கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 3


அத்தியாயம் 3

கிட்டத்தட்ட 200அடி உயரத்தில் இருந்து சீறிப்பாய்ந்து கீழே விழும் நீரில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

"செல்வா என் கைய இறுக்கி பிடிச்சுக்கோடா. பாற வழுக்குது. தண்ணி வேற சுளீர் சுளீர்னு விழுதுடா" சாரா அவனை பிடித்துக் கொண்டாள்.

"செல்லம் உன்னைய கீழே விட்டுருவேனா? உன்னைய கீழ விழ விடமாட்டேன்டி எப்போதும்"

"டேய் உசிதமணி! உங்கள கூட்டிட்டு வந்தது தப்பு தான். இந்த சத்தத்திலும் எப்படிடா ரொமான்ஸ் பண்ண வருது. அங்கொருத்தன் சித்தர் குகை வேற எங்க இருக்குன்னு கேட்கறான். எல்லாம் விதிடா" யாசிகா கத்தினாள்.


இவர்கள் செல்வதற்கு முன் சிலர் மட்டுமே அங்கு‌ இருந்தார்கள். நேரம் செல்ல மற்றவர்கள் அனைவரும் கிளம்பி செல்ல இவர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள் அந்த பள்ளத்தாக்கு பாறைகளுக்கு இடையில்.


சீறி பாய்ந்து வந்த நீரோ மெல்ல மெல்ல தன் ஆளுமையை நிலைநிறுத்த காடுகளில் பெய்த மழை நீரை தன்னோடு இணைக்க ஆரம்பித்தது.

"ஆதி கிளம்பலாமா?"

"கொஞ்ச நேரம் குளிக்கலாம் யாசி. மறுபடியும் இங்க எப்ப வருவோம்னு தெரியாதுல. ரொம்ப நல்லா இருக்கு. மனசுக்கு இதமாவும் இருக்கு" சத்தமாக கத்தினான்.


"மச்சி தண்ணி முன்னவிட நிறைய விழுது. சுளீர்ங்குது... வலி தாங்கல. போலாம்டா..."

சாரா, "செல்வா போலாம். முடியல..." என்றாள்

"நீங்க போங்க. நான் இன்னும் கொஞ்சம் நேரம் குளிச்சுட்டு வரேன். மனசு அமைதியா இருக்கு" என்றதும் மற்ற மூவரும் அங்கிருந்து நகர்ந்து மேட்டு பகுதிக்கு வந்தார்கள்.

சட்டென்று தண்ணீர் வேகம் சீறி பாய்ந்து மொத்தமாக விழ, நிலை குலைந்து விழுந்தவன் தண்ணீரின் ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்டான்...

"ஆதி..."

"மச்சான்..."

"ஆதி... ஆதி..."

முவரும் அதிர்ச்சியில் கத்திக்கொண்டே அவன் சென்ற திசை நோக்கி சென்றனர். நீரின் ஓட்டத்தை பார்க்கும் போது அவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு வேகம்.

வெள்ள நீர் இவர்களின் அருகே வர பின்னால் நகர்ந்தவர்கள், கண்ணீருடன் அங்கேயே இருந்தார்கள்.

"நம்ம கூட அவன் வந்திருந்தா இப்படி ஆகிருக்காது. இனி அவன் அம்மாக்கு எப்படி நாம பதில் சொல்வோம்" அழுதபடி செல்வா சொல்ல, பேச முடியாமல் அழுதுகொண்டே இருந்தார்கள்.

ஒரு மணி நேரம் தன் ஆளுமையை அங்கே செலுத்திய வெள்ள நீர் குறைந்து அடுத்த ஐம்பது நிமிடத்தில் சராசரி அன்னை ஆகாய கங்கையாய் வருபவர்களை ஏற்க தயாரானாள்.

ஆனால் யாசிகா, செல்வா, சாராவின் கண்களில் இருந்து வந்த வெள்ள நீர் மட்டும் குறையவில்லை.

"டேய்.... செல்வா.... யாசி....." தண்ணீரின் சத்தத்தை தாண்டி கேட்டது அந்த குரல் தூரத்தில்.

குரல் வந்த திசையை நோக்கி, "ஹேய் அது நம்ம ஆதி குரல்" என்று பாறையின் மீது குதித்து தாவி ஓடிச்சென்றான் தண்ணீர் பாயும் திசையில்.


அங்கே வேரை இறுக்க பிடித்து கட்டிக் கொண்டு பல செடிகளும் கொடிகளும் சூழ சோர்ந்து போய் இருந்த ஆதியை கண்டவுடன் மூவரின் கண்களிலும் நிம்மதியை காண முடிந்தது. பெருமூச்சுடன் அருகே சென்று அவனை‌ எழுப்பினார்கள்.

"மச்சான் ஒன்னும் இல்லடா. நீ நல்லா இருக்க. எதுவும் ஆகல" தோள்களை பற்றி தூக்கி மேலே கொண்டு வந்தார்கள்.

"ஒரு நிமிஷம் உசுரே போச்சுடா. நாங்க கூப்டும் போதே வந்திருக்கலாம்ல எரும. போடா..." கண்ணீர் சிந்தினாள் யாசிகா,

"எங்காவது அடி பட்டுருக்கா. காயம் எதாவது இருக்கா?" கேட்டுக்கொண்டே சோதனைகள் செய்ய ஆரம்பித்தாள்.

ஆதி, "ஒன்னும் இல்ல. நல்ல வேளையா‌ ஒரு மரத்தோட வேரை புடிச்சுட்டேன். நீங்க எப்படி இருக்கீங்கனு தான் எனக்கு பயமா இருந்திச்சு. ரொம்ப நேரமா கத்தி பாத்தேன்"

"எங்களுக்கு இப்ப தான் கேட்டுச்சு. சத்தம் கேட்கவும் ஓடி வந்துட்டோம். இந்தா தண்ணி குடி" செல்வா பாட்டிலை அவன் வாயில் திணிக்க, பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

ஒற்றை நிமிடம் கண்ணை மூடியவாறு சிந்தித்தான். "ஆதித்யா அவன் பேச்சை கேட்டு நீ தண்ணீரில் இறங்கியதால் வந்த பேராபத்தை பார்த்தாயா? இனிமேல் அவன் பேச்சை கேட்காதே. அவன் உனது சத்ரு. நானே உன்னை தகுந்த நேரத்தில் காப்பாற்றினேன்" அந்த பெண்ணின் குரல் அவன் தத்தளித்த போது கூறியது மனதில் ஓடியது.

அவன் கண் விழித்த போது எதிரே சடைமுடியோடு கையில் குச்சியும் ஒரு குடுவையும் கொண்ட ஒருவர் நின்றார். அவர் உடல் முழுவதும் விபூதி பூசி இருந்தது. முகத்திலும் அங்கங்கே உடலில் மஞ்சளும் குங்குமமும் சிதறி கிடந்தது.


அவர்களின் அருகில் குச்சியையும் குடுவையும் வைத்துவிட்டு நீரில் இறங்கி பின்னி கிடந்த தனது முடியினை அலசினார். அவரை பார்த்து ஆதிக்கு ஏனோ ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது.



தலை முடியை விரித்த படி கொட்டும் நீரை பார்த்து ஏதோ சொல்லி முனுமுனுத்தவர்‌ இரண்டு கைகளிலும் நீரை எடுத்து மூன்று முறை வீசினார்.

நீரினுள் மூழ்கி கல்லை எடுத்து அருவியின் மீது எறிந்தார். அந்த கல் பாறையில் பட்டு தெறித்து உருண்டு மீண்டும் அவர் காலடியில் வந்து விழுந்தது.

அவரின் செய்கை செல்வாவிற்கும் யாசிகாவிற்கும் பைத்தியக்காரதனமாய் தெரிந்தாலும் சாராவுக்கு ஏதோ மனதில் உணர்த்தியது. ஆதி அவரை வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பதையும் அவர்கள் கவனிக்க தவறவில்லை.

"டேய் ஆதி... கிளம்பலாமா..."

"பொறு மச்சி. அந்த சாமியார பாத்தா எனக்கு ஏதோ தோணுது"

"ஆதி... அந்தாளு சாமியார் எல்லாம் கிடையாது. நல்லா பாரு. சாமியார் வேஷம் போட்டு பிச்சை எடுத்துட்டு திரிகிறான். இதோ திருவோடு கூட இருக்கு" என்றான் செல்வா.

