கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் இறுதி அத்தியாயம்


அத்தியாயம் இறுதி பாகம்

பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் செல்வா, “மச்சி வாடா கேன்டீன் போலாம். பிசாசு உனக்கு மட்டும் என்ன தனியா சொல்லனுமா? எந்திரி.” என்றான்.

“ஏன்டா? வேலை இருக்கு.”

“ஆமா நீ அப்படியே வேலை செஞ்சி கிழிச்சுட்ட. வாடா போலாம். என்னமோ நீ இப்போ கேன்டீன் போனா கம்பெனியில் பல கோடில லாஸ் ஆகுற மாதிரி பேசுற?” என இழுத்துக்கொண்டு போனான்.

அங்கு சென்று ஆர்டர் செய்த பின்னர் தன் கையிலிருந்து ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினான். “மச்சி நான் அப்பா ஆகப்போறேன்” என்று கூற, ஆதி ஆரத்தழுவி கொண்டு வாழ்த்துக்கள் சொன்னான்.

“நேத்து நைட் கூட சாரா கிட்ட பேசினேன். ஆனா அவ எதுவுமே சொல்லல. ஈவினிங் வீட்டுக்கு வந்து அவள பேசிக்கிறேன். டேய் தடிமாடு பத்து ரூபா ஸ்வீட்ல முடிக்கலாம்னு பாக்கறியா? வந்து ட்ரீட் வைடா!” யாசிகா சொல்ல,

“தின்னி மூட்டை. உனக்காக தானே என் நண்பனை கல்யாணம் பண்ணி வச்சேன். பாரு பையன் இளச்சு போய்டான். நீயே திங்காத சரியா?”

யாசிகா “டேய் காபா என்ஜின். ட்ரீட் வைக்கலனா உன்னைய சமைச்சு தின்ருவேன் பாத்துக்கோ. சண்டே வெளிய போறோம். உன்னோட ட்ரீட்!”

ஆதி, “ராக்கியையும் அவன் கட்டிக்க போற பொண்ணையும் வர சொல்லுவோம். அப்படியே பேமிலி பார்ட்டி மாதிரி ஆகிடும்ல.” என்று கூறி திட்டமிட்டார்கள்.

ஞாயிறு மாலை பீச் ரிசார்டில் அனைவரும் சேர கலகலப்பான பேச்சுக்களோடு சிரித்து மகிழ ஆரம்பித்தனர்.

யாசிகா, “டேய் டாக்டர். என்னடா உன்னோட வருங்கால வொய்ப் ரொம்ப அமைதியா இருக்காங்க. நாங்க ஏதாவது சொல்லி கொடுத்துருவோம்னு பேசக்கூடாதுன்னு சொல்லி கூட்டிட்டு வந்தியா?”

“அவ ரொம்ப சைலண்ட் டைப் யாசி. உன்னைய மாதிரி வேதாளம்னு நினைச்சுட்டியா? அவன் முதுகில ஏறி உட்கார்ந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்க. பாவம் அவன் என்கிட்ட சொன்னான்.” என ராகேஷ் கூறியதும் ஆதி திரும்பி முறைக்க ஆரம்பித்தாள் யாசிகா.

“ஏன்டா வீட்டில எனக்கு சோறு கிடைக்குறது உங்களுக்கு பிடிக்கலயா?. நான் பாட்டுக்கு சிவனேன்னு தான இருக்கேன். சோத்துல மண் அள்ளி போட்றாதீங்கடா! உங்களுக்கு புண்ணியமா போகும்.” என்றதும் அந்த இடமே கலகலப்பாக மாறியது. சாராவுக்கு வளையலும் பூவும் வாங்கி போட்டுவிட்டார்கள். அது போக சில மருத்துவ குறிப்புகளையும் சொன்னாள் யாசிகா.

ராகேஷின் திருமணமும் சாராவின் வளைகாப்பும் அடுத்து சில மாத இடைவெளியில் நடந்து முடிந்தது. வருடாந்திரம் செய்ய சொந்த ஊரை நோக்கி ஆதியும் யாசிகாவும் சென்றார்கள். குல தெய்வத்தை வணங்கிவிட்டு விடாரபுரமும் சென்றார்கள்.

விரைவில் தான் கருவுற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அந்த மலையில் உள்ள கல்லை தேர்வு செய்து தெய்வானை மற்றும் குலசேகரன், தர்மசீலனுக்கு சிலை வைக்கவும் ஆயத்தமானான். தன் கடந்த காலத்தில் அதிக நேரங்களை ஆட்கொண்ட அவர்களின் குரல்கள் மீண்டும் கேட்காதா? என்று ஏங்கினான்.


