தளிர் மின்னிதழ் நடத்திய நகைச்சுவைச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.
நளபாகம்
சடகோபன் ஒரு நல்ல முகூர்த்த நாளில் கோதையை மங்கலநாண் பூட்டித் திருமணம் செய்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்தான்.
கல்யாணத்திற்குக் காத்திருக்கும் பிரம்மசாரிப் பசங்க ஏங்கிப் போய்க் கிடப்பது இரண்டே விஷயங்களுக்குத் தான்.ஒன்று வாய்க்கு ருசியான வீட்டு சாப்பாடு. இன்னொன்று அழகான இளம் பெண்ணின் அண்மை.
அந்த முதல் ஆசையில் டன் டன்னாக மணலைக் கொட்டினாள் நமது நாயகி கோதை.சமையலறையில் புகுந்தாலே பெரிய ரகளை தான்.
காபிப் பொடியைப் பாலில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கோதை காபி கலந்த அழகும் டீத்தூளை ஃபில்டரில் போட்டு அவள் தேநீர் போட்ட சிறப்பும் திருமணமான புதிதில் பெரிதாகத் தெரியவில்லை சடகோபனுக்கு.
அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டு வீட்டை வலம் வந்த மோகத்தில் அதெல்லாம் பெரிய விஷயமாக உறுத்தவில்லை.
கோதையைப் பெண் பார்க்கப் போன சமயம் கோதையின் அம்மா,
" என் பொண்ணு சமைச்சால் எட்டூருக்கு மணக்கும்.சட்டியில் இருப்பது நிமிஷமாகக் காலியாகி விடும்."
என்று சொன்னதன் உண்மையான அர்த்தம்
அவள் உப்புமா கிண்டியபோது தான் புரிந்தது சடகோபனுக்கு.
அடுப்பில் என்னவெல்லாமோ போட்டு அவள் கிண்டியதில் ஏதேதோ கருகி ஒரு மாதிரி குடலைப் புரட்டும் நாற்றம் அக்கம் பக்கத்தில் பரவ,எல்லோரும் அவரவர் வீட்டு வாசலுக்கு வந்து சடகோபனின் வீட்டை வெறியுடன் பார்க்க
சடகோபன் கதவையெல்லாம் இறுக்க மூடி வீடு பூரா நறுமணக் குப்பிகளை விஷ் விஷ் என்று பீய்ச்சியடித்து ஊதுபத்தி,சாம்பிராணி எல்லாம் காட்டினான். புகைமண்டலமாக வீடு மாறி சினிமா ஷுட்டிங்கிற்காகப் போட்ட தேவலோக செட் ஆனது.
நிமிஷமாக உப்புமா தெருக்கோடியில் இருந்த குப்பைத் தொட்டிக்குச் சென்று பாத்திரத்துடன் தஞ்சமடைந்தது.பாத்திரத்துடன் ஃபெவிகாலை விட உப்புமா உறுதியாக ஒட்டிக் கொண்டு விடக் கரண்டியும் எடுக்க வரவில்லை.பாத்திரமும் கரண்டியும் காதலில் கட்டுண்டு கிடந்தன..அவன் போட்ட உடனே அங்கு ஓடி வந்து அந்த உப்புமாவை முகர்ந்து பார்த்த தெருநாயொன்று சடகோபனைக் கொலைவெறியுடன் வெறித்துப் பார்த்ததில் பயந்து ஓடி வந்தான் சடகோபன்
அன்றைய உணவு வெளியே இருந்து ஆர்டர் செய்யப் பட்டது..சமையலறை இருந்த களேபரம் காணக் கண் கொள்ளாக் காட்சி.உப்பு ஜாடி ஆவென்று வாய் பிளந்து சடகோபனைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிக்க அதன் மூடி எண்ணெய்ப் பாத்திரத்தில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டு கிடந்தது.மிக்ஸியில் சட்னிக்காகப்
போடப்பட்ட தக்காளி,மிளகாய், கொத்தமல்லி இத்யாதி இத்யாதி எல்லாம் சமையலறை மேடை முழுவதும் வாரி இறைக்கப் பட்டு வண்ண வண்ண ரங்கோலி.அத்தனை அமர்க்களத்திலும் நடுவில் கசங்கிய உடையுடன் நின்று கொண்டிருந்தாள் கோதை அசோகவனத்து சீதையாக.
சேற்றில் முளைத்த செந்தாமரையாய் முகத்தின் அழகு கொஞ்சம் கூடக் குறையாமல் நின்றாள் நமது கோதை.
அதிர்ச்சியில்' பேபே' என்று வாய் குழறிப் பேச்சடைத்து நின்ற அவளைக் கோபித்துக் கொள்ளாமல் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளை வெளியே கூட்டி வந்து படுக்கையறையில் இருந்த பாத்ரூமில் கொண்டு போய் விட்டான் சடகோபன்.
அவளைக் குளித்து உடை மாற்றி வரச் சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து அசாத்தியப் பொறுமையுடன் எல்லாவற்றையும் சுத்தம் செய்து சமையலறையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தான்.
அதோடு முடிந்ததா? அடுத்த நாள் காலையில் திரும்பவும் துணிச்சலுடன் சமையலறையில் சாகசம் புரியப் புகுந்து விட்டாள் கோதை.ஆப்பம் செய்வதற்காக கிரைண்டரில் அரிசி, தேங்காய் எல்லாம் போட்டு விட்டு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள்.
இரவு சமையலறையைச் சுத்தம் செய்த வேலையால் அதிகமாகக் களைத்துப் போன சடகோபன் ஏதோ டிரெயின் ஓடும் சத்தம் போல வீட்டிற்குள் இருந்து கேட்கத் தூக்கம் கலைந்து எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டு சத்தம் கேட்ட திசையில் விரைந்தான் .
சமையலறையில் இருந்து தான் அந்தச் சத்தம்.
கூடவே தேம்பித் தேம்பி அழும் சத்தம்.கனவு காண்கிறோமோ என்று எண்ணிக் கொண்டே சமையலறையை அடைந்தான்.யுத்தகளம் தான்.
சடகோபனைப் பார்த்த கோதை அவனை ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.அதிலேயே மனம் குளிர்ந்து மயங்கிப் போன சடகோபன் அவளுடைய கைகள் காட்டிய திசையில் பார்த்துத் திகைத்தே போனான்.
கிரைண்டர் சமையல் மேடையில் அங்குமிங்கும் சடுகுடு ஆடிக் கொண்டிருந்தது.
அது என்னவென்றால் கணவன் எழுந்து வருவதற்குள் ஆப்ப மாவைத் தயார் செய்து வைக்கும் ஆர்வக் கோளாறில் கோதை ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும் என்பதை செய்முறையில் பார்த்து விட்டு
தேங்காய் மூடியை அப்படியே அரிசியுடன் சேர்த்து கிரைண்டரில் போட்டு விட அந்தத் தேங்காய் மூடி கிரைண்டரில் அப்படி ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தது.கிரைண்டரும் தனது எதிர்ப்பைக் காண்பிக்க மேடையில் அதனுடைய வயர் ( wire) இழுபடும் வரை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தது.சுவற்றில் தண்ணீரும் வாரி அடித்திருந்ததால் ஸ்விட்ச் போர்டும் ஈரமாக இருந்ததை கவனிக்காமல் அந்த சுவிட்சை அணைக்கச் சென்ற சடகோபன் மின்சாரத்தால் தாக்கப் பட்டு தடாரென்று கீழே விழக் கோதை பயந்து அலறிக் கொண்டு அவன் மேலே விழ இரண்டு பேரும் கட்டியுருண்டு புரண்டு சிறிது நேரத்தில் வெட்கத்துடன் எழுந்தனர்.
இந்த முறை சடகோபன் தனது செருப்பை அணிந்து கொண்டு வந்து சுவிட்ச்சை ஒரு மரக் கம்பால் அணைக்க அந்த கிரைண்டரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி நின்றது.
சரியாக அந்த நேரத்தில் கோதையின் அம்மா தன்னுடன் யாரையோ அழைத்துக் கொண்டு வந்தவள்
வாசல் கதவு திறந்திருந்ததால் உள்ளே நுழைந்தாள்.
" கோதை கோதை,வாசற்கதவைத் திறந்து வைத்து விட்டு எங்கேடி போனே!"
சமையலறையில் மகளையும் மருமகனையும் ஆலிங்கன கோலத்தில் கண்டு கோதையின் அம்மாவிற்கு ஒரே வெட்கம்.
அசட்டுச் சிரிப்புடன் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து மகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
" வாம்மா வா.அட,பெரியம்மாவா,நீ எப்ப வந்தே? ஏன் பெரியம்மா கல்யாணத்திற்கு வரலை?"
என்று தன்னுடைய பெரியம்மாவிடம் கோதை கொஞ்ச ஆரம்பித்தாள்.சடகோபனுக்கு மாமியார் மேல் பயங்கரக் கோபம்.கோதையின் சமையலைப் பற்றி அத்தனை கதை விட்டிருந்தாளே! மரியாதை கருதிப் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருந்தான்.
கோதையின் அம்மாவிற்குப் புரிந்து விட்டது.
" மாப்பிள்ளை,கோதையைக் கோவிச்சுக்காதிங்கோ! அவளுக்கு சமையல் சுட்டுப் போட்டாலும் வராது. கல்யாணத்துக்கு முன்னால கத்துத் தரணும்னு நானும் முயற்சி செய்து பாத்தேன்.அவளுக்கு வணங்கவிலை.ஆனால் நீங்கள் பொண் பாக்க வந்ததில் இருந்து அவள் மனசில் குடி கொண்டு விட்டதால் கல்யாணத்தை நல்லபடியாக நடத்த நான் பொய் சொன்னேன்.பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்கோ."
கோதை சடகோபனைப் பார்த்துப் புன்முறுவல்
பூத்து நிற்க சடகோபனும் மயங்கிக் கிறங்கிப் போனான்.
" இதையெல்லாம் யோசிச்சுத் தான் நான் எங்க அக்காவைக் கூட்டி வந்திருக்கிறேன்.அக்காவிற்குக் குடும்பம் கிடையாது.கிராமத்தில் தனியா இருந்தவளை போய்க் கூட்டி வந்து விட்டேன்.கொஞ்ச நாட்கள் இங்கே உங்களுடன் இருந்து கோதைக்கு சமையலும் கத்துக் கொடுப்பா.உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லைன்னா நான் அக்காவை இங்கே விட்டு விட்டுப் போகிறேன்.அக்காவிற்கும் கோதை மேல் ரொம்பப் பிரியம்."
சரியென்று தலையாட்டி விட்டு சடகோபன் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று ஆஃபிஸுக்குக் கிளம்பினான்.
கோதையின் பெரியம்மா ஜானகி அவனுக்குச் சுடச்சுட ஆவி பறக்கும் உப்புமாவும் தொட்டுக் கொள்ள ஒரு சட்னியும் பத்தே நிமிடத்தில் தயார் செய்து விட்டார்.சும்மா சொல்லக் கூடாது.நல்ல ருசியாகவே இருந்தது.
ஜானகியும் மெல்ல மெல்ல அவர்கள் வீட்டில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டாள்.கோதைக்கு அம்மாவிடமாவது கொஞ்சம் பயமுண்டு.பெரியம்மாவிடம் கொஞ்சம் கூட இல்லை.வேலையோ சமையலோ ஒன்றும் கற்றுக் கொள்ளவுமில்லை.சடகோபனால் எப்போது பார்த்தாலும் நன்றாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அழகுப் பதுமையாக நின்ற மனைவியைக் கடிந்து கொள்ளவும் முடியவில்லை.சமையல் தான் வணங்கவில்லையே ஒழிய மற்றபடி வீட்டைப் படு நீட்டாக சுத்தமாக வைத்துக் கொண்டாள்.எல்லா சாமான்களும் ஒழுங்காக அந்தந்த இடத்தில் வைக்கப் பட்டு நேர்த்தியாகவே இருந்தது.
பெரியம்மா ஜானகியும் சமையலில் பயங்கர எக்ஸ்பர்ட்.பருப்புருண்டைக் குழம்பு,அவியல்,,காரக்குழம்பு ,வாழைப்பூ வடை,ஜவ்வரிசி வடை மட்டுமல்லாமல் சப்பாத்தி,குருமா,பனீர் மசாலா,புலாவ் என்று வட இந்திய உணவு வகைகளும் சமைத்துப் போட சடகோபனும் கோதையும் விதவிதமான உணவை உண்டு ருசித்தார்கள்.ஜானகியைத் தங்களுடன் நிரந்தரமாக தங்கச் சொல்லிக்
கோதை அவளைத் தாஜா செய்து கொண்டிருந்தாள்.
புதிய பிரச்சினை ஒன்று வெடித்தது.பெரியம்மாவின் புகுந்த வீட்டுப் பக்கம் ஒரு கல்யாணம் கோயம்புத்தூரில்.கண்டிப்பாகப் போகவேண்டிய கட்டாயம்.இரண்டு நாட்கள் தானே என்று அனுப்பி விட்டார்கள்.பெரியம்மா தானே ஆட்டோ பிடித்து ஸ்டேஷனுக்குக் கிளம்பி விட்டார்.
சரியாக அடுத்த நாள் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட,
" ஜானகி எப்போது திரும்பி வருவாரோ ? எப்படி சமாளிக்கப் போகிறோமோ?"
என்று சடகோபன் கவலையில் ஆழ்ந்தான்.
" பயப்பட வேண்டாம்.நான் சமையல் செய்து சமாளிச்சுடுவேன்."
" அம்மா தாயி,வேண்டவே வேண்டாம்.சமையலை நானே பாத்துக்கறேன்.நீ மத்த பாத்திரம் கழுவும் வேலை,வீடு துடைக்கும் வேலையெல்லாம் பாத்துக்கோ.உன்னைப் பார்த்ததுமே சமையலறை உபகரணங்கள் எல்லாம் தலைதெறித்து ஓடும்."
கோதை வருத்தத்துடன் தலை குனிந்தாள்.
" எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கு பொம்பளை தான் சமைக்கணும்னு.என் பொண்டாட்டிக்கு
நான் சமைச்சுப் போடறேன்.நீ கவலைப் படாதடி ராஜாத்தி."
என்று சொல்லி விட்டு நிஜமாகவே சடகோபன் சமையல் வேலையை எடுத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து வாசல் மணியடிக்கத் திறந்து பார்த்தால் பெரியம்மா.
" என்னாச்சு பெரியம்மா? எப்படி வந்தே ஊரில் இருந்து? பஸ்,டிரெயின் எல்லாம் ஓடலையே!"
" அதையேன் கேக்கறே.நான் ஊருக்கே போகவில்லை.வழியில் என் ஃப்ரண்டைப் பார்த்தேன்.அவள் என்னை வலுக்கட்டாயமாகத் தன் வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டாள்.நாளைக்கு நானும் கோயம்புத்தூர் போணும்.சேந்து போகலாம்னு சொன்னாள்.கடைசியில் போகவே முடியலை.கல்யாணத்தையும் தள்ளி வச்சுட்டா.எப்படியோ கஷ்டப்பட்டு அவள் வீட்டில் இருந்து வந்து சேந்தேன்."
என்று சொல்லக் கோதை தன்னுடைய பெரியம்மாவைப் பிரியத்துடன் கட்டிக் கொண்டாள்.
சடகோபனுக்கும் பெரிய நிம்மதி.
புவனா சந்திரசேகரன்,
08/07/2021.