கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீரோட்டம்: அத்தியாயம்-8

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-8

ஜான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பிரபு போன் செய்து அவன் மரகதத்தை சந்தித்ததை சொன்னான்.

“பாசடிவ்வா தான் போயிட்டிருக்கு சார்...நாம கொஞ்சம் டைம் கொடுப்போம். அவங்க பிடிச்சிருக்கா இல்லையான்னு முடிவு பண்ணட்டும். அவசரப்படவேண்டாம்.” என்று பிரபு சொன்னதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் மனம் சற்று அமைதி அடைந்தது. மரகதத்தை திருமணம் செய்யச் சொல்லி அவர் அவ்வப்போது வற்புறுத்தி வந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் ஏதாவது ஏளனமாக சொல்லி அவரை நோகடிப்பாள். காயப்பட்ட அவள் மனம் அப்படி பேசச் சொல்கிறது என்று விட்டு விடுவார். குழந்தை நெஞ்சில் உதைத்தால் அதுவும் ஒரு சுகம் தான் என்று நினைப்பார். நிறைய அழுதிருக்கிறார். அவரால் தன் சொந்த குடும்ப வாழ்கையில் முழு மனதாக ஈடுபட முடியவில்லை. சுருக் சுருக் என்று அவர் மனசாட்சி குத்தும். சாந்தாவின் ஏமாற்றம், அவளால் பெற்ற குழந்தையை பார்க்கக் கூட முடியாத அவலம்...அதனால் ஏற்பட்ட வெறுப்பு...அருந்ததி மேல் அவள் காட்டிய பாராமுகம்....எல்லாம் சேர்ந்து அவளை ஒரு மனநோயாளியாக்கிக் விட்டது. அவள் கணவனின் கோபம்...சொக்கலிங்கத்தின் குற்றச்சாட்டு...அவனின் விலகல்...மொத்தத்தில் சாந்தா ஒரு போராட்டமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து முடித்திருக்கிறாள். இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்று அவர் மனம் புழுங்கியது. குற்ற உணர்வே அவரை நிம்மதி இழக்கச் செய்தது. எந்த நாட்டில்...எத்தனை சொகுசாக வாழ்ந்தால் தான் என்ன? கொட்டிய பாலை அள்ளமுடியுமா? சாந்தா சந்தோஷமாக இருந்திருந்தால் அவர் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பார். அவளைக் காதலிக்கும் போது அவள் சொன்ன முதல் வார்த்தை அவர் நியாபகத்திற்கு வந்தது.

“எனக்கு மத சார்பான காழ்ப்பு உணர்ச்சி கிடையாது. நல்ல மனசுதான் முக்கியம். நீங்க என்னை காதலிப்பதாக சொல்றீங்க...எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு...ஆனா மதம் ஒரு தடை கல்லாக நம்மை பிரித்து விடும்...எங்க அம்மா ரொம்ப ஆசாரம்...வேண்டாம் ஜான்...”

“நான்சென்ஸ்...மனசுகள் ஒன்றாகி விட்டால்...மதம் என்ன செய்ய முடியும்? எங்க வீட்டவர் ரொம்ப பரந்த மனம் உடையவர்கள்...நீ இம் என்று சொல். மற்றதை நான் பார்த்துகிறேன்..” இருபத்தி மூன்று வயதின் அறியாமை அவரை வாக்கு கொடுக்க வைத்தது. சாந்தா மகிழ்ந்து போனாள். விதையாக இருந்த காதலை அவர்கள் ஆலமரமாக வளர்த்தார்கள். ஜான் மேல் வைத்த நம்பிக்கை அவளை அதற்கு மேல் சந்தேகிக்கவிடவில்லை. அழகான நாட்கள்...உலகமே தங்கள் இருவரின் கைக்குள் என்பது போல் உணர்த்தார்கள். பட்டம் போல் உயர உயர பறந்தார்கள். நூல் அருந்ததும் தான் தெரிந்தது பட்டத்தின் உயரம் தரைமட்டம் தான் என்று. முதலில் எல்லாம் சுலபமாகத் தெரிந்தது. அவனின் பெற்றோர் சம்மதித்தனர்.

“ஒரு கிளாட் நியூஸ் சாந்தா...அம்மாவும் அப்பாவும் நம் கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டார்கள். உங்க வீட்டிலே வந்து அவங்களை நான் கன்வின்ஸ் பண்றேன்.” சாந்தா சந்தோஷத்தில் மிதந்தாள். உடனே கல்யானத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேளுங்கள் என்று வற்புருத்தினாள். ஒரு சின்ன ஜானோ அல்லது ஒரு சின்ன சாந்தாவோ முளைத்து வளர்வது இருவருக்கும் தெரியும். குருத்துகளின் நம்பிக்கை அடியோடு சிதைந்தது. ஜான் வந்து அவளின் அம்மாவிடம் பேசிய போது சாந்தாவே திடுக்கிட்டாள். அவள் இதை எதிர்பார்கவில்லை. சாந்தாவின் அப்பா நீங்க சொல்வது நடக்காது என்று திட்டவட்டமாக சொன்னார்.

“எதுக்கு தயங்கறீங்க? சாந்தா மதம் மாறி லில்லி என்ற பெயருடன்...சர்ச்சில் கல்யாணம் பண்ணிக்க சம்- மதிக்கணும் என்பது என்ன அவ்வளவு தகாத செயலா?” என்ற போது சாந்தா அடி வாங்கியது போல்

உணர்ந்தாள். இதை ஏன் அவன் முன்னமே சொல்லவில்லை? அம்மா ரொம்ப ஆசாரம் என்று அவள் சொல்லி இருந்ததை அவன் எப்படி மறந்தான்? மதம் மாறாமல் கல்யாணம் என்று சொல்லி இருந்தால் கூட அப்பா- வாவது சம்மதித்திருப்பாரே...”ஜான்...நீங்க இது பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே..” என்றாள் அதிர்ச்சியுடன். பேச்சு வார்த்தை தடித்தது...சாந்தாவின் அப்பா ஆவேசப்பட்டார். ஜான் கடைசியில் அப்படி சொல்லிருக்க வேண்டாம். சொல்லிவிட்டான். எப்படியும் சாந்தா அவர்கள் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள். எனவே அதை அவள் அவர்களிடம் சொன்னால் வேறு வழி இல்லாமல் சம்மதிப்பார்கள் என்று உறுதியாக நம்பினான். எனவே தைரியமாக சொன்னான். “ உங்கள் மகள் மதம் மாற சம்மதிக்காவிட்டால் இந்தக் கல்யாணம் நடக்காது. நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.” என்று அதிரடியாக தெரிவித்தான். சாந்தாவின் அப்பாவும் அம்மாவும் ஒரு சேர சொன்னார்கள் “அப்படி மதம் மாறி கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.”

“சரி...நீங்களே எங்களைத் தேடி வரவீங்க. நான் வரேன்..” போய்விட்டான். சாந்தா திடுக்கிட்டாள். நானாச்சு கன்வின்ஸ் பண்ண என்று மார் தட்டியவன்...நயந்து பேசாமல் அவளை திராட்டில் விட்டு விட்டு ஓடுகிறான்.

“ஜான்...என்ன இப்படி பண்ணிட்டீங்க?”

“வேறு என்ன செய்வது சாந்தா? எங்க வீட்டிலே கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பிறகு என்ன? லில்லி என்று மாறிக் கொள்வது சும்மா பேருக்குத்தான். கல்யாணம் முடிந்ததும் நீ சாந்தா தான். இப்படி அதிரடியாக சொல்லாவிட்டால் உங்க வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள்.”

“ஜான்...புரியாம பேசாதிங்க...நான் தயங்கத் தயங்க என்னை...என்னை...தாய் ஆக்கியது நீங்க தான். உங்க பொறுப்பு. மதம் மாற ஒரு நாளும் எங்க வீட்டிலே சம்மதிக்க மாட்டாங்க. நாம இரு வீட்டார் சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணி வாழ்கையை தொடங்குவது தான் ஒரே வழி.”

“எங்க பெற்றோர் உன்னை ஏற்றுக்கொள்ள முழு மனதோடு சம்மதம் தெரிவித்த பிறகு நான் எப்படி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“அப்ப..இதுக்கு என்ன தான் வழி?”

“நீ தான் உன் நிலைமையை எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்க வேண்டும் சாந்தா. நான் காத்திட்டிருக்கேன்.’

தீர்வு சொல்லிவிட்ட நீதிபதி போல் அவன் அவள் நிலைமைக்கு காரணம் அவள் மட்டும் தான் என்று ஒதுங்கி கொண்டது பேரதிர்ச்சியாக இருந்தது சாந்தாவிற்கு. கிட்டத்தட்ட முப்பத்திரண்டு வருடத்திற்கு முன் சாந்தா போன்ற பெண்ணின் நிலைமை இப்படித்தான் முடிந்திருக்கும் என்று ஜான் இன்று உணர்கிறார். அவரின் கோழைத்தனம் தான் இப்படி பட்ட அவலத்திற்குக் காரணம் என்று அவர் அன்று ஒத்துக்கொள்ளவில்லை. இன்று ஒத்துக்கொள்கிறது மனது. என்ன பிரயோஜனம்? கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம். அதற்கு பின் நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்க்கவே ஜானுக்கு நடுங்கியாது. சாந்தா உண்மையச் சொல்ல பயந்து மாதங்களை கடத்தினாள். வாந்தியும் மாயக்கமும் அதிகமாக, அவளின் அம்மா மருத்துவரிடம் கூட்டிப் போக, குட்டு வெளிப்பட்டது. அன்று அப்பாவிடம் அவள் பெல்ட் அடி வாங்கினாள். கருவை கலைக்க முடியாத வளர்ந்த நிலை. சாந்தா கதறிக் கொண்டு எல்லாவற்றையும் அவனிடம் போனில் சொன்னாள். “நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை ஜான்...நான்..நான்...சாகத்தான் வேண்டும்...”

“அய்யோ...வேண்டாம் சாந்தா...உன் வீட்டவரிடம் பேசறேன்.’

“என் வீட்டவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை. உங்க வீட்டவரிடம் பேசுங்கள். முதலில் ஹிந்து கோவிலில் தாலிக் கட்டி கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்...உங்கள் வீட்டிற்கு வந்த பின் நான் லில்லியாகவோ ரோசியாகவோ வாழ்கிறேன்...சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம். இது தான் ஒரே வழி.’

அவன் அப்பா அம்மாவிடம் பேசினான். “ஜான்...அதெல்லாம் அந்தப் பெண் அப்படித்தான் சொல்வாள். காரியம் முடிந்ததும் முடியாது என்று சொல்லிவிடுவாள். எங்களுக்குத் தெரியாதா இவர்கள் பற்றி. நீ இந்த பொய் வாக்கு நம்பி ஏமாறாதே.” அவர்கள் எழுந்து போய்விட்டார்கள். அவன் மெதுவாக தாய் தனியாக இருக்கும் போது தான் செய்த தவறை சொன்னான். “பாவம்மா அந்தப் பெண் என்னால் கர்பமாகிவிட்டாள்...ப்ளிஸ் இரக்கம் காட்டுங்கள்...”கெஞ்சினான்.

“இது வேறயா? கல்யாணத்திற்கு முன்..ச்சே...ஒழுக்கம் கெட்டப் பெண்...கண்டிப்பா வேண்டவே வேண்டாம்.”

“அம்மா...அப்படிப் பார்த்தால் நானும் ஒழுக்கம் கெட்டவன் தானே...என்னை துரத்தி விடுவீங்களா?”

“நீ ஆம்பளைடா...முன்னே பின்னே தான் இருப்பே... அவளுக்கு புத்தி எங்கே போச்சு? சரி சரி விடு...உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அந்த சாந்தாவோ காந்தாவோ...அவளப் பத்திக் கவலை படாதே. அது அவங்க பாடு.” ஜான் வெறுத்து விட்டான். அவன் வீட்டில் இப்படி குறுகிய மனப்பான்மையுடன் இருப்பார்கள் என்று அவன் நினைக்கவே இல்லை. அப்பா உயர் அதிகாரி. அம்மா ஒரு டாக்டரின் மகள். பட்டம் வாங்கியவள். எப்படி இப்படி மத வெறி பிடித்து அலைய முடிகிறது? துணிந்து அவன் சாந்தாவின் பெற்றோரிடம் வந்தான். “ஆன்ட்டி...நடந்தது நடந்து விட்டது. நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கக் கூடாதா? உங்க காலில் வேணா விழறேன்...எங்களை சேர்த்து வையுங்க...கெஞ்சி கேட்கிறேன்...’

