கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 11

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 11



"டேக் கேர்!" என்று பார்கவி செய்தி அனுப்பியதிலிருந்து மனதிற்குள்ளாகவே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன். 'டேக் கேர் அப்படிங்கறது குட் மார்னிங் மாதிரி சாதாரண வார்த்தை, அதுக்குப் போய் ஓவர் ரியாக்சன் காட்டுறியேடா?' என்றது அவன் மனசாட்சி.

மனது நிறைந்திருந்தாலும் வயிறு பசி எடுக்க, ப்ரெட் ஆம்லெட் போடலாம் என்று வெங்காயத்தைத் தேடி எடுத்தான். அஷோக் பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக மாஸ்க், க்லொவ்ஸ், ஃபேஸ் ஷீல்ட் சகிதம் கடைக்குச் சென்றிருந்தான். இருந்த பொருட்களை வைத்து சமாளித்து சமைப்போம், இரண்டு மூன்று நாட்களாக நண்பன் தானே சமைத்து வைக்கிறான், இன்றாவது அவனுக்கு வயிற்றுக்கு ஏதாவது சூடாகக் கொடுக்கலாம் என்று களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். ஏதோ பாடலை முணுமுணுத்தபடி ஜாலியாக வெங்காயத்தை நறுக்க கையில் கத்தி பட்டு லேசாக ரத்தம் வந்தது.

"அடடா, ரத்தப் பொரியல் ஆகப் பாத்துச்சே.. பார்கவி 'டேக் கேர்'னு சொல்லியிருக்கா. நான் கவனம் இல்லாம இப்படி வெட்டி வச்சுட்டேனே" வாய்விட்டுக் கூறியபடி காயத்தைக் கழுவி ரத்தம் வந்த இடத்தை அழுத்திப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டான்.

'பார்கவி சொன்னாத்தான் டேக் கேர் பண்ணுவியா, இல்லன்னா பண்ண மாட்டியா?' என்று குத்திக் காட்டியது மனசாட்சி. கூடவே இப்போதைய சூழலில் காதல் தேவையா? அஷோக் ஓட்டுவதை வைத்துக்கொண்டு வீணான கற்பனைகளை வளர்க்கலாமா என்று யோசித்துக் கொண்டே அமர்ந்துவிட்டான்.

"சே! என்ன ஊரடங்கு போட்டாலும் கூட்டம் இருக்கத்தான் செய்யுது. ஒரு மணிவரை கடை வக்கிறதுக்குப் பதிலா அவசியமான கடைகள் முழுநேரமும் வச்சாக் கூட கூட்டம் குறையும் போல. ஒரு மணிக்குள்ள கடை அடைப்பாம்ன்னு அடிச்சுப் பிடிச்சு வர்றாங்க. சமூக இடைவெளிங்கிறான், வட்டம், கட்டம்னு கடைக்கு முன்னாடி போட்டு வச்சிருக்கான். அதைக் கடைப் பிடிக்க முடியல" மூச்சுவிடாமல் பேசியபடி கொண்டுவந்த பைகளை ஓரமாக வைத்துவிட்டுக் கைகளை கழுவினான் அஷோக்.

தமிழ்ச்செல்வனிடம் இருந்து பதில் வராமல் போகவே, "என்னடா, என்ன சிந்தனை? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற?" என்றான் அவன் முன் கையை ஆட்டி.


"ஒன்னுமில்லடா, கையை லேசா வெட்டிக்கிட்டேன்‌. அதான்"

"ஜாக்கிரதையா இருடா, அதுவும் உன் பிளட் குரூப் வேற ரேர். வேஸ்ட் பண்ணலாமா? பிளட்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது, பிரியங்கா பாப்பா கடையில் இருக்கும்போது போன் பண்ணுச்சு. ரெண்டு நாளா எப்பக் கூப்பிட்டாலும் தமிழ் பிஸியாகவே இருக்கான் அப்படின்னு ஜெபாக்காவும் கேட்டாங்க. பாப்பாட்டப் பேசுடா" என்றான்.

