கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 12

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 12


"என்ன தேடுறீங்க? எதுவும் கேட்டா நானே எடுத்துத் தரப்போறேன்" ரேணுகாவின் வீட்டில் அவள் குளிக்கப் போன நேரத்தில் அவளது பெட்டி, பைகளை அம்மா சோதனையிட்டுக் கொண்டிருக்க ரேணுகா பார்த்து விட்டாள்.

"அழுக்குத் துணி எதுவும் இருக்கான்னு பாத்தேன்" ஒருவித தடுமாற்றத்துடன் அவளது அம்மா சொல்ல,

"ஏன்மா பொய் சொல்றீங்க? அதான் உங்களுக்குப் பொய் சொல்ல வரலேல்ல... அழுக்குத் துணியத் தான் வந்த உடனே எல்லாம் துவச்சு போட்டுட்டேனே?"

அம்மா பதில் கூறாமல் இருக்கவும், "என்ன சந்தேகமா?" கோபமாக கேட்டாள் ரேணுகா.

"உங்க அப்பா தான் டி பாக்கச் சொன்னாரு. எதுவா இருந்தாலும் அவரைக் கேட்டுக்கோ. என்னை ஒண்ணும் கேட்காத"

"அப்பா வரட்டும். கேக்கத்தான் போறேன். எனக்கு என்ன பயமா? தப்பு செஞ்சாத் தானே பயப்படணும்? முந்தா நேத்தே நல்லா ரெண்டு வார்த்தை கேட்டுட்டேன்... அப்பா சொல்லலையா? என்ன தான் தெரியணும் உங்களுக்கு? எதுக்கு செக் பண்ணிட்டு இருக்கீங்க?"

"நான் தான் பாக்கச் சொன்னேன். அதுக்கு என்ன இப்ப? வயசுப் புள்ள, வெளியூர்ல வேலை பாக்குற, லவ் பண்ற பிள்ளைக்கு சப்போர்ட் பண்ற... உனக்கும் ஏதாவது காதல் கீதல் இருக்கோன்னு பெத்தவங்க நினைக்கிறது தான். அதுல என்ன தப்பு?" வெளியிலிருந்து வந்த அப்பா கூற,

"ரொம்ப சந்தோஷம். மனசுல நினைக்கிறதப் பூசி மொழுகாம உண்மையை ஒத்துக்கிட்டீங்களே.. அப்படி லவ் பண்ணனும்னா எப்பவோ பண்ணியிருப்பேன். இப்படியா நாலு வருஷம் படாதபாடுபட்டு முடி கொட்டி, வயிறு வலி வந்து, நொந்து போயிருக்கும் போது லவ் பண்ணப் போறேன்? சாப்பாடைப் பாத்தாக் கூட வாந்தி தான் வருது. இதுல எவனையும் பார்த்து லவ்வு தான் வரப்போகுதாக்கும்... என்கிட்டயும் ரெண்டு மூணு பேரு வந்து லவ் பண்றேன்னு முன்னாடியே சொல்லத் தான் செஞ்சாங்க. உங்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கேன். என்ன சொன்னீங்க? வெளியூர்ல வேலை பாக்குறேன்னா? யாரு அங்க போய் வேலையில் சேத்தது? முதல் வருஷம், ரெண்டாம் வருஷம்லாம் எவ்வளவு கெஞ்சியிருப்பேன்? அங்க போகல, போகலன்னு.. உங்க வசதிக்கு அனுப்பிட்டு, என்னையே குறை சொல்றீங்களே"

"ஆமாடி குறை தான் பேசுறாங்க. எதுக்கும் எதுத்துப் பேசாத புள்ள இப்ப பக்கம் பக்கமாக வசனம் பேசுற. நீயா பேசுறியா, யாரும் சொல்லிக் குடுத்துப் பேசுறியான்னு எப்படித் தெரியும்?"

"இவ்வளவு நாள் பேசாமத் தான் இருந்தேன். அப்படியிருந்தும் நீங்க என்னப் பத்தி என்ன நெனப்பு வச்சுருக்கீங்கன்னு இப்பத்தானே தெரியுது... அதனால மனசுல சேத்து வச்சு என்ன பிரயோஜனம்? பேசினாலும் கெட்ட பேரு, பேசலைன்னாலும் கெட்ட பேரு தானே? சுமித்ராவை எப்பயும் திட்டுவேன். ஏண்டி லவ் பண்ணுனே அப்படின்னு.. இப்படிப் பெத்தவங்களே பிள்ளைய நம்பாம வார்த்தையால வறுத்தெடுத்தா லவ் பண்ணாம என்ன செய்வாங்க... என்னை இவ்வளவு சொல்றீங்களே‌, இந்த ஊர்ல ஆம்பளப் புள்ளைங்க ஒருத்தனையாவது ஏதாவது மில்லுல இப்படி கொத்தடிமை மாதிரி சேத்துருக்கீங்களா? ஒவ்வொருத்தரும் ஒரு வேலையும் பாக்காம, படிக்கவும் செய்யாம, சண்டியர் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கானுங்க. முடியையும் முள்ளம்பன்னி மாதிரி வெட்டிக்கிட்டு, ஃபோன்ல கண்ட படத்தையும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இல்லாத அக்கறை பொட்டைப் புள்ளைங்களுக்கு மட்டும் எதுக்கு?"

"ஆம்பளப் புள்ளைங்க எப்படியும் பொழச்சுக்கும்‌.. உங்களைத் தானே கரையேத்தி விட வேண்டியதிருக்கு" என்று அம்மா சொல்ல,

"எல்லாப் பயலுகளும் தறுதலையா இருந்தா, எந்த நல்லவன் இருப்பான் கட்டிவைக்க? அப்படி ஒருத்தனைப் புடிச்சு கட்டி வைக்கிறதுக்குப் பேரு கரையேத்துறது இல்ல... கிணத்துக்குள்ள தள்ளிவிடுறது" ரேணுகா அழுகையும் கோபமுமாகப் பேச,

"ரொம்ப பேசுறான்னு சொன்னேனே பாத்தியா?" அப்பா, அம்மாவிடம் கூற,

"இன்னைக்குத் தான் நான் பேசுறது முதலும் கடைசியும். இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க.. இனிமே நான் மில்லுக்கு போகமாட்டேன். கல்யாணமே ஆகலன்னாலும் பரவால்ல.. வயல் வேலைக்குப் போயோ, பீடி சுத்தியோ பொழுதை ஓட்டிக்கிறேன்" என்றபடி அவள் தங்கையின் சைக்கிள் சாவியை எடுத்தாள்.

"அதென்ன அப்படிச் சொல்ற? ஏஜென்ட் கிட்ட 50,000 அட்வான்ஸ் வாங்கியிருக்கு.. அப்புறம் அவன் நாலு வட்டி, அஞ்சு வட்டி கேப்பானே" என்று அப்பாவும், "எங்கடி போற?" என்று அம்மாவும் ஒருசேர கேட்டனர்.

"நீங்க அட்வான்ஸ் வாங்கினா அதுக்கு நானா பலி? புதுசா வண்டி வாங்கியிருக்கீங்கள்ள, அதை வித்துக் காசை ஏஜெண்ட்கிட்ட திருப்பிக் குடுங்க" என்று தந்தையிடம் கூறியவள் அம்மாவிடம்,

"யார் கூடயும் ஓடிப்போகல. பார்கவியப் போய் பாத்துட்டு வரேன்.. இன்னும் என் பையில நல்லாத் தேடி வைங்க, எதுவும் கிடைக்காது" என்று கூறி விட்டு புயலென சைக்கிளில் ஏறி புறப்பட்டுச் சென்றாள்.

நேரே பார்கவியைத் தேடிச் சென்றாள் ரேணுகா‌. அங்கு பார்கவியும் எரிச்சலில் தான் இருந்தாள். சிறிது ஓய்வு, லேப்டாப்பில் அலுவலகப் பணி, மற்ற நேரம் தூக்கம் என்று இயல்பாகவே இருந்தவளை உணவு கொடுக்க வந்த அம்மா கொஞ்சம் குழப்பி விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.

"உங்க அப்பாவுக்கு அவங்க தங்கச்சி மகனுக்கு உன்னைக் கட்டி வைக்கணும்னு ஆசை. உங்க அத்தை, நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுல என்னை எவ்வளவு பாடா படுத்தும் தெரியுமா? அவ குணம் அவ மகனுக்கும் இல்லாமலா போயிரும்? நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறேன்ன உடனே 'என் மருமவ என் மருமவ'ன்னு ரெண்டு தரம் பேசிருக்கா. அதக் கேட்ட உடனே உங்க அப்பாவுக்கு மனசுல ஒரு ஆசை வந்துருச்சு"

முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் அம்மா, அப்பா, தம்பிக்கு துணி எடுத்துத் தந்தாள் பார்கவி. "உங்க அப்பாம்மாவுக்கு மேல நான் உன்னைத் தூக்கி தூக்கி வளர்த்தவ நான். எனக்கு ஒரு சேலை எடுத்துத் தந்தா என்ன?" என்று கேட்டு வாங்கியவள் அவள் அத்தை.

"நம்ம ராசுவுக்கு பாடத்தில் ஏதோ சந்தேகம்ன்னு அவ மகன்ட்ட கேட்டானாம். அவன் சொல்லித்தர மாட்டேன்னுட்டானாம். அதே படிப்புத் தானே அவனும்? சொல்லிக் குடுத்தா கொறஞ்சா போயிடுவான்?" பார்கவி சாப்பிட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து ஆவலாதி கூறினார் அம்மா.

"அவனுக்கே தெரிஞ்சிருக்காது‌. தெரிஞ்சா சொல்லித் தர மாட்டானா?"

"அதானே! வெறும் காலேஜ் படிச்ச பையன். அதுவும் திக்கி முக்கி படிச்சான். உங்க ரெண்டு பேரும் மாதிரி கெட்டிக்காரத்தனம் கிடையாது. உன்னைப் போய் அவனுக்குக் கட்டி வைக்கவா?"

"ஆமா, இப்ப ஏம்மா இந்தப் பேச்சு? யார் இப்ப கல்யாணம் பண்ணப் போறது?" பார்கவி கேட்க,

"உனக்குப் பொன்னா பூவா ரெண்டு தாய்மாமா இருக்காங்க. ரெண்டு வீட்டிலேயும் மாப்பிள்ளை இருக்கு. நல்லா வளர்ந்து அம்சமா இருக்குற பையங்க. அதுல ஒருத்தனத் தான் பாக்கணும்" என்று அம்மா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

"யாரு உன் அண்ணன்மாரா? ஆமா அவங்க மட்டும் நம்மளை மதிச்சுக் கிழிச்சிட்டாங்களாக்கும்?" உண்டு முடித்து பாத்திரங்களைக் கழுவியபடியே கேட்டாள் பார்கவி.

"இப்ப நாம மாடிக் கட்டுறதுக்குக் கூட காசு வேணும்னா வாங்கிக்கோ, பேங்க் வட்டி தந்தாப் போதும்னு சொன்னாங்க தெரியுமா எங்க பெரிய அண்ணன்?"

"பேங்க் வட்டிக்கு அவர்ட்ட கடன் வாங்குறதுக்கு பேங்க்லயே வாங்கிடலாம்ல? ஏன் ஊருக்கே தான் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்களே, நமக்கு வட்டி இல்லாமத் தர மனசு வந்துச்சா? இதே மாமாக்கள் எனக்கு காலேஜ்க்கு பீஸ் கட்ட பணம் கேட்டு போனியே.. அப்ப என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இருக்கா? ஏன் இப்படிக் கடன் வாங்கி படிக்க வைக்கிற, உடனே வேலை கிடைக்கவா போகுதுன்னு சொன்னாங்கல்ல? இப்பக் காசு வருதுன்ன உடனே கடன் தரேன்கிறாரு. இதெல்லாம் நம்பாதம்மா. அத வெச்சு கல்யாணம் பண்ற அளவு பிளான் போடாத. நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியாவுல இல்ல. ரெண்டு வருஷம் போகட்டும். தம்பி சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அதைப் பத்திப் பேசணும்" என்று பார்கவி உறுதிபடக் கூறிவிட, அம்மா பின்பு முனகியபடியே சென்றிருந்தாள்.

'சந்தர்ப்பவாதிகள்! இவங்களப் பத்தி ஏன் இந்த நேரத்துல ஞாபகப்படுத்தினாங்க இந்த அம்மா?' என்று பார்கவி நினைத்துக் கொண்டிருந்தபோது தான் ரேணுகா வந்து சேர்ந்தாள்.

"பாருடி பார்கவி! நான் யாரையும் லவ் பண்றேனோன்னு எங்க அப்பாவுக்கு சந்தேகம். எங்க அம்மாவும் அதுக்கு சப்போர்ட்டு. நல்லா ரெண்டு பேரையும் திட்டி விட்டுட்டு வந்துட்டேன்" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் ரேணுகா.

"உங்க வீட்டுக் கதை இப்படின்னா, எங்க வீட்டுக்குக் கதை வேற மாதிரி இருக்கு. அதைச் செய்யணும் இதைச் செய்யணும்னு நான் நிறைய கோட்டை கட்டி வச்சுருக்கேன். எங்க அம்மாவும் அப்பாவும் அவங்கவங்க பிறந்த வீட்டுக்கு என்னை அனுப்புறதுல போட்டி போட்டு 'கோல்டு வார்' ஆரம்பிச்சுருக்காங்க. படிச்சு முடிச்ச உடனே கல்யாணப் பேச்சு, அதை விட்டா வேற ஒன்னும் தெரியாது இவங்களுக்கு"

"இவங்க விட்டாலும் சுத்தி இருக்கிறவங்க விடமாட்டாங்க போல. என்ன பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கலையா, பாக்கலையான்னு கேட்டுக் கேட்டு உசுப்பேத்தி விடுறது. இந்த ஆம்பளத் தடியனுங்க சும்மா சுத்துறானுகளே அவங்களைப் பத்தி ஒரு பிளானும் போடமாட்டாங்க. இவங்க ப்ரெஸ்டிஜ் எல்லாம் நம்மளைத் தள்ளி விடுறதுல தான் அடங்கிருக்கு போல.
ஆனா ஒன்னு, என்ன ஆனாலும் சரி இனிமே மில்லுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். நீயும் ஸ்ட்ரிக்டா சொல்லிடு.. உன் நல்ல குணத்துக்கு உங்க மாமா, அத்தை பசங்க எதுவும் செட்டாக மாட்டாங்க" என்றவள், "ஒன்னு சொல்லட்டா, கோவிச்சுக்காத. பேசாமல் சுமித்ரா சொல்ற மாதிரி அந்தத் தமிழ் வாத்தியார் ஒத்து வந்தா அவரையே கல்யாணம் பண்ணிக்கோடி" என்றாள் பட்டென்று.

"என்னடி! பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்ட? கிறுக்குப் பிடிச்சுருக்கா உனக்கு? ஒருதடவை பார்த்திருக்கோம் அவர் ஒரு ஹெல்ப் கேட்டாரு, பதிலுக்கு நாமும் ஒரு ஹெல்ப் கேட்டோம். அவ்வளவுதான். அதுக்கு ஏன் அந்த சுமி லூசு மாதிரி நீயும் இப்படிப் பேசுற?" பார் கேள்வி கேட்க,

"டக்குன்னு தோணுச்சு சொல்லிட்டேன். ஆனா, இவங்க பாரம்பரியம் பெருமையைக் காப்பாத்திறதுக்காக நம்ம வாழ்க்கையை அடகு வைக்கிறதே வேஸ்ட்னு தோணுது. தேடிப்பாத்து நல்ல மாப்பிள்ளையா அமஞ்சுட்டா அதிர்ஷ்டம். மத்தபடி இவங்க ஒரு வட்டத்தை வரைஞ்சு வெச்சுட்டு அதுக்குள்ள தேடுறாங்க. அதுல ரிசல்ட் வர்றது கஷ்டம் தானே?"

"ரொம்ப ஆச்சரியமா இருக்கு ரேணு, நீயா இப்படிப் பேசுற அப்படின்னு... நீ பட்ட கஷ்டமெல்லாம் உன்னைப் பேச வைக்குது. உன் கோபம் நியாயமானது தான். ஆனா நம்ம பெத்தவங்களுக்கும் நம்ம மேல பாசம் இல்லாமல் போகல. அவங்க வாழ்ந்த சூழ்நிலை மாதிரியே ஒண்ணை ஏற்பாடு பண்ணி நம்மையும் அதுக்குள்ள பத்திரமாக வச்சிருக்க நினைக்கிறாங்க. தெரியாத இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கிறத விட சொந்தக்காரங்க பெட்டர் அப்படின்னு நினைக்கலாம். அவங்க வயசுல நாமளும் இருந்தாத் தான் அவங்க மனநிலைமை புரியுமோ என்னமோ.. என்ன விட நீ ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கே.. அதனால உன் முடிவில் உறுதியா இரு. போக முடியாதுன்னு சொன்னா யாரும் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. கொஞ்ச நேரம் இங்கேயே படுத்துத் தூங்கி சாயங்காலமா வீட்டுக்குப் போ. நான் வேணா உங்க அம்மாட்ட சொல்லிடுறேன். சுமித்ரா விஷயத்தையும் இதையும் போட்டுக் குழப்பாதே... இதுவரைக்கும் அதுவா வராத காதலை வரிஞ்சு கட்டி எதுக்கு இழுக்கணும்? அதுவும் வீட்டு மேல உள்ள கோபத்துல?"

"சரிதான் பார்கவி. உன்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே இதுதான். எல்லாத்துக்காகவும் யோசிப்பே... இப்பக் கூட பாரு, அம்மா அப்பா நிலைல இருந்து யோசிக்கிற. சாரிடி, உன் மூடையும் கெடுத்துட்டேன். சுமிக்கு வீடியோ கால் பேசலாம், அவ ரொம்ப ஆசையா நேத்து கேட்டா.. அவட்ட பேசினா நல்லா சிரிப்பு வரும்" என்க, இருவரும் சுமித்ராவை வீடியோ காலில் அழைத்தனர். அங்கே சுமித்ராவுக்கு தமிழ்ச்செல்வனின் அம்மா கற்பகம் தலையை பின்னிப் விட்டுக்கொண்டிருந்தார்.

"ஹாய் ரேணுகா, ஹாய் பார்கவி அக்கா, இங்க பாத்தீங்களா எங்க பெரியம்மா…" என்றவள் "பெரீ.. வலிக்குது பெரீ.. மெதுவா?" என்று கற்பகத்திடம் கூறினாள்.

"என்னடி பயங்கர பாசமா இருக்க? ரொம்ப நெருங்கிட போல? போயி ரெண்டு நாள் தான் ஆச்சு நினைவிருக்கா? பெரியம்மாவ சுருக்கி 'பெரீ'ங்கற? ஓவரா உரிமை எடுக்காதே.."

"பெரியம்மா ரொம்ப நல்லவங்க. உங்களப் பத்தி நான் நிறைய சொல்லிருக்கேன்.. பாருங்க பெரீ, இதுதான் ரேணுகா, இதுதான் பார்கவிக்கா" என்று இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.

"நல்லாருக்கீங்களா மா? நீங்களும் நம்ம வீட்டுக்கு ஒரு தடவை வாங்கம்மா" என்று தமிழ்ச்செல்வனின் அம்மா அன்பாகக் கூப்பிட,

"கவலைப்படாதீங்க பெரீ... நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஒருநாள் நம்ம வீட்டுக்கு வந்துதானே ஆகணும்?" என்றாள் இரண்டு பொருள் பட.

அப்புறம் வீடியோ காலில் இருந்து வாய்ஸ் காலுக்கு மாற்றி அவளைத் தனியே வெளியே வரச் சொல்லி,

"என்னடி ஓவராப் பண்ற? பக்கத்துல இருந்தா உன்னைத் தொலைச்சுடுவேன் தொலைச்சு" என்று பார்கவி சொல்ல,

"என்ன நான் இல்லேன்னு ரெண்டு பேரும் ஜாலியா இருக்கீங்களா? என் ஆத்துக்காரர் வரட்டும் டி. அப்புறம் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து உங்களைத் தொலைக்கிறோம்" என்றாள் சுமித்ரா.

"எப்ப வராராம் உன் ஆத்துக்காரர்?" ரேணுகா கேட்க,

"அதான் தெரியல, பாஸ் கிடைக்கலன்னு சொல்றாங்க. பெரியம்மாவும் தமிழ் அண்ணனை எப்போ வருவாங்கன்னு கேட்டுகிட்டே இருக்காங்க. இங்கே கணக்கு வாத்தியார் வாயை திறந்து பேசுறதே இல்ல.. தமிழ் வாத்தியாராவது வந்தாத் தான் எனக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைக்கும்" சோகமாக சுமித்ரா சொல்ல,

"கணக்கு வாத்தியாரா அது யாருடி?"

"தமிழ் வாத்தியாரோட அண்ணன்தான்.. அன்புச்செல்வன்னு பேரு"

"என்னடி எல்லாத்துக்கும் ஆசிரியர் பதவி கொடுத்துருக்க?" ரேணுகா கேட்க,

"அது தெரியாதா? பெரியம்மா தான் ஹெட் மாஸ்டரம்மா. இங்க சின்ன பசங்க நிறைய பேரை சேத்துருக்கேன். அவங்களுக்கெல்லாம் எனக்குத் தெரிஞ்சத சொல்லிக் குடுக்கப் போறேன். தெரியாதத அவங்ககிட்ட கேட்டுப் படிக்கப் போறேன். எல்லாரையும் அவங்கவங்க புஸ்தகத்தைக் கொண்டு வாங்கன்னு சொல்லிருக்கேன். ஜாலியா இருக்கு தெரியுமா?"

"எப்படியோ மகாதேவபுர ஊரு ஆளாவே ஆயிட்ட போல நீ... கலக்கு! கலக்கு" வழக்கம்போல சுமித்ராவிடம் பேசியதில் மனம் இலகுவாய் ஆகியிருக்க,

"நீ கூட இப்படி படிக்கலாம்டி.. டென்த், ட்வெல்த் பிரைவேட் டா எழுதலாம். அது ஒண்ணும் பெரிய கஷ்டமே இல்ல. அப்படிப் படிச்சவங்க சிலரு கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதி கிளார்க் வேலை பாத்து எப்படி இருக்காங்க தெரியுமா?" பார்கவி ரேணுகாவிடம் கூற, ரேணுகாவும், "யோசிக்கிறேன்
பாரு. கேக்க நல்லாத்தான் இருக்கு" என்றாள். ஒரு சிறிய ஓய்வுக்குத் தயாரானார்கள் ரேணுகாவும் பார்கவி.


 
Top