கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீரோட்டம்: அத்தியாயம் - 11

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்- 11

மனிதர்கள் சுவாரஸ்யமானவர்கள் என்று அருந்ததி நினைப்பாள். ஆனால் அவள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மரகதம் மேடம் தன் அண்ணனை விச்வாமித்திரர் என்று சொன்னதை அவள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? பெரிய பாங்க் அதிகாரி என்கிற ஆணவம் போலும். தன் கணவனிடம் புலம்பினாள். “எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ? அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே. உங்கண்ணன் வருஷக்கணக்கா உன்னிடம் பகை பாராட்டியதாக நீ தான் சொல்லிக் கொண்டிருந்தாய்...ஸ்வீட்ஸ்யும் நகையும் தந்தவுடன் அவர் உனக்கு உசத்தியாக போய்விட்டாரா?” அருந்ததி கணவனை எரிச்சலுடன் பார்த்தாள்.

“ஒருவர் திருந்தி வந்து அன்பா இருந்தா பாராட்டக் கூடாதா? இப்படி போட்டு வாங்கணுமா ?”

“தாயே ஈஸ்வரி....ஆளை விடு. நான் வேலைக்குப் போகணும். நீயாச்சு உங்க மேடமாச்சு.” சொல்லிவிட்டு அஸ்வின் கிளம்பிச் சென்றுவிட்டார். மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மரகதம் கூப்பிட்டாள்.

“அரு...நான் வரலாமா? நீ ப்ரீயா இருக்கியா? உன் கூட பேசணும்.”

“ம்ம்...வாங்க.” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் அருந்ததி. அடுத்த பதினைந்தாவது நிமிடம் மரகதம் வந்து விட்டாள். கை நிறைய பழங்கள்....இனிப்புகள்....பலகாரங்கள்.

“அப்பாடா...எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அரு....உனக்கு ஒரு இனிப்பான செய்தி சொல்லப் போறேன்.”

“அதிருக்கட்டும் மேடம்...முதல்ல சொல்லுங்க எதுக்கு எங்க அண்ணனை மடையன்னு சொன்னீங்க?”

“உன் கோபம் புரியுது. நான் ஒன்றும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை அரு...அவர் உனக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணன் தானே...”

“மேடம்...சில சமயங்களில் நாம் உறவுகளிடம் கொஞ்சம் நீக்கு போக்காகத் தான் நடந்துக்கணும்...”

“உண்மைதான்...அது புரியாமல் கோபப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தை நான் மடத்தனம் பண்றீங்கன்னு நேரடியாகவே சொன்னேன்... விச்வாமித்திரர் மாதிரி கோபப்பட்டால் குடும்ப உறவுகள் எப்படி நிலைக்கும் என்றேன். அவர் புரிந்து கொண்டார். நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல வேண்டும். அது நம் கடமை. நீ குதிக்கிறே...அரு...உறவுகளில் புரிதல் ரொம்ப முக்கியம். அவரிடம் இது பற்றி ஒரு மணி நேரம் பேசினேன்...அதனால் தான் உன்னை வந்து பார்த்தார்.”

“அப்படியா? ஆமா அவர் கொஞ்சம் முன்கோபி...அதனால் தவறாக புரிந்து கொள்வதில் நிபுணர்.” இருவரும் சிரித்தனர். மரகதம் ஸ்வீட் பாக்ஸை திறந்து ஒரு ஜாங்கிரியை எடுத்து அவள் வாயில் வைத்தாள். ‘”தேங்க்ஸ் மேடம். நீங்க யாரோ நான் யாரோ...ஆனாலும் இவ்வளவு அன்பா இருக்கீங்களே...நான் கொடுத்து வைத்தவள்.” அருந்ததியின் கோபம் எப்பொழுதும் சீக்கிரம் மறைந்து விடும். மரகதம் சொன்னாள்.

“அரு...நான் யாரோ இல்லை உன் அக்கா.” அருந்ததி விழித்தாள். என்ன சொல்கிறார்கள் மேடம்?

“என்ன பார்கிறே? உண்மைதான். இது எனக்கு முன்பே தெரியும். ஆனால் இப்போ தான் சொல்வதற்கு நேரம் வந்தது. சாந்தாம்மா தான் என் அம்மா. உனக்கு இரண்டு வருடம் முந்தி நான் பிறந்துவிட்டேன். என் அப்பா ஜான். அம்மாவும் ஜானும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். அம்மாவின் அம்மா அதை தடுத்து வைதீஸ்வரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள் .உனக்குத் தெரியுமா... நான் பிறந்ததும் அம்மா என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லையாம்...இருபது வருஷம் கழித்து தான் என்னை முதல் முதலாகப் பார்த்தார்கள். அந்தக் கதையெல்லாம் இதோ இந்த நோட்புக்கில் எழுதி இருக்காங்க. படி .”

அருந்ததி பேச்சே வராமல் திக்பிரம்மித்து உட்கார்ந்திருந்தாள். திடீர் என ஒரு சகோதரியா? அவளுக்கு பட படவென வந்தது. நாக்கு உலர்ந்தது. தண்ணீர் எடுத்து மட மடவெனக் குடித்தாள்.

“என்ன அருந்ததி உனக்கு சந்தோசம் இல்லையா? என்னை உனக்குப் பிடிக்கலையா? பிடிச்சிருக்குன்னு சொல்லு அரு....என்னை ஏற்றுக் கொள்...நீ வேண்டும் எனக்கு...” மரகதம் தங்கையை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எவ்வளவு நாளைய ஏக்கம் இது! எத்தனை வருடங்கள் எதுவும் காட்டிக் கொள்ளாமல் மூன்றாம் மனுஷர்கள் போல் வாழ்ந்தாகி விட்டது. சகோதரி என்றால் அது ஒரு தனி உறவு தான். குருடனுக்குப் பார்வை கிடைத்தது போல் இருந்தது. இனி ஒற்றையாய் கிடந்து தவிக்க வேண்டாம். கூடப் பிறந்தவள் இருக்கிறாள். ஆதரவாக இருப்பாள். தட்டிக் கொடுப்பாள். சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கு கொள்வாள்.

“ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நம்பவே முடியவில்லை. கனவா நிஜமா தெரியவில்லையே.”

“உன்னைக் கிள்ளட்டுமா? இது நிஜம் தான். ஏன் இவ்வளவு தயக்கம்? எதுக்குடா இந்த புது உறவுன்னு...”

“அக்கா...ச்சே ச்சே...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. என் குழந்தை பிறந்து சிறிது நாட்களே இருந்த மாதிரி இந்த உறவு மறைந்து விடுமோன்னு பயமா இருக்கு....”

“இறுதி வரை துணை இருப்பேன்...என் தங்க தங்கையே...இன்னொரு முறை அக்கா என்று சொல்லேன்.”

காலம் சில சமயம் நின்று போய்விடக் கூடாதா என்று தோன்றும். அப்படி ஒரு அழகான தருணம் இது. சகோதரிகள் உணர்வின் பிடியில் சிக்கி கண்ணீர் விளிம்பில் பளபளக்க அப்படியே மெய் மறந்து நின்றனர்.

“அரு..நீ அக்கா என்று சொல்லும் போது...எனக்குப் புது தெம்பு வருகிறது. சரி நான் கிளம்பறேன். அம்மாவின் டைரியைப் படித்துப் பார்...” மரகதம் விடை பெற்றாள்.

மரகதம் நடையே ஒரு நாட்டியம் போல் அழகாக இருந்தது. பிரபு கேலி செய்தான்.

“அடேங்கப்பா...என்னை சந்தித்த போது கூட உன் நடை இவ்வளவு நளினமாக இல்லை. சகோதரியிடம் பேசியதும் ஒரே துள்ளலாக இருக்கே. எனக்கு இரண்டாம் இடம் தானா?”

“இதில் சந்தேகம் வேறயா? பிரபு...எங்க சந்திப்பு மாலையும் இரவும் ஒருங்கிணைந்த நேரம் மாதிரி அழகானது. சூரியனின் வெப்பம் தணிந்த மாலை. குளிர்ச்சி தரும் இரவு. பறவைகளின் இன்னொலி...அந்தி சிவப்பில் வானம்...எப்படி இருக்கு வாழ்வின் அழகு! அந்த அழகு எங்க பந்தத்தில்...”

“ஓவரா சீன் போடறே...எல்லாம் புதிதில் ஜோராகத்தான் இருக்கும். ஒரு சண்டை வந்தால் வானமே கிழிந்து தொங்கும்...” விளையாட்டாகத்தான் சொன்னான். மரகதம் அழுதுவிட்டாள். “அப்படி ஒரு நிலமை வரவே வராது. அப்படி வந்தால் நான் காணாமல் போய்விடுவேன். தவமாக தவமிருந்தது போல் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு தங்கை...அவளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவேன். அப்புறம் எப்படி சண்டை வரும்? பிரிவு வரும்?”

“நீ விட்டுக் கொடுப்பாய்...அவள் தப்பாக புரிந்து கொண்டு பிரிந்தால்?”

“வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டீங்களா? அவள் என் நெஞ்சிலேயே இருப்பாள். எப்படி பிரிவு வரும்?” பிரபு அசந்து விட்டான். மரகதம் விளையாட்டாகவோ ஒரு ஜோடனைக்காகவோ சொல்லவில்லை என்று புரிந்து கொண்டான். “ம்ம்...பேசாம உன் தங்கையா பிறந்திருக்கலாம் போல..”

“லூசு...அது பாசம். காதலில் உங்களுக்குப் போட்டி யாருமில்லை...”

ஜானும் பிரபுவின் பெற்றோரும் பேசி மரகததத்தின் திருமணத்தை நிச்சயம் பண்ணினார்கள். நிச்சயதார்த்தம் பனி வீட்டிலேயே நடந்தது. சொக்கலிங்கம் மனைவியுடன் வந்து ஆசீர்வதித்தான். அருந்ததி கணவனோடு வந்து கலந்துக் கொண்டாள். விமலாவும் சந்தானமும் வந்து ஆசீர்வதித்தனர். அழகான மாலைப்பொழுதில் அவர்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள். பிரபுவின் பெற்றோர் வருங்கால மருமகளை வாஞ்சையுடன் பார்த்தனர். பாட்டிகள் அனைவரும் இருவருக்கும் திருநீறு பூசிவிட்டு வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்தினர். கோமதிப் பாட்டி மிக்க வாஞ்சையுடன் தன் பேத்தியின் நெற்றியில் விபூதி இட்டு ஆசீர்வதித்தாள். மரகதத்திற்க்கு அவள் தன் சொந்தப் பாட்டி தான் என்று இன்னும் தெரிந்திருக்கவில்லை. ஜானுக்குத் தெரியும் என்றாலும் அவர் எதுவும் சொல்லவில்லை.

மரகதம் முகத்தில் புதிய களை ததும்பிற்று. உயர்ந்த கோஹினூர் வைரம் போன்று ஜொலிப்பு அசர வைத்தது. முப்பது வயதை கடந்தவள் என்று சத்தியம் செய்தாலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு திடீர் இளமையுடன் வசீகரமாக இருந்தாள். ”ஈஸ்வரி...முத்துவை அழைத்து வாயேன்.”

“சரிங்கம்மா...” சிறுது நேரத்தில் முத்து வந்தாள். “அம்மா...” மரகதம் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“முத்து நான் உன் மாமனிடம் பேசணும். வரச்சொல்வியா?”

“என்ன விஷயம் அம்மா?...அவர் ஒன்னும் தப்பு தண்டா பண்ணலையேம்மா...”

“ அதனாலே தான் வரச் சொல்றேன்...”

“புரியலேயேமா...”

“புரியும்படியா சொல்றேன். அவனை உனக்கு பிடிச்சிருகில்லே. அதான் உனக்கும் அவனுக்கும் திருமணம் பேசி முடிக்கலாமன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?”

