கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 19

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 19


ஊரடங்கினை அரசு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நீட்டித்துக் கொண்டே போனது. வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர் நோக்கி வந்து விட்டனர். பல குடும்பங்களில் ஏற்பாடாகியிருந்த திருமண நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. சுமித்ராவுக்கும் விஸ்வநாதனுக்கும் எப்போது திருமணம் வைக்கலாம் என்று பேச்சு வரும்போது விஸ்வநாதனின் பெற்றோர்,

"தம்பி, ஏற்கனவே 27 வயசு ஆச்சு உனக்கு. ஒத்தப் படை வயசுல தான் கல்யாணம் வைக்கணும். 28 வந்துருச்சுன்னா அப்புறம் 29 ல தான் வைக்க முடியும். உன் ஜாதகப்படி 3 மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணா அமோகமாய் இருப்பியாம்" என்று கூறியிருந்தனர். லாக்டௌன் தளர்த்தப்படும் பட்சத்தில் அவர்கள் மகாதேவபுரத்திற்கு வந்து திருமணம் செய்து வைக்கத் தயாராக இருந்தனர்.

"எங்க ஊரு ரொம்பச் சின்னது. எந்த வசதியும் கிடையாது. நாங்க அங்கேயே வந்துர்றோம், நீங்க செஞ்ச உதவிகளோட இதையும் சேத்து செஞ்சுருங்க" என்றனர் தமிழ்ச்செல்வனிடம். விஸ்வநாதனுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை.. வருவதாக இருந்தால் அவர்கள் வீட்டில் நான்கு பேர் வருவார்கள். கூட தாய் மாமா ஒருவர் வேண்டுமானால் சேர்ந்து கொள்வார் என்றான் விஸ்வநாதன்.

தீவிரமான ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு நான்கு மாவட்டங்கள் அல்லது ஐந்து மாவட்டங்கள் என்று தமிழகம் முழுவதையும் மண்டலங்களாக பிரித்து ஒரு அறிவிப்பு செய்தார்கள். அந்த மண்டலங்களுக்குள் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளில் இரண்டு புறமிருந்தும் தலா ஐம்பது பேர் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வந்தது. ஏற்கனவே மகாதேவபுரத்தில் தடைப்பட்டிருந்த இரண்டு திருமணங்களை நடத்த நாள் குறிக்கப்பட்டிருந்தது.

"அண்ணே, மருதப்பன் தாத்தா வீட்ல ஒரு கல்யாணம், மேலத் தெருவுல ஒரு கல்யாணம் வருது.. சுமி அக்கா கல்யாணம் எப்ப வைப்போம்? எனக்கு ஸ்கூல் திறக்க முன்னாடி வைங்க. அப்பத்தான் நான் ஓடி ஆடி வேலை செய்ய முடியும்" என்று அஜய் ஆர்வம் பொங்கக் கூறினான்.

"ஸ்கூலா? ஸ்கூல்லாம் இந்த வருஷம் பூரா இருக்காது. இந்த வருஷமும் ஆல் பாஸ் தான்" என்று அன்புச்செல்வன் கூற,

"நான் நிறைய ஐடியா சேர்த்து வச்சுருக்கேன்.. உங்களுக்குப் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண அடுத்த வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் ஐடியாக்களை நான் வச்சிக்கிட்டே காத்துக்கிட்டு இருக்கனும். சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க" என்றான்.

"ஊர்ப் பெரியவங்கள்ட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு பண்ணுவோம்ப்பா" என்று கற்பகம் கூற, அவர்களே அழைத்து "வெளியூர்லருந்து வந்த பொண்ணு, பிள்ளையை எத்தனை நாள் இப்படித் தனித்தனியாக தங்க வைப்பீங்க? சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கலாம்" என்று அறிவுரை கூறினார்கள்.

அந்த ஊரில் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒரு ஏழைப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து ஊர் முழுவதும் சேர்ந்து சீர் செய்து திருமணம் முடித்து வைப்பார்கள். அதற்கு ஒரு அமைப்பே வைத்திருந்தார்கள்.

"இதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கணுமே? சொல்லுங்க பெரியம்மா சொல்லுங்க" என்று கற்பகத்தைக் கேட்டாள் சுமித்ரா.

