அத்தியாயம்—1
இரவிற்கு உலகை தானம் செய்துவிட்டு, மாலை நேரம் மெல்ல நழுவிக் கொண்டது. அப்பாடா சூரியன் ஒழிந்தான் இனி நம் ராஜ்ஜியம் தான் என்று வீடுகளிலும் தெருக்களிலும் மின்சார விளக்குகள் பெருமையுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பெரிய பங்களாவின் போர்டிகோ முன் ராணித்தனத்துடன் வந்து நின்ற பியூக் வண்டியிலிருந்து சந்திரன் இறங்கினான்.
வீடு இருளில் மூழ்கியிருந்தது. ஸ்விட்சை தட்டிவிட்டு விளக்கை எரிய விட கூடவா முடியாது? வண்டி சத்தம் கூடவா கேட்கவில்லை? காரின் ஹாரனை அழுத்தினான். சிறிது நேரத்தில் மாடி ஜன்னலில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. சங்கீதா எட்டிப் பார்த்தாள். அவள் கதவு திறந்து அவன் வீட்டினுள் நுழைய பத்து நிமிடம் ஆயிற்று.
“உனக்கு காது செவிடா? இல்லை கண் குருடா?”
மாடிப் படி ஏறிக்கொண்டே கேட்டான். அவள் மௌனமாக பின் தொடர்ந்தாள்.
“ஒ...ஊமையாகிவிட்டாயா?...”
“கைதிகள் பின் எப்படி இருப்பார்கள்? நடக்கிற அநியாயங்களை பார்த்துக் கொண்டு செவிடாய், குருடாய், ஊமையாய் இருக்கணும் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள்?” சங்கீதாவின் குரலில் தெறித்த காட்டம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்தான்.
“உங்கள் சிரிப்பால் உங்க மன இருட்டை மறைக்க முடியாது.”
“ஆனால் உன் மன இருட்டை விரட்டமுடியும்.”
“யார் சொன்னது என் மனம் இருட்டா இருக்குன்னு?”
“அதான் வீட்டையே அந்தகாரத்தில் வச்சிருக்கியே. மணி பத்தாகிறது.
ஆறு மணிக்கே எரிய வேண்டிய விளக்குகளை தட்டிவிட உனக்கு தோணலை. டிப்ரஷன் இருந்தா சொல்லிடு டாக்டரிடம் சொல்லி மாத்திரைகள் வாங்கித் தருகிறேன்.” என்றான் பெருந்தன்மை தொனிக்கும் குரலில்.
இப்பொழுது அவள் பெரிதாக சிரித்தாள். மகிழ்ச்சி இல்லாத சிரிப்பு. கோபமும் வருத்தமும் நிறைந்த சிரிப்பு. .
“உனக்கு பயித்தியம் பிடித்துவிட்டதா? காரண காரியம் இல்லாம சிரிக்கிறே.”
“மிஸ்டர் சந்திரன்...” என்று அவள் கோபமாக ஆரம்பிக்கும் பொழுது அவன் அவளைப் பார்த்து “உஷ்” என்றான். அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில்
படுத்திருக்கும் மெலிந்த உருவத்தை நெருங்கி குனிந்து மெதுவாக
“எப்படி இருக்கீங்க மாமா?” என்றான். அவன் கண்ணில் தெரிந்த கனிவும், வார்த்தைகளில் வழிந்த வாஞ்சையும், சற்று முன் இருந்த சந்திரன் வேறு இவன் வேறு என்று காட்டிற்று. ஐம்பது வயது தாண்டிய வெங்கடேசன்
சிரமப்பட்டு அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றார்.
“மாமா தாகமா இருக்கா? தண்ணி வேணுமா?” அவர் கண்கள் ஒளிர்ந்து
ஆம் என்றது. அவர் கண்கள் பேசிற்று.
“சங்கீதா...எவ்வளவு நேரமா தாகம்னு தவிச்சிட்டிருக்காரோ? இவரை கவனிக்கத் தானே நீ இருக்கே? இப்படி பொறுப்பில்லாம ஏன் நடந்துக்கற.? லைட்டையும் அணைச்சிட்டு போயிட்டே. பாவம் என்ன கஷ்டப்பட்டாரோ”
அறை மூலையில் உள்ள மண் பானையிலிருந்து நீர் எடுத்து குடிக்க வைத்தான். அவர் தாகம் தீர்ந்த திருப்தியை கண்களில் காட்டினார்.
