கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 3

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 3


மறுநாள் காலை கோவை செல்லும் பயணம் உறுதியானவுடன் தமிழ்ச்செல்வன் அதனை ஏற்பாடு செய்ய உதவிய போலீஸ் மற்றும் ஆர். ஐ. யிடம் நன்றி கூறிவிட்டு, "சார் நான் ஆட்டோவைக் கொண்டு போய் விட்டுட்டு பைக்ல வரேன்" என்றான்.

"ஏன் தம்பி? இப்பவே லேட் ஆச்சு. காலையில வண்டி ஓட்டிட்டு வேற போகணும்னு சொல்றீங்க. ரெஸ்ட் எடுங்க. ஆட்டோவை நாங்க ஏதாவது டிரைவர் வச்சு அனுப்பிருதோம். பொறுப்பா உங்க வீட்டில விட்ருவாங்க"

தமிழ்ச்செல்வனுடன் கூட வந்த சிறுவன் ஏதோ அவன் காதைக் கடிக்க, "அதெல்லாம் வேண்டாம்! சும்மாக் கெட. உங்க அம்மாவுக்கு யார் பதில் சொல்றது?"


"என்ன! தம்பி பயப்படுதானா? தெரியாத ஆள் கூட போக மாட்டேன்னு சொல்றானா?" ஆர்.ஐ. கரிசனமாகக் கேட்டார்.


"அதெல்லாம் இல்ல சார்.. நீங்க வேற.. விட்டா அவன் ஊரையே வித்துட்டு வந்துருவான். நானும் கோயம்புத்தூர் வரவா? அந்த ஊரைப் பாத்ததே இல்ல அப்படிங்கிறான்"

"டேய் தம்பி! நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன் டா. இப்பப் போய் ஊர் சுத்திப் பாக்க ஆசைப்படுறியே?" என்றார் எஸ்.ஐ.

"ஒரு ஆசை தான் சார்!" அந்தப் பையன் சொல்ல,

"ஆமா, தம்பி யாரு? வேலைக்கு வச்சிருக்கியா" என்று ஆர்.ஐ. கேட்டார்.

"சொந்தம் தான் சார். இவன் பேரு அஜய் முருகன். இவங்க அப்பா எனக்கு சித்தப்பா முறை வேணும். ஒன்பதாம் கிளாஸ் முடிஞ்சு பத்தாப்புப் போக வேண்டியவன். குடும்பக் கஷ்டம்.. லீவு தானே அப்படின்னு வேலைக்கு வந்துட்டான். அவங்க அப்பாவுக்குப் பொறுப்பே கிடையாது சார். சரி பார்ட் டைமா மட்டும் பாரு.. மத்த நேரத்துல கண்டிப்பா படிக்கணும், அப்படின்னு சொல்லிக் கூட வச்சுக்கிட்டேன். நாங்களும் இப்ப கடை தினசரி திறக்குறது இல்லையே சார்"

"உனக்கு எத்தனை வயசு தம்பி?" ஆர்.ஐ. அஜய் முருகனிடம் ‌எதார்த்தமாகத் தான் கேட்டார்.

"அதெல்லாம் பதினாலு வயசு முடிஞ்சுருச்சு சார். லேபர் ரூல்ஸ் படி லீகலாதான் சார் வேலை பார்க்கிறேன்" என்றான் அவன் கேட்டு முடிக்கும் முன்பே.

"சும்மா இருடா.. வாயக் குறைன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கிறான்" என்று அஜய் முருகனை அதட்டினான் தமிழ்ச்செல்வன்.

"இப்படித்தான் சார் நிறைய
பசங்க, பொம்பளப் பிள்ளைக எல்லாம் இந்தக் காலகட்டத்துல வேலைக்குப் போகத் தயாராக இருக்காங்க. பெத்தவங்களுக்கும் வேலை இல்லையா.. ஸ்கூல் டிராப் அவுட் நிறைய இருக்கும்னு தோணுது சார். அதுலயும் இவன் பயங்கர கெட்டிக்காரனாத் தான் இருக்கான். விட்டா இவனே ஆட்டோவ ஓட்டிட்டுப் போயிருவான் போல" என்றார் போலீஸ் கான்ஸ்டபிள்.


