கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நான் தேடிய பொக்கிஷம் நீ 12

ஆயிற்று, கயல்விழி அவளது வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் கடந்து விட்டது.

அவளை அடிக்கடி சென்று பார்த்தால் தான் எனக்கு அந்த நாளில் ஒரு பிடித்தம் உருவாகும்.

அவளுக்கு ஏற்பட்ட விபத்தால் அவளது கர்ப்பப்பை பாதிப்பு அடைந்தது பற்றி நான் யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை.

அவ்வளவு ஏன் அவளிடம் கூட அதைப் பற்றி ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

ஏதாவது வலி ஏற்பட்டால் கூடச் சாதாரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி என்றோ அல்லது விபத்து ஏற்பட்டதால் வந்த வலியென்றோ தான் நினைத்துக் கொள்ளுவாள்.

அவள் உடல் அளவில் நன்றாகத் தேறி மறுபடியும் படிப்பதற்காக வரத் தொடங்கினாள்.

'அவளை மறுபடியும் பார்த்ததும் அப்படியொரு சந்தோசம்…'
என்று எப்போதோ அடைந்த மகிழ்ச்சியை இப்போது அவன் முகம் பிரதிபலித்தது.

அவனது சந்தோசம் விமலரூபனையும் தொற்றிக் கொள்ள, தன் மச்சானின் தோளை அணைத்தவாறு புன்னகைத்தான்.

'நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும்

ஏந்திக் கொள்வேன்…'
கவியரசனின் தொலைபேசி காந்தக் குரலோன் ஹரிகரனின் பாடலைப் பாடி அவனை அழைத்தது.

தனது நினைவைப் பாதியில் விட்டு அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன் எதிர் முனையில் தமக்கை கூறியதைக் கேட்டு ஒரு கணம் இறுக அமர்ந்து இருந்தான்.

அவனது முகபாவனையைப் பார்த்துக் கொண்டே இருந்த, விமலரூபன்
‘என்னாயிற்று மச்சான்' என்று கவலையுடன் கேட்டான்.

‘அம்மா என்னை வந்து தன்னைப் பார்க்குமாறு கவிதாவிடம் சொல்லி விட்டு இருக்கிறார்கள் அத்தான்' என்றான் தனது முக இறுக்கத்தை மறைத்துக் கொண்டபடி.

விமலரூபனுக்குப் புரிந்து விட்டது. அவனுடைய அத்தை அன்பரசி பற்றி அவனுக்குத் தெரியாததா.
நிச்சயமாக அவர் நல்ல விஷயம் பற்றிப் பேசுவதற்குக் கவியரசனை அழைத்திருக்க மாட்டார்.

நான் அம்மாவைப் பார்த்து விட்டு வருகிறேன் அத்தான் என்று எழுந்து போனவனையே பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மீது உண்மை அன்பு கொண்ட அவனது அத்தான்.

தன் வீட்டில் ஏதோ யோசனையுடன் நடை பயின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, அவர் கணவன் கலையரசனும் யோசனையில் ஆழ்ந்தார்.

அடிப்படையில் அன்பரசி அவ்வளவு மோசமானவர் இல்லை தான். இருந்தாலும் சொல்ல முடியாது தானே..
இவளது சொல்லம்புக்கு இன்று இரையாகப் போகும் அந்த அப்பாவி ஜீவன் யாராக இருக்கும் என்று நினைத்தார்.

நல்லவேளை கவி இங்கே இல்லை என்று பெருமூச்சு விட்டபடி உள்ளே செல்லத் திரும்பினார்.

அந்த நேரத்தில் வீட்டு வாயிலில் வாகன ஒலி கேட்க, திரும்பிப் பார்த்தவர் திகைத்துப் போய் நின்று விட்டார்.

அங்கே
கவியரசன் தந்தையைப் பார்வையால் கேள்வி கேட்டபடி வந்து கொண்டிருந்தான்.

அதற்கு அவரும் பார்வையாலேயே தனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஏன் இங்கே வந்தாய்… என்று கவலையடைந்தார்.

அவரை நோக்கி ஒரு சிறு புன்னகையை வீசியவன், இத்தனை வருடங்கள் கடந்த பின்னர் ஏதும் மாற்றம் வந்து இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே அன்பரசியைப் பார்த்தான்.

அவனது பார்வையில் தெரிந்த பரிதவிப்பு அவனது தந்தைக்குப் புரிந்தது.

அவர் செய்வதறியாது நின்றார்.

அதற்குள் அன்பரசியின் அருகில் வந்தவன் தன் வரவைத் தெரியப் படுத்த, வேண்டுமென்றே அருகில் இருந்த குவளையைத் தட்டி விட்டான்.

அந்த ஓசையில் தனது யோசனையில் இருந்து மீண்டவர். கவியரசனைத் திரும்பிப் பார்த்தார்.

வேண்டுமென்றே மிகவும் கவனமாக அவனது நேரான பார்வையைத் தவிர்த்து, தனது கணவனைப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கினார்.

‘ஏதேதோ செய்திகள் எல்லாம் காற்றோடு என் காதுக்கு வருகிறதே'

காற்றோடா வருகிறது அந்தக் கடன்காரி தேன்மொழி போட்டுக் கொடுத்திருப்பாள்.

‘வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்'

உங்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

‘போனது எல்லாம் போகட்டும் இனிமேலாவது நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்'

அடக் கடவுளே நீங்கள் சொன்னதை எல்லாம் கேட்டுத் தானே நான் இப்படியே நிற்கிறேன்.

‘உனக்கு நான் இன்னொரு திருமணத்தைச் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்'

இன்னொரு திருமணமா! அட ராமா ஒன்றைக் கட்டிக் கொண்டு நான் படும் பாடு போதவில்லையா?

அன்பரசி சொன்னவற்றுக்கெல்லாம் மனதுக்குள் பதில் அளித்தானே தவிர, கவியரசன் வாய் திறந்து பேசவில்லை.

அதையே தனது வெற்றியாக நினைத்துக் கொண்டு அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் உள்ளே போய்விட்டார்.

அவனைப் பார்த்து விட்டால் அவன் முகத்தைப் பார்த்து விட்டால் அவர் தான் உடைந்து போய் விடுவாரே.

எப்படியப்பா இருக்கிறாய் என்று கேட்கவில்லை, ஏன் என்னைப் பார்க்க வரவில்லை என்று கேட்கவில்லை, சிறிது நேரமாவது இருந்து விட்டுப் போ என்று கூடச் சொல்லவில்லை.

சிறு வருத்தச் சிரிப்பு ஒன்று அவன் முகத்தில் தோன்றி மறைந்தது.

அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்தவனின் தோளில் கை போட்டுக் கொண்ட கலையரசன்

‘மகனே கவியரசா
உன்னை யாரப்பா இப்படித் தெரிந்து கொண்டே புதைகுழியில் புதையச் சொன்னது.'
என்று வருத்தமாகவும் சிறு கேலியாகவும் கேட்டார்.

‘அப்பா என்னப்பா கிண்டலா செய்கிறீர்கள். உங்கள் மனைவியின் பார்வை என் பக்கம் உக்கிரமாக இறங்கி விட்டதால், சந்தடியில் குளிர் காய்கின்றீர்களோ?'

'நான் ஒன்றும் தேடி வந்து மாட்டிக் கொள்ளவில்லை, இந்தக் கட்டைச்சி கவி பார்த்த வேலையப்பா இது'

'அவள் தான் டேய் கவி அம்மா உன்னைப் பார்க்க, ரொம்பப் பிரியமாக இருக்கிறார். உடனே வாடா என்று சொன்னாள், நம்பி வந்தனே என்னை…' என்று அவன் முடிப்பதற்குள்

‘செருப்பாலேயே அடிக்க வேண்டும் என்று சொல்கிறாயா கவி, என்னைக் கேட்டால் செருப்பை விட உருட்டுக்கட்டை தான் சரி என்று சொல்வேன்… ' என்ற படி ஓடி வந்தாள் கவிதா

தமக்கையை முறைத்துப் பார்த்தவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது.

அவளது வாய் எல்லாம் விமலரூபனிடம் மட்டும் தான் வக்கணையாகப் பேசும்.

மற்றவர்களிடம் அவள் ஒரு அடி தள்ளியே நிற்பாள். அதிலும் அன்பரசி என்றாலோ பத்தடிக்குக் குறைவாக நிற்கவே மாட்டாள்.

கவிதா உருட்டுக்கட்டை பற்றிச் சொன்னதும் மலரைத் தேடித் தானாகவே வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி போல, கவியரசனின் எண்ணம் தானாகவே கயலிடம் போனது.

கயலின் நினைவு வந்ததுமே அவனது முகம் ஒருவித பிரகாசத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

வேண்டும் என்றே தமக்கையுடன் வம்பு செய்யத் தொடங்கினான்.

‘அப்பா நம் அத்தானுக்கு அவருடைய வேலை இடத்தில் இருந்து ஒரு வரன் வந்திருக்கிறது.

நல்ல பொருத்தம் வேறு நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள்…'
என்று கண்ணடித்துக் கேட்டான்.

கவிதா பேசாமல் நின்றாள்.

அவளைப் பார்த்த கலையரசன்
'அதுக்கென்னப்பா அவனாவது சந்தோஷமாக வாழட்டுமே அதை முடித்துக் கொடுப்போமா?'
என்று சொன்னது தான் தாமதம்
கவியரசனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு
'கடன்காரா உனக்கு அப்படி நான் என்னடா பாவம் செய்தேன். '
என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள் கவிதா.

‘அடியே கையை எடுடி என் கூடப் பிறக்காத குரங்கே சும்மா உன்னை உசுப்பேற்றி விடச் சொன்னேன்டி.'

'நானாவது வரன் கேட்டு வந்து இருக்கிறது என்று தான் சொன்னேன். அந்தப் பக்கம் தான் முடித்துக் கொடுப்போமா என்ற பதில் வந்தது…'
என்ற படி தந்தையைக் கை காட்டினான்.

தந்தையைப் பார்த்தவள்
'அப்பா ஏனப்பா அம்மா இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
நான் ரூபனை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா?
நான் ஒன்றும் காதலித்தவனைத் திருமணம் முடித்துத் தரச் சொல்லிக் கேட்கவில்லையே…
என்னைத் திருமணம் செய்து கொண்ட கணவனுடன் வாழ விடச் சொல்லித் தானே கேட்கிறேன்.

'அப்பா நாங்கள் இருவரும் இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோர் அதை ஏன் அம்மா புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.'
என்றபடி தந்தையின் தோளில் சாய்ந்து தன் கவலையை அழுகையில் கரைக்க முயன்றாள்.

ஒரு எட்டு எடுத்து அவளது தலையை வருடிக் கொண்டே
'அழாதடி கவிக்கா எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
அத்தானுக்கு நீதான் அக்கா உலகம் அதை மட்டும் எப்பொழுதும் மறந்து விடாதே.'

கவியை நிமிர்ந்து பார்த்தவள்
‘எனக்கும் ரூபன் உயிர் தான்டா… ஆனால் நீ அந்த உயிருக்கும் மேலே...'
என்று சொல்லிக் கொண்டே தம்பியைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கியவள்.

‘அப்பா பாருங்கப்பா இந்த வம்புக்காரன் என்னை அக்கா என்று சொல்லி விட்டானே...'
என்று அழுது கொண்டே சிரித்தாள் சிரித்துக் கொண்டே அழுதாள்.

என் இரண்டு குழந்தைகளின் எதிர்காலமும் இனியாவது பிரகாசமான ஒளியை வீச வேண்டும் இறைவா!
அப்படி மட்டும் நடந்து விட்டால் பொடி நடையாகத் தீர்த்த யாத்திரைக்கு வருகிறேன் என்று வேண்டிக்கொண்டார் கலையரசன்.

அவர் சற்றே சத்தமாக வேண்டிக் கொண்டதைப் பார்த்த கவிதா
‘அப்பா சந்தடி சாக்கில் அன்பரசியிடம் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்களா?’
என்று சொல்லிச் சிரித்தாள்.

அவளைப் பார்த்து மற்ற இருவரும் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

அந்த இடமெங்கும் அவர்களின் சிரிப்புச் சத்தம் எதிரொலித்தது.💜💜💜💜💜

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“ இது போலச் சொந்தம் உள்ளதா

இறைவா வா நன்றி சோல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்

இங்கே வா இன்பம் தருகிறோம் “
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தொடர்ந்து சந்தோஷமாகச் சிரிக்க முடியாமல் அமைதியான கலையரசனைக் கேள்வியாக நோக்கினர் மற்றைய இருவரும்.

‘உங்கள் இருவரையும் சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்பது தான் இந்த அப்பாவின் ஆசை கனவு எல்லாமே.

ஆனாலும் என் மனைவி ஏன் அதற்கு எதிராக நடந்து கொள்கிறாள் என்றே தெரியவில்லை.

