கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 4

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம்- 4

இரவு தாமதமாகத் தூங்கியதால் விடிந்து வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தாள் பார்கவி. கலகலப்பான பேச்சுக் குரல்களும் ஒரு பாட்டுச் சத்தமும் கேட்டுக் கண் விழித்தாள்.

"என்ன அழகு? எத்தனை அழகு?
கோடி மலர் கொட்டிய அழகு…

ஏ…. என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு…" என்று தன்னைத்தானே புகழ்ந்து பாடியபடியே சிறிய கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டு இருந்தாள் சுமித்ரா.

"அடியேய்! தலையை சீவுறதுக்குள்ள நாலாவது பாட்டு இது. சீக்கிரம் தலையப் பின்னி முடி. வெளியே போய் கொஞ்ச நேரம் நடப்போம்.. நல்ல காத்து அடிக்குது" என்று ரேணுகா அவளைக் கூப்பிட,

"காலைத் தென்றல் பாடி வரும்
ராகம் புது ராகம்…" என்று ராகமாக இழுத்தபடியே ரப்பர்பேண்டைப் போட்டாள் சுமித்ரா.

"பார்கவி முழிச்சுக்கப் போறாடி.. கத்தாத!" ரேணுகா மீண்டும் பதறினாள்.

"நல்லாத் தானே பாடுது இந்தப் பாப்பா.. பாடிட்டுப் போகுது.. விடும்மா" என்றார் அந்த அறையில் இருந்த ஒரு பாட்டி.

"பாப்பா பாடும் பாட்டு…
கேட்டுத் தலையை ஆட்டு…" என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு குழந்தைக் குரலில் பாடினாள் சுமித்ரா.

"நேத்து பூரா உம்னு வந்த? இன்னிக்கு கெக்கே பிக்கேன்னு பாட ஆரம்பிச்சுட்டியா? பார்கவி எந்திருச்சா உன்னைக் கொல்லப் போறா… ஏற்கனவே அவளுக்குத் தூக்கத்துல யாராவது எழுப்பினாப் பிடிக்காது" என்று அடிக்குரலில் சுமித்ராவை மிரட்டினாள் ரேணுகா.

"நீயா பேசியது?- என் அன்பே
நீயா பேசியது?" என்று ரேணுகாவைச் சுற்றி சுற்றி வந்து சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு நீட்டி முழக்கினாள் சுமித்ரா.

"நான் அப்பவே முழிச்சுட்டேன். என்ன காலையிலேயே பாட்டுக் கச்சேரி?" என்றபடி எழுந்து அமர்ந்தாள் பார்கவி.

"இவ பொழுதன்னிக்கும் பாடிக்கிட்டே இருப்பா.. இல்லைன்னா பேசிக்கிட்டே இருப்பா. நான்ஸ்டாப் எஃப்எம். இவ வாயை மூட வைக்கவே முடியாது" ரேணுகா சுமித்ராவைப் பற்றிக் கூற,


"உன் பாட்டுல மயங்கித் தான் உன் ஆளு உன்னை லவ் பண்ணினாராக்கும்?" இலகுவான மனநிலையில் தான் அன்று விழித்திருந்தாள் பார்கவி.

"என் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் முழுகி…" மறுபடியும் ஆரம்பித்தாள் சுமித்ரா.

"அம்மா தாயே! போதும் மா! நிப்பாட்டும்மா.." ரேணுகா கூற,

"பாட்டாவே பாடிட்டியா? நேத்து பூரா எப்படி வாய மூடிட்டு இருந்த?" என்றாள் பார்கவி.

"ஹிஹி! மனசுக்குள்ள பாடினேன்கா.. நீங்க தப்பா நினைச்சுக்குவீங்களோன்னு அடக்கி வாசிச்சேன்.. அதுவும் போக, வர்ற வழி ஃபுல்லா நாகராஜ் அண்ணன் பாட்டுப் போட்டுட்டே வந்தாரா? நடுவுல நான் வாயைத் திறந்தா பாதிவழியில் இறக்கி விட்டுடுவாரோ அப்படின்னு ஒரு பயம்கா" முக பாவனைகளை மாற்றி மாற்றிப் பேசினாள் சுமித்ரா


"இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு எப்படி பாட்டு வருது?" பார்கவி ஆச்சரியப்பட,

"போய் பிரஷ் எடுத்துட்டு வந்து வாயில் வச்சு தேச்சுக்கிட்டே கதையைக் கேப்பீங்களாம்.. ரேணுகா சூப்பரா கதை சொல்லுவாளாம்" சுமித்ரா கூற, புன்னகையுடன் அவள் கூறியபடியே செய்தாள் பார்கவி.

"இவ இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே இருப்பா.. இவ பக்கத்துல இருந்தா எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருப்போம்.. பாட்டு மட்டும் இல்ல.. பேச்சுக் கூட ஜோக்காத் தான் பேசுவா. எங்க சூப்பர்வைசர் ஒரு உம்மணாமூஞ்சி.. அவரையே கலகலப்பா ஆக்கிட்டா. அப்புறமா அவரு தான் இவ பின்னாடி நாய் மாதிரி ரோஜாப் பூவ வச்சுகிட்டே சுத்தினார். அப்புறம் அவருக்கு நிறைய போட்டி எல்லாம் வச்சு தான் இவ ஓகே பண்ணினா.."

"போட்டியா?"

"ஆமா ஒரு நாள் பூரா பேசாம இருக்கணும். மறு நாள் பூரா யாரையும் திட்டாம இருக்கணும். அதுக்கு மறு நாள் பூரா இவளை மாதிரியே பாட்டு மட்டும்தான் பாடணும், பேசக் கூடாது அப்படின்னு ரூல்ஸ் போட்டு, அந்த மனுஷனும் தலையால தண்ணி குடிச்சு எல்லாப் போட்டிகள்லயும் வின் பண்ணி இவளுக்கு லவ்வர் ஆயிட்டாரு.."

"கரெக்டா சொன்ன ரேணு..
என் ஃபிரெண்டப் போல யாரு மச்சான்?" என்று பாடியபடியே ரேணுகாவின் கன்னத்தைக் கிள்ளப் போனாள் சுமித்ரா.

"இடைவெளி, சமூக இடைவெளி…" என்று கூறியபடியே தள்ளி நிற்கும்படி சைகை செய்தாள் ரேணுகா.

"எனக்கே எனக்கா? நான் சொன்னது எனக்கே எனக்கா?" என்றாள் சுமித்ரா.

"கொரோனா ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுச்சு. சமூக இடைவெளின்னு சொல்லியே ஒரு மாசமா டார்ச்சர் பண்ணின இல்ல? அதான் நீ சொன்னது உனக்கே உனக்கு" என்றாள் ரேணுகா. சுமித்ராவுடன் சேர்ந்து ரேணுகாவும் கலகலவென்று பேசுவதைப் பார்த்து பார்கவிக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்.

"இவ்வளவு பிரச்சினைலயும் நீ சிரிச்சு கலகலன்னு பேசுறது பெரிய விஷயம் தான். உன்னை நெனச்சு நான் தான் டென்ஷன் ஆகிக்கிட்டுக் கிடக்கேன்.." என்றாள் சுமித்ராவிடம்.

"அதுவாக்கா.. எப்படியும் ஒரு நாள் கம்பு, அரிவாள் எல்லாம் தூக்கிக்கிட்டு என்னை வெட்ட வருவாங்க. அன்னைக்கு டென்ஷனாகிக்கலாம். அதுவரைக்கு ஏன் சோகமாக இருக்கணும்? கொஞ்சம் ஜாலியா இருப்போமேன்னு தான் கா" மிகவும் இயல்பாகக் கூறினாள் சுமித்ரா.


"அப்படி அருவாளோட வரும்போது என்னடி பண்ணுவ?" ரேணுகா கேட்க,

"அதுக்கும் ஒரு நாலஞ்சு பாட்டு சேர்த்து வச்சிருக்கேன்.

திருப்பாச்சி அருவாளத்
தீட்டிகிட்டு வாடா வாடா,

நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலு மாசம் தூங்க மாட்டே

அந்த மாதிரி... அதெல்லாம் தனி ஃபோல்டரில் போட்டு போன்ல பதிஞ்சு வச்சிருக்கேன். பாட வாய் வரலேன்னா மொபைலை ஆன் பண்ணி விட்டுட வேண்டியது தான். எப்படியும் இருபது நிமிஷம் பைட் நடக்கும்ல? அதுக்குள்ள நாலு பாட்டு ஓடிராது?" என்று ரேணுவிடம் எதிர்க் கேள்வி கேட்டாள் சுமித்ரா.

"எல்லாத்துக்கும் ரெடியா தான் இருப்ப போல.. ஆமா சுமித்ரா, ஏன் உங்க வீட்ல இப்பவே கம்பு, அரிவாள் எல்லாம் தூக்கிக்கிட்டு அடிக்க வரல?" முந்தைய நாள் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து பார்கவிக்கு எப்போது கும்பல் அடிக்க வருமோ என்ற பயம் இருந்தது. இரவு அப்படி எல்லாம் ஏதோ கனவு வந்ததாகக் கூட மங்கலாக ஞாபகம்.


"அதுவா அங்க நிதி நிலைமை இடம் கொடுக்கலயாம்.. அதனால நிதி திரட்ட மாபெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். அதாவது.. என் தம்பிக்குக் காதுகுத்த போறாங்களாம். அதற்கான பூர்வாங்க வேலைகளில் நிதியமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் ஈடுபட்டிருக்காங்களாம்"

"அது யாருப்பா அந்த அமைச்சர்கள்?"

"எங்க அம்மாவும் அப்பாவும் தான். கஞ்சிக்கே வழியில்லைன்னாலும் கௌரவம் தடுக்கும் இல்ல? அதனாலத் தொண்டர் படையைத் திரட்டி வந்து
வெட்டிடுவாங்க.. இவங்களுக்கு எல்லாம் செயல் தலைவரு எங்களால் 'நாய் மாமா' என்று அன்புடன் அழைக்கப்படும் எங்கள் தாய் மாமா. இவர்களின் அதிரடி நடவடிக்கை தாங்காமல் இளவரசர் தன் தலை மேல் கை வைத்து சோகமாய் இருக்காராம். இம்சை தாங்காமல் என்னை மாதிரி அவரும் வெளிநடப்பு செய்து விடவும் வாய்ப்பு உள்ளதாம். பிற்காலத்தில் பக்கத்துத் தெருவில் உள்ள அவனது ஆளுடன் உடன்போக்கு சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அங்கு இருக்கும் நமது சிறப்பு நிருபர் ஸ்லீப்பர் செல் சின்னமலை இந்தத் தகவல்களை எல்லாம் கூறினார்" செய்தி வாசிப்பது போல் அவள் கூறியதைக் கேட்டு பார்கவி விழுந்து விழுந்து சிரித்தாள்.


"இளவரசன்னா உன் தம்பியா? ஐயோ பாவம்"


"அக்கா வாயில ப்ரஷ்ஷோட சிரிக்காதீங்க. புரையேறப் போகுது. அப்புறம்

என் குத்தமா உன் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல

அப்படின்னு யோசிக்க வேண்டியதாயிடும்" என்று சுமித்ரா சொல்ல,

"சரி சரி இதோ வரேன்" என்று பல் துலக்கி, முகம் கழுவும் வேலையை முடித்து வந்த பார்கவி,

"ஆமா உன் தம்பின்னா வயசு அதிகமா இருக்கும்ல? ஒருவேளை லேட்டாப் பொறந்தானோ?" முகத்தைத் துண்டால் துடைத்த வாறே கேட்டாள்.

"அதெல்லாம் கரெக்டா தான் பிறந்தான். எனக்கு 20, அவனுக்கு 18. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறான். எங்க ஊர்ல இப்படித்தான் செஞ்ச மொய்யைத் திரும்பி வாங்கணும்னா வளர்ந்த பிள்ளைக்குக் காது குத்துவாங்க, மொட்டை போடுவாங்க, என்ன வேணா பண்ணுவாங்க. எங்க வீட்டுல எனக்கு சடங்கு வச்சு இன்னியோட எட்டு வருஷம் ஆகுது.. அதுக்கப்புறம் இந்த எட்டு வருஷத்துல ஊர்க்காரங்களுக்குச் செஞ்ச மொய்ப் பணத்தைப் பூரா திருப்பி வாங்கணும்ல.. அதுதான் இளவரசருக்குக் காதுகுத்து" என்று ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள் சுமித்ரா.

"என்ன, நீ வயசுக்கு வந்து எட்டு வருஷமாச்சா? ஹேப்பி வயசுக்கு வந்த டே!" என்று ரேணுகா நடுவில் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்க,

"வசந்த விழா அப்படின்னு ரஜினிமுருகன் படத்தில் வைப்பாங்களே.. அதே மாதிரியா?"

"அதே மாதிரிதான்..சின்ன கவுண்டர் படத்துல வர்ற மொய் விருந்து மாதிரின்னும் வச்சுக்கலாம்.. எனக்குத் தெரிஞ்சு என் தம்பிக்கு மூணாவது தடவை காது குத்தப் போறாங்க. அடுத்த தடவை குத்துறதுக்குள்ள அவன் கத்தியை எடுத்து எங்க அப்பாவக் குத்தினாலும் குத்திடுவான்"

"எட்டு வருஷத்துல அவ்வளவு மொய்யா செஞ்சிருக்காங்க? அவ்வளவு பெரிய ஊரா உங்க ஊரு?"

"ஊரு சின்ன ஊர்தான். அதனால தானே கொரோனா காலத்திலேயும் இப்படி கூட்டம் கூட்ட முடியுது. ஆனா ஒருத்தங்க ஆயிரம் ரூபாய் செஞ்சா நாம ஆயிரத்தி ஐநூறு எழுதணும்‌. அதான் பெருமை.. அப்படின்னு பெருமைக்கு எருமை மேச்சே எங்களுக்கு சோறு போடாம வளத்தாங்க எங்க அம்மா"

"சோறு போடலையா? அப்புறம் எப்படிடி இப்படிக் குத்துக் கல்லு மாதிரி வளர்ந்து நிக்கிற? உன் வாய்க்கே ரெண்டு பங்கு சோறு வேணுமே?"

"அது தான் அஞ்சு வீட்டுச் சோறு நமக்கு டெய்லி வகையாக கிடைக்குமே?"

"சூப்பரா சொல்லிட்ட! ஆனா ஒன்னும் புரியல"

"எங்க அம்மா அஞ்சு வீட்டில் வேலைபாத்தாங்க.. அதனால பழைய சோறை ஐஸ் பிரியாணின்னு சொல்லி சாப்பிடுவோம். பழங்கறியை பாவ் பாஜி அப்படின்னு சொல்லுவோம். பழைய இட்லியை ஃப்ரைடு இட்லி ஆக்கிடுவோம். இப்படி தினமும் வெரைட்டியா சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இந்த உடம்பு. அதுதான் என் நாக்கும் வெரைட்டியாப் பேசுது"

'வறுமையையும் எவ்வளவு பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறாள் இந்தப் பெண்? இவளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இவளை ஒருவன் விழுந்து விழுந்து லவ் பண்ணுவதில் தப்பே இல்லை' என்று நினைத்துக் கொண்டாள் பார்கவி.

அதற்குள் தன் தொனியையும் குரலையும் மாற்றிய சுமித்ரா, "ஏன் மசமசன்னு நிக்கிறீங்க? வாங்க! அங்கே சாப்பாடு பொட்டலம் குடுக்குறாங்க! வாங்க போவோம்.." என்று அனைவரையும் அழைத்தாள சுமித்ரா.

"சாப்பாடு வந்திருச்சாம்மா" பாட்டி கேட்க,

"ஆமா பாட்டி! இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, எனக்கு ஓசியிலேயே ஒரு வேலையும் பார்க்காம சாப்பாடு போடறாங்க. அரசாங்க விருந்தாளியா என்ஜாய் பண்ண வேண்டாமா? வாங்க போவோம்" என்று அனைவரையும் முடுக்கி விட்டாள் சுமித்ரா. ரேணுகாவும் பார்கவியும் அவளைத் தொடர்ந்து செல்ல, அதற்குள் வரிசையின் அருகே ஓடிச் சென்று விட்டாள் சுமித்ரா. அங்கு இரண்டு சிறுவர்கள் அவளுக்கு இணையாக வரிசைக்கு வந்து சேர,

"யாரு ஃபஸ்ட் வரிசையில நிக்கணும் பார்ப்போமா? மூணு பேரும் ஒண்ணா தானே வந்தோம்? வாங்க வட்டமா நில்லுங்க" என்று அந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து, தானும் அவர்களுடன் வட்டத்தில் நின்று கொண்டாள்.
"ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
டாமு டூமு டொய்யா
ஐத்தலக்கடி மாமலக்கடி
ஐயா பேரு கொய்யா!" என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருவரைக் கையை நீட்டி எண்ணியவள் கடைசியில் 'கொய்யா'வில் வந்து முடிந்த சிறுவனிடம்,
'நீ தான் முதல்ல' என்று கூறி அவனை முன்னால் விட்டாள்.

"ஐயோ! இவளைப் பாருடி, ஏதோ தெரியாத பையன் கிட்ட போயி ஐயா கொய்யானு பேசிக்கிட்டு இருக்கா?" என்று ரேணுகா பதற,

அதற்குள் சுமித்ரா மிச்சமிருந்த ஒரு சிறுவனுடன் வேறு ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டாள்.

"அக் பக் ஜோக்
அஞ்சு ரூபாய் நோட்
பெட்டில வச்சு பூட்
அவனைப் பிடிச்சு மாட்
பாக்க வர ஜனங்களுக்கு
பத்து ரூபா நோட்!" என்று கூறி அவனிடம் நிறுத்தி,

"சரி நீ தான் இரண்டாவது.. நான் மூணாவது, சரியா?" என்று கூறி சிறுவர்கள் இருவரையும் வரிசையில் தனக்கு முன்பாக நிறுத்திக்கொண்டு மூன்றாவதாகத் தான் நின்று கொண்டாள். ஒரு மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருந்த கட்டங்களில் ஒவ்வொன்றிலும் காலை வைத்துத் தாண்டித் தாண்டி அவள் போவதையே பார்த்து சிரித்தனர் ரேணுகாவும் பார்கவியும்.

"வயசுப் பிள்ளைங்க இருக்கிற இட
ம்.. அதான் ஜாலியா இருக்கு. இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்கு நல்லா பொழுது போகும் போல இருக்கு" என்றார் அவர்களது தற்காலிக அறைத் தோழியான அந்தப் பாட்டி.
 
Top