அத்தியாயம் 8
கண்களை மூடியவன் அருகில் சட்டென்று ஒரு பெரும் சத்தம் உண்டானது.
“ஹேய்! ஆவ்வ்! டேய்!” என்ற சத்தத்துடன் ஆட தொடங்கினான் செல்வா.
பூசாரி தீப தட்டோடு வந்து நிற்க அவனை சுற்றி கூட்டம் சேர்ந்தது. ஆதியும் ராகேஷூம் அவனை கட்டுபடுத்த முயற்சி செய்து தோற்று போனார்கள்.
“டேய்! நான் எங்கயும் போகல. என் புள்ளைய தேடி போயிருந்தேன். அவன கையோட கூட்டிட்டும் வந்துருக்கேன்.” என்றான் செல்வா.
“டேய் மச்சி அமைதியா இருடா. ஏதாவது உளரி வைக்காத.” ஆதி சொல்ல,
“அது ஒன்னும் இல்லைங்க. இவ்வளவு நேரம் பெரியவர் சொன்னத கேட்டு ஏதோ உளறுறான். அவ்வளவு தான். டேய் செல்வா!” ராகேஷ் கூறியவுடன்,
“யாருடா உளற்ரா?”
“என் சொந்தம் போகவில்லை. என் சொத்தும் போகவில்லை. என் வம்சம் இருக்குதடா. அது வழியின்றி நிக்குதடா. நான் தேடி போயிருந்தேன். அவன் வாடி வந்திருக்கான். வாழை மரமும் இங்க! வாசன வீசுதடா. உக்கிரவீரமாத்தி இப்போ உயிரோட நிற்குறாடா. அவ மனசு நிறையும் படி! அந்த காளை வந்திருக்கு. கரை ஏத்தி விட்டு கங்கணம் கட்டி வைக்க கருப்பண் வருவானே! என் கட்டளை வாளோட” என்று இழுத்து இழுத்து பாடியவன் கண்களை மூடி சரிந்தான்.
“இன்னும் ஆத்தாவோட வம்சம் அழியாம தான் இருக்கு. அந்த பையன் வந்துட்டா திருவிழா நடக்கும். எல்லாம் சரி ஆகும்” பூசாரி சொல்ல,
“ஏன் மச்சா! இன்னைக்கு திடீர்னு வந்து ஆள் இருக்கு கூட்டிட்டு வான்னு சொன்னா எப்படி? அதுவுமில்லாம இத்தனை வருஷம் எதுவுமே சொல்லாத ஆத்தா இன்னைக்கு மட்டும் எப்படி வெளியூர்க்காரன் உடம்புல வந்து சொல்லுதாம்?” கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“என் மகன் வருவான் பாரு.”
“ஏய் கிழவி. உன் மகன பத்தி பேசுன இங்கயே கொன்னுபுடுவேன். ஓடுகாலி பய. என் தங்கச்சிய இழுத்துட்டு ஓடினவன் மட்டும் இங்க வந்தான் அது தான் அவனுக்கு கடைசி நாள்” ரத்தினசாமி கத்தினார்.
அதற்குள் பூசாரி தீர்த்தம் தெளித்து செல்வாவை எழுப்பினார். அவன் தலையில் திருநீறு வீசி நெற்றியில் பூசினார். அவன் கண் விழித்து எழுந்தவுடன் கையில் சிறிது திருநீறு கொடுத்து வாயில் போட்டுக்க சொல்ல செல்வாவும் அதேபோல் செய்தான்.
“அங்க பாருங்க, பெரியாத்தா வருது!”
“அதிசயமா இருக்கு. எப்பவும் வராத கிழவி எதுக்கு வருதோ தெரியல? ஏதோ விசயம் இருக்கு”
கூட்டத்தில் சச்சரவுகள் அதிகமாயின.
