கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 1.

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா...

மஞ்சம் 1.



இரண்டு மாதங்கள் விடுமுறை முடிந்து, அந்தப் பள்ளி,புது உற்சாகத்துடன் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. விடுமுறை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே,எனும் ஏக்கதுடனும்

ஹைய்யா,ஜாலி...ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் எல்லோரையும் திரும்பவும் சந்திக்கலாம் எனும் மகிழ்ச்சியும் கலந்து,புது உணர்வுக் கலவையாக பள்ளியின் பழைய மாணவர்கள் பள்ளியினுள் நுழைய, வேறு பள்ளியிலிருந்து,

மாற்றலுடன்,இந்தப் பள்ளியில் புதுவரவாக,நெஞ்சம் படபடக்க,உள்ளே நுழைந்த புது வரவுகள் மற்றுமொருபுறம்.

முதல் வகுப்பு, பின்னர் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு என நான்கு வகுப்புக்களுக்கு அங்கு சேர்க்கை நடைபெறுவது வழமை. நமது கதையின் ஆரம்பம்,ஆறாம் வகுப்பில்.

ஐந்தாம் வகுப்புவரை வீட்டின் அருகேயே பள்ளி சென்று வந்த அதிதி,அவளது அம்மாவின் பிடிவாதத்தில்,இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.

இப்போவே சேர்ந்தா,இடம் கிடைக்குறது சுலபம். பெரிய கிளாஸ் போகப்போக,

கஷ்டமாகிடும். அத்தோட,ஸ்கூல் பழகிட்டா, பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் பிரச்சனை இல்லாம போகும் என , உலக நடப்பை தன் கணவரது காது தேயும் வரை எடுத்து சொல்லி, இரண்டு வருஷம் போராடி தன் மகளை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து,வேற ஸ்கூல் போகமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்தவளை தேற்றி,மகள் அழுவது தாளாமல், இங்கனயே படிக்கட்டுமே என வக்காலத்து வாங்கிய கணவரை சமாளித்து... பொண்ணா பெத்து வச்சிருக்கியே., அவ்வளவு தூரம் அனுப்பனுமா...கொழந்தையோட பாதுகாப்பு முக்கியம் இல்லையா என கேள்விகள் எழுப்பிய மாமியார்-மாமனாருக்கு பதில் சொல்லி...

ஷப்பா...இப்போவே கண்ணகட்டுதே...

இத்தனையும் செய்த சாதனை மங்கை வித்யாவிற்க்கு எப்படி இருக்கும்?

புதுப் பள்ளி ஒன்றும் தொலைவில் எல்லாம் இல்லை., வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடைத்தொலைவு. வண்டியில் வெறும் ஏழு நிமிடங்கள்தான். இதற்குத்தான்,குடும்பமே இத்தனை அலப்பறையை கூட்டி விட்டது.

அதிதி வீட்டில் ஒற்றை பெண்குழந்தை. செல்லம் அதிகம். அவள் கண்ணில் நீர் வழிந்தால்,அவள் அப்பா விஷ்வம் பாட்டே பாடிவிடுவார்“உன் கண்ணில் நீர் வழிந்தால்,என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று. வித்யாவிற்க்கு கடுப்பு ஏறும். நாங்கல்லாம் பொண்ணு இல்லையா? இல்ல எங்கப்பாம்மாவெல்லாம் எங்கள பெத்து, வளத்து, படிக்க அனுப்பி, வீட்ல வேலை பழக்கி, கல்யாணம் செஞ்சு குடுத்து அனுப்பலையா என்று நொடித்துக் கொள்வாள்(மனதில் மட்டும். வாய் விட்டு சொன்னால் மொத்த வீடும் பஞ்சாயத்து செய்யும் )

இன்னொன்னு பெத்துக்கலாமா... என்ற வித்யாவின் ஆசைக்கு,அன்றே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஷ்வம். அவருக்கு அவள் மகள் ஒருத்தி போதுமாம்.

அதிதி பிறந்த பிறகு,ஆடிட்டராக ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த விஷ்வம் அந்த நிறுவனத்தில் பார்ட்னர் அந்தஸ்த்தை பெற,அதற்குபின்னர் எல்லாமே ஏறுமுகம்தான்!

ஒற்றை குழந்தையாக இருந்ததாலோ,இல்லை வீட்டினரின் பொத்திவைக்கும் பொம்மை மனப்பான்மையோ,அதிதி மிகவும் மென்மையானவளாகவும்,சற்றே பயந்த சுபாவமாகவும்,காணப்பட்டாள். சண்டை-சச்சரவு என்றில்லை,யாரேனும் சற்று குரலை உயர்த்தி பேசினாலே,அமைதியாகிவிடும் தன்மை கொண்டவளாய்... சிறு வயதில் அவளுக்கு அழுகையே வந்துவிடும். பிறகு பயம் மீறி அமைதியாக இருக்க பழகிக்கொண்டாள்.மனதளவில் தைரியம் அற்று பலவீனம் மிகுந்தவளாக இருந்தாள்.

வித்யா அவளுக்கு உற்ற தோழிதான். ஆனால்,என்னவோ

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள ஒருவித தயக்கம் எப்போதுமே அதிதியிடம் உண்டு.யாரிடமும் மனதில் உள்ளதை சொல்ல மாட்டாள்.ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு வகைதானே?

“மனிதர்கள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம்”.

பள்ளியில்,நுழையும் போதே, வித்யா-விஷ்வம் உள்ளே வரவேண்டாம் என்று வாசலோடேயே அனுப்பிவிட்டது பள்ளி நிர்வாகம். தனியே உள்ளே நுழைந்தவளுக்கு,கண்கள் கலங்கி வாயிலை திரும்ப திரும்ப பார்த்தவாறே உள்ளே செல்ல,மெதுவாய் அங்கிருந்த ஆசிரியையிடம் தனது சேர்க்கை விவரங்கள் அடங்கிய கோப்பை நீட்ட அவர் அவளது வகுப்பைக் காட்டினார்.

மெதுவே,வகுப்புக்குள் நுழைந்தவளுக்கு,சக மாணாக்கரை பார்க்கையில், திரும்பவும் தயக்கம் பிடித்துக்கொண்டது. வகுப்பில் மூன்றாம் பென்சில் ஒரு இடம் காலியாக இருந்தது. ஒரு பெண்ணும்,ஒரு பையனுமாக அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம் சென்று., இங்க யாராவது வருவாங்களா...நா உட்காரட்டா என மெல்லிய குரலில் கேட்டவளை வெகு அதிசயமாய் பார்த்தான் நிரஞ்சன். அருகிலிருந்த ஷீலாவோ,இவளை ஒரு பொருட்டாக நினைக்காமல்,தனது சக தோழமைகளுடன் தீவிர பேச்சில் இருந்தாள்.

இங்க யாரும் வரமாட்டாங்க., நீ உக்காந்துக்கோ என பதவிசாய் பதில் சொன்னவனை, சந்தோஷமாய் கவனித்தவள் மீண்டும் மிரண்டாள். காரணம், வேறொன்றுமில்லை. நிரஞ்சன் ,வயதுக்கு மீறிய வளர்ச்சி. ஆறாம் வகுப்பிலேயே, எட்டாம் வகுப்பு போல இருப்பான்.

அவன் அருகே உட்கார்ந்தவள்,ஒன்றும் பேசாமல் இருக்க அவனே தன்னை பற்றிய விவரங்களை சொன்னான். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறேன் என்றவனை ஏறிட்டவள்,எனக்கு எங்க ஸ்கூல் தான் பிடிச்சிருக்கு.இங்க பிடிக்கல என மெல்லிய குரலில் சொல்லியவளை, நிதானமாக கவனித்தவனுக்கு, இந்த பெண் பயப்படுகிறாள் என்பது மட்டும் புரிய கவலை படாதே., எல்லாம் நம்ம ஃபிரண்ட்ஸ் தான் என முதன்முதலில் நட்புகரம் நீட்டினான். வகுப்பில்

முதல் ஐந்து நிலைகளுக்குள் வரும் அளவு மதிப் பெண்கள் எடுக்கும் நிரஞ்சன் என்றுமே,முதல் பெஞ்ச் சென்றதில்லை. முதல் வகுப்பிலிருந்தே,மூன்றாம் பெஞ்ச்தான். கடவுள் பாதி ,மிருகம் பாதி செய்த கலவை. வயதிர்க்கு மீறி கோவம் வரும்., அதே சமயம், நியாயமாய் யோசிக்கவும் தெரியும்.