“அம்மா...ரொம்ப நல்லவர் தான்...ஆனா பயமா இருக்கும்மா. பிள்ளைகளை தன் பிள்ளைகளா ஏத்துப்பாரா?”

“அதான் பேசப் போறேன். எனக்கு திருப்தியா இருந்தா தான் கல்யாணம்...என்ன சரிதானா?”

முத்து முகத்தில் செம்மை படர்ந்தது. அவளுக்கு இஷ்டம் தான் என்று தெளிவாகப் புரிந்தது.

“அம்மா...நீங்க சரின்னு சொன்னாதான் கட்டிக்குவேன்...” என்றாள் வெட்கத்துடன். “சரிங்கம்மா நான் தாமரையை பள்ளிக்கு அனுப்பணும்...” முத்து வெட்க முகத்தை மறைக்கவே அவசரமாக ஒடிவிட்டாள்.

“முத்து உன் கல்யாணம் நடந்த பின் தான் என் கல்யாணம்.” என்று மரகதம் சொன்னனதக் காதில் வங்கிக் கொண்டே ஓடிவிட்டாள். தங்கப்பன் அன்று மாலையே வந்தான். “அம்மா..கூப்பிட்டீங்களாமா?”

“உக்கார் தம்பி..உன்கிட்ட பேசணும். உனக்கும் முத்துவிற்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படறேன். நீ என்ன சொல்றே?” தங்கப்பன் முகத்தில் சூரியனே வந்து உட்கார்ந்து கொண்டது போல் பிரகாசம்.

“கரும்பு தின்ன கூலியாம்மா? காத்திட்டிருக்கேன்...” வேகமுடன் சொன்னான்.

“தங்கப்பா...கல்யாணம்கறது சாதாரண விஷயமில்லை. காலம் பூரா இந்தக் குழந்தைகளை உன் குழந்தைகளா நினைத்து காப்பாத்துவாயா? உங்களுக்கும் குழந்தைகள் பிறக்கலாம். பிறகு தாமரையும் அவள் தம்பியும் உங்களுக்கு பாரமாகப் படலாம்...முத்து பத்தி எனக்குத் தெரியும் அவள் உயிரே போனாலும் பிள்ளைகளை கை விட மாட்டாள்...ஆனால் நீ...”

“அம்மா...முத்துவை நேசிக்க ஆரம்பிச்சப்பவே அந்தக் குழந்தைகளையும் என் குழந்தைகளாத்தான் நினைக்கி- றேன். நீங்க இத்தனைப் பாட்டிகளை உங்க சொந்தப் பாட்டிகள் மாதிரி பார்த்துக்கலையா? இதை பார்த்தப் பிறகாவது நான் கத்துக்க மாட்டேனா? நீங்க கவலையே பட வேண்டாம். அந்த அங்காளப் பரமேஸ்வரி மேலே சத்தியமா சொல்றேன் நான் நல்லா பார்த்துப்பேன்மா.”

“ரொம்ப சந்தோஷம்பா..இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. முத்து சாதாரண பெண் இல்லை. பெண் தெய்வம். யாரோ பெற்ற குழந்தைகளை தன் பிள்ளைகளாய் நினைக்க எவ்வளவு பெரிய மனசு வேண்டும்? அவள் நல்லா இருக்கணும்.” தங்கப்பன் மகிழ்ச்சியுடன் சென்றான்.

மரகதம் அவனுக்கும் முத்துவிற்கும் பனி வீடு இல்லத்திலேயே பந்தல் கட்டி தோரணம் அமைத்து சிறிதாக ஒரு உறவினர் கூட்டம் முன் திருமணத்தை நடத்தி வைத்தாள். ஜான் வந்து ஆசீர்வதித்தார். பிரபு வந்திருந்து ஆசீர்வதித்ததோடு நில்லாமல் அவர்களுக்கு சிறிய ஒரு படுக்கை அறை கொன்ட அப்பார்ட்மெண்ட்டை பரிசாகக் கொடுத்தான். சந்தானம் விமலா தம்பதியர், சொக்கலிங்கம் அவன் குடும்பம், அருந்ததி அவள் கணவர் என்று வந்ததில் கல்யாண வீடு களை கட்டி இருந்தது. பாட்டிகள் அனைவரும் வந்து ஆசீர்வதித்தனர். தங்கப்பனின் தாய் தந்தை மகிழ்ச்சியுடன் வந்து கலந்து கொண்டு ஆசீர்வதித்தனர். கோமதிப் பாட்டி கல்யாணம் முடியும் வரை ஒரு நற்காலியில் மணவறை அருகே உட்கார்ந்து பார்த்தாள். அப்பொழுது அவளுக்கு தன் மகள் சாந்தாவின் கல்யாணம் நியாபகம் வந்தது. அவளின் மிரட்டலாலும் சாந்தாவின் அண்ணன் குலசேகரனின் கெடுபிடியாலும் சாந்தா பொங்கி வந்த அழுகையை அடக்கிய வண்ணம் மணவறையில் குத்துக் கல் போல் உட்கார்ந்து தாலி வாங்கிக் கொண்டது இப்பொழுது நினைத்தால் அழுகை வந்தது. ஆனால் அப்பொழுது, தான் எதையோ சாதித்து விட்டதை போல் உணர்ந்தாள். முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் எவ்வளவு பெரிய குற்றத்தை செய்திருக்கிறாள்! பெற்ற மகளின் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டாள். எந்த குழந்தையை அலட்சியாமாக ஒரு மூட்டை போல் தூக்குக் கொடுத்தாளோ...அந்தக் குழந்தை தான் இப்பொழுது அவளுக்கு அன்பும் ஆதரவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தான் தண்டனை என்று ஆண்டவன் நிர்ணயத்துவிட்டான். ஆண்டவன் படைப்பில் ஜாதியென்ன மதமென்ன? எல்லோரும் மனிதர்கள் தானே! ஏன் அவளுக்கு அன்று அது புரியவில்லை? ஜான் எப்பேர்பட்ட மனிதர்! அவள் பெற்ற மகன் மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு “அம்மா ....நீ சாந்தா வீட்டில் போய் இரு...அவளுக்கு துணையாக இருக்கும்...” என்று விரட்டி விட....அவள் வேறு வழி இல்லாமல் சாந்தாவிடம் போய் நிற்க...அவள் புருஷனுக்குப் பயந்து அவளை துரத்த....நடுத்தெருவில் அவள் நின்ற போது...”வாங்கம்மா...” என்று அழைத்துக் கொண்டு போனாரே ஜான்...குரூரமாக அவள் அவரை சாந்தாவிடமிருந்து பிரித்ததற்கு பழி வாங்காமல் தன்னுடன் அழைத்துச் சென்றாரே....அன்று கூனிக் குறுகி நின்றாள் கோமதி. அது மட்டுமல்லாமல் அவளிடம் “கவலைப்படாதீங்கம்மா...உங்க பேத்தி கூட நீங்க இருக்கலாம்...” என்று சொல்லி மரகதம் பற்றி சொல்லி அவளிடம் அனுப்பி வைத்தாரே...என்ன மனசு அது! “மன்னிச்சுடு தம்பி....மாணிக்கம் மாதிரி ஒரு மருமகன் கடவுள் எனக்கு கொடுத்தார், அவரை அவமானப் படுத்தற மாதிரி உன்னை தூக்கி ஏறிஞ்சிட்டு தேடி போனேனே வைத்தீஸ்வரன்...வெறும் கல். எனக்கு நல்லா தண்டனை கிடச்சிட்டுத்துப்பா...” ஜான் மிருதுவாகப் பேசினார்.” அம்மா...எல்லாம் விதிப் படி நடக்கும். ஒரு விஷயம்...உங்க பேத்தி மரகத மேரி என் மேலேயே கோவமா இருக்கா. நீங்க சாந்தவோட அம்மான்னு தெரிஞ்சா இன்னும் கோபப் படுவா. நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம் என்று அவள் நினைக்கிறாள் ...அதனாலே நீங்க யாருன்னு காட்டிக்க வேண்டாம்...நேரம் வரும்போது சொல்லிக்கலாம்...” கோமதி புரிந்துக் கொண்டாள். ஒரு குடும்பத்தின் அஸ்திவாரத்தையே சிதைத்த பாவிக்கு இந்த அடைக்கலம் கிடைத்ததே பெருசு. ஜான் சொன்னபடி மரகதத்தின் வீட்டு வாசலில் போய் படியில் உட்கார்ந்து கொண்டாள்... மரகதம் வெளியே வந்துப் பார்த்து கனிவாகக் கேட்டாள். “பாட்டிம்மா...உள்ள வாங்க ஏன் படியில் இருந்து கொண்டு...களைப்பா இருக்கீங்க முதல்லே சாப்பிடுங்க” கோமதி முதலில் தான் யார் என்பதை சொல்ல நினைத்தாள். பிறகு அவள் விரட்டி விட்டால் எங்கு செல்வது? கணவனை இழந்த பெண்மணிக்கு அதிலும் வயசான பருவத்தில் அன்பும் ஆதரவும் தேவை...பலதையும் சிந்தித்து உண்மையை மறைத்தாள். ஏனோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது. தாரை தாரையாக கண்ணீர் வழிய சிறு பிள்ளை போல் மரகதத்தின் தோளில் சாய்ந்து அழுதாள். மரகதம் அப்படியே உருகிப் போனாள். “நீங்க காலைப் படாதீங்க பாட்டி.. உங்களை என் சொந்தப் பாட்டி போல் நினைத்து நான் காப்பாத்தறேன்.” இப்படி எத்தனை கணவனை இழந்த வயதான பாட்டிகள் கஷ்டப்படுகிறார்களோ? அவர்களுக்கு ஒரு இல்லம் ஆரம்பித்தால் என்ன என்று அன்று முடிவு பண்ணினாள் மரகதம். ஜானிடம் சொல்ல அவர் ஆதரிக்க “பனி வீடு” தொடங்கியது. கோமதிப் பாட்டியை ப்ரதியேகமாக கவனிக்க வேண்டும் என்று ஜான் சொல்லி இருந்த படி மற்ற பாட்டிகளை விட ஒரு படி மேலே போய் கவனித்துக் கொண்டாள் மரகதம். கோமதி இன்னும் குற்ற உணர்வுடனே இருந்தாள். என்றாவது மரகதத்திடம் சொல்லவேண்டும் என்று நினைபாள். ஆனால் பயம் சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

