கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 6

அத்தியாயம் 6

"அம்மா என்ன சொல்ற? இப்பவே வந்திருச்சான்னா? இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டான்.

"இதே மாதிரி உங்க அப்பாவுக்கும் வந்திருக்கு. அப்போ உன் அப்பா ரொம்ப சிரமப்பட்டாரு. டெய்லியும் தூங்கவே மாட்டாரு" தன் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார் வித்யா.


"நானும் உன் அப்பாவும் லவ் மேரேஜ் தான் பண்ணினோம். நான் அவருக்கு தாய்மாமா பொண்ணுதான். ஆனாலும் கல்யாணத்துக்கு யாரும் ஒத்துக்கல. ஓடிப்போய் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்."

அம்மா அப்பா காதல் கல்யாணம் என்பதே ஆதிக்கு இப்போதுதான் தெரியும். இன்று அவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது.

"அப்புறம் இரண்டு வீட்டுக்கும் தெரிஞ்சது. அவரையும் அடிச்சாங்க. என் தாலியை கூட அத்து எறிஞ்சாங்க. பதினைந்து நாள் கழிச்சு மீண்டும் நாங்க மறுபடியும் கிளம்பி சென்னை வந்துட்டோம்."

"மறுபடியும் எங்கள தேடினாங்களாம். நானும் அப்பாவும் இதே வீட்டில தான் வாழ ஆரம்பிச்சோம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தோம். முதல்முறையா என் வயித்துல கரு உண்டாச்சு" என்றார் வித்யா.

செல்வாவும் ராகேஷூம் கண் சிமிட்டாமல் அமர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர் சொல்லும் போது கடிகாரம் முள் நகரும் சத்தம் கேட்டது. அந்த அளவிற்கு அமைதி இருந்தது.


"அப்போலாம் அவரு என்னைய ரொம்ப பத்திரமா பாத்துப்பாரு. எங்களுக்குள்ள காதல் அவ்வளவு அழகா இருக்கும். சின்ன வேலை கூட செய்ய விடமாட்டார்"

"நாலு மாசம் இருக்கும். ஒரு நாள் அவரு நைட் தூங்கும் போது எந்திரிச்சு உட்கார்ந்திருந்தார். எனக்கு முழிப்பு தட்ட என்னன்னு கேட்டேன். தண்ணி குடிக்க போறேன்னு சொல்லிட்டு வந்தார்"


"இந்த மாதிரி அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார். அவரோட செயல்பாடுல மாற்றம் தெரிஞ்சது. ஆனா குழந்தை பத்தி யோசனைன்னு நான் விட்டுட்டேன்"

"அவருக்கு அந்த நேரத்தில வேலையும் கஷ்டமா இருந்திச்சு. எட்டு மாசம்... ஒருநாள் எனக்கு இடுப்பு வலி வந்துச்சு"


"உன் அப்பா துடிச்சு போயிட்டார். தனியாவே தூக்கிட்டு போனார். அப்போ எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துச்சு"


"அது ஆதி தானேம்மா. ஆதி பொறந்தானு சொல்லலாமே" என்று செல்வா கேட்க,

"இல்ல செல்வா. அது ஆதியோட அண்ணன்".. இது அனைவருக்குமே பேரதிர்ச்சி கொடுத்தது.

"அந்த குழந்தை பிறந்த ஆறு மணி நேரத்தில இறந்துடுச்சு. அந்த வலிய சொல்ல வார்த்தைகளே இல்ல" என கண்ணில் நீர் வடிய கூறினார்.

"ஏற்கனவே உன் அப்பா சரி இல்லாம இருந்தாரு. அவன் இழப்பு எங்களுக்கு ரொம்பவே கஷ்டத்த கொடுத்துச்சு. அந்த குழந்தைக்காக அவ்வளவு ஏங்கினாரு அவரு"


"கொஞ்ச நாள் கழிச்சு ரொம்ப மாற்றம் வந்துச்சு. கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சாரு. ஒருநாள் சைக்கார்டிஸ்ட் கிட்ட போனோம். அப்போ தான் எல்லா உண்மையும் புரிஞ்சது" என்றார் ராகேஷை பார்த்து.


"அதுக்கு அடுத்து நிறைய மாத்திரை. நிறைய பரிகாரம், கோவில்னு போனோம். எந்த முன்னேற்றமும் இல்ல. அடிக்கடி புலம்புவார். ஒருநாள் இதே மாதிரி என்னோட மடியில தலை வச்சு எல்லாத்தையும் சொன்னார்"


"ஒருநாள் பட்டினத்தார் கோவிலுக்கு போனோம். அந்த இருந்த ஒருத்தர் ஒரு சாமியார போய் பாக்க சொன்னாங்க. அவர போய் பாத்தோம்" என்றார் வித்யா.

