கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூ பூக்கும் ஓசை-3"

Praveena Thangaraj

Moderator
Staff member
பூ பூக்கும் ஓசை-3

நாராயணன் ஸ்கூட்டியில் வந்து நிறுத்திவிட்டு வாசலில் நுழையும் முன் கோகிலா கண்கள் அவரையும் தாண்டி பார்த்து வாயில் கையை பொத்தி கண்ணீர் மழையை கன்னம் தாண்டி வடிய விட்டு நின்றார்.

"என்னாச்சி கோகிலா... ஏன் அழுவுற?" என்ற தந்தை குரலில் பூர்ணா வெளியே வர, அவளும் தந்தை பின்னால் மாலையும் கழுத்துமாய் இருந்த தங்கையை கண்டு சினமானாள்.

பூர்ணா கூற தயங்கியதை கலைவாணியாகவே நேரில் வந்து காட்சியளிக்க, "அம்மா..." என்று தாங்கி பிடிக்கவும் 'உனக்கு அப்போ தெரியுமா?' என்பது போல அன்னை பார்த்தார்.

நாராயணனோ அதிர்ச்சியில் வாசல் தட்ட, "அப்பா" என்று இருகுரலும் "என்னங்க" என்று ஒரு குரலும் கேட்டு பூர்ணா அவசரமாய் வந்து தந்தையை தாங்கினாள்.

கலைவாணி தந்தை கையை பிடிக்க, "என்ன கோலம் டா இது. கழுத்துல தாலி?" என்றவர் அருகேயிருந்த விக்கியை பார்த்தார்.

தந்தையாய் தோழனாய் எத்தனை முறை அவளிடம் பேசி பழகியது. மகள் காதலித்து இருக்கின்றால், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் முடித்து வந்திருக்கின்றாள் என்றதிலேயே உடைந்து போனார். வாசலில் கதவருகே சுவர் பக்கம் தளர்ந்து இடிந்து போய் அமர்ந்து விட்டார்.

அதிர்ச்சியான பார்வையும் அவளின் கோலமும் சொல்லாமல் சொல்லியது. பெற்றவர்கள் நீங்கள் பிணத்திற்கு சமமென.

"அப்பாவிடம் ஒரு வார்த்தை காதலிக்கறதா கூட சொல்லலையே டா." என்றவர் அப்பொழுதும் 'டா'வென விளித்தே மகளை அழைத்தவர் பூர்ணாவை தான் கவலையாய் பார்த்தார்.

அக்கா இருக்கும் பொழுது தங்கை மணக்கோலத்தில் கண்டால் அவர் மனம் துவளாதா?!

"உனக்கு முன்னாடி ஒருத்தி இருக்கறது நினைவுயில்லையா கலை." என்று 'நா'தழதழக்க கேட்டார்.

கோகிலாவோ, "அப்பா அம்மா என்ன செத்தா போயிட்டோம். இப்படி பண்ணிட்டு வந்திருக்கியே.

நாளைக்கு ஊர் உலகத்துல தலைநிமிர்ந்து நிற்க முடியுமா டி.

இதோ உனக்கு முன்ன ஆளாகி வேலைக்கு போறவளை ஒரு நிமிஷம் யோசிச்சியா...

நேத்து என்னிடம் மடிலப்படுத்து மணிக் கணக்குல பேசினியே டி. அப்ப ஒரு வார்த்தை அம்மா நான் காதலிக்கறேன்னு சொன்னியா?" என்று கோகிலா தான் புலம்பி தள்ளினார்.

கலைவாணியும் விக்னேஷும் வாசலில் மணக்கோலத்திலேயே நின்றனர்.

கலைவாணி தான் "அம்மா அம்மா... தப்பு தான் மா. இப்ப மன்னிச்சு என்னை வீட்டுக்கு அழைச்சிக்கோ மா." என்று கூறி தந்தை காலை பிடிக்க அவரோ விழிநீரை துடைத்து காலை இழுத்து கொண்டார்.

"எனக்கு ஆசிர்வாதம் பண்ணமாட்டிங்களா அப்பா" என்று அழுது கேட்க, கல்லாய் மாறியிருந்தார்.

"கல்யாணம் பண்ணிட்டியே... பிறகென்ன டி. பெரிய மனுஷி எங்க வீட்டுக்கு எதுக்கு வந்த?" என்று கோகிலா விரட்டினார்.

"அம்மா... நான் சொல்ல நினைச்சேன் மா. முடியலைமா... அய்யோ... விக்கி எடுத்து சொல்லேன்" என்று அழுதாள்.

"அத்தை.." என்று விக்கி பேச, "தம்பி நீங்க யாரோ எவரோ, எவளோயொருத்தியை கட்டிக்கிட்டிங்க தயவு செய்து வெளியே போங்க. இங்க வாசல்ல யாருக்கும் பிச்சை போடுற வழக்கம் இல்லை." என்று கோகிலா கணவரை தாங்கி அழைத்து, பூர்ணாவிடம் "கதவை சாத்து டி" என்று அதட்டினார்.

"அம்மா... அம்மா... நான் சொல்லறதை கேளு மா." என்று அழுதாள்.

கோகிலா மற்றும் நாராயணன் திரும்பியும் பாராது வீட்டுக்குள் சென்றிட, பூர்ணாவோ "அப்படின்ன காரணம் சொல்லு நான் கேட்கறேன்" என்றதும், கலைவாணி நெஞ்சு விதிர்ததது.

சொல்ல வாய் வராமல் தத்தளிக்க, விக்னேஷோ தலைகுனிந்து நின்றானே தவிர வாயை திறக்கவில்லை.

"கலை எங்க வீட்டுக்கு போகலாம்" என்று விக்னேஷ் இழுக்க, அக்காவை பார்த்து பரிதவிப்பாய் விக்னேஷை பின் தொடர்ந்தாள்.

"என்ன பேரண்ட்ஸ் வீட்டுக்குள்ள கூட கூப்பிடாம அப்படியே அனுப்பிட்டாங்க இன்சல்டிங் கலை.

கலை...

இங்க நீ அழறதுக்கு ஒன்னும் இல்லை. எல்லா பேரண்ட்ஸும் முதல்ல லவ் பண்ணினவங்களை அவாய்ட் பண்ணுவாங்க. பிறகு சேர்த்துப்பாங்க. நீ வேன்னா பாரு தானா வந்து தாங்குவாங்க." என்று பேசி சென்றவனை "நிறுத்து விக்கி" என்று கத்தினாள்.

"இதுவரை நான் காதலிக்கறேன்னு சின்னதா சந்தேகித்து இருந்தா பரவாயில்லை. நம்மளோட இந்த கோலம் டைஜிஸ் பண்ணியிருப்பாங்க. காலேஜ்கு போயிட்டு இப்படி வந்தா எந்த பேரண்ட்ஸும் ஆரத்தி எடுக்க மாட்டாங்க.

எங்கம்மா சபிக்கலையேனு சந்தோஷப்படு. எங்கப்பா என்னை அடிக்கலையேனு ஆச்சரியப்படு." என்று கண்ணீரை துடைத்தாள். அதுவோ துடைக்க துடைக்க அமுத சுரபியாக வந்து கொண்டிருந்தது.

ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு செல்ல அட்ரஸ் கூறினான்.

ஆட்டோவில் அழுதவளை சமாதானம் படுத்த இயலவில்லை அழட்டுமென விட்டுவிட்டான்.

"உங்க அப்பா என்னை ஏற்றுப்பாங்களா..?" என்றதும் விக்கி கையை கோர்த்தான்.

"அங்க தானே வரப்போற... பாரு" என்று கூறவும் கலைக்கு கலக்கமாய் போனது.

அரைமணி நேரப் பயணத்தில் ஒரு தனி வீடு வந்தடைந்தனர்.

சரிவர பராமரிப்பு அல்லாத வீடென ஆங்காங்கே பெருக்காமல் இலை தழை குமிந்து இருக்க கண்டாள்.

பெண்கள் யாருமில்லை என்றது பளிச்சிட்டு தெரிந்தது.

"கலை ஆரத்தி தட்டுலாம் எதிர்பார்க்காதே. அம்மா இல்லாத வீடு." என்று கூறி அழைத்து வந்தான்.

தன் வீடு போல விக்கி தந்தை வாசலிலேயே விரட்டிடுவாரோ என்று அஞ்சினாள்.

முதல் காலடி எடுத்து வைத்து வந்ததும் அழைப்பு மணி அடித்து காத்திருந்தான்.

சற்று நடுத்தர வயதில் ஒருவர் வந்து கதவை திறந்தார்.

"அப்பா... இது கலை... கலைவாணி. நானும் கலையும் ஒருத்தர் ஒருத்தர் விரும்பினோம். சடனா மேரேஜ் பண்ணற சிட்சுவேஷன்." என்று கலைவாணியை அறிமுகப்படுத்தினான்.

"கலை அப்பா கேசவன்" என்று அறிமுகப்படுத்த, "வணக்கம் மாமா" என்று காலில் விழப்போனாள்.

"கால்ல எல்லாம் விழாதிங்க. கங்கிராட்ஸ் விக்னேஷ். கங்கிராட்ஸ் மா" என்று சலனமேயில்லாமல் அவர் பாட்டிற்கு வெளியே சென்றார்.

கலைவாணிக்கு 'நம்ம வீட்ல அப்பா அம்மா எல்லாம் எப்படி எமோஷனல் ஆனாங்க. ஆனா இவர் என்ன அமைதியா போகறார்.' என்று அதிர்ச்சியாகி நின்றார்.

"விக்கி உங்கப்பா எதுவும் பேசலை" என்றாள். அவள் கையை பிடித்து பூஜையறைக்கு இழுத்து வந்தான்.

"இந்த போட்டோல இருக்கறவங்க என் அம்மா. நான் பத்தாவது படிக்கிறப்ப அம்மாவுக்கு யாரோடவோ அஃப்பர் ஆகி லெட்டர் எழுதி வச்சிட்டு பணத்தை நகையை எடுத்துட்டு ஓடிப்போனாங்க.

அதுல இருந்து அப்பா யாரிடமும் பேசறது இல்லை இன்க்ளூடிங் மீ.

நான் பஸ்ட் இயர் படிக்கிறப்ப அம்மா இறந்துட்டதா பாட்டி சொன்னாங்க. இறுதி காரியம் மட்டும் செய்துட்டு வந்தோம்.

இங்க கூட்டிட்டு வந்தது அவங்க இன்ட்ரோகாக இல்லை. வீட்டுக்கு வந்த நீ விளக்கு ஏத்த.

இங்க அப்படி தான் அப்பா பேசலைனா பீல் பண்ணாதே. அவர் என்னிடம் பேசறதே அபூர்வம். வருவாரு போவாரு நானும் அப்படி தான் இவ்ளோ நாள் இங்க இருந்தேன்.

இந்த வலது பக்கம் இருக்கற ரூம் அப்பாவோடது. இந்த இடது பக்கம் ரூம் என்னோடது இனி நம்மளோடது." என்று சேர்த்தணைத்தான்.

நேற்று வாரம் ஒரு முறை பெருக்க வர்றவங்களிடம் பூஜை ரூமை க்ளீன் பண்ண சொன்னேன்." என்று தீப்பெட்டி எடுத்து தந்தான்.

கலைவாணி விளக்கேற்றி மகிழ்ந்தாள். இனி தாய் தந்தை அக்கா என்ற எண்ணங்கள் களைந்து தன் கணவன் தன் வீடு என்று மாறி போக கணவனின் சிறுசிறு சீண்டலோடு சிணுங்கினாள்.

~~~

நாயகி பூர்ணாவோ வீட்டின் விளக்கை போட்டு விட்டு, "ம்மா.. மணி ஆறரை ஆகுது. ஏன் மா இடிஞ்சி போய் உட்கார்ந்து இருக்க, எழுந்து முகமலம்பும்மா. காபி போட்டு தர்றேன் குடிச்சிட்டு ப்ரெஷ் ஆகு. அங்க பாரு அப்பாவை துவண்டு போயிட்டார். நீ தானம்மா அப்பாவுக்கு துணையா பேசி தெம்பூட்டனும்" என்று உலுக்கினாள்.

"எப்படி டி தெம்பூட்ட, கமுக்கமா இருந்நு காதலிச்சிட்டு ஓடிப் போயிட்டாளே. நாளைக்கு சொந்தகாரங்களுக்கும் சுத்தியிருக்கறவங்களுக்கு தெரிந்தா என்னாகும்.

அவ போனா போகறாடி. சுயநலம் பிடிச்சவள். நாளைப் பின்ன உன்னை பொண்ணு பார்க்க யார் வருவா? அக்காவுக்கு கல்யாணம் ஆகாம தங்கை கல்யாணம் பண்ணிக்கிட்டாளே இவளுக்கு என்ன குறைனு கேட்க மாட்டாங்க.

ஏற்கனவே சொந்தக்காரங்க ஏதோ உன் சம்பாத்தியத்தில தான் இந்த குடும்பம் ஓடுதுனு வாய் கூசாம பேசறாங்க. இதுல இவ வேற பேச வச்சிட்டு போயிட்டாளே." என்று அழுதார்.

பூர்ணாவுக்கு தாயை தேற்ற தெரியவில்லை. தந்தையை தேடி அருகே வந்தாள்.

"அப்பா... பேசுங்கப்பா." என்றதும் மகளின் முன் இருகையை மேலே காட்டி "உன்னையை விட அவளை ஆசையா அன்பா தானே டா வளர்த்தேன். கடைக்குட்டினு செல்லமாச்சே டா. எப்படி டா இப்படி பண்ண தோணுச்சு. அட்லிஸ்ட் ஒரு வார்த்தை லவ் பண்ணறேன்னு கூட சொல்லியிருந்தா அவனை பற்றி விசாரிச்சி பேசியிருப்போமே. இப்படி பண்ணிட்டாளே டா." என்று புலம்பினார்.

"எந்த இடத்துல அப்பா தப்பு பண்ணினேன் டா. ஒரு பிரெண்டா பழகியும் தோற்று போய் இருக்கேனே.

நிறைய பேர் சொல்வாங்க... வீட்ல அன்பும் பாசமும் காட்டலைனா தான் பிள்ளைங்க வெளியே அன்பை தேடி காதல்ல விழுவாங்கனு. நாம இங்க அவளுக்கு என்ன குறை வைத்தோம், இல்லை... இல்லைனா... என் வளர்ப்புல தப்பாகிடுச்சா" என்று குறைப்பட்டார், குமைந்தார்.

பூர்ணாவுக்கு என்ன சொல்வதென்து தெரியவில்லை. ஆனாலும் தற்போது பெற்றோர் இருவரையும் தேற்றுவது மூத்த மகளான அவளின் கடைமை அல்லவா?!

"அப்பா... காதல்... வீட்ல அன்பு கிடைக்காதவங்க மட்டும் பண்ணறதில்லை. ஹார்மோன் சேஞ்சஸ்ல கூட வரும்.

அதோட ஒரு பொண்ணுக்கு அவளை மாதிரியே அவளோட தாட்ஸ் இருக்கற பையனை பார்த்தாலோ, அந்த பொண்ணு பார்வைக்கு நல்லவன்னு தெரிந்தாலோ, தன் இமேஜினேஷன்ல இப்படியொருத்தன் கணவனா இருந்தா நல்லாயிருக்கும்னு தோன்றதாலோ கூட அந்த பொண்ணுக்கு ஒரு ஆண் மேல காதல் வரும்பா.

உங்க வளர்ப்பு மேல எந்த தப்பும் இல்லை. இன்பெக்ட் அந்த வளர்ப்பு சரியா இருக்கறதால தான் அவ விரும்பினவனோட திருமணம் பண்ணியிருக்கா.

இதே காதலிச்சவன் ஒருத்தன் கல்யாணம் பண்ணறவன் ஒருத்தன்னு நம்ம கலை போகலையே.

நம்மகிட்ட சொல்லலை... சொல்லியிருக்கலாம்..." என்றவள் அன்னையை பார்த்து "அம்மா.. இரண்டு காபி போடேன்" என்று தாயை எழ வைக்க காபியை கேட்டு நின்றாள்.

தன் சேலை முந்தாணையில் கண்ணீரை துடைத்து, மூக்கை உறிந்து பூர்ணாவுக்காக எழுந்தார்.

இனி இருக்கும் ஒரு மகளை கவனிக்க வேண்டுமே. என்ற பொறுப்பு எழ வைத்தது.

"எதையும் யோசிக்காதிங்க அப்பா. அவளுக்கு என்ன காரணமோ, நம்மிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கா." என்றதும் கோகிலா காபி டம்ளரை கீழே தவறவிட, அது பெரும் சத்தமிட்டு அடங்கியது.

காபி ஆங்காங்கே சிதறி இருக்க பூர்ணா ஓடிவந்து, கைக்கு ஒன்னும் ஆகலையே மா" என்று தன் சேலையால் துடைத்து விட்டு அவள் காபி போட ஆரம்பித்தாள்.

கோகிலாவோ இடிந்து போனவராக கண்ணீர் கண்களில் கோர்த்து வாயில் சேலையை அடைத்து கொண்டு கணவர் அருகே அமர்ந்தார்.

பூர்ணா காபி போட்டு தாய் தந்தைக்கு கொண்டு வந்து நீட்டினாள்.

"அப்பா... எடுத்துக்கோங்க" என்று சுட்டிகாட்ட, "உனக்கு ஒரு வரன் பார்க்கவா டா. உனக்கும் வயசு இருபத்தியாறு ஆகுது. கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாள் வேலைக்கு போகணும் சொன்ன. அதனால அப்படியே விட்டுட்டோம். இனி பார்க்கறவங்க கேள்வி கேட்பாங்களே டா" என்று மகள் சம்மதிக்க வேண்டுமென பேசி யாசகமாய் வேண்டினார்.

"என்னப்பா இது... அவ போனதுக்கு நான் என்ன பண்ணினேன். நீங்க தானே ஒத்த பட்டையில் இருபத்தியேழுல கல்யாணம் பண்ணலாம்னு முன்ன பேசி வச்சோம்." என்று முன்பு பேசியதை நினைவுப்படுத்தினாள்.

"அப்பா... நான் சாதத்தை மிக்ஸில அரைச்சி ரசம் ஊற்றி பதமா எடுத்துட்டு வர்றேன். எப்படியும் சாப்பிட முரண்டு பண்ணுவிங்க" என்று பூர்ணா பொறுப்பாய் மாறி தந்தை தாயை சாப்பிட வைக்க முயன்றாள்.

சொன்னது போலவே செய்து முடித்து தந்தையிடம் நீட்டவும் "இந்த நிலையில் சாப்பிட முடியாது டா. நான் கல்நெஞ்சக்காரன் இல்லைடா." என்று நாராயனன் மறுத்தார்.

"அப்பா... நீங்க இந்த உலகத்துல பிறந்தப்ப பிறகு வளர்ந்தப்ப, ஏன் நாங்க பிறந்து வளர்ந்தப்ப வரை நீங்க கலைவாணிக்காகவா சாப்பிட்டிங்க.

ஒவ்வொரு மனுஷனும் அவங்களோட தேவை உணவு உடை இருப்பிடம் அப்பா. மனைவி குழந்தை அடுத்த இடம் தான்.

முன்ன உங்களுக்கு முக்கியமானவளா செல்ல மகளா இருந்தவள் அந்த விக்னேஷுக்கு மனைவியா மாறிட்டா.

நீங்க இனி அம்மாவுக்காக யோசிக்கணும். நீங்க திடமா இருந்தா தான் அம்மா அடுத்து சாப்பிடுவாங்க" என்று கூறவும் நாராயணன் மனைவி கோகிலாவை கண்டார்.

கோகிலாவோ நாராயணனை விட இடிந்து போய் அமர்ந்திருந்தார். அதனால் பூர்ணா கூறியது போல பருகி முடித்து தாயிடம் சாப்பிட வைக்க செயலில் சுட்டி காட்டினார்.

"அம்மா நீயும் சாப்பிடு" என்று கொடுக்க, மறுத்து தள்ளி முடித்தார்.

"உனக்கு ஒரு பொண்ணு தானாமா நான் ஒரு பொண்ணு இல்லையா. எனக்காக சாப்பிட மாட்டியா?" என்றதும் வெடித்தழுதார்.

அவள் பேசியதால் அரை டம்ளர் வாங்கி குடித்தார். தொண்டைக்குழியில் கணத்த கல் போல உள்ளுக்குள் சென்றது.

தனிதனியறைக்கு சென்று உறங்குவது எப்பொழுதும் வழக்கம். ஆனால் இன்றோ தாய் தந்தை அழுது தூங்காமல் இருப்பாரென பாயை விரித்து படுக்க கூறினாள்.

தந்தை நாராயணன் பூர்ணா சொல்லுக்காவது கட்டுப்பட்டு உறக்கம் வராது என்றாலும் படுத்தார்.

கோகிலாவோ இடிந்து போய் அமர்ந்தவர் சற்றும் மாறவில்லை.

பூர்ணாவோ தங்கைக்கு நடந்த திருமணத்தை நேரில் கண்டதன் பாதிப்பு உறங்காது நினைத்து பார்த்தாள்.

வனிதா தனக்கு திருட்டு கல்யாணம் என்று பேசியது, பத்ரி பஸ்ல ஒரு பொண்ணை மடக்கலையா என்று சத்யதேவிடம் பேசியதையே நினைவலையில் ஓட்டி பார்த்தாள்.

இப்படி அநாகரீகமாக பேசும் நட்புக்களிடம் இருக்கும் விக்னேஷை எப்படி விரும்பினாளோ, இதில் அவன் வேறு முன் பின் தெரியாத தன் கையை பிடித்து நிறுத்துகின்றான் என்று சத்யதேவ் என்பவனையும் மனதில் திட்டி முடித்தாள்.

-தொடரும்.
~பிரவீணா தங்கராஜ்

 
Top