தடியை ஊன்றி மெல்ல நடந்து வந்த பொன்னாத்தாள் பாட்டி கருவறை முன்பு வந்து கையெடுத்து கும்பிட்டு,
“ஆத்தா அத்தனையும் போனாலும் மிச்சத்த வச்சிருப்பேன்னு சொன்ன. காப்பாத்த கருவறை விட்டு வந்த. கட்டுக்கு அடிபணிஞ்சது போதுமுன்னு கட்டளை கொடுக்க வந்துட்டுடியா ஆத்தா?” என்றவரின் பேச்சில் இருந்த அர்த்தத்தை அனைவரும் அமைதியாய் கேட்டனர்.
அவர் எப்போதாவது தான் பேசுவார். ஆனால் அவர் பேச்சில் உண்மை இருக்கும். அவர் வாக்கு பலிக்கும். ஏனென்றால் அவரின் இளமைக்காலத்தில் உக்கிரவீரமாத்தி அவருக்குள் இறங்கி அருள்வாக்கு சொல்லுவாள்.
அதனாலேயே ஊருக்குள்ள அவரை யாரும் எதிர்த்துப் பேசமாட்டார்கள். மரியாதை கொடுத்து வந்தார்கள். 10 வருடங்களாக அவர் கோவிலுக்குள் வர மறுத்துவிட்டார்.
அது மட்டுமின்றி அவருடைய பேச்சும் குறைந்து விட்டது. எப்போதாவது யாருக்காவது அருள் வாக்கு சொல்லுவார். அது அப்படியே பலிக்கும்.
அம்மனை வணங்கி விட்டு திரும்பி நடந்த பொன்னாத்தாள் ஆதியை பார்த்து,
“ஆதித்யா உன் வரவு இந்த கோவிலுக்கு மட்டுமில்ல உன் உயிருக்கும் பாதுகாப்பு தரவல்லது. உன்னுடைய தேடல் இனிமேல்தான் தொடங்கும். உனக்கு உக்கிர வீரமாத்தி துணை இருப்பா. அவளுக்கு நீ இருப்ப.” என்றார்
புரியாமல் ஊரே விழித்தது. நால்வருக்கும் ஏகப்பட்ட குழப்பம். ஆனால் ஆதிக்கு மட்டுமே ஆதித்யா என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.
“வர்ற அமாவாசை அன்னைக்கு உன் அம்மாவோட இந்த ஊருக்கு வா. ஆத்தாவை பார்த்துட்டு வந்து இந்த பெரியாத்தாவ பாரு. நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு.” என்று சொல்லி சிறிது தூரம் நடந்து சென்றவர் திரும்பி,
“வள்ளியம்மா உன் இரண்டாவது மகன் நடராஜன் இறந்துவிட்டான். உனக்கும் எனக்கும் கொள்ளி வைக்க வருவான் உன் பேரன். தயாராக இரு!” பொன்னாத்தாள் பாட்டி மெல்ல மெல்ல நடந்து செல்வதை ஊரே வேடிக்கை பார்த்தது.
“அண்ணா என்னோட பேரு இந்த பாட்டிக்கு எப்படி தெரியும்?”
“தம்பி இவங்க பொன்னாத்தா. வயசு 119. அருள்வாக்கு சொன்னவங்க. இந்த உக்கிர வீரமாத்திய, கருப்பண, முனியப்பன கட்டி வைக்கிற அளவுக்கு மந்திரம் தெரிஞ்சவங்க. யாருக்கும் கெட்டது செய்ய மாட்டாங்க. சாகுற நாள சரியா சொல்வாங்க தம்பி.”
“அதுமட்டுமல்ல. இவங்க பேச்சுக்கு ஊரே இன்னைக்கு வரைக்கும் கட்டுப்படும். அமாவாசை அன்னைக்கு மறக்காம வந்திடுங்க. காரணம் இல்லாம வரச்சொல்ல மாட்டாங்க!” என்று பூசாரி மேலும் பயத்தை ஏற்படுத்தினார்.
அனைத்தும் கேட்டுவிட்டு குழப்பத்துடன் சாமியை பார்த்தான் ஆதி.
