கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நான் தேடிய பொக்கிஷம் நீ 10

என்னுடைய காதலை உணர்ந்த அந்த நொடியே அதை உரியவளிடம் சொல்லி விட வேண்டும் என்ற வேகம் எனக்கு வரவில்லை.

அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
ஒரு முறை கயல்விழி தன்னுடைய தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததை நான் முழுவதுமாகக் கேட்க நேர்ந்தது.

கபிலன் நேசிக்கின்ற பெண் மீனலோஜனிக்கு அவள் அறிவுரையாக அள்ளி வீசியதைக் கேட்ட எனக்கே காதில் இரத்தம் வராத குறையாகி விட்டது.

பாவம் அந்தப் பிள்ளையின் கதி என்னவாகி இருக்குமோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
அவள் பேசியதைப் போலவேயே நானும் பேசிக் காட்டுகிறேன் அத்தான் பாருங்கள்"
எனச் சொன்ன கவியரசன் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

"நான் பேசி முடிக்கும் வரைக்கும் நீ வாயைத் திறக்கக் கூடாது மீனு.
உன்னுடைய மனதில் இருப்பதை நீ மறைக்க நினைக்கலாம் ஆனால் அது எனக்குத் தெரியாமல் போய் விடும் என்று மட்டும் நினைத்து விடாதே.

என்னை எதற்காக உன்னுடைய காதலுக்கு எதிரியாக நினைக்கிறாய்.
நீ காதலிக்கும் விடயத்தை உன் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என்று பயமாக இருக்கிறதா.?
ஒருவேளை எனக்கு வேறு வேலையே இல்லை என்று நினைத்து விட்டாயோ...?

இப்படியே கயல்விழி பேசிக் கொண்டு இருக்கின்ற போது அந்தப் பிள்ளை இடையே ஏதோ சொல்ல வந்தது.

உடனேயே தலையில் நச்சென்று ஒரு குட்டுக் கொடுத்து 'நான் பேசி முடிக்கும் வரை வாயைத் திறக்காதே என்று சொன்னேனா இல்லையா' என்றபடி முறைத்தாள்.

அதனால் அந்தப் பிள்ளை வாயை மூடிக் கொண்டு அவளைப் பார்த்தது 'மீனு உன்னுடைய அம்மா கூலி வேலைக்குப் போய்க் கஷ்டப் படுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இப்போது இரவு வேலைக்கு வேறு போகிறார்கள். இதெல்லாம் யாருக்காக உனக்காகத் தானே...

நீ ஒரு உண்மையான நல்ல மகளாக என்ன செய்ய வேண்டும்.

கூலி வேலைக்குப் போகும் போது எத்தனை உடல் வலி எத்தனை அவமானம் என்று அவர் எதிர் கொண்டிருப்பார்கள் தெரியுமா...' என்றவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

'ஆனால் என்றாவது அதை எல்லாம் உன்னிடம் சொல்லிப் புலம்பி இருப்பார்களா?
அம்மா உன்னை எவ்வளவு நம்புகிறார்கள்.

நீ நன்றாகப் படித்து அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டாமா?
அவரது வலிகள் வேதனைக்காக நீ என்ன செய்யப் போகிறாய்?
உன் காதலைத் தவறு என்று நான் சொல்லவில்லை.
அதற்கான இடம் இது இல்லை என்று தான் சொல்லுகிறேன்.
முதலில் உனது கவனம் சிதறாமல் நன்றாகப் படி.

உண்மையிலேயே உன்னை நேசிப்பவராக உனது காதலர் இருந்தால் உனக்காகக் காத்திருப்பார். அப்படியில்லாமல் படிப்பு முடியும் வரை சும்மா பொழுது போக்காகப் பழகலாம் என்று இருப்பவராக இருந்தால் நீர்க்குமிழி போலத் தோன்றிய வேகத்தில் காணாமல் போய் விடுவார் சரியா.?

நான் சொன்னதை எல்லாம் எனக்காக இல்லாது விட்டாலும் உனது குடும்பத்திற்காக யோசித்துப் பாரு மீனு.

அடுத்த முறை உன் அம்மா வரும் போது அவரது கைகளை விரித்துப் பார். அந்தக் காயங்கள் நீ உண்ணும் ஒவ்வொரு சோற்றுக் கவளத்தின் போதும் அவர் முகத்தை மட்டும் தான் நினைவுக்குக் கொண்டு வரும்.

நான் சொன்ன விடயங்களை இவளுக்கு என்ன தெரியுமென உதாசீனம் செய்யாமல் தனியாக இருக்கும் போது யோசித்துப் பாரு மீனு... இப்போது வா சாப்பிடப் போகலாம்'
என்றவாறு அந்தப் பிள்ளையை அழைத்துப் போய் விட்டாள்.


இதையெல்லாம் கேட்டதற்குப் பின்னரும் காதல் கத்தரிக்காய் அவரைக்காய் என்று நான் போய் நின்றால் எனது நிலை என்னவாகும் என்று தெரியாத முட்டாள் இல்லை நான்.

அத்தோடு அவள் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது தானே.
படிப்பை முடித்த பின்னர் எனது காதலை அவளிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

அவள் தான் வேறு யாரையும் இப்போதைக்குக் காதலிக்கப் போவதில்லை என்பது அவளது பேச்சில் நன்றாகத் தெரிந்து விட்டதே.

அதற்குள் எல்லோரும் நந்தவனத்திற்குள் போய் விட்டார்கள்.

வாசலில் இருந்து நந்தவனம் முடியும் வரையில் வண்ண மலர்ச் செடிகள், கொடிகள் கூட்டங்களாக மனதைக் கவரும் வகையில் அழகாக வளர்க்கப் பட்டிருந்ததை எல்லோரும் சந்தோஷமாக இரசித்துக் கொண்டிருந்தார்கள்.

என் கால்களோ அது பாட்டிற்குக் கயல்விழி சென்ற திசைக்குச் செல்லத் தொடங்கி விட்டிருந்தது.

அவள் படு தீவிரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு 'என்ன எந்தச் செடியைப் பிடுங்கிக் கொண்டு ஓடலாம் என்று திட்டம் நடக்கிறது' என்று என் போக்கில் கேட்டு வைத்தேன்.

அதற்கு அவள் 'அடி ஆத்தாடி உங்களுக்கு நான் நினைத்தது எப்படித் தெரியும். அதோ அங்கே பாருங்களேன் தனி மஞ்சள் நிறத்தில் அடுக்கடுக்காகச் செவ்வந்திப்பூ எவ்வளவு அழகாகப் பூத்திருக்கிறது. இந்த வகைப் பூச் செடியை நான் தேடாத இடமேயில்லை இதை எப்படியாவது கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் ஏதும் உதவி செய்ய முடியுமா?' என்று விட்டு என்னை அண்ணாந்து பார்த்தாள்.

அவள் பார்த்த பார்வையில் அப்படியே மயங்கிச் சரிந்து விட்டேன். அப்படித் தானே நினைக்கிறீர்கள். ஆனால் அது தான் இல்லை. அதற்கு மாறாக
'என்னது நீ அடிக்கின்ற கொள்ளைக்கு என்னையும் கூட்டுச் சேர்க்கிறாயா குள்ளப் பூசணிக்காய்.' என்று ஒரு வேகத்தில் திட்டி விட்டேன்.

இதற்குப் பெயர் தான் பொல்லுக் கொடுத்து அடி வாங்குவது என்பது... அவ்வளவு தான் மாரியாத்தா என் தலையில் ஏறி அமர்ந்து வேப்பிலை அடிக்காத குறையாகி விட்டது.

'என்னது நான் கொள்ள அடிக்கிறேனா ஆமாம் இங்கே மஞ்சள் மாணிக்கம் கொட்டிக் கிடக்கிறது பாருங்கள் நான் கொள்ளையடிப்பதற்கு. ஒரு பூவைப் பறித்துக் கொடுக்கத் தெரியவில்லை பெரிய பேச்சு மட்டும் நன்றாகப் பேசத் தெரிகிறது. அது சரி யாரு குள்ளப் பூசணிக்காய் நானா? குத்தி வைச்ச கம்பாட்டம் நெடுநெடுவென்று எல்லோருக்குமாகச் சேர்த்து வளர்ந்து தொலைத்து விட்டு, நீங்கள் குனிந்து பார்க்கிற நாங்கள் எல்லாம் குள்ளமா? நன்றாக இருக்கிறது உங்கள் கதை...' என்று திட்டிக் கொண்டு போனாள்.

'அம்மா தாயே தெரியாத் தனமாகச் சொல்லித் தொலைத்து விட்டேன். ஆளை விட்டு விடு...' என்று கையெடுத்துக் கும்பிட வேண்டியதாகப் போய் விட்டது.

அதற்கு அவள் 'மரியாதையாகப் பூவைப் பறித்துக் கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.' என்று இழுத்தாள்.

என்ன செய்து விடுவாய் என்பது போல நான் வேண்டுமென்றே முறைக்க
'அது தான் எனக்கே தெரியாது என்று விட்டேனே. அப்புறம் என்ன முறைப்பு வேண்டிக் கிடக்கிறது.' என்றபடி மெதுவாக நழுவிச் சென்றவளைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது.

அவள் சென்ற பின்னர் மஞ்சள் நிறச் செவ்வந்திப் பூக்களைத் திரும்பிப் பார்த்தேன், பூக்கள் அத்தனையும் என்னைப் பார்த்துக் கேலி செய்வது போல இருந்தது.

அதன் பிறகு மலைப் பிரதேசம் நோக்கிப் பேருந்து செல்லத் தொடங்கியது.

தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் பாட்டுப் பாடிக்கொண்டே கொழுந்து பறித்துக் கொண்டிருப்பதையும், மலை முகட்டில் சூரியன் எட்டி எட்டிப் பார்ப்பதையும், பனி மூட்டம் விலகியும் விலகாமலும் ஆட்டங் காட்டுவதையும் பார்க்கப் பார்க்கப் புத்துணர்ச்சி உருவாகத் தொடங்கியது.

அந்த இடத்தில் காலை உணவை முடித்துக் கொள்ளுவதற்காகச் சிறிது நேரம் தாமதம் செய்யும்போது மற்றப் பிள்ளைகளெல்லாம் சில சில பாறைகளில் ஏறி நின்று வேடிக்கை பார்க்க, கயல்விழி மட்டும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பதை பார்த்த நான், அவளது தந்தை சொன்னதை மறந்து போய் அவளைக் கேலி செய்து விட்டேன்.

ஆனால் அவளோ வழமை போலப் பட படவென வெடிக்காமல், என்னை லேசாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் நகர்ந்து போய் விட்டாள்.

என் மரமண்டைக்கு அப்போதாவது உறைத்திருக்க வேண்டாமா?
ரோஷம் வந்து விட்டதோ என்று மட்டும் நினைத்துக் கொண்டேன்.

அவள் ஓரமாகச் சென்று ஒரு பாறை மீது அமர்வதைப் பார்த்து விட்டு, நானும் அவளருகில் போய் அமர்ந்து கொண்டேன்.

எப்படி அவளுடன் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று எனக்குள் நானே யோசித்துக் கொண்டே இருக்கும் போது.
'இந்தத் தேயிலைத் தோட்டத்து மக்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்று பாருங்களேன்' என்று அவளே பேச்சுக் கொடுத்தாள்.

நானும் ஆமாம் என்பது போலத் தலையை ஆட்டினேன்.

'மலையட்டை இங்கு அதிகமாக இருக்குமாமே. சிறிதாக இருக்குமாம் உடலில் எங்கு ஏறினாலும் இரத்தத்தை உறுஞ்சிக் குடித்தே உப்பிப் பெருத்துப் போய் விடுமாம் என்று படித்து இருக்கிறேன்.' என்று கொண்டே சுற்றிச் சுற்றிப் பயத்துடன் பார்த்தாள்.

அப்படியே மலையகத்தைச் சுற்றிக் கொண்டு எங்களது பேச்சு எங்களில் வந்து நின்றது.

சுமுகமான முறையில் சண்டை ஏதும் போட்டுக் கொள்ளாமல் நிறையப் பொதுவான விடயங்கள் பேசினோம்.

பேச்சின் முடிவில் சிறு முறுவலுடன் என்னிடம் தன் கையை நீட்டி
'நாம் இருவரும் இன்றிலிருந்து நல்ல நண்பர்கள்' என்று சொன்னாள்.