"சார்! அதுக்கு 18 வயசு ஆகணும்ல்ல? அது இன்னும் மூணு, மூணறை வருஷம் இருக்கு சார்"


"உன் வாய்க்கு நீ ஆட்டோவை லிஃப்ட் கேட்டு சரக்கு லாரில ஏத்திக்கிட்டுப் போனாலும் போயிடுவ.. இங்கேயே வராண்டாவில் படுங்க தம்பி. பெட்ஷீட் தலையணை வாட்ச்மேன் தருவாரு. நாலு மணிக்கா கிளம்பப் போறீங்க?" என்று எஸ்.ஐ. கேட்டார்.

"ஆமா சார்.. அப்ப தான் பத்து மணி, பத்தரை மணிக்குள்ளயாவது அங்க போக முடியும்"

"தமிழ் அண்ணே! நாளைக்கு தாத்தாஸ், பாட்டிஸ் கதையை மறந்துட்டியா?"

"ஆமாடா அண்ணனை வச்சுக்கிட்டு சில வேலைகளை முடிச்சிடலாம்.."

"டோன்ட் ஒர்ரி.. எல்லா தாத்தா நம்பரையும் எனக்கு அனுப்பி விடு. ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு எல்லாரையும் சேர்த்து விடுவோம். யாருக்காவது வாட்ஸப் இல்லேன்னா பக்கத்து வீட்டுக்காரங்க யாரையாவது பிடிச்சுடுவோம். அவங்கவங்க லொகேஷன் ஷேர் பண்ணாப் போதும். கூகுள் மேப் போட்டுட்டு நானே போயிட்டு வந்துருவேன்"

"அதெல்லாம் பிறகு பாத்துக்கிடலாம்டா. சும்மா இருடா நீயி"

"என்னப்பா, தம்பி ஏதேதோ சொல்லுது?"

"சீனியர் சிட்டிசன்ஸ் நிறைய பேர் தனியா இருக்காங்கல்ல.. லாக்டௌன் பீரியடில் ஹோட்டலுக்கும் போகமுடியாம, சொந்தக்காரங்களும் வந்து உதவ முடியாம கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுக்கற ப்ளான் ஒன்னு இருக்கு சார். அதை பத்திதான் பேசறான்"

"தம்பி.. என்னல்லாம் பண்றப்பா? கேட்டாலே புல்லரிக்குது. பாரு இத்தனை வருஷ சர்வீஸ்ல நான் கூட எத்தனையோ நல்ல காரியம் பண்ணிருக்கலாம்.. இந்த கொரோனா காலத்துல எல்லாரும் கஷ்டப்படுததைப் பாத்தா வருத்தமா இருக்கு. ஆனா செக்கு மாடு மாதிரி இப்படி செக்போஸ்ட், பந்தோபஸ்துன்னு ஆயுசையே வேஸ்ட் பண்ணிட்டேன்"

"அதெல்லாம் இல்ல சார்.. காக்கிச்சட்டைன்னா ஒரு மரியாதை இருக்குல்ல.. நீங்க நின்னாலே போதுமே. தப்பு எதுவும் நடக்காது. உங்களுக்குத் தெரியாமலேயே நிறைய நல்ல காரியம் பண்ணிக்கிட்டு தான் சார் இருக்கீங்க"

"இல்லப்பா.. நீ ஃப்ரீ டைம்ல எவ்வளவு செய்ற? நாங்க எல்லாம் மக்களோட பழகுற ஆட்கள். உங்க அளவு
இல்லேன்னாலும் கொஞ்சமாவது செஞ்சிருக்கலாம் அப்படின்னு தான் எனக்கும் தோணுது" என்றார் ஆர்.ஐ.

"செய்யுங்க சார்.. பெட்டெர் லேட் தேன் நெவர் சார்!" என்றான் சிறுவன்.

"தம்பி உங்கள விடத் துடிப்பா இருக்காப்ல.. நல்லா வருவீங்கப்பா. போய் ரெஸ்ட் எடுங்க"


கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து டிரைவரையும் எழுப்பி விட்டான் தமிழ்ச்செல்வன்.

"வயிறு இப்போ கொஞ்சம் பரவாயில்லைங்க தம்பி. நீங்களே வண்டி ஓட்டுங்க. நான் இப்படியே பின்னாடி படுத்துகிறேன்" என்றார் டிரைவர் நாகராஜன்.