"இல்ல செல்வா... என் மனசு ஏதோ சொல்லுது... கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாமே... ப்ளீஸ்டா" என்ற ஆதியிடம்,

"ஏற்கனவே நீ வெயிட் பண்ணச் சொல்லி நடந்த விபரீதம் போதாதா? ஒழுங்கா எந்திரிச்சு கிளம்புடா... 1200 படி ஏறனும்... ஏற்கனவே நேரம் போயிட்டு இருக்கு.." என்றாள் யாசிகா.

ஆதிக்கு வேறுவழி தெரியவில்லை. ஏனென்றால் நடந்த சம்பவம் அப்படி. அவன் எழுந்து நடக்க முயற்சிக்கும் போது காலில் அடிபட்டது அப்போதுதான் வலிக்க ஆரம்பித்தது.

முதுகிலும் தோள்பட்டையிலும் காலிலும் பாறைகளில் மோதி சிவந்த இடங்கள் கண்ணி போய் இருந்தது.

பற்களை இறுக பிடித்துக்கொண்டு செல்வாவும் யாசிகாவும் ஆதியை கை தாங்களாக பிடித்து மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

சில தூரம் நடை, பிறகு சிறிது நேரம் ஓய்வு என்று நடக்க ஆரம்பித்தார்கள். அவ்வளவு செங்குத்தான படிகளில் உடல் நன்றாக இருந்தாலே நடக்க முடியாது. அதிகமாக மூச்சு வாங்கும்.

தற்போது சூழ்நிலை ஆதிக்கு கஷ்டமான நேரம் என்பதால் மிகவும் சிரமப்பட்டான். ரக்கர் குகை என்று எழுதி இருந்த பாறையின் கீழ் வந்தவுடன் அமர்ந்தார்கள்.

"இது என்னடா? ரக்கர் குகைன்னு எழுதி இருக்கு. கீழ வேற விபூதி கொட்டி வச்சு இருக்காங்க" என்று சாரா கேட்டாள்.

"அது ரக்கர் அல்ல கோரக்கர்... கோரக்கர் குகை" ஒலி வந்த திசையை நோக்கி நால்வரும் பார்க்க அதே விபூதி பூசிய உடலோடும், சந்தனம் குங்குமம் பூசிய முகத்தோடும் வந்து நின்றார் அந்த சாமியார்.


"நீ தேடி வந்த எதுக்குமே இங்கு பதில் கிடைக்காது. ஆனால் பதிலுக்கு உனக்கு தேவையான பல விசயங்களை இங்கு நீ அறிந்து கொள்வாய். குழப்பத்தோடு வந்த நீ குழப்பத்தோடு செல்வாய். கேள்வி அனைத்திற்கும் பதில் விரைவில் கிடைக்கும்." என்றார் ஆதியை பார்த்து.


செல்வாவை பார்த்தவர், "நான் பிச்சைக்காரன் தான். திருவோடு உண்டு தான். நான் சாமியார் இல்லை. இந்த உடல் விட்டு பிரியும் உயிரை தேடி செல்லும் பைத்தியம் நான். சரம் கொண்டு சிரம் திறக்க பார்க்கும் தற்குறி நான். தனஞ்செயனை தலையோடு அடைக்க நினைக்கும் முட்டாள் நான்." என்றார்.

அவனோ அவர் சொன்ன எதற்கும் அர்த்தம் தெரியாமல் மீண்டும் அவரை பைத்தியக்காரன் என்றே நினைத்தான்.

"நீ செல்ல வேண்டியது மேலே அல்ல... இந்த பக்கம்" என்று தன் கையில் இருந்த தடியின் மூலம் ஒரு பகுதியை காட்டினார்.

"சாமி என்னால நிக்க கூட முடியல. அந்த பாதை ரொம்ப கரடு முரடா தெரியுது. காட்டு பகுதி வேற. எங்க யாருக்கும் இந்த மாதிரி போன அனுபவம் இல்ல" என்றான் ஆதி.

"உடல் வலி என்பதும் மன வலி என்பதும் ஒன்றல்ல. ஆனால் இணைந்த ஒன்று. வலிக்கும் அதே சொல் தான். வலிமைக்கும் அதே சொல் தான். நீ தேர்ந்தெடுப்பதில் இருக்கு உன்னோட வலி" என குழப்பும் வார்த்தைகளை உணர்த்தியவர் தன் குடுவையில் இருந்த விபூதி அள்ளி கொடுத்தார்.

