அத்தியாயம் 14
தமிழ்ச்செல்வன் வரத் தாமதம் ஆகிறதே, ஏதாவது வேலைகளை ஆரம்பிக்கலாமா என்று மகாதேவபுரத்தில் அவன் அண்ணன் அன்புச்செல்வனுக்கு யோசனை ஓடியது.
சுமித்ரா வேறு, "அண்ணே அண்ணே, கணக்கு வாத்தியார் அண்ணே! சும்மாவே உக்காந்து எத்தனை நாள் தான் நான் சோறு சாப்பிடுறது? ஏதாவது வேலை இருந்தாக் குடுங்க" என்று தொண தொணத்தவாறு இருந்தாள். அஜய்முருகனும் மெஸ்சிலிருந்து வரப்போகும் உணவுக்காகக் காத்திருந்த முதியவர்களிடம் "ரெண்டு நாள்ல சாப்பாடு வரும், ரெண்டு நாள்ல சாப்பாடு வரும்" என்று சமாளித்து வருவதாகக் கூறினான்.
"எத்தனை நாள்டா இப்படியே சொல்ற? 'தோ கிலோமீட்டர் பையா' னு ஒரு படத்துல சொல்ற மாதிரியான்னு கேட்டாரு ஒரு தாத்தா.. சட்டுபுட்டுன்னு வேலையை ஆரம்பிப்போம்ணே.. ஹோட்டலைப் பாத்துக்க தமிழ் அண்ணன் இப்பத்தானே கொஞ்ச நாள் முன்னாடி வந்தாரு. அதுக்கு முன்னாடி எவ்வளவு நாள் நீங்க கடையை நடத்திக்கிட்டு இருக்கீங்க? எத்தனை பேருக்கு சாப்பாடு போட்ட ஹோட்டல், இப்ப 40 இல்லை மிஞ்சிப்போனா 50 பேர். அவ்வளவு தான். அதுவும் ஒரு வேளைக்கு ஒரு ஐட்டம் மட்டும் செஞ்சாப் போதும். வகைவகையாச் செய்ய வேண்டாம். நம்ம சமையல் மாஸ்டர், பாத்திரம் கழுவுற கண்ணம்மாக்கா அவங்கல்லாம் கூட வருமானம் இல்லாம கஷ்டப்படுறதா சொன்னாங்க" என்று வருத்தப்பட்டான் அஜய்.
அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நிறைய பேர் வெளிநாட்டில் வேலை செய்தனர். காலப்போக்கில் அவர்களது மனைவி குழந்தைகளும் அவர்களுடன் வெளிநாடுகளுக்குச் சென்று விட, நிறைய வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருந்தனர். கொரோனா நோய் பெரியவர்களை அதிகம் பாதிக்கும் என்ற அச்சம் இருந்ததால் அவர்களுக்கு வெளியே வர பயம். கடையடைப்பு மற்றும் லாக்டவுன் நேரத்தில் யாரேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு கொடுப்பதை விட உணவாகக் கொடுத்தால் வசதியாக இருக்குமே என்று அவர்கள் விரும்பினர். பாட்டிகள் இருக்கும் வீடு என்றால் கூட சமாளித்துக் கொள்வார்கள், தாத்தாக்கள் மட்டும் இருக்கும் வீடு என்றால் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட முடியாத நிலை. பலருக்கு மாத்திரை வாங்குவது, வங்கி வேலைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியே வர முடியாமல் இருந்தது. அதற்கு உதவ இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று தமிழ்ச்செல்வன் நினைத்திருந்தான். முதற்கட்டமாக உணவுப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அவன் போட்ட திட்டம்தான் இது.
"அதைப் பத்தி தான் டா யோசிச்சுட்டு இருக்கேன். கொஞ்சம் மலைப்பா இருக்கு, ஆரம்பிச்சா குறையில்லாம செய்யணும்.. தொடர்ந்து விடாம செய்ய வேண்டியதிருக்கும்ல" என்று அன்புச்செல்வன் கூறவும், "கமான் கைப்புள்ள! யூ கேன் டூ இட்டு!" என்று கூறினான் அஜய்.
"டேய்! நான் கைப்புள்ளையா? வர வர உன் தொல்லை தாங்க முடியல. இந்த சுமித்ரா புள்ளையும் வந்தாலும் வந்துச்சு.. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே வாய் ஜாஸ்தி. துணைக்கு ஆள் கிடைச்ச உடனே இப்ப ரெண்டும் ரெண்டாப்பை, ரெண்டும் கழண்ட அகப்பைன்ன மாதிரி ஆயிடுச்சு. ஒரே சினிமா வசனமும், பாட்டும், பஞ்ச் டயலாக்குமாத் தான் கேக்குது. கொஞ்ச நேரம் சும்மாத்தான் இருங்களேன்டா.. வாய் வலிக்காதான்னு தெரியல" என்று சுமித்ராவையும் அஜய்யும் கடிந்துகொண்டான். ஆரம்பத்தில் கடுமையாகச் சொல்வது போல இருந்தாலும் சிரிப்புடனே தான் சொல்லி முடித்தான் அன்புச்செல்வன்.
வெறுமையாக இருந்த வீட்டில் இப்போதுதான் கலகலப்பு மீண்டிருந்தது. திண்ணையில் அமர்ந்து டியூஷன் என்ற பெயரில் இரண்டு பேரும் செய்யும் அலப்பறையாலும் பிற குழந்தைகளின் வரவாலும் எல்லாருக்கும் மகிழ்ச்சி தான். இவர்கள் அடிக்கும் கூத்தையும் பேசும் பேச்சுக்களையும் பார்த்து அன்பச்செல்வனும் அவன் தாய் கற்பகமும் சிரித்துக் கொள்வார்கள்.
"தமிழ் வர ரெண்டு வாரம், முணு வாரம் ஆகும்னா வேலையை ஆரம்பிச்சுரலாம். அவன் வந்து தான் செய்யணும்கிற மாதிரி ஒரு வேலையும் இல்லையே? சும்மா இருந்தா வேற மனசுக்குக் கஷ்டமாவே இருக்கு. தமிழ் இருக்கிற தெருவுல கொரோனா வந்துருச்சாம்ல.. அதைக் கேட்டதிலிருந்து திக்கு திக்குன்னு இருக்கு. நம்ம புள்ள எந்த நோய் நொடியும் இல்லாம வந்து சேந்தா மாரியம்மனுக்கு மாவிளக்கு போடறேன்னு வேண்டியிருக்கேன்" என்றார் கற்பகம்.
"கொரோனா என்ன பேயா பிசாசா? பாதுகாப்பா இருந்தா ஒன்னும் வராது. கோயிலையே அடைச்சு வெச்சிருக்காங்க பாத்தீங்கல்ல? சாமிக்கே கொரோனா பயம் தான். இதுல மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடப் போறீங்களா? ஹோட்டல் வேலையை ஆரம்பிக்கணும். அவ்வளவுதானே, அதுக்கு எதுக்கு சாமியைப் பத்தி பேசுறீங்கம்மா?"
"அன்பண்ணே! கோயில்ல வச்சு கூட்டம் கூடினா நிறையப் பேருக்கு பாதிப்பு வரும்கிறதால தான் கோயிலை அடைச்சு வெச்சிருக்காங்க. சாமிக்கு ஒன்னும் கொரோனா பயமில்லை" என்று சுமித்ரா சொல்ல,
"சுமி அக்கா! அண்ணனுக்கு சாமி மேல கொஞ்சம் கோபம். நாளான சரியாயிடுவாங்க, என்ன பெரியம்மா?" என்று அஜய் கற்பகத்தைப் பார்த்துக் கேட்டான்.
அன்புச்செல்வன் பக்தி மிக்கவன். தவறாமல் கோவில்களுக்குச் செல்பவன். நடந்த விபத்தும், தந்தையின் மறைவும் கடவுள் மேல் அவனுக்குக் கோபத்தைக் கொடுத்திருந்தது உண்மைதான். அன்புச்செல்வன் பதில் எதுவும் கூறாமல் இருக்கவும் கற்பகம்,
"கோபம் என்ன கோபம்? பெத்த தாய்க்கு அப்பப்ப பிள்ளைகள் மேல கோவம் வர்றது தான். மாரியாத்தா எல்லாம் நல்லதுக்குத் தான் செய்வா. விதி முடிஞ்சிடுச்சு. அப்பா போய் சேர்ந்துட்டாங்க. உனக்கும் கெட்ட நேரம், அதனால ஆபரேஷன் பண்ணிப் படுத்துக்கிற மாதிரி ஆயிடுச்சு. கால் என்னப்பா, இன்னும் மூணு மாசத்துல சரியாயிரும். நானே அப்படி நினைச்சுத் தான் மனசத் தேத்திக்கிட்டு இருக்கேன். சாமி மேல கோவிச்சுக்காதப்பா" என்று கண்கள் கலங்க, அன்புச்செல்வனிடம் கூறினார். கூறிவிட்டு கற்பகம் அந்தப்பக்கம் நகர்ந்ததும் சுமித்ரா அன்புச்செல்வனின் அருகில் போய் குரலைத் தழைத்துக் கொண்டு, "கணக்கு வாத்தியார், கணக்கு வாத்தியார், என் வீட்டுக்காரர் அதான் ஊர்ல இருந்து வர்றாருல்ல விஸ்வநாதன்... அவரும் வந்தா ஏதாவது வேலை வேணுமில்ல? ஆரம்பிச்சு வைங்க கணக்கு வாத்தியார்! அவர் ஆட்டோ கூட நல்லா ஓட்டுவார். சொன்ன வேலையைச் செய்வார். படிச்சவருன்னு பந்தா எல்லாம் பண்ண மாட்டார்" என்றாள் கெஞ்சும் குரலில்.
"வெவரம் தான் மா நீ.. என்னடா லூசு மாதிரி பேசிக்கிட்டே இருக்கே இந்தப் பொண்ணு, இதுக்குப் போய் கல்யாணம் கட்டி வைக்கப் போறேன்னு என் தம்பி சொல்றானே, ஒத்து வருமான்னு யோசிச்சேன். நீ உன் குடும்பத்துக்கே வருமானத்துக்கு பிளான் போட்டுட்ட. பொழச்சுக்குவ தாயி, பொழச்சுக்குவ" என்றான் அன்புச்செல்வன்.
"என்ன செய்ய? நாங்கள்லாம் பத்துப் பக்கத்துக்கு வசனம் பேசினாத் தான் உங்களையும் உங்க அம்மாவையும் நாலஞ்சு வரியாவது பேச வைக்க முடியுது. இப்ப நானும் அஜய்யும் இவ்வளவு பேசப்போய்த் தானே இத்தனை பேருக்கு வருமானம் கிடைக்கப் போகுது" சுமித்ரா சொல்ல,
அஜய்யும் அவளும் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டனர்.
"வளவளன்னு என்ன பேச்சு? ஆரம்பிப்போம் வேலைய.." என்று சிறு புன்னகையுடன் சொன்ன அன்புச்செல்வன், சமையலுக்கு வாங்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியல் தயாரிப்பதற்காக பேப்பரையும் பேனாவையும் எடுத்து அமர்ந்தான்.
"அக்கா! நாளைலருந்து டிபன் குடுக்க ஆரம்பிப்போம், அதற்கு மறுநாள் மத்தியான சாப்பாடு கொடுக்கலாம்" என்று அஜய் முடிவுகளை எடுக்க ஆரம்பித்தான்.
"அரிசியும் உளுந்தும் எவ்வளவு ஊறப் போடணும்னு பெரியம்மாட்ட கேட்கவா? என்று சுமி அஜய்யிடம் கேட்க,
"வரவர யாரு ஓனர்னே தெரிய மாட்டேங்குது. கேளுங்க கேளுங்க!" என்றான் அன்புச்செல்வன்.
"அவரு கெடக்காரு. நீங்க வாங்கக்கா! பெரியம்மா கிட்ட போயி மெனு கேப்போம். டிஃபன் பாக்ஸ் எல்லாம் ஏற்கனவே வந்துருச்சு. எல்லாத்தையும் கழுவி வைப்போம்"
"டேய், டப்பால பெயிண்டால ஒன்னு, ரெண்டு, மூணு நம்பர் போட்டு வைக்கலாம். அப்பதான் பாத்திரம் மாறாம இருக்கும். பழைய பெயின்ட் எதுவும் இருக்கா?"
"இருக்குக்கா. நீங்க கழுவி தொடச்சி நம்பர் எழுதுங்க. எந்தெந்த வேளைக்கு என்ன மெனுன்னு பெரியம்மா கிட்ட கேட்டு வாட்ஸ்அப் குரூப்ல போட்டு விடுறேன். நம்மகிட்ட சாப்பாடு வேணும்னு கேட்டுருக்கிறவங்க எல்லாரையும் சேர்த்து ஏற்கனவே ஒரு குரூப் ஆரம்பிச்சிருக்கேன். அதுல வேற எப்ப சாப்பாடு வருது, எப்ப சாப்பாடு வருதுன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க" என்று கூறித் தன் அலைபேசியை எடுத்துக் காட்டினான். அரை மணி நேரத்துக்குள் வீட்டில் பரபரப்பு கூடி விட்டது.
ஓரிரு நாட்களில் விஸ்வநாதனும் மஹாதேவபுரத்திற்கு வந்து சேர்ந்து விட, வேலை வேகம் பிடித்தது. அவனை எங்கே தங்கவைப்பது என்பதில் ஒரு சிறு குழப்பம் வந்தது. திருமணமாகும் முன் எப்படி ஒரே வீட்டில் இரண்டு பேரையும் தங்க வைப்பது என்று கற்பகத்திற்கு லேசாக தயக்கம் வந்துவிட, அஜய் விஸ்வநாதனை, "எங்க வீட்டுக்கு வாங்க அண்ணே!" என்று கூறி அழைத்துச் சென்றான். அஜய்யின் அப்பா ஒரு சிறந்த 'குடிமகன்'. லாக்டவுனால் டாஸ்மாக் அடைந்திருந்ததால் தண்ணியடிக்காமல் இருந்தார். வருமானம் இல்லை என்றாலும் அவனது அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மகன் பொறுப்பாக வேலை செய்கிறானே, தான் இப்படி வெட்டியாக இருக்கிறோமே என்ற நினைப்பு அப்பொழுது தான் அவனது அப்பாவுக்கு வந்திருந்தது. அதனால் கொஞ்சம் சோகமாக இருந்தார். இந்த நேரத்தில் ஒரு விருந்தாளி வந்து தங்கினால் நல்லதுதான் என்று அஜய்க்கும் அவனது அம்மாவுக்கும் தோன்றியது.
அஜய் துவங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழ்ச்செல்வனையும் இணைத்திருந்தான். அவனும் சில ஐடியாக்களைக் கொடுக்க, உணவுப் பட்டுவாடா இனிதே துவங்கியது. இன்று காலை- இட்லி, சாம்பார், சட்னி. மதியம்- சாதம், குழம்பு, சுரைக்காய்க் கூட்டு. இரவு- கேப்பை தோசை என்று காலையிலேயே மெனு போட்டு க்ரூப்பில் அனுப்பிவிடுவார்கள். வண்டி கிளம்பும் நேரத்தையும் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பவே, வாங்குபவர்களுக்கும் வசதியாக இருந்தது.
பார்கவி தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு வாரம் முடிந்துவிட, இந்த சில நாட்களில் நடைமுறை வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்று ஆச்சரியமாக இருந்தது பார்கவிக்கு. அவள் ஊரிலிருந்து கிளம்பிப் பத்து நாட்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது. வீட்டிற்குச் சென்ற பார்கவியிடம் அவளது அப்பா, "அந்தப் பொண்ணு சுமித்ரா, அவ லவ் பண்ற பையனோட ஃப்ரென்ட் வீட்டுக்கு போயிருக்கிறதா சொன்னியேம்மா? நல்லா இருக்காளா, விசாரிச்சியா?" என்று கேட்டார்.
"ஆமாப்பா! அப்பப்ப ஃபோன் பண்ணுவா. நல்லா இருக்காளாம். அந்தப் பையனும் இப்ப இங்க வந்துட்டாரு போலத் தெரியுது. இந்த லாக் டவுன் முடிஞ்சவுடனே கல்யாண ஏற்பாடு பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள்.
தந்தையிடம் பேசிய பிறகுதான், 'ஐயோ! அதுக்கப்புறம் தமிழ்ச்செல்வன்கிட்டப் பேசலையே. அவரு செய்ற உதவிகளுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா? அப்படிப்பாத்தா இப்போ தான் தமிழ்ச்செல்வன் ஜஸ்ட் இன்ட்ரொடியூஸ் ஆயிருக்காரு. அதுவும் வெறுமனே அறிமுகம் மட்டும் தான். அதற்கு இவ்வளவு செய்றது பெரிய விஷயம். கட்டாயம் பேசணும். இல்லன்னா, காரியம் ஆனவுடனே கழண்டுக்கிட்டது மாதிரி ஆயிடும்' இப்படியாக சிந்தனை ஓடியது பார்கவிக்கு. ஆனால் பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. 'சுமித்ராவும் ரேணுகாவும் ஏதேதோ சொன்னதால தான் பேசத் தயக்கமா இருக்கு. இப்பப் பேசிட வேண்டியது தான்' என்று எண்ணி தமிழ்ச்செல்வனுக்கு அழைத்தாள்.
பார்கவியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் தமிழ்ச்செல்வனுக்கு இன்ப அதிர்ச்சி.
"சொல்லுங்க…" மேடம் என்று சொல்வதா, பார்கவி என்று அழைப்பதா என்று ஒரு சிறிய குழப்பம் வந்தது.
அதற்குள் பார்கவி, "இல்ல தமிழ் சார்.. சுமித்ரா நல்லா இருக்கேன்னு சொன்னா. சந்தோஷமா இருக்கா. ரொம்ப தேங்க்ஸ்.. எப்படி சொல்றதுன்னு தெரியல. என் பிரச்சனையை உங்க பிரச்சினையா எடுத்து சால்வ் பண்ணிட்டிங்க"
"அதுல என்ன இருக்கு? வாய்ப்பு இருக்கு, செய்றேன். அவ்வளவுதானே?"
"நாகராஜ் அண்ணனும் கூட சொன்னாரு, நீங்க இப்படித்தான்னு. நன்றி எதிர்பார்க்காம உதவி பண்றது உங்க குணம், ரொம்பத் தன்மையான மனுஷன் நீங்கன்னும் அவர் சொன்னார்" என்றாள் பார்கவி.
"அதை விடுங்க. நீங்க கேஷுவலா இருங்க. எப்படிப் போகுது உங்க வேலை எல்லாம்?" பேச்சை மாற்றும் விதமாக தமிழ்ச்செல்வன் கேட்டான்.
"நல்லாப் போகுது. உங்க தெருவுல ஏதோ பாஸிட்டிவ் கேஸ்னு சொன்னீங்க. ரொம்ப கெடுபிடியா இருக்குதா? சமையல் பொருட்கள் எல்லாம் கிடைக்குதா? நீங்களே சமைச்சு சாப்பிடுறீங்களா?" கேள்விகளாக அடுக்கினாள் பார்கவி.
"கிடைக்குது. தினமும் காலையில வீட்டு வாசலிலேயே வண்டியில் கொண்டு வந்து விக்கிறாங்க. வேணுங்கிறத வாங்கிக்க வேண்டியதுதான்"
"ஹெல்தியா சமைச்சு சாப்பிடுங்க. ஒரு ஆளுக்குத் தானேன்னு ஏனோ தானோன்னு செய்யாதீங்க. வெஜிடபிள்ஸ், ஃப்ரூட்ஸ் எல்லாம் சேத்துக்கோங்க. லெமன் ஜூஸ் தினமும் குடிங்க. மாஸ்க் போட்டுட்டுத் தானே திங்ஸ் வாங்கப் போறீங்க?"
"நான் எப்பவுமே ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் குடுப்பேன். இங்கே எல்லாமே கிடைக்குது" தன் நலனில் அக்கறை காட்டுகிறாளே என்று நினைக்கையில் தமிழ்ச்செல்வனுக்கு உச்சி குளிர்ந்தது.
"உங்க ஆபீஸ் பத்தி சொல்லுங்க. டைமிங் எப்படி? அங்க க்ரோத் நல்லா இருக்குமா? வேலை எதுவும் மாறுற மாதிரி ஐடியா இருந்தா சொல்லுங்க. எங்க பழைய கம்பெனிக்கு ரெஃபர் பண்றேன்" என்று அவனும் பொதுவாக சில விஷயங்கள் பேசினான்.
அவள், "சுமித்ரா தங்கியிருக்கிறதுக்கு உங்க வீட்டில எதுவும் தப்பா நினைக்கலையே?" என்று கேட்க, குடும்பம் பற்றி பேச்சு வளர்ந்தது. அதன்பின் இவனும், "உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? கோவிட்னால எதுவும் பாதிப்பு இருக்கா?" என்று கேட்க,
பார்கவி, அம்மா அப்பா அவர்களின் வேலை, தம்பியின் படிப்பு என்று பல விபரங்கள் கூறினாள்.
"ரொம்ப சந்தோஷம்ங்க. பாக்கலாம். பை!" என்று கூறி தமிழ்ச்செல்வனே உரையாடலை முடித்து வைத்தான். ஒன்றும் வித்தியாசமாகப் பேசி விடவில்லை. 'சாதாரணமாகத் தான் இருவரும் பேசினோம்' என்று பார்கவியும், 'ம்.. நல்ல முன்னேற்றம் தான்' என்று தமிழ்ச்செல்வனும் நினைக்க, உதடுகளில் உறைந்த புன்னகையுடனே இருவரும் அன்று படுத்து உறங்கினார்கள்.
யெஸ் வேலை தொடர்பான தங்கள் சாகசங்களை பார்கவியிடமும் ரேணுகாவிடமும் கூறியிருந்தாள் சுமித்ரா. அவள் இருக்கும் இடத்தை நினைத்து இருவருக்குமே மகிழ்ச்சி. அதேசமயம் சுமித்ராவின் வீட்டிலிருந்து அடுத்து எப்போது பிரச்சினை வருமோ என்பது குறித்த லேசான அச்சமும் இருந்தது. சுமித்ராவின் ஸ்லீப்பர் செல்களும் ஏனோ எதுவும் தொடர்பு கொள்ளவில்லை.
"எங்க வீட்ல என்ன ஆச்சுன்னு தெரியல. புலி பதுங்குதோ? அடுத்து பாயப் போகுதான்னு தெரியல.. சத்தத்தையே காணோம்" என்று சுமித்ரா கூறியிருந்தாள்.
"விட்டது தொல்லைன்னு உன்னைத் தண்ணி தெளிச்சு விட்டுருப்பாங்களோ?" என்று பார்கவி சொல்ல,
"தெரியல பார்கவி அக்கா. எனக்கும் வருத்தமாத் தான் இருக்கு. என்ன இருந்தாலும் எங்க அம்மா, அப்பா பாசமாத் தானே என்னை வளத்தாங்க? அதான், ரொம்ப நாளாப் பேசலன்னதும் கஷ்டமா இருக்கு. அன்னைக்குக் கெடச்ச தகவல் படி பாத்தா என் தம்பிக்குக் காது குத்துற விசேஷம் பிளான் பண்ணி இருந்தாங்களே, அது ஒழுங்கா நடந்திருந்தா முடிஞ்சு நாலு நாள் ஆயிருக்கணும். அதை முடிச்சிட்டு, வந்த மொய்ப் பணத்தை எல்லாம் எண்ணிட்டு அப்புறம் என்ன தேடி வரலாம்னு இருக்காங்களோ என்னமோ?" என்றாள் சுமித்ரா.
அந்த காதுகுத்து நிகழ்ச்சியில் வைத்து அவளுக்கு திடீர் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது பற்றி இப்போதுதான் விஸ்வநாதன் கூறியிருந்தான். 'அது யாருடா அந்தக் கட்டைல போறவன், எனக்குத் தாலி கட்ட ஒத்துக்கிட்டவன்' என்று சுமித்ரா திட்டி முடித்திருந்தாள். உண்மையில் அந்த காது குத்து நிகழ்ச்சியின் விளைவாக யாருமே எதிர்பாராத சம்பவங்கள் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது குறித்து இவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை.