கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் - 15

த்விஜாவந்தி- ஆரோஹனம் – 15



வீட்டிற்கு வந்து த்விஜா படுத்துவிட, அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தான். பிறகு கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டான். நாட்கள் அதன் போக்கில் உருண்டோடியது. ராகன் மனதை டாக்டர் சொன்ன விஷயம் அறித்துக்கொண்டே இருந்தது.

த்வானி கல்பனாவுடன் நன்கு ஒட்டிக்கொண்டாள். த்விஜாவிற்கு தான் என்னவோ தனித்து விடப்பட்டதாய் தோன்றியது. ராகன் , கல்பனா, த்வானி என அனைவரும் ஒரு கூட்டாக இருக்க , அங்கே தான் மட்டும் அவர்கள் கூட்டணியில் சேராமல் இருப்பதாய் தோன்றியது.

ராகன் அலுவலகம் செல்ல துவங்கி இருந்தான். த்விஜாவிற்கு சங்கடமாய் இருந்தது. மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“ ராகா..”

“ ம்ம்ம் .சொல்லு ஜா “

“ இல்ல நா ஆஃபீஸ் வரலாம்ல “

“ என்ன கேள்வி இது ?” என்றான் கோபமாக.

அவன் எதற்கு கோவப்படுகிறான் என்பதை அவள் அறியவில்லை.

“ நீ அங்க வேலை செய்யும்போது இப்டி உனக்கு தோணிச்சா ? “

“ இல்ல . அதுக்கென்ன இப்போ ?” என்றாள் புரியாமல்.

“ இப்போ நீ முதலாளி. வந்தே ஆகணும் “ என்று சிரிப்புடன் .

“ வரேன். ஆனா முதலாளிலாம் வேணாம் ராகா “

“ நீ வா பாத்துக்கலாம் “ என பேச்சை முடித்தான்.

அடுத்த நாள் த்வானியை பள்ளியில் விட்டுவிட்டு, இருவருமாய் அலுவலகம் சென்றனர். அங்கு சென்ற த்விஜாவை அனைவரும் வரவேற்றனர்.

“ இங்க பாருங்க. நா பழைய த்விஜா தான். நீங்க எல்லாரும் , என் கூட முன்ன எப்டி பழகினீங்களோ, அதே மாதிரி இருங்க. அதான் எனக்கு பிடிச்சிருக்கு “ என்றாள்.

அவளின் இந்த எளிமை அனைவருக்கும் பிடித்திருந்தது. வேலைகள் எப்போதும் போல செவ்வனே நடக்க தொடங்கின. த்விஜா ராகனுடன் தன் பழைய சீட்டான, ராகனுக்கு எதிரில் அமர்ந்து தன் வேலையை தொடங்கினாள். ராகனுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.

முதல் காதல். பள்ளிக்காதல், கைமீறி போன காதல் மீண்டும் கைகூட, காதலித்தவள் மனைவியாக , அதுவும் ஒரே அலுவலகத்தில், கண்ணெதிரில் என இருக்க திண்டாடிப்போனான்.

“ ஜா..”

“ சொல்லுங்க சார் “ என்றாள். குரலில் வம்பு வழிந்தோடியது.

“ சாரா?”

“ ஆமா.என்ன விஷயம் சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு “ என்றாள் தன் கணினியை பார்த்தவண்ணம் .

தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தான் ராகன்.அவன் த்விஜாவின் அருகில் வரவர, த்விஜாவிற்கு இதயம் வேகமாக அடிக்க தொடங்கியது.

“ ராகா . அங்கயே நில்லு “ எண்றாள் கணினியை பார்த்த வண்ணம்

அவளின் வார்த்தை ராகனை ப்ரமையிலிருந்து தெளிய வைத்தது.தான் கொடுத்த வார்த்தையை மீற துணிந்ததை நினைத்தான்.

“ ஷிட் ..” என அறையை விட்டு வெளியேறினான். ரெஸ்ட் ரூம் போய் , பல நாளாக விட்டு வைத்திருந்த சிகரெட்டை ஊதினான். ஒரு இழுப்பு இழுத்து விட்டதும் சுறுள் சுறுளாக போனது புகை. மொத்தமாக , தன் தற்காலிக விரலை எறித்து பஸ்மமாக்கியவன், முகம் கழுவி, வாயில் ஒரு மவுத் ஃப்ரெஷ்னரை போட்டுக்கொண்டு அறைக்கு திரும்பினான்.

அவனை எதிர்பார்த்திருந்த த்விஜா, அவன் தலை தெரிந்தது, தன் வேலையை பார்ப்பது போல் பாவனை செய்தாள். அவன் உள்ளே வந்தது, த்விஜாவின் மூக்கு சரியாக சிகரெட் வாசத்தை மோப்பம் பிடித்தது. ஆனாலும், ஒன்றும் கூறாமல் தன் வேலைகளில் மூழ்கினாள்.

வேலை முடித்து இருவரும் வீடு வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வீடு வந்ததும் தினமும் த்விஜாவிடம் ஓடிவரும் த்வானி, இன்றும் ஓடிவந்தாள் ராகனிடம். அது த்விஜாவிற்கு என்னவோ போல் இருந்தது. மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, அறைக்கு சென்றாள் த்விஜா. அதை கவனித்துக்கொண்டிருந்தார் கல்பனா.

“ தம்பி..”

“ என்னம்மா?”

“ த்விஜாவையும் கொஞ்சம் கவனிப்பா “

“ ஏன்? அவளுக்கு என்ன ?”

“ அப்டியில்ல. அவளுக்கு இவ்ளோ நாள் த்வானி தான் உலகம். இப்போ, இந்த வீட்டுக்கு வந்துருக்காப்பா. த்வானியும் உங்கூட நல்லா ஒட்டிகிட்டா. அவ குழந்தை. அவளுக்கு தெரியாது.ஆனா த்விஜாக்கு வறுத்தமா இருக்கும்ல “

“ ம்ம்”

“ த்விஜாக்கு அந்த குறை இருக்க கூடாதுப்பா. அவகூடவும் நேரம் செல்வழிக்க பாரு. பொண்ணுங்க என்ன தான் மெச்சூர்ட்னு சொல்லிகிட்டாலும், புருஷன் கிட்ட , அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும்பா .பாத்துக்கோ” என த்வானியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

படிகளேறிய ராகன், கதவை திறந்து கொண்டு அறையினுள் நுழைந்தான்.

அங்கே த்விஜா கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள், அவன் வந்தது கூட தெரியாமல். முகம் கழுவி உடை மாற்றி வரும் வரை அங்கேயே நின்றிருந்தாள். தோளிலிருந்த துப்பாட்டா தரையில் விழுந்திருந்தது.

“ ஜா “ என்றான் மெல்லியதாக. அவள் காதில் விழாமல் போனது.

“ ஜா..உன்னத்தான் “ என்றான் சற்று சத்தமாக. அதுவும் வீணானது. த்விஜாவின் அருகில் சென்றவன்.

“ ஜா .. உன்ன தான் கூப்பிடுறேன். என்ன செய்யற இங்க , கூப்பிடறத கூட காதுல வாங்காம ?” என அவள் தோளை தொட்டான். தோளைத்தொட்ட அந்த நொடி, த்விஜாவின் கண்ணகளில் தேங்கிய கண்ணீர் தன் இமைக்கரையை விட்டு கீழிறங்கியது.

“என்ன ஜா ?”

“ ஒன்னுமில்ல “ என பரபரவென அங்கிருந்து நகர்ந்தாள் , கண்களை துடைத்துக்கொண்டே.

“ உன்ன பழைய மாதிரி வாயாடி ஆக்கறேன் டீ “ என மனதிக் நினைத்தவன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானான்.

கீழிறங்கி கல்பனாவிடம் சென்றான்

“ மா. நா த்விஜாவ கூட்டிகிட்டு ஒரு வாரம் வெளிய போய்டு வரலாம்னு நினைக்கறேன் “

“ போய்டு வாப்பா. அவளுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும் “

“ ஆமா நானும் அதான் நினைக்கறேன். வேலை விஷயமா எனக்கு டெல்லி வர போக வேண்டியது இருக்கு. அப்டியே “

“ போய்டு வாங்க தம்பி. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் “

“ ம்ம். த்வானிய…”

“ நா பாத்துக்கறேன்ப்பா. ட்ரைவர் இருக்காருல்ல. “

“ சரிம்மா. நீங்க சரி சொல்லிட்டீங்க. அவ என்ன சொல்ல போறாளோ “ என கூறினான்.

“ நா வேணா பேசட்டுமாப்பா ?”

“ இல்லாம்மா. நா பேசிக்கறேன் “ என நகர்ந்தான்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் அலுவலகத்தில் திடீரென ராகன் த்விஜாவை அழைத்தான்.

“ த்விஜா “

அவன் கூப்பிட்ட தொனியில் அவளுக்கு தூக்கி போட்டது.

“ என்ன ?”

“ இந்த வாரம் டெல்லி போகணுமே ஏன் சொல்லல ?”

அட்டவணையை பார்த்தவள், அந்த விவரத்தை தான் எப்படி மறந்தோம் என நினைத்துக்கொண்டே

“ சாரி. எதோ மறந்துட்டேன். டிக்கெட் போட்டுடறேன் சார் “

“ உனக்கும் சேர்த்து போடு “ என்றான் ஓரக்கண்ணில் பார்த்தபடி.

“ எனக்கா? எதுக்கு ? “

“ நா வந்துட்டா, த்வானி தனியா இருக்க மாட்டா “

“ அதெல்லாம் அம்மா பாத்துப்பாங்க “

“ இல்ல சார் . அது சரியா வராது “

பொய்க்கோபத்துடன் வெளியே சென்றுவிட்டான். த்விஜாவும் தான் த்வானியை விட்டு தனியே போவத்தில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். வீட்டிற்கு வந்தும் ராகன் தன்னிடம் பேசாதிருந்தது அவளுக்கு மனதுக்கு வறுத்தமாக இருந்தது.இரவு உணவின் போது,

“ தம்பி. ஆஃபீஸ் விஷயமா ரெண்டு பேரும் வெளிய போகணும்னு சொல்லிருந்தியே. எப்போ கிளம்பறீங்க ?”

“ இல்லம்மா.. மேடம் வரலயாம். நா மட்டும் தான் போறேன் “

“ ஏன்மா ?” என்றாள் த்விஜாவிடம்.

த்விஜாவிற்கு தொண்டையில் உணவு கீழிறங்க மறுத்தது. த்வானியை விட்டு தனியே இருக்க முடியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எங்கே தனியே சென்றால், தன் மனதில் உள்ள காதல் மீண்டும் உயிர்த்தேழுமோ என்ற பயம். அப்படி ஆகிவிட்டால், முன்பைபோல் எங்கே ராகன் தன் அனைத்து உணர்ச்சிகளின் வடிகாலாக மாறிவிடுவானோ என்ற எண்ணம் வேறு. இதனாலேயே அவனுடன் தனியே செல்வதை தவிர்க்க நினைத்தாள்.

“ இல்லம்மா. அது வந்து த்வானி .நீங்க எப்டி தனியா..” என இழுத்தாள்.

“ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. த்வானிகுட்டிய நா பாத்துக்கறேன். நீங்க போய்டு வாங்க “

த்விஜாவிற்கு இக்கட்டில் மாட்டியது போலானது. இடையில் த்வானி

“ மா..”

“ என்ன கண்ணா ?”

“ வேலை இருந்தா அத ஃபர்ஸ்ட் முடிக்கணும்னு நீ தான சொல்லுவ “

“ ஆமா.”

“ அப்றம் என்ன. அப்பா வேலை இருக்குன்னு தான கூப்பிடறாரு?”

“ ம்ம்ம் “

“ நீ போய்டு வா. நா பாட்டி கூட சமத்தா இருக்கேன் “

அனைவரும் ஒரே பக்கமாய் பேச த்விஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளின் அமைதி அவளுக்கு விருப்பமில்லை என்பதை உணர்த்தியது. மூவரும் அவளின் பதிலுக்காக காத்திருந்தனர். அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

“ சரி . விடுங்கம்மா. நா போய்ட்டு வந்துடறேன் “ என எழுந்துவிட்டான் ராகன்.

எழுந்தவன், கை கழுவி விட்டு நேரே அறைக்கு சென்று பால்கனியில் நின்று வானில் மின்னும் நட்சத்திரங்களை ரசித்துக்கொண்டு இருந்தான். சாப்பிட்டு முடித்து அவள் மீதி வேலையை முடித்து வருவதற்குள், த்வானி நன்கு உறங்கியிருந்தாள். ராகன் அவளின் தலையை கோதியவண்ணம் ஒரு புத்தகத்தை திறந்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.இருவரையும் பார்த்த த்விஜா, உடை மாற்றி வந்து கட்டிலில் அமர்ந்தாள். ராகன் படிக்கிறானா பார்க்கிறானா என யோசனை வந்தது.

“ ராகா..”

“ என்ன?”

“ கோவமா?”

“ எதுக்கு ?”

“ த்வானிய விட்டுட்டு நா இருந்ததில்ல “

சட்டென திரும்பினான்.

“ த்வானி பிறந்து அஞ்சு வருஷம் தான் ஆகுது “

த்விஜா அமைதியாகினாள். பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டான் ராகன்.

“ த்விஜா… உன்ன சந்தோஷமா வெச்சுக்கறேன்னு சொல்லி தா நா கல்யாணம் பண்ணினேன். அது நடக்கணும்னா, நீ த்விஜாவோட ஒரிஜினல் ஃபார்ம்கு வரணும். வளவளன்னு பேசற ஜா எனக்கு வேணும். எனக்கொரு சான்ஸ் குடு “

“…”

“ என்ன நம்பி வா. என் விரல் கூட உன் மேல படாதுன்னுலாம் நா சொல்லமாட்டேன். நா உன்ன லவ் பண்ணவன் டீ.. புரிஞ்சிக்கோ “

த்விஜாவின் கண்கள் விரிந்தன.

“ அன்னைக்கு என்னவோ டைலாக்லாம் பேசின ?”

“ ஆமா. பேசினேன். அப்டி சொன்னதால தான நீ கல்யாணத்துக்கு சம்மதிச்ச?”

“ ஃப்ராடு “

“ என்னை என்ன பண்ண சொல்ற. நானும் ஆம்பள தான. காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ற ஆசை எனக்கு இருக்காதா? “

த்விஜாவிடம் பதில் இல்லை.காதலிக்கும் நாட்களில் அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை எவ்வாறெல்லாம் கற்பனை செய்தனர் என மனம் அசை போட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது.எழுந்து போக எத்தனித்தவளை , எட்டிப்பிடித்தான்.

“ ஜா.. “

“ ராகா.. விடு கைய.. உன் காதல் டைலாக்குகெல்லாம் நா திரும்பவும் ஏமாற தயாரா இல்லை. நீ என்ன ஏமாத்தினதுலாம் போதும். “

ராகனுக்கு தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது. சட்டென அவளின் கைகளை விட்டான்.அவளை பார்த்த பார்வையில் அவளும் நொறுங்கி போனாள். தன்னிடத்தில் படுத்துக்கொண்டு கண்ணை மூடினான்.



“ ராகா. நீ எவ்ளோ சின்சியர்ன்னு எனக்கு தெரியும். நா உனக்கு சரியான ஆள் இல்ல. “ என மனதில் நினைத்துக்கொண்டு தன்னிடத்தில் படுத்துறங்கினாள்.

காலையில் அவள் எழுந்திருந்த போது, ராகன் அங்கு இல்லை. அவன் அங்கு இல்லாதது அவளுக்கு சுறுக்கென்றது. கீழிறங்கி வந்தவளுக்கு, ராகன் வேலை இருக்கிறதென சீக்கிரம் கிளம்பியது தெரிய வந்தது. அலுவலகம் சென்றவளுக்கோ, ராகன் அங்கும் இல்லை என தெரிய வந்தது. நாள் முழுக்க அவன் வரவே இல்லை. வீடு திரும்பியள் ராகனை நினைத்து வாடினாள். தான் கூறிய வார்த்தகள் அவனை எந்த அளவு வறுத்தியிருக்கும் என நினைத்து மனம் நொந்தது.

த்விஜா ராகனை பார்த்து ஒரு வாரமானது. மனம் விட்டு போனது த்விஜாவிற்கு. தினமும் காலை அவளுக்கு முன் கிளம்பினான். இரவு வெகு நேரம் கழித்து வீடு வருவதாக கல்பனா கூற கேள்விபட்டாள்.

தான் பேசியது தவறோ என முதன் முறையாக அவள் யோசித்தாள். ஒரு வாரம் கழிந்த நிலையில் , அன்று எப்படியேனும் ராகனை பார்த்து பேசுவிடுவதென நினைத்து காத்திருந்தாள்….

( இசைக்கும் …)
 
Top