கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 11

மஞ்சம் 11

இன்னும் குழந்தை கூட பெற்றுக்கொள்ளவில்லை. அதை ஒரு காரணமாகச் சொல்வார்களோ என்று எல்லாம் அவளை பயம் சூழ்ந்து கொண்டது.


அவளுக்கு தன் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வதை பொருத்தவரையில் தன் பெற்றோரையும் தன்னையும் இந்த சமூகம் எவ்வாறு பேசும் என்ற எண்ணம்தான் ஓங்கியிருந்தது. நினைக்க நினைக்க மூச்சு முட்டுவது போல் உணர்ந்தாள்.


ஆனால் வேறு வழியில்லை. முதலில் இங்கிருந்து கிளம்பி இந்தியா செல்ல வேண்டும்.அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு ஒருமூச்சு அழ வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.


அதையே வினய்யிடமும் சொன்னாள். சற்றே நேரம் எடுத்து யோசித்தவன் தானும் இந்தியா வருவதாக சொல்லிவிட்டான். கனத்த மௌனம். அலுவலகம் செல்லவில்லை. இருவரும் காரில் கொஞ்சம் பயணம் செய்தார்கள். இரவு இருவரும் ஒன்றாக இந்திய உணவகம் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். இருவருக்கும் ஒரே யோசனை. பெண் தன்னறைக்கு செல்ல அவன் நடாலியின் அறைக்குள் நுழைந்து கொண்டான். நட்டாலி இன்னும் வந்திருக்கவில்லை. இவனிடம் எந்த குற்ற உணர்ச்சியும் பதட்டமும் இல்லை.


அதிதிக்கு நேற்று இருந்த உணர்ச்சி கொந்தளிப்பு இன்று இல்லை. உணர்வுகள் இந்தியா நோக்கி பயணப்பட ஆரம்பித்து விட்டது.

தனது ஆடைகள் அனைத்தையும் எடுத்து சீராக மடித்து வைத்தாள். அவளது சூட் கேசுகள் வினய் தான் எடுத்து தர வேண்டும். காலையில் கேட்கலாம் என்றிருந்தாள். அவன் இருக்கும் அறை கதவை தட்ட அவளுக்கு தயக்கம்.


ஆனால் அவள் ஆழ் மனதில், அவளே அறியாது 'தான் திருமண உறவுக்கு ஏற்றவள் இல்லையோ, அதனால் தான் கணவனை தன்னிடம் நிறுத்தி வைக்க முடியவில்லையா 'எனும் எண்ணம் பதிந்திருக்கிறது. இதிலிருந்து அவள் எப்படி வெளிவரப் போகிறாள் என்று தெரியவில்லை.


இதெல்லாம் ஒரு விஷயமா என்று உங்களுக்கு தோன்றுமா யின் என் பதில் ஆம் என்பதே!


மனம் ஒரு கண்ணாடி பாத்திரம். சிறு அல்லது பெரு விஷயங்கள் என்பதல்ல... எதற்கு வேண்டுமானாலும் அடி படலாம்.


ஏற்கனவே பூஞ்சை மனது அதிதிக்கு. கணவனின் நடத்தைகள் அவளை உடைக்கவில்லை என்றால் வியந்திருப்பேன்.


நிரஞ்சனும் அவளுக்கு இப்போது நெருங்கியவனாக இல்லை. எனில் இவளின் தனிமை இவளை என்ன செய்யும்?


திசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சமயம் கலிபோர்னியா மாகாணம் கொண்டாட்டங்களுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்க, விநயன் தனது அலுவலக விடுப்பு இரண்டு மாதங்களுக்கு எடுத்துக்கொண்டான். மேலும் ஒரு மாதம் இந்தியாவிலிருந்து வேலை செய்ய தீர்மானித்திருந்தான். அதிதியிடம் அவளது ஐந்து பெட்டிகளை கொடுத்து விட்டு தன் உடுப்புகளையும் எடுத்து வைத்துக்கொண்டான்.

ஒருவருக்கு எகனாமி வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லை. பிசினஸ் வகுப்பு டிக்கெட் ஒன்று எடுத்தான்.

அதிதி தான் எகனாமி டிக்கெட்டில் வருவதாக சொல்லி அதற்கு உண்டான பணம் கொடுத்து விட்டாள். அவள் மாமா கொடுத்த பணம் அவளிடம் இருந்தது.

அவள் மனம் அவனுக்கு புரிந்தது.ஆனால் இதற்கெல்லாம் அவன் அசருவதாக இல்லை. அவன் மனதில் இருக்கும் திட்டமே வேறு.


நடாலி இரண்டு மாதங்களுக்கு தன் குழந்தையுடன் இருப்பதற்காக நியூ ஜெர்சி சென்றுவிட்டாள். இது ஆண்டுதோறும் அவளுக்கு வழக்கம் தான். கண்டிப்பாக அந்த இரண்டு மாதங்கள் அவள் தன் குழந்தையுடன் கழிப்பதை விரும்புகிறாள். அவளது இந்த முடிவுகளில் எல்லாம் யாராலும் தலையிட முடியாது. அத்துடன் அவள் அங்கிருந்தே தனது வேலைகளையும் முடித்து விடுவாள்.


இந்தியா வருவது பற்றி யாரிடமும் முக்கியமாக அதிதி தன் பெற்றோரிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று மிகத் தீவிரமாக சொன்னான் விநயன். எப்போதும்போல ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்காமல் சரி என்று விட்டாள் அதிதி. அவளுக்கு எப்படியாவது இந்தியா போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலை. அதனால் அவன் அப்படி என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட இருந்தாள்.அந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் அவள் கணவன்.


அவனுக்கு தன் மனைவி அவ்வளவு எளிதாக தன்னை ஒதுக்கித் தள்ளுவது ஜீரணம் செய்து கொள்ள முடியவில்லை. இதை தனது ஆண்மைக்கு விழுந்த பலமான அடியாக நினைத்தான் அவன். இந்த மூன்று மாத காலத்தில் அவளை தன்னால் முடிந்தவரை பழி வாங்குவது என்ற முடிவுடன் கிளம்பியிருக்கிறான்.

சில நபர்களின் அகராதியில் சரி தவறு என்பதற்கு எல்லாம் அர்த்தங்கள் வேறு மாதிரி எழுதி இருக்கும்போல.


இருவரும் ஒருவழியாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்தார்கள். சியாட்டலில் இருந்து கிளம்பும்போதே சொல்லிவிட்டான் விநயன், நேராக நங்கநல்லூரில் இருக்கும் விநயனின் வீட்டிற்கு செல்வது என்று. அங்கிருந்து இருவரும் நல்ல வக்கீலை சந்தித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம். யாரும் ஒன்றும் நம்மை கேட்க முடியாது. இதுபற்றி பெரியவர்களிடம் ஏதும் கூறிக் கொள்ள வேண்டாம். விஷயம் ஓரளவுக்கு முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டான்.

பெண்ண வளுக்கு இதுபற்றியெல்லாம் தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும், இத்தனை வருடங்களாக அவனுடன் இருந்த நாட்களில் புரிந்து கொண்டவரை அவன் வழியில் சென்று தான் அவனிடம் நமக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ள முடியும் என்பதையும் அனுபவத்தில் உணர்ந்திருந்த காரணத்தால் வாயை மூடிக்கொண்டு மவுனம் காத்தாள்.

அவளுக்கு அவனுடன் அவன் வீட்டிற்கு செல்வதற்கு துளிகூட விருப்பமில்லை. திருமணமான புதிதில் சென்றது. அவளுக்கு தன் மாமியார் வீட்டில் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. பிறகு அமெரிக்கா செல்லும் வரை, அதிதி தன் வீட்டிலேயே இருந்து விட்டாள். அவனது பெற்றோரும் அவளை தங்களுடன் கூட்டி வைத்துக் கொள்வதில் எந்த விருப்பமும் காண்பிக்கவில்லை. பெண் அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டார்கள். அப்பொழுது வித்யாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது. இதெல்லாம் சரியாக இல்லை என்று அவள் மனது எச்சரித்தது. இப்பொழுது நடப்பதையும் அதற்கு தோதாக.


ஏர்போர்ட்டில் இருந்து வரும் வழியில் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், விநயனின் முகம் மட்டும் ஜொலித்தது. அவன் கண்களை பார்க்கும் போது புலியின் கண்களை பார்ப்பது போல் ஒரு உணர்வு அவளுக்குள்.

வயிற்றுக்குள் இருந்த பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை மிகுந்த சிரம பட்டு அடக்கி தன்னை தைரியமாக காட்டிக்கொண்டு அவனுடன் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தாள்.


இருவரும் அவனது வீட்டை அடைந்தார்கள்.

வீட்டில் அவனது பெற்றோர்கள் இருவரையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். பயணக் களைப்பு தீர்ந்து இரண்டு மூன்று நாள் கழித்து வக்கீலை போய் பார்க்கலாம் என்று விட்டு ஏதோ விடுமுறைக்கு என்று பெற்றோர்களை பார்க்க வந்து இருப்பது போன்ற பாவனை அவனிடம். எதற்குமே அலட்டிக் கொள்ளவில்லை குளித்தான்...சாப்பிட்டான்... ஜெட் லாக் என்று தூங்க சென்று விட்டான். அதிதிக்குதான் இந்த இடம் சுத்தமாக ஒட்டவில்லை.ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை.