"நெற்றியில் பூசி நிமிடங்கள் வாயில் வைத்து கொள். எழுந்து நட. எல்லாம் சிவன் பாத்துப்பான்" என்று சிரித்து கொண்டே மேலே வேகமாக ஏற ஆரம்பித்தார்.

"சுத்த பைத்தியக்காரன் போல... ஏதேதோ உளறிட்டு போறான். அவன் சொன்ன ஏதாவது புரியற மாதிரி இருக்கா." என்றான் செல்வா நக்கலான சிரிப்போடு.

"அவர் சொன்னது உண்மை தான். நான் ஏகப்பட்ட குழப்பத்தோடு தான் வந்திருக்கேன்டா மச்சி. அவர் சொன்ன திசையில போலாம்டா"

"எதே. நாங்கெல்லாம் இருக்கோம்டா. உன்ன மேல கூட்டிட்டு போக நாங்க கஷ்டப்பட்டா அந்த ஆளு சொன்னத கேட்டு அங்க போலாம்னு சொல்றியா?" யாசிகா கத்த ஆரம்பித்தாள்.

இவர்கள் பேசுவதை கேட்ட சாரா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அந்த பாறை அருகில் சாய்ந்து கொண்டாள்.

வாக்குவாதம் தொடங்கியது. ஆதி எவ்வளவு முயற்சித்தும் அவனால் அவர்களின் பேச்சில் தன் ஆளுமையை நிலைநிறுத்த முடியவில்லை. வேறு வழியின்றி மேலே ஏற ஆரம்பித்தார்கள்.


மூச்சு வாங்க ரொம்ப நேரம் ஏறியவர்கள் பாதி படியை கடந்து விட்டோம் என்று நினைத்து இருக்கும் வேளையில் வழியில் காத்திருந்தது பேராபத்து.


8 அடி நீளம் கொண்ட கருநாக பாம்பு படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தது. இவர்களுக்கு சிறிது தூரத்தில் எழுந்து நின்று தன் பார்வையால் அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இரண்டு மண்டலம் தனது உடலை சுற்றி இருந்த பாம்பு முன்னும் பின்னும் ஆடியபடியே தனது நாக்கை அவ்வப்போது வெளியே கொண்டு வந்தது.

"ஆதித்யா... அந்த சாமியார் சொன்னபடி கேள். அதுவே உனக்கு நல்லது... அவர் சொன்ன அனைத்தும் நன்மைக்கே" என்று அவன் காதருகில் அதே ஆண்குரல் கேட்டது.

"வேண்டாம் ஆதி... இந்த காட்டில் விச பூச்சிகள் அதிகம். மேலும் அவன் சொல்லும் பாதையில் மாய மூலிகைகள் அதிகம். அவற்றை சுவாசித்தாலே உயிருக்கு ஆபத்து. அவன் சொல்லும் எதையும் ஏற்காதே. ஏற்கனவே ஆற்றில் இறங்க செய்தவன்" அந்த பெண்ணின் குரல் இன்னொரு காதில் ஒலித்தது.

என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்த ஆதி தனது கையில் இருந்த விபூதியை நெற்றியில் பூசி கொண்டு மீதி விபூதியை வாயில் போட்டு அப்படியே சில நிமிடங்கள் இருந்தான்‌.


அவன் உடலில் இருந்த வலிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் சென்றது. எழுந்து சுற்றியும் பார்த்தான். அவனை அறியாமல் கால்கள் அந்த சாமியார் சொன்ன திசையில் பயணிக்க ஆரம்பித்தது.


"வேணாம்டா. நில்லுடா! டேய்…! டேய்…!" துரத்திக்கொண்டே பின்னால் சென்றார்கள் மூவரும். ஆனால் இழுத்தும் அவன் நிற்காமல் கால் போன பாதையில் நடக்க ஆரம்பித்தான்.


"நில் ஆதித்யா... அந்த பக்கம் பசியோடு நரிகள் நிற்கிறது. திரும்பி வடக்கு பக்கம் செல்." ஆண் குரல் கேட்கவும் நின்றான். அந்த நிமிடம் தான் தான் காட்டுப் பகுதியில் நிற்பதை உணர்ந்தான்.


மூச்சிரைக்க ஓடி வந்தவர்கள் "ஏன்டா அறிவுகெட்டவனே. நீ பாட்டுக்கு உள்ள வந்துட்ட. வழி தெரியுமா? காட்டுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியுமா?" என்றான் செல்வா.

