கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 20

Poornima Karthic

Moderator
Staff member

நீயே நினைவாய் - 20

காருண்யாவின், அம்மா அப்பா, பெரியம்மா பெரியப்பா நால்வரும் மித்ரனின் அப்பாவான சுந்தரத்தை பார்த்து, அனைத்து விஷயங்களையும் பேசினர். மித்ரன் நிலைமை பற்றி, அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி தற்போதைக்கு அவனால் ஆஸ்திரேலியா வரமுடியாது என்றும் சுந்தரம் தெரிவித்தார்.

"சரி இருக்கட்டும் சம்மந்தி, மித்ரனுக்கு இங்கேயே ஒரு மாமியார் வீடு இருக்கும்போது, எதுக்காக இப்ப ஆஸ்திரேலியா போகணும்? இந்த ஜூ வேலை எல்லாம் நல்லபடியா முடியட்டும், அவரும் காருண்யாவும் நல்லா ஒண்ணு சேர்ந்து வாழட்டும். அவர்களுக்கு ஒன்னு ரெண்டு குழந்தைங்க பொறந்த அப்புறம், வேணும்னா ஆஸ்திரேலியா போயிக்கலாம். அதுக்கு வரைக்கும் தயாளனும், சூசனும் அடிக்கடி வந்து காருண்யாவை பாத்துட்டு போவாங்க" என்று கூறி, அந்தப் பேச்சை சுமூகமாக முடித்து வைத்தார் குமரன்.

காருண்யா திருமணத்திற்கு சம்மதித்ததே, மித்ரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணத்திற்கு முன்னால் அவளிடம் பேசினால், எங்கே மனசு மாறி விடுவாளோ என்று பயந்து, திருமணத்திற்கு முன்னால் பேசுவதை தவிர்த்தான்.

மறக்காமல் தன் தாயின் புகைப்படத்தை, தாயாய் பாவித்து அன்றன்றைக்கு நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஒப்பித்தான் மித்ரன். "ரொம்ப தேங்க்ஸ் மா! எனக்கு தெரியும் நீங்க தான் எனக்கு பின்னால் இருந்து, நல்ல விஷயங்களை செய்கிறீர்கள். என்னிக்கு இருந்தாலும், உங்களுடைய அன்பும் ஆசிகளும், எனக்கு எப்போதும் தேவை. நீங்க என்கூடவே இருங்க" என்று கூறி அந்த புகைப்படத்தை அணைத்துக்கொண்டான் மித்ரன்.
கல்யாண ஏற்பாடுகள் எல்லாம், தடபுடல் என்று நடக்க, காருண்யா மட்டும் மனதில் பயத்தை கட்டிக் கொண்டிருந்தாள்.
"காருண்யா! நீ செம கேடி டி, முகத்தை அப்பாவியாக வச்சுகிட்டு, எப்படியோ உன் காதல்லயும் ஜெயிச்சுட்டே, கல்யாணத்துக்கும் ரெடி ஆயிட்ட. எப்படி உன் காதலுக்கு நானும் சித்தார்த் ஹெல்ப் பண்ணினோமோ அதே மாதிரி உங்க பெரியப்பா கிட்ட பேசி, எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு பண்ணு" என்று கிண்டலடிக்கும் சாக்கில், தன் கோரிக்கையை வைத்தாள் மாளவிகா.

"அதுக்கு என்ன செஞ்சிட்டா போச்சு! எங்களுக்காக வெச்சிருக்கிற முகூர்தத்துலயே, நீயும் சித்தார்த்துக்கு கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் வேணா வெயிட் பண்றேன். எனக்கு ஆக்சுவலி கல்யாணம் பண்ணிக்க ரொம்ப பயமா இருக்கு. எத்தனை நாள்தான், மித்ரன் ஆஸ்திரேலியாவுக்கு வரத தள்ளி வைக்கிறது. இல்ல நானும் எத்தனை நாள் தான் ஆஸ்திரேலியா போகாம இருக்கிறது. என் முழு மனசுல நிச்சயம் மித்ரனுக்கு எல்லாம் தெரிய வந்துடும்னு தோணுது".

"நீ எதுக்கு ஆஸ்திரேலியா போகணும்? கல்யாணம் ஆயிடுச்சுன்னா, மாப்பிள வீட்ல தானே பொண்ணு இருக்கணும். அப்படி பார்த்தா, நீ சென்னையின் மருமகள் தானே. அதுவுமில்லாம உங்க பெரியப்பா வீடு இங்கே தான் இருக்கு, போதா குறைக்கு அண்ணனும் அண்ணியும் இருக்கோம். அப்புறம் என்ன உனக்கு கவலை, அதையும் மீறி மித்ரனுக்கு பழசு நினைவிற்கு வந்துச்சுன்னா, அதுவும் நல்லதுக்காக தான் இருக்கும். இத்தனை நாள் இவ்வளவு பிரச்சினைகளிலும், உனக்கு நல்லது மட்டும் தானே நடந்திருக்கு, அதனால கவலைப்படாம கல்யாணத்தை பத்தி மட்டும் கனவு காணு" என்று அழகாக அறிவுரை சொன்னாள் மாளவிகா.

அங்கே மித்திரனின் மீட்டில், மித்ரன் அவன் தந்தையிடம், "அப்பா இப்பவே கல்யாணத்துக்கு என்ன அவசரம். ஜூ திறந்ததுக்கு அப்புறம், கல்யாணத்த வச்சிக்கலாமே" என்று கேட்டான்.

"இல்லப்பா அது வேற, இது வேற. பெண் வீட்டுக்காரங்க வேற அங்கிருந்து கிளம்பி வந்துட்டாங்க, முதல்ல கல்யாணத்தை முடிப்போம் அதுக்கப்புறம் ஜூ திறப்பு விழாவை கோலாகலமான செய்யலாம்" என்றார் மித்ரன் அப்பா சுந்தரம்.

"ருக்மணி! எப்படியாவது எந்த பிரச்சனையும் வராமல் இந்த கல்யாணத்தை முடிச்சு வெச்சிடு" என்று மனதிற்குள் தன் மனைவியிடம் வேண்டிக் கொண்டார் சுந்தரம்.

நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு செல்ல, திருமண நாள் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

சித்தார்த்திற்கு அலைபேசியில் அழைத்த மித்ரன், "ஹே! சித்து உண்மையிலேயே உன் தங்கச்சிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பம் இருக்கா? மனசார அவளுடைய பழைய காதலனை மறந்துட்டு என்னை ஏத்துக்க தயாராயிட்டாளா? எதுக்கு கேக்குறேன்னா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், அவங்க எந்த காரணத்தை கொண்டும் மனசு கஷ்டப்பட கூடாது. அவங்களுக்கு பழைய கால வடு எதுவும் மனசில் இருக்கக்கூடாது, அதுக்காக தான் கேட்கிறேன்" என்றான் மித்ரன்.

"சே! சே! அதெல்லாம் எதுவும் இல்லை மித்ரன் அவளுடைய பழைய காதலன், அவளுடைய உண்மை காதலுக்கு, தகுதி இல்லாதவன் என்று நல்லாவே புரிஞ்சுகிட்டா. அதுவும் இல்லாம, அவ அப்பா அம்மா இருவருக்கும் உங்கள பிடிச்சிருக்கு, அதனால மனப்பூர்வமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா" என்று கூறி சமாதானப்படுத்தி, அலைபேசியை துண்டித்தான் சித்தார்த்.

"ஓ அவ அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு, அதனால்தான் கல்யாணத்துக்கு சம்பாதிச்சாளோ, அப்போ ஒரு வேளை நம்மள அவளுக்கு பிடிக்கலையோ" என்று மனதிற்குள் நினைத்து கவலைப்பட்டான் மித்ரன்.

காருண்யாவோ, கவலை மறந்து, தன்னவனை கை பிடிக்க போகும் நேரத்திற்காக, மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நாளுக்காக எதிர்பார்த்திருந்தாள். அவளின் கவலை இப்பொழுது, மித்ரனை வந்து ஒட்டிக்கொண்டது.

"கல்யாணத்துக்கு அப்புறம், நம்மள ஏற்றுக்கொள்ள, நான் என்ன பண்றது?" என்ற ஒரு குரல் அவன் மூளையில் கேட்டுக்கொண்டிருக்க, "நிச்சயம் காருண்யா என்னை மனதார ஏற்று கொள்வாள்" என அவன் இதயம் அவன் மூளையை தட்டி வைத்தது.

அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த, திருமண நாளும் வந்தது.
வெண் பட்டுப்புடவை சரசரக்க, இருண்ட மேகத்தில் மறைந்து இருக்கும், வெண்ணிலவு போல், அடர்த்தியான கருங்கூந்தலோடும் நிலவு போல் ஜொலிக்கும் முகத்தோடும் காருண்யா நடந்து வந்து கொண்டிருந்தாள்.
முதல் முதலில், மித்ரனின் உள்ளம் காருண்யாவின் அழகில் தடுமாறி விழுந்தது. இதுவரை காருண்யாவின் அன்பிலும் தூயமனதிலும், தடுமாறி விழுந்தவன் இப்போது அவள் அழகில் அவளிடம் மறுபடி காதலில் விழுந்தான்.
என்னதான் விலை உயர்ந்த உடை உடுத்தினாலும், தமிழரின் பாரம்பரிய உடையான புடவையில் பார்க்கும் பொழுது பெண்கள் தனி அழகுதான், என்ற கருத்து அவனுக்கு அப்போது தோன்றியது.

நீண்ட நெடுநாட்களாக தன் நெஞ்சில் பூட்டி வைத்திருந்த காதலை, திருமண பந்தத்தில் இணைத்து வைக்க காரணமாய் இருந்த, எல்லாம் வல்ல சக்திக்கு கண்மூடி நன்றி கூறினாள் காருண்யா.

"என்னையும், மித்ரனையும் இணைத்து வைத்தமைக்கு நன்றி" என்று கூறிக்கொண்டே வரப்போகும் பிரச்சனை தெரியாமல், மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த மித்ரனை கண்டாள்.

இவளுக்கு நிகராய் அவனும், வெண்பட்டு வேட்டியில் ஜொலி ஜொலித்தான். மணப்பெண்ணிற்கே உரிய அச்சம் நாணத்தோடு சென்று, அவன் அருகில் வெட்கத்தோடு அமர்ந்தாள். சுற்றத்தாரும், நட்பு வட்டமும் சூழ்ந்திருக்க, மித்ரனின் கண்கள் இங்கும் அங்கும் எதையோ தேடின. மித்ரனின் பின்னால் மாப்பிள்ளை தோழனாய் நின்றிருந்த சித்தார்த், அவனை என்னவென்று கேட்க, "இல்ல சித்து, காணாமல் போன என் ஃப்ரெண்ட் கவின் இன்னிக்காவது வரானான்னு பார்த்தேன். அவன்‌ இல்லாதது தான் ஒரு குறை" என்று கூறினான்.

இதை கேட்டதும் சித்தார்த் சிறிது ஆடிப் போனாலும், "சரி கவலைப்படாதீங்க சீக்கிரம் வந்துடுவார்" என்று கூறி சமாதானப்படுத்தினான்.

இவர்கள் பேசிய அனைத்தும், மணமேடையில் வீற்றிருந்த காருண்யாவின் காதில் விழுந்தது. அதுவரை செந்தாமரையாய் வெட்கத்தில் சிவந்திருந்த அவள் முகம், மித்ரனின் பேச்சை கேட்ட பிறகு, வெண்தாமரையாய் பயத்தில் வெளிறிப்போனது.

இதற்கு நடுவே கெட்டி மேளம் கொட்ட, அனைவரின் நல்லாசிகளோடு காருண்யாவின் கழுத்தில், மங்கல நாண் பூட்டினான் மித்ரன். நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கையில், கண்ணீர் திரண்டிருந்த அவள் விழிகளை கண்டதும், ஆனந்த கண்ணீர் என்று இவன் நினைத்து கொண்டிருக்க, பயத்தில் ஏற்பட்ட கண்ணீர் என்று இவள் மட்டுமே அறிவாள்.
ஒருவழியாக திருமணம் முடிந்து, சிலபல சம்பிரதாயங்கள் முடிந்து, மித்ரனின் வீட்டிற்கு காருண்யா அழைத்து வரப்பட்டாள்.

"உள்ள வாம்மா! ரொம்ப நாளா பெண் வாசனையே இல்லாத வீடு, நேரா போய் அத்தை படத்த கும்பிட்டுட்டு, அங்க இருக்கிற விளக்கை ஏத்தும்மா!" என்று மித்ரனின் தந்தை சுந்தரம் காருண்யாவிடம் கூறினார்.

அவளும் மிகுந்த பயபக்தியோடு உள்ளே சென்று, "அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று அவரே நேரில் நிற்பதாய் நினைத்து, ஆசிர்வாதம் வாங்கியதும் சுந்தரம் நெகிழ்ந்து போய்விட்டார். அவளை ஆசிர்வதிப்பதை போல், ருக்மணியின் படத்தில் இருந்த குங்குமம், சிறிது வந்து காருண்யாவின் கையில் விழுந்தது. அதை எடுத்து நெற்றியில் இட்டு கொண்டு, வீட்டின் நில விளக்கை ஏற்றினாள்.

சுந்தரம் மறுபடி காருண்யாவின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து,"நீ தாம்மா என் பையனுக்கு இனிமே எல்லாம். மனைவியாய் மட்டும் இல்லாமல் ருக்மணி இருந்து செய்யவேண்டிய எல்லாத்தையும் நீதான் பாத்துக்கணும். இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று ஆசிர்வதித்தார்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, இரவும் வந்தது. மித்ரன் காருண்யாவிற்காக, தன் அறையில் காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து, கேலியும் கிண்டலுமாக காருண்யாவை உள்ளே அனுப்பி வைத்தாள் மாளவிகா.
காருண்யா கையில் பால் சொம்போடு, தலை குனிந்து நின்றிருந்தாள். "காருண்யா ப்ளீஸ் நோ ஃபார்மாலிட்டீஸ், உங்க ஊர்ல இதெல்லாம் பழக்கமே இல்லல்ல, ரொம்ப கஷ்டம்லாம் படாதீங்க, நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க. அப்புறம் ரொம்ப நாளா எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும், அதை கேக்குறதுக்கு இப்ப தான் சரியான சந்தர்ப்பம் என நான் நினைக்கிறேன், கேட்கலாமா? அதுக்கு முன்னாடி இப்படி உட்காருங்க" என ஒரு நாற்காலியை எடுத்து வந்து, கட்டிலின் அருகே போட்டு நாற்காலியில் காருண்யாவை அமரச் செய்தான்‌.

"ஐயையோ! மறுபடியும் கவின் பற்றியும் ஆஸ்திரேலியா பற்றியும் கேட்டு விடுவாரோ!" என்ற பயத்தில், காருண்யா திருதிருவென்று முழிக்க, காருண்யா எதுக்கு இவ்வளவு பதட்டமும், பயமும், நான் அப்படி என்ன கேட்க போறேன். எங்க அம்மாவை பத்தி எல்லா விவரமும், உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? இதுதான் என்னோட கேள்வி, எப்படி தெரிஞ்சதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"
இவ்வளவுதானா என்று நினைத்து, பெருமூச்சு விட்டாள் காருண்யா. "அது ரொம்ப சிம்பிள் மித்ரன். சாரி மித்ரன்னு கூப்பிடலாம்ல, இல்ல வாங்க போங்கன்னு கூப்பிடணுமா?"

"நீங்க எப்படி வேணா கூப்பிடலாம். மித்ரன்னே கூப்பிடுங்க, முதல்ல உங்களுக்கு எப்படி அந்த விஷயம் தெரிஞ்சதுனு சொல்லுங்க?"

"நான் தான் சொன்னேனே மித்ரன் அது ரொம்ப சிம்பிளான விஷயம். ரொம்ப நாளா உங்க கூடவும், உங்க அப்பா கூடவும், இருக்கிறது உங்க வீட்டு சமையல்காரர் தான். ஒருநாள் அவரை வழியில் பார்த்தேன் அவர் கிட்ட கேட்டேன், அவர் தான் எல்லா விஷயத்தையும் சொன்னார்" என்றாள்.

"சரி! எது எப்படி இருந்தாலும், என் அம்மாவின் உண்மையான முகத்தை நீ எனக்கு காட்டியதால் தான், உன் மேல் இருந்த காதல் எனக்கு அதிகரித்தது. ஆக்சுவலி சொல்ல போனா, உன்னை நான் ரெண்டு வருஷம் முன்னாடிலேர்ந்து லவ் பண்ணிட்டு இருக்கேன்".

"ரெண்டு வருஷமா? எப்படி மித்ரன், நான் இங்கே வந்தே நாலு மாசம் தானே ஆகுது?"
"ரெண்டு வருஷமா, உன்னோட இந்த பூனைக் கண்கள், என்னுடைய கனவில் எப்போதும் வந்து டிஸ்டர்ப் பண்ணும். அந்த கனவை இப்ப நினைச்சாலும் ரொம்ப பயமா இருக்கு. ஏதோ ஒரு கார் வேகமாக போய் மோதுவது போலவும், உன்னோட இந்த பூனை நிறக் கண்களில் முழுக்க, கண்ணீர் இருப்பது போலவும் கனவு வரும். ஆனா இன்னிக்கு வரைக்கும், அந்த கனவிற்கான அர்த்தம் புரியல. ஆனால் கனவில் வந்த அந்த கண் என்னோட மனசை மிகவும் பாதிச்சுது. அதே கண்களோடு உன்னை நேரில் பார்த்த உடனே, எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி போச்சு. எனக்கு உன்ன புடிச்சா மட்டும் பத்தாது, உனக்கும் என்னை பிடிக்கணும், அது நடக்க நிறைய நாள் தேவைப்படும்னு எனக்கு தெரியும். அதுவரைக்கும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ பழசெல்லாம் மறந்து, நிதானமா என்னை புரிஞ்சுக்கிட்டு, பொறுமையா என்னை லவ் பண்ணு, அதுக்கப்புறம் நம்ம கணவன் மனைவியா நடந்துக்கலாம். அதுவரைக்கும், நம்ம ஃப்ரெண்ட்ஸ்ஸாவே இருப்போம்" என்று கூறிவிட்டு, அந்த அறையின் மூலையில் இருந்த மற்றொரு ஒற்றை கட்டிலில் படுத்து உறங்கி விட்டான் மித்ரன்.

"அப்பாடா பழசை பத்தி கேக்கல" என அவள் மனம் நிம்மதி அடைந்தது‌. "ஏண்டி ஏற்கனவே பிடிச்சு, புரிஞ்சு, பழகி லவ் பண்ண ஒருத்தனை லவ் பண்ண போறியா? மறுபடியும் ஃபர்ஸ்ட்லேர்ந்தா?" என மனசாட்சி கேலி பண்ணியது. அதை அடக்கி விட்டு இவளும் உறங்க சென்றாள்.
நடு நிசியில் தூக்கத்தில் மித்ரன் அலறும் ஒலி காருண்யாவை எழுப்பியது.
 
Top