ப்ரியங்காவிடம் சிறிது நேரம் பேசிய பின்னும் கூட யோசனையுடனேயே தான் உணவைத் தயாரித்து அஷோக்குக்கும் கொடுத்துத தானும் உண்டான்.

"என்னடா? நேத்துப் பூரா ஜாலியா மயக்கத்துல இருக்கிறவன் மாதிரி நடந்துக்கிட்டுருந்த. இன்னைக்கு ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கிற? ஊருக்குப் போக முடியலையேன்னு வருத்தமா இருக்கா?"

"இல்லடா.. பார்கவி மேல எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துருக்கிறது உண்மைதான். இதை வளர்க்கலாமா அடுத்த ஸ்டேஜுக்கு போறதப் பத்தி யோசிக்கலாமான்னு ஒரே குழப்பம். அந்தப் பொண்ணு மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கோ, வேற கமிட்மெண்ட்ஸ் இருக்குமோ, அதுவும் யோசனையா இருக்கு"

"அந்தப் பொண்ணுக்கு ஆள் இருந்தா உன்கிட்டயா ஹெல்ப் கேட்கப் போகுது. அவங்கிட்ட கேட்டிருக்க மாட்டாளா? நீ என்னடா ட்வென்டி ஃபஸ்ட் செஞ்சுரியில கால்வாசி கடந்துடுச்சு. இப்பப் போய் இப்படி சங்ககாலக் காதலன் மாதிரி யோசிச்சுக்கிட்டே இருக்க? பட்டுன்னு அந்த பொண்ணுகிட்ட கேட்டுட வேண்டியது தானே? இந்த திங்க்கர் (Thinker) வேஷம் உனக்கு செட்டாகவே மாட்டேங்குதுடா. இந்தா இந்த லெமன் ஜூஸைக் குடிச்சுட்டு ஜில்னு யோசி" அஷோக் தன் பங்குக்கு சும்மா இருக்காமல் லெமன் ஜூஸ் போட்டுக் கொடுத்து நண்பனை சுறுசுறுப்பாக்க முயன்றான்

"ஸ்கூல்ல நடந்த கதை ஒண்ணு உனக்கு சொல்லவாடா?" என்றான் தமிழ்ச்செல்வன்.

"ஒரு கதை சொல்லட்டா சார்ங்கிற? ஆரம்பி, ஆரம்பி.."

"ஸ்கூல்ல நான் உண்டு, படிப்பு உண்டுன்னு இருப்பேன்.."

"காலேஜ்லயும் அப்படித்தான் இருந்த.. அந்த டிஸ்கிரிப்ஷன் எல்லாம் வேண்டாம். நெக்ஸ்ட் பேஜ் திருப்பு"

"குறுக்கப் பேசாமக் கேளுடா.. சில பசங்க எட்டாங்கிளாஸ்ல இருந்தே கேர்ல்ஸ்க்கு லவ் லெட்டர் கொடுக்கிறது, ஃபாலோ பண்றதுன்னு இருந்திருக்காங்க. எனக்கு விஷயமே தெரியாது, ஆனா கிளாஸ் பூரா தெரிஞ்சிருக்கு. பதில் பேசாமலே இருக்க? இம் ன்னு கேளுடா... அப்பத்தானே எனக்குக் கதை சொல்ல இன்ட்ரஸ்ட் வரும்"

"ம்.. ம்.." என்று அஷோக் சொல்ல,

"ரெண்டு ம் வேண்டாம்டா. ஒரு ம் போதும்"

"விஷயத்தைச் சொல்லப் போறியா இல்லையா?" அஷோக் கடுப்பானான்.

"சொல்றேன் சொல்றேன், இதுல ஒரு அழகான பொண்ணு ஒருத்தன் தொல்லை தாங்க முடியாமல் பத்தாவது முடிச்சு வேற ஸ்கூலுக்கு போயிடுச்சாம். லெவன்த் படிக்கையில எல்லாரும் இந்தக் கதையைப் பேசுறாங்க, நான் மட்டும் 'அப்படியா?'ன்னு கேக்கிறேன், போடா நீ ஒரு பேக்கு. உனக்கு என்ன தான் தெரியும்னு எல்லாரும் கிண்டல் அடிச்சாங்க. அப்புறம், எல்லாரையும் கலாய்க்கிறோம், இவனை மட்டும் கலாய்க்காம இருக்கோமேன்னு பேசுறாங்க.. தமிழ்ச்செல்வின்னு ஒரு பொண்ணு உண்டு. லெவன்த்க்கு எங்க ஸ்கூலுக்குப் புதுசா வந்து சேர்ந்துச்சு. என் பேருக்கு அடுத்து அவ பேரு அட்டென்டன்ஸ்ல வரும். பசங்க என்னையும் அவளையும் சேத்து வச்சு ஓட்டுவாங்க. பெயர்ப் பொருத்தம் அது இதுன்னு எதையாவது சொல்லுவாங்க"

"அட அட! இவ்வளவு நாளா இவர் சொல்லவே இல்லையே டா.. சூப்பர்.. அப்புறம்?" அஷோக்குக்கு சுவாரஸ்யம் கூடியது.

"ஒருநாள் சங்க இலக்கியத்தில வர்ற காதல் பாட்டு தமிழ் வகுப்பில் எடுத்தாங்க. மிஸ் ஒரு கேள்வி கேட்ட உடனே நான் எந்திரிச்சு பதில் சொன்னேன். அதுக்கப்புறம் தமிழ்ச்செல்வி அந்த கிளாஸ் பூரா என்னையே திரும்பித் திரும்பிப் பாத்தாளாம். கிளாஸ் முடிஞ்ச உடனே அதை வச்சு ஒரே கிண்டல். எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல"

"ம்…?" அஷோக் சொன்ன இந்த ம், வித்தியாசமாக இருக்க, தமிழ்ச்செல்வன் அஷோக்கை ஒரு மொத்து மொத்தி விட்டு,

"ஒழுங்காக் கேளுடா.. 'ஏம்மா தமிழ்ச்செல்வி! நீ என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தியா?' அப்படின்னு கிளாஸ் முடிஞ்ச உடனே அவ கிட்ட போய்க் கேட்டுட்டேன். ஆமான்னுடுச்சு அந்தப் புள்ள‌"

"ம்.." இந்த ம்மில் ஆர்வம் இன்னும் கூடியிருந்தது. சீட்டின் நுனிக்கே வந்துவிட்டான் அஷோக்.

"எதுக்கும்மான்னு நான் கேட்க, 'எனக்கு உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு தோணுச்சு. அதைச் சொல்லலேன்னா தலையே வெடிச்சிடும். சொல்லட்டா?' அப்படின்னா. சுத்தி எல்லாரும் இருக்காங்க.. எனக்கு பயம், கோபம், எதிர்பார்ப்பு என்னெல்லாமோ வந்து வந்து போகுது. சொல்லு அப்படின்னு நான் கேட்க, 'உன் சட்டையில காக்கா எச்சம் போட்டுருச்சு போல. எனக்கு இப்படிப்பட்ட விஷயம் எல்லாம் பார்த்தா உடனே சொல்லிடணும். இல்லன்னா இருப்புக் கொள்ளாது. உடனே சொல்லவா, கிளாஸ் முடிஞ்சு சொல்லவான்னு தான் யோசிச்சு திரும்பித் திரும்பி பார்த்தேன்'. இப்படி சொல்லிட்டு என் சட்டையைக் காட்டினா"

"காக்கா எச்சம் தானா?" வெறுத்துப் போன குரலில் அஷோக் கேட்க,

இந்த முறை தமிழ்ச்செல்வன் "ம்" என்று சொன்னான். "அப்புறம் போய்க் கழுவினேன். அதுலருந்து என்னைப் பாத்தா தமிழ்ச்செல்வின்னு கத்துறத விட்டுட்டு 'கா கா'னு கத்த ஆரம்பிச்சாங்க. ஆனா அவளைப் பாத்தா தமிழ்ச்செல்வன்னு தான் கூப்பிடுவாங்க. அப்படி எல்லாம் பொம்பள பிள்ளையப் பேசினா அது வாழ்க்கை வீணாப் போயிடும்ல? நாளப் பின்ன கல்யாணத்துக்குன்னு யாராவது வந்து விசாரிக்கும்போது அவளை தமிழ்ச்செல்வன் கூட வச்சு ஓட்டினாங்கன்னு சொல்லுவாங்கல்ல? எனக்கு அது பிடிக்காது. அதே மாதிரி ஒருத்திய லவ்வரா நினைச்சுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க முடியுமா? இவளைத் தான் கல்யாணம் பண்ணனும்னு உறுதியாத் தெரிஞ்ச பிறகுதான் மனசுல இடம் குடுக்கணும். மத்தவங்க கிட்டயும் சொல்லணும். உறுதியாத் தெரிஞ்சாத் தானே அந்தப் பொண்ணு பத்தியே தயக்கமில்லாமல் யோசிச்சுக்கிட்டே இருப்பேன்"

"நல்ல முடிவு தான். ஆனா அதுக்குப் பேரு லவ் இல்ல. எங்கேஜ்மென்ட். எனக்குத் தெரிஞ்சு ஒருத்தன் இருந்தான். ஒரு பொண்ணப் பிடிச்சுப் போச்சுன்னா நீ எந்த ஜாதின்னு கேட்பான். நைசா வசதி எவ்வளவு, வருமானம் எல்லாம் கேட்பான். இவன் ஜாதினு தான் தெரிஞ்சாதான் மேற்கொண்டு கடலையே போடுவான்"

"சே! கேவலமா இருக்கு"

"ஆமா.. ஆனா ரிஸ்க் இல்லாத லவ் அது தான். அப்படி வேணா செஞ்சு பாரு, பார்கவிகிட்ட டீடெய்ல் கேளு"

"சேச்சே, அப்படில்லாம் செய்ய மாட்டேன்" உறுதியாக மறுத்தான் தமிழ்ச்செல்வன்.

"அப்போ உனக்கே நீ கொஞ்சம் டைம் குடு. நார்மலா வேலை எல்லாம் பாரு. அப்புறமும் உனக்கு அவ நெனப்பாவே இருந்துச்சுன்னா புரோசீட் பண்ணு. ஆனா டேய்! எது செஞ்சாலும் சீக்கிரம் செய்டா. 'தமிழ் சார் எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்கு' அப்படின்னு அவ சொல்ல முன்னாடி முடிவு பண்ணிடு. ஆனா தயவு செய்து இனிமேல் ஃபிளாஷ்பேக் சொல்றேன்னு காக்கா எச்சம் போட்ட கதைல்லாம் சொல்லி என்னைக் கொல்லாத டா. உன்னை வேற ஹீரோ ரேஞ்சுக்கு அந்த நாகராஜன் வச்சிருக்காரு. நீ காமெடியனை விட கீழ போற. உனக்கு ஒரு ஆள் செட்டாகி, நீ செட்டில் ஆகிற வரை நான் என் மண்டையைப் பிச்சிக்குவேன் போலருக்கே?" அஷோக்குக்கு இப்பொழுதே வருங்காலத்தை நினைத்து கண்ணைக் கட்டியது.

"அது மட்டும் இல்லடா, இப்ப ப்ரியங்காவோட அம்மாப்பாவையே பாரு. அவங்க லவ் மேரேஜ் தானே? ஆனா குழந்தைக்குப் பெரிய வியாதின்ன உடனே, ஜெபாக்கா தான் அதுக்குக் காரணம்ன மாதிரி பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு அவங்களை விட்டுட்டுப் போயிட்டாரு. இதுவே அரேஞ்ச்ட் மேரேஜா இருந்தா வீட்ல உள்ள பெரியவங்க கேப்பாங்க இல்ல?"

"இப்படிப் பலதையும் போட்டு கொழப்பாத.. அட நம்ம சாவித்ரி சிஸ்டர் இருக்காங்கள்ள, அவங்க கூட லவ் மேரேஜ் தான். ஆனா பாரு அவங்களுக்கு உடம்புக்கு வந்தப்ப அவங்க ஹஸ்பண்ட் எப்படி கவனிச்சிட்டாங்க? இத்தனைக்கும் அவங்களுக்குக் குழந்தையும் கிடையாது. அதெல்லாம் அவங்க ஹஸ்பண்ட் பெருசாவே நினைக்கல இல்ல? எல்லாத்துலயும் பாசிட்டிவ்வும் உண்டு, நெகட்டிவ்வும் உண்டு. அப்புறம் எங்க வீட்ல என்னை வரச் சொல்லிகிட்டே இருக்காங்க. இனிமே எப்படியும் மூணு மாசத்துக்குக் குறைஞ்சு ஆஃபீஸ் திறக்க மாட்டாங்க. வொர்க் ஃபிரம் ஹோம் தான். அதான் சாயங்காலம் கிளம்புறேன். ஊர்ல ஜாலியா தோப்பும் துரவுமா காத்தோட்டமா இருக்கிறதை விட்டுட்டு சிட்டில குப்பை கொட்டுறத நெனச்சா எனக்கே கடுப்பாகுது. அங்கெல்லாம் வீடுகள் தள்ளித் தள்ளி தானே இருக்கும்.. சோசியல் டிஸ்டன்ஸிங் ஈசி" சில நாட்களாகவே கிராமத்து வாழ்வுக்காக மனம் ஏங்குவதை அஷோக் சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.

"என்னடா இப்படிச் சொல்ற? நான் இருக்கிற வரைக்கும் இரேன் டா? உன் கிட்ட பேசினா தான் நிம்மதியா இருக்கு. ஏன்னே தெரியல. ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு"

"இருக்கும், இருக்கும். என்னை விட்டுட்டு ஊருக்குப் போனியே, அப்பல்லாம் தோணலையா? சரி, எது பேசணும்னு நினைச்சாலும் வாய்ஸ் மெசேஜ் போட்டு எனக்கு அனுப்பிவிடு. இல்லையா, லெட்டர் டைப் பண்ணி மெயில் போடு. வேலை ஃப்ரீயா ஆகும்போது பதில் அனுப்புறேன். பார்கவி பேசினா நீயும் பேசு. அனாவசியமா நீயா அவளுக்குக் கூப்பிடாத. எல்லாம் கொஞ்ச நாள் தான் டா.. லவ்செட் ஆயிடுச்சின்னா பேசுறதுக்கு என்னையா தேடப் போற? நான் ஃபோன் பண்ணா அப்புறம் பேசுறேன் பிஸினு சொல்லப் போற. முக்கியமா இன்னொரு விஷயம். நேரம் நிறைய இருக்கு அப்படின்னு டிவியைப் போட்டு ஒரு பத்து இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த காதல் படம் எல்லாம் பார்த்துட்டு உட்கார்ந்திருக்காத. லவ்வை ஆரம்பிக்க முன்னாடியே தியாகம் அது இதுன்னு மனசை மாத்திக்கப் போற" என்றான்.

"நண்பனுக்காக நீ எவ்வளவு தொலைநோக்கோட யோசிக்கிற அஷோக்? அப்போ உன் பொண்டாட்டிக்கு எவ்வளவு செய்வ? உனக்கும் சீக்கிரம் பொண்ணு பாக்கச் சொல்லுடா" பாசமாக நண்பனைப் பார்த்தான் தமிழ்ச்செல்வன்.

"பக்கத்து இலைக்குப் பாயாசமா? நடத்து நடத்து. உன் பிரச்சினை எல்லாம் முடிஞ்ச பிறகு என் கதைக்கு வருவோம். கொஞ்சம் வெயில் குறைஞ்ச உடனே கிளம்புறேன். பைக்கிலேயே போயிடனும். வழியில் எதுவும் நிறுத்த மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். சொந்த மாவட்டத்துக்குள்ளேயே பயந்து பயந்து போக வேண்டியதாப் போச்சு. ஆனா பாவம்.. போலீசும் என்ன செய்வாங்க, நம்
ம நல்லதுக்காகத் தானே கண்ட்ரோல் பண்றாங்க?" என்ற அஷோக் ஊருக்குப் போகத் தயாரானான்.
 
Top