"நான் இங்க வரவேண்டியது விதி. அதே மாதிரி இந்த காட்டுக்குள்ள இருந்து நல்லபடியா வெளியே‌ போவேன். என் கூட மாசி பெரியண்ணன் இருக்காரு." அமைதியாக பதட்டமில்லாமல் சொன்னான் ஆதி.

"பைத்தியம் ஆகிட்டியா ஆதி. வெளிச்சம் கூட கம்மியா தான் இருக்கு. இங்க இருந்து எப்படி போக முடியும். இங்க நரி காட்டுப்பன்றிலாம்‌ இருக்கு. தப்பு பண்ணிட்ட" யாசிகா சொல்ல

கண்களை மூடி திறந்தவன் சில அடிகள் முன்னேற அங்கு ஒரு காளை மாடு வந்து நின்றது. அதன் உருவமும் கூரிய கரு விழிகளும் துடிக்கின்ற திமிலும் நீண்ட கால்களும் வளைந்த கொம்பும் பயமுறுத்தியது. அவர்களை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்த மாடு பெருமூச்சு விட பயந்து போனாள் சாரா.

காளை நடக்க ஆரம்பிக்கவும், " மாடு நமக்கு வழி காட்டும். வாங்க போலாம்" என அதன் பின்னே நடந்தனர். கரடு முரடான காட்டு பாதை.

வழிகள் முழுவதும் பயம் தரும் சத்தங்கள். சூரியன் கூட பல இடங்களில் வெளிச்சம் தர தயங்கினார். ஆனால் வேறு வழியின்றி கால்கள் பயணித்தன. அவர்கள் சென்று நின்ற இடம் கோரக்கர் குகை பகுதி.

நால்வரும் அந்த குகைக்குள் சென்று விளக்கின் முன்பு சில நிமிடங்கள் அமர்ந்தனர். செல்வாவின் உடலின் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான். அவன் மூச்சு காற்று மெல்ல மெல்ல குறைந்தது. நாக்கு அசையாமல் இருந்தது. எச்சில் கூட ஊற மறுத்து உடல் நடுக்கம் கண்டது.

ஆதியோ எதுவும் உணராமல் விளக்கை மட்டும் பார்த்துக்கொண்டே‌ இருந்தான். கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

"கோரக்கரே என்னை சுற்றி என்ன நடக்கிறது? எனக்கும் கேட்கும் அந்த இரண்டு குரலும் யாருடையது. கனவுகள் எல்லாம் பயமுறுத்தி செல்கிறது. இதற்கு என்ன தான் முடிவு?"

செல்வா தன் தலையை மெல்ல மெல்ல மேல் நோக்கி உயர்த்த ஆரம்பித்தான்.

"தம்பி சீக்கிரம் வெளிய வாங்கப்பா. நாங்கெல்லாம் உள்ள போக வேண்டாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க வெளியே வந்த ஒருவர் உள்ளே வந்து செல்ஃபி எடுக்க வரச்சொன்னார்.

இவர்கள் வெளியே வந்தவுடன் நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசம் அடைய அங்கே இருந்தவர்களிடம் வழியை கேட்டு அறப்பளீஸ்வரர் கோவில் முன்பு வந்து சேர்ந்தனர்.

"ஆதி நீங்க எப்படி சடனா இப்படி மாறி போனீங்க? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே. எப்படி இந்த கோரக்கர் குகை போலாம்னு தோணுச்சு" சாரா கேட்க,

"தெரியல சாரா. தோணுச்சு. அவ்வளவு தான்..."

"அதெல்லாம் பேச வேணாம் செல்லம். அடுத்து நாம பூங்கா போலாம். மணி இப்பவே நாலு ஆச்சு. போயிட்டு அப்புறம் ரூம் போக சரியா இருக்கும்" செல்வா சொல்ல கார் வேறு வேறு இடங்களுக்கு பயணித்தது.

யாசிகா, "நாளைக்கு எங்க போறோம் ஆதி?"

"அம்மா சொன்னாங்க யாசி. மாசி பெரியண்ணன பாத்துட்டு வான்னு. அதனால நாளைக்கு அங்க போறோம். ஹோட்டல் ரிசப்ஷனில பேசி இருக்கேன். கைடு நாளைக்கு நம்மள கூட்டிட்டு போவாரு" என்றான்


"மச்சான்! எங்களுக்குத் தெரியாம இதெல்லாம் எப்படா பேசின? இங்கே ஜாலியா இருக்கலாம் தான்டா வந்தோம்? அப்புறம் ஏன்டா இப்படி?"

"அப்படி இல்ல மச்சி. நாம ஜாலியா இருக்கணும்னு நினைச்சிருந்தா ஏற்காடு ஊட்டி கொடைக்கானல் இல்லனா ஆந்திரா கர்நாடகா பக்கம் போயிருக்கலாம். கொல்லிமலை அப்படி ஒன்னும் சுத்தி பார்க்கக்கூடிய ஏரியா இல்லை"


"இந்த ஏரியாவை பற்றி படிக்கும் போது அமானுஷ்யம் நிறைந்ததா தான் சொல்றாங்க. எதுக்காக இந்த ஏரியாவை பார்க்க வந்தோம்னு புரியல. ஆனா எனக்கு தேவையான பல விஷயம் இங்க கிடைக்கும்னு மட்டும் தோணுது" காரை ஓட்டியபடியே சொன்னான்.

சூரியன் தன் அதிகாரத்தை இழந்து சந்திரனுக்கு வழி கொடுத்து கொண்டிருந்தார். மாலை 6 மணிக்கு ரூம் வந்து சேர்ந்தார்கள். யாசிகாவும் சாராவும் ஒரு அறையில் தங்கி கொள்ள, ஆதி இருள் சூழ்ந்த பகுதியில் தெரியும் வெளிச்சத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.


"ஆதி ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"

"சொல்லு மச்சி"

"எப்போ இருந்து உனக்கு கடவுள் நம்பிக்கை வர ஆரம்பிச்சது?"

"ஆத்துல அடிச்சுட்டு போய் அந்த வேர்ல மாட்டுன நொடியில இருந்து ஆரம்பிச்சது. அந்த நேரத்தில எனக்கு கிடைச்ச, நான் பார்த்த விசயங்கள் மூலமா தான் நம்பிக்கை வந்துச்சு"

"அப்புறம் எப்படி காலையிலயே கைடு ரெடி பண்ணுன. குகைக்கு போகனும்னு சொன்ன?"

"அதான் எனக்கும் தெரியல மச்சி. ஆனா இதெல்லாம் ஏன்னு காரணம் அப்புறம் சொல்றேன்" என்றான்.

ஏற்கனவே நடந்த சம்பவங்களும் நீண்ட தூர பயணமும் அவர்களை நித்திரைக்கு அழைத்து சென்றது.

இரவு நேரம் 12 தாண்டி இருந்த தருணம், "ஆதி நாளைக்கு மாசி கோவிலுக்கு போகாதே. உனக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சும். அங்கே கொல்லிபாவை உன்னை கொல்ல காத்திருக்கிறது" என்று கனவில் பெண் ஒருவர் சொல்ல திடுக்கிட்டு எழுந்தான்.

"யார் நீங்க ரெண்டு பேரும்? எதுக்கு என் பின்னாடி வர்றீங்க. உங்களுக்கு என்ன வேணும். சொல்லுங்க?" என்று கத்தினான்.

செல்வா, "ஆதித்யா அவர்களுக்கு தேவை நீ மட்டும். உன் உயிர் மட்டும். காரணங்கள் தெரியும் வரை அமைதியாய் இரு." என தூக்கத்தில் உளறிவிட்டு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு புரண்டு படுத்தான்.

தூக்கம் தொலைத்த ஆதியின் கண்கள் நான்கு மணிக்கு மூடிவிட காலையில் இளம் சூரியன் எழுப்பிவிட்டான்.

குளித்து கிளம்பி வெளியே வரவும் கைடு வரவும் சரியாக இருந்தது.

காரில் ஏறி பூந்தோட்டம் பகுதியை அடைந்தார்கள். "தம்பி இதுக்கு மேல வழி இல்ல. நடந்து தான் போகனும். போற வழி கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இறங்குங்க." என்றான்.

அவர்கள் இறங்கிய பின்னர் அங்கிருந்த குளுமையும் காற்றும் இதமாக இருந்தது. ஆதிக்கு மட்டும் தனக்கு ஏதோ ஒரு ஆபத்து காத்திருப்பதாக உணர்ந்தான். ஆனால் அது அவன் எதிர்பார்த்ததை விட பெரியது என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

தொடரும்...
 
Top