வகுப்பில் முதல் வகுப்பு தமிழ் வகுப்பு. ஆசிரியை தமிழரசி ., அவரே இவர்களின் வகுப்பு ஆசிரியையும் கூட. உள்ளே வந்தவர் புது வரவான அதிதியை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் வகுப்பில் இவள் ஒருவள் மட்டுமே புதுமுகம்.

நிரஞ்சன் அருகில் அமர்ந்திருந்தவளை கண்டவருக்கு ஒருவித நிம்மதி படர்ந்தது.காலையில் வகுப்பு எங்கே என்று இதே ஆசிரியையிடம்தான் அதிதி கேட்டாள். அழுதுவிடுவாள் போல காணப் பட்டாள். இப்பொழுது ,முகம் தெளிந்து காணப்பட்டது.

மதிய உணவு இடைவேளையில்,

நிரஞ்சன் தனது நண்பர்கள் பட்டாளத்தில்,இவளையும் சேர்த்துவிட்டான். சேர்ந்தே அனைவரும் மதிய உணவு சாப்பிட்டார்கள். அதிதியின் பயம் கொஞ்சம் தெளிந்தது.

நிரஞ்சனை விட்டு அகலாமல் அவனுடனே இருந்தாள். இவளை புரிந்தவனாக, அவளுக்கு பள்ளியை சுற்றிக் காட்டினான். இறுக்கம் தளர, தன் நட்பு பட்டாளத்துடன் அவளை விளையாட வைத்தான். அவளை பேசவைக்க முயன்றான்.

மாலை வீட்டிற்க்கு கூட்டி செல்ல வந்த வித்யாவிடம், இவன் என்னோட நியூ ஃப்ரெண்ட் அம்மா...இவனோட பேரு,நிரஞ்சன் என அறிமுகம் செய்த மகளை வினோதமாய் பார்த்தாள் வித்யா. இவ்வளவு சீக்கிரம் மகள் யாரையும் தன் கூட்டுக்குள் அனுமதிக்க மாட்டாளே! என்று மனதில்

நினைத்தவாறே,

நிரஞ்சனை கண்டாள் வித்யா. நல்ல உயரம். குறும்பும் குழந்தைத் தனமுமான பார்வை. நிரஞ்சன் பார்வையில் தெரிந்த நட்பு.

தனக்கும் இன்னொரு குழந்தை இருந்திருந்தால், அதிதி இவ்வளவு தனிமையாய்,கூட்டுக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் இருந்திருப்பாளோ? எனும் எண்ணம் வித்யாவிடம் பெருமூச்சாய் எழுந்தது.

தன்னை சமன் செய்தவாறே, நிரஞ்சனிடம் பேச்சு கொடுத்தாள். அவனுடன் பேசும்பொழுது, சந்தோஷமாய் இருந்தது. பள்ளியின் வாயிலில் இருந்து பத்து நிமிட நடை தொலைவில் இருந்தது அவன் வீடு.

வாடா..உன்னையும் வீட்டில் விட்டுடறேன் என்றவளை,இல்லை அத்தை..நா நடந்தே போய்ருவேன் என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் வித்யா.

இப்பொழுதெல்லாம், பாகுபாடில்லாமல் குழந்தைகள் பெண்களை ஆன்டி என்றும்,ஆண்களை அங்க்ள் என்றும் அழைப்பதை கேட்டிருந்தவளுக்கு,

அத்தை எனும் அழைப்பு வித்யாசமாய் பட்டது.

மறுத்தவனை கட்டாயப் படுத்தி வீட்டில் இறக்கி விட்டாள் அதிதி. இதுமாதிரி வண்டியுல வந்தா அம்மா கோவிசுக்குவாங்க,

இனிமே,கம்பல் பண்ணாதே அதிதி என்றவாறுத்தான் அவன் வண்டியில் ஏறினான். இறங்கும் பொழுது இதுதான் எங்க வீடு. ஏதாவது அவசியம்னா நீங்க வாங்க அத்தை என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அம்மா கண்களில் வண்டியில் வந்தது பட்டால் கோவிப்பாள் என பயந்தவாறே உள்ளே சென்று மறைந்தான். இவர்களை உள்ளே அழைக்கவேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. சிரித்தவாறே, வண்டியை கிளப்பினாள் வித்யா.

நிரஞ்சன் துணையில் பள்ளியை பழகிக் கொண்டாள் அதிதி.எப்பொழுதுமே அதிகம் பேச மாட்டாள். அவள் நெருங்கிய நட்பு பள்ளி திறந்து இந்த இரண்டு மாதங்களில் நிரஞ்சன் மட்டுமே. அவள் மனம் வேறு யாரையும் ஏற்கவில்லை.மதிய உணவு எல்லோரும் பகிர்ந்துகொண்டாலும்,

இவளுக்கு அதெல்லாம் பழகவில்லை. நிரஞ்சன் சொல்லிபார்த்து அலுத்ததுதான் மிச்சம். ஓரிருநாள் அவன் சொல்வதை கேட்பவள் ,திரும்ப அதேபோல் நடப்பாள். சக மாணவர்கள் இவள் இப்படித்தான் என்று ஏற்கப் பழகிவிட்டனர். ஓரளவு நன்றாக படிக்கும் மாணவி என்பதால் படிப்ஸ் வட்டத்தில் இவளுக்கு இடம் இருந்தது. மற்றபடி... இவளின் நட்பு வேண்டும் அளவுக்கு அங்கு யாரும் இருக்கவில்லை. இவளுக்கும் யாரிடமும் நட்பு வேண்டியிருக்க வில்லை.

ஆனால் இவள் நிரஞ்சனுடன் இருக்கும் சமயங்களில் யாரேனும் அவனிடம் பேச வந்தால் மனதுள் கோவம் எழும். தன் பொம்மையை தான் மட்டும் வைத்திருக்கும் மனப்பான்மை.இவன் எனக்கு மட்டும் நண்பன் இல்லையே என்று தேற்றிக்கொள்வாள்.

மதியம் உணவு நிரஞ்சனுடன் மட்டும் பகிர்ந்து சாப்பிடுவாள். மற்ற தோழர்குழாம் இவனை முறைக்கும்.

இவளிடம் நேராக சொல்லிவிட்டான் ஒருமுறை,

'பாரு அதி, ஒண்ணு எல்லார்கிட்டயும் லஞ்ச் ஷேர் பண்ணிக்கோ, இல்ல எனக்கு கூட குடுக்க வேணாம். நீ மட்டும் சாப்பிடு.என் மத்த பிரண்ட்ஸ் என்னோட கோவப்படுற மாதிரி என்னால நடக்க முடியாது. அவங்கல்லாம் என்கூட பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்லேந்து பிரண்ட்ஸ். புரிஞ்சுக்க ப்ளீஸ் என்று அவன் முடிக்கவும் இவள் கண்கள் கண்ணீர் சிந்த தொடங்கிவிட, இதை பெரிதாய் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நிரஞ்சன் இல்லை.

இதே நிரஞ்சன் அவளுக்காக அவளிடம் தன்னை பணயம் வைக்கப் போகிறான். காலம் அவளை அவனிடமிருந்து பிரித்து வேடிக்கை காட்டும். அப்போது சுற்றியுள்ளவர்கள் யாரும் வேண்டா. அவள் மட்டும் போதும் என்று அவன் ஏங்கும் காலத்தில் அதிதி அவனுடன் அவனுடையவளாக நிச்சயம் இருக்கப் போவது இல்லை.
 
Top