“உன் கோவிலுக்கு வந்தா எல்லாம் சரி ஆகும்னு சொன்னாரு அவரு. நீயும் அடிக்கடி கனவில் வந்த. ஆனா இப்போ அம்மாவோட இந்த ஊருக்கு வந்தா என் உசுரு இருக்குமான்னு தெரியல. அம்மாவும் எப்படி ஏத்துப்பாங்கனு தெரியல. என்னைய ஏன் இப்படி சோதிக்கற?” புலம்பி தீர்த்தான்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்ல பூசாரி மற்ற சந்நிதிகளுக்கு அழைத்து சென்று தீபாராதனை காட்டினார்.
மொத்தமாக காட்டிவிட்டு வெளியே அழைத்து வந்து கருப்பணசாமியின் முன் நால்வரையும் நிறுத்தி தீர்த்தம் முகத்தில் அடித்தார்.
கருப்பணசாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட சிவப்பு முடி கயிறு ஒன்றையும் அனைவரின் கையிலும் கட்டிவிட்டு, “கருப்பண் கூடவே இருப்பான் தம்பி. சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.” என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் பூசாரி.
ராகேஷ், “மச்சா ஊருக்கு கிளம்பலாமா?”
“என்னடா யோசிக்கற?” செல்வாவும் கேட்க,
“அம்மாவ எப்படி ஊருக்கு கூட்டிட்டு வர முடியும். நடந்த விசயத்த பாத்தில?”
யாசிகா, “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப நீ பெட்டரா தானே ஃபீல் பண்ற?”
“புதுசா இருக்கு இந்த ஃபீலிங். இனி எந்த குரலும் கேட்காதுன்னு நினைக்கிறேன். நல்லா நாலு நாள் நிம்மதியா தூங்கனும். அதான் முதல் வேலை” என்றான் ஆதி.
வண்டியும் அந்த கிராமத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி பயணம் செய்தது.
வீட்டிற்கு சென்றவுடன் வித்யாவிடம், “அம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. இந்தா பிரசாதம்.” நீட்டினான்.
“ஆத்தா உக்கிரவீரமாத்தி. பக்க துணையிருந்து என் குடும்பத்த காப்பாத்தனும்” என மெல்லிய குரலில் கூறியபடி நெற்றியில் வைத்துக் கொண்டார்.
அப்போது லேசான நீர் துளிகளும் கண்களில் தோன்றியது. இத்தனை வருடங்கள் கழித்து அந்த கோவிலின் திருநீறு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அதிக நேரம் கொடுக்கவில்லை அவரது மகன் ஆதி.
“உங்கள யாரும் கண்டுபிடிக்கலயே. ஏதாவது சொன்னீங்களா?” என வினவ,
“இல்லம்மா. செல்வா கல்யாணம் விசயமா தான் ஜோசியர் போக சொன்னாருன்னு சொன்னோம்” என்றான்
“சந்தோஷம்”
“ஆனா ஒரு பாட்டி மட்டும் என்னைய குறுகுறுனு பாத்துச்சு. பேரு கூட வள்ளியம்மானு நினைக்கிறேன்” என்றதும் வித்யாவின் கண்கள் தானாக பெரிதாகியது.
“அவங்க ஏதாவது பேசுனாங்களா உன்கிட்ட?” அவரின் பதட்டத்தில் அவன் இல்லை என்று தலையசைத்தான்.
“அம்மா அங்க ஒரு பாட்டி பார்த்தேன். அவங்கள ஆகா ஓகோன்னு பேசுறாங்க. அவங்க பேரு கூட சட்டுன்னு ஞாபகம் வர மாட்டீங்குதே”
ராகேஷ், “பொன்னாத்தா”
அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்த வித்யா, “பெரியாத்தாவ பாத்தீங்களா? இன்னும் இருக்காங்களா?”
“உனக்கு தெரியும் தானே அவங்க யாருன்னு. சொல்லுமா அவங்கள பத்தி”
“பெரியாத்தா உன்னோட பாட்டி தான். உன் அப்பாருக்கு அப்பத்தா அவங்க. திருவிழா அன்னைக்கு அவங்க சாமி ஆடுனா அப்படி இருக்கும். நாங்கெல்லாம் அவங்கள பாத்தாலே பயந்து உள்ள போய்க்குவோம்.” என்றார் வித்யா.
