அத்தியாயம் 3
பதறியடித்து ஓடிய கூட்டத்தைத் தள்ளியபடி முன்னே ஓடினார் குமரேசன்.. அவர் என்ன கண்டாரா இப்படித் தன் மனைவி கேணத்தனமாக அரளி விதையை அரைத்து விழுங்கப் போவாள் என்று.
அவருக்கு முன்னே ஓடிய அவரது மச்சான் அங்கே கதவை ஒடித்துக் கொண்டிருந்தார்.
"தங்கச்சி.. கதவை திறம்மா.. வேதாவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்.. ஏம்மா விஷயத்தைக் குடிச்சி வைச்சிட்டியா? .. அய்யோ கல்யாணி என்னத்துக்கு ஆவுது?.. காதுலை விழலையா?.. பாரும்மா உன் பொண்ணு அளுதுகிட்டு நிக்கறத?.. அண்ணன் பேச்சை கேளும்மா.. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.. சீக்கிரம் கதவை திறம்மா.." ராஜேந்திரன் கத்திக் கொண்டிருந்தார்.
"அம்மா.. வேண்டாம்மா.. கதவை திறம்மா.. என்னை நினைச்சு பாரும்மா.. எனக்குக் கல்யாணமும் வேண்டாம் எதுவும் வேணாம்.. கடைசி வரைக்கும் உங்க மகளா நான் இருந்துக்குவேன்.. நீ இப்ப கதவை திறக்கலை உன் பின்னாடியே நானும் வந்திடுவேன்.. சொல்லிட்டேன்.."
பட்டுபட்டெனக் தட்டியபடி கதவை உடைக்கத் எத்தணித்தாள் வேதா.
அதற்குள் அங்கு வந்திருந்த குமரேசன், "அடியேய் கல்யாணி.. வேணாம்டி.. ஏதோ தெரியாத்தனமா ஆசைப்பட்டுடேன்.. சீமை மாப்பிள்ளைன்னு.. நல்லதுக்குத் தானேடி செஞ்சேன்.. நான் கண்டேனா?.. இப்படி ஆகும்ம்னு.. கதவை திறந்து தொலைடி முதல்ல.. எதையாவது செஞ்சி வச்சி இன்னும் எனக்கு ஏழரையைக் கூட்டாதே.. இங்க பாருடி நீ இப்போ திறக்கலை நான் என்ன செய்வேன்னு தெரியாது?.. முதல்ல வெளிய வாடி.."
கத்திய குமரேசனுக்கு எந்த வித பதிலும் உள்ளிருந்து வரவில்லை.
“ம்மா.. ம்மா.. வேண்டாம்மா.. என்னைய தனியா தவிக்க விட்டுடாதே.. வெளிய வாம்மா.. கதவை திறம்மா.. எதுவா இருந்தாலும் பொறவு பேசிக்கலாம்.. வாம்மா.." வேதா அழுகையுடன் அலறிக் கொண்டிருந்தாள்.
"நீ தள்ளு வேதா.. நான் பார்க்கறேன்.." அவள் அழுகை காணப் பிடிக்காமல் பிரகாஷ் அவளைப் பிடித்து ஒதுக்கி விட்டு கதவை எட்டி உதைக்கலானான்.
"மாப்பிள்ளை.. எனக்கென்னவோ உள்ளே ஏதாவது விபரீதமா ஆயிடுச்சோன்னு கவலையா இருக்கு.. முதல்ல கதவை உடைச்சி பார்த்துடுவோம்.." அத்தனை நேரமாகச் சும்மா இருந்த இருந்த ராஜ்குமாரும் சொல்ல அவர் சொல்லுவது சரியாகவே பட்டது ராஜேந்திரனுக்கும், குமரேசனுக்கும்.
மூவரும் பிரகாஷுடன் இணைந்து கொண்டு கதவை உடைக்க முயல.., அந்தக் காலத்து தேக்கு மரத்திலான கதவோ உடைவேனா பார் என்று அழுத்தமாக நின்று கொண்டு அவர்களைச் சோதித்தது.
அதுவரை அங்கே நடப்பவைகளை ஒரு பார்வையாளனாகப் பார்த்து, கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த கதிர்வேலுக்கு இப்போது கோபம் தலைக்கேறியது.
ஏற்கனவே அங்கே நடந்த நிகழ்வுகளில் பொறுமை இழந்து, அவனது மாமன் குடும்பத்தவர் மீது ஆத்திரத்தில் இருந்தவன்..
'சே இந்த அத்தைக்கு ஏன் தான் புத்தி இப்படிப் புல்லு மேய போகுதோ?.. கொஞ்சமாவது அறிவு இருக்குதா?.. ஆரம்பத்திலேயே மாமாவை கண்டிக்காம விட்டுட்டு இப்ப தும்பை பிடிச்ச வாலு கதையா எல்லாம் ஆன பொறவு அரளி விதைய தேடினா எல்லாம் சரியாப்புடுமா?.. நல்ல குடும்பம்டா சாமி..' என்று மனதிற்குள் வைதபடி..
"செத்த தள்ளுங்க மாமாக்களா.." என்று அவர்களை ஒரு கையால் அகற்றி தள்ளி நிறுத்தியவன் தன் வலிமையான வலது காலை ஓங்கி கதவை நோக்கி ஒரு உதை விட்டான்.
அவ்வளவுதான்.. 'திறந்திடு சீசே' என்று அத்தனை நேரம் அவ்வளவு பகீரப் பிரயத்தனம் செய்து கதவை உடைக்க முற்பட்டவர்கள் வாயை பிளக்கும் வழியாக அந்தத் தேக்கு மரக் கதவு தடாரென உடைந்து விழுந்தது.