அவன் துரத்தி அடிக்கப் பட்டான். பிறகு சாந்தா யாரோ ஒரு தூரத்து சொந்தக் காரர் வீடிற்கு அனுப்பப் பட்டாள். குழந்தை பிறந்த பின் அவனை கூப்பிட்டார்கள். “இந்தச் சனியனை எடுத்துக் கொண்டு ஓடிவிடு. நாங்க சாந்தாவிற்கு வேறு கல்யாணம் பண்ணப் போகிறோம்.” சாந்தாவின் அம்மா கோமதி, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சைக் குழந்தையை அவனிடம் பொத்தென்று பொட்டலம் போல் தூக்கிப் போட்டாள். “சாந்தாவிற்கும் உனக்குமான பந்தம் இத்துடன் முடிந்தது. அந்த சனியனை நீ வளர்த்துக்கோ இல்லை அனாதை ஆஸ்ரமத்தில் சேர். இப்ப ஊர் போய் சேர்...” கையில் குட்டிக் குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றான். சனியனாமே...எப்படிப் பட்ட அரக்கர்கள் இவர்கள்! அவன் மட்டும் அவசரப்படாமல் இருந்திருந்தால்...திருமணத்திற்குப் பின் இக் குழந்தை பிறந்திருந்தால்....இரு வீட்டாரும் கொண்டாடி இருப்பார்கள். இப்பொழுது சனியன் என்று வெறுக்கப்பட்டு தாய்ப் பால் இல்லாமல் கதறிக்கொண்டிருக்கிறது. குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான். குழந்தை புன்னகைத்தது. எவ்வளவு அழகான குழந்தை. அது என்ன பாவம் செய்தது? ஏன் இப்படி வெறுக்கப்படவேண்டும்?

“நான் உனக்கு தாயும் தந்தையுமாக இருப்பேன் குட்டிம்மா. உன்னை கைவிடவே மாட்டேன்.” சாந்தா கேட்டுக் கொண்டது போல் குழந்தைக்கு மரகத மேரி என்று பெயர் வைத்தான். தூரத்து சொந்தமான ரோசியிடம் ஒப்படைத்தான். அவளிடம் எல்லா உண்மையும் சொன்னான். அவள் தனி ஆளாக இருந்தாள். கணவனால் விரட்டிவிடப்பட்டவள். குழந்தை அவளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்ததாக அவள் நினைத்தாள். ஐம்பது வயது பெண்ணிற்கு பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்வது கஷ்டம் தான். ஆனால் அவள் அதை சுமையாக நினைக்கவில்லை. பாசத்தைக் கொட்டி வளர்த்தாள். பள்ளியில் சேர்க்கும் பொழுது அப்பா அம்மா என்று அவன் தன் பெயரையும் சாந்தாவின் பெயரையும் கொடுக்கத்தான் ஆசைப்பட்டான். ரோஸி தடுத்துவிட்டாள்.

“வேண்டாம் ஜான். உனக்கு கல்யாணம் ஆகவேண்டும். உண்மை தெரிய வந்தால் சிக்கலாகி விடும். கார்டியன் என்று உன் பேரைப் போட்டுக் கொள். உன் நண்பனின் குழந்தை, ஒரு விபத்தில் அவர்கள் இறந்துவிட்டர்கள், நான் வளர்க்கிறேன் என்று சொல்லு...அது தான் உனக்கும் நல்லது குழந்தைக்கும் நல்லது. நாள பின்னே அவள் பெரியவளாகி உன் கூட வருவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது? உண்மை தெரிந்தால் நொறுங்கி விடுவாள்.” என்று அவனை சம்மதிக்க வைத்தாள். அவனுக்கும் கல்யாணம் ஆனது. அந்த சமயம் அமெரிக்கா போனான் மனைவியுடன். மனைவியிடம் தன் நண்பனின் குழந்தை, ரோசி பாதுகாப்பில் வளர்கிறாள் என்று சொல்லி வைத்தான். அவன் மனைவி அதை நம்பினாள். இன்னமும் நம்புகிறாள். ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் அவளிடம் உண்மையை சொல்ல அவனுக்கு தைரியம் வரவில்லை. ரோசி இறந்த போது ஒடிந்து போய் மரகதம் அழுதபோது அவரால் உண்மையை அவளிடம் மறைக்க முடியவில்லை. மரகதம் மனம் மிகவும் காயப்பட்டது. அப்பா அம்மா இருவரும் இருந்தும் அவள் அநாதை என்ற பட்டம் சுமந்து மறைவில் வாழவேண்டும். அந்தப் பதினாறு வயது சிறுமியால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. பாழும் சமுகம் மீது ஜானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “நீங்க செய்த தவறுக்கு சமுகத்தை பழி சொல்லாதீர்கள்.” என்று மரகதம் சொன்னதில் அர்த்தம் இருக்கத்தான் செய்தது. போன தலைமுறை மகன்களையும் மகள்களையும் கோழைகளாக ஆக்கியது பெற்றோரின் ஆதிக்க மனப்பான்மை தான். சாந்தா அங்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாளோ என்று நினைத்து உருகினார். தன் மனைவியுடன் அவர் முழு மகிழ்ச்சியுடன் வாழ முடியாமல் தவித்தார். சென்ற தலைமுறை ஆண்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க முடியாமல் இருக்க...இந்த தலைமுறை ஆண்களும் பெண்களும் துணிந்து பெற்றோர் சொல் மீறினர். சாந்தாவின் மகள் அருந்ததி அந்த ரகம். அவளும் தன் தாயைப் போல் வேற்று மதமான அஸ்வினைக் காதலித்தது விதியா என்று சோர்ந்து போனார். சாந்தாவே அதை எதிர்த்தாள் என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. சாந்தாவிடம் அவர் போனில் மன்றாடினார் “சாந்தா உன்னை உன் பெற்றோர் மடக்கி உன் வாழ்க்கையை கெடுத்தனர். நீயும் அதையே செய்யலாமா? ப்ளீஸ்...அவர்களை ஏற்றுக் கொள். நீயும் உன் அம்மா போல் இருக்காதே...” என்றார். “உங்க ஜோலி என்னவோ அதை பார்த்தக் கொண்டு போங்கள். உங்க அறிவுரை தேவையில்லை.” சாந்தா சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள். அருந்ததி அஸ்வினைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள் என்று கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டார். கடைசி வரை சாந்தா தன் மகளை மன்னிக்கவே இல்லை என்பதற்கு என்ன காரணம் என்று அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்ல. நடந்ததை எல்லாம் நினைப்பது அவரைப் பொறுத்தவரை சுகமானதாக இல்லை. காலத்தை திருப்பி போட்டால் அவர் கண்டிப்பாக பெற்றோரை மீறி சாந்தாவை கைபிடித்திருப்பார். “ எங்களை விட அவனுக்கு அவன் காதல் தான் முக்கியமாக போய்விட்டது. நேற்று வந்தவள் பெருசாகப் போய்விட்டாள்.” என்று புலம்பும் பெற்றோரிடம் அவர் சொல்வார்—“பொம்மைக்கு கீ கொடுத்த மாதிரி உங்க மகன் நீங்க போட்ட ரூட்டிலே தான் போகணும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? பொண்ணு நல்லா பெண்ணாக இருந்தால் போதாதா? கட்டி வையுங்கள் என்ன குறைந்து விடும்?” என்று கேட்டிருப்பார். பின் சட்டப்படி கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்பார். அவர் பண்ணாததை துணிந்து அருந்ததி செய்துவிட்டாள். சாந்தாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருந்ததி குழந்தை உண்டாகி இருந்த போது அவளை வீட்டிற்கு அழைத்து மன்னித்து சீராடவில்லை சாந்தா. படி ஏறாதே...என்று கல் மனதுடன் சொன்னாள். “என்ன சாந்தா இது.? உன் மகள். முறையாக பிறந்த பெண். எதுக்கு இவ்வளவு கோபம்.? அவள் உண்டாகி இருக்கிறாள். உன் கையால் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படமாட்டாளா?” அவர் சொன்னது தான் தாமதம். சாந்தா சீறினாள் “வாயை மூடுங்க...முறையா பிறந்த பெண்...முறையில்லாமல் பிறந்த பெண் என்று ஒரு தாய்க்கு வித்தியாசம் உண்டா? மரகதம் அனுபவிக்காத எதையும் இவளும் அனுபவிக்கவேண்டியத்தில். நான் செய்த அதே தப்பைத் தானா அவளும் செய்யவேண்டும்? என் சந்தோஷத்தில் மண் அள்ளிப் போடவேண்டும்? உங்கள் மதத்தையே நான் வெறுக்கிறேன்.ஒரு வேளை நீங்க தான் அவளுக்கு இப்படி ஒரு வழியை சொல்லிக் கொடுத்தீர்களா? இதில் தலையிட வேண்டாம்.” ஜான் அவளின் மனோபாவம் என்ன வென்று புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். என் மேல் வெறுப்பா? மதம் மேல் வெறுப்பா? சமுகம் மேல் வெறுப்பா? புரியவில்லை. மரகதம் ஒரு வித வெறுப்பில் இருக்கிறாள் என்றாலும் அவள் தனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்து மன ஆறுதல் அடைந்து மனுஷியாக வாழ்கிறாள்...சாந்தா மட்டும் ஏன் ஏமாற்றங்களை மறக்காமல் கொண்டாடி வருகிறாள் என்று அவருக்குப் புரியவேயில்லை. மரகதம் ஒரு நாள் அவரிடம்—பத்து வருடம் முன் “சார்...நான் ஒரு தீர்மானம் பண்ணி இருக்கேன்” என்றாள். என்ன சொல்லு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்று ஆர்வமுடன் கேட்டார். “எப்பவும் அதே பேச்சு தானா? இங்கே கோமதிப் பாட்டி என்று சுமார் எழுபது வயது பெண்மணி என் வீட்டு வாசல் வந்து அழுதார்கள். மகன் மகள் எல்லோரும் கைவிட்டு விட்டார்களாம். கணவனும் இறந்து விட்டாராம். அடைக்கலம் கேட்கிறார். நான் இந்த மாதிரி கைவிடப்பட்ட பாட்டிகளுக்கு ஒரு இல்லம் ஆரம்பிக்கப் போகிறேன். உங்க உதவி தேவை. பண உதவி. நீங்க செய்த பாவத்துக்கு இது ஒரு பிராயச்சித்தம் என்று எடுத்துக் கொண்டு செய்வீர்களா?” உடனேயே பதில் சொன்னார். “கண்டிப்பா செய்கிறேன்” மரகதம் மகிழ்ச்சி அடைந்தாள். அதற்கு பனி வீடு என்று பெயர் வை என்றார். அவளிடம் அந்தப் பாட்டி சாந்தாவின் அம்மாதான் அது என்று அவர் சொல்லவில்லை. எந்த குழந்தையை சனியன் என்று வெறுத்தாளோ அந்தக் குழந்தையிடமே அடைக்கலமாக போய் சேர்ந்தாள் சாந்தாவின் அம்மா கோமதி. மரகதத்திற்கு அது இன்னும் அவள் பாட்டிதான் என்று தெரியாது. இப்படித்தான் பனி வீடு ஆரம்பிக்கப்பட்டது. “கோமதிப் பாட்டியை உன் சொந்த பாட்டி போல் நீ பார்த்துக்கணும் மரகதம்.” என்று சொல்லியதன் உள் அர்த்தம் மரகதத்திற்கு புரியாது. ஆனால் கோமதிப் பாட்டியை ஜான் சொன்னது போல் தன் பாட்டியாகவே அவள் தனி அக்கறையுடன் கவனித்தாள்.

நதி ஓடும்...
 
Top