கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புயலில் ஒரு பட்டாம்பூச்சி 3

Appusiva

Moderator
Staff member
புயலில் ஒரு பட்டாம்பூச்சி
அத்தியாயம் 3

அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக கோதிவிட்டான். இவளும் ஒரு குழந்தைதானே என்று அவன் மனதில் தோன்றியது.
அவனின் கோதுதலில் லேசாக கண்விழித்த ராஜேஸ்வரி,
“சாரிடா… அசந்துட்டேன்….” என்றாள்.
“மணி எட்டாகப்போகுதுபா... வா... கொஞ்சமா சாப்பிட்டு படுத்துக்கோ... “ என்றான் பார்த்திபன்.
“ம்... வரேன்.. இவனுக்கு கொஞ்சமா ஊட்டிவிட்டேன். நீ படிப்பியேன்னு அப்படியே இவனை தூங்க வைக்க தட்டிக்கொடுக்க அப்படியே தூங்கிட்டேன்... “ என்று சொல்லியபடி எழுந்தாள் ராஜேஸ்வரி.
சாப்பிடும்போது எதுவும் பேசவில்லை. பத்மினியம்மா அவர்களுக்கு பரிமாறிவிட்டு அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார். பத்மினியம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு சென்ற அவரின் மகன் திரும்ப வரவேயில்லை. ஏதோ வெளியூரில் வேலையாம். அவனும் மருமகளும் சுமையாய் நினைப்பதை பத்மினியம்மா சொல்லி அழ, மனது கேட்காமல் தன்னுடன் இருக்கச்சொல்லி அழைத்து வந்துவிட்டாள் ராஜேஸ்வரி. அவளின் அம்மாவுக்கு துணையாக இருக்கச் சொல்லலாம் என்றுதான் முதலில் யோசித்தாள். ஆனால் அம்மாவுக்கு தனிமையை விட வேறு நல்ல துணை எப்போதும் தேவைப்பட்டதில்லை.
சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.
“எவ்வளவு படிச்சீங்க...?” என்றாள் ராஜேஸ்வரி.
“ஒரு பகுதிதாம்பா படிச்சேன்...” என்றான் பார்த்திபன்.
“அட... இவ்வளவு நேரமா ஒரு பகுதிதானா...”
“அதென்ன கதையா... வாழ்க்கைபா. நீ சொன்னபோது ஏதோ வேறமாதிரிதான் இருந்தது. ஆனா படிக்கப் படிக்க, அது என்னவோ பண்ணுது. ஒவ்வொரு பாராவும் தாண்ட கொஞ்சம் நேரமாகுது. “
“அதுக்குதான் எல்லாத்தையும் எழுதாம முடிஞ்சவரை எடிட் பண்ணிட்டேன். கொஞ்சமில்ல. ரொம்ப படுத்திடும்... என்னாலயே எழுதமுடியலை.”
“உன் அனுபவங்களையும் சேர்க்கணும்னு சொன்னியேபா... இருக்கா இதில..”
“போடா... அது சும்மா. அதெல்லாம் சேர்க்க நீர்த்துப்போயிடும். அதனால அதையெல்லாம் எடுத்து வச்சிட்டேன்.”
“அய்ய... எங்க இருக்கு அந்த ஃபைல் எல்லாம். சொல்லு. நானாவது படிக்கறேன்.”
“படி... ஆனா சிரிக்கக்கூடாது... சரியா..”
“சரி.. சரி...”
“பட்டர்ஃப்ளை ரஃப் காபி னு சேவ் பண்ணிருப்பேன். டி ல இருக்கும் பாரு...”
“சரி இருக்கட்டும். முதலில் இதை முடிச்சிடறேன்...” என்று அவன் புத்தகத்தை எடுக்க, அவனுடன் ஒட்டியவாறு அமர்ந்து அவளும் படிக்க ஆரம்பித்தாள்.