"வாவ்.. தட்ஸ் கிரேட் மேன்.." பிரகாஷின் குரல் மற்றவர்களுக்குக் கேட்டதோ இல்லையோ கதவருகே நின்று கொண்டிருந்த வேதாவுக்கும், சத்யாவுக்கும் நன்றாகக் கேட்டது.
வேதா தன் அத்தை மகன் கதிர்வேலனின் ஆளுமையை அறிந்திருந்தவள் தலையாட்டியபடி உள்ளே முதலாளாகத் தன் தாயை நோக்கி ஓடினாள்.
சத்யாவோ, "ஆளை பார்த்து பாராட்டணும் பிரகாஷ்.. அவனே குஸ்தி பயில்வான் கணக்குல இருக்காரு.. அந்தாளுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா.." மெல்ல அவனிடம் முணுமுணுத்தவள் பார்வையில் கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லை.
சத்யாவிற்கு உண்மையிலேயே அங்கே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் எதுவுமே பிடிக்கவில்லை..
ஆப்ட்டரால் ஒரு கல்யாணம் நின்றதற்கு இத்தனை டிராமாவா?.. இவன் போனால் இன்னொருத்தன் வர மாட்டானா என்ன?.. எதுக்கு இந்தப் பெரியம்மா இப்படிக் கலாட்டா பண்ண வேண்டும் என்ற அலட்ச்சிய மனப்பான்மையில் இருந்தாள்.
அதற்குள் மொத்த பட்டாளமும் அந்த அறைக்குள் நுழைய..
வேதாவோ தாயை கட்டிக் கொண்டு, "அம்மா உனக்கு ஒண்ணுமில்லேயே?.. சொல்லும்ம்மா.. ஏம்மா படுத்திருக்கே?.. அய்யோ என்னைத் தனியா, அனாதையா விட்டுட்டு போயிட்டியா?.. அம்மா.. எளுந்திரும்மா.. அம்ம்ம்ம்மா...." அலறிக் கொண்டிருந்தவளை கண்டு சத்யாவுக்கு இன்னும் எரிச்சலானது.
"சரியான டிராமா குடும்பம்.. கண்ட்ரி புரூட்ஸ்.. கிராமத்துக்காரங்கன்னு மொத்த குடும்பமும் நல்லா ஃப்ரூவ் பண்ணுதுங்க.."
சட்டென அவளைத் திரும்பி முறைத்தான் கதிர்வேல்.
'ஒரு உயிரோட மதிப்புப் பட்டிணத்துக்காரங்களுக்கு எங்க தெரியப் போவது??.. அவங்களுக்கு எல்லாமே நாடகம் தான்..' எரிச்சலுடன் அவளைப் பார்த்தவன் பார்வையில் கொஞ்சம் கூட நட்பு இல்லை..
ச்சீ.. நீயெல்லாம் ஒரு ஜென்மமா?.. ஒரு சக மனுஷியின் துன்பத்தைப் பார்த்து எப்படி இப்படி எள்ளி நகையாட முடிகிறது.. அதுவும் அவளுடைய சொந்த ரத்தபந்தத்தை..' அப்பொழுதே அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை.. அங்கிருந்து சற்று ஒதுங்கி நின்று கொண்டான்.
அதற்குள்ளாகவே குமரேசன் தன் மனைவி அருகில் சென்றவர், அவளைப் பிடித்து எழுப்பி உலுக்கினார்..
கல்யாணியோ அவரை முகம் கொடுத்துப் பார்க்காமல் மீண்டும் கட்டிலில் புதைய முனைய, ஓங்கி ஒரு அறை விட்டார்.
"ஏன் டி.. மூதேவி.. அரளி விதையையா அரைச்சி விழுங்குவே?.. எவ்வளவு தைரியம்டி உனக்கு.. ஏன் இருக்கறது போதாதுன்னு இன்னும் ரெண்டு துன்பத்தை இளுத்து விடறியோ?.. அடிச்சி பல்லை பேத்துடுவேன்.. சொல்லுடி விஷத்தை குடிச்சி தொலைச்சியா?.. டேய் யாராவது டாக்டருக்கு சொல்லிடுங்கடா.."
"இல்லை.. நான் எதுவும் குடிக்கவில்ல.." என்ற அர்த்தத்தில் தலையாட்டிய கல்யாணியைக் கண்டு அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
"அப்பாடி.. என்ன தங்கச்சி இப்படிப் பண்ணிட்டே.. பாரு மாப்பிள்ளை எப்படிப் பதறி போயிட்டாரு.. உம் பொண்ணைப் பாரு.. எப்படித் துடிச்சுப் போவுது.." ராஜேந்திரன் அங்கலாயிக்க..
ராஜ்குமாரும் அவருக்கு ஒத்து ஊதினார். "என்னம்மா கல்யாணி.. இப்படிச் செய்யலாமா?.. வீடுன்னு எல்லாம் தான் இருக்கும்.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி விழத்தை கையில எடுக்கத் துணிஞ்சே??.. உனக்கு இருக்கறது ஒத்தை பொண்ணு.. நீ போயிட்டா அது காலம் முழுக்க நல்லா இருக்குமா?.. சொல்லு.. தன்னோட கல்யாணத்துனால தான் அம்மா போயிட்டாங்கன்னு வருந்தாதா?.. நீ இப்படிச் செய்யலாமா?.. நான் இதை உன் கிட்ட எதிர்பார்க்கலைம்மா.." என்றார் தன் பங்குக்கு.