"அதுவா ஒரு தடவை சுமார் 35,40 வருஷம் முன்னாடி, நான் சின்ன பிள்ளை அப்ப.. தொடர்ந்து நாலு வருஷம் ஊர்ல மழை இல்லாமப் போச்சு. சுத்தி உள்ள எல்லா ஊர்லயும் மழை பெய்யுது, எங்க ஊர்ல பெய்யல.. பயங்கரத் தண்ணிப் பஞ்சம். எந்தப் பயிர் வெச்சாலும் நோயும் பூச்சியும் அரிச்சு வம்பாப் போச்சு. அப்புறம் திடீர்னு ஒருநாள் ஊர் நாட்டாமை கனவுல ஒரு பொண்ணு வந்துச்சு"

"அடடா! வந்துருக்கனுமே.. அப்படித் தானே எல்லாக் கதைலயும் நடக்குது. இந்தக் கட்டத்துல ஒரு கனவு வந்துதானே ஆகணும்?" என்று சுமித்ரா கூற,

"குறுக்கப் பேசாமக் கேளு.. அந்தப் பொண்ணு யாருன்னா பல வருஷம் முன்னாடி வரதட்சணை கொடுமையால கிணத்துல விழுந்து செத்துப் போன ஒருத்தி. 'வெறுங்கையோட போற மருமகளுக்கு புகுந்த வீட்ல மரியாதை இருக்காது. அதனால கஷ்டப்படுற பொண்ணுக்கு சீர் செஞ்சு கல்யாணம் பண்ணிக் குடுங்க.. அவ சிரிப்புல பஞ்சம் தீர்ந்துடும்' அப்படின்னு சொல்லி இருக்கா கனவுல வந்த பொண்ணு. அப்படி ஒரு ஏழைப் பொண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்கப் போய் அந்த வருஷம் நல்ல செழிப்பு. பொண்ணுக்கு செலவழிச்சு கல்யாணம் செஞ்சு வச்சவங்க எல்லாருக்குமே நல்ல விளைச்சல். அதுலருந்து வருஷத்துக்கு ஒருக்க இந்த மாதிரி நல்ல காரியம் பண்ணனும்னு முடிவு பண்ணினாங்க. வரதட்சணை வேண்டாம்னும் பல பேரு சொல்ல ஆரம்பிச்சாங்க. மாப்பிள்ளை வீட்டில் இருந்தே சீர் செஞ்சு பொண்ணக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்ததும் நடந்தது"

"சூப்பர் சூப்பர்! அப்படியா நடக்குது இன்னும்? ஆர்வமாகக் கேட்டாள் சுமித்ரா. "சில வீடுகள்ல அப்படி நடக்குது. வசதியானவங்க அவங்க ஆசைக்குப் பொண்ணுக்கு சீர் செய்றாங்க. யாரும் கட்டாயப் படுத்துறதில்லை" என்றாள் கற்பகம்.

"அடடா! ரெண்டு மாசம் ஆகப்போகுது நான் இந்த ஊருக்கு வந்து. இந்தக் கதை தெரியாமப் போச்சே.." சுமித்ரா வருத்தப்பட,

"நீ எங்க தாயி மத்தவங்க பேசுறதக் கேக்குற? நாங்க தானே நீ பேசுறத ரெண்டு மாசமா கேட்டுக்கிட்டே இருக்கோம்" என்று கற்பகம் சந்தடி சாக்கில் கூறினார்.

"பெரீ, பெரீ! நீங்க கூட என்னைக் கலாய்க்கிறீங்களே?" என்று போலியாக அழுதாள் சுமித்ரா.

"உங்க ஊர்ப் பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது சரி தான், வெளியூர் பொண்ணுங்க, காதல் ஜோடிக்கு எல்லாம் உதவுறது எப்படி?"

"ஒருத்தன் பயங்கர கஷ்டத்துல ஒரு தடவை இருந்தான். குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்கிற முடிவுல இருந்திருக்கான். அப்போ எதேச்சையாக் காதலிச்சு ஓடி வந்த ரெண்டு பேரும் இவன் வீட்டைத் தட்டிருக்காங்க.. சரி நாம தான் சாகப் போகிறோமே, தங்க இடம் குடுக்கலாம்னு குடுத்திருக்கான். அவங்க வந்த நேரம் இவனுக்கு வரவேண்டிய பணம் திடீர்னு வந்து சேர்ந்தது. அவங்க வந்த யோகம் தான்னு யாரோ சொல்ல அதே மாதிரி யாரும் வந்துட்டா உதவ ஆரம்பிச்சிட்டாங்க"

"அப்படியே காதல்ல பிரச்சனைன்னா மகாதேவபுரம் போனா நல்ல உதவி பண்ணுவாங்கன்னு பேச்சு பரவிருக்கும்.. இங்கே காதல் ஜோடிகள் படையெடுத்து வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்படித் தானே? என்று சுமி கேட்க,

"ஆமா, எங்க ஊர் எளந்தாரிக பலரு வெளியூரு, வெளிநாடு போகவும் நாங்க இவங்களை ஏத்துக்கிட்டோம்.."

விரைவில் சுமித்ராவின் திருமணத்துக்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது. ஊர்மக்கள் ஆளுக்கு ஒரு செலவை எடுத்துச் செய்தார்கள். உணவு விஷயத்தை தமிழ்ச்செல்வன் குடும்பம் ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் பீரோ, ஒரு கட்டில், ஒருவர் பாத்திரங்கள் என்று ஆளுக்கொரு செலவைப் பிரித்துக்கொண்டு மனமுவந்து செய்தார்கள். விஸ்வநாதன் தன் சேமிப்பிலிருந்து தாலிச் சங்கிலியும் புடவையும் வாங்கினான். ஊர்மக்களுக்கு அவனையும் மிகவும் பிடித்துவிட்டது. யாருக்கு என்ன உதவி என்றாலும் ஓடி ஓடிச் செய்யும் ஒருவனாக இருந்தான். அவன் வழக்கமாக ஆன்லைனில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் வேலையையும் செய்து கொண்டிருந்ததால் இலவசமாகவே அந்த ஊர் சிறுவர்கள், இளைஞர்களுக்கு மாலை நேரங்களில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தான். சுமித்ராவுடன் நெருங்கிவிட்ட சாமுவேல் தாத்தா பத்து பட்டுப்புடவைகள் அடங்கிய ஒரு பெரிய பெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றார். "எதுக்குத் தாத்தா இவ்வளவு?" என்று சுமி சொல்லியும் கேட்காமல்,

"வச்சுக்கம்மா! என் பொண்ணு அமெரிக்கால இருக்கா. அவ யார் யாருக்கெல்லாமோ குடுக்கணும்னு சொல்லி ஆர்டர் பண்ணி வாங்கி வச்சது. நான் போயி அங்க ஆறு மாசம் இருந்துட்டு வரலாம்னு டிக்கெட் எல்லாம் போட்டிருந்தேன். இந்த லாக் டௌனால நானும் போக முடியாது, அவங்களும் வர முடியாது. நீயும் என் பேத்தி மாதிரிதானே வாங்கிக்கோ. அப்பதான் சந்தோஷப்படுவேன்" என்று கட்டாயப்படுத்தி கொடுத்துவிட்டுச் சென்றார்.

'இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்? என்னை இப்படிக் கடனாளியாகி விட்டார்களே' என்று நினைத்து நெகிழ்ந்து போனாள் சுமித்ரா. இரண்டு நாட்கள் அமைதியாகக் கூட இருந்தாள்.

"சுமி என்ன குடும்ப இஸ்திரி ஆகப் போறோமேன்னு வருத்தமா இருக்கா? நீ பேசாம இருந்தா நல்லாவே இல்ல. ஜாலியா இரு, உன் ஃபிரெண்ட்ஸ் யாரையாவதுகல்யாணத்துக்கு கூப்பிடப் போறியா? அவங்க கூட வேணா ஷாப்பிங் போயிட்டு வரியா?" என்றான் அன்புச்செல்வன்.

"ஏற்கனவே நீங்க எல்லாரும் எனக்காக நிறைய செஞ்சுட்டீங்க. ரேணுகாவும் பார்கவியும் தான் எனக்குப் பக்கத்துல இருக்கிற பிரெண்ட்ஸ். அவங்களும் அவங்க பங்குக்கு ஏதாவது கல்யாணத்துக்குன்னு செலவழிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அதான் யோசனையா இருக்கு. எல்லாருக்குமே வீட்ல நெருக்கடி நிலைமை தானே?" என்று பெரிய மனுஷியாகப் பேசினாள் சுமித்ரா.

