கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 18

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 18


"ஹலோ!" என்றாள் பார்கவி.

"சொல்லுங்க" என்று தமிழ்ச்செல்வன் கூறவும், "சொல்லுங்க" என்றாள் பார்கவியும்.

"நீங்க தானே ஏதோ பேசணும்னு சொன்னதா சுமித்ரா சொன்னா?" தமிழ்ச்செல்வன் சந்தேகமாகக் கேட்கவும், 'டேய் லூசு! அவளே தயங்கித் தயங்கிப் பேசுறா. நீ இறங்கிப் போய் பேசுறத விட்டுட்டு இப்படி ஏன் என்ன விஷயம்னு முகத்துல அடிச்ச மாதிரி கேக்குற?' என்று அவனை அதட்டியது அவனது மனசாட்சி.

"இல்ல, சுமித்ரா கல்யாணம் ன்னு சொன்னா, அதான் உங்க வீட்ல எல்லாரும் என்ன சொன்னாங்கன்னு கேட்டேன்" என்றாள் பார்கவி.

"எல்லாரும்னா?"

"எல்லாரும் தான்!"

"யாரெல்லாம்? நானு, அம்மா, அண்ணன், அஜய் இவங்களா?

"ம்.. ஆமா! நீங்க சந்தோஷப் பட்டிருப்பீங்கன்னு தெரியும். சுமியோட காதல், ஓடிவந்த கதை, இதெல்லாம் உங்க அம்மாவுக்கு தெரியாதுல்ல.. இப்ப வேற அவங்க அம்மா அப்பா கல்யாணத்துக்கு வர மாட்டாங்க அப்படிங்கிறா.. அதான் அதைப் பத்தி உங்க அம்மா எதுவும் தப்பா நெனச்சாங்களோ அப்படிங்கிற அர்த்தத்துல கேட்டேன்"

"அப்ப, எங்க அம்மா என்ன ஃபீல் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க?" தமிழ்ச்செல்வனின் குரலில் எப்போதும் ஒரு மிடுக்கு, அசால்டாக 'அதுக்கு என்னங்க, செஞ்சிடலாம்' என்பது போன்ற தொனி இருக்கும். சென்ற முறை முறைமாப்பிள்ளை பற்றிய பேச்சு வந்தபோது ஒரு குழைவு, தன் கருத்தை ஒத்துக் கொள்ள வைக்க முயலும் ஒரு முனைப்பு, டெஸ்பரேஷன் தெரிந்தது. இன்று ஏதோ இடக்குப் பேசுவது போல, தன்னை மாட்டி வைக்க முயல்வது போல பார்கவிக்குத் தோன்றியது.

"அப்பப்பா! எதேச்சையாக் கேட்டேன். ஒரு சந்தோஷமான விஷயத்தைக் கேட்டவுடனே சுத்தி இருக்கிறவங்க ஹாப்பியான்ன மாதிரி கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி கிராஸ் கொஸ்டினாக் கேக்குறீங்க?" என்றாள் பார்கவி, 'நியாயப்படி பாத்தா நான் தான் கிராஸ்- கொஸ்டின் கேக்கணும்' என்று முணுமுணுத்தபடி.

"வேற ஏதோ ரகசியமாக சொன்னீங்களே என்ன? புரியல.." என்றான் தமிழ்ச்செல்வன்.

"ரகசியமாவா? ஒண்ணும் சொல்லலையே.."

"நியாயப்படி அப்படி இப்படின்னு காதுல விழுந்துச்சே"

இதுக்கு மேல இல்லையேன்னு சொன்னா நல்லா இருக்காது என்று நினைத்த பார்கவி, "இல்ல.. நியாயப்படி பாத்தா நான்தான் எப்ப கல்யாணம், எங்க வச்சு கல்யாணம், நான் என்ன உதவி பண்ணனும்னு நிறைய கேள்வி கேக்கணும்.. நீங்க என்னைக் கேக்குறீங்ளே, அதைச் சொன்னேன்" என்றாள் பார்கவி.

"ஓஹோ!" என்று தமிழ்ச்செல்வன் கூற,

"என்ன ஓஹோ?" என்றாள் பார்கவி.

"என்னங்க 'என்ன கைய புடிச்சி இழுத்தியான்னு வடிவேலு மாதிரி கேக்குறீங்க?" சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறோம் என்று அவனுக்கே நன்றாகத் தெரிந்தது.