பணியில் இருவருக்குமே பதவி உயர்வு கிடைத்தது. அந்த மகிழ்ச்சி தருவது போல யாசிகாவும் இரண்டாம் முறை கர்ப்பமுற்றாள். யாசிகாவிற்கு மீண்டும் வளைகாப்பு வைக்க முடிவு செய்தார்கள். அதன்படியே முன்பு செய்தது விட பிரமாண்டமாக செய்தார்கள்.

“ஆதி அன்னைக்கு எப்படி சைட் அடிச்சுட்டு இருந்தியோ அதே மாதிரி தான்டா இன்னைக்கும் உன் பொண்டாட்டிய சைட் அடிக்கற?” என்றான் ராகேஷ். திரும்பி பார்த்த ஆதி, “உன்னோட வொய்ப் கன்சீவ் ஆகி வளைகாப்பு வச்சா நீயும் இப்படி தான்டா சைட் அடிப்ப. உனக்கு தெரியாதாடா டாக்டர்!” என்றான்.

“ஒரு உண்மைய சொல்லவா? ஊருல இருக்குறவன் மனச ஈசியா தெரிஞ்சிக்கற என்னால என் பொண்டாட்டி மனச புரிஞ்சுக்க முடியல. நானும் ட்ரீட்மென்ட் பண்ற மாதிரி அவ மனசுல இருக்கறத தெரிஞ்சுக்க பாத்தேன்டா. முடியல!” என்றான்.

செல்வா, “மச்சி இது உனக்கு மட்டுமில்ல. யாருமே கண்டுபிடிக்க முடியாத உண்மைடா. பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கறவனக்கு பைத்தியம் பிடிச்சா அவனே மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது டாக்டர்!” என்றான்.

“மச்சி பொண்டாட்டி மனசுல இருக்கற எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நினைக்காத. வாழ்க்கை சிரமம் ஆகிடும்.தெரியாம புரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு வாழ்க்கை போற வழியில ரசிச்சிட்டு போய்டனும். அப்போ தான் சந்தோஷமா வாழ முடியும். எல்லாத்தையும் சயின்ஸா பாக்காத. உணர்வோடு உன்னோட குடும்பத்தில இருக்க பாருடா.” என்றான் ஆதி.


“ஆதி சைக்காலஜி படிக்காமலயே டாக்டர் ஆகிட்டான். சரிங்க டாக்டர். என்னைய விட அனுபவசாலி நீ. கேட்டுக்குறேன் மச்சி.” என்று சொல்லி திரும்பியவுடன் ராகேஷ் மனைவி பின்னாடி நின்றாள். “வாழ்த்துக்கள் மச்சி” என இருவரும் அங்கிருந்து சென்றார்கள். நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து முடிந்து பிரவச நாளுக்காக காத்திருந்தார்கள் இருவரும்.



காளியின் வாக்காக சாபம் தீர்ந்து பெண் குழந்தை கிடைக்கும் என்று நம்பினாலும் இருவருக்கும் மனதின் ஏதோ ஒரு இடத்தில் பயம் இருந்து கொண்டே இருந்தது.

வெள்ளிக்கிழமை அன்று யாசிகாவிற்கு பிரசவ வலி எடுக்க விரைந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆதி கடவுளை வேண்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருந்தான். அப்போது வெளியே வந்த நர்ஸ் “பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். சாபம் தீர்ந்தது என்று நம்பிக்கையும் கொண்டான்.


மயக்கம் தெளிய யாசிகாவை சென்று பார்த்தவன் கண்ணீரோடு, “பொண்ணு பொறந்திருக்கா யாசி” என்றான். அதை கேட்ட மகிழ்ச்சியில் அவளும் கண்ணீர் விட்டாள். குழந்தைக்கும் தெய்வா என்று‌ பெயர் வைத்தார்கள்.


மகிழ்ச்சியாக அவர்களின் வாழ்க்கை தொடர ஊருக்கு சென்று உக்கிரவீரமாத்தி திருவிழாவையும் நடத்தினார்கள். விடாரபுரத்தில் மகாகாளி, தெய்வானைக்கு கூடாரம் அமைத்து அதற்கான வேலைகளையும் செய்தான் ஆதி.


குழந்தைக்கு செல்வாவின் மடியில் வைத்து முதல் மொட்டை அடித்தார்கள். “டேய் மச்சி என் பையனுக்கு தான் உன் பொண்ணு. பாரு இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் அது இதுன்னு சொல்லகூடாது.” என்றான் செல்வா.


“இப்பவே கூட்டிட்டு போடா. அவ பண்ற சேட்டை என்னால தாங்க முடியல. என் மருமகன நான் வளத்துகிறேன். அவன் அமைதியா இருந்துக்கறான் அவ அம்மா மாதிரி.” என்றாள் யாசிகா.

“யாரு இவ அமைதி. உன் வாயில தீய வைக்க. கதவ சாத்திட்டு என்ன அடி அடிப்பாங்கிற வாங்குற எனக்கு தான் தெரியும். கத்துனாலும் சேர்த்து அடி விழும். ஆதியை நினைச்சு நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.” என கூறினான்.

“சார் இன்னைக்கு ஃபங்க்ஷன் முடிச்சுட்டு வீட்டுக்கு தான் வரனும். அதனால வாய கொஞ்சம் அளவா வச்சிக்கோ.” என சாரா சொன்னவுடன் அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது.

இரண்டு வருடங்கள் அவர்கள் அனைவரின் வாழ்விலும் ஏற்றம் மட்டுமே இருந்தது. அப்போது மீண்டும் கருவுற்றாள் யாசிகா. தங்கள் வம்சம் தழைக்கும் என்ற மகிழ்ச்சியில் வித்யாவும் இருந்தார்.


மொட்டை மாடியில் நிலவை பார்த்து ரசித்து கொண்டிருந்த ராகேஷுக்கு மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. மன அழுத்தத்தில் வரும் பலர் சொல்லும் காரணம் “அவர்கள் அந்த மாதிரி அந்த இடத்தில் அப்படி பேசுனாங்க. அத என்னால தாங்கிக்க முடியல.” என்பது தான்.

தர்மசீலன் அன்னைக்கு “இந்த பிரபஞ்சத்திற்கு மனதின் எண்ணங்களையும் சொற்களையும் பெரும் சக்திகளாக மாற்ற முடியும்?” என்று சொன்னதை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென்று அவன் மனைவி வந்து அவனை அழைக்க யோசனையில் இருந்து வெளியே வந்தான்.

சில நாட்கள் மீண்டும் அந்த நிகழ்வுகள் அவனை யோசிக்க வைத்து கொண்டே இருந்த வேளையில், அன்றொரு நாள் சாலையில் பயணித்து கொண்டிருந்தான். அப்போது வழியில் சிலர் மண்ணை அள்ளி தூவி “நாசமா போய்ருவடா. வெளங்காம போய்டுவா. உன் புள்ள குட்டியெல்லாம் வீணா போய்டும்” என்று சொல்வதை காண நேர்ந்தது. அதே நாளில் மூன்று முறை இதே போன்ற நிகழ்வுகளை அவன் கண்டான்.


ராகேஷ் தன் நண்பன் வீட்டுக்கு சென்ற நேரத்தில் பெரியவர்கள் மகாபாரதம் பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது காந்தாரி கிருஷ்ணனுக்கு சாபம் கொடுக்கும் காட்சிகள் ஓடியது. அந்த காட்சிகள் அவனுக்குள் ஏதோ பெரிய மாற்றத்தை கொடுத்தது.


சாபம் பற்றிய ஆய்வுகளை சேகரிக்க ஆரம்பித்தான். அதற்கான மகாபாரதம் ராமாயணம் சிலப்பதிகாரம் போன்ற நூல்களை படிக்க ஆரம்பித்தான். சித்தர்கள் பாடலையும் படிக்க ஆரம்பித்தான். சாபம் பற்றிய கட்டுரைகள், கிராமத்தில் உள்ள பெரியவர்கள் என்று தனது தேடுதல் வேட்டையை விசாலப்படுத்தினான். ஆனால் அது தன் மனைவிக்கு கூட தெரியாமல் பார்த்துக்கொண்டான்.



யாசிகாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த காலத்தில் அவன் பட்ட கஷ்டங்களுக்கு பலனாய் எல்லாம் நன்மையாகவே முடிந்தது. மீண்டும் தன் குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் முடி இறக்கினான். மகாகாளிக்கும் பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பாக வழிபாடுகளை செய்தான்.


மூன்று ஆண்டுகள் தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு அதை ஒரு தொகுப்பாக தயாரித்தான். அதில் சாபங்களின் வகைகள், ஏற்படும் காரணம், அதன் தாக்கம் எப்படி இருக்கும், யாரால் யாருக்கு தருவது, அதை சரி செய்யும் வழி என்ன என்று தனது ஆய்வுகளை சொன்னான்.

சில நாட்களுக்கு பிறகு அதை ஆவணம் செய்ய காகிதத்தில் அச்சிட ஆரம்பித்தான். புத்தக வடிவில் அதை அச்சிட்டவன் ஒரு வித்தியாசமான முறையில் அதில் கையாண்டான். புத்தகங்கள் முன்னுரையை விட முடிவுரையை பார்த்து தேர்ந்தெடுக்கப்படுவதால் கதையின் இறுதியில் முன்னுரையை பதிவு செய்தான்.


சாபங்கள்

இன்றும் கிராமங்களில் பலர் பேசும்போது “நாசமத்து போனவனே, நாசமத்து போக.” என்ற சொற்றொடரை பயன்படுத்துவார்கள். நாசம் அற்று போக வேண்டும் என்ற நேர்மறை சொற்களை சுற்றியும் பேச வேண்டும் என்பதற்காக பேசுவார்கள்.

ஒரு சூழ்நிலையில் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை விட வலிகளுக்கும் அழுகைக்கும் மனிதன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அதேபோல் தான் இந்த அண்டவெளியில் மகிழ்ச்சியை விட அழுகைக்கு ஆளுமையும் அதிகம்.

அந்த ஆளுமையில் இந்த பிரபஞ்சம் எண்ணங்களை சக்திகளாக மாற்றி அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒருவரை நோக்கி மனதாலோ அல்லது சொற்களாலோ அவர் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பதே சாபம் என்கிறது வரலாறுகள்.

பொதுவாக பெண் சாபம், மண் சாபம், குலதெய்வ சாபம், முன்னோர் சாபம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் வேறு என்னென்ன சாபங்கள் உண்டு என பார்த்தால் அவை தற்காலிகமான சாபம், பரம்பரை (வர்க்க) சாபம் என்று பிரிக்கலாம்.

“உனக்கு அது நடக்கும், இப்படி ஆகும், நல்லாவே இருக்க மாட்ட!” என தற்காலிகத்தை நோக்கி தரப்படும் சாபங்கள்.

மற்றொன்று வார்த்தைகளால் சொல்லாமலேயே பல நேரங்களில் ஏற்பட்ட வலிகளை மட்டுமே நினைத்து இருக்க அதனால் ஏற்படும் சாபம்.


மண் சாபம், குலதெய்வ சாபம், பித்ரு சாபம், மனைவியின் சாபம்,அன்ன சாபம், உடன்பிறந்தவர்கள் சாபம், குழந்தையின் சாபம், கன்னி சாபம், கன்னி தெய்வ சாபம்,பிரேத சாபம், ஆசிரியர் சாபம், சாதுவின் சாபம், விலங்குகளின் சாபம், செடிகளின் சாபம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் அதிக சக்தி வாய்ந்தது பிரேத சாபமே.


சாபம் கொடுத்த பின்னர் அது அப்படியே போய்விடுவதில்லை. அனுபவிப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் மன வேதனையில் அவர்களின் கண்ணீருக்கு காரணமாய் அமைந்ததில் இந்த சொற்களுக்கு காரணமாய் அமைந்த சாபம் கொடுத்தவரையும் பாதிக்கிறது.

அந்த பாதிப்பு மரபணுக்கள் வழியாக கடத்தப்படுகிறது. இன்றைய நவீனம் அதை டிஎன்ஏ பிரச்சினை என்று நினைத்தாலும் அங்கே வர்க்க தோஷம் அல்லது வர்க்க சாபம் என்று ஏதாவது ஒன்று இருக்கும்.

குடும்பத்தில் ஒருவர் திருமணம் இன்றி இருப்பது. மூத்த மகன்/மகள்/பேரன்/பேத்தி என்று இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் செல்வது. பெண் குழந்தை இல்லாத வம்சம், திருமணம் வாழ்க்கை பிரச்சினையில் மட்டுமே செல்லும் வாழ்க்கை, இரண்டு திருமணம், ஊனமான குழந்தை என்று தலைமுறை தொடரும் வர்க்க சாபமும் பலர் அறிந்து இருப்பர்.


சில நேரங்களில் அவசரத்தில் வார்த்தைகளை பேசிவிட்டு அய்யய்யோ சாபம் கொடுத்துவிட்டேனே என்று பதறினாலும் பலன் இல்லை. கொடுத்த சாபம் நடக்க கூடாது, பலிக்க கூடாது என்று நினைத்தாலும் கடவுளை வேண்டிணாலும் பயன் இல்லை. ஏனெனில் இந்த பிரபஞ்சம் வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறது.

அதனால் தான் நாசமத்து போ என்று வரத்தை கொடுத்து வரத்தை அடைந்தார்கள் முன்னோர்கள்.

மேலும் பிரபஞ்சத்தின் முக்கோணவிதிப்படி இது மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த சங்கிலி உடைந்து போக சில தலைமுறைகள் எடுக்கும். சில நேரங்களில் பரிபூரண மன்னிப்பு கிடைக்கும் போது அது சரியாகிறது.

நம்மை சுற்றி நேர்மறை எண்ணங்களை வைத்து கொள்ள வேண்டும். அது மனதின் சக்தியினை சரி செய்யும். வெற்றி தரும் என்று பலர் இன்று பேசுகிறார்கள். ஆனால் அது நம் வாழ்வியலோடு கலந்த ஒன்று. நாம் மறந்து போன ஒன்று.

ஏனென்றால் நம் கடவுள் நம்பிக்கைப்படி மனம் தான் இறைவன். மூச்சுக்காற்றே சக்தி. அதனால் தான் கோவில்களில் நேர்மறை எண்ணங்களையும் சித்தர்கள் ஜீவசமாதியில் அதிக அதிர்வுகளையும் நம்மால் உணர முடிகிறது.

தர்மத்தின் மூலம் கர்மத்தின் தீமை குறையும். ஆனால் சில கர்மத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அகத்தியர் வாக்கு.

முடிந்தவரை சாபம் தராதீர்கள். அப்படி சாபத்தை பெற்று வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்த ஒருவன் தன் வலிகளால் மீண்டும் சாபம் கொடுத்தவருக்கே சாபம் கொடுக்கும் விதியின் விளையாட்டு இந்த விடாரபுத்தின் கதை.

நன்றி
டாக்டர் ராகேஷ்

தன் புத்தகத்தை வெளியிட்டுவிட்டு எப்போதும் போல தனது பணிகளை தொடர்ந்து கொண்டிருந்த ராகேஷ் ஒருநாள் இரவு தான் மட்டும் தனியாக விடாரபுரம் நோக்கி சென்றான்.

பௌர்ணமி நிலவில் அந்த பேரமைதி நிலவும் இடத்தில் தனக்கு தேவையான அமைதியை தேடி கொண்டிருந்தான். அவனுக்கு தெரியும் தான் கேட்பது நடக்காது என்று. விடியும் வரை அங்கேயே இருந்துவிட்டு மீண்டும் கிளம்பினான்.


சாலையோரத்தில் தன் காரை நிறுத்தி விட்டு ஆதியின் நிலையை மீண்டும் மனதில் ஓட்ட ஆரம்பித்தான்.

சாபம் தீர்ந்துவிட்டது என்று எண்ணி இருக்கும் ஆதிக்கு தன் குழந்தை தான் சாபம் முடிந்த பிறகு பிறந்தார்கள். தான் சாபத்தில் தான் பிறந்தேன் என்பதை அறிய முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து வேதனை அடைந்தான்.

அவன் ஆயுள் இன்னும் சில காலம் தான். அதிகபட்சமாக நாற்பது வயது வரை தான் என்பதை அறிந்து அவன் அதனை சொல்ல நினைத்த போது அவன் கண்களில் தோன்றிய வரிகள் “ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்” என்ற போகரின் வரிகள் தான்.

எது எப்படியோ மீண்டும் நரக வேதனைக்குள் நுழையப்போகும் யாசிகாவை நினைத்த போது அவன் கண்களில் நீர் வடிந்தது. அவளை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ராகேஷ்...


சாபங்கள் முடிவதில்லை.


முற்றும்...
 

Mohanapriya M

Well-known member
Nanum intha twist ah yosikave illa.. Aadhi sapathula poranthavan tane avan sethuta yasika epudi thangipa😢

Tharamana story writerrr ithu 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 Starting la arampitchu ending varaikum interest koraiyave vidama story ah kondu poninga romba nalla irunthuthu aduthu epi epo varum nu wait pana vatchutinga avolo interestinga.. 🤩

வாழ்த்துக்கள் writer 💐💐💐
 
நன்றிகள் சகோ. தொடர்ந்து ஒவ்வொரு எபியும் படித்து கமெண்ட் செய்து ஊக்குவித்தீர்கள்.

கதையை பற்றிய விமர்சனம் நிறை குறைகளை ஒரு பதிவாக தந்தால் அடுத்த கதை எழுதும் போதும் என்னை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் சகோ.
 
Top