கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 23

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 23

பார்கவி அழைப்பை ஏற்றவுடன், "எங்கே இருக்க? பிஸியா இருக்கியா?" என்று தமிழ்ச்செல்வன் கேட்டான். பின்னணியில் காற்று பலமாக வீசும் ஓசை கேட்டது.

"ஒரு வாலண்டியர் வொர்க். எங்க ஸ்கூல் பாட்டனி மிஸ் கூட ஒரு டீம் வந்திருக்கோம்.. டேம் கிட்ட இருக்கே, அந்த ஈகோ பார்க்ல (Eco park) இருக்கேன். ஏற்கனவே நாங்க அடிக்கடி சாம்பிள் கலக்ஷ்னுக்கும் ரிசர்ச்சுக்கும் வர்ற இடம்தான். மழைல நிறைய மரங்கள் சாஞ்சுருச்சு.. நிறைய பறவைகள் கூடுகளை இழந்திருக்கு. கொஞ்சம் ரீலொகேஷன் பண்ணினோம். இங்கதான் இருக்கேன். தம்பியும் இருக்கான்" என்றாள்.

"வொர்க் முடிஞ்சுதா?"

"அல்மோஸ்ட் முடிஞ்சுது" என்றாள்.

"நிறைய பூ, பூச்சிகளை ஃபோட்டோ எடுத்துருப்பியே?" என்ற தமிழ்ச்செல்வன் கேட்க,

"எப்படி உங்களுக்குத் தெரியும்னு இப்ப கேக்க மாட்டேனே.." என்றாள் பார்கவி சிறு பிள்ளை போல.

"ஏன் கேட்க மாட்ட?"

"என் ஃபேஸ்புக் பேஜை நீங்க ஸ்பை பண்ணினது எனக்குத் தெரியும்" என்றாள்.

"ஸ்பையா? உன் பேஜை நான் பாத்தா என்ன தப்பு? சரி, அத விடு. உன் தம்பிக்கு என்னைப் பத்தித் தெரியுமா?" என்றான்.

"உங்களைப் பத்தியா? உங்களைப் பத்தி அவனுக்கு என்ன தெரியணும்?"

"உன்கிட்ட வாக்குவாதம் பண்ண எனக்குத் தெம்பு இல்லை. உன்னைப் பாக்கணும்.. தம்பியை ஏதாவது சொல்லி சமாளிச்சுட்டு வா.. நானும் இங்கே பக்கத்துல டேம்ல தான் இருக்கேன், ரெண்டு நாளா" என்றவன் தான் செய்த வேலைகள் குறித்து சொன்னான்.

"பாப்போம்.. முடிஞ்சா வரேன்.." என்றாள் பார்கவி சந்தேகமாக. பார்கவி தன் தம்பிக்கு லேசுபாசாக விபரத்தைச் சொல்லித் தான் இருந்தாள். என்றிருந்தாலும் ஒரு நாள் வீட்டிலிருந்து ஒரு ஆதரவு வேண்டுமே என்று. அதனால் அவனிடம் தமிழைப் பார்க்கப் போகிறேன் என்று உண்மையைக் கூறிவிட்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அணையின் அருகில் நீரைப் பார்த்தாற் போல் சில கல் பெஞ்சுகளை அந்தக் காலத்திலேயே போட்டு வைத்திருந்தார்கள். சுற்றுலாத் தலமாக அமைக்கும் எண்ணத்தில் பயணிகள் அமர்வதற்காக தயார் செய்திருக்கலாம், அல்லது மின்சாரத்துறை, நீர்வளத் துறையினர் யாராவது பயன்படுத்துவதற்காகப் போட்டிருக்கலாம். அதில் ஒன்றில் அமர்ந்து அணையில் தேங்கியிருக்கும் நீரையும் அதன் பிரமாண்டத்தையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன். 'இப்போ அணையில அடங்கி இவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்குதே இந்தத் தண்ணீர், டேம் கட்ட முன்னாடி இதே மாதிரி மழை பெஞ்சா எவ்வளவு ஆர்ப்பாட்டமா ஓடியிருக்கும்? எதிரில் எது வந்தாலும் துவம்சம் பண்ணி இழுத்துக்கிட்டே போயிருக்குமே? இயற்கைக்கு முன்னாடி ஊரு, மனுஷங்க, நானு, பார்கவி, எங்க காதல் எல்லாமே ஒரு சின்ன புள்ளி தானே?' என்று நினைத்துக் கொண்டிருந்தான். சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்த அவனைக் கண்டுபிடிப்பது பார்கவிக்கு ஒன்றும் கடினமாக இல்லை.

"என்ன பார்க்கும் இடமெல்லாம் பார்கவியா?" என்று கூறியபடியே தன் வண்டிச் சாவியை கையில் சுழற்றிக் கொண்டு அவன் அருகில் வந்து சற்று இடம் விட்டு அமர்ந்தாள் பார்கவி.

திடீரென பார்கவியின் குரல் கேட்கவும் அவள் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. வருவாளா மாட்டாளா என்ற சந்தேகத்தில் இருந்த தமிழ்ச்செல்வன், "ஸ்வீட் சர்ப்ரைஸ்! எப்படி வந்த?" என்றான்.

"நீங்கதானே வரச் சொன்னீங்க? பக்கத்துல தான் இருந்தேன்.. வந்துட்டேன்" என்றாள் சாதாரணமாக .

"தேங்க்ஸ்!" என்றான் நெகிழ்ச்சியாக.

"அப்புறம் உங்களுக்கும் தேங்க்ஸ்" என்றாள் பார்கவி.

"எதுக்கு?" என்று தமிழ்ச்செல்வன் கேட்க,

"எதுக்கோ!" என்றவாறு தன் அலைபேசியை எடுத்து கேமராவில் பெருகி நிற்கும் நீரைப் புகைப்படம் எடுப்பதற்காகத் தூக்கிப் பிடித்தாள். "இந்த வருஷம் ரொம்ப நாள் லாக் டவுன் போட்டதால சுற்றுச் சூழல் இம்ப்ரூவாகி நல்ல மழை பெய்ததா சொல்றாங்களே? அப்படித்தானா? வருஷத்துக்கு ஒரு மாசமாவது இப்படி லாக்டவுன் இருந்தா நல்லா இருக்கும்ல" என்றும் கேட்டாள்.


புகைப்படங்கள் எடுத்து முடிக்கும் வரை அவளையே பக்கவாட்டிலிருந்து பார்த்தவன், அவள் அலைபேசியைக் கீழே இறக்கவும் சட்டென்று அதை அவள் கைகளிலிருந்து பறித்தான். "அன்னிக்கி இத நான் ஓபன் பண்ணப் போறப்பத் தானே டென்ஷனாகி இதே மாதிரி பறிச்சுட்டுப் போய் ஆட்டோல ஏறின?* என்றவன், "என்ன இருக்கு இதுல அப்படி?" என்று அதன் திரையைப் பார்த்தான்.

இனி அவனைத் தடுக்க முடியாது என்று தெரியவும் நைசாக எழுந்து போகப் போனவளைத் தன் ஒரு கையை நீட்டிப் பிடித்து அமர வைத்துவிட்டு, அவள் ஒளித்து வைக்க நினைத்ததைப் பார்த்தான். இந்தக் கையால் பிடித்த கையை விடாமல் அப்படியே பிடித்திருந்தால். பார்கவியின் லாக்ஸ்கிரீன் ஃபோட்டோவாக சுமித்ரா- விஸ்வா திருமணத்தன்று மேடையில் ஒரு நொடி மாஸ்க்கை இறக்கி வணக்கம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் இருந்தான்!

"அந்த ஒரு நிமிஷத்தில் என் முகத்தை கேப்சர் பண்ணிட்டியா.. பண்ணினது மட்டுமில்லாம உடனடியா ஸ்க்ரீன் சேவரா வச்சிருக்க?" பிடித்த கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தான். பார்கவி ஒன்றுமே சொல்லவில்லை.. குடுங்க என்பதாகத் தன் ஃபோனுக்காக சிறுபிள்ளை போல் தன் மறு கையை அவள் நீட்ட,

"இரு! இன்னும் வேற என்னென்ன செஞ்சு வச்சிருக்கேன்னு பாப்போம்" என்று கேலரி முழுவதுமாகப் பார்வையை ஓட்டினான். திருமண மேடையில் மணமக்களுடன் இருக்கும் தமிழ்ச்செல்வன், ஃபேஸ்புக்கில் பார்த்த- கும்பலுடன் இருக்கும் தமிழ்ச்செல்வன், சில நாட்களுக்கு முன் வைத்திருந்த வாட்ஸ்அப் ப்ரொஃபைல் புகைப்படம், நேற்று புதிதாக வாட்ஸ் அப்பில் ப்ரொஃபைலாக வைத்திருந்த குடும்பப் புகைப்படம், இப்படி டவுன்லோட் பகுதியையும் தமிழ்ச்செல்வனால் நிரப்பியிருந்தாள்.

"இதெல்லாம் என்ன?" என்று அவளையே கேட்டான்.

"நீங்க என்னை ஸ்பை பண்ற மாதிரி நான் பண்ணக் கூடாதா?"என்று பார்கவி கேட்டாள். அவள் குரலில் வலுவே இல்லை.

"அப்ப என்னைப் பத்தி தேடிட்டு இருந்திருக்க?"

"ஒவ்வொரு நொடியும்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நினைப்பதிலேயே
என்
ஒவ்வொரு நொடியும்
செலவாகி விடுகிறது" என்று கவிதை சொன்னாள் ஏற்ற இறக்கத்துடன்.

"ஏய்! உனக்கு எப்படித் தெரியும். இந்தக் கவிதையை நீயும் படிச்சிருக்கியா?" என்றான் ஆர்வமும் ஆச்சரியமுமாக.

"ஃபோனை ஒருத்தங்க கிட்ட கொடுத்துட்டு வந்தா, அதுவும் அதுல ஒரு வேலை செய்யச் சொல்லியும் சொல்லிருந்தா திரும்பி கைல ஃபோன் வரும் போது செக் பண்ணனும்னு தெரியாதா? என்றாள் பார்கவி.

"ஏய் என்ன சொல்ற நீ?"

"என் ஃபோனைக் குடுத்துட்டு உங்க ஃபோன்ல சென்ட் மெயில் ஃபோல்டரைத் திறந்து பாருங்க" என்றாள். அவன் தன் அலைபேசிக்காகப் பாக்கெட்டில் கையை விடவும், இவள் தன் ஃபோனை லாவகமாக அவன் கையிலிருந்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து நின்றாள். சுற்றி நின்று செடிகள், பூச்சிகள் இவற்றை ஆராய ஆரம்பித்தாள்.

தன் போனில் அஜய் செய்து வைத்த வேலையை பார்த்த தமிழ்ச்செல்வன், 'ஐயோ! அத்தனை உளறல் லெட்டரையும் அனுப்பித் தொலைச்சிருக்கானே! நான் ஒருத்தன், தெளிவா சொல்லியிருக்கணும்.. இல்ல இவகிட்டயாவது நான் வீட்டுக்குப் போய்ட்டு டீடெயில்ஸ் அனுப்புறேன்னு சொல்லியிருக்கணும்' என்று அஜய்யுடன் தன்னையும் சேர்த்துத் திட்டிக் கொண்டான்.

அங்கு ஒரு செடியின் இலையின் அடியில் வண்ணத்துப்பூச்சி விட்டுச் சென்றிருந்த முட்டைகளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி. அவள் அருகில் சென்றவன், "அந்த முட்டாள் எதை அனுப்ப சொன்னா எதையோ அனுப்பிட்டான்.. நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்கலயே?" என்றான்.

"'டூ பார்கவி'ன்னு ஹெட்டிங் போட்டு வைப்பீங்களாம்.. அதுவும் டிராஃப்ட்ல. அப்புறம் இன்னொருத்தனை அனுப்பச் சொல்லுவீங்களாம். இப்ப வந்து தப்பா நினைச்சுக்கிட்டியான்னு கேப்பீங்களாம்.. என்னை என்ன கேணைன்னு நினைச்சீங்களா? உங்க பிளான் தானே எல்லாம்?" என்றாள் தன் இலை ஆராய்ச்சியைத் தொடர்ந்தபடி.

"இல்லம்மா.. சத்தியமா அப்படி இல்ல"

"நான் நம்ப மாட்டேன்.. ஏன் நோட்பேட், ஃபைல்ஸ், டிரைவ் இப்படி இடமே இல்லையா பெர்சனல் டாகுமென்ட் சேவ் பண்ணி வைக்க? ஒரு பட்டனைத் தட்டினா செண்ட் ஆகுற மாதிரி இடத்துல தான் வைப்பீங்களா?

"நோட்பேட்ல இவ்வளவு நீளம் எழுத இடமில்லை, ட்ரைவ்ல எழுத எனக்குத் தெரியாது‌. சாரி மா! அன்னிக்கு நானா அனுப்புறேன்னு சொன்னேன்? நீ தானே வேலை சம்பந்தமா ஒரு ஹெல்ப்பும் பண்ண மாட்டேங்கறீங்கன்னு வம்பிழுத்த? அதுக்குப் பிறகு தானே ஒரு ஃப்ளோல அஜய்க்கு அனுப்பச் சொல்லி கால் பண்ணினேன்" என்றவன், பதில் இல்லாமல் அவள் செடியையே பார்த்துக் கொண்டிருக்கவும், "கோபமா?" என்றான்.

"அதான் பட்டிமன்றம் மாதிரி ஒவ்வொரு டாபிக்லயும் இரண்டு பக்கமும் உள்ள பாசிட்டிவ், நெகட்டிவ் அலசி ஆராய்ஞ்சு நீங்களே தீர்ப்பு எழுதிருக்கீங்களே.. லவ் பண்ணுறது கரெக்ட் தான்னு அப்புறம் எங்கிருந்து கோபப்படுறது?" என்றாள் சலிப்பு கலந்தது போன்ற குரலில். உண்மையில் காதலிக்கலாமா வேண்டாமா, அதன் பிளஸ் மைனஸ் எல்லாவற்றையும் பலமுறை பல கோணங்களில் அந்த லெட்டரில் எழுதி இருந்தான். பார்கவி குடும்பத்தில் என்ன எதிர்வினை வரும், தன் வீட்டு நிலை என்ன, ஒருவேளை பார்கவிக்கு வேறொருவர் மேல் விருப்பம் இருந்தால் என்ன செய்ய, இப்படி எல்லாவற்றையும் யோசித்து நேரில் அவளைப் பார்த்துச் சொல்வது போல எழுதி இருந்தான்.

செடியைப் பார்த்தவாறே சொன்னவளைத் தொட்டுத் தன் புறம் திருப்பி, "அப்ப கோபம் இல்லையா? உனக்கு ஓகேவா? என்றான் தமிழ்ச்செல்வன் கண்கள் மின்ன.

"ஓகேன்னு... சொல்லமுடியாது.. ஆனா ஒரு நேர்மையான, பொறுப்பான, மத்த எல்லாருக்காகவும் யோசிக்கிற ஒரு நல்ல பையனோட நியாயமான ஆசையை எப்படி மறுக்கிறதுன்னு தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"

அவள் சொன்னது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தாலும் தன் இத்தனை நாள் மனப் போராட்டத்திற்கு ஒரு நல்ல விடை கிடைத்தது போல இருக்க, அவளை அப்படியே இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இதை எதிர்பார்க்காத பார்கவி, "ஐயோ விடுங்க! நான் இன்னும் ஓகே சொல்லல.." என்றாள் விலக முயன்றபடி.

"சரி! அப்ப சீக்கிரம் சொல்லு!" என்றான். எங்கே விட்டால் ஓடிவிடுவாளோ என்று பிடித்த பிடியைப் பிடித்தபடியே நின்றவனுக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தது. கஷ்டப்பட்டு விலகியவள், சுற்றிலும் பார்த்தாள். கண்களில் ஒரு சிறு கலக்கம்.

"ஆள் கம்மியா தான் இருக்கு.. யாரும் இங்கே நம்மை பாக்குற மாதிரி தெரியல.. சீக்கிரம் போயிடலாம். ப்ளீஸ் ஓகே ன்னு சொல்லிடு" அவள் கலக்கத்தை உணர்ந்தவன் கெஞ்சுவது போல் கேட்க, மீண்டும் அவள் பழைய பெஞ்சுக்கே சென்று அமர்ந்தாள்.

"ஐய! கெஞ்சாதீங்க தமிழ்.. பாக்க நல்லாவே இல்லை!" என்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும்

"எதுக்கு ஓகே சொல்லணும்? எதுவுமே நீங்க நேரடியா கேட்கவே இல்லையே…" என்று சற்று நேரம் விளையாடி பார்த்தவள், அவன் முகத்தில் வந்து போன வலியைக் கண்டு, "அது இருக்கட்டும் உங்களுக்கு ஏன் ஒரு விஷயத்தைக் கேக்குறதுக்கு இவ்வளவு தயக்கம் உங்க மேலேயே ஒரு சந்தேகம்.. ம்..?" என்று கேட்டாள்.

"இல்ல, நான் வழக்கமா பொண்ணுங்க எதிர்பார்க்கிற மாதிரி ஆளு இல்ல.. திடீர்னு ப்ளட் குடுக்கணும் வாடான்னு கூப்பிட்டா போகணும்.. வெள்ளம் வருதுன்னா ஓடிடுவேன்.. போராட்டம்னா தமிழைக் கூப்பிடும்பாங்க.. அப்படி ஒரு பிரஷர் சிட்டுவேஷன்ல என்னாலேயே என்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ணிக்க முடியாது. இப்படி இருக்கிறவன் ஒய்ஃப், குழந்தைகளை ஸேட்டிஸ்ஃபை பண்ண முடியுமா? சண்டை வராதான்னு பயங்கர குழப்பம்"

"நானும் சில சமயம் அப்படித்தான்.. பூச்சி பிடிக்க, பூ பறிக்கன்னு ஓடிடுவேன். வீட்ல பாம்பு, தேள் வந்தாக் கூட கொல்ல விடமாட்டேன்.. குருவிக்கு அடி பட்டுடுச்சுன்னு கொண்டு வருவேன்.. திடீர்னு ஏதாவது பொண்ணு ஆதரவில்லாம வந்துச்சுன்னா 'தமிழ்! இதுக்கு ஒரு வழி பண்ணுங்கன்னு உங்க கிட்ட வந்து நிப்பேன்' என்றாள் பார்கவி. இப்போது அவள் 'தமிழ்' என்று கூப்பிட்டதில் "டே தமிழ்!" என்றது போன்ற ஒரு நெருக்கம் இருந்தது போல் தோன்றியது.

இப்போது தமிழ் தொடர்ந்தான், "அப்புறம் எங்க வீட்ல அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணனும்.. ஹோட்டல் வேலையவே தொடர்ந்து பார்ப்பேனா, இல்ல சட்டுன்னு பழைய வேலைக்கு போயிடுவேனா தெரியல.. அப்பப்ப சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செய்வேன்.. அஜய் அப்பா மாதிரி ஆளுங்களுக்காக ஒரு மது போதை மறுவாழ்வு மையம் ஆரம்பிக்கணும்னு கூட ஃப்யூச்சர் ஐடியா இருக்கு"

"நானும் அம்மாவுக்கு ஒரு மாடர்ன் தையல் மெஷின் வாங்கிக் குடுத்து, அசிஸ்டன்ட்டோட பெரிய கடை வச்சுக் குடுக்கணும்.. அப்பா கடையை டிபார்ட்மெண்டல் ஸ்டோரா மாத்தி ஏ.சி. போட்டு வேலைக்கு ஆள் போட்டு அப்பாவைக் கல்லாவுல உட்கார வைக்கணும்.. நான்தான் ப்ளஸ் டூல் நல்ல மார்க் எடுத்ததும் எல்லாரும் சொன்னாங்கன்னு இன்ஜினியரிங், கேம்பஸ் இன்டர்வியூன்னு வயித்துப் பாட்டுக்காக சாஃப்ட்வேர் வேலைக்குப் போயிட்டேன்.. தம்பியையாவது அவன் ஆசைப்பட்டபடி பாட்டனிஸ்ட் (Botanist) ஆக்கணும். பெரிய யுனிவர்சிட்டி, ஃபாரின் காலேஜ் எது கிடைச்சாலும் அனுப்பிடனும். சம்பாதிக்கணும்கிற ஸ்டிரஸ் அவனுக்காவது இல்லாமப் பண்ணனும். அப்புறம்…"

இப்போது தமிழ்ச்செல்வனும் அவளருகில் அமர்ந்து அவள் கையை மீண்டும் பற்றி விரல்களைத் தன் விரல்ளுடன் கோர்த்துக்கொண்டான். "அப்புறம்..?" என்று அவன் கேட்க,

"வீட்டுல ஒத்துக்குவாங்களான்னு தான் தெரியல.." இப்போது பார்கவியின் குரல் உடைந்தது.

அவளது தலையில் கைவைத்து மென்மையாகத் தடவி, "இவ்வளவு பொறுப்பான, நேர்மையான, பாசமான, அன்பான, பொண்ணோட நியாயமான ஆசையை எந்த அம்மா, அப்பாவாவது வேண்டாம்னு சொல்லுவாங்களா?" என்றான் அவள் சற்று முன் சொன்னதைப் போலவே.. அப்படியே அவளைத் தன் தோளிலும் சாய்த்தான்.

"பிரச்சனை வராதா?"

"வராது.. வந்தாலும் சமாளிச்சுக்கலாம்"

"அப்ப ஓகே பண்ணிடலாம்கிறீங்களா?"

"எப்பயோ ஓகே பண்ணிட்டோம்னு சொல்றேன். இனிமே யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லைங்கிறேன்" என்றான். அவளாகவே இன்னும் நெருங்கி அமர்ந்தாள் பார்கவி. சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.. "கோவை போய்ட்டு வரேன்.. என் டிஷ்யூவே ப்ரியங்காவுக்கு மேட்ச் ஆகணும்னு வேண்டிக்கோ" என்றான் .

"எனக்கும் உங்க கம்பெனில புதன்கிழமை இன்டர்வியூ. வேலை கிடைக்கனும்னு வேண்டிக்கோங்க‌.. அப்படியே ரெக்கமண்ட்டும் பண்ணுங்க"

இதைக் கேட்டதும் உற்சாகமா னவன், "ஹே! இன்னும் என் பொசிஷன் ஃபில்லாகாமத் தான் இருக்கு.. நானும் இப்ப கோவை போறப்ப எங்க சிஇஓ வைப் பார்த்து வேலையில சேர்ந்துடவா? ஹோட்டல் வேலையை விஸ்வநாதன் தலையில கட்டிடலாம். ரெண்டு பேரும் ஒரே ஆஃபிஸ்னா எப்படி இருக்கும்" என்றான் குதூகலத்துடன்.

"என்னமோ பண்ணுங்க.. ஆனா நான் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் இருக்கணும்னு வேண்டப் போறேன்" என்றாள் பார்கவி.

"ஏன்மா, ஏன்? ஒய்?"

"அப்பதான் கம்பெனிக்கு நல்லது" என்று கூறிவிட்டு கலகலவென்று சிரித்தாள்.

"ஹாஹா" என்று மனம் விட்டுச் சிரித்தான் தமிழ்ச்செல்வனும்.

"கிளம்பட்டுமா.." என்று பார்கவி கேட்க,

"ம்.." என்றான் தமிழ் மனதே இல்லாமல்.

"பாப்போம்.." என்றபடி எழுந்தாள் பார்கவி

"எப்ப பாக்கலாம்?"

"எப்பயாவது.."

"அதுவரைக்கும் ..?"

"அது வரைக்கும் நீங்க என்னமோ பண்ணுங்க.. எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு" என்றபடி கிளம்பினாள். நீடித்த மழைக்குப் பின்னான தென்றல் காற்று இருவரின் முகத்திலும் மோதிச் சென்றது.

"அதுவரைக்கும்.. ஏன் அதுக்கப்புறமும் கூட, 'காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்' னு இருந்துக்குறேன் என்றான் சத்தமாக.

"என்ன கழிக்கப் போறீங்களா?" என்று பார்கவி பொய்க் கோபத்துடன் கேட்க,

"கழிக்கலம்மா.. களிக்கின்றேன்.. சந்தோஷப்படறேன்னு அர்த்தம்"

"தெரியுது தெரியுது! நானும் பாரதியார் பாட்டு படிச்சிருக்கேன். ஜெமினி கணேசன் வர்ற சினிமா பாட்டும் பார்த்திருக்கேன்‌.. இப்ப வரேன்.. பை!" என்று மீண்டும் கையசைத்தவாறு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

மாலை நேரக் காற்று இதமாக வீச, இயற்கை என்னும் பேரதிசயம் தனக்காகத் தந்திருக்கும் மற்றுமொரு பெரும் பரிசினைப் பெருமிதத்துடன் பார்த்தபடி மகிழ்ச்சி பொங்க நின்றிருந்தான் தமிழ்ச்செல்வன்.

(நிறைவுற்றது)

***



கொரோனா- நாம் கடந்து வந்த பாதை

நவம்பர் 2019- சைனாவில் சந்தேகத்திற்கிடமான தொற்று பரவுவதாகத் தகவல்

டிசம்பர் 2019- கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிருமியால் அதிக அளவில் நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக சைனா ஒப்புதல்.

30 ஜனவரி 2020- இந்தியாவின் முதல் கோவிட் நோயாளி கண்டுபிடிப்பு

22 மார்ச் 2020- நாடு தழுவிய ஒருநாள் அடையாள கடையடைப்பு

23 மார்ச் 2020- சர்வதேச விமான நிலையங்கள், எல்லைகள் மூடல். 21 நாள் நாடு தழுவிய லாக்டவுன் அமல்.

14 ஏப்ரல் முதல் 31 மே வரை- பல்வேறு கட்டங்களாக லாக்டவுன் நீடித்தது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளியூர் வாழ் மக்கள் சொந்த ஊர்களுக்கு கிடைத்த வாகனங்களிலும் நடை மூலமாகவும் பயணம். இபாஸ் நடைமுறை தொடக்கம்.

1 ஜுன் 2020- மத்திய அரசு லாக்டோனில் சிறிது சிறிதாக தளர்வுகளை அறிவித்தது.

ஜூலை 2020- தமிழகம் அதிக அளவில் உயிர் இழப்புகளை சந்தித்த மாதம்

செப்டம்பர் 2020- தமிழகத்தில் படிப்படியாக நோய்த் தொற்று குறைவு

நவம்பர் 2020- அமெரிக்கா இங்கிலாந்து வெளிநாடுகளிலும் டெல்லி, கேரளம் போன்ற பகுதிகளிலும் இரண்டாவது அலை தொடங்கியதாக செய்தி.

ஓராண்டைத் தாண்டிய தருவாயில் மீண்டும் பள்ளிகள் திறக்காமலும், வீட்டிலிருந்தே பணி புரியும் நிலையும், அடுத்த அலை மிரட்டுவதால் அச்சம் விலகாமல் புரட்டிப் போடப்பட்ட வாழ்வியலுடன் இன்னும் உலக மக்கள்...



***
மனதிலிருந்து...


சென்ற ஆண்டு இதே நேரம் யாராவது நம்மிடம் வந்து, உலகுக்கே ஒரு பெரிய ஆபத்து வருகிறது. பெரிதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே மாறப்போகிறது என்று யாராவது சொன்னால் நம்பியிருப்போமா என்று தெரியவில்லை. நாம் கடந்து வந்த இந்த சில மாதங்களில் உடல்நலம் குறித்த கவலை, உயிர் பயம் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார, குடும்ப கோட்பாடுகள் பலவும் மாறியிருக்கின்றன. இவ்வளவு நாள் வைத்திருந்த பல பழக்கவழக்கங்கள் மாறின. முதல் நாள் வரை உச்சாணிக் கிளையில் இருந்தவர் அடுத்த நாள் தொழில் நொடித்துப் போய் உடைந்து போனார். வறுமையில் வாழ்ந்தவர்கள் மேலும் வறியவர்களாகிப் போனார்கள். இந்தப் பெருந்தொற்று ஒருவரைக் கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் நிஜம். இந்த நெருக்கடி நிலையில் சந்திக்கும் இருவர் மத்தியில் ஒரு இனிமையான காதல் பூத்து மலர்ந்து மணம் பரப்பினால் எப்படி இருக்கும் என்று எனக்குள் எழுந்த கேள்விக்கான விடை தான் இந்தக் கதை.

இந்தக் காலகட்டத்தில் இரவுப் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்காக உப்புமா கிண்டிக் கொண்டு வந்தவன், சம்பாதிக்க வழி இன்றி உணவுக்காக மருத்துவமனையில் சேர்ந்தவன், சொந்த வீட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட நோயாளிகள் இப்படிப் பலரைப் பார்க்க நேர்ந்தது. கேன்சர் போன்ற பெருநோய்களுக்கான சிகிச்சைகள் பெற மிகக் கடினமாக இருந்தது.

ஆடம்பரமாகத் திட்டமிடப்பட்ட திருமணங்களை எளிமையாக வீட்டுக்குள்ளேயே நடத்தியதும், தேவையற்ற செலவுகளை மக்கள் குறைத்துக் கொள்ளப் பழகியதும் இந்தப் பெருந்தொற்றினால் நடந்தன.

மற்றும் இந்தக் கதையில் வந்த பல மாந்தர்கள் ஆங்காங்கே நான் சந்தித்தவர்களே.. எங்கள் பகுதியில் ஒரு அமைப்பினர் சேர்ந்து ஏழைப் பெண்களுக்கு சீர் செய்து திருமணம் செய்து வைக்கின்றனர். அருகில் உள்ள ஒரு சிற்றூரில் காதலித்து ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் கொடுக்கின்றனர். இந்தப் பெருந்தொற்று காலத்திலும் ஒவ்வொரு பேரிடரின் போதும் கை கொடுக்கும் கரங்கள் ஆங்காங்கே முளைத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

எத்தனை நெருக்கடி நிலைகள் வந்தபோதிலும் அடிப்படை மனிதம் அப்படியேதான் இருக்கிறது. காதலும் காதலர்களின் குழப்பங்களும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது மாதிரி இருக்குமா? நடுத்தர குடும்பத்தின் பொறுப்பான பிள்ளைகள் மனதில் காதல் வந்தால் அவர்கள் உணர்வுகள் என்னவாக இருக்கும்? என்ற என்னுடைய கற்பனையே இந்தக் கதை.

தளத்தில் கதை வெளியான போது வாசித்தும், கருத்து- மீம்ஸ் பதிவு செய்தும், பரிசு பெற்ற போது மனதார வாழ்த்தியும் உடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பார்
கவியும் தமிழும் அதற்குள் விடைபெற்று விட்டார்களே என்று வருத்தப் படுபவர்கள் சொல்லுங்கள்! பின்னொரு காலத்தில் அடுத்த பகுதி ஒன்றைக் கொடுத்து விடலாம். நன்றியும், வணக்கமும்!!🙏❤️


Dr. S.அகிலாண்ட பாரதி
 
Top