"அக்கா.. என்னக்கா.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி ஒரு முடிவு கையில எடுக்கத் துணிஞ்சே?.. நாங்கல்லாம் இல்லை.. அப்படி உம்பொண்ணைக் கை விட்டு விடுவோமா என்ன?.. அவர் சொல்லறது போல நீ செஞ்சது ரொம்ப அதிகப்படிதான்.."
அதுவரை சும்மாயிருந்த ரேவதி, சத்யாவின் அன்னை தன் அக்கா கல்யாணியைத் திட்டத் தொடங்கினார்.
"என்னை என்ன செய்யச் சொல்லுறீங்க?.. நீங்க எல்லாரும் பேசிட்டே போறீங்களே?.. இதுல பாதிக்கப்பட்டது நானும், என் மகளும் தான்.." கல்யாணி வாயை திறந்தார்.
"ஏன் டி.. உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தான் பாதிப்பாடீ.. ஏன் எனக்கு இல்லையா?.. எம் பொண்ணுடி அவ.. நம்ம பொண்ணு.. நான் இல்லையா.. இந்த அப்பன்.. உன் புருஷன் எங்கடி போயிட்டேன்?.. குத்துக் கல்லாட்டாம் நான் இங்கனதானடி நின்னுட்டிருக்கேன்..உங்க ரெண்டு பேரையும் நான் பார்த்துக்க மாட்டேனா?..
“உங்களுக்கு ஒண்ணுன்னா எனக்கு அதுல எந்தப் பாதிப்பும் இல்லையா?.. அப்புறம் எதுக்குடி உனக்கு நான் புருஷனா இத்தனை நாளா இருக்கணும்?.. இந்த முப்பது வருஷமா நீ குப்பை கொட்டி வாழ்ந்ததுக்கு என்னடி அர்த்தம்.. இப்படி அரளி விதைக்கு வாரிக் கொடுக்கத்தான் உங்கண்ணன் எனக்கு மணமுடிச்சனா?.."
ஆத்திரம் மேலிட இன்னும் இரண்டு அடிகள் கொடுக்கக் கையைத் தூக்கிக் கொண்டு குமரேசன் கல்யாணியிடம் நெருங்கினார்.
"அய்யோ.. மாப்பிள்ளை உங்க கையை வச்சிட்டு சும்ம்மா இருக்க மாட்டீங்களா?.. கல்யாணி நீயும் கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருப்பியா?.. உன் கிட்ட பிறகு பேசறேன்.. நீ பண்ணியதும் ஒண்ணும் மன்னிக்க முடியாததுதான்.." என்று அதட்டல் போட்ட ராஜேந்திரன்..
"இங்க பாருங்க.. இப்படிப் பேசிட்டே இருந்தா ஆகப் போறது எதுவுமில்லை.. குமரேசு.. மாப்பிள்ளை.. நீ செஞ்சது எதுவும் சரியில்லை தான்.. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு யாரையும் கேட்காம நீயா எதையோ யோசிச்சு இப்படி ஒரு கல்யாணம் பண்ண நினைச்சிருக்கே.. எங்க எல்லாருக்கும் கூட நீ கடைசியில தகவலாத் தான் இந்த விஷயத்தைச் சொன்னே..”
"சரி எதோ பையன் அமெரிக்காவுல இருக்கான்.. நேரமிருந்திருக்காதுன்னு நாங்களும் வந்து இறங்கிட்டோம்.. பாரு கடைசில என்ன நடந்துச்சுன்னு.. எப்பவும் பொய் வேலைக்காகாது.. உண்மையைச் சொல்லி நீ நிலமையை விளக்கமா முதலிலேயே சொல்லி இருந்தா, இத்தனை தூரத்துக்கு விஷயம் வந்திருக்காது..
“ஒரு நல்ல விஷயத்துக்கு ஆயிரம் பொய் சொல்லலாம்ன்னு சொல்லியிருக்கு.. ஆனா இங்கே ஒத்த பொய்யே சமாளிக்க முடியலை பாரு..”
"கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிரு.. இதெல்லாம் விளையாட்டில்ல.. நீ சொன்ன ஒரு பொய் உன் பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்கிடுச்சு பாரு..
"எவனோ ஒருத்தன் கிண்டலடிச்சான்னு.. இதுதான் சாக்குன்னு உன் பொண்ணு வாழ்க்கையைக் கையில எடுப்பியா.. சரி விடு.. ஆனது ஆகிப் போச்சு.. இனி என்ன பண்ணலாம் சொல்லு.." என்று ராஜேந்திரன் ஒரு நல்ல அண்ணணாக, நல்ல மச்சானாகக் குமரேசனை பார்த்து கேட்டார்.
"என்ன மச்சான் இனி சொல்லுறது?.. மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான்.. வேற என்ன?.."
"அப்போ உன்னோட பொண்ணு கல்யாணம்??.."
"அதுக்கென்ன.. பொறவு பார்க்கலாம்.."
"அண்ணா.. இவரு சொல்லறது நியாயமா?.. மேடை வரை வந்து கல்யாணம் நின்னு போனா எம் பொண்ணு கழுத்துல திரும்பத் தாலி ஏறுமா?.. அதுக்குத்தான் நான் அரளி விதையைக் கையிலெடுத்தேன்.." மீண்டும் அழத் தொடங்கி விட்டாள் கல்யாணி.