முத்துவின் கல்யாணம் சிறப்பாக நடந்த பின் அவர்கள் பிரபு கொடுத்திருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்றார்கள். பால் காயிச்சி அவர்கள் குடிவந்தார்கள். மரகதம் வந்திருந்தாள். ஈஸ்வரியும் வந்திருந்தாள்.

“முத்து...அடுத்த வருடமே உனக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கணும். சரி நான் வரட்டுமா?”

“அம்மா..நீங்க மட்டும் என் வாழ்க்கையை சீர் படுத்திக் கொடுக்கலேன்னா நான் நிலை குலஞ்சு போயிருப்பேன். எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை...” முத்து அழுது கொண்டே சொன்னாள். “அடிக்கடி வந்து போங்கம்மா.” என்று தங்கப்பன் வேண்டுகோள் விடுத்தான்.” ஈஸ்வரியும் கண் கலங்கினாள். பிரபுவும் மரகதமும் சேர்ந்து நிற்க பார்வதி பரமேஸ்வரன் போல் வந்து ரட்சிப்பதாகவே முத்துவுக்கும் தங்கப்பனுக்கும் தோன்றியது. குழந்தைகள் இருவரும் பாதுகாப்பாக உணர்ந்து புன்னகைப்பது தெரிந்தது. ஒரு அழகான குடும்பம் ரத்த பந்தம் கொண்டு தான் அமைய வேண்டும் என்பதில்லை என்று மரகதம் புரிந்து கொண்டாள். இது தான் வரம். முத்து அந்தக் குழந்தைகளுக்கு கொடுத்த வரம்.


நதி ஓடும்...
 
Top