"அவங்க கல்யாணத்தப்ப நீ ஓடியாடி வேலை செஞ்சா சரியாப் போச்சு. அப்ப நீங்களும் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவீங்க. வெயிட்டா கிஃப்ட் வாங்கிக் குடுததுக்கலாம். இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க? நண்பர்கள் எல்லாம் எதுக்கு இருக்காங்க?" என்றான் அன்புச்செல்வன்.

"அதானே! சூப்பர் ஐடியா கணக்கு வாத்தியார்! அப்புறம் நீங்க யாரையும் சைட் அடிக்கிறீங்களா? சொல்லுங்க, உங்க காதலுக்குத் தூது போறேன். கணக்கு வாத்தியாருக்கே கணக்கு பண்ண ஹெல்ப் பண்றதுன்னா சும்மாவா?" என்றாள்.

"அங்க இங்க சுத்தி என்கிட்ட வந்துட்டியா? முதல்ல உன் ஃபிரண்டுகளுக்கு ஃபோன் பண்ற வழியப் பாரு" என்றபடியே அவன் நகர ஆரம்பிக்க,

"வாத்தியார், சொல்லுங்க வாத்தியார், ப்ளீஸ் வாத்தியார்! உங்களுக்கும் ஒரு காதல் கதை இருக்கா?"

"வேலையைப் பாரு.. வேண்டாத விசயத்துல தலையிடாதன்னு சொல்றேன்ல?" என்று கோபத்துடன் எழுந்து சென்றான் அன்புச்செல்வன்.

"அவனை நோண்டாதே.. இங்கே வா, உன் ஃபிரண்டுக்கு முதலில் கால் பண்ணி கல்யாணத்துக்கு வரச் சொல்லு" என்று தமிழ்ச்செல்வன் அழைக்க,

"எந்த பிரெண்டு? கரெக்டாச் சொல்லுங்க" தன் கவனத்தை அண்ணனை விட்டுவிட்டுத் தம்பி பக்கமாக திருப்பினாள் சுமித்திரா.

"போதுமே! உனக்கு யாரையாவது கலாய்க்கிறதுன்னா அல்வா சாப்பிடற மாதிரியாச்சே.. இங்கே வா" என்று அவளை ஓரமாக அழைத்துச் சென்றவன், "எங்க அண்ணனுக்கு எங்க மாமா பொண்ணு மேல ஒரு சின்ன லவ்வு" என்றான்.

"லவ்வுல என்ன சின்ன லவ்வு, பெரிய லவ்வு? லவ்வு லவ்வு தானே?"

"சின்ன வயசு லவ்வுன்னு வச்சுக்கோ.. என் அப்பா இறந்து போய், அண்ணனுக்கும் கால் அடிபடவும் மாமா வீட்ல கொஞ்சம் யோசிக்கிறாங்க. இல்லேன்னா இந்நேரம் அவங்க கல்யாணம் முடிஞ்சுருக்கும்"

"ஓ! அதான் அன்புச்செல்வன் அம்போ செல்வனா இருக்காரா.. சரி பண்ணிருவோம். சரி இப்போ உங்க ஆளுக்கு அடிச்சுக் கூப்பிடுவோம். அதானே உங்களுக்கு முதல்ல வேணும்?"

தமிழ்ச்செல்வன் பார்கவி, ரேணுகாவுக்கு ஃபோனில் தகவல் சொல்ல, விஸ்வநாதன் நேரிலேயே சென்று இருவர் குடும்பத்துக்கும் அழைப்பு விடுத்து வந்தான். இதனிடையே ரேணுகாவின் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருக்க, சுமித்ராவின் திருமணத்தன்று தான் ரேணுகாவுக்கு நிச்சயதார்த்தம் என்று முடிவாகி இருந்தது. "ரேணு! நமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை பாரேன்.. ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல நல்லது நடக்கப் போகுது. கல்யாணம் முடிஞ்சு நான் உன்னைப் பாக்க வருவேன். சரியா? அதே மாதிரி நீயும் உன் வீட்டுக்காரரோட வந்து எனக்குப் பத்திரிக்கை வைக்க வரணும்" என்று அவளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டாள் சுமி. பார்கவிக்குத் தான் குழப்பம். ரேணுகா வீட்டுக்குச் செல்வதா, சுமித்ராவின் திருமணத்துக்கு செல்வதா என்று.

"அவளுக்கு நிச்சயதார்த்தம் தானே, எனக்குக் கல்யாணம்ல? கல்யாணம் பெருசா நிச்சயம் பெருசா? என்றாள் சுமித்ரா.

"அவ எல்.கே.ஜி.யில் இருந்து என் ஃபிரெண்டுடி.." என்று பார்கவி சொல்ல,

"அப்ப பழைய ஃபிரண்டு தான் முக்கியம் புது ஃபிரண்டு முக்கியம் இல்லையா?" ஓவென்று அழுவது போல் நடித்தாள் சுமித்ரா. கடைசியாகக் காலையில் பார்கவி சுமித்ராவின் திருமணத்துக்கு வந்து விட்டு, திருமணம் முடிந்தவுடன் ரேணுகா வீட்டிற்குச் செல்வது என்று முடிவாகியது.

ரேணுகா, "ஏ பாவம்டி சுமித்ரா! அவளுக்குத் தெரிஞ்சவங்க அவளோட ஆளுன்னு யாருமே கல்யாணத்துல இல்லேன்னா தனியா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவா. நீ அங்க போயிட்டு இங்க வாடி" என்றிருந்தாள் பெருந்தன்மையாக.

'அவளா? அவளா ஃபீல் பண்ணப் போறா? பாவம் ரேணு நீ! பச்சப் புள்ளயா இருக்க. அங்க ஊரையே தன் கைக்குள்ள போட்டுருக்கா. விஸ்வநாதன் தான் தனிமையா ஃபீல் பண்ணனும்' என்று நினைத்தபடி அந்தத் திட்டத்துக்கு உடன்பட்டாள் பார்கவி.

என்ன முடிவாகியது என்று அறிந்துகொள்ள தமிழ்ச்செல்வன் சுமித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டு சுற்ற, "போங்க தமிழ் வாத்தியார்! போய் வேலையைப் பாருங்க. கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு" என்று அவனை விரட்டி விட்டவள்,

"அவள் வருவாளா.. அவள் வருவாளா? உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா..?" என்று பாடிக்கொண்டே போனாள். தமிழ்ச்செல்வனும் ரகசியமாகச் சிரித்துக் கொண்டான்.

தாம்பூலப் பை எத்தனை பேருக்கு, சாப்பாடு எத்தனை பேருக்கு என்று கணக்கெடுக்க விருந்தினர் பட்டியலை விஸ்வநாதனும் அன்புச்செல்வனும் தயாரித்து ஒரு தாளில் எழுதி வைத்திருந்தனர். ரகசியமாக அதை எடுத்துப் பார்த்தான் தமிழ்ச்செல்வன், பார்கவி பெயர் இருக்கிறதா என்று. பார்கவி பெயர் இருக்கவும் சந்தோஷத்தில், "இந்தத் தடவையாவது அவ முகத்தை காட்டு முருகா! மூஞ்சி தெரியாமலேயே எத்தனை நாள் தான் நானும் '90ஸ் சினிமா மாதிரி கனவுக் கோட்டை வளர்க்கிறது" என்று வேண்டிக்கொண்டான்.


திருமண நாளும் வந்தது. தமிழ்ச்செல்வனின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறையாத அளவில் பார்கவியும் ஒருவித எதிர்பார்ப்பா, ஆவலா என்னவென்று தெரியாத அளவில் தன் தந்தையுடன் வந்து இறங்கினாள். தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு முன்னால் தான் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கி சடங்குகள் நடந்து கொண்டிருக்க, கடை திறக்க நேரம் ஆகிவிட்டது என்று கூறி பார்கவியின் அப்பா அவளை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார்.

"நீங்க போங்கப்பா.. நான் இங்கே இருந்தபடியே ரேணுகா வீட்டுக்குப் போயிடுவேன். அப்புறம் சாயங்காலமா தம்பி வண்டிய எடுத்துட்டு அங்க வரேன்னு சொல்லி இருக்கான்" என்று அப்பாவை அனுப்பி வைத்தாள் பார்கவி.

காலையிலிருந்து வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் அப்போதுதான் உள்ளே சமையலைக் கவனிக்கச் சென்றிருந்தான். அதற்குள் பார்கவியின் அப்பா கிளம்பிவிட பார்கவி மட்டும் முன்வரிசையில் அமர்ந்திருந்தாள். மொத்தம் 100 விருந்தினர்கள் தான் என்பதால் நாற்காலிகளைத் தள்ளித் தள்ளிப் போட்டிருந்தார்கள். அஜய் புகைப்படக்காரரான தன் நண்பன் ஒருவனைக் கூட்டிக்கொண்டு வந்து புதிய வகை புகைப்படக் கருவிகளை நிறுவி யூடியூப் ஸ்ட்ரீமிங்கிற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

வந்தவர்கள் மாஸ்க் அணிந்துதான் வரவேண்டும், சேர்களை கலக்கமாகத் தான் போட வேண்டும் என்பதை தமிழ்ச்செல்வன் உறுதியாகக் கூறியிருந்தான். முதலில் வந்த விருந்தினர்களை ஆங்காங்கே நிறுத்திப் புகைப்படம் எடுக்கத் துவங்கும் போது ஒவ்வொருவரை 'மாஸ்க்கைக் கழட்டுங்க, மாஸ்க்கை கழட்டுங்க' என்றே கூறி புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்க வைத்தான் அஜய்.

"யாரும் மாஸ்க்கைக் கழட்டக்கூடாது, பாதுகாப்புதான் முக்கியம். எல்லாரும் நமக்குத் தெரிஞ்சவங்க தானேடா? அவங்க முகம் மாஸ்க் போட்டாத் நமக்கு அடையாளம் தெரியுமா? இல்லல்ல?" என்று அதட்டினான் தமிழ்ச்செல்வன்.

"அண்ணே! பொண்ணு மாப்பிள்ளையாவது மாஸ்க் இல்லாம இருக்கலாமா? இல்ல, அவங்களும் போட்டு தான் இருக்கணுமா?" என்று அஜய் கேட்க,

"பரவால்ல! அவங்க போட வேண்டாம். ஆனா போட்டோ செஷன் முடிஞ்ச உடனே அவங்க போட்டுக்கணும். எல்லார் கையிலயும் சானிடைசர் போட்டுத்தான் ஸ்டேஜ்ல ஏத்தணும். யாரும் பொண்ணு மாப்பிள்ளைக்குக் கை குடுக்கக் கூடாது. வணக்கம் தான் வைக்கணும்" என்று பல விதிகளை வகுத்திருந்தான்.

"இதுக்கு யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம்னே சொல்லிருக்கலாம்" என்று அஜய் முணுமுணுத்திருந்தான்.

தமிழ்ச்செல்வனுக்கு சமையல்கட்டில் எதிர்பார்த்ததைவிட கூடக் கொஞ்ச நேரம் ஆகி விட, சரியாகத் தாலிகட்டும் நேரம் தான் வந்து சேர்ந்தான். விருந்தினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் இருந்த வாசல் வழியே நுழைந்தவன் கண்கள் தானாகப் பார்கவியைத் தேடின. மஞ்சள் நிற டிசைனர் சுடிதாரில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பது தான் பார்கவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். தனக்கேற்ற உயரம்தான். தமிழ்நாட்டு மாநிறம், குண்டும் இல்லாத ஒல்லியும் இல்லாத உடல்வாகு என்று பின்புறமிருந்து அவளை அளவிட்டுக் கொண்டே, திரும்புவாளா திரும்புவாளா என்று பார்த்தான்.

"முன்னாடி வாடா தமிழ்!" என்று கற்பகம் கூப்பிட, அனிச்சையாகப் பார்கவியும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'ஒஹோ! இதனால தான் எனக்கு அவ முகம் ஞாபகம் இல்லையா?' இவ்வளவு நாள் குழப்பிக் கொண்டிருந்தது சட்டென்று பிடிப்பட்டது தமிழ்ச்செல்வனுக்கு. முதலில் சந்தித்த அன்றும் கூட அவள் இதேபோல மாஸ்க் அணிந்திருந்தாள்! அதனால் தான் முகம்
நினைவில்லை. இரண்டு ஜோடிக் கண்களும் ஒரு நொடி சந்தித்து மீள, ஒரு புன்னகையுடன் மேடையை நெருங்கினான் தமிழ்ச்செல்வன்.



 
Top