண்டனை அனுபவிக்கனும்.” என்றாள் ஜன்னல் வழியாக பார்த்தவாரே‌.


“யாசி தப்பு என்னதுதான். யாசி இத மாதிரி இருந்த உன்னோட உடம்பு தாங்காது. ஏற்கனவே நீ வீக்கா இருக்க. பிடிவாதம் பண்ணாம வா.” ஆதி கையை பிடித்து இழுத்தும் வர மறுத்து கையை உதறினாள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவன் ஒரு கட்டத்தில் அவள் கையை உதறியவுடன் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். அதன் பிறகு மறுவார்த்தை பேசாமல் காரில் ஏறினாள்.

ராகேஷின் மருத்துவமனைக்கு சென்றவுடன் தன் அறைக்குள் இருந்த பெட்டில் படுக்க வைத்துவிட்டு அவளை ஆழ்நிலை தூக்கத்திற்கு அழைத்து சென்றான். அவள் மனதில் உள்ள வலிகளை நீக்க மெல்ல மெல்ல முயற்சி செய்து தோற்றான்.


ஆறு மாதங்கள் முயற்சி செய்தும் தன் குழந்தை இறந்ததை எண்ணி இவரிடம் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் துளிகளை வாங்க முடியவில்லை அவனால். பல புகழ்பெற்ற மருத்துவர்கள் கூட அவளிடம் தோற்றுப்போனார்கள். அழுகையை மட்டுமல்ல சிரிப்பை கூட அவர்களால் தர முடியவில்லை.

ஆதியின் நாட்கள் எல்லாம் தினமும் கண்ணீரில் தொடங்கி கண்ணீரில் முடிந்தது. இரவில் தூக்கம் தொலைத்து அவளை பார்த்து அழுது அழுது நொந்து போனான்.

அன்று இரவு அதே போல நள்ளிரவை தாண்டியும் அழுது கொண்டிருந்த வேளையில், “ஆதித்யா வரும் சூரிய கிரகணம் முடிந்த மறுநாள் உன் மனைவியோடு என்னை வந்து பார். மகாகாளி வெளியே வரப் போகிறாள். உன் அழுகைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது.” என்று உக்கிரவீரமாத்தி குரல் ஒலித்தது.



நாட்களை எண்ணி கொண்டிருந்தவன் சூரிய கிரகணம் முடிந்த மறுநாள் தன் நண்பர்களோடு யாசிகாவை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குச் சென்றான். அங்கே பொன்னாத்தாவை பார்த்து சில நிமிடங்கள் அழுதவன் உக்கிரவீரமாத்தியை பார்த்தான்.

அங்கிருந்த பூசாரிக்கு சாமி வந்து, “ஆதித்யா காளியின் சிலை வெளியே வந்துவிட்டது. தர்மசீலன் வாளால் உன் மனைவியின் ரத்தத்தை காளியின் முன்பும் குலசேகரன் வாளால் உனது ரத்தத்தையும் அவள் சிலை முன் இடு. பிறகு காளியே உன்னிடம் பேசுவாள்.” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் மீண்டும் அந்த நான்கு மலைகள் சுற்றிய விடாரபுர சமவெளிக்கு சென்றார்கள். யாசிகா அந்த பகுதியில் காலை வைத்தவுடன் எப்போதும் போல கருமேகங்கள் அந்த இடத்தை அமானுஷ்ய இடமாக மாற்றியது.


அவள் அந்த இடத்தில் நடக்க நடக்க அவளுக்குள் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. தன் பிள்ளையை இங்கு தான் புதைத்துள்ளார்கள் என்பதை கூட கேட்டு தெரிந்து கொள்ளாமல் அங்கே வெளியே வந்த சிலையை தேடி நடந்தார்கள்.

“தர்மசீலரே! வாங்க.எனக்கு வழி காட்டுங்க.” என மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தான் ஆதி. ஆனால் அவன் குரலுக்கு அவர் செவி சாய்க்கவில்லை.


நீண்ட நேர தேடலுக்கு பின்னர் மண் குவியல் நிறைந்த இடத்தில் கல் ஒன்று வித்தியாசமாக தெரிய அங்கு அதை சுற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். மகாகாளியின் சிலையை முழுவதும் தெரியும் அளவிற்கு மண்ணை அகற்றி சிலையின் மீது இருந்த மண்ணையும் எடுத்து சுத்தம் செய்தார்கள்.

சுத்தம் செய்து முடித்துவிட்டு பெட்டிக்குள் இருந்த வாளை வெளியே எடுத்தார்கள். அந்த நொடி வானம் முழுவதும் மின்னல் கீறல்கள் படர்ந்தன. இடியின் சத்தம் அனைவரையும் பயமுறுத்தியது.

குதிரையின் கால் சத்தம் கேட்டது. யாசிகாவின் சம்மதம் கேட்காமல் அவள் குணமாக வேண்டும் என்ற ஒற்றை நினைப்போடு அவள் விரலில் லேசான காயம் ஏற்படுத்தி ரத்தத் துளிகளை பீடத்தின் முன்னால் சிந்தினான். பிறகு தன் விரலில் காயத்தை ஏற்படுத்தி ரத்த துளிகளை தெளித்தான்.

ஐவரும் சில நொடிகள் கண்கள் மூடி திறந்த நேரம் குதிரையின் மீது அமர்ந்தவாறு வீரமங்கை தெய்வானை நின்றாள். அவர்களுக்கு பின்னால் தர்மசீலனும் குலசேகரனும் குதிரையின் மீது அமர்ந்திருப்பதை பார்த்தார்கள்.

“தர்மசீலா உன் சபதம் நிறைவேறிவிட்டது. மகாகாளி சிலை வெளியே வந்துவிட்டது. இனி என் சபதம் வெல்லும் நேரம் நெருங்கிவிட்டது. ஆதித்யா உன் மரணம் என் கையால் நிகழும்.” என கூறி பெரும் சிரிப்பு சிரித்தாள் தெய்வானை.

“நீயெல்லாம் ஒரு பொண்ணா?” மறுநொடி வேகமாக பாய்ந்தது யாசிகாவின் குரல். “உன்னோட குழந்தை செத்துருச்சுன்னு எத்தனை குழந்தைகளை கொன்னுட்ட. இதுல வேற சபதம் வெல்லனும்னு ஆசை வேற” என்றாள்.

“உன்னோட சுயநலத்துக்காக எத்தன அம்மாவ அழ வச்சிருப்ப. இன்னைக்கு என்னோட புள்ளைய நான் கண்ணுல கூட பாக்க முடியாம போனதுக்கு நீ தான் காரணம். மனுசியா இருந்திருந்தா கூட உனக்குள்ள இரக்கம் இருந்திருக்கும். நீ பேய் தான.” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவள் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. அந்த நொடியே கதறி அழுதாள் யாசிகா.


தெய்வானையின் முகம் சிவந்தது.அந்நொடியில் தர்மசீலன் முன்னே வந்து, “ இது காலத்தின் கட்டாயம். இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு சக்தி உண்டு. நம் மனதில் உள்ள எண்ண அலைகளுக்கும் நம் வாயில் இருந்து வெளிப்படும் சொற்களுக்கும் அபரிமிதமான செயல் சக்தியை கொடுக்கும். எண்ணத்தில் அன்று தோன்றியதே அன்றும் நடந்தது. இன்றும் நடந்தது. ஆதித்யா நீ அன்று உன் குழந்தை இறக்காது என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால் மாற்றும் சக்தி உண்டு.ஆனால் விதியால் நீ எண்ண அலைகளுக்குள் ஏற்றுக்கொண்டாய்.” என்றான். அந்நிமிடம் அசரிரீயாக காளியின் குரல் ஒலித்தது.

“இத்தனை ஆண்டுகளாக என்னற்ற குழந்தைகளை உயிர்பலி வாங்கினேன். நான்கு மலை காவல் தெய்வங்களின் கட்டும் அவிழ்ந்துவிட்டது. உன்னோடு இந்த சாபம் முடிந்துவிடும்.” என்றாள் மகாகாளி.

“இனி தீர்ந்து என்ன செய்ய முடியும். உன்னால என்னோட குழந்தைய மறுபடியும் தர முடியுமா? என் குழந்தை முகத்தையாவது பாக்க வைக்க முடியுமா?” தன் மனதில் இத்தனை நாளாக கிடந்த வலிகளை கேள்வியால் கேட்டாள். “தர்மசீலா கட்டளையை கூறு. தர்மத்தை எடுத்துரை. எல்லாம் சரியாகும்.” என மறுநொடி அசரிரீ மறைந்தது.


“ஆதித்யா கண்கள் மூடி சாபம் தீர்ந்து அடுத்து பெண் குழந்தை வேண்டுமென கேள். அடுத்து உனக்கு மகன் பிறப்பான். வம்சம் தழைக்கும். இது மகாகாளி வாக்கு ஆதித்யா.” என்றார் தர்மசீலன்.

தெய்வானை கோபத்தின் உச்சிக்கே செல்ல ஆரம்பித்தாள். தன் சபதத்தை மகாகாளி நிறைவேறாமல் தடுத்ததாக நினைத்து உரக்க கத்தினாள். அந்நிமிடம், “தெய்வானை அமைதி கொள். பொதுவாக ஒரு சாபம் ஈரேழு தலைமுறைகள் தான். மேலும் ஆதித்யா செய்த காரியம் மிகப்பெரியது” என்றான்.


“தர்மசீலா உன் சபதம் நிறைவேறிவிட்டது என்ற ஆனந்தத்தில் பேசுகிறாயா? இது துரோகம்!” என்றாள் தெய்வானை. “இல்லை தெய்வானை. இதுவே அறம். அவன் நான்கு தெய்வத்தின் கட்டுகளை‌ உடைத்து தன் வசம் ஆக்கிவிட்டான். மேலும் மகாகாளியின் சிலையும் வெளிக்கொணர்ந்தான். மேலும் அதற்கு ரத்தமும் கொடுத்தான்.” என்றான் தர்மசீலன்.


“நீ எவ்வளவு சமாதானம் கூறினாலும் என் மனது ஏற்காது. அன்று எனது குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே என் உயிர் பிரிந்தது. அந்த வேதனையை நீ அறிவாயா?”

“தன் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்து நாட்களை நகர்த்தினானே, அவன் வலியை நீ உணர்வாயா? தான் பெற்ற செல்வங்களும் தன் குல வித்தைகளும் தன் கண் முன்னே அழிவார்கள் என்று அறிந்து கொண்டு இன்றுவரை வாழும் பொன்னாத்தாவின் வலிகளை நீ அறிவாயா? போதும் தெய்வானை.”


“முடியாது தர்மசீலா. இது ஒரு தாயின் வேதனை. உனக்கு இது தெரியாது” என்றாள். மறுகணமே, “என் வலி உனக்கு தெரியாது?” என்று முடித்தாள் யாசிகா.


“தெய்வானை உன் சாபம் நிறைவேற்றப்படும். ஆனால் உன்னைப்போல் தன் குழந்தையை இழந்து வலியோடு சொற்களை உதிர்த்து அவன் கொடுத்த சாபத்தை நீயும் நானும் எப்படி சரிசெய்ய முடியும் தெய்வானை. அன்று எடுத்த சபதத்தில் வென்றாலும் தோற்றாலும் நம் இருவருக்கும் முக்தி கிடையாதே.”

அவன் சொன்னவுடன் அதை யோசித்தவளாய், “அவன் வாக்கு பலிக்காது தர்மசீலா!” என்றாள்.

