நந்தவனம்
நரேன் சுஜாவை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். சீக்கிரம் சுஜா, டைம் ஆகுது பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் வந்துடுவாங்க. அவங்கள பார்த்துட்டே நீ என்னை கவனிக்கவே மாட்டே. லன்ச் போட்டாச்சா. எனக்கு ஆபீசுக்கு நேரம் ஆச்சும்மா என்றான். கைகளை நாப்கினால் துடைத்தவாறே சுஜா அவனுடைய லன்ச் பேக்கை அவனிடம் கொடுத்தாள். ஏன் இன்னைக்கு இவ்வளவு அவசரம் உங்களுக்கு என்று கேட்டபடியே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள். நேத்தே சொன்னேனே, இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதனால் தான். ஒகே சுஜா நான் வரட்டுமா என்று கை ஆட்டிவிட்டு கிளம்பினான்.
சுஜா கடிகாரத்தை பார்த்தாள். 8.30ஐ காட்டியது. நரேன் சொன்னது சரிதான். குழந்தைங்க வர டைம் ஆச்சு என்று தனக்குள்ளயே சொல்லியபடி மடமடவென்று மீதி வேலையை கவனித்து, டிபன் சாப்பிட்டு தன்னை தயார் செய்து கொண்டு வீட்டின் முன் பக்கம் இருக்கும் பெரிய சிட்டவுட்டில் வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். தோட்டக்காரரின் கவனிப்பால் ரோஜாக்களும், செம்பருத்தியும், மல்லியும், அரளியும் பூத்து குலுங்கி ஒன்று சேர்ந்து ரம்மியமாக காட்சி அளித்தன. பெரிய வீடு. பின் பக்கம் தங்களுக்கான கிச்சன், இரண்டு பெட்ரூம் போக மீதி உள்ள பெரிய ஹால், அதைத்தான் அவள் அழகாக டே-கேர் குழந்தைகளுக்காக மாற்றி இருந்தாள் சுவர் முழுவதும் விதவிதமான கார்ட்டூன்கள், பூக்கள், பழங்கள் என கண்ணை கவரும் விதமாக இருந்தது. குழந்தைகள் விளையாட என்று சின்ன சின்ன பொம்மைகள். அவர்களை தூங்க வைக்க தேவையான குஷன்கள், உதவிக்கு ஒரு ஆயாம்மா. குழந்தைகள் இருக்குமிடம் என்பதால் ரொம்பவுமே சுத்தமாக வைத்துக்கொள்வாள்.ஒரு ஓரத்தில் டிவி. அதில் கார்ட்டூன்கள் மற்றும் நர்சரி ரைம்ஸ் ஓடிக்கொண்டிருக்கும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே டிவி. மற்ற நேரங்களில் விளையாடுவதற்கு சிட்டவுட்டில் ஊஞ்சல், சீசா எல்லாம் உண்டு. குழந்தைகள் ஒன்பது மணிக்கு வருவார்கள். மாலை ஆறு மணி வரை அவர்களுடன் மிகவும் சந்தோஷமாகவும் சுறுசுறுப்புடனும் பொழுதை கழிப்பாள். அவளை பொருத்த வரை வெளி உலகமே அந்த நேரத்தில் மறந்து போகும்.
ஒவ்வொரு குழந்தை பண்ணும் விஷமங்களையும் சேட்டைகளையும் ரசிப்பாள். குழந்தைகள் சீக்கிரம் பழகி அவளிடம் ஒட்டிக்கொண்டு விடும். குழந்தைகளின் அம்மாக்கள் தினமும் ஒரு தடவையாவது சொல்லிவிட்டுத்தான் போவார்கள், சுஜா உங்ககிட்ட குழந்தை இருக்கிறதால டென்ஷன் இல்லாமல் ஆபீசில் வேலை பார்க்க முடிகிறது என்று. உண்மை தான். சுஜா மிகவும் பொறுமைசாலி. சனி ஞாயிறு வந்து விட்டால் அவளுக்கு ரொம்பவே போர் அடிக்கும். குழந்தைகள் இல்லாத ஹாலை வந்து எட்டி எட்டி பார்த்து விட்டு போவாள். டே-கேர் ஆரம்பிக்கும் போது ரொம்பவும் தயங்கித்தான் ஆரம்பித்தாள் நம்மால் முடியுமா என்று. போகப்போக அவளுக்கு தயக்கம் மறைந்து ஆசை அதிகமாகி ஒவ்வொரு நாளும் ஒரு விதமாக பார்த்து பார்த்து குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொண்டு செயல் படுத்த ஆரம்பித்தாள். இவர்களை தாண்டி அவளால் எதுவும் யோசிக்க முடியாது. ஷாப்பிங் போனால் கூட முதலில் டாய்ஸ் செக்ஷன் தான் போவாள்.
நரேனுக்கு, அவளுக்கும் குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரவது உண்டா? ஆனால் அவர்கள் விஷயத்தில் கடவுள் கண் திறக்கவே இல்லை. எத்தனை டாக்டர்கள் எத்தனை ட்ரீட்மெண்ட். பணம் செலவானது தான் மிச்சம். ஆனால் மன உளைச்சல் அதற்கு மருந்தே கிடையாது. சுற்றி உள்ள சொந்தங்கள் வேறு என்ன சுஜா ஏதாவது விஷேஷம் உண்டா? என்று முதலில் ஆர்வத்துடன் கேட்டவர்கள் பிறகு விஷமமாக கேட்டார்கள். இப்படியே பத்து வருஷம் போனது. ஒரு நாள் இரவு சுஜா ரொம்ப நேரம் நரேனிடம் இது பற்றி பேசி அழுதாள். அவன் அவளை கஷ்டப்பட்டு சமாதானம் செய்து, சுஜா குழந்தை ஒன்று தான் வாழ்க்கையா? அதைத்தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. சுஜா நாமும் நிறைய முயற்சி பண்ணியாச்சு. டாக்டர்களும் என்ன பண்ணுவார்கள்? நமக்கு எது எப்போ கிடைக்கணுமுன்னு இருக்கோ அப்ப தானா கிடைக்கும். அது வரை உனக்கு பிடித்ததை செய். ஏன், நமக்கு பிறந்தால் தான் குழந்தையா? நம்ம வீடே இவ்வளவு பெரிசா இருக்கு. இங்கயே ஒரு டே-கேர் ஆரம்பி. உனக்கு பொறுமையும் அதிகம், குழந்தைகளையும் பிடிக்கும்.எல்லா குழந்தைகளும் உன்னுடைய குழந்தைகள் தான். சுஜா, எதுவுமே நம்ம கையில் தான் இருக்கு. மனசை கண்டபடி யோசிக்க விடாதே. இப்படி செய்தால் உனக்கும் ஒரு மாறுதல் இருக்கும். யோசித்து பார் என்றான். இரண்டு நாட்கள் நன்றாக யோசித்தாள் நம்மால் முடியுமா என்று? ஒரு முடிவுக்கு வந்தவளை டே-கேர் தொடங்க தேவையான எல்லாவற்றையும் யோசித்து மிகவும் அழகாக அதை செயல் படுத்தினாள். அங்கு வரும் அத்தனை குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே நினைத்து அவர்களுடனே ஒன்றி போனாள்.
Last edited: