கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 21

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 21

மித்ரனின் அலறல், காருண்யாவின் தூக்கத்தை கலைத்தது. அவள் எழுந்து பார்க்க, அங்கே மித்ரன், "கவின் கவின்" என தூக்கத்தில் புலம்பி கொண்டிருந்தான். அவன் குரல் ஒலி, அதிகமாக கேட்க தொடங்கியது. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று புரிந்து கொண்டு, காருண்யா மித்ரனின் அருகில் ஓடோடி சென்றாள்.

"மித்ரன்! மித்ரன்! என்னாச்சு? எழுந்திருங்க!" என அவன் அருகில் அமர்ந்து உலுக்க, அவன் சட்டென்று அவள் மடியில் படுத்து கொண்டு, "அம்மா ப்ளீஸ் மா! எங்கூடவே இருங்க" என காருண்யாவை தன் அன்னையாக நினைத்து, அவள் இடையை இறுக கட்டி கொண்டு படுத்துறங்கினான்.

காதல் கணவனின் முதல் ஸ்பரிசம் தந்த சிலிர்ப்பை காட்டிலும், அவனின் செய்கை அவளுக்கு கவலையையே கொடுத்தது. அலுங்காமல், குலுங்காமல் அவன் நன்றாக உறங்கும் வரை காத்திருந்து, மெதுவாக அவனை மறுபடி தலையணையில் படுக்க வைத்துவிட்டு வந்தாள்.

அடுத்த நாள் காலையில், மித்ரன் எழுந்து பார்க்கையில் காருண்யா அவன் அறையில் இருக்கவில்லை. எங்க போனான்னு தெரியலையே, என வேக வேகமாக வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு வெளியே ஓடினான்.

"என்ன பா மித்ரன் என்னாச்சு? காலங்காத்தாலேயே எங்க ஓடற?" என்று சுந்தரம் கேட்க, "இல்லப்பா காருண்யாவை காணும், அதான் தேடிக்கிட்டு இருக்கேன்"
.
"நீ வேற ஒண்ணு, காருண்யா காலையிலேயே எழுந்திருச்சு ஜாக்கிங் போயாச்சு, வர நேரம் தான், வெயிட் பண்ணு!" என்று கூறி சிரித்து விட்டு சுந்தரம் உள்ளே சென்றார்.

அடுத்த சில நொடிகளில் ஜாகிங் முடித்து காருண்யா வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்கு வந்தவுடன், "ஹாய் மித்ரன் குட் மார்னிங்!" என்று கூறிவிட்டு குளித்து புத்துணர்ச்சியோடு வந்து, மித்ரனுக்கு க்ரீன் டீ கொண்டு வந்து கொடுத்தாள்.
.
"என்ன காருண்யா நான் வழக்கமா ஃபில்டர் காபி தான் குடிப்பேன். இது என்ன புதுசா க்ரீன் டீ?"

"இனிமே எல்லாம் அப்படித்தான் மித்ரன். இன்னிக்கு நானும் க்ரீன் டீ தான் குடிச்சேன். நல்லாத்தான் இருக்கு, மருமக சொன்னா கேட்டு தானே ஆகணும்" என்று கூறி சிரித்தார் சுந்தரம்.

இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, காருண்யா, மித்ரனின் காதலை ஒருவருக்கொருவர் வளர்ந்து கொண்டே சென்றனர். மித்ரனை அருகில் வைத்து கொண்டு, காருண்யாவால் அவள் காதலை நெடுநாட்கள் பூட்டி வைத்திருக்க முடியவில்லை. ஒரு நாள் அவளே அவனிடம், "மித்ரன் நம்ம ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வரலாமா?"

"என்னிக்கும் இல்லாத அதிசயமாய் கேட்டிருக்கிறாளே" என மித்ரனும் அவளை அழைத்து சென்றான்.

கோவிலில் சென்று சாமியை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் வந்தமர்ந்தனர்.
"காருண்யா உங்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருக்கா? எதுக்கு கேட்கிறேன்னா, நீங்க ஆஸ்திரேலியால வளர்ந்த பொண்ணுல்ல அதனால தான் கேட்கிறேன்".

"எல்லாம் வல்ல சக்தியின் மேல நம்பிக்கை இருக்கு மித்ரன். அது எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை வழிபடுவேன். எனக்கு நீங்க கிடைச்சதே அந்த சக்தியின் துணையால தான், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு தான் வர சொன்னேன், அது வந்து, அது வந்து, நீங்க ரொம்ப நாளா ஒண்ணு கேட்டீங்கள்ள அந்த பதில் தான், அது நான், உங்களை‌", என்று அவள் நிறுத்த சட்டென்று அவள் வாயை, தன் கைகளால் இறுக மூடினான் மித்ரன்.

"இப்ப வேண்டாம்! அடுத்த வாரம் நம்ம ஜூவோட திறப்பு விழா இருக்கு, அது முடிஞ்ச அப்புறம் கேட்டுக்கறேனே!" என்றான் மித்ரன்.

"ஐயோ மறுபடியுமா?" என்று மனதிற்குள் நினைத்தவள், "முடியவே முடியாது மித்திரன் நான் இப்பவே சொல்லியே தீருவேன்" என்று சொல்லும் போதே, மித்ரன் அவ்விடத்தை விட்டு, சிரித்து கொண்டே நகர்ந்து ஓடினான். அவன் போவதை சட்டை செய்யாமல்,"ஐ லவ் யூ மித்ரன்" என பொது இடம் என்று கூட பார்க்காமல் வாய் விட்டு கத்தினாள் காருண்யா.

சுற்றும் முற்றும் இருப்பவர்கள், அனைவரும் இவளை வினோதமாக பார்த்தனர். ஆனால் பாவம் இவள் யாருக்காக கத்தினாளோ, அவன் அந்த இடத்தில் இருக்கவே இல்லை. வேகமாக ஓடிச்சென்று, அவன் காருக்குள் ஏறி அமர்ந்து இருந்தான். காருண்யா அப்போதுதான், தான் இருந்தது பொது இடம் என உணர்ந்து மிகவும் வெட்கப்பட்டாள்.

"சே! இந்த மித்ரனால நம்ம மானம் போச்சே!" என தலையில் அடித்து கொண்டு காரை நோக்கி ஓடினாள். காரில் ஏறி எப்போதும் உட்காரும் முன் சீட்டை தவிர்த்து, பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

"என்ன காரு என்னாச்சு ஏன் கோவமா இருக்க?"

"ம்ம் உங்களுக்கு மட்டும் சொல்ல வேண்டிய ரகசியத்தை, ஊருக்கே சொல்லிட்டேன். சொல்லும் போதே கேட்டுக்க வேண்டியது தானே, இனிமே கெஞ்சி கேட்டாலும் சொல்லமாட்டேன்" என்று முறுக்கி கொண்டாள் காருண்யா.

ஒரு வாரம் வேகமாக கடக்க, ஜூ திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்தது. சிறப்பு விருந்தினராக மணிகண்டன் அழைக்கப்பட்டிருந்தார். இப்போது ஜூ முழுக்க நிறைய விலங்குகள் இருந்தன, ஒவ்வொரு விலங்குக்கும், தனித்தனியே நிறைய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன் வகைகள் அனைத்தும் தனித்தனியே பெரிய பெரிய ஆளுயர தொட்டிகளில் இருந்தன.

மணிகண்டன் குறித்த நேரத்திற்கு வந்து ஜூவை திறந்து வைத்தார். முதன்முதலில் தனியார் விலங்கு காட்சி சாலை திறப்பதால், மக்கள் கூட்டமும் நிறைய வந்திருந்தது.

ஜூவின் நிறுவனர் என்ற சார்பில் மித்ரன் பேச அழைக்கப்பட்டான். "எல்லாருக்கும் வணக்கம்! இந்த ஜூ ஆரம்பித்ததின் நோக்கமே, நம்ம எல்லாரும் விலங்குகளையும் புரிஞ்சுகிட்டு, அதை போற்றி பாதுகாக்கணும் என்பது தான். இந்த பூமி முதல்ல விலங்குகளுக்கு தான் சொந்தம், அதுக்கு அப்புறம் தான் மனுஷங்களுக்கு சொந்தம். அது மட்டுமில்லாமல் இங்க ஒவ்வொரு விலங்கை பத்தி தெரிஞ்சுக்கவும், நம் நாட்டு விலங்குகளை, வீட்டில் வளர்க்க குறிப்புகளும் வழங்கப்படும்.எல்லாத்துக்கும் மேல, இந்த ஜூவின் அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு இலவசம். பணம் இருப்பவர்கள் மனம் இருந்தால், ஏதேனும் ஒரு விலங்கை தத்து எடுத்து, அதுக்கான செலவுகள் அனைத்தையும் பார்த்து கொள்ளலாம். மற்றவர்கள் இங்கே வந்து, பல விஷயங்களையும் கற்று, நம் விலங்குகளை பாதுகாக்க முயற்சி செய்யலாம். இந்த ஜூவை ஆரம்பிக்க தூண்டு கோலாய் இருந்த, எல்லாம் வல்ல சக்திக்கும், என் தந்தைக்கும், என் நண்பர்களான சித்தார்த் மற்றும் மாளவிகாவிற்கும் நன்றிகள்.

இந்த 'காருண்யா விலங்குகள் காப்பகம்' என் காதல் மனைவி காருண்யாவிற்கே சமர்ப்பணம். அவங்களையே இந்த ஜூவிற்கு தலைமை நிர்வாகியாக நியமிக்கிறேன். நன்றி வணக்கம்" என்று கூறி விடை பெற்றான்.

"மித்ரன்! காருண்யாவை மனைவியாய் அடைவதற்கு நீங்க அதிர்ஷ்டம் செஞ்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்!" என்று கூறி விடைபெற்றார் மணிகண்டன்.

அன்று முழுவதும் காருண்யா ஜூவிலேயே இருந்து, வரும் மக்களுக்கெல்லாம் விலங்குகளை பற்றியும், அதன் வாழ்க்கை முறைகளை பற்றியும் வகுப்பு எடுத்து கொண்டிருந்தாள்.

மித்ரனின் வீட்டில், "ஏன்பா மித்ரா ஜூவை இலவசம்னு சொல்லிட்ட, அப்புறம் எப்படி சம்பாதிக்க போற, இப்ப நீ தனி ஆள் இல்ல கல்யாணம் ஆயிடுச்சு தெரியும்ல" என்று கேட்டார் அவன் தந்தை சுந்தரம்.

"அதெல்லாம் ஏற்கனவே யோசிச்சுட்டேன் பா, 'நிலாச்சோறு' அப்படிங்கற ஹோட்டல் ஆரம்பிக்க போறேன். அங்க முழுக்க முழுக்க நம்ம பாரம்பரிய உணவும், பாரம்பரிய சமையலும் தான். அதுக்கு செஃப், பாட்டி செல்லம்மாவும், தாத்தா ஆனந்தனும் தான்" என்றான் மித்ரன்.

"பரவாயில்லையே நல்ல ஐடியா தான் வாழ்த்துக்கள் மித்ரன். நானும் ருக்மணியும் எப்போதும் உனக்கு உறுதுணையாய் இருப்போம்".

"ரொம்ப தேங்க்ஸ் பா, காருண்யா எங்க அப்பா?"

"அவ அப்பவே மாடிக்கு போயிட்டா மித்ரன்"

"சரிப்பா நீங்க தூங்குங்க, நம்ம நாளைக்கு காலைல பாக்கலாம்" என்று கூறிவிட்டு தன்னறைக்கு சென்றான்.

"ஹாய் காரு! ஜூ திறப்பு விழா அருமையா போச்சு. நீ ஏதோ சொல்லணும்னு சொன்னியே இப்ப சொல்லு!" என்று தன் கன்னக்குழியை காட்டி சிரித்து கொண்டே கேட்டான் மித்ரன்.

"சாரி மித்ரன் அது என்னன்னு மறந்துட்டேன்.எனக்கு தூக்கம் வருது, நான் யோசிச்சு அப்புறமா சொல்றேன்" என்று கூறிவிட்டு, பெரிய கிங் சைஸ் கட்டிலில் ஒற்றை ஆளாய் படுத்து உறங்கினாள் காருண்யா.

"அடிப்பாவி! சரி சிக்காமையா போய்டுவ? இரு பாத்துக்கிறேன்" என்று சத்தமாக அவள் காதில் விழும்படி சொல்லி விட்டு, தன் ஷோபாவில் உறங்க சென்றான் மித்ரன்.

அடுத்த நாள் மித்ரனின் பிறந்தநாள் அன்று தன் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தாள் காருண்யா.

இவள் நினைத்தால் அது நடந்துவிடுமா? விதி வேறு மாதிரி யோசித்தது.
 
Top