“அந்த அளவுக்கு டெரர் பீஸோ? அவங்க உன்னைய கூட்டிக்கிட்டு அமாவாசை அன்னைக்கு ஊருக்கு வரச் சொன்னாங்க.” என்றதும் வித்யாவுக்கு தூக்கி வாரி போட்டது.
“என்னடா சொல்ற?”
“ஆமாம்மா”, அங்கு நடந்தவற்றை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் ஆதி.
“பெரியாத்தா வரச்சொன்னா காரணம் இருக்கும். ஆனா அங்க நாம போக வேணாம். எங்க அண்ணன் தம்பிங்க எல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க.”
“அம்மா ஏன் இப்படி சொல்ற?”
“எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தான். எனக்கு நீ வேணும் ஆதி.”
செல்வா, “இல்லம்மா. நீங்க அவன் கூட போய் தான் ஆகனும்.”
“அதெல்லாம் வேணாம் செல்வா. எனக்கு ஏதோ சரியாப்படல.”
“இல்லம்மா! போய் தான் ஆகனும். நீங்க அங்க போகலன்னா தான் ஆதியோட உயிருக்கு ஆபத்து”
“என்னடா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல.”
“அம்மா நீங்க சொல்லுங்க. அந்த பொன்னாத்தா பாட்டி சொன்னாங்கன்னா காரணம் இருக்கும்னு சொல்றீங்களே. அவனுக்கு அந்த குரல் ஏன் கேக்குதுன்னு ஒருவேளை அங்கு விடை கிடைக்கலாம்.”
“அம்மா உங்களுக்கு ஒரு விஷயம் தான் சொல்லணும். நீங்க அங்க போய் தான் ஆகணும். இல்லன்னா என் கையால தான் அவனுக்கு சாவு.” என்றாள் யாசிகா.
“அப்படியே முடிய புடிச்சு நாலு சுத்து சுத்தி பூசணிக்காய் உடைக்கிற மாதிரி உடைச்சிடுவேன் பாத்துக்கோ! இருடி குட்டச்சி உன்னை பேசிக்கிறேன்.” என்றவன் தன் அம்மாவைப் பார்த்து,
“நான் அப்பவே சொல்லல இவள் லூசு மாதிரி ஏதாவது உளறுவா அப்படின்னு”
“ஆதித்யா உன் ஆயுளை முடிக்கவே அந்த பொன்னாத்தா உன்னை இங்கே வரச் சொல்கிறாள். எக்காரணம் கொண்டும் திரும்பி வந்து விடாதே.” என்று யாசிகா சொன்னவுடன் அவனுக்கு குப்பென்று வியர்த்தது.
“ஆதி உனக்கு கேட்ட அதே பெண்ணின் குரல் எனக்கும் கேட்டது. அந்தக் குரல் உன்னை கொல்ல சொல்லியும் என்கிட்ட சொன்னது.” என்றாள்.
இதெல்லாம் கேட்டு வித்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த இடத்தில் அதிகமாக குழம்பி நின்றார் வித்யா.
“யாசி நீ சொல்றதல்லாம் உண்மைதானா?”
“ஆமா செல்வா. இப்ப நாம ஆதிய காப்பாத்தணும்ணா அங்க போய் தான் ஆகனும். அதுவும் இல்லாம இன்னைக்கு செக்யூரிட்டிக்கு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு. போலீஸ் மூலமா போலாம்.” என்றாள்.
“அமாவாசைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்குதானே. அதனால் அது அப்போ பிளான் பண்ணிக்கலாம்.” என்றார் வித்யா.
“மச்சா அந்த பெண் குரல் கேட்கும் போது உனக்கு பயம் வரவே இல்லையா? நீ எந்த ரியாக்ஷனும் காட்டாம தானே வந்த. எப்ப குரல் கேட்டுச்சு.”
“எல்லாம் என் குலசாமி பார்த்துக்கொள்ளுங்கற நம்பிக்கைதான் மச்சி. அதுவுமில்லாம கருப்பன் கயிறு. அத கட்டுன உடனே எனக்குள்ள இருந்த தைரியமும் உணர்வும் தான் மறுபடியும் அந்த ஊருக்கு போகனும்னு தோண வச்சது.”
“கடவுள் நம்பிக்கை இல்லாத நீ இப்ப குலசாமின்னு சொல்ற. சரி மச்சி நான் கிளம்புறேன். நாளைக்கு ஆபீஸ்ல பார்ப்போம்.” என்று செல்வா கிளம்ப, அவனை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள் அவனை காதலிக்கும் யாசிகா.
மறுநாள் காலை 5 மணி...
“வித்யா நீ அங்க போய் தான் ஆகனும். பெரியாத்தா வர சொன்ன காரணமே நம்ம பையனோட உசுர காப்பாத்த தான்.” என்று அவரின் கணவர் கனவில் சென்றவுடன் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.
சுற்றிலும் தேடிப் பார்த்தார். திடீரென்று இத்தனை வருடங்கள் வராத கணவரின் முகமும் குரலும் எப்படி இன்று வந்தது? அதுவும் இதை சொல்லி சென்றதை எண்ணி கலக்கம் அடைந்தார். வித்யாவின் மனதில் ஏதேதோ எண்ணங்களும் குழப்பங்களும் ஊசலாட தொடங்கியது.
மறுபக்கம் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் ஆதி வேலைக்கு சென்றுகொண்டே இருந்தான்.
பின்வந்த நாட்களும் அவர் கணவர் கனவில் வருவதும் அதே போல சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அமாவாசைக்கு முதல் தினம், வித்யா ஆதியை அழைத்து “இன்று நைட் ஊருக்கு கிளம்புவோம். பொழுது விடியும் போது நாம ஊர்ல இருக்கனும் ஆதி. உன் பிரண்ட்ஸ் வரவேண்டாம்.” என்றார்.
“ஏம்மா அவங்க வர வேணாம்னு சொல்ற?”
“அங்க போனா நம்ம உயிருக்கு உத்தரவாதம் இல்லை. நம்மால அவங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது”
“அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் ஆகாது. எங்களுக்கும் அந்த ஊரோட தொடர்பு இருக்கு. நாங்களும் வருவோம். எனக்கு கல்யாணம் ஆகனும்ல!” சொல்லிகிட்டே உள்ளே வந்தார்கள் ராகேஷூம் செல்வாவும் யாசிகாவும்.
“எப்படிடா மூக்கு வேர்த்த மாதிரி வந்தீங்க?” வித்யா கேட்க,
“உக்கிரவீரமாத்தி உத்தரவு தான் எல்லாம். இல்ல ராகேஷ்.” என்ற செல்வாவின் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டார்.
மறுநாள் காலை அனைவரும் சென்ற கார் பொன்னாத்தா வீட்டின் முன்னால் நின்றது.
ஊரை விட்டு ஓடிப்போன நடராஜனின் மனைவி வித்யா வந்திருக்கிறார் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.
“இன்னைக்கு அவளை கொன்னே ஆகனும். ஓடுகாலி. குடும்பத்த அசிங்கப்படுத்திட்டு இன்னைக்கு எதுக்கு வந்திருக்காளாம்? வாங்கடா!” ரத்தனசாமி தன் தம்பிகளுடன் அருவாளோடு கிளம்பினார்கள்.
பொன்னாத்தாவின் வீட்டின்முன் ஊரே கூடியிருந்தது. கைகட்டி அமைதியாக தலைகுனிந்து நின்றார்கள் வித்யாவும் ஆதியும்.
“வேவு பார்க்க தான் அன்னைக்கு எல்லா பயலும் வந்திருக்காங்க. ஒருத்தன் உசுரோட திரும்பக்கூடாது.” கூட்டத்தில் சச்சரவுகள் அதிகமாயின.
ரத்தினசாமி அங்கு வந்து சேரவும், பொன்னாத்தா வெளியே வரவும் சரியாக இருந்தது.
“ரத்தினம் கொஞ்சம் அமைதியா இரு.”