"ஷ்.. கல்யாணி.. இது என்ன பேச்சுன்னு பேசுறே?.. துன்பம் வந்திடுச்சுன்னு எதுக்கெடுத்தாலும் சாவ துணிஞ்சா மனுஷன் வாழறதுக்கு அர்த்தமே இல்லை.. பொறவு எதுக்குக் கல்யாணம், குழந்தை குட்டின்னு.. எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணத் தெரியணும்..
“உன்னை இப்படித்தான் கோழையா நம்ம அம்மா அப்பா வளர்த்தாங்களா?.. நீ அந்தக் காலத்திலேயே நல்லா படிச்சவ.. கொஞ்சமாவது புத்திசாலித்தனமா நடக்கக் கத்துக்கோ.. இனி இன்னொரு முறை சாவைப் பத்தி பேசினா பாரு.." என்று ஓங்கி ஒரு அதட்டல் போட்டு தன் தங்கையை அடக்கிய ராஜேந்திரன்..
"அப்போ மாப்பிள்ள.. உங்க பொண்ணுக்கு சக்திவேல் பையனை பார்க்க மாட்டீங்க அப்படித்தானே?.. அவருக்கு என்ன குறைச்சல்?.. சொல்லுங்க.. தங்கச்சி சொல்லறதுல கொஞ்சம் நியாயம் இருக்குதுதானே?.. ஏம்ப்பா.. சக்தி உனக்கு நம்ம வேதாவை மருமகளாக்கிட சம்மதமா?.. கதிரு முதல்ல உன்னோட சம்மததைச் சொல்லு.."
கதிர்வேலோ என்ன சொல்லுவான்?.. 'பிடிக்காத மாமனிடம் மீண்டும் மீண்டும் கெஞ்ச அவனுக்குப் பிடிக்கவில்லை.. அதுதான் ஏற்கனவே தான் படிக்காதவன் என்று நன்றாக விளக்கி சொல்லி விட்டாரே?.. இந்த ராஜேந்திரன் மாமா எதற்கு மறுபடியும் இதைப் பற்றிப் பேச வேண்டும்..'
அவனைப் பொருத்தவரை வேதா என்றோ அவன் கையை விட்டு நழுவிப் போனவள்.. கிடைக்காத ஒன்றுக்காக என்றுமே அவன் ஏங்கிக் கிடந்தது இல்லை.. கிட்டாதாயின் வெட்டென மற என்ற சுபாவத்தினன்.. அதனால் தான் அன்று கூடத் தன்னை விட நல்ல படித்த ஆண்மகன் வேதாவுக்குக் கிடைத்ததற்காக வாழ்த்தவே வந்திருந்தான்.
"என்னப்பா.. இப்படி மௌனமா இருந்தா எப்படி?.. ஏதாவது பேசு தம்பி.." ராஜேந்திரன் கேட்க..
என்ன சொல்லுவது என்று தெரியாமலும், தன்னைப் பற்றி எடுத்து சொல்லிய பிறகும் மறுத்த குமார் மாமாவிடம் இதற்கு மேல் தன் மாமனிடம் கெஞ்சவும் பிடிக்காமல் தந்தையைப் பார்த்தான் கதிர்வேல்.
"இங்கே பாரு.. ராஜேந்திரா.. என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான்.. அவங்களுக்குச் சம்மதம்ன்னா எங்களுக்கு எந்தவித ஆட்சேபணை இல்லேன்னு ஏற்கனவே சொல்லியாச்சு.. இதுல நீ எங்க சம்மதத்தைச் சும்மா சும்மா கேக்கறதை விட முதல்ல குமரேசுவை கேட்பியா?.."
சக்திவேல் சொல்லி விட்டு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு குமரேசனை நட்புடன் பார்த்தார்.
சரியாகத் தவறாகவே புரிந்து கொண்டார் குமரேசன்.. நட்புக்கரம் நீட்டி உதவப் பார்த்தவரை, என்னவோ அவர் தன்னை ஏளனமாகப் பார்த்து முறைப்பது போலத் தப்பாகப் புரிந்து கொண்டவர், 'பார்த்தியா.. கடைசில என் காலடியில தான் நீ விழணும்' என்று சொல்லுவதாகக் கற்பனை செய்து கொண்டார்.
"ஏலேய்.. குமாரு.. அப்ப என் பேத்தியை இப்பவாது என் பேரனுக்குக் கட்டித் தருவியா??.. சொல்லுவே?.." கண்ணாத்தா கர்வத்துடன் கேட்க..
அவ்வளவுதான்.. எங்கிருந்துதான் அத்தனை ஆவேசம் வந்ததோ குமரேசனுக்கு..
"ஏய் கிழவி.. கொஞ்சம் வாயை மூடுவியா?.. யாருக்கு யாரை இணையா பேசறே?.. பச்சை கிளி மாதிரி இருக்கிற எம்பொண்ணை உன் பேரனுக்கா?.. எம் மவ அழகு என்ன?.. உம்ம பேரன் எங்கே?.. நல்லா கருப்பணச் சாமி கணக்குல இருக்கான்.. கொஞ்சமாவது பொருந்துமா?.. என் தங்கச்சியை ஆன்னிக்கு ஆசைகாட்டி ஒங்க வீட்டுல மடக்கி போட்டீங்க.. இப்போ என் மகளா?.. அப்பனுக்கேத்த பையன்.. எல்லாத்துக்கும் காரணம் நீதான் கிழவி.. ஏதோ பெரிய மனுஷின்னு பார்த்தா..”