பகுதி இரண்டு
“நான் என்ன சொல்லிகுடுத்தேன்... “
“ ஐந்தாயிரம்தாண்டி கம்மி... சொன்னமாதிரி தந்துட்டேனில்ல... “
“ அது பேச்சில்ல... இது பாப்பாவுக்கு வேணும், சில செலவு இருக்கு.. அவசரமா கேட்டன்னு தரேன். முழுசா தரணும்னு சொன்னேன் இல்ல “
“ இது போதும்டீ “
“ எனக்கு ஆயிரம் செலவு இருக்கும். மேல வட்டி போட்டு தருவேன்னு பாத்தேன் ”
“ வட்டியா.... ”
“ ஏன் தரமாட்டீயா... உனக்கு சும்மா கிடைக்குமா பணம்.... ”
மனதுக்குள் சிரித்துக்கொண்டான் செல்வகுமார். வெகுளி. இவளை ஏமாற்றுகிறோமே என்ற கழிவிரக்கம் தெரியாமல் மறைக்க பெரும்பாடு பட்டான். ராஜிக்கு முக்கால் பவுனில் ஒரு செயின். தவிர புது டிரஸ். அவனுக்கு ஜீன்ஸ், நீலநிற காட்டன் சர்ட். வேண்டாமென்றாலும் வித்யா விடவில்லை.
மூன்று நாளில் ஏழாவது பிறந்தநாள். இந்த ஆண்டு இரண்டாவது போகபோகிறாள். அவளின் எதிர்காலம் நினைக்க நினைக்க செல்வாவின் மனதில் ஒரு பயம் எழுந்து அடைப்பதை உணரமுடிந்தது. சுட்டி அவள் . வித்யாவின் முகமும் அவன் முகமும் கலந்த கலப்பு. ஆனாலும் ,
“ அப்பனையே உறிச்சு வந்திருக்கு பாரு ... முட்டகண்ணி ... ” என்றே வித்யா கொஞ்சுவாள். அவன் மூக்கும், தாவாயும் அப்படியே ஒட்டி வைத்தார்போலிருக்கும் ராஜிக்கு. அவளுக்கு கொடுக்க பரிசும் வாங்கிவிட்டாள். அழகான ஃபாண்டா பொம்மை. தவிர கலர் பலூன்களும், வண்ண பேப்பர்களும். இரண்டுகிலோ ஃப்ரெஷ் க்ரீம் கேக் ஆர்டர் செய்தாகிவிட்டது. ஒரு தாளில் வாங்கவேண்டிய லிஸ்ட் ரெடி. இரவு பத்துமணிக்கு அப்பாடாவென வந்து பைக்கை நிறுத்தி ... வாசல் நுழையும்போது செல்லை ஆன் செய்தான். இதற்குமேல் யாரும் ஃபோன் செய்து தொந்திரவு செய்யப்போவதில்லை. இரவு பத்துமணியில் இருந்து காலை ஏழுமணிவரை சுதந்திர உணர்வு. இப்படியே விடியாமலேயே இருந்துவிடக்கூடாதா என்ற தவிப்பு அவனுக்குள் அடிக்கடி வந்துபோகும்.
வாங்கி வந்த பரோட்டாவும், ராஜிக்கு நூடுல்ஸும் காலியானது. சாப்பிடச் சாப்பிடவே தூங்கி விழுந்தது குட்டி.
“ படுக்கறேம்பா... முடில.. ” என்று வித்யா படுத்துவிட்டாள்.
“ நீ தூங்கலையா.... ” என்றாள் கொட்டாவி விட்டபடி.
“ கொஞ்சம் கணக்கு பாக்கணும்டா... நீ தூங்கு.... ”
“ என்னா கணக்கோ... எங்கிட்ட குடுத்தாவாவது பாத்து தருவேன்... ”
“ உனக்கு இது புரியாதுபா....”
