கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நான் தேடிய பொக்கிஷம் நீ 8

விமலரூபனின் விழி விரிப்பைப் பார்த்த கவியரசன்
“அத்தான் சும்மா காதுகளால் கேட்டதற்கே நீங்கள் இப்படிக் கண்களை விரிக்கிறீர்களே, நேரில் பார்த்த நான் என்ன செய்திருப்பேன் என்று யோசனை செய்து பாருங்கள்” என்று சொன்னபடி விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்கினான்.

“முகமூடி அணிந்திருந்த ஆண்கள் பக்கம் இருபது ஆட்களும், பெண்கள் படைப் பக்கம் கயல்விழியுடன் சேர்த்து ஏழு பேர் மட்டும் தான் இருந்தார்கள்.

முகமூடி தீப்பற்றியதால் ஓடியவன் போக, மீதம் பத்தொன்பது கொள்ளையர்கள்.
அதில் ஐவரின் வாள்களைக் கயல்விழி வேகவேகமாகத் தட்டி விட்டிருந்த போதும், அவர்களும் சளைக்காமல் வாள்களை மீண்டும் கைப்பற்றிச் சண்டையிட்டார்கள்.

இத்தனைக்கும் பெண்களின் பக்கம் யாரிடமும் எந்த ஆயுதங்களுமே இருக்கவில்லை.
அதற்கு மாறாக ஒவ்வொருவரின் கைகளிலும் ஒவ்வொரு உருட்டுக் கட்டை இருந்தது தான் எனக்கு அடுத்த அதிர்ச்சி அத்தான்.

இரு பக்கத்தாரும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த வேளை அது, அப்பொழுது கூட எங்கள் யாருக்கும் என்ன செய்வதென்று ஒன்றுமே தோன்றவில்லை.

அந்த நேரம் ஆனந்தன் என்னருகில் வந்து என்கழுத்தில் சுற்றியிருந்த வெண்ணிற சால்வையை உருவி எடுத்து, தன்னுடைய சால்வை, கபிலனுடைய சால்வை என மூன்றையும் இணைத்து முடிச்சுப் போட்டுக் கொண்டு, சண்டை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த அடர்த்தியான மரங்களை நோக்கி ஊர்ந்து செல்லத் தொடங்கினான்.

இடையில் திரும்பிப் பார்த்து ‘என்னையே உற்று உற்றுப் பார்க்காமல் ஏதாவது செய்யும் வழியைப் பாருங்களேன்டா…’ என்று விட்டு இருளில் மறைந்து விட்டான்.

அவன் போன திசையையே சிறிது நேரம் நானும் கபிலனும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஆனாலும் அதற்குள் இந்தப் பக்கம் காயம் ஏற்பட்டு யாரோ முனகும் சத்தமும் கேட்டது.
என்ன நடந்ததென்று திரும்பிப் பார்த்தால் ஒரு பெண்ணின் தோளில் ஆழமாக வாள் வெட்டு ஏற்பட்டு இருந்தது.

அந்த நேரத்தில் ஆவென்ற ஒரு அலறல் சத்தமும் கேட்க, நான் கலக்கத்துடன் உற்றுப் பார்த்தேன்.

வாளால் வெட்டிய கொள்ளையனின் தலையில் மேலேயிருந்து பலாப்பழம் ஒன்று விழுந்திருக்க, அவன் தான் அலறிக் கொண்டு மல்லாக்க விழுந்து கிடந்தான்.

இன்னொருத்தன் இன்னொரு பெண்ணின் மீது கோடாரியை ஓங்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்ததும் தான் கபிலனுக்கும் எனக்கும் சிறிது உணர்ச்சியே வந்தது.

நான் மரத்தின் மறைவிலிருந்து வெளி வந்து, அருகில் இருந்த ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டு வேகமாக அந்தக் கொள்ளையனை நோக்கிச் செல்லவும், மேலேயிருந்து இன்னொரு பலாப்பழம் அவன் உச்சந் தலையில் நச்சென்று விழவும் சரியாக இருந்தது.

இருந்தாலும் நானும் என் பங்குக்குக் கொஞ்சம் ஏதாவது செய்யலாமே என்று சண்டைக் களத்தில் குதிப்பதற்குள், நான்கு ஐந்து பலாப்பழங்கள் தொடர்ந்து கொள்ளையர்களின் தலையில் விழுந்தது.

அதைத் தொடர்ந்து விசித்திரமான வகையில் கூச்சலிட்டவாறு மரத்திலிருந்து ஒரு வெள்ளை உருவம் கீழே தொப்பென விழ, அத்தனை கொள்ளையர்களும் ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாகக் காட்டுக்குள் புகுந்து ஓடி விட்டார்கள்.

என்ன பெரிய கொள்ளையர்கள் என்றாலுமே அமானுஷ்யம் என்றால் அவர்களுக்கும் பயம் இருக்கத் தானே செய்யும் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

கொள்ளையர்கள் ஓடியதும் வெள்ளையுருவம் பெண்கள் படையிடம் வகையாகச் சிக்கிக் கொண்டது தான் பரிதாபமாகப் போயிற்று.

சிக்கிய உருவத்தைச் சின்னாபின்னமாக்காமல் விடுவார்களா அவர்கள், ஒருத்தி கட்டையை ஓங்கியபடி பாய்ந்து போனாள்.

அந்த உருவம் யாரென்பது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம், அதனால் அந்தப் பெண்ணிடமிருந்து உருவத்தைக் காப்பாற்ற வேண்டி, இருவருக்கும் நடுவில் பாய்ந்து தடுக்க முயன்றேன்.

ஓடி வந்தவள் அந்த அடியை என் மீது இறக்க முனையவும், சிவப்புத் துணியால் முகத்தை மறைத்திருந்த இன்னொரு பெண் அந்த அடி என் மீது இறங்காமல் குறுக்காகப் பாய்ந்து தடுத்தாள்.

யாரடா இது என்னைக் காக்க வந்த இந்த நல்ல ஆத்மா என்பது போல நான் பார்த்துக் கொண்டிருக்க, ‘தம்பியுடையாள் படைக்கு அஞ்சாள்’ என்று சொல்லிக் கொண்டே என் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு, தன் முகத்திரையை விலக்கியபடி சிரித்தாள் கவிதா.

நான் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டேன் அத்தான்.

என்னுடைய அதிர்ச்சியைப் பார்த்து விட்டு அவள் ‘ஏன் கவி அப்படியே அதிர்ந்து போய் நிற்கிறாய், உன்னுடைய அக்காவின் அதிரடியான அட்டகாசமான அற்புதமான சண்டையில் உனக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லையா? இப்படி நம்பிக்கையில்லாத பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாயே’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் இவனைப் பிடித்துக் கட்டுங்கள் என்றபடி கயல்விழியும் இன்னொரு முகத்திரை விலக்காத பெண்ணும் கீழே விழுந்ததில் ஏற்பட்ட, வலியில் முனகிக் கொண்டிருந்தவனை நோக்கி வந்தார்கள்.

அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டு வந்ததுதான் தாமதம், தன் சால்வையை உதறிவிட்டு
‘அடத் துரோகிப் பயலே, வெட்டிக் கதை அளந்து கொண்டிருக்கும் நேரம் சால்வைக்குள் இருப்பது என் நண்பன் ஆனந்தன் என்று சொல்லி என்னைக் காப்பாற்றியிருக்கலாமேடா.
இந்தப் பொண்ணுங்களை நான் தான் காப்பாற்றினேன் என்பது கூடத் தெரியாமல் என்னைக் கட்டிப் போட வருகிறார்கள் பாரேன். நன்றி கெட்ட பெண்கள்‘
என்றபடி என்னை அடிக்க ஓடி வந்தான் ஆனந்தன்.

அவனைப் பார்த்ததும் இன்னொருத்தி தனது முகத்திரையை விலக்கியபடி ‘ஆனந்து மாமா நீங்களா? நீங்கள் இங்கே ஏன் வந்தீர்கள் ‘ என்று கத்தினாள்.

அட இது யாருடா அடுத்தது, எங்கேயோ கேட்ட குரல் போல இருக்கிறதே என்று பார்த்தால்… அது ஆனந்தனின் காதலி சுவேதா.

கயல்விழி, சுவேதா, கவிதா மூவருடன் மற்றைய நான்கு பெண்களும் கூடத் தெரிந்த பெண்களாகத் தான் இருந்தார்கள்.

ஆக அவர்கள் அத்தனை பேரும் திட்டமிட்டுத் தான் கயல்விழிக்கு உதவ வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்து போயிற்று.

