கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 19

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 19

சித்தார்த், மித்ரன் மற்றும் காருண்யா, தாத்தா பாட்டியுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சித்தார்த், "தாத்தா உங்க வாழ்க்கையிலேயே ரொம்ப த்ரில்லிங்கான அனுபவம் எது?" என்ற கேள்வியை கேட்டான்.

"எங்க கல்யாணமே த்ரில்லிங் தானே!" என்று சிரித்து கொண்டே கூறினார் தாத்தா.

"இன்ட்ரெஸ்டிங் மேல சொல்லுங்க தாத்தா. பாட்டியோட அம்மா அப்பா கிட்ட இருந்து, சண்டை போட்டு அவங்களை தூக்கிட்டு வந்தீங்களா" என்றான் மித்ரன்.

"ஹா ஹா! நல்ல காமெடி போ. அவங்க அம்மா அப்பா கிட்ட இருந்து தூக்கிட்டு வரல, அவங்க புருஷன் கிட்ட இருந்து தூக்கிட்டு வந்தேன்!"

"என்ன சொல்றீங்க தாத்தா ஒண்ணுமே புரியல?" என்று மண்டையை பிய்த்து கொண்டான் சித்தார்த்.

"அட உண்மைதான் பா, உங்க பாட்டிக்கு சின்ன வயசுலயே, ஒரு வயசான கிழவனுக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க. அந்த கிழவன் என் செல்லத்த, அடி உதையோடு சேர்த்து, சந்தேக டார்ச்சரும் பண்ணி எடுத்துட்டான். நானும் அந்த கிழவனோட நிலத்துல தான் கூலி வேலை பார்த்தேன். பதிமூன்று வயது கூட நிரம்பாத அந்த சின்ன குழந்தை செல்லம்மாள், அந்த கிழவன் எட்டி உதைத்ததால் கரு கலைந்து, தனியே நின்று அழுவதை பார்க்க தாங்க முடியாமல், டக்குன்னு அவளை தூக்கிட்டு வந்து வேற ஊருக்கு போய்ட்டேன். அவளை நான் குழந்தையாக மட்டுமே பார்க்க, அவளோ என்னை கடவுளாக பார்த்தா, அதுக்கப்புறம் சில வருடங்கள் கழித்து, இருவரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டோம். அந்த கிழவனும் செல்லம்மாளை தேடி பார்த்து, அவள் கிடைக்காததால் வேறொரு சின்ன பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டார்".

சித்தார்த், "இது தப்பில்லையா?"

"தப்பு தான் தம்பி அந்த வயசுக்கு மேல அவரு ஒரு சின்ன பெண்ணை கல்யாணம் பண்ணது தப்பு தான்".

"நான் அத கேக்கல தாத்தா, நீங்க இப்படி இன்னொருத்தரோட மனைவியை, தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி இருக்கீங்களே, அது தப்பு இல்லையா?"

"இதுல என்ன தப்பு இருக்கு? அவ அந்த கிழவனோட வாழ்ந்த வரைக்கும், உண்மையா நேர்மையா தான் இருந்தா, அவருக்கான எல்லா பணிவிடையும் செஞ்சுக்கிட்டு தான் இருந்தா, ஆனா தினமும் அந்த கிழவன் இவளை போட்டு அடிப்பதும், சந்தேகப்படுவதுமாய் வாழ்க்கையே நரகமாயிடுச்சு. அதனால்தான் நான் இவளை காப்பாற்றினேன். உடல் மட்டுமே சேர்ந்திருப்பது திருமணம் இல்ல, இரண்டு மனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடைப்பதே திருமணம். அப்படி இருவரும், ஒருக்கொருவர் உறுதுணையாய் இருந்தால் போதும், என்பதே என் கருத்து" என்றார் தாத்தா ஆனந்தன்.

பழைய நினைவுகளின் தாக்கமா, அல்லது புதிய நினைவுகளை நினைத்து மகிழ்ச்சியா எதுவென்று தெரியாத ஒன்றால், பாட்டி செல்லம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி கொண்டிருந்தது.

"வாரே வாவ்! நீங்க உண்மையிலேயே செம்ம தாத்தா. அந்த காலத்துலேயே இவ்வளவு வீரமா இருந்திருக்கீங்க? உங்க கிட்டயிருந்து இன்னிக்கு நான் பெரிய பாடம் கத்துக்கிட்டேன். ரொம்ப தாங்க்ஸ் தாத்தா!" என்று நெகிழ்ச்சியுடன் கூறினான் மித்ரன்.

"சரி சரி நேரமாச்சு! எல்லாரும் அவங்க மூட்டையை கட்டிட்டு போய் தூங்குங்க!" என்று சொல்லிவிட்டு, சித்தார்த் அனைவரையும் உறங்கச் சொல்லி கிளப்பி விட்டான். ஏனென்றால், அவனுடைய அலைபேசிக்கு தொடர்ந்து மாளவிகாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்துகொண்டிருந்தது, "கால் பண்ணுடா மங்குனி!" என்று பல தடவை அனுப்பியிருந்தாள். அவன் சீக்கிரம் அவளுக்கு கால் பண்ணவில்லை என்றால், தொலைந்தான் என்று தெரிந்ததால், அனைவரையும் உறங்கச் சொன்னான்.

காருண்யா பாட்டியுடன் முற்றத்திலேயே உறங்க ஆரம்பிக்க, ஆண்கள் மூவரும் வாசலில் கயிற்று கட்டில் போட்டு உறங்க சென்றனர்.

சித்தார்த் மாளவிகாவுடன் அலைபேசியில் கதைத்து கொண்டிருக்க, மித்ரன் காருண்யாவிற்கு, ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பிவிட்டு பதட்டத்துடன் காத்திருந்தான். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அவனே மறுபடி குறுஞ்செய்தி அனுப்பினான்.

நினைக்க மறந்தவனை
நிதமும் நினைத்து
நித்திரை தொலைப்பவளே
நீயே நினைவாய் நெஞ்சத்தில்
நிறுத்தி நான் காத்திருக்கிறேன்
நிதானமாக யோசித்து
நியாமான பதிலை கூறு - இப்படிக்கு
நின்னையே நினைத்து கொண்டிருக்கும்
மித்ரன்

என்று கவிதை கிறுக்கி அனுப்பி இருந்தான் மித்ரன்.

இதை பலமுறை படித்த பிறகே, ஓரளவு புரிந்து கொண்டாள் காருண்யா. முதல் முறையாக மித்ரனுக்கு பதில் அனுப்ப அவள் இதயம் தூண்டியது. "ஐ நீட் சம் டைம்!" என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்பினாள் காருண்யா.

இந்த ஒரு பதிலே, மித்ரனுக்கு போதுமானதாக இருந்தது.

அன்றிரவு நெடு நாட்களுக்கு பிறகு, அதே பச்சை நிற பூனை கண்கள் மித்ரனின் கனவில் வந்தது. ஆனால் இம்முறை அந்த கண்கள் சிரிப்பது போல் தோன்றியது.
அன்றிரவே மித்ரனை பற்றிய அனைத்து விஷயங்களும் சித்தார்த்துக்கு மாளவிகாவின் மூலமாக தெரிந்தது.

"எப்படா நேரம் கிடைக்கும் காருண்யாவிடம் இதை சொல்வோம்" என்று காத்திருந்தான் சித்தார்த்.

இதனால் அடுத்த நாள் காலையிலேயே, அனைவரையும் துரிதப்படுத்தி தாத்தாவின் வீட்டிலிருந்து கிளப்பினான். விடை பெறும் நேரம் மித்ரன் போய், தாத்தா ஆனந்தனை இறுக கட்டிக் கொண்டான். தாத்தா சித்தார்த்தோடு சேர்த்து, இனிமேல் நானும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இங்க வந்துடறேன்" என்று கூறினான். அந்த வார்த்தையில் மகிழ்ச்சியையும் மீறிய ஒரு நெகிழ்ச்சி இருந்தது.

மித்ரன் அவன் வீட்டிற்கு திரும்ப, சித்தார்த்தும், காருண்யாவும் சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றனர்.

"காருண்யா உனக்கு ஒரு சூப்பரான விஷயம் சொல்லப் போறேன் நீ கேட்டா ஆச்சரியப்படுவ!"

"என்ன? மித்ரன் என்ன லவ் பண்றான்னு சொல்ல போற அதானே!".

"அட ஆமாம் காருண்யா உனக்கு எப்படி தெரியும்?"

"அதை அவரே என்கிட்ட சொல்லிட்டாரு" என்று கூறினாள் காருண்யா.

"சரி விடு, இது உனக்கு தெரிஞ்ச விஷயம்தான். உனக்கு தெரியாத இன்னொரு ஒரு பெரிய ரகசியத்தை சொல்ல போறேன். ஆனா நீ எந்த காரணத்தைக் கொண்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு".

"என்ன பெரிய பில்டப்பெல்லாம் குடுக்குற? சரி இந்தா சத்தியம்" என அவன் கையை இழுத்து சத்தியம் செய்து விட்டு, விஷயத்தை சொல்லச் சொன்னாள்‌.

சித்தார்த்தும், மித்ரனை பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறினான். அதை கேட்ட காருண்யாவிடம் எந்த ஒரு சலனமும் இருக்கவில்லை.

"காருண்யா! காருண்யா!" என்று சித்தார்த் உலுக்க அப்பொழுது தான் அவள் சுயநினைவிற்கு வந்தாள்.

"கவின், மித்ரனோட பயங்கர க்ளோஸ் ஃப்ரெண்ட். கண்ணு முன்னாடியே நம்ம ஃப்ரெண்டு நம்மளால இறந்தா, எல்லாருமே மித்ரன் மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவோம். சே! பாவம் கவின், அதைவிட பாவம் மித்ரன். என்ன சொல்றதுன்னு புரியல, பேசாம நான் ஆஸ்திரேலியாவிற்கே போயிடுறேன். நான் இங்க இருந்தா, மித்ரனுக்கு பழைய ஞாபகங்கள் வந்து, இன்னும் மன உளைச்சல் அதிகமாகும்".

"அட லூசு! லூசுத்தனமா யோசிக்காத. நீ போயிட்டா மட்டும், மித்ரனுக்கு உன் ஞாபகம் இருக்காதா? உன்ன தொலைச்ச துக்கத்துல, பழைய ஞாபகம் வராதுன்னு என்ன நிச்சயம்? எல்லாத்துக்கும் இந்த இடத்தை விட்டு ஓடறது தீர்வாகாது. இங்கேயே இருந்து அந்த பிரச்சனையை தீர்க்க வழியை பாரு. உனக்காக, நானும் மாளவிகாவும் இருக்கோம். அவசரப்பட்டு எதுவும் முடிவெடுக்காமல், அமைதியாய் இரு" என்று கண்டிப்புடன் கூறினான் சித்தார்த்.

அடுத்த இரண்டு நாட்கள், எப்போதும் போல் மிகவும் சோர்வாக சென்றது. மூன்றாவது நாள் காலையில் காருண்யா சோம்பல் முறித்து கொண்டே எழுந்து வரும்போது, அவளின் அப்பா தயாளனும், அம்மா சூசனும் சோஃபாவில் அமர்ந்திருந்தனர்.

முதலில் கனவு என்று நினைத்து கொண்டு முழித்தவள், பிறகு கண்ணை கசக்கி கொண்டு பார்க்க, உண்மையிலேயே அவர்கள் இருப்பதை உணர்ந்தாள்.

உடனே ஓடிச்சென்று அவள் தாயை கட்டிப்பிடித்து கதறி அழுதாள்.

"என்னம்மா, இத்தனை நாள் பெரியம்மா, பெரியப்பா கூடவே இருந்துட்டு எங்கள மறந்துட்ட, இப்ப மட்டும் எதுக்கு அழற?" என்று கிண்டலடித்தார் தயாளன்.

"ஐயையோ பெரியப்பா!" என பின்னால் இருந்த குமரனை காருண்யாவை பார்க்க, "அம்மாடி! நீ வந்த அன்னிக்கே உன்ன நான் கண்டுபிடிச்சுட்டேன், நீ தான் என் தம்பி மகள்னு, சரி சின்னஞ்சிறுசுங்க நம்மள ஏமாதிட்டதா நினைச்சு சந்தோஷத்துல இருக்குங்க, அத அனுபவிச்சுட்டு போகட்டும் விட்டுட்டேன். நான் செய்த தவறுக்கு, அன்னிக்கே உங்க அப்பாகிட்ட போன் பண்ணி மன்னிப்பு கேட்டுட்டேன். ஏதோ இளவயசுல இருந்த வெறில அப்படி பண்ணிட்டேன். ஆனால் சித்தார்த்தை பார்த்து தான் கத்துக்கிட்டேன், அன்புன்னா என்னன்னு. அவனுக்கும் இள ரத்தம் தான், ஆனா எங்கிருந்தோ வந்த உன்னை, அவன் தங்கச்சியா நினைச்சு உள்ளங்கையில் தாங்குனானே, அதுவே எனக்கு சாட்டையடிமா. என்னை மன்னிச்சிடு தயாளா, நீயும் தான் மா சூசன்" என்று கண்ணீர் மல்க கூறினார் குமரன்.

"என்ன அண்ணே! நீங்க பெரியவங்க, மன்னிப்புல்லாம் பெரிய வார்த்தை, நான் தான், உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்" என காலில் விழப்போன தயாளனை, தாவி பிடித்து அணைத்தார் குமரன்.

அண்ணனும், தம்பியும் பல காலங்களுக்கு பிறகு கட்டி கொண்டு நிற்க, அண்ணன் மனைவியும், தம்பி மனைவியும் கை கோர்த்து கொண்டு நிற்க, அதை கண்ட அண்ணனும் தங்கையும், "ஹூர்ரே!" என கத்தி ஹை ஃபை கொடுத்து கொண்டார்கள்.

"நான் வந்த வேலை முடிஞ்சது அண்ணா, இனிமே நான் ஹாப்பியா ஆஸ்திரேலியா போவேன்" என்றாள் காருண்யா.

"அது எப்படி மா அவ்ளோ ஈஸியா போக விட்டுடுவோம். நீ பொய் சொல்லி ஏமாத்தி, இங்க தங்குனல்ல, அதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டாம்" என்று சிரித்து கொண்டே கூறினார் தேவயானி.

"போங்க பெரியம்மா! நீங்க எனக்கு செல்லம் தான் கொடுப்பீங்க பனிஷ்மென்ட் எல்லாம் கொடுக்க மாட்டீங்க"

"இல்லடா, நாங்க ரெண்டு பேரும் எதுக்காக ஆஸ்திரேலியால இருந்து இங்க வந்து இருக்கோம். உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்க தான். பனிஷ்மென்ட்னா, கொஞ்ச நஞ்ச பனிஷ்மென்ட் இல்லை, ஆயுள் தண்டனை கொடுக்கப் போறோம். அதுவும் உனக்கு பிடிச்ச ஜெயில்ல" என்று தயாளனும் வழி மொழிந்தார்.

"கொஞ்சம் புரியிற மாதிரி, யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்! ஏன் இப்படி ஒரே அடியாக குழப்பறீங்க?"

"நான் சொல்றேன் காருண்யா. உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்வதற்காக தான், அம்மா அப்பா, சித்தி சித்தப்பா எல்லாம் தயாரா இருக்காங்க. அதுவும் உனக்கு பிடிச்ச மித்ரனோடு, யுவமித்ரனோடு" என்று கூறி நிறுத்திவிட்டு காருண்யா முகத்தையே ஆராய்ந்தான் சித்தார்த்.

அவள் முகத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரு சேர குடி கொண்டிருப்பதை அறிந்து கொண்டு, அவள் கையை பிடித்து, நான் இருக்கிறேன் என்று அழுத்தினான் சித்தார்த்.

"என்ன கல்யாண பொண்ணு, கல்யாணத்துக்கு சம்மதமா?" என்று பெரியப்பா குமரன் கேட்க, மனதில் இத்தனை நாள் பூட்டி வைத்திருந்த அழுகை, வெளி வந்து விடுமோ என்று பயந்து, உள்ளே ஓடிவிட்டாள் காருண்யா.

"ஏம்பா அவளை வெட்கப்பட வைக்கறீங்க? அவளோட வெட்கமே அவளுடைய சம்மதத்தை சொல்லிடுச்சு. நீங்க போய் கல்யாண வேலை எல்லாம் பாருங்க, மத்தத நான் பாத்துக்கறேன்" என்றான் சித்தார்த்.

உள்ளறையில், காருண்யா தேடிச் சென்ற சித்தார்த், அவள் கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுவதைப் பார்த்தான்.

"ஏய் காரு எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க? மனசுக்கு பிடிச்சவரை தானே கல்யாணம் பண்ணிக்கப் போற? அதுவுமில்லாம அவனும் உன்னை விரும்புகிறான்".

"போடா அண்ணா! உனக்கு எப்படி புரியும் என்னோட கஷ்டம். அவனுக்கு பழசு மறுபடியும் ஞாபகம் வர கூடாதுன்னு, டாக்டர் சொல்லிருக்கார், நான் எங்க கல்யாணத்துக்கு அப்புறம், ஏதாவது உளறி அவனுக்கு பழசு ஞாபகம் வந்துருச்சுன்னா என்ன பண்றது? அதனால அவனுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா, என்னால தாங்க முடியாது!".

"அதெல்லாம் யோசிக்காத, நீ பேசாம கல்யாணத்துக்கு மட்டும் தலையாட்டு, அது போதும். மித்ரனுக்கு உன் மேல எவ்வளவு காதல் இருந்தால், உன் நினைவுகள் எல்லாத்தையும் அழிச்ச பிறகும், மறுபடியும் உன்னை பார்த்து உன் மேல் அதே காரணத்துக்காக காதல் கொண்டிருப்பான். அந்தக் காதலுக்காக, நீ சில பல உண்மைகளை மறைத்து தான் ஆகவேண்டும். உன்னோட டென்ஷன் எல்லாம் கொஞ்சம் தூக்கி போட்டுட்டு, கல்யாண‌ பொண்ணா லட்சணமா சந்தோஷமா இரு" என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றான் சித்தார்த்.

ஒரு கண்ணில் கல்யாண கனவும், மறு கண்ணில் பீதியுமாக காத்திருந்தாள் காருண்யா.
 
Top