அவளையும் அவளது கைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்த நான் அவளது கைகளைப் பற்றிக் குலுக்கி அவளது நட்பை ஏற்றுக் கொண்டாலும் எனது மனசாட்சியோ
'எல்லோரும் நட்பாகப் பழகிய பின்னர் தான் காதலைச் சொல்லுவார்கள். நான் மட்டும் காதலியாக ஏற்றுக் கொண்ட பின்னர் தான் அவள் தன் நட்பைச் சொல்லுகிறாள். எல்லாம் காலக் கொடுமையடா கவியரசா.' என்றவாறு என்னைக் கேலி செய்யத் தொடங்கியது.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி"
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


காலை உணவை முடித்துக் கொண்டு மறுபடியும் பயணம் தொடங்கி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ரம்மியமான ஆலயத்தில் சென்று முடிவு பெற்றது.

அன்றைய மதியம் முழுவதும் அந்த ஆலயத்தையும் அதைச் சுற்றியுள்ள மற்ற அழகான இடங்களைப் பார்ப்பது என முடிவாகியது.

எனக்கு அன்றொரு நாள் இராமர் கோவிலில் கயல்விழியுடன் போட்ட சண்டை தான் நினைவில் வந்து போனது. இந்தக் கோவிலின் பின்புறமாகவும் காடு விரிந்து கிடந்தது.

மலையை நோக்கி மேலே ஏறிச் செல்லச் செல்லப் பஞ்சுப் பொதிகள் போல மேகக் கூட்டங்கள் உரசிச் செல்லும் அழகே தனியாக இருந்தது.

பாதையோரங்களில் கேட்பாரற்று வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிச் சிரித்துக் கொண்டே எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது

பேருந்தை நிறுத்தி விட்டுப் பொடி நடையாகவே கோயிலுக்கு எல்லோரும் கதை பேசிச் சிரித்தபடி சென்று கொண்டிருந்தது மனதுக்குள் இனிமையாக இருந்தது.

எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கயல்விழி பாதையோரமாகப் பூத்திருந்த பூக்களைப் பறித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த நான், வேகமாக அவளருகில் சென்றேன்.

'போன ஜென்மத்தில் பூக்காரியாகப் பிறந்து இருப்பாயோ நீ என்ற சந்தேகம் எனக்குக் கொஞ்சம் நாட்களாகவே இருந்து வந்தது. அது உண்மை தான் என இப்போது புரிந்து விட்டது. ' என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் வைத்திருந்த பூக்களில் கொஞ்சத்தை வாங்கிக் கொண்டேன்.

ஐயா கண்ணதாசரே எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு போன ஜென்மத்திற்கு எல்லாம் போய் நேரத்தை வீணடிக்கப் பார்க்கிறீர்கள். நான் இந்த ஜென்மத்திலேயே பூக்காரி தான். நீங்கள் என்ன பூ வேண்டும் என்றாலும் எங்கள் வீட்டிற்கு வரலாம். அதற்காகப் பாரிஜாதம் வேண்டும் என்று வந்து நின்று விடாதீர்கள். இன்னும் நாங்கள் இந்திரலோகம் வரை எங்கள் வியாபார ஒப்பந்தத்தை விரிவு செய்யவில்லை.
என்று சொன்னவளைப் பார்த்து, சிரிப்பு வந்தாலும் முறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

‘ஏய் அதென்ன கண்ணதாசர் என்கிறாய்… என்னுடைய பெயர் அது இல்லையே ? கவியரசன் என்று எவ்வளவு அழகானதொரு பெயர் வைத்திருக்கிறார்கள் எனக்கு, அதைச் சொல்லி அழைக்க வேண்டியது தானே ' என்று கேட்டேன்.

என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு
'அதெப்படி உங்களுக்கு மட்டும் தான் அழகான பெயர் வைத்து இருக்கிறார்களா? எனக்கும் தான் ரொம்ப அழகாக கயல்விழி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். என்றைக்காவது என்னைக் கயல்விழி என்று அழைத்து இருக்கிறீர்களா? இல்லை தானே அப்புறம் என்ன? உங்களுக்கு வந்தால் இரத்தம், அதே எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா? நன்றாக இருக்கிறது உங்கள் விவாதம்…' என்று சிரித்துக் கொண்டே பூக்களைப் பறிப்பதில் மூழ்கிப் போனாள்.