இதைப் பாருங்கள் நீங்கள் இருவரும் எதைச் செய்வீர்களோ எனக்குத் தெரியாது. அடுத்த தடவை உங்களை உங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் தான் நான் பார்க்க வேண்டும்.‘
என்றவர் இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்.

‘அப்பா நான் கயல் வீட்டிற்குச் சென்றது இங்கே எப்படித் தெரிந்தது.

தேன்மொழி தான் ஏதாவது சொல்லி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.'
என்றவனை ஏறிட்டு நோக்கிய கலையரசன்.

‘அது தெரிந்த விடயம் தானே அரசா! இந்தப் பிள்ளை ஏன் தான் இப்படி நடந்து கொள்கிறதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம். தங்கை என்கிற பாசம் கொஞ்சம் கூட அவளிடம் இல்லையே.’
என்று வருத்தப்பட்டார்
.

‘அப்பா விடுங்கள் இதெல்லாம் தானாகவே உணர்ந்து திருந்த வேண்டுமே தவிர நீங்கள் புலம்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை.’
என்று தந்தையைச் சமாதானம் செய்து உள்ளே ஓய்வு எடுக்குமாறு அனுப்பியவன், கவிதாவிடம் கோபமாகத் திரும்பினான்.

‘கவி எனக்கு வருகின்ற கோபத்திற்கு உன்னை அடித்து விடுவேன் பார்த்துக் கொள்.
அத்தான் உன்னைக் காதலித்ததைத் தவிர வேறு என்ன பாவம் செய்தார்.'

'ஒரு தடவையாவது அவரை வந்து பார்த்து நலம் விசாரித்து இருப்பாய அக்கா.

அந்த மனுஷன் என்னடாவென்றால் காலை தொடங்கி இரவு வரைக்கும் உன் ஜபம் தான் செய்து கொண்டு இருக்கிறார்.'

'நீ என்னடாவென்றால் உன் அம்மா சேலையைப் பிடித்துக் கொண்டு தொங்காத குறையாக இருக்கின்றாய்.

உன் அம்மா சொன்னால், அத்தானை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாயோ?

சரி உனக்கு அவர் வேண்டாம் என்றால் அது உன்னிஷ்டம் ஆனால் குட்டிப் பாப்பாவையும் ஏன் அவரைப் பார்க்க விடாமல் தடுக்கிறீர்கள்.'

'குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். நீ குழந்தைகளை அத்தானிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விடு.

அதன் பிறகு உன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழு.’
என்றவன் வேகமாக வெளியே செல்லத் திரும்பினான்.

அவனது கையைப் பிடித்துத் தடுத்தவள்.

'கவி நானும் என்ன தான் செய்வேன்.
அம்மா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.

அவரது வார்த்தைகளை என்னால் மீற முடியவில்லை.‘
என்று கண்கலங்கத் தொடங்கினாள்.

‘அதைத் தான் நானும் சொல்கிறேன் உன் அம்மாவையே கட்டிக் கொண்டு அழு எங்களை விட்டு விடு நாங்கள் எப்படியோ போகின்றோம்.’

‘என்னடா வார்த்தைக்கு வார்த்தை உன் அம்மா உன் அம்மா என்று சொல்லுகிறாய். அவர் நம் இருவருக்குமே அம்மா புரிந்ததா?

‘ஏன் உண்மையைத் தானே சொல்லுகிறேன். நீ இப்படிச் சொல்வதால் மட்டும் உண்மை பொய் ஆகி விடாது அக்கா ‘
என்று வருத்தத்துடன் சொன்னவனைத் தானும் வருத்தத்துடன் பார்த்தாள் கவிதா.

தமக்கையின் முகத்திற்கு முன்பாகக் கையை அசைத்தபடி
‘என்ன நின்று கொண்டே தூக்கமா... உள்ளே போய் உன் அம்மா அடுத்த அணுகுண்டை எங்கே எப்போது போடத் திட்டமிடுகிறார் என்பதையாவது கவனி.

நான் கயலைப் பார்க்கப் போகிறேன். இதுவரைக்கும் மற்றவர்களின் சதிக்குப் பலியாகி வாழ்வைத் தொலைத்தது போதும் என்று நினைக்கிறேன்.

நீயும் கொஞ்சமாவது அத்தானைப் பற்றி யோசிக்கக் கற்றுக்
கொள், இல்லை உன் அம்மா சொல்வதைத்தான் கேட்பாய் என்றால் உங்களது அந்தஸ்துக்கு ஏற்றது போல ஒருத்தனைக் கட்டிக் கொள்.

அத்தானுக்கு நான் வேறு திருமணம் செய்து வைக்கப் போகிறேன்.’
என்று சொன்னவனின் கன்னத்தில் கவிதாவின் கரம் அதி வேகமாக இறங்கியது.

‘ஆத்தி கையா இது இதற்குக் கயலின் அடியே பரவாயில்லை போல இருக்கிறதே ‘
என்று முணுமுணுத்தவன்
கன்னத்தின் வலியை மறந்து திருப்தியுடன் சிரித்தான்.

அவனது சிரிப்பில் கடுப்பானவள்
‘வேண்டாம் கவி நானே நொந்து போய் இருக்கிறேன் நீ வேறு என்னை நோகடிக்காதே.

‘என்னது நீ நொந்து போய் இருக்கிறாயா? எனக்குத் தான் நோகிறது...’ என்றபடி கன்னங்களைத் தேய்த்துக் கொண்டவன்.

ஏன் அக்கா இவ்வளவு அன்பு இருக்கிறது தானே அப்புறம் எதற்காக அத்தானுடன் பேசுவதில்லை.’

‘எனக்கு ஒரு விதமான பயம் வந்து விட்டது கவி. எங்கே அம்மா ரூபனின் தன்மானத்தைச் சீண்டுவது போலப் பேசி அவருடைய மனதைக் காயப்படுத்தி விடுவார்களோ என்று...
அதனால் தான் ஒதுங்கி இருக்கிறேனே தவிர ரூபன் தான் என் உயிரென்பது உனக்கே தெரியும்.’

‘நீ என்ன சொன்னாலும் சரிக்கா, ஆனால் நீ யாருக்கும் தெரியாமலாவது அத்தானுடன் பேசி அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இருக்க வேண்டும்.’

தனது தம்பியின் பதிலைக் கேட்டு யோசனையில் மூழ்கியவளிடம்
‘நீயும் கயலும் கூட்டணி போட்டுக் கொண்டு நீச்சலுக்கும் கராத்தேக்கும் வகுப்பு வகுப்பாகப் போய் வரும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும். இனிமேல் என்ன பேசுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பத்தடி தள்ளி நின்றே பேச வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

அம்மாடி என்ன அடிடா சாமி... கராத்தேயில் பிறந்து வளர்ந்த அத்தானே உன்னைப் பார்த்து பயந்து போகும் போதே எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? உன்னுடைய வீர தீரச் செயல்கள் பற்றி...’
என்று சிரித்தான்.

அவனது கிண்டலில் தானும் சிரித்தவள்
‘போடா போடா நீ ஒரு அத்தான் பைத்தியம் என்பது எனக்குத் தெரியாதா? முதலில் போய் கயலைப் பார்த்து விட்டு வா பிறகு பேசலாம்...’
என்றவாறு அவனைப் பிடித்து வெளிப்புறமாகத் தள்ளி விட்டாள்.

‘ஏன் உன்னிடம் இந்தக் கன்னத்தில் வாங்கியது போதாதென்று அவளிடம் வேறு போய் மற்றைய கன்னத்தில் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமோ...’
எனப் புலம்பியவாறு அங்கிருந்து கிளம்பியவனை ஆதுரத்துடன் பார்த்தவாறு நின்றாள் கவிதா.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வீட்டின் சமையற் கட்டில் தம்பி கணேசனுக்குப் பிடித்தமான கத்தரிக்காய் பொரியலைப் பொரித்துக் கொண்டிருந்தனர் எழிலரசியும் கயல்விழியும்.

கயல்விழியின் கைகள் அது பாட்டில் கத்தரிக்காய்களை வெட்டிக்
கொண்டிருக்க, அவளது எண்ணமோ கவியரசனைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது.

காயைப் பொரித்து வாழையிலையில் போட்டுக் கொண்டிருந்த எழிலரசி
‘அக்கா மேல் தட்டில் நிறையப் பழைய செய்தித்தாள்கள் இருக்கிறதே அதை விட்டு நீ ஏன் அடிக்கடி உணவு போட்டு வைப்பதற்கு வாழையிலையைப் பாவிக்கிறாய்...’
என்று கேள்வி கேட்டபடி தமக்கையின் அருகில் வந்தமர்ந்தாள்.