“ஆத்தா உனக்கு என்ன? நீ சொல்லிடுவ. உன் வம்சம் வந்து முன்னாடி நிக்குது. அவமானப்பட்டது நாங்க தானே. இன்னைக்கு அவ ரத்தம் இந்த மண்ணுல விழுந்தா தான் எங்க ஆத்திரம் அடங்கும்.” என முன்னே வேகமாக வந்தவனை நோக்கி துப்பாக்கி நீட்டினான் ராகேஷ்.
“ஒருத்தர் அடி எடுத்து வைச்சா உங்க ரத்தம் கீழ விழும்.” என்ற ராகேஷின் செயலில் பதறி போனார்கள் ஆதியும் வித்யாவும்.
“ராகேஷ் என்னடா பண்ற. நீ எதுக்குடா துப்பாக்கி எடுத்துட்டு வந்த? உள்ள வை.” ஆதி சொல்லிக்கொண்டிருக்க
“ஏன்டா வெளியூர்காரன் இங்க வந்து துப்பாக்கி தூக்கி காட்டறான். இன்னைக்கு எவனும் போக கூடாது. வாங்கடா” என்று அவர்களை நோக்கி கூட்டம் வரவும் துப்பாக்கியை தூக்கி மேலே சுட்டான்.
மரத்தின் மீதிருந்த அத்தனை பறவைகளும் மொத்தமாய் பறக்க மயான அமைதியானது அந்த இடம்.
அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து போக, பொன்னாத்தா, “இது உக்கிரவீரமாத்தி உத்தரவு. யாரும் பேசக்கூடாது. வீரமாத்தி கோபத்த தணிக்க வந்திருக்கான் குடிபாட்டுகாரன். இவனை இங்கேயே கொல்ல நினைச்சா கொல்லுங்க. ஆனா இன்னைக்கு ராத்திரி அவங்க உயிரோடு இருக்க மாட்டீங்க!” என்றவரின் வார்த்தையில் மொத்த ஊரும் அதிர்ந்து போனது.
அழுதுகொண்டிருந்த வித்யா, “அன்னைக்கு நாங்க ஓடிப்போனது தப்பு தான். அத்தை மகன லவ் பண்ணினது தப்புன்னு எனக்கு தோணல. புடிச்சிருந்துச்சு. குடும்ப பகைய வளர்த்திட்டு புடிக்காத ஒருத்தனுக்கு கட்டி வைக்க பார்த்ததால தான் நாங்க போனோம். அது தப்புன்னா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.” என்றார்.
ரத்தினசாமியும் அவன் குடும்பத்தாரும் அங்கிருந்து மொத்தமாய் கிளம்பினார்கள். அதற்கு காரணம் வித்யாவின் மன்னிப்பு அல்ல. பொன்னாத்தா உதிர்த்த வார்த்தைகளே.
வள்ளியம்மா ஓடி வந்து “ஊரவிட்டு போகும் போது என் மகனோட போன. இப்ப நீ மட்டும் வந்திருக்கியே. நான் பத்து மாசம் சுமந்து பெத்த என்னோட மகன் எங்க?” அழுது தீர்த்தார் தன் மருமகளிடம்.
சிறிது நேரத்தில் மொத்த கூட்டமும் கலைந்து போக, தன் பேரனின் கன்னம் தடவி கண்களில் நீருடன் மகிழ்ந்து போனார் வள்ளியம்மா.
“வித்யா வடக்க இருக்க பெரிய கிணத்துக்கு போய் தண்ணி ஊத்திட்டு ஈரத்துணியுடன் நீயும் உன் மகனும் கோவில் முன்னாடி வாங்க!” என்று சொல்லி அனுப்பிவிட்டு கிழக்கு நோக்கி கையெடுத்து கும்பிட்டார் பொன்னாத்தா.
வித்யா நடக்க ஆரம்பிக்க, தயங்கி நின்ற ஆதியை பார்த்து, “ஆதித்யா இந்த ஊரால் உனக்கும் உன் தாய்க்கும் எந்த ஆபத்தும் கிடையாது. சென்று வா!” என்றார்.
வள்ளியம்மா அழைத்து செல்ல, பொன்னாத்தா சொன்ன மாதிரியே ஈரத்துணியோடு வந்து கோவில் முன்பு நின்றார்கள்.