கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 22

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 22

இவ்வளவு நாள் இருந்த பதட்டம், நெஞ்சில் ஏதோ பாரம் போன்ற உணர்வு எல்லாமே விலகியது போல் இருந்தது தமிழ்ச்செல்வனுக்கு. வாயால் மட்டும் தான் பார்கவி சொல்லவில்லை. மற்றபடி அவள் மனதில் தனக்கு இடம் இருக்கிறது, தனக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்று நூற்றுக்கு இருநூறு சதம் நம்பத் தொடங்கி விட்டான். ஏனோ இந்த முறை சுமித்ரா ஒன்றும் கேட்கவில்லை. விஸ்வநாதன் தான் கேட்டான், "என்ன பாஸ்! விசிலும் பாட்டும் தூள் பறக்குது. ஏதும் விசேஷமா?" என்று.

அவனுக்கு எவ்வளவு தூரம் விஷயம் தெரியும் என்று தெரியவில்லை. சுமி உளராமலா இருந்திருப்பாள்? "உங்களுக்குத் தான் கல்யாணம் ஆயிருக்கு. எதுவும் விசேஷமான்னு நான் தான் உங்களைக் கேக்கணும். அதுவும் ரெண்டு மூணு மாசத்துக்கு அப்புறம் கேட்டாத் தான் நல்லா இருக்கும்" என்றான் தமிழ்ச்செல்வன்.

"புரியாத மாதிரி நடிக்காதீங்க பாஸ்! அண்ணனுக்குப் பொண்ணு பாத்துடலாமா?" என்றான் விஸ்வநாதன்.

'இவன் என்னடா திடீர்னு அண்ணன் கல்யாணத்தைப் பத்திப் பேசுறான்' என்று நினைத்தவன், "ஓஹோ டைரக்டா கேளுங்களேன் விஸ்வா.." என்றவன் "ரூட் கிளியர் பண்ணி விட ஹெல்ப் பண்ணவான்னு கேட்டீங்கன்னா இன்னும் சந்தோஷமா இருக்கும்" என்று சேர்த்து சொன்னான்.

"நான் கேட்காமலே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே.. அன்பு அண்ணனுக்கு மாமா பொண்ணு மேல கிரஷ்னு சொன்னீங்களாம். சுமி சொன்னா.. உங்க மாமாகிட்ட சமயம் பார்த்து பேசிரலாமே?" என்று விஸ்வா கூற,

"அன்னைக்குக் கூட உங்க கல்யாணத்துக்கு மாமாவும் வந்திருந்தாரே.. அம்மா கிட்ட வந்து நல்லபடியா பேசிட்டுத் தான் போனார். அண்ணன் கிட்ட கூட கால் எப்படி இருக்கு, நடக்க முடியுதா, வழக்கமான வேலையெல்லாம் ஆரம்பிச்சாச்சான்னு கேட்டாராம்" என்று பதில் கூறினான் தமிழ்ச்செல்வன்.

"அப்ப ஓகே ஆயிடும்னு சொல்லுங்க.."

"அப்படித்தான் நினைக்கிறேன்.."

"அப்படியே உங்க விஷயத்தையும் ப்ரோசீட் பண்ணுங்க தமிழ்"

"பார்க்கலாம். ரொம்ப ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல தான் விஷயம் இருக்கு. நாங்களே இன்னும் நேரடியா பேசிக்கல. எனக்கு மறுபடியும் கோவை போக வேண்டிய வேலை இருக்கு. பிரியங்கானு ஒரு பாப்பா சொல்வேன்ல, அவளுக்கு போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்னு (bone marrow transplant) ஒரு ஸர்ஜரி.. எலும்பு மஜ்ஜையை தானமாக வாங்கிப் பொருத்துறது. ரிசல்ட்ஸ் நல்லாருக்கும், வியாதி குணமாகிடும்னு சொல்றாங்க.. கிடைக்காத பிளட் குரூப்ங்கிறதால டோனர் லிஸ்டே கம்மி. ப்ளட் குடுக்கத் தயாரா இருக்கிறவங்க கூட எலும்பு மஜ்ஜை தானம் பண்ண யோசிப்பாங்க. ஒரு பத்து பேருக்காவது டெஸ்ட் பண்ணினால் தான் ஒருத்தர், இல்ல ரெண்டு பேர் டிஷ்யூவாவது பொருந்தும். நானும் 'ஒன் ஆஃப் த பிராஸ்பெக்டிவ் டோனர்ஸ்'. அதனால டெஸ்டுக்குப் போகணும். மத்த ஃபிரண்ட்ஸையும் மொபிலைஸ் பண்ணனும். பணம் கூட டொனேஷன் மூலமாத்தான் ரைஸ் பண்ணப் போறோம்"

"செய்ங்க செய்ங்க! எல்லாம் நல்லபடியாவே முடியும். சைட் பை சைட் உங்க லைஃபைம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிடுங்க" என்றான் விஸ்வநாதன்.

"நினைச்சா மலைப்பா இருக்கு" என்று ஒரு பெருமூச்சுடன் தமிழ்ச்செல்வன் சொல்ல,

"உங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்? நீங்க ஸ்டார்ட் மட்டும் பண்ணுங்க.. அப்புறம் பாருங்க" என்றான் விஸ்வநாதன்.

"அது எப்படி பாஸ் அது! நீங்க எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் ஒரு மாதிரி இருக்கீங்க, புலம்பித் தள்றீங்க.. அடுத்து குடுக்குறீங்க பாருங்க அட்வைஸ்.. நல்லா வருவீங்க பாஸ்" என்றான்.

"அது என்னமோ பிரச்சனைகள் தீர்ந்தாலே ஒரு கான்ஃபிடன்ஸ் வருது பாஸ்! நீங்க சொன்ன மாதிரி கூட இருக்கலாம், கல்யாணம் ஆனா ஒரு மெச்சூர்டான ஃபீலிங்.. மத்தவங்களையும் சம்சார சாகரத்துல தள்ளலாம்னு தோணுது"

அஷோக்கும் சுமித்ரா விஸ்வநாதன் திருமணம் நடந்த அன்றைய தினமே அழைத்திருந்தான்.

"டேய் ஆச்சா?"

"கல்யாணம் நல்லபடியா ஆச்சுடா!" என்றான் தமிழ்.

"உன் மேட்டரைக் கேட்டேன்.." பல்லை கடித்தபடி அஷோக் கேட்க,

"கிட்டத்தட்ட ஓகே தான்! ஆனா டைரக்டா ஒன்னும் பேசிக்கல.." என்றான் தமிழ்ச்செல்வன், வாயில் எதையோ போட்டு மென்றபடி.

"டேய் டேய்! நேத்து என்ன மாதிரி புலம்பின? ஐடியா குடுக்கச் சொல்லி.. இப்ப கடலை சாப்பிட்டுக்கிட்டு இருக்க?"

"சொல்ல ட்ரை பண்ணேன்டா.. அவ கொஞ்சம் எமோஷனலா இருந்தா. அதான் விட்டுட்டேன்" இன்னுமே அவன் வாயிலிருந்து கடலை மெல்லும் ஓசை கேட்டுக் கொண்டுதான் இருந்தது. "ஆனா அவளுக்கு ஓகேன்னு தான் தோணுது"

"போடா போடா! வாயில நல்லா வருது.. ஏண்டா இப்படி இழுத்துக்கிட்டே போற? உனக்கு லவ்வு ஓகே ஆகுறதுக்குள்ள எனக்கு டென்ஷன் எகிறுது" என்று கோபத்துடன் கூறினான் அஷோக்.

"ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்கா போறேண்டா.."

"பாத்துடா.. ஃபவுண்டேஷனோட நின்னுடப் போகுது.." என்று பயம் காட்டியிருந்தான் அஷோக்.

அன்று பேசிவிட்டுப் போன மனநிலையில் பார்கவி கோபப்பட வாய்ப்பில்லை.. அதனால் ஒரு குறுந்தகவல் அனுப்பலாம் என்று நினைத்து, "ப்ளானிங் டு கோ டு கோவை" என்று செய்தி அனுப்பினான். பார்கவி பார்த்துவிட்டாளா என்றும் அடிக்கடி அலைபேசியை சோதித்துக் கொண்டிருந்தான்.

அவள் பார்த்ததற்கான அறிகுறி வந்தவுடனேயே, "எப்போ? என்ன வேலை? எத்தனை நாள்?" என்று உடனடியாக மூன்று கேள்விகளைத் தாங்கி மெசேஜ் வந்தது.

"மே பி நெக்ஸ்ட் வீக்" என்று இவன் ஒரு பதில் மட்டும் அனுப்ப, வெகுநேரமாக டைப்பிங் என்றே வந்தது.

'இவ்வளவு நேரம் என்ன டைப் பண்றா' என்று நினைத்தவன் பொறுமை காக்க முடியாமல், "?" என்று மட்டும் அனுப்பி வைத்தான்.

"எப்போ ரிட்டர்ன்?" என்று கேட்டாள் பார்கவி.

'சரி! ரைட்டு! ஆளு நம்மளத் தேடுது போல' என்று முடிவு செய்தவன்,

"பேசலாமா?" என்று கேட்டான். வெகு நேரத்துக்குப் பின்,

"எஸ்" என்றது மறுமுனை.

"இப்ப?" என்று தமிழ்ச்செல்வன் கேட்க,

"எஸ்" என்றாள் தாமதிக்காமல்.

உடனேயே அழைத்தவன், "ஹாய்!" என்க, "எப்படி இருக்கீங்க?" என்றாள் உடனடியாக.

"ஃபைன்" என்று தமிழ்ச்செல்வன் கூற,

"என்ன திடீர்னு கோவை ப்ளான்?" என்றாள்.. கொரோனா சமயத்தில் ஏன் டா அலையுற? என்பது போல் இருந்தது அவள் குரல். 'அதுக்குள்ள அம்மணி மிரட்ட ஆரம்பிச்சாச்சு' என்று நினைத்தவன்,

"சும்மாதான். செக்கப்" என்றான்.

"யாருக்கு?" என்று அவள் பதட்டமாகக் கேட்கவும், "ஹே கூல் கூல்! எனக்குத்தான்" என்றவன் "ஹெல்த் இஷ்யூ ஒன்னும் இல்ல.. அன்னைக்கு ப்ளட் குடுக்கப் போனேனே.. ப்ரியங்கா.." என்று ஆரம்பித்து, அவளுக்குரிய உடல் பிரச்சனை, திட்டமிட்டிருக்கும் அறுவை சிகிச்சை எல்லாக் கதைகளையும் சொன்னான். நடுவே அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும், "ஹலோ! என்ன கவனிக்கிறியா?" என்றான்.

"கேட்டுட்டுத் தான் இருக்கேன். போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் பத்தி நெட்ல சர்ச் பண்ணிப் பாக்குறேன்.. லேப்டாப் முன்னால இருக்கு" என்றாள்.

"அவ்வளவு அறிவியல் ஆர்வமா?"

"அறிவியல் ஆர்வம் எல்லாம் இல்ல.. சும்மாப் பாத்தேன்"

"சும்மான்னா?"

"இல்ல.. அது பத்தி எதுவும் தெரியாதுல்ல.. அதான்"

"தெரியாத விஷயம் எது கேள்விப் பட்டாலும் பாத்திருவியா?" அவன் விடாமல் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்க,

"ஹலோ, தெரிஞ்சவங்களுக்கு சர்ஜரின்னா ஸர்ச் பண்ணிப் பாக்க மாட்டாங்களா?" என்றாள் கடுப்பாகிப் போய்.

"யாரு உனக்குத் தெரிஞ்சவங்க? ப்ரியங்காவா?"

'முட்டாள்! தெரிஞ்சுகிட்டே கேக்குது பாரு..' என்று நினைத்தவள், "ஆமா, என்ன திடீர்னு நீ, வா, போ, உனக்கு எனக்குன்னு சொல்றீங்க?" என்றாள்.

"திடீர்னு எல்லாம் இல்ல.. அன்னைக்கே சொன்னேனே"

"என்னைக்கு?"

"அன்னைக்குத் தான்.." அன்ன்ன்னைக்கு என்பதில் அழுத்தம் கொடுத்தான்.

பார்கவி கண்களை மூடிக்கொண்டு, 'ஐயோ' என்று மனதினுள் கூறியவள், "அன்னைக்கு எல்லாம் அப்படி ஒன்னும் சொல்லல.." என்றாள். குரல் உள்ளேயே போயிருந்தது.

"சொன்னேனே.."

"நான் கவனிக்கலப்பா" என்றாள் பார்கவி.

"மேடம் அன்னிக்கு நான் பேசுனதெல்லாம் கவனிக்கிற மூடுல இல்லை" அன்றைய தினத்திற்கே மறுபடியும் அவள் கவனத்தைக் கொண்டு சென்றான்.

பார்கவிக்கும் புரியாமலில்லை. "அன்னைக்கு வேலை விஷயமா பேசிட்டு இருந்தேன்ல? அந்த கவனத்துல இருந்திருப்பேன்" என்றாள்.

"வேலை விஷயமா மெயில் பாத்தியா.. எதுவும் அப்ளை பண்ணினியா?" என்று கேட்டான் கரிசனத்துடன்.

"மெயில் தானே? பாத்தேன், பாத்தேன்.. நல்லாப் பாத்தேன்.." நடுவில் வந்து சேர்ந்திருந்த வெட்கம் குரலிலிருந்து கழன்று கொண்டு குறும்பு எட்டிப்பார்த்தது.

புரியாத தமிழ்ச்செல்வன், "அப்ப அதைப் பத்தி எதுவுமே சொல்லல? ரெஸ்யூம் அப்டேட் பண்ணி அனுப்பு. சரியா?.. வேற எதுவும் ஹெல்ப் தேவையா?"

"உங்க கம்பெனிக்கு அப்ளிகேஷன் அனுப்பியாச்சு. 'வில் செக் யூர் அப்ளிகேஷன் அண்ட் கெட் பேக் ஷார்ட்லி'னு ரிப்ளை பண்ணி இருக்காங்க" என்றாள்.

"சரி, நான் ஒரு தடவை ரிமைன்ட் பண்றேன்.. இன்னும் ரெண்டு கம்பெனி டீடைல் இருக்குல்ல.. அதுவும் அப்ளை பண்ணு.. அப்புறம்... நீ, வா, போன்னு நான் கூப்பிடுறதுல ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லையே?" என்று கேட்டான் தமிழ்ச்செல்வன்.

"அதான் கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்களே, பிறகு என்ன?" என்றாள் விட்டேத்தியாக.

"அப்புறம்?" என்று தமிழ்செல்வன் இழுக்க,

"அப்புறம் ஒன்னும் இல்ல.. வச்சுடவா.. பாப்போம்.." என்றாள். அதற்குள்ளாக வைப்பதா என்று ஏக்கமாக இருந்தது தமிழ்ச்செல்வனுக்கு. 'நேர்ல பேச முடியாததை ஃபோன்ல சொல்லிடவா?' என்ற யோசனையும் கூடவே வந்தது.

"வச்சுடவான்னு கேட்டேன்.." என்றாள் பார்கவி.

"பாக்கலாமா?"

"ம்…?"

*ஒருதடவை நேர்ல பாக்கலாமா?" என்றான் மீண்டும்.

"ஏன்?"

"ஏன்னு தெரியாதா?"

"தெரியாது" என்றாள் பார்கவி.

"நிஜமாத் தெரியாதா? பொய் தானே?" என்று இவன் கேட்க,

"சொல்றதை நம்ப மாட்டேங்கறீங்க.. அப்புறம் திருப்பி திருப்பிக் கேக்குறீங்க.. என்ன விஷயம்னு சொன்னா தான் நானும் பதில் சொல்வேன்.. இப்ப வைக்கிறேன். பை!" என்ற பார்கவி நிர்தாட்சண்யமாக லைனைக் கட் செய்தாள்.

'அடிப்பாவி! மூஞ்சில அடிச்ச மாதிரி வச்சிட்டியே.. கொஞ்சமாச்சும் நம்ம ஆளு வருத்தப்படுவானேன்னு யோசிச்சியா' என்று மனதுக்குள் புலம்பத்தான் முடிந்தது தமிழ்ச்செல்வனுக்கு.

அன்று அவன் வீட்டிலும் சூழல் கலகலப்பாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக நல்ல மழை பெய்திருந்தது. சுற்றுப்புறங்களில் கொரோனா நோயின் தீவிரமும் முந்தைய மாதத்தில் உச்சத்தைத் தொட்டு இப்போது குறைய ஆரம்பித்திருந்தது. சுமித்ராவும் விஸ்வநாதனும் தனியே வீடு பார்த்துத் தங்கியிருந்தனர். அங்கு சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் இருந்தாலும் சாப்பாடு, வேலை எல்லாம் தமிழ்ச்செல்வன் வீட்டில்தான்.

அவ்வப்போது, "பெரியம்மா! புதுப் பொண்ணு வந்திருக்கேன்.. விருந்து போடுங்க" என்றோ "கணக்கு வாத்தியார், கணக்கு வாத்தியார் ஐஸ்கிரீம் வாங்கித் தாங்க" என்றோ ஒரு பார்ட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறாள். அன்றைய தினம் மாலையில் மழை காரணமாக்க கரண்ட் போய் விட பஜ்ஜி போட்டு சாப்பிட்டுவிட்டு காபி குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். "சீட்டு விளையாடுவோமா?" என்றான் அன்புச்செல்வன்.

சோகமாக இத்தனை நாள் இருந்த அண்ணன் அவனாகவே இப்படிக் கேட்கிறானே, நல்ல விஷயம்தான் என்று நினைத்து அவசரமாக சீட்டுக் கட்டுகளைத் தேடி எடுத்து அமர்ந்தான் தமிழ். அப்பா உயிருடன் இருந்த போது, வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் குடும்பமாக அமர்ந்து சீட்டு விளையாடுவது அனைவர் நெஞ்சிலும் வந்துபோனது. இவர்களது மாமா குலதெய்வம் கோவிலுக்குப் போய்விட்டு, பெண்ணின் ஜாதகத்தை எடுக்கப்போவதாக அம்மாவிடம் சொல்லி இருந்தாராம். அதனால் அன்புச்செல்வனுக்கு மனதில் ஒரு நம்பிக்கை. அதுவே கொண்டாட்டமாகவும் ஆகியிருந்தது. அன்றைய சீட்டு விளையாட்டிலும் அவனுக்குத் தொடர்ந்து வெற்றி கிடைக்கவே கலகலப்பாக இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தரையில் கால் மடக்கி அமர்ந்திருந்தான் அன்புச்செல்வன். சுமித்ராவுக்கு அவ்வளவாக ரம்மி விளையாடத் தெரியாது போனாலும் ரொம்பத் தெரிந்தது போல் அலட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இரண்டு மூன்று முறை தொடர்ச்சியாக அவள் தோற்றுப்போகவும், "போங்க! சீட்டிங்.. அன்பு அண்ணனே ஜெயிக்கிறாங்க" என்றபடி விளையாட்டைப் பாதியில் விட்டுவிட்டு எழுந்தாள்.

"நான் என்னம்மா செய்ய? ஆட்டக்காரனுக்கு அண்ணாச்சி, அண்ணாச்சின்னு சீட்டு வரும்.. உக்காரும்மா" என்றான் அன்புச்செல்வன்.

"அப்படின்னா..?" என்று சுமி புரியாமல் கேட்க,
"திறமையா, தைரியமா விளையாடுறவனுக்கு கும்பிடு போட்டுக்கிட்டு சீட்டு வரும். தெரியுமா? கவனமா விளையாடு. போகப்போகப் பிடிச்சுக்கலாம்" என்று விளக்கம் அளித்தான்.

"ஓஹோ!" என்றாள் சுமித்ரா.

"ஃபார்ச்சூன் ஃபேவர்ஸ் த ப்ரேவ்னு ஒரு பழமொழி சொல்லிருக்கேன்ல சுமி.. அதுதான்" என்றான் விஸ்வநாதன்.

'எனக்கும் யோகம் வராதா? நான் தைரியமாகக் களத்தில் இறங்கத் தயார். எனக்கும் வாழ்க்கை ஆட்டத்தில் சீட்டுகள் வாய்ப்பாக விழுந்தால் ஜாலியாக இருக்குமே..' என்று நினைத்தான் தமிழ்.

உலகு கொரோனா பயத்தில் மூழ்கியிருந்தாலும் பருவநிலைகள் அதுபாட்டுக்கு மாறிக்கொண்டே இருந்தன. எதிர்பாராதவிதமாக வழக்கத்தை விட இந்த வருடம் நல்ல மழை. தொடர்ந்து இரண்டு நாட்களும் மழை பெய்து கொண்டே இருக்கவும் அருகில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் நிரம்பின. பள்ளிகள் திறக்காத சூழல், அத்துடன் கொரோனாவின் தாக்கம் குறைந்ததாலோ என்னவோ, நிறைய பேர் ஆறு குளங்களில் குளிக்கப் படையெடுத்துச் சென்றனர். ஒன்றிரண்டு இடங்களில் சில விபத்துகள் ஏற்பட்டிருக்க, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரமாக்கி இருந்தது.

அருகில் உள்ள காட்டுப் பகுதியில் காட்டு நயினார்கோவில் அணை என்ற ஒரு பெரிய அணைக்கட்டு இருந்தது. அங்கு அணை நிரம்பும் தருவாயில் இருந்தது. அணையைப் பரிசோதிக்க, அருகில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க, நிரம்பும் அணையைப் பார்க்க வரும் மக்களைக் கட்டுப்படுத்த என்று அரசுக்கு நிறைய உதவி தேவைப்பட்டது. வழக்கமாக இது போன்ற சுற்றுச்சூழல் இயக்கங்களிலும் தமிழ்ச்செல்வன் நிச்சயம் இருப்பான். எனவே அவனையும் அழைத்திருந்தனர். மழை வெள்ளம் சற்று ஓய்ந்த பின் கோவைக்குச் செல்லும் திட்டத்தில் இருந்தவன், நண்பர்கள் சிலருடன் காட்டுநயினார்கோவில் அணைக்குச் சென்றிருந்தான்.

கடின வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் நேரம் சரியாக இருந்தது. அருகிலிருந்த ஊர்களுக்கு இரண்டு இரண்டு பேர்களாக டூவீலர்களில் சென்று பாதுகாப்பைப் பற்றி அறிவுறுத்தி வந்தார்கள். சிலர் நீர் வெளியேறிச் செல்லும் ஓடைகளில் அடைப்பு, ஆக்கிரமிப்பு எதுவும் இருக்கிறதா என்று பரிசோதிக்கச் சென்றார்கள். சில குளங்களில் கரைகளை பலப்படுத்தும் வேலைகள் நடந்தன. இப்படி முதல் நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருந்தது. மறுநாள் அணைப் பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்கான அறிவிப்புப் பலகைகளைப் பொருத்துவது போன்ற வேலைகளைச் செய்து விட்டு சற்று ஓய்வாக அமர்ந்திருந்தான்.

அன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. மழை நேரம், பொங்கிப் பெருகி நிற்கும் இயற்கை, அடுத்து வரும் பயணம் எல்லாம் சேர்ந்து தமிழ்ச்செல்வனுக்கு பார்கவியைப் பார்க்க வேண்டும், பேச வேண்டுமென்ற உணர்வு அடக்க முடியாமல் எழுந்தது. எங்காவது வரச்சொல்லி சந்தித்து விடலாம் என்று துணிந்து
அவளுக்கு ஃபோனில் அழைத்தான். துணிச்சல் காரனுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும் என்பது உண்மைதான் போலும். பார்கவி தன் தம்பியுடன் அருகிலிருந்த உயிரியல் பூங்காவில் தான் இருந்தாள்.
 
Top