ராகேஷ் செல்வா ஆதி மூவருமே சீட்டின் நுனி பகுதிக்கு வந்திருந்தார்கள்.

வித்யா," அந்த சாமியார் சோலி உருட்டி பாத்துட்டு உன்னோட குலதெய்வம் பேசாம இருக்கு. உன்னைய கூப்டுது.. பெண் சாபம் ஒன்னும் இருக்கு... சீக்கிரம் போய் பாரு. உனக்கு நல்லதுன்னு சொன்னாரு"

"கோவிலுக்கு போன அப்புறம் அப்பாவுக்கு சரியாச்சாமா? என்ன நடந்துச்சுமா" என்று பேராவலுடன் கேட்க


"ஊருக்கு போனோம். ஆனா எங்கள எல்லைக்குள்ளயே விடல. எங்கள பார்த்த உடனே சொந்தக்காரங்க அடிக்க வந்தாங்க ஆதி. வேற வழி இல்லாம நானும் அப்பாவும் திரும்பி வந்துட்டோம். ஆனா அந்த மண்ண மிதிச்ச உடனே அப்பாவுக்கு சரி ஆகிடுச்சு" என்றார்.


"அம்மா.... அதுக்கு அப்புறம் அவருக்கு அந்த மாதிரி கனவு எதுவும் வரலையா?"

"ரெண்டு வருஷம் வரவே இல்ல. மறுபடியும் நான் அம்மா ஆனேன். நீ வயித்துல வந்த அப்புறம் மறுபடியும் வந்துச்சு. நீயாவது எங்களுக்கு நிலைக்கனும்னு உன் அப்பா ஏகப்பட்ட கோவில் போனாரு"

"எத்தனை வேண்டுதல் தெரியுமா? ஒவ்வொரு நாளும் ரெண்டு பேருக்குமே நரகமா போச்சு. அந்த டைம்ல நீ சொல்ற மாதிரி கனவு வந்துச்சு. ஆனா கடவுள் புண்ணியத்தில நீ நல்லபடியா பொறந்த. உனக்காக அப்பா நிறைய கஷ்டப்பட்டாருடா" என்று அழுதாள்.


"அம்மா... அப்பா எப்படி இறந்தாரு?" செல்வா கேள்வியில் திடுக்கிட்டார் வித்யா.

"ஹார்ட் அட்டாக் மச்சி" என்றான் ஆதி வேகமாக.


"இல்ல ஆதி... அப்பாக்கு ஹார்ட் அட்டாக் இல்ல. அவரு என்னைய கூப்டு, நம்ம மகன குலதெய்வம் கோவிலுக்கு கூட்டிட்டு போ. இன்னைக்கு நைட் தான் எனக்கு கடைசின்னு சொன்னாரு"

"நான் திட்டிட்டு போனேன். ஆனா சொன்ன மாதிரி நைட் 1 மணிக்கு எந்திரிச்சு கிழக்க பாத்து நின்னாரு. நானும் எந்திரிச்சு அவர உலுக்கினேன். ஆனா எதுவும் பேசல அவரு" கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்துச்சு"

"என்னைய மன்னிச்சிடு. இனி என் மகனை விட்டுருன்னு சொல்லி கையெடுத்து கும்பிட்டாரு. அப்படியே முன்னாடி விழு... விழுந்... விழுந்து...." என்று சொல்லும் போதே மயங்கி விழுந்தார் வித்யா.


"அம்மா.... அம்மா... ம்மா..." கத்திக்கொண்டே அவரின் கன்னத்தை ஆதி தட்டவும்,

"ஆதி... அவங்க எமோஷனல் ஆகிட்டாங்க. மத்தபடி எதுவுமில்ல. நீ பயப்படாம இரு.." ராகேஷ் சொல்லும்போதே அங்கு தண்ணீரோடு வந்தான் செல்வா.


தண்ணீர் தெளித்துவுடன் எழுந்த வித்யா சுய நினைவுக்கு வர சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

"அம்மா..."


"ஆதி..." என்று அணைத்தவளின் கண்ணீரில் தெரிந்தது அத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்த சோகங்கள்.


ராகேஷ், "அம்மா... மிச்சம் இருக்கிற சோகத்தையும் ஆதிகிட்ட சொல்லி அழுதிடுங்க. இனியும் தேக்கி வைக்காதீங்க" என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.