அதற்குள் சங்கீதா ஆப்பிள் துண்டங்களும் பாலும் எடுத்து வந்தாள். அவளுக்கே விநோதமாக இருந்தது. யாருக்கோ கட்டாய நர்சாக பணி புரிந்து கொண்டிருகிறாள். இந்தச் சந்திரன் நல்லவனா கெட்டவனா என்று தெரியவில்லை. வலையில் அகப்பட்ட புறா போல் ஆகிவிட்டது அவள் கதை.
“டாக்டர், மாலை ஐந்து மணிக்கு வந்து பி.பி ,சுகர் எல்லாம் செக் பண்ணிட்டு போனார். எல்லாம் நார்மலாக இருக்காம். ஜுரம் இன்னும் இரங்கலை. தசைகள் வலிக்கிறதா என்று கேட்டதற்கு, ஆம் என்று கஷ்டப்பட்டு தலை ஆட்டினார். டாக்டர் ஊசி போட்டுவிட்டு மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருக்கார். அந்த அசதியில் நல்லா தூங்கிட்டார். அதான் விளக்கு வெளிச்சம் வேண்டாம்னு நினைச்சேன்...” சங்கீதா விளக்கினாள்.
“சரி...மாமாவிற்கு பாலும் ஆப்பிளும் கொடுத்திட்டு வா. உன் கூட பேசணும்.”
முதல் முறையாக பேசணும் என்று சொல்கிறான். எப்பொழுதும் நான் சொன்னதை நீ கேட்கணும் என்று தான் சொல்வான்.
குனிந்து மாமாவின் தலையை கனிவுடன் தடவி சொன்னான்.
“மாமா...சாப்பிடுங்க...ரெஸ்ட் எடுங்க.” அவன் போகத் திரும்பினான். அவன் கண்களில் கண்ணீர் மின்னியதை கண்டாள் சங்கீதா. அவன் முகம் வாடிவிட்டிருந்தது. இவ்வளவு பாசமானவனா?
தன் அறையில் வந்து உட்கார்ந்தவன் வெங்கடேசன் மாமாவைப் பற்றி
சிந்தித்தான். எவ்வளவு கம்பீரமான மனிதர்! இரும்பு மாதிரி உடம்பு. நடையில் அத்தனை மிடுக்கு. வெண்கலம் மாதிரி குரல். உற்சாகமும் துடிப்பும் உள்ள கண்கள். மலை போல் இருந்தவர். அத்தனை உறுதி---அவர் இப்பொழுது நடக்க முடியாமல்...பேச முடியாமல் வியாதி என்ற சிறையில், நீதிபதியான
கடவுளின் தீர்ப்புக்காக பரிதாபமாக காத்திருக்கிறார்.
மரணம் என்ற தீர்ப்பு மட்டுமே அவருக்கு இச்சிறையிலிருந்து கிடைக்கும் விடுதலை ஆகும். எச்சில் கூட முழுங்க சிரமப்படும் அவரின் எஞ்சிய வாழ்வில் சிறிது நீரோட்டம் பாய்ச்சுவது போல் சூழ்நிலையை அமைத்துக்
கொடுத்திருந்தான். நரம்பு தளர்ச்சி நோய் அவரை தின்று கொண்டிருந்தது.
ஐந்து வயதில் பெற்றோரை இழந்த சந்திரன் மாமாவிடம் தான் வளர்ந்து ஆளாகியிருந்தான். அத்தை மங்களம் மன நோயாளி ஆகி வெகு காலம் ஓடிவிட்டது. இப்பொழுது கணவன் மரணப் படுக்கையில் இருப்பது கூட உணராமல் அக்காவின் பராமரிப்பில் இன்னும் மன நோயாளியாகவே இருக்கிறாள். மனநோயாளியான மனைவியையும் சிறுவனான அவனையும் மனம் தளராமல் நன்கு பார்த்து வளர்த்துவிட்டவர் தான் அவர். தங்கமான மனிதர். இன்று மரம் சாய்ந்தது போல் கிடக்கிறார். ஆறு மாதம் முன்பு வரை கூட கம்பீரமாக நடந்தவர் தானே! இன்று படிப்படியாக இந்த நிலையை அடைந்து விட்டார். அவனால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு படிக்க முயற்சித்தான். சங்கீதாவிடம் இன்று உண்மையை சொல்லிவிடலாமா? அவள் நம்புவாளா? அவன் முகத்தில் கவலை வந்து உட்கார்ந்துகொண்டது.
