கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் - 9

" தெரியாது " என கூறிவிட்டு அழுதாள். இதை எதிர்பார்த்தவன் போல் எந்த வித அதிர்ச்சியும் இல்லை ராகன் முகத்தில்.

" சரி..யாரு உன்ன தொறத்துறது ? "

" எனக்கு அப்பன்னு ஒருத்தன் இருக்கானே அவன் தான் "

கல்பனா இடைமறித்து

" ஏன் மா அவ்ளோ கோவம் ? "

" அவன் எனக்கு அப்பனே இல்ல. எங்கம்மா கல்யாணம் பண்ணிகிட்டவன் " கோவத்தில் கண்களும் மூக்கும் சிவந்தன.

" அத இன்னொரு நாள் சொல்றேனே " என கெஞ்சினாள்.

ராகன் மறுபடியும்

" சரி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? " என்றான். அவனின் குரலில் ஒரு ஏக்கம் இருந்தது. கல்பனாவையும், அவனையும் அவள் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க, உள்ளே வந்தாள் த்வானி. த்விஜாவின் கைகளில் இருந்த கட்டை பார்த்துவிட்டு

" மா..என்ன இது ?"

" ஒன்னும் இல்ல டா. சின்னதா அடி பட்டுருச்சு. அவளோ தான் "

" அதுக்கு தான் சொல்ற பேச்சு கேக்கனும்னு சொல்றேன் " என்றாள் பெரிய மனுஷி போல!.

" அங்கிள் அன்னைக்கே சொன்னாருல, இங்க வந்துடுங்கன்னு..அப்டி வந்தா இப்போ கைல உவ்வா பட்டுருக்காதுல..சொல்ற எதையுமே கேக்கறது இல்ல "

அவள் சொல்லி முடிக்கவும் அனைவரும் சிரித்துவிட்டனர், த்விஜா உட்பட. த்வானிக்கு எதும் புரியாவிட்டாலும் அதுவும் சிரித்து வைத்தது. சிரிக்கும் த்விஜாவை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ராகன். அவனை கவனித்த த்வானி

"அங்கிள் அம்மாவ ஏன் மொறக்கிறீங்க ? " என கேட்க, அங்கே மீண்டும் எழுந்தது சிரிப்பலை.

" அம்மா உன்ன கூட்டிட்டு இங்க வர மாற்றாங்கல்ல! அதான் "

" அம்மா..ப்ளீஸ் மா..இங்க வந்துடலாம்மா.. இங்க அங்கிள் பாட்டி எல்லாரும் இருக்காங்கல்ல" என கெஞ்சியது

த்விஜா யோசனையில் ஆழ்ந்தாள். த்வானிக்கு நினைவு தெரிய ஆரம்பித்ததிலிருந்து அவள் தன் அப்பாவை பற்றி கேள்வி கேட்க தொடங்கிவிட்டாள். பல நேரங்களில் அவளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தவித்திருக்கிறாள். மற்ற பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையருடன் செல்வதை, ஜாலியாக விளையாடுவதை பார்த்து அந்த பிஞ்சு உள்ளம் பல நேரம் ஏங்கியதை பார்த்திருக்கிறாள் த்விஜா.

தன் வாழ்க்கை சரியில்லாமல் போனாதால், அக்குழந்தையின் நியாயமான ஆசைகளை மறுக்கும், நிராகரிக்கும் உரிமை தனக்கு இல்லை என மனம் கூறியது.
ஒரு முடிவுடன்

" நா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் " என்றாள் ராகனிடம்.

" ம்ம்ம்ம் "

கல்பனா , த்வானியை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
த்விஜா ராகனிடம் திரும்பினாள்.

" ராகன்..."

த்விஜாவின் அந்த ஒற்றை வார்த்தை, ராகனுள் ஒரு கலவையான உணர்வை கொடுத்தது.

" ம்ம்ம் சொல்லு த்விஜா "

" அது...த்வானி யார் பொண்ணுன்னு எனக்கு தெரியாது.ஆனா அவள என் சொந்த பொண்ணா தா இதுவரைக்கும் பாத்துருக்கேன்.. இனிமேலும் அப்டி தான். "

" சரி..அதுக்கென்ன.."

" அதுனால.." என இழுத்தாள்.

" அதுனால? "

" நீங்க அவள வேற பொண்ணா நடத்த கூடாது "

" நா அப்டி வேறுபாடு காமிப்பேன்னு நினைக்கறியா? "

" அப்டி இல்ல.. அது மட்டும் இல்ல...."

" வேற என்ன ? "

" அது....பேப்பர்ல மட்டும் தான் நம்ம ஹஸ்பன்ட் அண்ட் வைஃப்.. இது உங்களுக்கு ஓகேன்னா, கல்யாணம் பண்ணிக்கலாம் "

ராகன் அமைதியாக இருந்தான்.
" உன்ன எப்டி என்ன லவ் பண்ண வெக்குறதுன்னு எனக்கு தெரியும்." என மனதில் நினைத்தான்.

" சரி. நீ சொல்றது எனக்கு ஓகே.." என ராகன் கூறியதி த்விஜாவிற்கே அதிர்ச்சி தான்.

" என்ன..ஓகே வா ? "

" ஆமா..ஓகே தான் ..ஏன்..? உன்னால அத காப்பாத்த முடியாதுன்னு நினைக்கறியா? " என்றான் கேலியாக!

" அ..அது..அதெல்லாம் ஒன்னும் இல்லயே. சொல்றதே நா தான்.. "

" சரி. கண்டீஷன் எனக்கு ஓகே..உனக்கு ஓகேன்னா, வெளிய போகலாம் "

" போகலாமே..எனக்கு என்ன! நா ரெடி.."

" ம்ம்ம் சரி..அப்போ ஏற்பாடெல்லாம் பண்ண சொல்றேன்" என வெளியேறினான். கல்பனாவிடம் விவரம் சொல்ல, அவருக்கு ஏக சந்தோஷம்.

த்விஜா கையின் காயம் ஆற பத்து நாட்கள் பிடித்தது. அடுத்த முஹூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எளிமையாக ரெஜிஸ்டர் ஆஃபீஸில் திருமணம் முடித்து , அப்படியே பதிவும் செய்து கொள்ளலாம் என!

காலை கதிரவன் அன்று ஓய்வெடுக்க முடிவெடுத்தானோ என்னவோ, அதிகாலையில் இருந்தே மேகம் கொட்ட துவங்கியது.

காலையில் கண்விழித்த த்விஜா, குளித்து ராகன் எடுத்திருந்த அந்த காப்பர் சல்ஃபேட் கலர் பட்டு புடவையை உடுத்தினாள். கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கின. ஐந்து வருடமாக காலியாக இருந்த நெற்றியில் பொட்டிட்டாள். வெற்று சங்கு கழுத்தில் தன் அன்னையின் ஒரு சிறிய சங்கிலியை அணிந்தாள்.
அவ்வறைக்கு ராகனை இழுத்து வந்தாள் த்வானி.

" அங்கிள்..இங்க பாருங்க.. அம்மாவ "

" ம்ம்ம்ம் " என த்விஜாவை பார்த்தவன், மெய் மறந்து போனது என்னவோ உண்மை தான்.ஒப்பனை இல்லா முகம், தழைய கட்டிய நீல நிற புடவை, கழுத்தில் மெல்லிய சங்கிலி, கைகளில் இரு வளையல்கள் என எளிமையாக இருந்தவளும் அவனுக்கு தேவதையாக தெரிந்தாள்.

" அங்கிள்... அங்கிள் " என த்வானி பல முறை கத்திய பின்னரே, தன்னிலை அடைந்தான்.

" போலாமா " என்றான்

" ம்ம்ம்ம் "

" த்வானி குட்டி வாங்க போலாம் " என அழைத்துக்கொண்டு முன்னே நடந்தான். த்விஜாவுடன் கல்பனா வர, நால்வருமாய் ரெஜிஸ்டர் ஆஃபீஸ் சென்றனர்.

" ராகப்ரியன் " என ரெஜிஸ்டர் அழைக்க, அவன் கையெழுத்திட்டான்.

" த்விஜாவந்தி " என அழைக்க, அவளும் கையெழுத்து போட்டாள்.

" மாலைய மாத்திக்கோங்க" என கூற இருவரும் கூறியபடி செய்தனர்.

" இந்தப்பா..கட்டு " என தாலியை ராகனிடம் கல்பனா தர, அதை வாங்கி த்விஜா கழுத்தில் முடிச்சிட்டு அவளை தன் தாரம் ஆக்கினான்.

" சாட்சி கையெழுத்து யாரு போடறாங்க "

ராகனுக்காக கையெழுத்திட, த்விஜாவிற்கு கண்களில் நீர் கோர்த்தது. தனக்கு ஆதரவாக யாருமில்லை என எண்ணம் பொங்கி, கண்ணீராக மாறி, கரையை கடந்த அந்த நொடி த்விஜாவின் கைகளை ஆதரவுடன் பற்றினான். தன் கைகளை பற்றியிருந்த கைகளின் ஆதரவு அவளுக்கு தேவையாய் இருந்தது.

" நான் போடறேன் " என குரல் வந்த திசையில் நின்றிருந்தான் அவன்....



( இசைக்கும்....)
 
Top