நான் கவிதாவைப் பார்த்து,
‘ஏய் கவி இப்படியா உங்கள் எண்ணத்துக்குக் கிளம்பி வருவது, கொள்ளையர்கள் பக்கம் பார்த்தீர்கள் தானே ஆட்களும் அதிகம் ஆயுதங்களும் அதிகம், ஏதாவது ஏடாகுடமாக நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்னிடமாவது உங்கள் திட்டத்தைச் சொல்லி இருக்கலாம் தானே?
ஆனந்தனின் உதவி மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருப்பீர்களோ தெரியாது. உங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இந்தக் கொள்ளையர் கூட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் களத்தில் இறங்கியது போலல்லவா இருக்கிறது…’ என்று திட்டித் தீர்த்தேன்.

நான் கவிதாவிடம் கோபமாகப் பேசுவதைப் பார்த்து விட்டு என்னருகில் வந்த கயல்விழி
‘துரைக்குக் கோபம் கூட வருகிறதா? இப்பொழுது எதற்கு அந்த அக்காவைத் திட்டுகிறீர்கள்.
மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று வேடிக்கை பார்த்த நேரம் உதவிக்கு வந்திருக்க வேண்டியது தானே ?' என்றதும் தான் எங்களைக் கடந்து போகையிலேயே நாங்கள் மறைந்திருந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள் என்பது புரிந்து போயிற்று எனக்கு.

அவளோ தொடர்ந்து ‘நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் பேசாமல் இருந்திருந்தால், இப்பொழுது சிவலோகத்திற்குத் தான் பாதி வழியில் போய்க் கொண்டிருந்திருப்பேன் தெரியுமா?

அது போக, கொள்ளையர்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நாங்கள் களத்தில் இறங்கவில்லை, உதவிக்கு யாரும் போகக் கூடாதென்று ஒரு முறை வைத்து இருக்கிறார்கள் இந்தக் கோவில் பெரிசுகள்.
அதனால்தான் இத்தனை பேர் மட்டும் உதவ வந்தார்கள் போதுமா? ஒருத்திக்குத் தோளில் ஆழமாகக் காயம் ஏற்பட்டு விட்டது அதற்கு மருந்து போட உதவவாவது வந்து சேருங்கள்’ என்று என்னைப் பார்த்துச் சிறு முறைப்புடன் சொல்லி விட்டுச் சென்றாள்.

எனக்கு அந்தச் சுற்று வட்டாரம் பழக்கம் என்பதால், ஏழு பெண்களையும் என் நண்பர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சற்றே தள்ளியிருந்த அருவிக் கரைக்கு சென்றேன்.

அருவி அருகில் அமைந்து இருந்தாலும் எளிதில் மற்றவர்களால் அதைக் கண்டு பிடித்துச் செல்ல முடியாது.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் அருவியோரம் அமர வைத்தேன்.

ஏனெனில் அவர்களுக்குச் சற்று ஓய்வு தேவைப் பட்டது, அனைவருமே சில பல காயங்களோடு களைத்துப் போயிருந்தார்கள்.

சுவேதாவின் வலது பக்கத்துத் தோளில் கூர்மையான வாள் சற்றே ஆழமாகப் பதிந்ததால் இரத்தம் சற்றே பாய்ந்து கொண்டிருந்தது.

நீரில் நனைத்த ஈரத் துணியை இரத்தம் பாயாமல் இறுகக் கட்டி விட்டு, நானும் கபிலனும் கயல்விழியும் இன்னொரு பெண்ணும் தீப்பந்த வெளிச்சத்தின் துணையுடன் காட்டின் ஓரங்களில் மண்டிக் கிடந்த மூலிகைச் செடிகள் சிலவற்றைப் பறித்தெடுத்துக் கொண்டு வந்தோம்.

கூட வந்திருந்த பெண்ணுக்கு மூலிகை வைத்தியம் தெரிந்திருந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று.

அவள் மூலிகைச் சாற்றைப் பிழிந்து சுவேதாவின் காயத்தின் மீது கட்டி விட இரத்தப் பெருக்கு நின்று விட்டது.

அதே நேரத்தில் ஆனந்தன் கோபமாகச் சுவேதாவிடம் வருவதைப் பார்த்ததும் ‘அண்ணா… ஆனந்து மாமா என்னைத் திட்டப் போகிறார் நீங்கள் தான் ஏதும் திட்டாமல் பார்க்க வேண்டும்’ என்று விட்டால் அழுது விடுவேன் என்பது போல என்னைப் பார்த்தாள் சுவேதா.

எங்களருகில் வந்தவன்
‘அறிவு கெட்டவளே உன்னைக் கட்டிக் கொண்டு நான் என்ன பாடு பட...’ என்று வார்த்தையை முடிப்பதற்குள்
‘மச்சி தங்கச்சிக்கு ரொம்பப் பசிக்குதாமடா… இரவு உணவு கூட சாப்பிடவில்லையாமடா…’ என்று கபிலனும் நானும் ஒன்றாய் ஒரு போடு போட்டோம்.

அதைக் கேட்டவன் ‘நிஜமாவா சுதாம்மா… மாமாகிட்டே முதலே சொல்லி இருக்கலாமேடா… இரு இதோ சாப்பிட ஏதும் கொண்டு வருகிறேன்’ என்றபடி பறந்தோடினான்.

அவன் போன திக்கையே கண்ணில் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தனின் அன்னக்கிளியாகிய எங்கள் உடன்பிறவாத சகோதரி சுவேதா.

அத்தான் ஆனந்தன் இப்படித்தான்
அடிக்கடி கோபப் படுவான் ஆனால் அந்தளவிற்குப் பாசமானவன். அதைவிடச் சுவேதாவிடம் நேசமானவனும் கூட…” என்று தன் நண்பனின் புகழ் பாடினான் கவியரசன்… 💕💕💕💕💕

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“நாள்தோறும் நெஞ்சுக்குள்ளே நீ தானே வேர் விட்டாய்
நான் வாடக் கூடாதென்று நீ தானே நீர் விட்டாய் “
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


ஆனந்தனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தவன்
“அத்தான் ஆனந்தனின் அருமை பெருமைகளை அள்ளி விட்டுக் கொண்டே போனால் நேரம் போவதே தெரியாது.
அதனால் நான் கதைக்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கதையைக் கூறத் தொடங்கினான்...

“அருவிக் கரையோரம் அமர்ந்திருந்த எங்களில் பாதிப் பேருக்கும் சரியான பசி, எப்படியும் அதிகாலை ஆவதற்கு முன்னர் சிலையைக் கொண்டு சென்று சேர்ப்பிக்க வேண்டும்.
அது வரைக்கும் காட்டுக்குள் தான் இருந்தாக வேண்டும்.

சுவேதாவுக்கு உண்ணக் கொடுப்பதற்கு ஏதாவது கொண்டு வருகிறேன் என்றபடி ஓடிய ஆனந்தனை இடை மறித்த கவிதா ‘அக்காவுக்கும் ஏதாவது சாப்பிடக் கொண்டு வாடா’ என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

அதைக் கேட்ட கபிலன் ‘அக்கா இந்த நட்ட நடு இராத்திரியில் அதுவும் நடுக் காட்டுக்குள் சாப்பிடுவதற்கு என்று என்ன தான் கிடைக்கும் சொல்லுங்கள். யாரையாவது ஊருக்குள் ஏதாவது சாப்பிடுவதற்கு எடுத்து வர அனுப்புவோமா?’ என்றான் கேள்வியாக, அவன் சொன்னதைக் கேட்டு அருகில் இருந்த எல்லோரும் அதை ஆமோதிப்பது போலத் தலையாட்ட, ஒருத்தி மட்டும் ஒன்றும் பேசாமல் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

கயல்விழி தீவிரமாக யோசிப்பதைப் பார்த்த கவிதா,
‘என்னாச்சுக் கயல் என்ன யோசனை’ என்றாள் யோசனையாக
‘இல்லையக்கா தனியாக இப்பொழுது யாரும் ஊருக்குள்ளே போக முடியாதக்கா, ஏனென்றால் சற்று முன் ஓடிய கொள்ளையர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் எங்களைப் பழி வாங்க இரண்டு வகையில் முயலக் கூடும்.
ஒன்று அவர்கள் இன்னமும் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு வரக் கூடும் அல்லது எங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, யார் தனியாகச் சென்றாலும் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களைத் தாக்க வரக் கூடும்.
அதனால் ஊருக்குள் யாரும் இப்பொழுது போக வேண்டாம்’ என்று பதில் சொன்னாள்.

அவள் சொல்வதும் சரிதான் என்றபடி எல்லோரும் இப்பொழுது என்ன செய்வது என்பது போல யோசனை செய்தார்கள்.

‘அடடா இது எனக்கு முன்னமேயே தோணாமல் போய்விட்டதே’ என்ற படி கயல்விழி துள்ளி எழுந்தாள்.

எல்லோரும் அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்தவள் சண்டை நடந்த இடத்திற்கு ஓடிச் சென்றாள்.

இவள் தனியாக எங்கேயும் போய் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று நானும் அவளைத் தொடர்ந்து ஓடினேன்.

அங்கே கொள்ளையர்கள் மீது வீசப் பட்ட பலாப் பழங்கள்
‘எங்களை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கு அலைகிறீர்களே அறிவாளிக் கூட்டங்களே ‘ என்பது போல பிளந்து இனிய மணம் பரப்பிக் கொண்டு கிடந்தன.

அந்தப் பலாப் பழங்களைச் சேகரித்து, அருவி நீரில் நன்றாகக் கழுவியவளின் அருகில் சென்று ‘சாப்பாடு என்றதும் உன் அறிவு எட்டூருக்கும் சேர்த்து வேலை செய்கிறதே அது எப்படி ‘ என்று கேட்டு வைத்தேன்.

'அது தானே அது எப்படி ‘ என்று ஆனந்தனும் கபிலனும் பின் பாட்டுப் பாடி வைக்க, அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோஓஓ... அத்தான்’ என்று இராகம் இழுத்தவனின் தோளில் ஒரு அடியைப் பரிசாகக் கொடுத்து ‘உங்களுக்கு எதிரி வெளியிலே இல்லையடா வாய் என்னும் வடிவத்தில் உங்கள் கூடவே தான் இருக்கிறது'
என்று சிரித்தான் விமலரூபன்.

நீங்கள் நினைப்பது போலப் படபடப் பட்டாசு கோபங் கொண்டு சீறி வெடிக்கவேயில்லை.
சாதாரணமாக ‘பயம் வேண்டாம் பலாப்பழம் கண்டிப்பாக உண்டு ‘ என்று விட்டுப் போய் விட்டாள்.

பலாப்பழத்தைப் பார்த்துப் பரவசமாகிப் போன படைப் பெண்கள் உடனேயே இதனுள் இருக்கும் சுளைகளை எப்படி எடுப்பது என்று மீண்டும் சோர்ந்து போனார்கள்.

கவிதா மட்டும் ‘அட அது தான் வாள், கத்தி , கோடாரி என்று ஒரு கூட்டமே சிதறிக் கிடக்கிறதே...
கோடாரியால் பிளந்து வாளால் வெட்டிக் கத்தியால் குத்தி ஒரு கை பார்க்கலாம் ‘ என்று சொல்ல ஆனந்தன் உடனே ‘உருட்டுக் கட்டையை விட்டு விட்டீர்களே அக்கா‘ என்று சொல்ல அந்த இடமே கலகலப்பானது.

காட்டின் ஓரத்தில் இருந்த பனை மரத்தின் நுங்குகளையும் வெட்டி எடுத்து, பலாச் சுளைகளையும் வெட்டி எடுத்து எல்லோரும் நிறைவாகவே சாப்பிட்டு முடித்து விட்டு, அந்த இடத்தில் இருந்த ஆயுதங்களை எல்லாம் மூட்டை கட்டி முடிக்கவும் அதிகாலை நேரமும் நெருங்கி விட்டது.

கயல்விழியின் கைகளில் சிலையை எடுத்துக் கொடுத்து விட்டு எல்லோரும் காட்டின் எல்லை வரைக்கும் ஒன்றாகவே போய், அதன் பிறகு தனித் தனியாகி அவளை மட்டும் தனியாகக் கோவிலுக்கு அனுப்பி விட்டோம்.

ஒரு வழியாக நடக்க இருந்த விபத்தைத் தடுத்து விட்டோம் என்ற சந்தோஷம் எல்லோருக்கும் இருந்தது.

அதற்குப் பிறகு சடங்குகள் எந்தக் குறைவுமின்றிப் பூர்த்தியானது எனக் கோவில் பெரியவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்க, எனக்குக் கடுப்பாகி விட்டது இவர்கள் சொன்னபடி நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்ற யோசனையே கலக்கத்தைக் கொடுத்தது.

