கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 14

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 14

அடுத்த நாள் காலையில், அனைவரும் மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டனர். மித்ரனும், சித்தார்த்தும், மணிகண்டன் சாரின் வீட்டிற்கு பரபரப்போடு புறப்பட, மாளவிகாவும், காருண்யாவும், காருண்யாவின் காதலின் பதிலுக்காக படபடப்போடு காத்திருந்தனர்.

"மித்ரன் சார் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்?" என அந்த அவசரத்திலும் மாளவிகா மித்ரனிடம் கேள்வி கேட்டாள்.

"நீ, கொஞ்ச நேரம் சும்மா இரு மாளவிகா" என மாளவிகாவின் கையை பிடித்து இழுத்து, அவளை அமைதிப்படுத்தி, "ஒன்னும் இல்ல மித்ரன் நாம கிளம்பலாம்" என்று கூறி அனைவரையும் மணிகண்டன் சாரின் வீட்டிற்கு கிளப்பிக் கொண்டு போனாள் காருண்யா.

"ஏன்டி நீயும் கேட்க மாட்டேங்கற, என்னையும் கேட்க விடமாட்டேங்கற?"

"என்னது டியா?நான் உனக்கு நாத்தனார்ங்கறத மறந்துட்டியா?"

"அதுனால தாண்டி, உரிமையோடு திட்டுறேன். மக்கு மட சாம்பிராணி, நீ எல்லாம் மூலைல உக்காந்து அழத்தான் லயிக்கு. ஏன் தான் இப்படி பண்றியோ?" என்று காருண்யாவிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்டாள் மாளவிகா.

இவர்கள் சண்டையிடுவதை பார்த்த சித்தார்த், "என்னம்மா அங்க சத்தம்!" என்று கேட்க, காருண்யா சிரித்துக்கொண்டே, "பேசிக்கிட்டு இருக்கோம் மாமா! சாரி அண்ணா!" என்று கூறி சிரித்தாள். இந்த சிரிப்பில் மாளவிகா மட்டும் கலந்து கொள்ளாது, முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள்.

"ஹாய் மாளு பேபி! நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? நீ ஏன் கோவமா இருக்க?

"ஆமா நீ எதை தான் ஒழுங்கா பண்ணி இருக்க. கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வா! நான் அப்புறம் பேசுறேன்" என்று கூறி சித்தார்த் வாயையும் அடைத்தாள் மாளவிகா.

"ப்ளீஸ்! ப்ளீஸ் மாளவிகா! இந்த உண்மையெல்லாம் சித்தார்த்கிட்ட சொல்லாத, இதையெல்லாம் சொல்லி மித்ரனுக்கு என் மேல பரிதாபப்பட்டு வர காதல் எனக்கு தேவையில்லை. மித்ரனா பாத்து காதலை சொன்னால் சொல்லட்டும், இல்லன்னா நான் அடுத்த மாசமே ஊருக்கு போறேன்" என்று காருண்யா சொல்லி கொண்டிருக்கும்போதே மணிகண்டன் சாரின் வீடு வந்தது.

"இனிமேல் காருண்யாவிடம் பேசி பிரயோஜனமில்லை. நாமே இந்த விஷயத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று முடிவெடுத்த மாளவிகா, அவள் மனதிற்குள் திட்டம் போட்டு அதை உறுதி செய்து கொண்டாள்.

மணிகண்டன் சாரின் வீட்டில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, அவரின் தனியார் விலங்கு மற்றும் பறவை காட்சி சாலையை பார்க்க நான்கு பேரும் சென்றனர். அவர் விலங்குகளுக்கு என்று ஒரு பெரிய நிலப்பரப்பை அமைத்துக் கொடுத்திருந்தார். அந்த இடத்திலேயே, சிறிய மலை போன்ற இடத்தையும், குளம் குட்டைகளையும் செயற்கையாக உருவாக்கியிருந்தார்.
மாளவிகா, காருண்யாவிடம் கோவித்துக்கொண்டு தனியே சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.

சித்தார்த்தும், மணிகண்டன் சாரிடம் தொனதொனவென்று எதையோ பேசிக் கொண்டு வர, காருண்யாவும், மித்ரனும் தனித்து விடப்பட்டனர்.

பலவகை நாட்டு நாய்கள், பூனைகள், நாரைகள், பட்டாம்பூச்சிகள், சிட்டுக்குருவிகள் என்று நாம் தொலைத்த உயிரினங்கள் பலதும் அங்கே இருந்தது. காருண்யாவின் காலிற்கு அருகில், ஒரு நாய்க்குட்டி ஒன்று வந்து அவளை மோர்ந்து பார்த்து, அவள் காலை பலமாக நக்கியது. அவளும் அதை எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவள் அருகில் இருந்து, ரசித்து பார்த்து கொண்டிருந்தான் மித்ரன்.
அப்போது எங்கிருந்தோ வந்த செம்மறி ஆடு ஒன்று, ஓடிவந்து காருண்யாவின் பின்புறம் பலமாய் முட்டியது. அவளும் நிலைதடுமாறி, கீழே உள்ள ஒரு கல்லில் மோதி விழுந்தாள். அவள் நெற்றியில் கல் பலமாக பதம் பார்த்தது ரத்தம் வழிந்தோடியது.

"ஐயோ காருண்யா என்ன ஆச்சு!" என்று பதட்டத்துடன் மித்ரன் ஓடிவர, "ஒன்னும் இல்ல மித்ரன், ஐ அம் அல்ரைட்! இந்தாங்க, இந்த குட்டியை பத்திரமா அதோட அம்மா கிட்ட விட்டுருங்க!" என்று அதுவரை தன் மார்பிற்கு அருகில் அந்த நாய்க்குட்டியை பத்திரமாக வைத்திருந்தவள், அவனிடம் ஒப்படைத்தாள்.

அவனும் அந்த நாய் குட்டியை வாங்கிக் கொண்டு, அவள் ரத்தத்தை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான், அடுத்த சில நொடிகளில் அவன் கீழே மயங்கி சரிந்தான்.

தூரத்திலிருந்து இதை பார்த்த சித்தார்த்தும், மணிகண்டனும் ஓடிவந்தனர். "ஐயோ மித்ரன் உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் கீழே விழுந்து இருக்கீங்க?" என்று புலம்பிய சித்தார்த், அப்பொழுதுதான் காருண்யாவின் தலையையும் பார்த்தான். "ஐயோ உன் தலைல என்ன ஆச்சு? ஏன் இப்படி ரத்தம் கொட்டுது? மணிகண்டன் சார் சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க".

"பதட்டப்படாதீங்க அண்ணா!" என்று நடந்ததை கூறிய காருண்யா, அருகில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, மித்ரன் முகத்தின் மேல் தெளிக்க, அவன் மெதுவாக கண் திறந்தான். இவளும் தன் காயத்தை கழுவி, மொபைலில் உள்ள காமராவில் காயத்தை ஆராய, அது ஆழமாய் இருப்பதை உணர்ந்தாள்.

"சித்தார்த் அண்ணா! எங்கூட அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு வா, நம்ம போய், தையல் போட்டுட்டு வந்துடலாம்".

"என்னம்மா! துணியை தைச்சுட்டு வரலாம்னு சொல்றா மாதிரி, ஈசியா சொல்லிட்ட!" என்று மணிகண்டன் பிரமிப்புடன் கேட்டார்.

"ஏற்கனவே அவசர சிகிச்சை பற்றிய விஷயங்களை, ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் போதே படிச்சிருக்கேன் சார். அதனால ஒண்ணும் பயமில்லை".

"ஆமாம் மித்ரன் உங்களுக்கு என்னாச்சு?" என்று சித்தார்த் வினவ, "இல்ல சித்து, அந்த ஆடு வந்து காருண்யாவை முட்டி, கீழே தள்ளின உடனே அவங்க நெத்திலேர்ந்து ரத்தம் கொட்டுச்சு, எப்போதும் தைரியமா இருக்கும் நான், இன்னிக்கு ரத்தத்தை பார்த்ததும் மயங்கிட்டேன்".

"நல்லா மயங்குனீங்க போங்க, அடிபட்டவங்க நல்லா ஸ்ட்ராங்கா நிக்கிறாங்க, நீங்க இப்படி பயந்துட்டீங்களே, சரி நானும் சித்தார்த்தும் காருண்யாவை அழைச்சிட்டு ஹாஸ்பிடல் போறோம். மாளவிகா உள்ள தான் எங்கேயோ சுத்தி பாத்துட்டு இருக்காங்க, நீங்க அவங்க கூட வெயிட் பண்ணுங்க, நாங்க வந்துடறோம்!" என்று கூறி மணிகண்டன் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார்.

மித்ரன் சோர்ந்து போய், அருகில் உள்ள சிமெண்ட் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தான். அவன் கையில் ஏதோ ஈரம் படுவதை உணர்ந்தவன், அப்போது தான் அவனுடன் அந்த நாய்க்குட்டியும் இருப்பதை உணர்ந்தான்‌. அதன் முதுகில் தடவி கொடுத்து அதை கீழே விடவும், மாளவிகா அங்கே வரவும் சரியாக இருந்தது.

மாளவிகா, "மித்ரன்! எங்க மத்த எல்லாரும்?"

மித்ரன் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

"அச்சோ ஏன் என்ன கூப்பிடல? அப்புறம் நீங்க ஏன் ஹாஸ்பிடல் போகல?"

"எனக்கு போக பயமா இருந்தது மாளவிகா. என்னமோ தெரியல ரொம்ப நாளைக்கு அப்புறம், ரத்தத்தை பாக்கறதாலையோ என்னவோ அவளுக்கு அடிபட்டத பாத்த உடனே மயங்கிட்டேன்‌. அவ கீழே விழுந்து அடிபடும் போது, கூட அந்த நாய்க்குட்டியை எவ்வளவு பத்திரமா வெச்சிருந்தா தெரியுமா? என்னோட அம்மாகிட்ட பாக்காத ஒண்ண இவகிட்ட பாக்குறேன். இவ்வளவு நல்ல பொண்ணா இருக்கற அவளை, எப்படித்தான் அவளோட காதலன் மறந்தானோ தெரியல. அவன் இடத்துல நானா இருந்தா, என்னிக்கோ காருண்யாவை கல்யாணம் பண்ணிருப்பேன்"

"என்ன சொல்றீங்க மித்ரன்?" என்று பாதி புரிந்தும், புரியாததும் ஆக மாளவிகா கேட்டாள்.

"எல்லா விஷயத்தையும், நேத்து நைட்டு சித்தார்த் என்கிட்ட சொல்லிட்டான். சும்மா ஏதேதோ விஷயத்தை பேசிக்கிட்டு இருக்கும்போது, அவன் மனதில் உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வைக்கிறேன்னு, காருண்யாவை பத்தி எல்லாத்தையுமே என்கிட்ட சொல்லிட்டான்".

"சரியான ஓட்டை வாய் மங்குனி" என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள் மாளவிகா. இன்னிக்கு வரட்டும் வெச்சிக்கறேன் என்று அவனுக்காக காத்திருந்தாள். சரியாக அரைமணிநேரம் கழித்து காருண்யாவும் மற்ற இருவரும் வந்தனர்‌.

"சோ சாரி காரு இப்ப எப்படி இருக்க? நான் மட்டும் உன் கூடவே இருந்திருந்தால் உனக்கு எவ்ளோ அடி பட்டு இருக்காது" என்று மாளவிகா அவளை கட்டி பிடித்து கண் கலங்கினாள்.

"ஆமா நீ இருந்திருந்தால் இன்னும் பெருசா அடிபட்டிருக்கும். உன் கூட வாயை பார்த்துகிட்டே, பேசிவிட்டுப் போய் எங்கேயாவது விழுந்திருப்பா" என்று சித்தார்த் கூற அவனை எறிக்கும் பார்வை பார்த்து, "வாடி மவனே தனியா மாட்டும் போது உனக்கு இருக்கு" என்று வாய் அசைத்தாள் மாளவிகா.

"சரி வாங்க எல்லாரும், சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். காருண்யாவிற்கு இரண்டு மணி நேரம் ஓய்வு தேவை என்று, டாக்டர் சொல்லி இருக்கிறார். அதனால வாங்க" என்று மணிகண்டன் மறுபடியும் அவர் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட அழைத்து சென்றார்.

சுண்டைக்காய் வற்றல் குழம்பு, மிளகு ரசம், சுட்ட அப்பளம், உருளை வறுவல், அன்னாசிப்பழ கேசரி என மெனு சிரியதாக இருந்தாலும் வெகு சுவையாக இருந்தது.

"வாவ் மணிகண்டன் சார்! என் டேஸ்ட் உங்களுக்கு எப்படி தெரிந்தது? இது எல்லாமே என் அப்பா கையால் சமைக்கச் சொல்லி, நான் விருந்து சாப்பிடும் இந்திய வகை உணவுகள்".

"இந்த மெனுவோட லிஸ்ட்ட கொடுத்தவர், நம்ம மித்ரன் தான் மா" என்று கூறி சிரித்தார் மணிகண்டன்.