“ அடேய்... நான் பிஎஸ்ஸி மேத்ஸ் ... செண்டம் தெரியுமில்ல... ”
“ அது வேற... இது கொஞ்சம் வேறமாதிரி.... “
“ ஏதோ மறைக்கறன்னு தெரியுது... ஆனா... உன் முகத்தை வச்சு கண்டுபிடிக்க முடியல... சரியான கல்லுளிமங்கன்... ”
“ நானா... அடிப்பாவி.... உங்கிட்ட என்னபா மறைக்கப்போறேன்.. ”
“ சரி சீக்கிரம் வா... ”
“ என்னபா... ராஜி தம்பி பாப்பா கேட்டது ஞாபகம் வந்துருச்சா... “ என்று அசட்டு சிரிப்பு சிரித்தான் செல்வகுமார்.
“ அட மன்மதா... நெனப்பு அப்படி போவுதா... இங்க எல்லாம் கழண்டுபோகுது.. நீயும் செம டல்லா இருக்க... வந்து கால்போட்டினா நல்லா தூங்கலாம்னு கேட்டேன். சகிக்கல... முகத்தை தொடச்சிக்கோ... “ என்று திரும்பி படுத்துவிட்டாள் வித்யா.
கணக்குகளை ஆராய்ந்தான். மொத்த கடன் முப்பத்தெட்டு இருந்தது. வரவேண்டிய பாக்கிகளை பார்க்க, பதினெட்டு லட்சம். இதில் ஐந்து பேரிடம் மட்டும் கிட்டத்தட்ட பதினொன்று. குடோன் சரக்கு ஒரு நாலு தேறும். பதினாறு லட்சம் மீதம் தேவை. இருந்தால் தப்பித்துவிடலாம். ஆனால் பாக்கி பதினெட்டும் வசூலாக வேண்டும். அது உடனடியாக வராது. தொழில் நடக்க, சிறுக சிறுக வரும். அதிகவட்டி கடன் பதினைந்துதான். ஆனால் இதுவரை கிட்டத்தட்ட மொத்தமாக இருபது லட்சம் வரை வட்டியே கட்டியிருந்தான். அவ்வளவும் லாபபணம், கடன் பணம். கடன் வாங்காமல் இருந்திருந்தால், வித்யாவின் கனவான ஒரு வீட்டுமனையையே வாங்கியிருக்கலாம். யாராவது ஒரு நாற்பது லட்சம் தந்தால் தப்பித்துவிடலாம். சினிமாவில் நடிப்பவர்களுக்கு கோடி கோடியாக தருவார்களாம். அவர்கள் யாராவது ‘ கொஞ்சம் வைத்திருப்பா ‘ என்று கொடுத்தால், ஒரு வருடத்தில் திரும்ப கொடுத்துவிடலாம். கேரளா சென்று லாட்டரி சீட்டுகள் வாங்கி வரலாமெனவும் அவனுக்கு தோன்றியது. சில நேரம் இரவுகளில் எங்காவது முகமூடி போட்டுக்கொண்டு போய் கொள்ளையடிக்கலாமெனவும் தோன்றுவதுண்டு. தூக்கம் கண்ணை சுழட்ட, கண்டபடி யோசித்துக்கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது.
திரும்பி பார்க்க, மலர்ந்த பூவாய் வித்யாவும், அவளை கட்டிக்கொண்டு ராஜியும் தூங்குவதை பார்த்தான். எவ்வளவு அழகான குடும்பம். நாளை மறுநாள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எப்படி பார்த்து பார்த்து ஏற்பாடு செய்கிறாள். இதில் முழுமனதாய் கலந்துகொள்ள முடியவில்லையேவென தோன்ற, பீரிட்டு அழுகை வரும்போல இருந்தது செல்வகுமாருக்கு. அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். மணி பன்னிரண்டை நெருங்க, இரவு போகப்போவதை விடவும் மனதில்லாமல் அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்தான்.
சில நிமிடங்களே.
வீரிட்ட செல்ஃபோன் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தான்.
“ யாருங்க... இந்த நேரத்தில... “ சலிப்பாய் திரும்பி கேட்டாள் வித்யா.
“ ஒரு... ஃப்ரெண்டு... நீ தூங்கு .. வரேன்... “ என்ற செல்வா, செல்லை எடுத்துக்கொண்டு வெளிவந்தான்.
ராஜா.
“ தம்பி... சிரமத்திற்கு மன்னிக்கணும்.... ”
“ அடடா.. என்னண்ணா பெரிய வார்த்தை எல்லாம்... “
“ ஏப்பா... அந்த சுந்தரத்துகிட்ட அதிகம் வாங்கி மாட்டிருக்கியா... “
“ வந்து... இல்லண்ணா.. ஒரு அவசரத்துக்கு கொஞ்சம்... “
“ தம்பி... நான் நியாயமான வட்டி வாங்கறவன். உன் நடத்தை பார்த்து... இதுவரை எட்டு லட்சம் தந்திருக்கேன். நீயும் சரியாதான் வட்டி தர... இப்ப ரெண்டு மூணு மாசாமா லேட். போன மாசம் வட்டிகூட வரலை. பரவால்லை. வாங்கிக்கலாம். ஆனா... தொழிலும் கொஞ்சம் டல்தான் போல... விசாரிச்ச வகையில கொஞ்சம் சிரமம்தானாமே... “
“ அப்படிலாம் இல்லண்ணா.... சமாளிக்கறதுதான்... “
“ நெறய பாத்துட்டேன் தம்பி... அதில்லாம சுந்தரத்துகிட்ட வாங்கி யாரும் முழுசா இருந்தவங்க இல்ல... ஒண்ணு ஊரவிட்டு ஓடணும், இல்லனா இல்லாம போயிடுவாங்க.. தப்பா நினைக்காதே... “
“ இல்லண்ணா ... அந்த அளவு மோசமில்ல... இந்த மாசம் எல்லாமே சரிபண்ணிடுவேன்... “
“ சந்தோஷம்பா... நானும் தொழில்ல போட்ட பணமெல்லாம் வசூல் பண்ணி, கொஞ்சம் இடம் வாங்கி போட்றலாம்னு ஒரு யோசனை. பகல்ல உன்னை பிடிக்க முடியல.. அதான் இப்ப ஃபோன் பண்ணினேன். இந்த மாசம் முழுசா டைம் எடுத்துக்கோ... மாசகடைசில செட்டில் பண்ணிடு. வட்டிகூட வேணாம்பா.... “
“ அண்ணா... ஒரு ரெண்டுமாசம் பொறுக்கமுடியுமா.... “
“ வட்டிகூட வேணாம்னா... என் அவசரத்தை புரிஞ்சுக்கபா... வச்சிடறேன்... “
“ அண்ணா... அண்ணா... “
வைத்துவிட்டார். அடிமேல் அடி. அவனை அவசரத்துக்கு சமாளிக்க இவரை நம்பியிருந்தால் இவரும் கையைவிட... விக்கித்துபோய் இருளில் அப்படியே அமர்ந்தான் செல்வா. வாழ்க்கையே இருள் சூழ்ந்ததாக தோன்றியது அவனுக்கு. நேரே போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து மிரட்டலாமாவென தோன்ற.... டிபார்ட்மெண்டில் சுந்தரத்துக்கு இருக்கும் நண்பர்களின் பட்டாளம் கண்ணுக்கு முன் நிழலாடியது. இறுதியில் ஜெயிக்கலாம். ஆனால், திரும்ப இந்த ஊரில் இருக்க முடியாது. அதற்குள் வித்யாவுக்கு எல்லாம் தெரிந்துவிடும். அவளால் இதெல்லாம் தாங்கமுடியாது. பழைய நிறுவன நண்பர்களுக்கு தெரிய வருத்தப்படுபவர்களைவிட கைகொட்டி சிரிப்பவர்களே அதிகம்.
எவ்வளவு நேரம் இருளில் அப்படியே இருந்தானோ தெரியவில்லை. ஏதோ உறுத்தலாய் தோன்ற , திரும்பிப் பார்த்தான். அங்கே, கதவில் சாய்ந்தபடி கைகளை கட்டியவாறு வித்யா இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.

தொடரும்....
Word count: 949





 
Top