பொங்கல் படையல் எல்லாம் முடிந்து விட்டது தானே நான் போகிறேன் என்று அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு நண்பர்களுடன் நண்பகலே கிளம்பி வந்து விட்டேன்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் பல்கலைக்கழகத்தில் கயல்விழியைக் காண நேரும் போது ஒரு சிறு புன்னகையைப் பரிமாறிக் கொள்வதோடு சரி, வேறு எதுவும் பேசிக் கொண்டதில்லை.

இப்படியே நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருக்கும் போதுதான் அந்தப் பொல்லாத நாளும் எங்களை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்ததை அறியாமல், சந்தோஷமாகவே பல்கலைக்கழக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தோம்.

முதல் வருட மாணவர்களைச் சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல வேண்டும் என எங்கள் வருட மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதை எல்லோரும் ஆமோதித்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி இருந்த வேளையில்
ஒரு நாள் கவிதா என்னிடம் வந்து
‘டேய் கவி சுற்றுலாவுக்கு நானும் வருகிறேனே உங்களுடன்...
தயவு செய்து வேண்டாமென்று சொல்லிவிடாதே என் தங்கமே, நான் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டேன். என்பாட்டிற்குச் சுற்றிப் பார்த்துக் கொள்வேன் ‘ என்று ஒரே கெஞ்சுகை.

சரி போனால் போகட்டும் ஆசைப் பட்டுக் கேட்கிறாளே என்று விட்டு, அழைத்துச் செல்கிறேன் என்று வாக்குக் கொடுத்தது தான் தாமதம் கவிக்கு அவ்வளவு சந்தோஷம்.

என்னுடைய தலைமையில் தான் அனைவரும் வருவதாக இருந்ததால், முதல் வருட மாணவர்களில் யாரேனும் வர முடியாத சூழ்நிலை இருந்தால் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து காரணம் கூறலாம் என அனைவருக்கும் சொல்லி இருந்தேன்.

அதனால் ஒரு நாள் மதியம் நானும் என் இரண்டு வாலுகளும் (ஆனந்தன், கபிலன்) மரநிழலில் இருந்த இருக்கையில் இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, கயல்விழியும் அவளின் தோழி ஒருத்தியும் எங்களைப் பார்த்துப் பார்த்துத் தங்களுக்குள் ஏதோ விவாதித்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அதில் என் காதுகளுக்கு ‘இதற்கெல்லாம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது மீனு ‘ என்பது மட்டும் விழுந்தது.

அருகில் வந்தவளை நான் வேண்டுமென்றே
‘அது சரி என் பெயரைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றேனே கண்டு பிடித்து விட்டாயா? அது சொல்லவா என்னைத் தேடி வந்தீர்கள்’ என்று கேட்டு வைத்தேன்.

அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் ‘எங்கள் இருவருக்கும் சுற்றுலாவுக்கு வர முடியாத சூழ்நிலை, அதைச் சொல்லி விட்டுப் போகலாம் என்று தான் வந்தோம்‘ என்று மட்டும் சொன்னாள்.

நானும் சற்றும் யோசிக்காமல் சரியான காரணம் சொன்னால் மட்டுமே இங்கிருந்து போக முடியும் என்று சொல்லி விட்டேன்.

அவளின் தோழிக்கு உடனேயே கண் கலங்கி விட்டது. ஆனால் அருகில் நின்ற முழி மட்டும் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

கபிலன் உடனேயே ‘டேய் மச்சி பாவம்டா அந்தப் பொண்ணு அதுக்கு என்ன பிரச்சினையோ விட்டு விடேன்‘ என்று தோழிப் பெண்ணுக்குப் பரிந்து பேச, நான் அவனைச் சந்தேகமாகப் பார்த்து விட்டுத் திரும்பினேன்.

‘சுற்றுலாவுக்குக் கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் இல்லை அதனால் வர முடியாது. அவள் வீட்டில் படிப்பதற்குக் கொடுக்கவே அவளுடைய அம்மாவுக்கு முடியவில்லை. இதில் சுற்றுலாவுக்குப் பணம் கேட்க எப்படி மனம் வரும்.
எங்கள் வீட்டில் கேட்டதும் எப்படியாவது கஷ்டப் பட்டேனும் கொடுப்பார்கள் ஆனாலும் நான் அவர்களைக் கஷ்டப் படுத்த விரும்பவில்லை’ என்று கடகடவென ஒப்பித்தவளை நான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நெடு நேரமாக...” 💓💓💓💓💓

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“ உன் அழகுக்குத் தாய் பொறுப்பு
அறிவுக்குத் தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு “
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top