ஒன்றும் பேசாமல் சிரித்து விட்டு, உணவருந்திக் கொண்டிருந்த அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"என்னாச்சும்மா காரம் அதிகமா இருக்கா?" என்று மணிகண்டன் கேட்க, "இல்லைங்க சார் வாய தொறந்து சாப்பிட முடியவில்லை. திறந்தால் நெற்றியில் உள்ள தையல் வலிக்கிறது" என்று பொய் கூறி சமாளித்தாள் காருண்யா.
அவள் கண்களிலிருந்து வந்தக் கண்ணீரின் காரணம், நாம் அனைவரும் அறிந்ததே மித்ரன் வெளிப்புறத்தில் அவளை மறந்தாலும், அவன் ஆழ்மனதில் அவள் இருப்பதற்கான அடையாளம், அவன் ஒவ்வொரு செயலிலும் தெரிந்து கொண்டுதான் இருந்தது. அவனை எப்படி மீண்டும் பழையபடி கொண்டு வருவது, அவனுக்கு என்னவாயிற்று என்று குழப்பத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது.

"சரி காருண்யா, நீங்க மேலேயுள்ள அறையில் ஓய்வெடுங்கள், கொஞ்ச நேரம் தூங்கினால் சரியாயிடும்" என்று கூறி காருவை தனி அறைக்கு அனுப்பி வைத்தார் மணிகண்டன்.

"சரி அப்ப நானும், என்னுடைய காரில் ஒரு ரவுண்ட் போயிட்டு வருகிறேன்!" என்று மித்ரனும் கிளம்பிச் சென்றான்.

"மாளு! நம்ம ரெண்டு பேரும் மித்ரன் சார் கூட, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்" என்று கூறிய சித்தார்த்தை முறைத்து, "இல்ல மித்ரன் சார் நாங்க இரண்டு பேரும் இங்கேயே இருக்கோம்" என்று கூறி சித்தார்த்தை தனியே சிக்க வைத்தாள் மாளவிகா.

"சரி நீங்க ரெண்டு பேரும் டிவி பார்த்துக்கிட்டு இருங்க, எனக்கும் வெளில ஒரு முக்கியமான வேலை இருக்கு, ஏதாவது தேவைன்னா வீட்டில் சமையல்கார அம்மா இருக்காங்க, அவங்க கிட்ட உதவி வேணும்னா கேளுங்க அவங்க செய்வாங்க!" என்று கூறிவிட்டு மணிகண்டன் வெளியே சென்றார்.

"என்ன மாளு! பயங்கர லவ் மூட்ல இருக்க போல, அதான் எல்லாரையும் வெளியே தொரத்திட்டியா?" என்று சித்தார்த் குழைந்தான்.

"ஆமாம் தொரத்த தான் போறேன். ஆனா அவங்கள இல்ல, உன்ன தொரத்தி தொரத்தி அடிக்க போறேன். டேய் அறிவு கெட்ட மங்குனி, எதுக்காக காருண்யாவோட காதல் பத்தியெல்லாம் மித்ரன் கிட்ட சொன்ன?"

"அது ஒரு ஃப்லோல உளறிட்டேன். அவர் காருண்யாவை பத்தி ரொம்ப பெருமையாக பேசிக்கிட்டு இருந்தார், பதிலுக்கு நானும், ஆமாம் சார் நல்ல பொண்ணுங்களுக்கு தான் இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வருது"ன்னு சொல்லி, அவளுடைய காதல் விவகாரத்தை எல்லாம் சொல்லிடேன். அதனால என்ன பிரச்சனை மாளவிகா விடு உண்மைதானே?"

"அடப்பாவி! நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா? முதல்ல உனக்கு காருண்யாவோட காதலன் யாருன்னு தெரியுமா? அவர் கிட்ட தான் போய் நீ உளறி கொட்டி வெச்சிருக்க!"

"என்னது என்ன சொல்ற மாளவிகா?" என சித்தார்த் கேட்க, அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மாளவிகா.

"இடியாப்பச் சிக்கல் இடியாப்பச் சிக்கல்னு கேள்விபட்டிருக்கேன், இது அதைவிட மோசமால்ல இருக்கு. இதை எப்படி தீர்த்து வைக்கிறது ஒரு அண்ணனாகவும், வருங்கால அண்ணியாகவும் நமக்கு நிறைய பொறுப்பு இருக்கு, இதை கூடிய சீக்கிரம் சரி செய்வோம்".
 
Top