"இங்க பாருங்க.. நான் எம் பொண்ணுக்கு படிச்ச மாப்பிள்ளையைப் பார்த்தேன் தான்.. அதுல எந்தத் தப்பும் இல்லை.. எல்லா அப்பனுக்கும் இருக்கும் ஆசைதான் தன் மகள் நல்ல இடத்தில வாக்கபடணும்னு.. இப்பவும், இனி மேலும் அவளுக்கு நல்ல படிச்ச பட்டிணத்து மாப்பிள்ளையைப் பார்ப்பேன்.. எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியும்..”
“அப்படிச் சம்மந்தம் அமையலைன்னா.. எம் பொண்ணை நான் கன்னி கழியாம வீட்டோட வைச்சிட்டு இருந்தா கூட இருப்பேனே ஒழிய.. உன் வீட்டுக்கு மருமவளா தாட்டி விட மாட்டேன்.. அதுக்கு நாங்க குடும்பத்தோடு தூக்கு மாட்டி சாவலாம்.. எம் பொண்டாட்டி ஏற்கனவே அரளி விதையை எடுத்தவதான்.." என ஆத்திரத்தில் என்ன சொல்லுகிறோம் என்று யோசிக்காமல் அறிவிழந்து பேசினார்.
அத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த கோபம் அவ்வளவையும் கொட்டித் தீர்த்து விட்டார் குமரேசன்..
அத்தனை நாளாகத் தன் தங்கை செய்த செயலால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவர், இன்று அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் எல்லாவற்றையும் தன் மனக்கிடங்கிலிருந்து கொட்டி தீர்த்தார்.
"குமார் சகலை.. நீ பேசறது கொஞ்சம் கூட நல்லாயில்லைப்பா.. பாவம் வயசிலே பெரியவங்க.. ஊரில பெரியாத்தானு அழைக்கப் படறவங்க.. அவங்களை நீ இப்படி மரியாதையில்லாமல் பேசறது நல்லாவே இல்லை..”
"உனக்கு இஷ்டமில்லைன்னா நாசூக்கா சொல்லு.. அதுக்காகத் தேவையில்லாமல் பேசக் கூடாது.. அந்தப் பையனுக்கு என்ன குறைச்சல் சொல்லு.. நீ சொல்லற மாதிரி அப்படி ஒண்ணும் கருப்பெல்லாம் இல்லை.. மா நிறத்துக்கும் கொஞ்சம் கீழே.. அவ்வளவுதானே.. நம்ம ஊருல யாரு தான் அப்படி இல்லை.. நாம எல்லாம் திராவிடங்க.. அதுல பெருமை படணுமே தவிர, இதுல நக்கலடிக்க ஒண்ணுமில்லையே..”
"மனுஷங்க கலரைப் பார்த்து எடை போடாதே.. அவங்க மனசை பாருப்பா.. நம்ம எல்லோரோட உடம்புலையும் ஓடறது ஒரே சிவப்பு ரத்தம் தான்.. அதை மனசுல வச்சிட்டு பேசு.. இப்பவும் ஒண்ணுமில்லை.. சக்தி தங்கமானவன்.. நீ சம்மதிச்சா உன் பொண்ணை அவர் மகனுக்கு முழு மனசோடு கட்டிப்பாரு..”
"படிப்போ, உன்னோட பட்டிணத்து மோகமோ வாழ்க்கைக்கு எப்பவும் சோறு போடும்னு நினைக்காதே.. படிச்ச எத்தனையோ இளைஞர்கள் வேலையில்லாமல் பட்டிணத்துல சுத்திட்டு இருக்கிறது நடக்கிறதுதான்.. அதே மாதிரி படிக்காதவங்களும் பட்டணத்திலையும் இருக்காங்க.. படிச்சவங்களும் கிராமத்தில ஓஹோன்னு வாழ்ந்திட்டு இருக்காங்க.. நம்ம கதிரு நல்ல பையன்.. வேதாவுக்குப் பொருத்தமானவன்.. இப்படித் தடாலடியா பேசாம யோசிச்சு முடிவெடுப்பா.."
அதுவரை அவர்கள் விஷயத்தில் நாகரீகமாக ஒதுங்கி இருந்த ராஜ்குமார் தன் மகளை ஒத்த வயதுடைய வேதாவின் வாழ்வுக்காகப் பரிந்து கொண்டு பேசினார்.
"குமார் மாப்பிள்ளை.. ராஜு சொல்லுறதில என்ன தப்பு இல்லையே.. சரின்னு சொல்லுப்பா.. உன் மவ வாழ்வும் சிறக்கும்.. என் தங்கச்சி முகத்துல சிரிப்பும் மலரும்.." ராஜேந்திரனும் தன் பங்குக்கு எடுத்துச் சொல்ல..
அவ்வளவுதான் வந்ததே ஆவேசம் குமரேசனுக்கு.. கூடவே அவரது குதர்க்க குரங்கு புத்தியும் வெளி வந்தது.
"ராஜு.. அவ்வளவு பேசறவன்.. பட்டிணத்துல படிச்ச உன்னோட பொண்ணு சத்யாவை நீ இப்படிப் படிக்காத, கிராமத்து பண்ணையாரு அந்தக் கதிருக்கு கட்டி கொடுப்பியோ?.. நல்லா பேச வந்துட்டே?.. இத்தனை பேசறீங்களே.. ஏன் என் மாப்பிள்ளை தான் தன்னோட தங்கச்சி மவளாச்சேன்னு தன்னோட மகனுக்கு படிக்காத என் பொண்ணைக் கட்ட முன் வந்தானா?.. தங்கச்சி முஞ்சில மலர்ச்சி வருமாமே?.. மலர்ச்சி.. எல்லாம் வாய் பந்தல் தான்.. எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைதான்.. தனக்குன்னு வந்தாதான் தெரியும்.. ஆளாளுக்கு வந்துட்டாங்க அறிவுரை சொல்ல.." சவால் விட்டார் குமரேசன் ஆத்திரத்துடன்.
