கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 15

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 15 சித்தார்த்தும், மாளவிகாவும் திட்டம் தீட்டிக் கொண்டு இருக்க, காருண்யா தன் தூக்கத்திலிருந்து எழுந்து வந்தாள். "சித்தார்த் அண்ணா! நம்ம எல்லாரும் கிளம்பலாமா? எனக்கு இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கு" என்று கூறினாள். "இரும்மா மித்ரன் எங்கயோ வெளில போயிருக்காரு, அவர் வந்தவுடன் கிளம்பலாம்". வெகு நேரம் கழித்து, மித்ரன் அவர்கள் நால்வருக்குமான விமான பயணச்சீட்டோடு வந்தான். "சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க! நமக்கு இன்னும் மூன்று மணி நேரம் கழித்து, பிளைட் இருக்கு. நான் மணிகண்டன் சார் கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன், அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம், அதனால அவரால நம்மளை வழி அனுப்ப வர முடியலையாம். நம்மள அப்புறமா வந்து சென்னையில் சந்திக்கிறேன்னு சொல்லி இருக்காரு, நம்ம புதுசா திறக்க போற ஜூவுக்கும், அவரே சீஃப் கெஸ்ட் இருக்கவும் சம்மதிச்சுட்டார்‌. நம்ம ஏர்போட்டிலோ, இல்ல போகும் வழியிலோ ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டிக்கலாம் கிளம்புங்க" என்று அனைவரையும் துரிதப்படுத்தி ஏர்போர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போனான். அனைவருமே அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களின் ஃப்ளைட் வந்ததும் அனைவரும் அதில் ஏறினார். "என்ன மித்ரன் சார் இந்தவாட்டி ரெண்டு ரெண்டு சீட்டா பிரிஞ்சு இருக்கு, இப்ப என்ன பண்றது?" என்று சித்தார்த் கேட்க, "நம்ப ரெண்டு பேரும் ஒரு சீட்ல உக்காந்துக்கலாம், சித்தார்த். மாளவிகாவும், காருண்யாவும் இன்னொரு சீட்டில் உட்கார்ந்துகட்டும்". "இல்ல இல்ல மித்ரன், இந்த வாட்டி நானும், சித்தார்த்தும் சேர்ந்து உக்காந்துக்கறோம். எங்களுக்குள்ள ஒரு வாய்க்கால் தகராறு இருக்கு, அதை சரி பண்ணனும்" என்று கூறி மாளவிகா, சித்தார்த்தை தனியே இன்னொரு இருக்கைக்கு கூட்டி சென்றாள். மித்ரனும் சிரித்துக் கொண்டே, தன் தோளை குலுக்கிக்கொண்டு, "சரி காருண்யா நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா உட்காரலாம்' என்று காருண்யாவை அவனோடு சேர்ந்து, மற்றொரு இருக்கையில் அமர்த்தி கொண்டான். காருண்யாவின் அருகில் அமர்ந்து பயணிக்க தொடங்கியதும், அவள் உடம்பின் சூடு இவன்மேல் தாக்கியது. "என்ன ஆச்சு காருண்யா?" என்று இவன் அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க, நெருப்பாய் கொதித்தது. "அச்சோ காரு! அடி பட்டதுல ஜுரம் வந்துடுச்சு. ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணை அழைத்து, ஜுரத்திற்கான மாத்திரையை வாங்கி காருண்யாவிற்கு கொடுத்தான். "இந்தா காருண்யா இதை சாப்பிடு, கொஞ்ச நேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடு. நம்ம சென்னை போய் இறங்கறத்துகுள்ள எல்லாம் சரியாயிடும், ஓகே!" என்று கூறிவிட்டு இவனும் கண்ணை மூடிக்கொண்டு, இருக்கையின் பின்புறம் சாய்ந்து கொண்டான். "மாளு நீ பயங்கர கேடி. நீ ப்ளான் பண்ணித்தான மித்ரனையும் காருண்யாவையும் ஒண்ணா உட்கார வெச்ச". "ஆமா! இதை பச்சை பாப்பா கூட கண்டுபிடித்து விடும். இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு" என்று கிண்டல் அடித்தால் மாளவிகா. "ஆமாம் அந்த மித்ரன், காருண்யாவை மறந்த மாதிரி, நானும் உன்னை மறந்துட்டா, நீ என்ன பண்ணுவ?" என்று ஒரு அபத்தமான கேள்வியை, மாளவிகாவை அருகில் வைத்துக்கொண்டே கேட்டு வைத்தான். "நான்லாம் காருண்யா மாதிரி, கண்ண கசக்கிட்டு, அழுதுட்டு இருக்க மாட்டேன். உன்னை கொன்னு போட்டுருவேன், உனக்கு என்னை ஞாபகம் வர வரைக்கும், உன்ன அடிச்சிட்டே இருப்பேன்" என்று கொஞ்சம் டெரராக கூறி, அவன் கையை கிள்ளினாள் மாளவிகா. "அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன், மன்னிச்சிடு. நம்ம ப்ளான் பண்ண படி, ஊருக்குப் போன உடனே, மித்ரனோட அப்பாவை பார்த்து எல்லாத்தையும் பேசுறோம்!" என்று அவர்கள் திட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டு பயணித்தார்கள்‌. மித்ரனின் அருகிலிருந்த காருண்யாகவோ, ஜுர வேகத்தில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தாள். "உன்னையே நினைவாய் நான் வச்சிருக்கேன். ஆனால் நீ என்னை எப்படி மறந்த. உனக்கு என்ன பிராப்ளம்" என்றெல்லாம் உளறிக் கொண்டிருந்தாள். இதெல்லாம் கண்மூடி அமர்ந்திருந்த மித்ரனின் காதில், தெள்ளத்தெளிவாக கேட்டது. "காருண்யா நீ இப்பொழுது உம் என்று ஒரு வார்த்தை சொல்லு, காலம் முழுதும் உன்னையே நினைச்சுட்டு உன் கூடவே நான் இருக்கேன். நீ எனக்கு கிடைக்கணும்னு தான் கடவுள் நினைத்திருப்பார் போல, அதனால தான் உன்னுடைய தகுதிக்கு, சிறிதும் பொருத்தமில்லாத ஒரு காதலனை கொடுத்திருக்கிறார். ஆனால் ஒன்று, நான் என் காதலை உன்னிடம் நேரடியாக சொல்லி, உன்னை காயப்படுத்த விரும்பவில்லை. நீ பழைய காதலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வா, பிறகு என் காதலால் உன்னை ஆராதிக்கிறேன்" என்று அவனுக்கு மட்டும் கேட்குமளவு சன்னமான குரலில் கூறிக் கொண்டிருந்தான். "மித்ரன் ஏதாவது சொன்னீங்களா?" என்று சடாரென்று தூக்கத்திலிருந்து விழித்த காருண்யா, மித்ரனை பார்த்து கேட்டாள். "நான் ஒன்னும் சொல்லலையே காருண்யா! நீங்கதான் தூக்கத்துல ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க, ஆனா எனக்கு எதுவும் புரியல" என்று கூறி சமாளித்தான் மித்ரன். "அய்யோ எங்கேயாவது மித்ரன் கித்ரன்னு உளறிரிப்பேனோ" என்று நினைத்து வாயை மூடி கண்ணையும் மூடி கொண்டாள். காருண்யா அவன் வாழ்வில் வந்த நாளிலிருந்து, மித்ரனுக்கு அந்தக் கொடூரமான கனவு வருவது வெகுவாக குறைந்திருந்ததை, அவன் மனம் நன்றாக அறிந்திருந்தது. அவன் ஆழ்மனது அவனுக்கே காருண்யா உரியவள் என்று, அவளை சந்தித்த நாளில் இருந்து சொல்லி கொண்டிருந்தது. அதை எப்படியாவது அவள் அண்ணன் சித்தார்த்தின் மூலம் ,அவளுக்கு தெரிவிக்கலாம் என்றால், சித்தார்த் அவளுக்கு ஏற்கனவே காதலன் இருப்பதாகவும், அவன் அவளை மறந்ததாகவும், அவனைத் தேடிக்கொண்டு தான் இவள் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள் என்று கூறவும், மித்ரன் அவன் காதலை அவனுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான். நெஞ்சம் நிறைய காதலை ஒருவர் மேல் ஒருவர், பூட்டி வைத்துக் கொண்டு அருகருகில் அமர்ந்திருப்பது தான் கடவுளின் விளையாட்டோ? பல நேரங்களில் காதலுக்கு எதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான். அதேபோல் சில பல சந்தர்ப்ப சூழ்நிலைகள், இருவரையும் தற்காலிகமாகப் பிரித்து வைத்திருக்கிறது. பழைய காதலை மறந்து, அவள் புதிதாய் மாறி வருவதற்காக மித்ரனும், பழைய காதலை நினைத்து, அவன் பழைய மித்ரனாய் மாறி வர காருண்யாவும் காத்திருந்தனர். அனைவரும் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, சென்னையை வந்தடைந்தனர். மித்ரன் அவன் வீட்டிற்கும், மாளவிகா அவள் வீட்டிற்கும் செல்ல, சித்தார்த்தும், காருண்யாவும் ஒன்றாக கிளம்பி சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றனர். "ஐயோ காருண்யா! உனக்கு என்ன ஆச்சு? உன் தலையில எப்படி அடிப்பட்டது" என்று வாசலில் நின்று கொண்டிருந்த தேவயானி, காருண்யாவை பார்த்து பதறினாள். "அது ஒன்னும் இல்ல ஆன்ட்டி! ஜூவை பார்க்க போன போது, தெரியாம கீழே விழுந்ததில் அடிபட்டுடுச்சு, இப்ப பரவாயில்லை. சரியா போச்சு!" என்றாள் காருண்யா. தேவயானியின் பின்னாலேயே, குமாரனும் நின்று கொண்டிருந்ததால், தேவயானியை ஆன்ட்டி என்று சொல்லி அழைத்தாள் காருண்யா. "என்னம்மா ஆன்ட்டின்னு கூப்பிட்டு கிட்டு, அம்மா இல்லன்னா, பெரியம்மா, சின்னம்மான்னு உனக்கு எது பிடிச்சிருக்கோ அப்படி கூப்பிடு, நீயும் எங்களுக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் மா" என்று குமரன் சூசகமாக கூறினார். "சரிங்க அங்கிள், சாரி பெரியப்பா!" என்று கூறினாள் காருண்யா. இவள் பெரியப்பா என்று அழைத்ததும், அவர் உள்ளூர மகிழ்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், "சரிம்மா போய் ரெஸ்ட் எடு" என்று கூறிவிட்டு, "தேவி, புள்ளைக்கு கஞ்சி வெச்சு குடு, குடிச்சிட்டு தூங்கட்டும். முகமே சரியில்ல, இங்க வரும் போது புத்தம் புது பூ மாதிரி வந்தா, ஆனா இப்ப பாரு வாடி போயிருக்கா, அவங்க அப்பா அம்மாக்கு யார் பதில் சொல்றது, சீக்கிரம் அவளை தேத்தற வழியப்பாரு" என்று தேவயானிக்கு கட்டளை இட்டு விட்டு சென்றார். "டேய் அண்ணா! பெரியப்பா என்னை யாருன்னு கண்டுபிடிச்சுட்டார்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசுறாரு" என்று சித்தார்த்தின் காது கடித்தாள் காருண்யா. "அதெல்லாம் ஒண்ணும் கிடையாது, அவருக்கு தெரிஞ்சிருந்தா இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பார்". "சித்து அவர் எனக்கு ஃபேஸ்புக் ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கார் டா. எங்கப்பாவோட சேர்ந்து எடுத்த எல்லா போட்டோவும் அதுல இருக்கு, நிச்சயம் கண்டுபிடிச்சுருப்பார்". "அப்படிங்கற? சரி விடு அதான் கோவப்படலல்ல, உனக்கு வேற தன்னோட பொண்ணுன்னு அங்கீகாரம் கொடுத்திருக்கார். ஜாலி தான் போ". "ஆமாம் டா அண்ணா! என்னால என் காதலன் கூட சேர முடியலைன்னா கூட, என் அப்பாவை அவரோட அண்ணனோட சேர்த்து வெச்ச பெருமையே போதும்!" என்று அவள் மகிழ்ச்சியாக கூறினாலும், அவள் கண்கள் கலங்கி இருந்ததை, சித்தார்த் கவனிக்க தவறவில்லை. அங்கே வீட்டிற்கு சென்ற மித்ரன், நேராக தன் தந்தையை சந்தித்தான். "வாப்பா பெங்களூர் ப்ரோக்ராமெல்லாம் எப்படி இருந்தது. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?" "எல்லாம் ஓகே பா! நம்ம எடத்தை சுத்தம் பண்ண சொல்லிட்டேன், இன்னும் ரெண்டு மாசத்துல ஜூவிற்கு தேவையான கட்டிடங்கள் அனைத்தும் வந்துடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலங்குகளை சேர்த்துக்க வேண்டியது தான்". "சூப்பர் பா! இந்த வேலை நிச்சயம் நல்லா வரும்" என்றார் சுந்தரம். "அப்புறம் பா நான் மனசுல ஒரு விஷயம் நினைச்சிருக்கேன், அது நடக்கணும்னு எனக்காக வேண்டிக்கோங்க!" "என்ன வேண்டுதல்னு சொன்னா தானே மித்ரன் தெரியும்?". "ஒன்னும் இல்லப்பா, என் மனசுக்கு புடிச்ச ஒரு பொண்ணு பாத்து இருக்கேன். அவ கிட்ட இன்னும் என் மனசுல உள்ளதை சொல்லல. அதுக்கான காலமும் நேரமும் சீக்கிரமா வரணும் தான் உங்களை வேண்டிக்க சொன்னேன்". "யாருப்பா என் மருமக?" "எனக்கே அது உறுதியாக தெரியாத போது, எப்படிப்பா உங்ககிட்ட சொல்ல முடியும்? கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், நானே அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்" என்று காருண்யாவை, மனதில் வைத்துக் கொண்டு சொன்னான் மித்ரன். "சரிப்பா நீ நல்லா இருந்தா போதும். நீ சந்தோஷமா எந்த குறையும் இல்லாமல் இருந்தாலே, எனக்கும் உங்க அம்மாவுக்கும் போதும் பா" என்று கூறிவிட்டு ருக்மணியின் புகைப்படத்தின் முன் நின்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது ருக்மணியின் படத்திலிருந்து, ஆசிர்வதிப்பது போல் ஒரு ஒற்றை மல்லிகைப் பூ வந்து கீழே விழுந்தது. "அடடா ருக்மணி நீயும் உன் சம்மதத்த சொல்லிட்டியா? நிச்சயமா நம்ம பையனுக்கு நீ நல்லதுதான் செய்வாய், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு" என்று சொல்லிவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு மனம் குளிர்ந்தார் சுந்தரம். அடுத்த நாள் காலையில் பேரிடி ஒன்று விழப் போவது தெரியாமல் நிம்மதியாக உறங்கினார் சுந்தரம்
 
Top