பெரியவருக்கு பாலும் பழத்துண்டுகளும் கொடுக்க அரைமணிக்கு மேல் ஆயிற்று. ஆப்பிள் துண்டங்களை அவர் மெல்ல வாயில் அசைக்கி அசைக்கி
முழுங்க நேரமாயிற்று. பாலை மிடறு மிடறாக செலுத்தி குடிக்க வைக்க வேண்டியதாயிற்று. சங்கீதா பொறுமையாக அவருக்கு ஊட்டினாள்.
“அய்யா...வேறு ஏதாவது வேணுமா?” வேண்டும் வேண்டாம் என்று சிலேட்டில் எழுதியிருந்ததை அவர் அருகே காட்டினாள். அவர் தட்டு தடுமாறி வேண்டும் என்பதில் சுட்டு விரலை வைத்தார்.
“என்ன வேண்டும் அய்யா?” என்று அதுவா இதுவா என்று எழுதிக் காட்டக் காட்ட “சிறுநீர் கழிக்க வேண்டுமா?” என்று எழுதியதும் அவர் கண்கள் ஒளிர்ந்தது. பெட் பானை வசதியாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.
வேட்டியை தளர்த்தினாள். அவர் சிறுநீர் கழித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். பிறகு சிறிது நேரம் அவருக்கு மகாபாரதக் கதையை வாசித்துக் காண்பித்தாள். பீஷ்மர் மரணத்தை எதிர்நோக்கி அம்பு படுக்கையில் கிடந்தது போல் இவரும் கிடக்கிறாரே என்று எண்ணினாள். அவள் வாசித்து முடித்தாள். அவர் கண் அயரத் தொடங்கியதும் மெல்ல எழுந்து இரவு விளக்கை எரியவிட்டு அறையை லேசாக பாதி மூடினாள். அவர் தலைமாட்டில் பெல் இருந்தது. அவர் இரவில் தேவையானால் பெல் அடிப்பார். அவள் எதிர் அறையில் படுத்துக் கொள்வாள். இங்கு வந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மூன்று மாதமாகிறது....முதலில் அவர் திக்கித் திக்கி பேசிக் கொண்டிருந்தார். கண்ணீர் வழிய கையெடுத்து கும்பிட்டு,
“என் இறுதி மூச்சுவரை என்னை விட்டுப் போகாதேம்மா....என் மகளே..”
என்று வேண்டினார். அவருடைய தொலைந்து போன மகளாக என்னை எண்ணுகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டாள். மனிதாபிமானம் அவளைக் கட்டிப் போட்டது. அம்மாவும் தம்பியும் அவளைக் காணாமல் எப்படியெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ! இன்று இரண்டில் ஒன்று
அந்தச் சந்திரனிடம் கேட்டுவிட வேண்டும். என்னை எப்பொழுது என் வீட்டில் கொண்டு விடப் போகிறாய்? என்னால் இனி இங்கு இருக்க முடியாது. எவ்வளவு திமிர் இருந்தால் அவளைக் கடத்திக் கொண்டு வந்து கைதி போல் அடைத்து வைத்திருப்பான்? பொய் மேல் பொய்யை அடுக்கிக் கொண்டு போவான். பெரியவர் மேல் பரிதாபப்பட்டு அவள் இருக்கிறாளே ஒழிய இவன் அரட்டல் உருட்டலுக்கு பயந்து அல்ல.
சங்கீதா மிகவும் சூட்டிகையான பெண். பி.காம் டிஸ்டிங்ஷனில் தேறி இருந்தாள். படிக்கும்போதே கம்பியூட்டர் கோர்ஸ், ஷார்ட் ஹான்ட், கம்பியூட்டர் டைபிங் எல்லாம் சேர்த்தே தேறியிருந்தாள். ஒரு பிரமாண்டமான எலெக்ட்ரானிக் ஷோரூமான “ராயல் அண்ட் சன்ஸ்” யில்
அவளுக்கு நேர்முகக் கானலுக்கு அழைப்பு வந்தது. உற்சாக கனவுகளுடன்
நம்பிக்கையோடு சென்றாள். நேர்கானல் பண்ணியது இந்த சந்திரன் தான்.
இவன் தன் வாழ்வை அமாவாசை ஆக்குவான் என்று கண்டாளா என்ன!
“கோல்ட் மெடலிஸ்ட்...வாவ், எதுக்கு இன்டர்வியூ? டைரக்ட் அப்பாயின்மெண்ட் தான். உங்களை மாதிரி ஆட்களை கம்பெனிகள் அப்படியே இழுத்து போட்டுக் கொள்ளும்.” என்று உற்சாகத்துடன் சொன்னான்.
இதுவே சங்கீதாவின் முதல் இன்டெர்வியூ அனுபவம், ஆதலால் அவன் சொத்தை வார்த்தைகளை சுத்த வார்த்தைகள் என்று நம்பினாள். அது அவளின் முட்டாள்தனம் தானே! அப்பாயின்மென்ட் ஆர்டர் டைப் செய்து வரவழைத்து “மேனஜிங் போஸ்ட்...நாற்பதாயிரம் சம்பளம்” என்று ரீல் விட்டான். பிரமித்து வாய் பிளந்தது அவளின் இளமையின் அனுபவமின்மை—
யால் தான். தன் திறமைக்கு கிடைத்த வெற்றி என்று எண்ணிவிட்டாள்.
“ஒரு தேங்க்ஸ் கிடையாதா மிஸ் சங்கீதா? இருபத்தைந்து பேரை வடிகட்டி உங்களை செலக்ட் பண்ணியிருக்கோம்.”
“ஸாரி சர்...தேங்க்ஸ் சர். சந்தோஷத்தில் பேச மறந்தேன்.”
“நானும் வாயடைச்சுப் போயிருக்கேன்.”
“நீங்களா ஏன்?”
“இவ்வளவு அழகா இருக்கீங்களே..அப்படியே தேவலோகத்திலிருந்து ஊர்வசி
வாக்-இன் பண்ணிய மாதிரி...” என்று சொல்ல நினைத்து மாற்றிக் கொண்டு,
“இவ்வளவு ஸ்மார்ட்டா இன்டலிஜென்ட்டா இருக்கிற நீங்க...இவ்வளவு சிம்பிளா இருக்கீங்களே என்று வாயடைச்சுப் போயிட்டேன். “ என்று சொன்னான். நல்லசிவம் என்ற நபரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினான்.
“இவங்க மிஸ் சங்கீதா...டிரெயினிங்கிற்கு அழைச்சுப் போங்க.” என்றான்.
சங்கீதா நல்லசிவத்துடன் கதவு வரை போனபோது—
“ஒன் மினிட் மிஸ் சங்கீதா..” என்று அழைத்து நிறுத்தினான். அவன் தன் வாழ்கையையே நிறுத்தப் போகிறான் என்பதை அறியாமல், சங்கீதா மலர்ச்சியுடன் “எஸ்..சர்..” என்றாள். அன்றலர்ந்த புது புஷ்பம் போல் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! எளிமையான காட்டன் பாட்டியாலா சல்வார் தான் அணிந்திருந்தாள். பச்சையும் வெண்மையுமாக இந்த உடை இவளுக்கென்றே நெய்து தயாரிக்கப்பட்டது போல்...வாவ் அட்டகாசமான அழகு! டேய் சந்திரன்
நீ அதிர்ஷ்டசாலியடா...மனதுள் அவனுக்கு கங்கை புரண்டு பொங்கியது.
“சர்...கூப்பிட்டீங்க..”
“எஸ்...எஸ்...ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட் மேடம். நீங்க எங்க பிக் பாஸ்சை சந்திக்கணும். ப்ளீஸ்...அலுவலக நேரம் முடிந்ததும் என்னுடன் வந்து அவரை சந்திக்க முடியுமா? “ சங்கீதாவுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
“ஷுயூர் சர்...” என்று டக்கென்று சம்மதித்தது எவ்வளவு பெரிய தவறு! சிரித்து கௌரவமாகப் பேசி அவன் வீசிய வலையில் பொன் மீனாய் சிக்கிக் கொண்டுவிட்டாள்! வாக்கு கொடுத்தபடி மாலை அவனின் பியூக் வண்டியில் அமர்ந்து பயணித்தபோது எவ்வளவு கம்பீரமாக உணர்ந்தாள்! தன் திறமைக்கு ஏற்ற வெற்றி கிடைத்திருக்கிறது என்ற இறுமாப்பு வேறு!
“இது தான் எங்க பிக் பாஸ். “ என்று அவன் அறிமுகப்படுத்திய போது அந்த பங்களாவே தட்டாமாலை சுற்றியது. தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது.
இப்படித்தான் அந்த பங்களா சிறையில் வந்து சிக்கிக் கொண்டாள் சங்கீதா.
ஊஞ்சல் ஆடும்...
------
கீழே உங்கள் கருத்துக்களை பரிமாருங்கள்!