ரோட்டில் அவ்வளவாகப் போக்குவரத்து இல்லாததால் பயணம் நன்றாகவே அமைந்தது. செக்போஸ்டில் கேட்டால் சொல்லவென்று சில காரணங்களை யோசித்து வைத்திருந்தான் தமிழ்ச்செல்வன். இ- பாஸை டிரைவர் பிரின்ட் அவுட் எடுத்து வண்டியின் முகப்பில் ஒட்டி வைத்திருந்தார். அதனால் அதைப் பார்த்தவுடன் வண்டியை விட்டுவிட்டனர். வேறு எதுவும் கேட்கவில்லை. திண்டுக்கல் தாண்டும் வரை கார் எங்கும் நிற்கவில்லை. அதன் பின் நான்கு வழிப் பாதையில் போவதா, இல்லை கிராமப்புறங்கள் வழியாகச் செல்லும் ஒரு சாலையில் போவதா என்று தமிழ்ச்செல்வனுக்கு சிறு குழப்பம். வண்டியை ஓரமாக நிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தான். கூகுள் மேப்ஸில் இரண்டு பாதைகளுக்கும் உரிய கிலோமீட்டர் வித்தியாசத்தை கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் யாருக்காவது தொலைபேசியில் விசாரிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது நாகராஜன் விழித்துக் கொண்டார்.

"தம்பி! ரூட் குழப்பமா?" என்றார்.

"ஆமாண்ணே.. எது ஷார்ட் ரூட்னு பாக்குறேன்"

"அரவக்குறிச்சி ஊர் வழியாப் போறது தான் ஷார்ட். இருந்தாலும் டர்னிங் நிறைய இருக்கும். இப்போ தான் டோல்கேட்டில் காசு கிடையாதுல்ல.. நீங்க ஃபோர் வே வழியாவே போங்க" என்றவர், கீழே இறங்கி பாட்டிலில் இருந்த தண்ணீரால் முகம் கழுவி சுறுசுறுப்பாகிக் கொண்டார். அதன்பின் முன் சீட்டில் வந்து அமர்ந்து கொண்டார்.

"நீங்களே ஓட்டிடுவீங்களா தம்பி.. இல்ல நான் ஓட்டணுங்களா?"

"இல்ல அண்ணே! நானே பாத்துக்கிறேன். இன்னும் உங்க முகத்துல அசதி தெரியுது"

"ஆமாங்க.. கொஞ்சம் தலைவலி இருக்குதுங்க. இவ்வளவு நேரம் நல்ல தூக்கம். ரொம்ப மெதுவா, ஸ்மூத்தா ஓட்டுனீங்க"

"தேங்க்ஸ்ணே!"

"வழியில செக்போஸ்டில் எதுவும் போலீஸ் கேட்டாங்களா தம்பி? அதக் கூட கவனிக்க முடியல எனக்கு. நல்ல தூக்கம்"

"இல்லண்ணே ஒன்னும் கேட்கல.. பாருங்களேன், அவசியத்துக்குப் போறவங்க நாம. பயந்து பயந்து போறோம். ஏதோ கள்ளக்கடத்தல் பண்றவங்க மாதிரி"

"ஆமாங்க தம்பி. பொதுவா என் காரை யாருக்குமே கொடுக்க மாட்டேன். இன்னிக்கி சூழ்நிலை அப்படி. உங்களுக்கும் அவசரமாப் போகணும்னு சொன்னீங்க.. எனக்கும் சீக்கிரம் போக வேண்டியது இருந்துச்சு. அதனால தான் உங்களை ஓட்டுங்கன்னு சொல்லிட்டேன்"

"டிரைவர்கள் பெரும்பாலும் அப்படித்தான். காரைக் குழந்தை மாதிரி பார்த்துக்குவாங்க"

"லோன் வாங்கி புது கார் எடுத்து ரெண்டு வருஷம் ஆகுதுங்க தம்பி. இன்னும் டியூ கட்டிக்கிட்டுத் தான் இருக்கேன். அதுக்கு முன்னாடி ஒரு ஓன் யூஸ் காருக்கு பெர்சனல் டிரைவரா இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள் இன்னொருத்தர் டாக்ஸியை ஓட்டினேன். பேய்த்தனமா உழைப்பேன். சோறு, தண்ணி இல்லாம கூட வண்டி ஓட்டிருக்கேன்"

"நான் பார்த்த வரையில டிரைவர்கள் கிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட பழக்கம்ணே அது. ஒழுங்கா சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்குவாங்க. பசிக்கிற நேரம் டீ, வடை சாப்பிட்டுப் பொழுதக் கழச்சுட்டு அப்புறம் அல்சர் வந்து கஷ்டப்படுறவங்க எத்தனை பேரு தெரியுமா?"

"கரெக்ட் தம்பி.. டிரைவர்கள் பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க"

"ஊர்ல ஹோட்டல் வச்சிருக்கோம்ணே! சின்ன ஊர் தான். ஹைவேஸ்ல எங்க ஊர் இருக்கிறதால நிறைய டிரைவர்கள் ரெகுலரா சாப்பிட வருவாங்க. அவங்க சொல்லிச் சொல்லி, அவங்களோட ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்கு ஃப்ரண்ட்ஸ் அப்படின்னு சேர்ந்த கஸ்டமர்ஸ் தான் அதிகம். அவங்க எல்லாரும் சொல்லி கேள்விப்பட்டது தான். நல்லா சாப்பிடணும்ல.. இப்படி சாப்பிடாம வைக்காம வேலை பார்த்துட்டு பத்து வருஷத்துல உடம்பைக் கெடுத்துக்கறதை விடப் பொறுமையா உடம்பை கவனிச்சா ஆயுசுக்கும் நல்லா இருக்கலாம்ல?"

"கரெக்டு தாங்க. இப்பவும் ஹோட்டல் வேலையா தான் கோவைக்கு வரிங்களா தம்பி?"

"இல்லண்ணே! ஒரு குழந்தைக்கு ப்ளட் குடுக்கப் போறேன்" பிரியங்காவின் நோய், இரத்த தானம் என்று எல்லா விவரங்களையும் நாகராஜிடமும் கூறினான்.

"கிரேட் தம்பி! இப்படி மாத்துத் துணி கூட எடுக்காம கிளம்பிட்டீங்களே? திரும்பி எப்படி வருவீங்க?"

"பார்த்துக்கலாம்ணே! உங்கள மாதிரி நல்லவங்க யாராவது உதவி பண்ணாமலா போயிடுவாங்க? அங்க கோவையில தான் மூணு வருஷம் வேலை பார்த்தேன். பிரெண்டு ரூம்ல சில சட்டை, பேண்ட் எல்லாம் கிடக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்று தமிழ்ச்செல்வன் சொல்ல,

"எங்கே வேலை பாத்தீங்க, என்ன வேலை?" என்று விசாரித்தார் நாகராஜன். சாப்ட்வேர் வேலை, நான்கு வருட அனுபவம் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் "ஐயோ! பார்க்க சின்னப் பையனா இருக்கீங்களேன்னு தம்பி, தம்பின்னு கூப்பிட்டுட்டேன்.. சார்னு சொல்லி இருக்கணுமோ?"

"உங்களோட வயசுல சின்னவன் தானே நான்.. எப்படி வேணாக் கூப்பிடுங்க. வேலைக்குத் தகுந்த மரியாதை கொடுக்கறது தப்புண்ணே! வயசுக்குத் தகுந்த மாதிரி பேசினாப் போதும்" அப்போது தமிழ்செல்வனின் அலைபேசி அடிக்க, உடனடியாக அழைப்பை எடுக்காமல் விட்டான். பின் வண்டியை ஓரமாக நிறுத்திப் பேசினான். பேசியது அஜய் முருகன் தான்.

"தமிழ் அண்ணே! டிபன் கேரியர் வாங்கச் சொன்னீங்களே? அம்பது போதுமா?"

"அறுபது வேணும்டா. சின்னது முப்பது, பெருசு முப்பது"

"பாத்திரைக் கடைக்காரர் தான் கேட்டார்ணே.. இப்போ கடை கிடையாதுல்ல.. வேற ரெண்டு மூணு கடையில கேட்டு வாங்கித் தரேன்னு சொன்னார். அன்பு அண்ணன் கிட்ட கேட்டேன். உங்கள்ட்ட ஒரு தடவை
கேட்டுக்க சொன்னாங்க. பெரிய கேரியர்னா நாலு அடுக்கு போதுமாண்ணே?"

"ஆமாடா"

"நாளைக்கே சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலாமாண்ணே?"

"ரெண்டு நாள் போகட்டும்டா.. அம்மாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.. நான் வராம எல்லா வேலையையும் அம்மாவாலயும் செய்ய முடியாது. அண்ணன் பார்சல் போட வேணா ஹெல்ப் பண்ணுவான்"

"எங்க பக்கத்துத் தெருவுல உள்ள தாத்தா ஓயாம கேட்கிறார்ணே.. பாவம், அவருக்கு சாப்பாடு கொடுக்க ஆளில்லை"

"அவருக்கு மட்டும் வேணா எங்க வீட்டு சமையலை அம்மாக்கிட்ட சொல்லி வாங்கிக் கொண்டு போய்க் குடு. முழுசா ஆரம்பிக்க நிறைய விஷயம் பார்த்து செய்யணும்டா. அவசரப்படாதே" என்று முருகனிடம் கூறிவிட்டு போனை வைத்தான்.

"என்ன தம்பி?"

"வயசானவங்க நிறைய பேர் லாக்டௌன் காலத்துல கஷ்டப்படுறாங்கல்ல.. அவங்களுக்கு காலைலயும் மதியமும் மட்டும் வீட்டுக்குக் கொண்டு போய் சாப்பாடு கொடுக்கிற மாதிரி ப்ளான் போட்டுருக்கோம். அதுக்குப் பெர்மிஷன் வாங்கிருக்கேன்"


"உங்க மேல இருக்க இருக்க மரியாதை கூடிக்கிட்டே போகுது தம்பி"

"அண்ணே! காசு வாங்கிட்டு தானே சாப்பாடு குடுக்கிறோம்? இதுல எங்களுக்கும் லாபம் இருக்குல்ல.. என்ன, கொஞ்சம் கம்மி விலைக்குக் குடுக்கிறோம்.. அதுபோக ஆதரவில்லாதவங்க ஒண்ணு ரெண்டு பேருக்கு இலவசமாக் குடுப்போம். அவ்வளவுதான். எல்லா ஹோட்டலும் மூடிக் கிடக்கு. எங்க ஹோட்டல்ல மட்டும் கொஞ்சமா நடக்கப் போகுதுங்கறதே பெருசு தானே?"

"அதே மாதிரி தாங்க.. வண்டி சும்மாவே நிக்குதுன்னு வருத்தமா இருந்துச்சு. வருமானமும் இல்லை. அதான் பார்கவி பொண்ணு கூப்பிட்ட உடனே வந்துட்டேன். பார்கவி பொண்ணு சொல்லப் போய்த் தான் உங்களையும் கூட்டிட்டு வந்தேன். பாத்தியா, அந்தப் பொண்ணு மெசேஜ் அடிக்க சொல்லுச்சு. மறந்தே போயிட்டேன். போன் அடிச்சுப் பேசிடுவோம்" என்றவர் பார்கவிக்கு அலைபேசியில் கூப்பிட்டார்.

"பார்கவி... கிளம்பிட்டேன்மா... தூங்கிட்டேன். அதான் அப்பவே மெசேஜ் அடிக்கல. திண்டுக்கல் தாண்டி அரை மணி நேரம் ஆச்சு மா. சே சே! அதெல்லாம் வேண்டாம்டா.. பார்த்துக்கலாம். ஏன் கண்ணு? என்னப் பத்தி என்ன நெனச்சிகிட்ட நீ? சொன்னாக் கேக்க மாட்டியே? சரிமா! தேங்க்ஸ் மா!" என்று ஃபோனில் பேசியவர் ஃபோனைத் துண்டித்துவிட்டு, "இந்தப் பொண்ணப் பாருங்க தம்பி.. எக்ஸ்ட்ராவா தான் ஏற்கனவே பணம் குடுத்துச்சு. இப்போ உங்களக் கூட்டிட்டுப் போறதுக்காக வேற ஆயிரம் ரூபாய் ஜி-பே ல அனுப்பிருக்கேன் அப்படிங்கிது. சொல்லப்போனா என் வண்டியை ஓட்டிட்டு வந்து என்னை ட்ராப் பண்றதுக்கு நான் தானே உங்களுக்குத் தரணும்? சொன்னாக் கேக்க மாட்டேங்குது. உங்களுக்கு சொந்தமா தம்பி பார்கவி?"

'அந்தப் பெண் பெயர் பார்கவி
யா? என் பயணத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தாளா? ஏன்?' சிந்தித்தவாறே கோவையை நோக்கி வண்டியைத் தொடர்ந்து செலுத்தினான் தமிழ்ச்செல்வன்.
 
Last edited:
Top