தன்னுள் தேக்கி வைத்திருந்த பலநாள் சோகங்களில் பலவற்றை தன் மகனிடம் சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டார் வித்யா.

மறுநாள் காலை சூரியன் உதிக்கும் முன்பே அந்த ஆணின் குரல் அவனை எழுப்பியது.

"ஆதித்யா உனக்கு தேவையான விசயம் உன் தாயிடம் உள்ளது. சிந்தித்து பார்த்து அறிந்து கொள்" என்பதே அவன் விழிப்பிற்கு காரணம்.



ஆழ்ந்த யோசனையில் இருந்தவனை பார்த்த வித்யா, "அம்மா அந்த சாமியார போய் பாக்கலாமா?" என்று கேட்டான்.


"எந்த சாமியார்டா?"

"நீ சொன்னியே அப்பாவ நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போக சொன்னாருன்னு. அவர போய் பாக்கலாமா?"

சிறிது நேரம் யோசித்தவள், "ஞாயித்து கிழமை போலாம். நீ ஆஃபிஸ் போயிட்டு வா" என்று சொல்லிவிட்டு எப்போதும் போல அலுவலகம் சென்றாள்.

"என்ன ஆதி சார்... எங்கள ஞாபகம் இருக்கா? நாலு நாளா எங்க போனீங்க?" யாசிகா கேட்க,

"ஒரு பெர்சனல் வொர்க். அதான் வெளிய போயிருந்தேன். அப்புறம் முக்கியமா உன்னோட தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தேன்" ஆதி சொன்னதும் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


அந்த வார நாட்களில் அவனுக்கு அந்த ஆண் பெண் குரல்களும் மாறி மாறி சிந்தனையினை திருப்பிவிட்டன. அவனுக்கு அதிகம் தோன்றிய விசயம், "கிழக்கு பார்த்து நின்னு கையெடுத்து கும்பிட்டாரு" என்ற சொல் தான்.

'அப்படி யார் இருந்திருப்பார்கள் கிழக்கு பக்கம்? ஏன் அப்படி கும்பிட்டு முன்னோக்கி விழ வேண்டும்? இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?' என்று யோசித்தலில் நாட்களை கழித்தான்.


அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம், "ஆதித்யா அந்த சாமியாரை பார்க்க செல்லாதே. உன் ஊருக்கு செல்ல சொல்வான். அங்கு உன் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது. பழி வெறி கொண்ட உடல்கள் அங்கு நிறைந்திருக்கிறது" என்றது அந்த பெண்ணின் குரல்.

"ஆதித்யா உனக்கு சரியான பாதையை காட்டுவார் அவர். நீ சொந்த ஊர் செல்ல வேண்டியது அவசியம். நீ ஆழ்மனதை மட்டும் நம்பு" என்றது ஆணின் குரல்.


"ஆகாய கங்கையில் நீருக்குள் இறங்க வைத்து ஆபத்தில் சிக்க வைத்தவன் அவன். அவன் பேச்சை கேட்காதே ஆதித்யா" அந்த பெண்ணின் குரல் கேட்டு மறைந்த மறுகணமே,

"உன்னை காக்க வேண்டியது என் கடமை ஆதித்யா. நீ எழுந்து விரைந்து செல்" என்று கேட்டது அந்த ஆணின் குரல்.

திடுக்கிட்டு எழுந்தவன் வித்யாவை எழுப்பினான். "அம்மா கொஞ்சம் நேரமே கிளம்பலாமே" என்றான்.

செல்வா ராகேஷ் ஆதி வித்யா நால்வரும் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகில் உள்ள காஞ்சனகிரி மலையை‌ நோக்கி பயணம் செய்தார்கள்.

அந்த மலைப்பகுதிக்கு அருகில் தான் அவரின் குடிசை இருந்தது அன்று. பெயரை வைத்து கொண்டு தேடினார்கள். மதியம் 3மணிக்கு மேல் அவர் இருக்கும் பற்றி அறிந்து அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றார்கள்.


சிறிய குடிசை தான் இப்போதும். ஒரு வெள்ளை துணியின் மீது காவி துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கழுத்தில் ருத்ராட்ச மாலைகளுடன் கண்கள் மூடி அமர்ந்திருந்தார் அவர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கண்களை திறந்து பார்த்தவரை வணங்கினார்கள். "சாமி என் பேரு வித்யா. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி உங்கள வந்து பார்த்தேன்" என்றார்.

சில நொடிகள் அவரை உற்று பார்த்தவர், "ஏன்மா இன்னும் நீ குல தெய்வம் கோவிலுக்கு போகலயா?" என்று கேட்டார்.


அவர் கேட்டதும் பிரம்மித்து போய் நின்றாள் வித்யா. இத்தனை வருடங்கள் கழித்து தன் முகத்தை பார்த்து எப்படி அன்று சொன்ன அதே விசயத்தை சொன்னார் என்று வியந்து பார்த்தார். அதே நேரத்தில் ஆதியின் மனதில் இவரால் தனக்கு நன்மை ஏற்படும் என்ற எண்ணம் பரவ ஆரம்பித்தது.


"போனோம் சாமி. ஆனா ஊருக்குள்ள எங்கள விடல" என்றார்.


"ஹாஹா...ஹாஹாஹாஹா...." சத்தமாக சிரித்தார்.

"ராக்கி அம்மா அப்படி என்ன காமெடி சொல்லிட்டாங்கனு இந்த ஆளு இப்படி சிரிக்கிறார்" மெல்லிய குரலில் சொன்னான்.

"சாமியார்ன்னா அப்படி தான் செல்வா. புரியாத மாதிரி நடந்துக்கனும். அப்போ தான் காசு பாக்க முடியும்" என்றான் ராகேஷ் பதிலாக...

"உன் குல தெய்வம் ரொம்ப ஏங்கிட்டு இருக்கு. உன் மகனும் இப்ப ஆபத்தில தான் இருக்கான். நீ வந்த நேரம் சரியா தான் இருக்கு" அவனை பார்த்துக்கொண்டே சொன்னார்.


"சாமி கிட்டத்தட்ட 35 வருசம் கழிச்சு அந்த ஊருக்கு போகனுமா? என் மகனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது"


"உனக்காக நிறைய பேரு அங்க காத்துகிட்டு இருக்காங்க. நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. உன் குலதெய்வ கோயிலில உனக்கு தேவையான பல விஷயங்கள் கிடைக்கும்" என்றதும் பேயடித்தாற்போல் இருந்தான் ஆதி.

வித்யா, "சாமி அவனுக்கு ஏதாவது ஆகிடுமா? ஏற்கனவே அவன் தாத்தா செத்த அப்போ கூட வந்தா கொலை விழும்னு மிரட்டினாங்க. ஒத்த புள்ள சாமி... வேற ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க"

"அத்தனைக்கும் அமைதியாய் கைகாட்டி பார்க்க சொல்லி உத்தரவு. நீயும் கைகட்டி இரு. அவன் ஒத்த புள்ள தான். அதான் இப்படி கஷ்டப்படுறான்" என்றார் யாருக்கும் புரியாதவாரு...

"யார் எனக்காக காத்திருக்காங்க? என் கனவுல வர்றது யாரு? என் உயிருக்கு அங்க ஆபத்துன்னு அம்மா சொல்றாங்க. என்ன நடக்கும்னு சொல்லுங்க" ஆதி கேட்க,

"ஆபத்துல இருக்கிற உனக்கு பேராபத்து காத்திருக்கு. கால சக்கரம் ரொம்ப அதிகமா சுத்திருக்கு. காலம் முடியறதுக்குள்ள கனவ திருத்தனும்... ஆனா அவ்வளவு சுலபம் இல்ல" என்றார்.

"சாமி புரியற மாதிரி சொல்லுங்க. என்ன பத்தி எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. என் கனவுல வர்ற பொண்ணு யாரு? எனக்கு கேட்குற அந்த ஆண் யாரு? யாரா நான் நம்பறது? சொல்லுங்க" என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டான்.

மீண்டும் பெரிய சத்தத்துடன் சிரித்தார் அந்த சாமியார்.

"ஆதித்யனே. இறந்து போன இறந்த காலம் இறுதியிலே இருந்திடுமே. இட்ட சொல்லும் வட்டமென கட்டிக்கொண்டு வந்திடுமே. மோகம் முள்ளில் கீறி சென்ற பூவும் கூட வாடவில்லை. கண்மூடி காத்திருந்தால் கனவுகளும் மாறவில்லை. நடுஜாமம் சூரியனை உதிக்க சொல்லி கேட்காதே. உயிர் போகும் நேரத்தில் உதிர்த்தவனை மறக்காதே." என்று அவர் பதிலை பாடலாக முடிக்கவும் கண் சிமிட்டாமல் எதுவும் புரியாமல் அவரை மட்டுமே பார்த்தார்கள்.



"செல். தேடி செல். தேடுதல் வேட்டையில் தேடல் துணை தேடி வரும். தேதிகள் கூட மாறி வரும். திங்கள் மறந்து திதிகள் மறந்து திசையும் மறந்து திரி. தீர்ப்பு நாளில் திவ்யம் கிடைக்கும். இப்போது எழுந்து செல் ஆதித்யா!" என்று சொல்லிவிட்டு தன் உடலை திருப்பி தியானத்தில் ஆழ்ந்தார் அந்த சாமியார்.


"சாமி!சாமி!" என்று வித்யா அழைத்து பார்த்தும் பயனின்றி போனது. ஆதியோ எதுவும் புரியாமல் அவரை மட்டும் பார்த்து கொண்டே இருந்தான்.


"டேய் ஆதி எவ்வளவு நேரம் பாத்தாலும் அந்த சாமியார் திரும்ப மாட்டார். கட்டாயம் இனி பேசமாட்டார்." ராகேஷ் சொல்ல,

"எப்படி சொல்ற ராகேஷ்?" செல்வா வினாவினான்.

"செல்வா இவன் திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருந்தான். என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. புரியாத மாதிரி பேசிட்டு திரும்பிட்டாரு. பணத்தை வச்சுட்டு வாடா போலாம்." என்றான்.

"ராகேஷ் இப்படிலாம் பேசக்கூடாது. அவர் சொன்ன விசயத்தை எல்லாம் கேட்ட தானே. ஆதி நீ தட்சணை வச்சுட்டு வா." என்ற வித்யாவின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இரண்டாயிரம் ரூபாயை எடுத்து வைத்தான்.


"இருபது நிமிஷம் கூட பேசல. ஆனா ரெண்டாயிரம் காசு. வாழ்ந்தா இப்படி வாழனும் மச்சி. வா போலாம்." என்றதும் லேசாக காற்று அந்த அறைக்குள் பரவ ஆரம்பித்தது.


சட்டென்று வேகமாக வீசிய காற்று மற்றவர் மீது படாமல் பணத்தை மட்டும் தூக்கி சென்று அங்கிருந்த விளக்கில் பட்டு எரித்தது.


"காசும் காமமும் கல்லறை வரை தொடரும். ஆனால் கல்லறைக்குள் அதற்கு வேலை இல்லை என்பதை உணர்ந்து கொள்." என்று குரல் மட்டும் கொடுத்தார்.


" போலாம். இனியும் வேண்டாத பேச்சுக்கள் வேணாம். வாங்க." கண்டித்து கொண்டு வெளியே நடந்தார் வித்யா



"ராக்கி என்னோட பிரச்சினை உனக்கு நண்பனா தெரியும். ஆனா கொல்லிமலையிலும் சரி, இவருக்கும் சரி தெரிஞ்சிருக்கு. ஆனா பதில் தான் எனக்கு தெளிவா கிடைக்கல" என்றான்.


"மச்சி யூ டோண்ட் வொரி... நாம பேசுனது எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி இருக்கேன். அவர் சொன்னத கேட்டு பாப்போம். ஏதாவது புரிய வாய்ப்பிருக்கு" செல்வா சொல்ல,

"சூப்பர்டா. இந்த ஐடியா எனக்கு வராம போச்சு" என்றான் ஆதி...


"அம்மா என்ன ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருக்கீங்க. அவர் சொன்னத நினைச்சு பயப்படாதீங்கம்மா." ராகேஷின் வார்த்தைகளுக்கு,


"இல்ல ராகேஷ். அவர் சொன்ன அத்தனையும் நிஜம். ஏன்னா கிட்டத்தட்ட முப்பது வருசம் கழிச்சு மீண்டும் அதே வார்த்தைகள். அவர் மட்டும் இத சொல்லல‌. நிறைய பேரு குலதெய்வம் கோவிலுக்கு போக சொல்லி குறி சொல்லிட்டு தான் போறாங்க" என்றார்.


"அப்போ போயிட வேண்டியது தானே"

"நீங்க போயிட்டு வாங்க. ஏரியா சொல்றேன். என்னால அந்த ஊர் பக்கம் வர முடியாது. நீ யாருன்னு உண்மை தெரிஞ்சா உன்னோட உயிருக்கு ஆபத்து தான்" என்ற தாயின் மொழிகளில் உள்ள பதட்டத்தை அவர்களால் உணர முடிந்தது.


தொடரும்
...
 
Top