"வடிவேலுன்னா ரொம்பப் புடிக்குமா?" பார்கவியும் எதையோ கேட்டாள்.

"வடிவேலுவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமாங்க?

"கேள்வி கேட்டுட்டே போறோம் ரெண்டு பேரும். ஒரு கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வி அப்படிங்கற மாதிரி.." சலிப்பாகச் சொன்னாள் பார்கவி.

"அப்ப பதில் தான் வேணும்.. இல்லைங்க?" என்று இன்னொரு கேள்வியையே கேட்டான்.

இன்று இவன் சரியில்லை. ஏதோ குசும்பு செய்கிறான். நானும் சரியில்லை, வழக்கமாகச் சட்டென்று முடிவு செய்து பேசி விடுவேன். அதுதான் என் பலமும், என் பலவீனமும். இன்று ஒரு சாதாரண கேள்விக்கு பதில் சொல்லவே இவ்வளவு யோசிக்கிறேன், தடுமாறுகிறேன் என்று நினைத்த பார்கவி,

"நீங்க சொல்றது, கேக்குறது ஒன்னுமே புரியலை.. ஒருவேளை டிவி சீரியல் எதுவும் பாத்துட்டு இருக்கீங்களா? அங்க ஒரு காதை வச்சுகிட்டு இங்கே பேசுறீங்களா?" என்றாள்.

"அப்ப, புரியிற மாதிரி சொல்லுடா அப்படிங்கறீங்க?" என்று தமிழ்ச்செல்வன் கேட்க,

'டா வா? நான் எங்கே அப்படி சொன்னேன்' என்று பதறியவள், "நான் எங்கங்க அப்படிச் சொன்னேன்?" என்றாள்.

தமிழ்ச்செல்வன் பதில் கூறும் முன் சுமித்ரா அவனுக்கு எதிரில் நின்று கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொன்னாள்.

'என்ன?' என்று சைகையால் தமிழ்ச்செல்வன் கேட்க,

"என் ஃபோன்ல சார்ஜ் அவ்வளவா நிக்காது. சீக்கிரம் சுவிட்ச் ஆஃப் ஆயிடும்" என்றாள் சத்தமாக. 'சரி நீ போ, நான் பாத்துக்கிறேன்' என்று அவளுக்கு சைகையிலேயே பதிலளித்தான்.

"ஹலோ?" என்று பார்கவி கேட்க,

"சுமித்ரா நடுவுல ஏதோ சொன்னா.. அதான் கொஞ்சம் டைவர்ட் ஆயிட்டேன். சொல்லுங்க!" என்றான்.

"என்ன சொல்றது?" நிஜமாகவே கடுப்பாகி விட்டது பார்கவிக்கு‌.

"இல்ல.. புரியிற மாதிரி, புரியாத மாதிரின்னு ஏதோ பேசிட்டு இருந்தோமே…?"

இதற்குமேல் இதே ரீதியில் பேச்சை வளர்த்துக் கொண்டே போனால் நன்றாக இருக்காது என்று நினைத்தவள், "அப்படியா? மறந்துடுச்சு. அதை விடுங்க. கல்யாணம் பத்தி பிளான் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடறீங்களா? இன்னும் பிளான் எதுவும் பண்ணல போல" என்றாள்.

"மறந்திருச்சா? நீங்க வழக்கமா முன்னாடி என்கிட்ட பேசும்போது ஏதோ சொல்ல வந்துட்டு, மறந்துடுச்சு.. அப்புறம் சொல்றேன்னு சொல்வீங்களே.. அதை மாதிரியா?"

"நான் எப்ப அப்படி சொன்னேன்?"

"அதையும் மறந்தாச்சா? சுமித்ரா விஷயமா முத முதல்ல என்கிட்ட ஃபோன்ல பேசும்போது, அதுக்கு அடுத்த தடவை.. அப்பல்லாம் ஏதோ சொல்ல வந்தேன்னு சொல்லிட்டு அப்புறம் மறந்துட்டேன்னு பாதியில கட் பண்ணிட்டீங்களே?"

"நீங்கதான் போன தடவை பாதியில் கட் பண்ணிட்டீங்க. நான் அப்படி எல்லாம் இல்ல" என்று சட்டென்று கூறி விட்டாள் பார்கவி, அவன் தன்னைக் குறை கூறியது போக முடியாமல்.

'செம்பருத்தி பூ மேட்டர், செம்பருத்தி பூ மேட்டர்.. அதைச் சொல்றா' என்று தமிழ்ச்செல்வனின் மனசாட்சி சுட்டிக்காட்டியது.

"பரவாயில்லைங்க பார்கவி, உங்களுக்கு மறதி ஜாஸ்தி ஆயிடுச்சோன்னு பார்த்தேன்.. நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே!" ஆச்சரியப்படுவது போலக் கூறினான். 'டேய் தமிழ்! எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறேடா நீ! ரொமான்டிக் ஹீரோவாயிட்ட போல?" என்றது மனசாட்சி. பின் மனசாட்சியே இரண்டாவதாக ஒரு அவதாரம் எடுத்து 'டேய், இன்னும் லவ்வு ஓகே ஆகவே இல்ல. அதுக்குள்ள கலாய்க்கிறேன்னு அந்தப் புள்ளையோட கோவத்தக் கிளப்பாதே' என்றது.

'வஞ்சப்புகழ்ச்சி அணில வர்ற மாதிரி பாராட்டுறான். இதுக்கு என்ன பதில் சொல்றது? இவன்கிட்ட பேச்சை வளர்த்ததே தப்பு' என்று பார்கவி தரையில் ஒரு உதைவிட்டு தன்னையே நொந்து கொள்ள, நல்ல வேளையாக அந்த நேரம் சுமித்ராவின் அலைபேசியில் சார்ஜ் போய் அது தன் உயிரை விட்டது.

இப்போது என்ன செய்வது? செல்போனிலிருந்து கூப்பிடலாமா? சுமியின் செல்லில் தான் சார்ஜ் போய்விட்டது என்று மெசேஜ் போடலாமா? நான் கட் செய்து விட்டதாக நினைத்து விடக்கூடாதே என்று தமிழ்ச்செல்வன் யோசித்துக் கொண்டிருக்கையில்,

"சங்கீத ஸ்வரங்கள்.. ஏழே கணக்கா.. இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்.." என்ற பாடல் சத்தமாக ஒலித்தது. சுற்றிலும் பார்த்தான். சுமித்ரா தமிழ்ச்செல்வனுடைய ஃபோனை எடுத்து அந்தப் பாட்டை யூடியூபில் ஓடவிட்டிருந்தாள்.

"சேட்டை கூடிப் போச்சு உனக்கு. அந்த விஸ்வாவைச் சொல்லணும். உன்னை ரொம்ப வளர்த்து விட்டுருக்கான்" என்றபடி அருகில் கிடந்த ஒரு பத்திரிக்கையைச் சுருட்டி அவள் தலையில் அடித்தான் தமிழ்ச்செல்வன்.

"தமிழ் வாத்தியார், தமிழ் வாத்தியார்! அடிக்காதிங்க தமிழ் வாத்தியார்! விடிய விடிய ஃபோன் பேசினா இந்தப் பாட்டு தானே போடணும்?" என்றாள் சுமித்ரா பாவமாக.

"விடிய விடிய பேசினேனா? நானா? அதுவும் உன் பிரண்டு கிட்ட? உன் டப்பா ஃபோனு தான் அதுக்குள்ள கட்டாயிடுச்சே!" தன் வயதையுடைய அஷோக்கிடம் பூசி மெழுகியது போல தன்னைவிடச் சிறியவளான சுமித்ராவிடம் தமிழ்ச்செல்வன் சமாளிக்க முயலவில்லை. தன் மனதிலுள்ளதை ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி தெரியுது தமிழ் வாத்தியார்?"

"நான் மட்டும் பீல் பண்ணி என்ன செய்ய?" என்று லேசான குரலில் முணுமுணுத்தவன், "ஆமா, அதென்ன என்னை தமிழ் வாத்தியார், தமிழ் வாத்தியார்ங்குற.. எங்க அண்ணனைக் கணக்கு வாத்தியார்ங்குற என்ன விஷயம்?"

"அதுவா? பார்கவி உங்கள தமிழ் சார், தமிழ் சார்னு சொல்லவும், நீங்க தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரோன்னு முதல்ல நினைச்சிக்கிட்டேன்"

"எப்ப சொன்னாங்க பார்கவி?" ஆர்வமாகத் தமிழ்ச்செல்வன் கேட்கவும்,

"அய்யே! வழியுது.. தொடச்சுக்கோங்க.. ஒரு காலேஜ்ல தங்கி இருந்தோமே, அப்ப.. எவ்வளவு அழகான நாட்கள் அது.." என்று கண்ணை மூடி ரசித்துச் சொன்னாள் சுமித்ரா.

"குவாரண்டைன் சென்டர்ல இருந்தத அழகான நாட்கள்னு சொல்ற ஒரே ஆளு நீயாத் தான் இருக்கும்"

"பிலீவ் மீ தமிழ் வாத்தியார்! உங்களுக்கும் கூட அதுவே அழகான நாட்களாக அமைய வாய்ப்பு இருக்கு.. எப்படி நம்ம இங்கிலீஷு?" சட்டையைக் காலரைத் தூக்கி விடுவது போல பாவனை செய்தாள் சுமித்ரா.

"நீ இப்படி சிரிச்சுகிட்டே இருந்தா எல்லா நாளும் அழகான நாள்தான்.." பாசமாகத் தமிழ்ச்செல்வன் கூறவும்,

"எனக்குத் தங்கச்சி இல்லாத குறையை நீக்கிட்ட.. அதுதானே அடுத்த டயலாக்கா சொல்லப் போறீங்க தமிழ் வாத்தியார்?" என்றாள் சுமித்ரா.

"இப்படி ஓட்டைப் பானையில் நண்டு புகுந்த மாதிரி பேசுறியே? வாய் தான் வலிக்காதா?"

"என் வாயும் மூட மாட்டேங்குது.. வாய்க்கு ரா மெட்டீரியல் சப்ளை பண்ற மூளையும் ஆஃப் ஆக மாட்டேங்குது? நான் என்ன பண்றது" இல்லாத சோகத்தை வரவழைத்துக் கொண்டு சுமித்ரா பேசினாள்.

அப்போது பார்த்து ஏதோ வேலையாக அங்கே வந்த அஜய், "அண்ணே! இப்படிப் பேசுறவங்களத் தான் குழந்தை நட்சத்திரம்னு எங்க ஸ்கூல்ல சொல்லுவோம்" என்றான்.

"குழந்தை நட்சத்திரமா? அது என்னடா?"

"சின்னப்புள்ளையா இருக்கும்.. ஆனா வயசுக்கு மீறிப் பேசுமே.. அதுதான் குழந்தை நட்சத்திரம்!" என்றான் அஜய்.

"இது சின்ன புள்ளையா? நீ வேற ஏத்தி விடாதேடா!" சுமித்ராவைக் காட்டிக் கூறினான் தமிழ்ச்செல்வன்.

"சின்ன புள்ளன்னு நெனச்சிக்கிட்டு லூசுத்தனமா பேசுதுல்ல.. அப்பவும் அந்தப் பேரு சரியாத் தான் வரும்" என்று அஜய் கூற,

"டேய் தம்பி! நீ என் குரூப்னு நெனச்சேனே.. இப்ப வாத்தியார் பக்கம் போய்ட்டியேடா.. போய்ட்டியே.. நான் என் ஆளு கிட்டப் போறேன். அவரு தான் எனக்கு எப்பயும் சப்போர்ட் பண்ணுவாரு.. நாதா! நாதா!" என்று கூறிக்கொண்டே பின் பக்கமாக விஸ்வநாதனைத் தேடிக் கொண்டு போனாள் சுமித்ரா.

"இவ புருஷன்கிற மரியாதைக்கு நாதான்னு கூப்பிடுறாளா இல்ல, விஸ்வநாதனைப் பேர் சொல்லி கூப்பிடறாளா தெரியலையே…" என்று குழம்பி நின்றான் தமிழ்ச்செல்வன்.

பேச்சுவாக்கில் சுமித்ரா தன் மொபைலில் சார்ஜ் போட்டு சிறிது சார்ஜ் ஏறியவுடன் 'சங்கீத ஸ்வரங்கள்' பாடலை பார்கவிக்கும் அனுப்பி வைத்திருந்தாள்.


இங்கு பார்கவி மொபைலை கையில் வைத்துக்கொண்டே தமிழ்ச்செல்வனிடம் என்னவெல்லாம் பேசினோம் என்று யோசித்தவாறு விழித்துக் கொண்டிருக்க, அவளது தம்பி வந்து,

"அக்கா! யாரு கிட்ட பேசுற ரொம்ப நேரமா? உன் மொபைலைக் குடு…" என்றான். படபடவென அடிவயிற்றில் ஏதோ செய்தது பார்கவிக்கு. தவறு செய்தால் மாட்டிக் கொள்ளும் போது குழந்தைக்கு வரும் மனோபாவம் போல..

"சு.. சு.. சுமித்ரா கிட்ட பேசினேன்.. அவளுக்கு கல்யாணமாம், பிரச்சனை எல்லாம் சரியாயிருச்சு, வீட்டுல ஒத்துக்கிட்டாங்களாம்" விரிந்த சிரிப்புடன் கடகட கடவென ஏதோ சொன்னாள். அவளுக்கே அவள் பேசியது வித்தியாசமாக இருந்தது. நல்லவேளை தம்பி கவனிக்கவில்லை.

"உன் ஃபேஸ்புக் புரொபைல் பிக்சருக்கு எத்தனை லைக் வந்திருக்குன்னு பார்ப்போம்" என்றபடி அவளிடம் ஃபோனை வாங்கினான். செல்ஃபோன் திரையில் 'சங்கீத ஸ்வரங்கள்' ஓடிக்கொண்டிருந்தது.

"ஓ! பாட்டு கேட்டுட்டு இருந்தியா?" என்றபடி பேஸ்புக்கை திறந்தான். "அந்த செம்பருத்திப் பூவுக்காவது ஏழு லைக் வந்திருந்துச்சு‌. இந்த தாத்தாப் பூவுக்கு ஒரு லைக் கூட வரல. அதானே.. நீ யாருக்காவது பிரெண்ட் ரெக்வஸ்ட் குடுக்கணும், யாரு ரெக்வஸ்ட்டையாவது அக்சப்ட் பண்ணனும். குறைஞ்சபட்சம் இருக்கிற பத்து ஃப்ரெண்ட்ஸ்காவது அவங்க போஸ்டுக்கு லைக் போடணும். எங்க, நீ சுத்த வேஸ்ட். உனக்கு எதுக்குத் தான் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோ?" சலித்துக் கொண்டான் பார்கவியின் தம்பி.

"என்னடா? செம்பருத்திப் பூவுங்கிற.. தாத்தாப் பூவுங்கிற.. நான்தான் ஃபேஸ்புக்கை ஓபன் பண்ணி பல வருஷம் ஆச்சே.. நான் எங்க ப்ரொஃபைல் பிச்சர் வெச்சேன்? காட்டு.." என்றபடி தன் போனை எடுத்துப் பார்த்தாள்.

"அதான் சொல்றேனே.. ஐடி கம்பெனில வேலை பாக்கேன்னு வெளியே சொல்லாத.. கேவலம்! ஃபேஸ்புக்கை எட்டிக்கூட பாக்குறதில்லை.. நான் தான் நீ போன வாட்டி வரும் போது செம்பருத்திப் பூ வச்சேன். இந்த தடவை ரேணுகா அக்காவைப் பார்க்கப் போகும் போது எடுத்த ஒரு தாத்தாப் பூ ஃபோட்டோ வச்சிருக்கேன். எப்படி செம ல்ல என் ஃபோட்டோகிராபி" என்றான் தான் எடுத்த புகைப்படத்தை தானே ரசித்தபடி.

'அட இதப் பாத்துத் தான் தமிழ் செம்பருத்திப் பூ இருக்கான்னு கேட்டாரா? நம்மளப் பத்தி ஸ்பை பண்ணிருக்காரோ?' என்று கொஞ்சம் கோபம் வந்தது.

'அதை ஏன் ஸ்பை பண்றதா எடுத்துக்கணும்? ஆர்வத்துல பார்த்ததா வச்சுக்கலாமே?' என்று மனசாட்சி கேட்டது. 'ஏழு லைக்ல ஒண்ணாவது அவரோடதா இருந்தா ஆர்வம்னு ஒத்துக்கிறேன். இல்ல அவரோட லைக் இல்லேன்னா திருட்டுத்தனமா எட்டிப்பார்த்துட்டுப் போயிட்டார்னு நீ ஒத்துக்கணும். சரியா?' என்று மனசாட்சியிடம் டீலிங் பேசினாள் பார்கவி. துரதிஷ்டவசமாகத் தமிழ் லைக் போட்டிருக்கவில்லை.

"எத்தனை ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் அனாமத்தா கிடக்குது பாருக்கா.. ஒண்ணு ரெண்ட அக்செப்ட் பண்ணி விடு. என் புகைப்படத் திறமையும் உலகத்துக்குத் தெரியட்டும்" என்றான் தம்பி.

"டேய் அதுல பாதி நான் எடுத்த போட்டோ டா!"

"சோ வாட்? நான் எடுத்தா என்ன, நீ எடுத்தா என்ன. நான் பூவை எடுக்கிறேன்.. நீ பூச்சியை எடு. நல்ல ஃபிரண்டாப் பார்த்து அக்செப்ட் பண்ணி வை. ப்ரோஃபைலை வேணா லாக் பண்ணி வச்சுக்கலாம். அப்பதான் தொந்தரவு எதுவும் வராது. அதுக்குப் பயந்து தானே நீ ஃபேஸ்புக்குக்கு உள்ள போக மாட்டேன்கிற?" என்றபடி பார்கவியின் ப்ரொஃபைலை லாக் செய்து கொடுத்தான்.

சரி, சும்மா தானே இருக்கிறோம் என்று பேஸ்புக்கை நோண்டினாள் பார்கவி. எப்படி தமிழ்ச்செல்வனுக்கு பார்கவியின் பக்கம் பார்வைக்கு வந்ததோ அதேபோல் பார்கவிக்கும் தமிழ்ச்செல்வனின் பெயருடன் அவனது பக்கம் 'பீபிள் யூ மே நோ' பகுதியில் வந்தது. ப்ரொஃபைல் பிக்சராக 'டொனேட் ப்ளட் சேவ் லைவ்ஸ்' என்று ஒரு போஸ்டரை வைத்திருந்தான். உள்ளே அவனது நண்பர்களும் அதேபோலத்தான் ரத்த தானம் குறித்த செய்திகளைப் பகிர்ந்தும் அதுகுறித்த கமெண்ட்டுகளை பதிவு செய்தும் வந்திருந்தனர். ஒரு இடத்தில் நான்கைந்து பேர் இருக்கும் குரூப் ஃபோட்டோ இருந்தது. இதில் யார் தமிழ்ச்செல்வன்? அன்று இருட்டில் பார்த்தது.. கண்ணாடி போட்டிருந்தான்.. இந்த ஃபோட்டோவில் இரண்டு பேர் கண்ணாடி போட்டிருக்கிறார்கள். இவனா, அவனா? என்று ஆராய்ந்தால் பார்கவி.

'நீ மட்டும் ஸ்பை பண்ணலையா?' என்றது மனசாட்சி. 'ஸ்பை இல்ல.. ஆர்வம்!' என்று அதனிடம் பதில் கூறினாள் பார்கவி. 'அதான் உனக்கு ஏன் ஆர்வம்னு கேக்குறேன்?' என்று மனசாட்சி கேள்வி எழுப்பவும், 'போ மனசாட்சி! நீயும் சுவிட்ச் ஆஃப்.. அதோட என் மொபைலும் சுவிட்ச் ஆஃப்' என்றவாறு ஃபேஸ்புக்கையும் மூடி செல்லையும் அணைத்துப் போட்டாள்.

பேஸ்புக்கை மூடி வைக்கும் முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. சுமியிடமிருந்து தான்.

"காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை.." என்ற பாடலின் இணைப்பை அனுப்பியிருந்தாள்.

"ஐயோ நான்சென்ஸ் சுமித்ரா! இவள.." என்று பல்லைக் கடித்தவள், 'பேசாம விஸ்வநாதன்ட்ட சொல்லி இவளுக்கு ஒரு எஃப்.எம் சேனல்ல வேலை வாங்கித் தரணும், இல்ல தனி சேனலே திறக்கச் சொல்லலாம்.. தானே பேசி, தானே சிட்டுவேஷன் சாங் போட்டுட்டு உக்கா
ந்திருக்கும் லூசு..' என்று நினைத்தாள். கூடவே 'லூசு! லூசு!' என்று கூட இரண்டு முறை சேர்த்து சொல்லிக்கொண்டாள். யாரைச் சொன்னாள் என்பது தான் அவளுக்கே புரியவில்லை.



 
Top