எள் விழுந்தால் கூடக் கேட்க முடியாத அத்தனை நிசப்தம் அங்கே..
மண்டபத்தில் அனைவரும் வாயடைத்து நின்றிருந்தனர்.. யாரும் குமரேசன் இப்படித் தன் மச்சான்களை எடுத்தெறிந்து பேசுவார் என்று நினைக்கவில்லை.
முதலில் சுதாரித்தவர் ராஜ்குமார் தான்.
"அப்படி ஒண்ணு நடந்தால் முதலில் சந்தோஷப் படுகிறவன் நானாத்தான் இருப்பேன்.." என்றவர்..
"சக்திவேல் என் மகள் சத்யாவுக்கு உன் மகன் கதிர்வேலை மணமுடிப்பியா??.. என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளாக்கிப்பியா?.. இதில் எங்களுக்குப் பூரணச் சம்மதம்.." தன் கையை எடுத்து அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்த சக்திவேலின் கையைப் பிடித்தார் ராஜ்குமார்.
"என்னங்க.. என்ன இது.. எப்படி முடியும்?.."
"அப்பா..வாட் இஸ் திஸ்.. நான்சென்ஸ்....." பாதிலேயே அவள் குரல் உள்ளுக்குப் போனது.
திரும்பி சட்டென முறைத்த ராஜ்குமாரின் ஒற்றைப் பார்வையில் தாயும், மகளும் வாயை மூடிக் கொண்டனர்.
சக்திவேல் தன் மகன் கதிரை பார்க்க.. அவனோ 'இது என்ன புதுக் குழப்பம்' எனத் தந்தையை நோக்கினான்.
சக்திவேலோ அவன் பார்வையைத் தவிர்த்து தன் தாயை நோக்கினார்.. 'இப்பொழுது நான் என்ன செய்வது' என்பது போல.
"என்னப்பூ.. அதான் அத்தனை பெரிய மனுஷன் கேக்கறாப்பல.. உன் சம்மதத்தைச் சொல்லுவே?.. தம்பி ராஜு.. உன் பொண்ணை என் பேரனுக்கு மணமுடிக்க எங்களுக்கும் பூரணச் சம்மதமப்பா.. நாங்க கொடுத்து வைச்சிருக்கணும்.. பட்டிணத்துப் பொண்ணுன்னா சும்மாவா.." என்ற கண்ணாத்தா சட்டெனத் தன் கழுத்தில் அத்தனை நாட்களாகப் போட்டுக் கொண்டிருந்த ரெட்டை வட முகப்பு வைத்த பத்து பவுன் சங்கிலியை அனாயாசமாகச் சுழட்டி தன் தந்தையின் அருகே நின்று கொண்டிருந்த சத்யாவின் கழுத்தில் பூட்டியே விட்டார்.
"ராசாத்தி.. என் பேரனை கட்டிக்கோ தாயி.." என அவளை உச்சி முகர்ந்து கட்டிக் கொண்டார்..
"அப்போ என் பொண்ணோட கதி.. சக்திண்ணா நீங்க கூட என் பொண்ணை ஒதுக்கிட்டீங்களே?.. வேதாவை கதிருக்கு கட்டி வைப்பீங்கன்னு நினைச்சேனே?.. இப்படி?.. நான் என்ன செய்வேன்.. இந்த மனுஷன் எவ்வளவு பட்டாலும் அடங்க மாட்டாரா?.. நிஜமாவே இவரைக் கட்டினத்துக்கு நானும், என் பொண்ணும் தூக்குல தான் தொங்கணும்.. இப்படிக் கூட ஒரு அப்பன் இருப்பானா?.. பெத்த மகளோட வாழ்க்கையில விளையாட?.. அப்படி என்ன பட்டிணத்து மோகமோ?.."
தலையில் அடித்துக் கொண்டு அழும் கல்யாணிக்கு யாரும் ஆறுதல் சொல்ல முன் வரவில்லை.. அவரவர்களுக்கு அவரவர் கவலை.
"போடி..போ.. தூக்குல தொங்கு.. இல்லை விஷத்தை அரைச்சி குடி.. நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு அவன் பொண்ணுக்குச் சம்மதத்தை முடிச்சான் ராஜ்குமார்.. அவன் தாண்டி மனுஷன்.. நானும் மானஸ்தன்தான்டி.. என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து மணமுடிப்பேன்டி.. இவ்வளவு பேசறவ உன் அண்ணன் காலுல விழ வேண்டியதுதானே.. அவன் புள்ளையும் படிச்சவன் தான்.. பட்டிணத்துக்காரன் தான்.." நக்கலாக ராஜேந்திரனைப் பார்த்தார் குமரேசன்.
அத்தனை நாட்களாக இருந்த நட்பு, பாசம், உறவு முறை எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது..
வீம்புக்கு சொன்ன ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ராஜ்குமார் இப்படிச் சக்திவேலுடன் சம்மந்தம் பேசி தன் முகத்தில் சாணி அடிப்பார் என்று நினைத்துப் பார்க்கவில்லை..
இதில் அவர் மனைவி வேறு அவரை இன்னும் இழிவாகப் பேசி அவரை மட்டம் தட்டுவதாக எண்ணிக் கொண்டவர் மீண்டும் வாயை விட்டார்.
"ஏன் தங்கச்சி.. நீயேன் அழுவரே?.. அதான் பட்டிணத்து ராஜ்குமாரு தம்பி கிராமத்து புள்ளையைத் தன் வீட்டுக்கு மாப்பிள்ளையாக்க தயாராகிட்ட போது.. உன் அண்ணன் ராஜேந்திரன் என்ன உன் மவ வேதாவை தன் புள்ளைக்குக் கட்டிகிட மாட்டானா என்ன?..
"ஏன் ராஜேந்திரா உன் மாப்பிள்ளை கேட்டதுல என்ன தப்பு இருக்குப்பா.. நம்ம வேதா புள்ளையை உன் பையனுக்கு முடிச்சா.. குமரேசு ஆசைப்பட்டபடி அவனுக்குப் பட்டிணத்து மாப்பிள்ளையும் ஆச்சு.. உன் பையனும் படிச்சவன்.. ஒண்ணுக்கொண்ணு முறைதானே?.. உன் சொந்த தங்கச்சி அளுதுகிட்டு இருக்கு.. இன்னும் என்னப்பா பார்த்திட்டு இருக்கே?.. சொல்லுப்பா உன் சம்மதத்தை.. நானும் ஒண்ணும் கொறைஞ்சவன் இல்லைன்னு சொல்லுவியா?.. நானும் மானஸ்தன்தான்னு நீருபி.."
ஏதோ ஒரு பெரிசு திரியை கொளுத்திப் போட.. அதற்கு முன்பாகவே ராஜேந்திரன் வாயை திறந்து விட்டார்.
"அப்பச்சி.. நீங்க சொல்லவே வேணாம்.. எப்ப ராஜ்குமார் தன் பொண்ணைக் கதிர்வேலுக்குப் பேசி முடிச்சாரோ.. அப்பவே நானும் என் பையனை வேதாவுக்கு மணமுடிக்கலாம்ன்னு தீர்மானிச்சிட்டேன்.”
"வேதாவை கதிருக்கு கட்டுவானோ குமரேசன்னு ஒரு சின்னச் சந்தேகம்.. என்ன இருந்தாலும் அவர் தங்கச்சி மகனாச்சே கதிர்வேல்.. ஏற்கனவே தப்பு நடந்து போச்சு.. அப்படு நடந்தா பழைய பகையும் தீருமேன்னு நான் சும்மா இருந்தேன்..”
"இனியும் நான் வாயை மூடிட்டு இருந்தா.. என் தங்கச்சிக்கு நான் அண்ணனே இல்லை.." என்றவர்..
"அம்மாடி.. மாப்பிள்ளை சொன்னதில எந்தத் தப்பும் இல்லை.. இது முதலிலேயே வந்திருக்கணும்.. உன் நாத்தனார் மவனை நினைச்சி நானும் சும்மா இருந்தேன்.. சத்யாவும் என்னோட இன்னொரு தங்கச்சி மவ தான்.. எனக்குச் சத்யாவும், வேதாவும் ஒண்ணுதான்.. இப்போ கேக்குறேன்.. மாப்பிள்ளை.. தங்கச்சி.. உன் மக வேதாவை என் பையன் பிரகாஷுக்கு குடுப்பியா..”
"பிரகாஷ் பட்டிணத்துக்காரன்.. நல்லா படிச்சிருக்கான்.. உன் ஆசைப்படி உன் பொண்ணு பட்டிணத்தில வாழ்க்கை படலாம்.. என்னப்பா சம்மதமா?.."
எனத் தன் கையை நீட்டினார் ராஜேந்திரன்.
"அப்பா.. என்னப்பா.. நான்.. சத்யா.." உளறிக் கொட்டினான் பிரகாஷ்.
"என்னங்க.. என்ன இது.. வேதாவா?.. அவ படிக்கலையே.. அதுக்காகதானே அந்தப் பாரீன் சம்மந்தம் நின்னுது.." ருக்மணி வாயைத் திறக்க..
"ப்ளீஸ்.. என்னை மதிக்கிறதா இருந்தா அம்மாவும், பையனும் வாயை மூடிக்கங்க.. அங்க பாரு.. என் தங்கச்சி ரேவதியை.. மாப்பிள்ளையின் ஒத்தை பார்வையில இரண்டு பேரும் எப்படி அமைதியா நிக்கிறாங்க.." என்றவர்..
"மச்சான்.. இதைவிட எனக்கு வேற என்ன வேணும்.. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க.. என் பொண்ணை உங்க வீட்டுக்கு மருமவளா அனுப்ப எனக்குச் சம்மதம்.." எனக் குமரேசன் சட்டென ராஜேந்திரன் கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே பல்டி அடித்தார்.
அவருக்கென்ன அவர் நினைத்தது நடந்து விட்டது.. பட்டிணத்து மோகம் .. தன் மகள் இனி பட்டிணத்து வாசி எனப் பெருமையடித்துக் கொள்ளலாம்.
"டேய்.. யாருடா அங்கே.. ரெண்டு மேடை தயார் பண்ணுங்கடா.. இப்போ என் இரண்டு பேத்திகளுக்கும் கல்யாணம் நடக்கணும்.." கண்ணாத்தா அதிரடியாகக் கட்டளையிட..
ஊர் மொத்தமும் அந்த அதிசய, திடீர் திருமணத்துக்குத் தயாராக..