“அவன் சாபம் கொடுத்ததே உன் ஆன்மாவின் மீது தான் தெய்வானை. நீயும் உன் முன்னோர்களும் இத்தனை ஆண்டுகளாக வணங்கிய காவல் தெய்வங்களை அவனே கட்டவிழ்த்து வசியம் செய்துள்ளான். பெரும் சக்தியோடு தன் வலியோடு அவன் கொடுத்த சாபத்திற்கு இப்போது தீர்வே இல்லை தெய்வானை.”

தன் கண்கள் மூடி கோபம் கொள்ள, “தெய்வானை நீ இங்கு இப்போதே அவனை கொல்ல நினைத்தாலும் அவனை கொல்ல முடியாது. மகாகாளி துணை நிற்கிறாள். அமைதி கொள். மன்னிப்பு கொடு. அதுவே காளியின் கட்டளையும் கூட!” என்றான்.


“தெய்வானை அதுமட்டுமல்ல. இங்கே நிற்கும் பெண் யார்? உன் நாட்டவரின் அம்சம் தானே. அவள் வயிற்றில் வளர வேண்டிய குழந்தையை நீ தடுக்க நினைக்கிறாயா? போதும் தெய்வானை. காளியின் கட்டளையை ஏற்பாயாக! அவள் கொடுத்த வாக்கு பொய்த்தது இல்லை.” என்று தர்மசீலன் கூறியதும் அமைதியானாள்.

சில நிமிடங்கள் அங்கு பேரமைதி நிலவ, “பூரண மன்னிப்பு கொடுத்தாயிற்று.” என்றாள். அங்கே குதிரையின் மீது அமர்ந்திருந்த குலசேகரன் தலைகுனிந்தான். புன்னகையோடு ஆதியின் பக்கம் தன் முகத்தை திருப்பினான் தர்மசீலன்.

“என்னைய மன்னிச்சிடுங்க. அன்னைக்கு ஏதோ தெரியாம கோபத்துடன் ஏதேதோ பேசிட்டேன். அதை சரி செய்ய ஏதாவது வழி இருக்கா?” என கேட்டான் ஆதி.

”ஆதித்யா நீ உதிர்த்த சொற்கள் ஆழமாக கலந்துவிட்டது. மேலும் இது காலத்திற்கும் தேவையான ஒன்றுதான். உன் வாழ்க்கையை விளையாடிய விதி இன்று இந்த ஆன்மாக்களோடும் விளையாடிவிட்டது. உன் வாக்குப் பலித்தே தீரும்” என கூறினான்.

“என்னோட தப்ப சரி செய்ய என்ன செய்யனும்னு சொல்லுங்க. நான் பண்றேன். சாபம் ஏதாவது தீர வழி இருக்கும்ல?”

“ஆதித்யா காளி தேவியின் முன்னிருந்து 14 முழம் தூரத்தில் ஒரு பெண் உருவ கல் வை. அதில் தெய்வானை கடவுளாக இருப்பாள். சமவெளி பகுதியின் முன்பு முன்று அடி கற்களை இரண்டை நட்டு வை. இரண்டு உதிரக்குட்டி கொண்டு எனக்கும் குலசேகரனுக்கும் நடுகல் இரண்டு வை.” என்றான் தர்மசீலன்.

“இல்ல எனக்கு புரியல?” என்றான் ஆதி.


“உன் சாபத்தால் எங்களுக்கு முக்தி அடையா நிலை வந்துவிட்டது. காளியின் உத்தரவுப்படி குல காவல் தெய்வங்களாக நாங்கள் விளங்குவோம். உன் வம்சமே இதற்கு குலமாக அமையும். வீரமாத்தி திருவிழா முடித்து இங்கு வந்து காளி பூஜையும் செய்து குல தழைக்க வேண்டிக்கொள். காவலுக்கு நாங்கள் வருவோம்.” என்றான்.

“கல் வைக்க வேண்டிய நாள் விரைவில் தெய்வானை உனக்கு சொல்லுவாள்.” என்றவன் தெய்வானையை பார்த்து, “இதுவே காளியின் உத்தரவு. பழி உணர்வை விடுத்து அமைதி கொள் தெய்வானை. உன் நாட்டு பெண்ணின் வாழ்க்கையையும் எண்ணி பார். விரைவில் காளி தேவியின் உத்தரவு உனக்கு வரும்.” என கூற அமைதியாய் இருந்தாள்.


ஏதும் புரியாமல் ஐவரும் இருக்க சற்று நேரத்தில் மூவரும் குதிரையில் ஆளுக்கொரு திசை நோக்கி விரைந்தார்கள். மேக கூட்டங்களும் நகர்ந்து சூரியனுக்கு வழிவிட்டது.

காளியின் முன்பு கற்பூரம் ஏற்றிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். பொன்னாத்தாவை பார்த்து நடந்த அனைத்தையும் கூறினான் ஆதி.

“ஆதித்யா வரும் வெள்ளிக்கிழமை வள்ளியம்மாவ ஊருக்கு கூட்டிட்டு வா. அவளுக்கு நேரம் வந்திடுச்சு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சொல்லியது போல வியாழன் இரவு வள்ளியம்மா இறந்து போனார். அவரின் இறுதி சடங்குகள் ஊரில் முறைப்படி நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்த காரியம் முடித்தான்.


மூன்றாம் நாள் அவர்கள் கிளம்பும் முன் பொன்னாத்தா ஊர் மக்களை வர சொன்னாள். “அடுத்த மாசம் இன்னைக்கு தேதி நானும் இருக்க மாட்டேன். என்னோட கடமை முடிஞ்சு போச்சு. என்னைய இந்த வீட்டுல வச்சே புதைச்சிடுங்க. இவன் இந்த கோவில் குடிபாடுக்காரன். இவன தடுத்துறாதீங்க. குலதெய்வத்த பாக்க விடாம இந்த ஊரு ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும்.” என்று சொன்னார்.



“ஆதித்யா தீட்டு முடிஞ்ச அப்புறம் மகாகாளிக்கு கூரை கட்டு. தெய்வானைக்கு மறைப்பு வை. அதே மாதிரி அவ பக்கத்துல கன்னிமார் வச்சிடு. இந்த ஊருக்கு அந்த கோவிலயும் காட்டு. இந்த ஊருல புள்ள வரம் வேணும்ங்கறவங்க தெய்வானைய பாத்துட்டு வரட்டும்.” என்றார். ஊரார் கலைந்து செல்ல ஆதியை மட்டும் வீட்டுக்குள் அழைத்து சென்றார். சில விசயங்களை அவனுக்கு சொல்லிவிட்டு அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன தேதிக்கு முதல் நாளே ஆதியின் குடும்பம் அங்கு சென்று சேர்ந்தது. உறவு இல்லை என்றாலும் ராகேஷூம் செல்வாவும் பொன்னாத்தாவை காண சென்றார்கள்.

மறுநாள் காலை சூரியன் உதிக்கும் போது சென்று வணங்கிவிட்டு வந்தவர், “தாயே உக்கிரவீரமாத்தி உன்னோட உத்தரவுப்படி எல்லாம் பண்ணிட்டேன். என்னைய நீயே வந்து கூட்டிட்டு போ.” என்று சொல்லி கண்கள் மூடி படுத்தார். சில நிமிடங்களில் அவர் வாய் திறந்தது. அப்படியே அவரின் உயிர் உடலைவிட்டு பிரிந்தது.

எட்டு தலைமுறைகளை கண்ணால் பார்த்த பொன்னாத்தா இன்று கண்ணை மொத்தமாய் மூடி மண்ணுள் புதைக்கப்பட்டார். காரியங்கள் செய்துவிட்டு சென்னை நோக்கி வந்தார்கள். ஒரே வருடத்தில் வம்சத்தின் சிறிய உயிரையும் பெரிய உயிரையும் பறிகொடுத்தான் அந்த ஆதித்யன்.

தொடரும்...
 
Top