இரண்டு நாட்கள் எப்போது தான் முடியுமோ என்று அவள் காத்திருப்புக்கு பிறகு, மெல்ல தன் திட்டத்தை பற்றி கூற தொடங்கினான் விநயன்.


அதாவது, இருவரும் சாதாரணமாக தங்களை காட்டிக் கொள்வது.வெளியே வாசல் என்று சுற்றி வருவது.வீட்டு பெரியவர்களிடம் தாங்கள் முடிவைப் பற்றி எதையும் சொல்லிக் கொள்வதில்லை. முக்கியமாக, அதிதியின் வீட்டில் அவள் விவாகரத்து செய்யப் போவதை பற்றி சொன்னால் எல்லாவற்றையும் ஒன்று விடாமல்

காரணமும் கூட சொல்ல வேண்டிவரும். அவ்வாறு சொன்னாலும் கூட நிர்பந்தப்படுத்தி அவனுடன் வாழ சொல்ல வாய்ப்பு உண்டு. அதற்கு பதிலாக இருவரும் இங்கு இருந்துகொண்டே விவாகரத்து செய்ய அதற்கான மனு போட்டு விட்டு மூன்று மாதங்கள் கழித்து இவன் சென்று விட்ட பிறகு அதிதி தன் வீட்டுக்குச் சென்று எல்லா விஷயங்களையும் கூறினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை.கண்டிப்பாய் அதிதியிடம் இருந்து விவாகரத்து பெறுவதை மட்டுமே அவன் விரும்புகிறான்.

இரண்டு பேரும் மனரீதியாக ஒப்புக்கொண்டு விவாகரத்துக்கு மனு செய்தால் இவர்களுக்கு விவாகரத்து கிடைப்பது எளிது. இவன் அமெரிக்கா சென்று விட்டால் இரண்டு பேரும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விஷயமும் எளிதாகி விடும். இரண்டு பேருக்கும் சேதமில்லாமல் இந்த பந்தத்திலிருந்து விடுதலை பெறுவது புத்திசாலித்தனம்.

என்றெல்லாம் அவன் பேசிய நீண்ட பேச்சை கேட்டுக்கொண்டே வந்தாள் அதிதி.

சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிக் கொண்டே வந்தவன் முக்கியமான இடத்தில் அவள் முன் ஒரு நிர்பந்தம் வைத்தான்.


அது, அவன் இங்கு இருக்கும் இந்த மூன்று மாதங்களும் அவள் அவன் மனைவியாக அவனுடன் இருக்க வேண்டும்.எல்லா விதத்திலும். இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அவள் வேகமாக தலையாட்டினாள். அவள் வார்த்தைகளுக்கு அவன் என்றுமே மரியாதை கொடுப்பதில்லை. இப்போது கொடுப்பதாகவும் இல்லை . இது அவனுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நழுவ விட்டால் மீண்டும் மனைவி என்ற உரிமையுடன் இந்த பெண்ணை தொட முடியாது. அதனால் நிச்சயம் அவளின் மறுப்பை லட்சியம் செய்ய அவன் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

அவளுக்கு நினைக்கும்போதே என் மனமும் உடலும் வலித்தது. இன்னொரு பெண்ணுடன் கூடிய உன்னை எவ்வாறு படுக்கையில் அனுமதிப்பேன் என்று அவள் மனம் கதறியது.அந்த குரலை காது கொடுத்து கேட்டதாகவே தெரியவில்லை.

தன் பெற்றோரிடமே சென்ற விவரத்தை தெரிவித்து விஷயத்தை முடிக்க பார்த்தால் என்ன என்றும் அவளுக்கு தோன்றியது.

அவள் எண்ண அலைகளை படித்தவன் போல ஒருவேளை நீ உன்னுடைய பெற்றோரின் உதவியுடன் விவாகரத்துக்கு மனு செய்தாலும் கூட உன்னை இழுத்தடிப்பு எண்ணத்தை விட விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.


அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதில் சொல்ல தாளாமல் படுக்கையில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு அழுது தீர்த்தாள். இந்த நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் தன்னை மீட்பவர் யாரும் இல்லை என்பது அவளுக்கு தெரியும். அவன் கையில் நூல் இருக்கிறது அவன் பொம்மலாட்டத்தில் ஆட்டும் பொம்மை தான் என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்.


அவன் மனதில் இந்த பெண் எந்தவித காரணத்தைக் கொண்டும் இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசித்து விடக்கூடாது என்ற வன்மம் நிறைந்திருந்தது அவன் மனம் முழுவதும்.

அதை செயல்படுத்துவது எப்படி என்பதை அவன் அறிவான்.
 
Top