பதில் ஏதும் சொல்லாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் தோளில் கை வைத்து அக்கா என்று பலமாக எழிலரசி அழைத்தாள்.

அப்போது தான் தங்கையை நிமிர்ந்து பார்த்தவள்,
'செய்தித்தாள்களை ஒரு வகை இரசாயனப் பதார்த்தம் கொண்டு அச்சடிக்கிறார்கள். அதன் மீது உணவுப் பொருட்களை வைத்து உண்பதால் அதில் உள்ள இரசாயனம் எங்கள் உடலில் தீமையை விளைவிக்கும்.
ஆனால் வாழையிலை பாரம்பரியம் வாய்ந்தது அதில் உணவு வைத்து உண்பதால் தீமையொன்றும் இல்லை.'
என்றாள்.

தமக்கையை ஒரு தடவை கூர்ந்து பார்த்த தங்கை,
‘அக்கா நீ எதுவோ தீவிரமாக யோசிப்பது போல இருக்கிறதே.’

‘இல்லையே அப்படி ஒன்றுமில்லை ‘

‘பொய் சொல்லாதே அக்கா எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி உனக்கு என்னிடம் சொல்ல விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை'

‘அப்படி இல்லை எழில் இங்கே நடப்பது எல்லாம் அவருக்கு எப்படித் தெரிகிறது அதுதான் எனக்குப் புரியவில்லை‘

‘அவருக்கா யாரக்கா அந்த அவர்‘

‘உதை வாங்கப் போகின்றாய்‘

‘சரி சரி மன்னித்துக் கொள்ளக்கா... அத்தானுக்கு எப்படியோ தெரிகிறது உன் மேல் கொண்ட பாசத்தால் உளவு பார்க்க உளவாளி யாரையும் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்‘

‘அடி போடி உன்னிடம் கேட்டேன் பார் என்னைச் சொல்ல வேண்டும்‘
என்றவாறு எழுந்து போய் விட்டாள்.

அந்த நேரத்தில் எழிலரசியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதை எடுத்துப் பார்த்தவள் சிறு புன்னகையுடன் அந்தச் செய்திக்கான பதில் செய்தியை அனுப்பி விட்டு, தன் தமக்கையைத் தேடிப் போனாள்.

தந்தையின் துவைத்த சட்டைகளை எடுத்துக் கொண்டிருந்த கயல்விழியின் அருகில் சென்ற எழிலரசி

‘அக்கா நாளைக்கு அம்மன் கோவிலுக்குப் போவோமா...’

‘நாளைக்கா ஏன்‘

‘என்னக்கா இது கேள்வி அம்மனைத் தரிசிப்பதற்குத் தான் வேறு எதற்கு‘

‘அது தெரியும் நாளைக்குச் சனிக்கிழமை ஆயிற்றே நாளைக்கு எதற்கு‘

‘அக்கா என்ன கிழமையாக இருந்தால் என்னக்கா தயவு செய்து என்னுடன் வா அக்கா மாட்டேன் என்று மட்டும் சொல்லி விடாதேக்கா...’

‘சரி சரி நாளைக்கு வருகிறேன் போதுமா ஆனால் ஒன்று மாலை நேரத்தில் தான் வருவேன் சரியா‘

‘ஐயோ அக்கா என்றால் அக்கா தான்‘
என்று கயலின் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளி விட்டு உள்ளே ஓடியவள்,
’நாளை மாலை அம்மன் கோவிலுக்கு அக்காவை அழைத்து வருகிறோம். சொன்னது போலப் பேச்சு மாறாமல் இனிப்பு வாங்கி வாருங்கள் அத்தான்'
என்ற செய்தியைக் கவியரசனுக்கு அனுப்பி விட்டே மறு வேலை பார்த்தாள் எழில்.

கவியரசனின் தலைமையில் தமக்கையைப் பற்றிய அனைத்து செய்திகளையும் தவறாது அவனுக்கு அனுப்பி வைக்கும் அந்த இரண்டு உளவாளிகளும் கணேசனும் எழிலும் என்பது எப்போது கயலுக்குத் தெரிய வருமோ தெரியவில்லை.

அக்காவை அத்தானுடன் சேர்த்து வைப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்.

அதைவிட த் தங்கள் செல்ல அக்கா மீது அளவு கடந்த அன்பும் அக்கறையும் கொண்ட அத்தான் கிடைத்தது அதை விடச் சந்தோசம்...❤❤❤❤❤

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச்
சேரும் “

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top