ருக்மணியோ எப்படியாவது தன் மகன் திருமணம் இந்தப் படிக்காத நாட்டுப்புற வேதாவுடன் நின்று விடாதா எனக் காரணங்களைத் தேட..,
பிரகாஷ் பட்டு வேட்டி கட்டச் சொன்ன தன் தந்தையிடம் மல்லுக்கு நிற்க..,
அங்கே ரேவதியும் ராஜ்குமாரிடம் தன் மகளுக்காக வாதாடிக் கொண்டிருக்க..,
இங்கே நம்ம கதிரோ தன் செல்ல பாட்டியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.. 'எப்படிப் படிச்ச பொண்ணு கூட வாழ்க்கை சரிவரும்.. எப்படியாவது நிறுத்திடு கிழவியென்று..'
சத்யாவோ.. 'போயும் போயும் இந்தக் குண்டு பயில்வான்தான் என் புருஷனா.. ஓ..காட்.. இந்த அப்பாவுக்குப் புத்தி பேதலிச்சுடுத்தா..' என உள்ளுக்குள் பொருமியபடி மணமேடைக்கு நகர..
யார் பேச்சும் அங்கே எடுபடாமல் இரண்டு ஜோடிகளும் மணமேடைக்கு அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் அழைத்து வரப் பட்டனர்.
குமரேசனும், கல்யாணியும் தன் மகளுக்குக் கிடைத்த வாழ்வில் மகிழ்திருக்க..
ரேவதியோ தன் மகள் எப்படி இந்தக் கிராமத்தில் படிக்காத பண்ணையாருடன்.. அதுவும் காட்டானுடன் குப்பைக் கொட்ட முடியும் கண்ணீர் உகுக்க..
ராஜ்குமார் ‘தன் மகள் எதையும் சமாளிப்பாள்’ என்ற நம்பிக்கையில் இருக்க..
ராஜேந்திரனோ.. ‘தங்கைக்காகப் பார்க்கப் போய் மகன் வாழ்க்கையைத் தான் கையிலெடுத்து விட்டோமோ.. குணவதியான வேதாவை தன் மனைவியும், மகனும் புரிந்து கொள்ள வேண்டுமே’ என அந்தக் கடவுளிடம் பிரார்த்தனையை வைக்க..
இந்த ஏற்பாட்டில் மகிழ்ந்தவர்கள் கண்ணாத்தாவும்..வேதாவும் தான்.
கண்ணாத்தாவோ தன் பேரனுக்கு ரதியெனச் சீமைப் பெண் கிடைத்த சந்தோஷத்தில் அந்தத் திடீர் திருமணத்தில் அலட்டிக் கொள்ள..
வேதாவோ.. தன் தந்தைக்குப் பிடித்தபடி தன் மணவாழ்வு அமையப் போவதில் திருப்தியாக முகமெல்லாம் சந்தோஷமாக மேடையை நோக்கிப் போனாள்.. ‘என்ன ஒன்று பாவம் கதிர் மாமா தன்னை மணக்க முடியவில்லையை.. அப்படி இருந்தால் குடும்பப் பகை தீர்ந்திருக்கும்’ என்று சின்ன எண்ணம் தோன்றியதை ஒதுக்கி விட்டுப் பிரகாஷ் கையால் தாலியை கழுத்தில் வாங்க ரெடியானாள்.
"ஹப்பாடி.. எங்கே இந்தக் கல்யாணம் இன்னிக்கு நடக்காதோன்னு நினைச்சேன் ஓடிப்போன ஃபாரின் மாப்பிள்ளையைப் பார்த்திட்டு.. எப்படியோ இப்போ டபிள் தமாக்கா.. இரண்டு கல்யாணம்.. ஒரே மேடையில.." என்று சிரித்த அய்யர்..
"கெட்டி கெட்டி மேளம்.. மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ.." என மந்திரங்களை உச்சரித்தார்.
கதிர் கையால் தாலி வாங்கிய சத்யா அவனை 'வெட்டவா குத்தவா.. உன் மூஞ்சிக்கு நான் கேட்குதோ' என முறைக்க..
கதிரோ.. ஆளைப் பாரு.. யாரோ உன்னைக் கட்டிக்கலைன்னு அழுதாங்களா' எனக் கருத்த முகத்தை மேலும் கருப்பாகி அவளைப் பார்க்கப் பிடிக்காமல் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.. ஆனாலும், அந்த சமயத்திலும் ‘இனி எனக்கு இவள் தான்’ என நினைக்காமலும் அவனால் இருக்க முடியவில்லை.
‘
இங்கே பிரகாஷோ.. விளக்கெண்ணையைக் குடித்தாற் போல முகத்தை வைத்துக் கொண்டு வேதாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்..
வேதா முகம் கொள்ளா மகிழ்வுடன்.. ‘இனி என் வாழ்வு இவனுடன் தான்’ என்று அவன் கட்டிய தாலியைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள்.
'வாயை விடக் கூடாது.. வாய் இருக்கிறதென்று எதையாவது பேசி விட்டு பின்னர் அவதிப் படக் கூடாது.. கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதே.. இங்கே கோபத்தில் வாயை விட்டார் குமரேசன்.. அத்தனை பேர் வாழ்க்கையும் மாறியது..'
ஆனால் ஒன்றை மறந்து விட்டனர்.. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தவன் இறைவன் அன்றோ..
இவர்கள் எல்லோரும் பொம்மலாட்ட பொம்மைகள் தான்.. கயிறு என்னவோ அந்த ஆண்டவன் கையில்.. இனி இவர்கள் வாழ்க்கை என்னும் ஆட்டத்தை யார் ஆட்டி வைக்கப் போகிறார்களோ??.. ஆட்டம் சிறக்குமா??.. அறுந்து விழுமா??.. போகப் போகப் தெரியும்..
************************************************************************************
Last edited by a moderator: