அத்தியாயம்- 8
கடலை வறுப்பதாக அஷோக் கூறியதைக் கேட்டு முதலில் முறைத்தாலும் தூசி துடைப்பதைப் போலத் துடைத்து விட்டு உடனே முகத்தை மாற்றிய தமிழ்ச்செல்வன், "திருப்பூர்ல யார்கிட்ட விசாரிக்கலாம்? ஒரு பையனைப் பத்திக் கேக்கணும். ஒரு மில்லுல சூப்பர்வைசரா இருக்கான். வெங்கடேஷ்னு உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கானே?"
"அவன் தான் ஃபாரின் போயிட்டானே"
"உன் கிளாஸ்மேட் ஒருத்தன், மில் ஓனர் பையன்னு சொல்லுவியே? அவன் பெயர் என்ன?"
"உனக்குத்தான் அவனப் பிடிக்காதே... முதலாளித்துவம், கார்ப்பரேட், ஏழைங்க கண்ணீர்ல வளர்ந்த உடம்பு, அப்படின்னு பேசுவ?"
"எனக்குத் தானே பிடிக்காது, உனக்குப் பிடிக்கும்ல?"
"அப்புறம், காதல் விவகாரத்துல தலையிடக் கூடாது, பொண்ணு- மாப்பிள்ளை பத்தி விசாரிச்சு சொல்ற பொறுப்பை ஏத்துக்கக் கூடாது, அதுல ஏதாவது தப்பா இருந்தா நம்மளை கேப்பாங்க, அப்படிப்பட்ட உன்னோட தீவிரமான கோட்பாடுகள் எல்லாம் என்னாச்சு?"
"அது போன மாசம், இது இந்த மாசம்" கான்டாக்ட் லிஸ்டில் யார் பெயரையோ தேடுபவன் போல தன் ஃபோனில் பெயர்களை மேல்நோக்கித் தள்ளிக் கொண்டே மெல்லிய குரலில் பதில் சொன்னான் தமிழ்ச்செல்வன்.
சில நொடிகள் எதுவும் பேசாத அஷோக், "அந்தப் பொண்ணு ரொம்ப அழகோ?" என்றான் மொட்டையாக.
"எனக்கு எப்படிடா தெரியும்? ஹௌ டூ ஐ நோ? தெரிஞ்ச பொண்ணுக்கு உதவின்னு இன்னொரு தெரிஞ்சவங்க கேட்டாங்க. அந்தப் பொண்ணு அழகான்னு எனக்கு எப்படித் தெரியும்?"
"நான் கேட்டது உனக்குத் தெரிஞ்சவங்களப் பத்தி"
"நான் கேக்குறது திருப்பூர்ல உனக்குத் தெரிஞ்சவங்களப் பத்தி... யாரும் இருந்தா சொல்லித் தொலை"
"நல்லா பேச்ச மாத்துறீங்க பிரதர்... ஒரு பொண்ணுகிட்ட உன் பயோடேட்டா, ரெஸியும் எல்லாம் இப்ப ஃபோன்ல சொல்லிக்கிட்டு இருந்தியே... அந்தப் பொண்ணப் பத்திக் கேக்குறேன்"
"அது பொண்ணு தான்னு உனக்கு எப்படித் தெரியும்?" டேபிளில் அமர்ந்து தாளம் போட்டுக்கொண்டே கேட்டான் தமிழ்ச்செல்வன். அவனுக்கு இந்த விஷயத்தில் அஷோக்கிடம் பதிலுக்கு பதில் பேசுவது பிடித்திருந்தது.
"மேடம் மேடம்னு நூறு தடவை சொன்ன? அப்புறம் பாரு P, P ன்னு பால்கனி சுவத்துல, கைப்பிடில எல்லாம் கிறுக்கி வச்சிருக்கியே, யாரு அது? டிரைவர் நாகராஜ் சொன்ன பொண்ணா?"
"ஜேம்ஸ்பாண்ட்டா நீ! என் செல்லம்!" என்று அஷோக்கின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வந்தான் தமிழ்ச்செல்வன்.
"கேட்ட கேள்விக்கு பதில் வேணும். அந்தப் பொண்ணு ரொம்ப அழகா?"
"தெரியலைடா... முகம் ஞாபகம் இல்லை"
"ஆசை முகம் மறந்து போச்சோ?"
"ஆசையும் இல்ல, தோசையும் இல்ல, இருட்டுல பாத்ததால ஞாபகம் இல்லை. முகத்தை ஞாபகம் வச்சுக்கிற அளவுக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் எனக்குக் கிடையாது. ஆமா தோசை தோசை ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது, கோதுமை மாவு ரெண்டு பாக்கெட் வாங்கி வச்சேன். ஒண்ணைப் பிரிச்சுக் கலக்கி தோசை ஊத்து. நானே எஃப்.பி. ல நம்ம பிளட் டோனர்ஸ் குரூப்ல கேட்டு வைக்கிறேன்" என்றவாறு முகநூலை திறந்து குருதிக் கொடையாளர்கள் பக்கத்தில், 'திருப்பூரில் மில் தொடர்பான பணியில் உள்ள நண்பர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? இருந்தால் இன்பாக்ஸ்க்கு வரவும்' என்று ஒரு மெசேஜ் போட்டு வைத்தான் தமிழ்ச்செல்வன்.
'திருப்பூர்ல ப்ளட் கேம்ப்க்குப் போனப்ப யாரையாவது பாத்தோமா? யார் நம்பராவது இருக்கா?' என்று தேடினான். முகநூலில் திருப்பூர் என்று போட்டுத் தேடலாமா என்று யோசித்தவனுக்குக் கண்ணில் பட்டது பார்கவி சுப்பிரமணியன் என்ற பெயரைத் தாங்கி சிரித்துக் கொண்டிருந்த ஒரு செம்பருத்திப்பூ.
'ரெண்டு தடவை அந்தப் பொண்ணு ஃபோன் பண்ணதுக்கே People you may knowல காட்டிடுச்சே! இந்த மார்க் ஸுகர்பெர்க் செம ஸ்மார்ட் பையன் தான்' என்று நினைத்துக் கொண்டான்.
அந்த செம்பருத்தி புகைப்படத்தை அவன் விரல்கள் சொடுக்குவதை அவன் மூளையால் கட்டுப்படுத்த முடியவில்லை. 'இந்த அஷோக் பய அந்தப் பொண்ணு அழகா அழகான்னு கேட்டு ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டான். அதனால தான் பாக்குறேன்' என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு அந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினான். 'எப்படியும் ப்ரோஃபைலை லாக் பண்ணித் தான் வச்சிருப்பா' என்று நினைத்து அவளது பக்கத்துக்குள் நுழைந்தவன், இனிமையாக அதிர்ந்தான். பார்கவியின் ப்ரோஃபைல் திறந்தே இருந்தது.
'சாஃப்ட்வேர் இன்ஜினியர்'- நம்ம தொழில் தானா? 'காலேஜ் எது?'- அட நல்ல காலேஜ்ல தான் படிச்சிருக்கா… லைக்ஸ் பகுதியில் பிளான்ட்ஸ் அன்ட் இன்செக்ட்ஸ் என்று இருந்தது. பயாலஜி படிச்சிருந்தா இன்னும் நல்லா வந்திருப்பா போல, என்று நினைத்தவன் ஃபோட்டோஸ் பகுதியை அழுத்திப் பார்க்க, செம்பருத்திக்கு முன்பான தேதிகளில் சூரியகாந்தி, சங்குபுஷ்பம், செங்கொன்றை என்று வரிசையாக பூக்களின் புகைப்படங்கள். நடுநடுவே பூச்சிகளின் படங்களும் அவற்றின் அறிவியல் பெயர்களும் அதனை ஒட்டி இருந்தன. 'பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கும். ஆனா இதுல அழகா இருக்கே?' என்று அவற்றைப் பெரிதாக்கி ஸும் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். கூடவே அந்தப் பூச்சியின் பொதுப்பெயர், அது எங்கே காணப்படும் என்ற தகவல்களும் அங்கு இருந்தன. அவற்றை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை அஷோக்கின் குரல் கலைத்தது.
"டேய் நீ பேசுறியா? நான் பேசவாடா?"
"என்னடா?"
"மில் ஓனர் மகன் பேரு கேட்டியே? அவன் பேரு செல்வமுருகன். அவன் நம்பர் உனக்கு அனுப்பிட்டேன். நீ பேசப் போறியா? இல்ல நான் பேசவா?"
"நானே பேசுறேன்" என்றபடி முகநூலைச் சட்டென்று மூடிவிட்டு குறுந்தகவல் பகுதியில் இருந்த செல்வமுருகனின் எண்ணை எடுத்தவாறு பால்கனிக்குச் சென்றான் தமிழ்ச்செல்வன்.
'இன்னைக்கு அந்த சோ- கால்ட் பால்கனி ரெண்டு அடி கீழே இறங்கப் போகுது. அதை ஃபோன் பூத்தா ஆக்கிட்டானே நம்ம நண்பன்... ஹவுஸ் ஓனர் பாத்தா அதுக்கு வேற எக்ஸ்ட்ரா காசு கேக்கப் போறாரு' என்று தனக்குள் கூறியவாறு சட்னி அரைக்கத் தேங்காயைத் தேடினான் அஷோக்.
இங்கே தென்மாவட்டத்தில் க்வாரண்டைன் சென்டரில் சுமித்ராவைப் போட்டுக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
"உனக்காக நான் தெரியாதவங்கக் கிட்ட எல்லாம் கெஞ்சிக்கிட்டு இருக்கேன். உனக்கு என்ன கொழுப்பா? என்னையே கிண்டல் பண்ற? தெரியாத ஆளு, அதுவும் ஒரு யங்ஸ்டர் கிட்ட எப்படி ஹெல்ப் கேக்குறதுன்னு தயங்கித் தயங்கிப் பேசுறேன், பத்திக்கிச்சுங்கற? என்ன பத்திக்கிச்சு? நல்லவேளை தள்ளிப் போயிட்டேன். தமிழ் சார் காதுல விழுந்தா என்ன ஆயிருக்கும்? நல்ல மனுஷன். ரொம்ப ஃபீல் பண்ணிருப்பாரு பாவம்" என்றாள் கோபமாக.
"அந்த அண்ணன் வாத்தியாராக்கா?
"இல்லையே? ஏன் கேக்குற?"
"இல்ல, தமிழ் சார், தமிழ் சார்னு சொன்னீங்களே, அதான்"
சுமித்ரா இப்படி பதில் சொல்லவும் வெட்டவா, குத்தவா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அவளை முறைத்தாள் பார்கவி.
இனிமேலும் பார்கவியைச் சீண்டினால் அவள் வெறி கொண்ட வேங்கையாய் ஆகி விடுவாள் என்று உணர்ந்துகொண்ட ரேணுகா, "சுமி! உன் விளையாட்டு தனத்தால தான் நீ வாழ்க்கையில கஷ்டப்படப் போற. இப்படியா அவளக் கால வாறுவ? அவ எல்லாத்துலயும் செம சின்சியர் தெரியுமா? இப்ப அவ பாட்டு நாளைக்குக் காலையில கிளம்பிட்டான்னா என்ன செய்றது? என்னையும் கூப்பிட எங்க வீட்ல இருந்து ஆள் வந்துரும். என்னால துணிஞ்சு ஒன்னும் செய்ய முடியாது. எனக்கு அதுக்கு தைரியமும் இல்லை, வழியும் இல்லை. என் வளர்ப்பு அப்படி" கண்கள் கலங்கியது ரேணுவுக்கு.
"சாரி பார்கவி அக்கா, சாரி ரேணு! சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். ஆனா நான் மூணு வருஷமா லவ் பண்றேனே, அந்த அனுபவத்துல சொல்றேன், ராபிட் கேட்சிங் டாக் ஃபேஸ் ஸீயிங் டோன் நோவா?
"என்னடி உளறுறே?" ரேணுவின் பாசப் போராட்டத்தில் பார்கவிக்கும் கண்ணீர் வரப் பார்த், சுமித்ராவின் பேச்சு மீண்டும் பார்கவியைக் கடுப்பு நிறைந்த நிலையிலேயே இருக்க வைத்தது.
கண்ணீருடன் இருந்த ரேணுவுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. சுமித்ராவின் தோளில் ஓங்கி ஒரு அடி வைத்தவள், "வாழ்க்கையில முன்னேறணும்னு ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்குது இந்த லூசு..இதப் படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஏதாவது உளறுவா.. எனக்கு ஒன்னும் புரியாது. நீயே கேட்டுக்கோ" என்றவள் தன் ஷாலால் கண்களைத் துடைத்தாள்.
"அது என்னடி ராபிட், டாக்?"
"உங்களுக்கும் இங்கிலீஷ் தெரியாதா? என் ஆளு சூப்பர் ஹீரோ விஸ்வநாதன் கிட்ட இங்கிலீஷ் படிக்கிறீங்களா? ஆன்லைன் கிளாஸ் கூட எடுப்பாரு. அவர்தான் எனக்குக் கோச்சர்"
"அது கோச்சர் இல்லடி கோச். என்ன அது அர்த்தம். சொல்லு முதல்ல"
"அதாவது மொசப் பிடிக்கிற நாய் மூஞ்சியைப் பாத்தாத் தெரியாதா? Rabbit catching dog face seeing don't know va? எப்பூடி? என் இங்கிலீஷ்ல மயங்கி என் ஆளு என்னை அடுத்த லெவல் கிளாசுக்கு பிரமோட் பண்ணிட்டாரு" அவளது மொழிபெயர்ப்பில் பார்கவிக்கு சிரிப்பு வந்தாலும்,
"போடி போ என் மூஞ்சில என்ன தெரியுது? இப்படில்லாம் சொன்னேன்னா, கடுப்பாயிடுவேன் பாத்துக்கோ"
"அது, அரைமணிநேரம் ஃபோன் பேசினியா, அப்பத்தான் தெரிஞ்சது. நேத்துல இருந்து எத்தனை பேருக்கு போன் பண்ணினே? எல்லார்கிட்டயும் எவ்வளவு கட் அன் ரைட்டா அரை நிமிஷம், ஒரு நிமிஷம் பேசின? இப்ப தமிழ் வாத்தியார் கிட்ட மட்டும் அரை மணி நேரம் பேசினா சந்தேகப்படுவாங்களா, மாட்டாங்களா?"
"அவரு தமிழ் வாத்தியார் இல்ல, அவரு பேரு தமிழ்ச்செல்வன். போடி இனிமே நான் ஃபோனே பேசல. இவளுக்காக செஞ்சா, என்னமெல்லாம் சொல்றா இந்தப் பொண்ணு?"என்று முணுமுணுத்து விட்டு ஃபோனைக் கோபமாக அங்கிருந்த பெட்டி மேல் வைத்து விட்டு வெளியே நடந்தாள் பார்கவி.
"ஏன் பாப்பா அந்தப் பொண்ண டென்ஷன் ஆக்குற? நல்ல பொண்ணும்மா அது" என்றார் இவர்களது அறைத் தோழியாக இருந்த பாட்டி.
"அப்ப நான் நல்ல பொண்ணு இல்லையா பாட்டி?"
"நீயும் ரொம்ப நல்ல பொண்ணு தான் மா. எனக்கு உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலைமை வருமா? ஆண்டவன் எனக்குப் பொம்பளப் பிள்ளையக் குடுக்காமப் போயிட்டானே தாயி" என்றார்.
"ஒய் பாட்டி? அந்தக் காலத்துல எல்லாம் ஆம்பளைப் புள்ளை இல்லைன்னு வருத்தப்படுவீங்க, இப்ப பொம்பள புள்ள இல்லங்கிறீங்க.. வாட் எ வித்தியாசம்?" என்று பாட்டியிடம் கேட்டவள், "ஏன் ரேணு? வித்தியாசத்துக்கு இங்கிலீஷ்ல என்ன?" என்று ரேணுகாவிடம் கேட்டாள்.
"எனக்கு ரெண்டு மகன். மெட்ராஸ்ல பெரியவன் இருக்கான்.. எங்க கிராமத்துல சின்னவன். காடாறு மாசம் நாடாறு மாசம் மாதிரி ரெண்டு பேரும் ஆறு மாசத்துக்கு ஒருக்கா என்ன அங்கேயும் இங்கேயுமா அனுப்பிருவாங்க. இப்பயும் சென்னையில உங்க ஆறு மாசம் முடிஞ்சிருச்சின்னு சொல்லி இ- பாஸ் போட்டு அனுப்பிட்டான் பெரியவன். சின்னவன் வீட்டுல இப்ப ஏன் வர்ற, கொரோனாவைக் கொண்டு வரப் போறியான்னு கேக்குறாங்க" என்று பாட்டி கூற,
"அச்சோ! ஸோ ஸேட்! பாட்டி வரிங்களா? நாம ரெண்டு பேரும் தனியாப் போயிடலாம். இட்லி வியாபாரம் ஏதாவது செஞ்சு பொழச்சுக்கலாம்" என்றாள் சுமித்ரா.
இதற்குள் வெளியே போய் ஒரு பெஞ்சில் அமர்ந்த பார்கவிக்கு 'அரை மணி நேரமா போன் பேசினேன்? உண்மையிலேயே என் முகத்தில் அசடு வழிகிறதா என்ன' என்று சந்தேகம் வந்தது. ஃபோனை எடுத்து கால் ரெக்கார்டு பார்க்கலாம், அப்படியே முகத்தையும் ஒரு முறை செல்பி கேமராவில் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து ஃபோனை எடுக்க அறைக்குள் வந்தாள்.
ஃபோனை எடுப்பதற்காக அவள் கையை நீ
ட்ட, பாட்டியை அம்போ என்று விட்டுவிட்டு,
"போன மச்சான் திரும்பி வந்தான்
பூ மணத்தோட…" என்று பாடினாள் சுமித்ரா.