என்னருகிலேயே ஒட்டிக் கொண்டு வந்த கபிலன் தன் கைகளால் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கிக் கொண்டு 'ஏண்டா மச்சி உனக்கு இந்த வேண்டாத வேலை ' என்று என்னைப் போட்டு உலுக்கிய படி கேள்வி கேட்க, எனக்குத் தான் அசடு வழியத் தொடங்கியது.

சந்தோஷமாகத் தொடங்கிய அன்றைய தினத்தில் எனது வாழ்க்கையில் மின்னாமல் முழங்காமல் ஒரு இடி விழப் போவது தெரியாமல், நான் பாட்டிற்கு எல்லோரையும் கிண்டலும் கேலியும் செய்து கொண்டிந்தேன்.
என்று சொல்லிக் கொண்டே வந்த கவியரசன் சற்றே மௌனமானான்.

அவனது முகத்தில் ஒருவித வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

தன் மச்சினனின் கலகலப்பான சுபாவத்திற்கும், இப்போதைய அவனது திடீர் மாற்றத்திற்கும் இடையே ஏதோ நடந்து இருக்கிறது என்பது விமலரூபனுக்குப் புரியாமல் இல்லை.

கவியரசனின் தோள்களைத் தட்டி
' விடு மச்சான் வெளியே எங்கேயும் போய்விட்டு வரலாம். எதுவாக இருந்தாலும் மனதினுள் பூட்டி வைத்துக் கொண்டு உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே.'
என்று சொல்லிக் கொண்டே கவியரசனின் கரத்தைப் பற்றியபடி வெளியே அழைத்துச் சென்றான் விமலரூபன்.

இருவரும் வந்து சேர்ந்தது கடற்கரைக்கு.
சற்று நேரம் கடல் அலையில் காலை நனைத்த கவியரசன், கடற்கரைக் காற்றை ஆழமாகச் சுவாசித்துக் கொண்டே தன்னை சமன் படுத்த முயன்று கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் விமலரூபன்.

சிறிது நேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட கவி, தன் அத்தானின் அருகில் மணலில் அமர்ந்து கொண்டு கடலை வெறித்தபடி
' உங்களிடம் எதையும் மறைக்கும் எண்ணம் எனக்கில்லை அத்தான். அன்று அந்தச் சுற்றுலாவில் நடந்ததைச் சொல்லும் திடம் என்னிடம் இல்லை என்பது தான் உண்மை. என்று கூறியவன் ஒரு பெருமூச்சுடன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

கோவிலின் மூலஸ்தானத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் ஐம்பது படிகள் ஏறி ஆக வேண்டும்.

எல்லோரும் சந்தோஷமாக ஏறத் தொடங்க, கயல்விழி மட்டும் படிக் கட்டுக்கள் ஆரம்பமாகும் இடத்தில் நின்று கொண்டு மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டேன்.

'ஏன் அம்மணி என்ன பலமான யோசனை' என்று கேட்டேன்.

ஒன்றுமில்லை இங்கிருந்தே சாமியைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று யோசிக்கிறேன் ஆனானப் பட்ட சமயக்குரவர்களே இராமேஸ்வரத்திலே நின்று கொண்டு இலங்கைக் கோவிலைப் பார்த்துத் தேவாரங்கள் பாடும் போது, நான் இங்கிருந்தே தரிசிக்க கூடாதா?…' எனப் பதில் அளித்தாள்.

அவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு
'அதற்கு நீ வீட்டிலேயே இருந்து இருக்கலாமே ஏன் இவ்வளவு தூரம் வந்து சேர்ந்தாய். என்னவோ எனக்குத் தெரியாது உருண்டு புரண்டாவது இத்தனை படிகளையும் கடந்து கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் முழங்காலால் முட்டி போட வைத்து விடுவேன் என்று மிரட்டினேன்.

'குண்டுப் பூசணி, இவ்வளவு படிகளையும் பார்த்துத் தலை சுற்றல் வந்து விட்டதா? கீழேயே நிற்கப் போகின்றேன் என்று சொல்ல வேண்டியது தானே அதற்குச் சமயகுரவர்கள் தேவாரம் பாடியது உனக்கு ஒரு சாக்கு. என்னமாக வேலை செய்கிறது உன் மூளை' என்று அவளைக் கேலி செய்து கொண்டே நான் படிகளைக் கடந்து போய் விட்டேன்.

அதற்குப் பிறகு அவள் இஷ்டப்படியே அவளைப் பேசாமல் கீழேயே விட்டிருக்கலாம் என்று நான் நினைக்காத தினங்களே இல்லை அத்தான்.

நான் நிஜமாகவே முட்டி போட வைத்து விடுவேன் என்று எண்ணியோ என்னவோ அவளும் அத்தனை படிகளைக் கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து பின்னர் கீழே இறங்கும் போது அவளது கால்கள் விறைத்துப் போய் விட்டது.

விறைப்புத் தன்மை இல்லாமல் போக அவள் போட்டுக் கொள்ளும் மருந்து வேறு பேருந்தில் என்பதால், அவளால் சரியாக நடக்கவே முடியவில்லை.

கயல்விழி சிரமப் பட்டு இறங்கி வருவதைப் பார்த்து எனக்கும் அப்போது தோன்றவில்லை அவளது கால்கள் வலி எடுத்து விட்டது என்பது, நான் சும்மா நின்று கொண்டு அவள் ஒவ்வொரு படியாக நிதானமாக இறங்கி வருவதை இரசித்துக் கொண்டிருந்தேன்.

கவிதா மட்டும் படிகளை வேகமாக கடந்து கீழே ஓடி வந்து கொண்டிருந்தாள்.

நான் அவளைப் பார்த்துப் பதறி 'மெல்ல வா கவி' என்று கத்திக் கொண்டு இருக்கும் போதே… அவளுக்குப் பின்னுக்கு வந்த கயல்விழி கால்கள் வழுக்கித் தொய்ந்து போய்க் கீழே விழுந்து விட்டாள்.

அவள் விழுந்த வேகத்தில் படிகளை உருண்ட படியே கடந்து கீழ் நோக்கி வர, நான் ‘கயல்’ என்று கத்தியபடி அவளை நோக்கி ஓடிப் போவதற்குள் அத்தனை படிகளையும் கடந்து கீழே வந்து விட்டிருந்தவளின் தலை கீழே மோதாமல் இருக்க அவளது தலையைத் தாங்கியபடி நானும் அவளுடன் விழுந்து விட்டேன்.

மேலிருந்த படிகள், பாறைகளில் செதுக்கிய படிகள் என்பதால் உடலில் பல இடங்களில் அவளுக்குப் பலத்த அடிகள் பட்டு அங்கங்கே இரத்தம் கசிந்து கொண்டு இருந்ததைப் பார்த்துப் பதறிப் போனாலும் அவளது தலையில் அடியேதும் படவில்லை என்பது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

கீழே விழுந்த வேகத்தில் அவளிடம் இருந்து ஒரு பலமான அலறலுக்குப் பிறகு எந்தச் சத்தமும் வரவேயில்லை .

அப்போது தான் கவிதா பெரிதாக அலறிக் கொண்டே ஓடி வந்து
'கவி இரத்தமடா' என்று கத்தினாள்.

அவளது சத்தத்தைக் கேட்டு 'இரத்தக் கசிவுக்கு ஏன் இப்படி ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறாய்' என்று சினந்து கொண்டு எழுந்த நான், கயல்விழியைத் தூக்குவதற்காக அப்போது தான் அவளை முழுவதுமாகப் பார்த்தேன்.

நான் தலையைப் பிடித்த வேகத்தில் கீழே தேங்காய் உடைக்க வைத்திருந்த பெரிய பாறைக்கல்லில் அவளது வயிறு படு வேகமாக மோதியதால், கல்லில் சாதாரணமாக இருந்த முனை வயிற்றைக் கிழித்து விட்டது அத்தான்.
அதை நான் கவனிக்கவில்லை.

என்று சொல்லி விட்டுச் சற்று நேரம் கடலை வெறித்துக் கொண்டிருந்தான் கவியரசன் அவனது கண்கள் கலங்கிப் போய்ச் சிவந்திருந்தது.

அவனின் வலது கையைத் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டான் விமலரூபன்.
கைகள் சில்லிட்டுப் போய் இருந்தது. இருவரும் சிறிது நேரம் பேச்சற்றுக் கடலும் தொடு வானமும் இணையும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்… ♥️♥️♥️♥️♥️

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
உனக்காகக் காத்திருப்பேன்
உயிரோடு பார்த்திருப்பேன் “
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top