கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சம் 14

மஞ்சம் 14

மித்ராவிற்கும் அம்மா கிடையாது என்பதனால் உண்டான பரிவில் தான் அவளுடன் நட்புடன் நடந்து கொண்டது. ஆனால், மித்ராவுக்கும் தனக்குமான நட்பை காதல் என்று புரிந்து கொண்டதால்தான் அதிதி தனது அப்பாவின் ஏற்பாட்டிற்கு சம்மதித்து திருமணம் செய்து கொண்டாள். இது அவள் நிரஞ்சனை விட்டு நகர்ந்து செல்வதற்காக தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி என்பது இந்தக் கணம் வரை நிரஞ்சனுக்கு தெரியாது. இதில் வருத்தம் என்னவென்றால் நிரஞ்சன் மீதான பற்றை அவள் இன்று வரை ஆராயவில்லை. ஒருவேளை அதைப் பற்றி அன்றே நிரஞ்சனிடம் பேசியிருந்தால் இன்று அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தை கூட இருந்திருக்கலாம்.


மித்ரா திருமணம் முடிந்து சென்று இரண்டு வருஷங்கள் ஆகிறது. அவளுக்கு நிரஞ்சனின் போக்கு புரிந்தது. அதில் குறுக்கிட அவளுக்கு விருப்பம் இல்லை.


அதிதி ஒருநாள் முழுவதையும் தனது அறைக்குள்ளேயே கழித்து விட்டு அடுத்த நாள் காலை வெளியே வந்தாள். விஸ்வம் அலுவலகம் செல்லவில்லை.

ஏதோ பெரிய பிரச்சனை, மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. நிரஞ்சனும் வித்யாவும் சேர்ந்து மறைக்கிறார்கள் என்று அவருக்குள் சந்தேகம் இருந்தது.

வித்தியாவின் மனதிலோ தனது கணவரின் முன் எல்லா விஷயங்களையும் பேசி அவரால் தாங்க முடியாது போய் மீண்டும் உடல்நிலை பாதித்தால் என்ன செய்வது என்ற படபடப்பு... சமீபகாலமாக விஸ்வம் அடிக்கடி அலுவலகம் செல்வது கூட குறைத்துக் கொண்டு விட்டார்.

அதிதியின் மனதிலும் இதே எண்ண அலைகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு நீரு ஒரு காரணம் என்றால் தனது அப்பாவும் இன்னொரு காரணம். அவரின் உடல் நிலையை உத்தேசித்து தான் திருமணத்தை நிறுத்தாமல் ஏற்பாடுகளுக்கு அரை மனதாக சம்மதித்தாள் அதிதி.


இந்த திருமணம் வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று ஒரே ஒருமுறை தனது தகப்பனை முன்னிறுத்தி அதிதி சொல்வதை கேட்டு விஸ்வத்துகு மீண்டும் படபடப்பாய் வேர்வைகள் பூக்க ஆரம்பித்துவிட்டது... அதேபோன்று இன்றும் தான் எதையாவது சொல்லப்போக அப்பா என்ன ஆவாரோ.. என்ற பயம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

அந்த வீட்டில் அப்போதைக்கு நிதானமாக இருந்தது நிரஞ்சன் மட்டும்தான். அதிதிக்கும் நிரஞ்சன் முன் தனது அந்தரங்கத்தை பற்றி பேசுவதற்கும் விருப்பமில்லை.

ஆனால் அவன் விடா கண்டதாக எங்கும் செல்லாமல் அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டான்.

பொதுவான பேச்சுக்களுடன் காலை உணவை முடித்து விட்டு, அதிதி நேரடியாகவே நிரஞ்சனிடம் கேட்டு விட்டாள்...

"என்ன நீரு...அதிசயமா இருக்கு இங்கே வந்து தங்கி இருக்க?"அவள் கண்கள் அவனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.


நிரஞ்சன் மெருகு கூடி மிகவும் அழகாக இருந்தான். அவனது 6 அடி 2 அங்குலம் உயரம் இப்பொழுது இன்னும் அனாயாசமாக தெரிந்தது. அதற்கு உண்டான உடற்கட்டு அவன் உடற்பயிற்சியை கட்டியம் கூறிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் கம்பீரத்துடன் கூர்மையும் கூடி இருந்தது. அந்த கூர்மை அதிதியின் உள் ஆழம் வரை... கத்தியைப் போல கூர்மை கொண்டு அவள் இதயம் வரை சென்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. அவனது பரந்த நெற்றி, அவனது அறிவையும் அதில் இருக்கும் சுருக்கங்கள் அவனது யோசனைகளையும் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் புருவ மத்தியில் இருக்கும் முடிச்சு, அதற்கான விடைதான் அதிதிக்கு தெரியவில்லை.


நேற்று வந்த போது அவள் கண்களில்' ஏன் வந்தாய்...'என்ற கேள்வி இருந்தது என்றால் இப்போது அவள் பார்த்த பார்வையில் வந்துவிட்டாயா... என்ற ஆஸ்வாசம் தெரிந்தது. ஆனால் அவன் முன் தன்னைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயக்கம் ஒருபுறமும், அவன் தன்னை விட்டு விலகி மூன்றரை ஆண்டுகள் முழுதாக முடிந்துவிட்டது இனி, அவன் தன்னுடன் பழைய படி உயிர் நண்பனாக முடியாது என்ற எண்ணம் ஒரு புறமுமாக அவளை அலைக்கழிக்க அவள் விழி பேசிய மொழி ஏக்கம் மட்டும்தான்!


அவனது தோற்றம் அதில் உள்ள மாற்றங்கள் அதிதியை மிரளச் செய்தது. அவள் தன்னோட சொல்லிக்கொண்டாள் "இவன் என் நீரு இல்லை என்று".

இதற்கு மேல் வாயை திறக்காமல் இருக்க முடியாது என்று தன்னை ஒருவாறு சமாளித்து கொண்ட அதிதி வித்யாவை மட்டும் பார்த்து மெல்லிய குரலில், ' நா விநயன டிவோர்ஸ் பண்ணலாம்னு யோசிக்கிறேன் மா... அவருக்கும் அதே எண்ணம் தான்' என்றாள்.

அவள் வார்த்தைகளில் விஸ்வம் அதிர்ந்து போனார். வித்யா இவற்றை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என அவள் எண்ணபோக்கு.

மகளின் மெல்லிய குரல் ஆழ்ந்து ஒலிப்பதிலிருந்தே, அவள் மனதில் இருக்கும் உறுதி ஓரளவுக்கு புரிவதாய் இருக்க ஆண்கள் இருவரும் வார்த்தைகள் வெளிவராமல் தவித்தார்கள். விஸ்வம் நிரஞ்சன் இருவருக்கும் மனதில் ஒவ்வொருவிதமான உணர்வலை.வித்யா தனது உணர்ச்சிகளை குரலில் காட்டாமல் '

சரி, சென்னை வந்து ரெண்டு மாசம் ஆகுது... இதுக்கு தான் ரெண்டு

பேரும் சென்னை வந்தீங்கன்னா... நீ நேரே நம்ம வீட்டுக்கு வராம நங்கநல்லூர் எதுக்காக போன? அங்க ரெண்டுமாசமா தங்க வேண்டிய அவசியம் என்ன?


நேரடியான கேள்வி கேட்ட வித்யாவை, மேற்கொண்டு பார்க்கமுடியாமல் தலை குனிந்து கொண்டாள் அதிதி. அதியின் மனதில் தான் இரண்டு மாதமாக நல்லூரிலிருந்து எப்படி அம்மாவுக்கு தெரியும் என்ற குழப்பம்.

சாப்பாட்டு மேசையில் நடந்துகொண்டிருந்த இந்த விவாதத்தினால் அங்கு அமர்ந்திருந்த நான்கு பேருக்குமே உணவு உள்ளே செல்லவில்லை.

அம்மா கேட்பது நியாயம்தான். அதற்கான விடைகள் தன்னிடம் உண்டு. அதை எப்படியாவது தைரியப்படுத்திக் கொண்டு சொல்வதற்கும் நான் தயார்தான். ஆனால் நடுக்கூடத்தில் வைத்து எனது அந்தரங்கத்தை கடை விரிக்க நான் தயாராக இல்லை... என்று மனதிற்குள்ளேயே பேசிக்கொண்ட அதிதி,' அம்மா ப்ளீஸ்... கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. இப்ப இத பத்தி எல்லாம் பேசுற மன நிலைமையில் நான் இல்லை. கண்டிப்பா ஒரு நாள் இதை பற்றி உங்ககிட்ட நான் பேசுவேன். அது வரைக்கும் எனக்கு டைம் கொடுங்க. அவள் கண்கள் இதோ அதோ என்று கண்ணீர் பொழிய தயாரானதோடு நிரஞ்சனை பார்த்து, அவன் முன் தான் அழுது விடக்கூடாது என்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். அவளது முயற்சி அவனுக்கும் புரிந்தது. ஆனால் அங்கு அத்தனை பேச்சுவார்த்தை நடந்தும் எதற்குமே அவன் முகம் எந்த உணர்வையும் காட்டவில்லை.எதிலும் தலையிட்டு கொள்ளவுமில்லை. அவன் மனதோ கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அதிதி தன் முன் எல்லாவற்றையும் பேசுவதற்கு தயங்குகிறாள் என்பது அவனுக்குத் தெரியும்.

அவள் அனுப்பிய மெயில் களுக்கு அவன் பதில் அனுப்பியிருந்தால் ஒருவேளை இன்று இவ்வளவு தூரத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அவள் மனதில் உள்ள எல்லா புழுக்கங்களையும் ஒவ்வொரு சமயத்திலும் என்னிடம் இறக்கி வைத்திருப்பாள். இன்று இவ்வளவு தூரம் வந்திருக்காது என்ற எண்ணம் அவன் மனதில் எட்டிப்பார்த்தது. அதேசமயம் திருமணமான பிறகு, கணவன் மனைவி இடையில் இருக்கும் விஷயங்களை மூன்றாம் நபரான தன்னிடம் அதி சொல்லியிருப்பாளானால் கண்டிப்பாக அது கணவன் மனைவியிடையே பிரிவை உண்டாக்கி இருக்கும். எனது காதலை மீண்டும் பெறுவதற்காக நான் விளையாடியது போல் குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று போடும். இருந்தாலும், அவன் மனமோ...என் முன்னாடி பேச கூடாதா அதி?நான் வேற யாரோ வா?என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தது. அவளின் இப்போதைய போக்கு நிரஞ்சனால் ஜீரணிக்க முடியவில்லை.

தன் மனதிற்கு நெருக்கமான அதி தன்னை எங்கோ தூர நிறுத்திவிட்டாள் என்ற எண்ணம் காதல் கொண்ட இதயத்தில் ரணம்.

யாருக்கும் சாப்பிட பிடிக்காததால் அவரவர் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்கள். வித்யாவிற்கு தன் கணவன் கேட்கும் கேள்விகளுக்கு தான் என்னவிதமான பதில் அளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. அவர்கள் அறையிலே விஸ்வத்தின் பார்வை வித்யாவை குற்றம்சாட்டியது... நேரடியாகவே கேட்டு விட்டார் 'நீ என்கிட்ட ஏதாவது மறைக்கிறியா வித்யா'?அதுக்குதான் நீருவ வர சொன்னியா?

வித்யாவிடம் முழு பதில் இல்லையாதலால் அவளின் வெறித்த பார்வை கொண்டு விஸ்வம் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அமைதியாக விட்டு விட்டார். அவர் மனதில் அமைதி இல்லை.


ஒருவழியாக தன்னை சுதாரித்துக்கொண்ட வித்யா மதியம் தனது அறையில் தனித்திருந்த அதியை பார்க்க சென்றாள்.

முகம் முழுவதும் நீர் கோர்த்தது போல வீங்கி இருக்க, கண்கள் சிவந்து இருந்த பெண்ணை பார்ப்பதற்கே வித்யாவிற்கு தாங்கவில்லை. விசுவம் கேட்ட கேள்விக்கு தனக்கு என்ன விவரங்கள் தெரியும் என்று வித்யா வாயைத் திறக்கவில்லை. தன் தம்பி சொன்னவற்றை எல்லாம் இதுவரை நிரஞ்சனிடம் மட்டுமே சொல்லியிருக்கிறாள் வித்யா.

விசுவத்தின் உடம்பு நிலையைக் கணக்கில் கொண்டுதான் வித்யா அவ்வாறு செய்தது. கணவரிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை.

இன்னொரு முறை இதயம் தாக்கப்பட்டால் விஸ்வம் பிழைப்பதே பெரியதாகி விடும் என்று மருத்துவர் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். அதனால் ஒரு மனைவியாகவும் யோசிக்க வேண்டிய நிலையில் வித்யா.

அதிதி மனதளவில் கண்ணாடிப் பாத்திரம் என்றால், விஸ்வம் உடலளவில் அவ்வாறு ஆகிவிட்டார்.

மகள் வெளிநாட்டில் திருமணமாகி, கணவனும் மனைவியுமாக சந்தோஷமாக குடித்தனம் பண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். நடுவில் அதியும் மாப்பிள்ளையும் ஒருமுறை கூட இந்தியாவிற்கு வந்து தங்களுடன் இருக்கவில்லை. தங்களையும் அங்கு வந்து தங்குமாறு அழைக்கவில்லை, என்ற மனத்தாங்கல் வித்யா -விஸ்வம் இருவருக்குமே இருந்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம்அதியுடன் கூட வாயைத் திறந்து கேட்டதில்லை. அதிதியும் இதைப்பற்றியெல்லாம் கணவனிடமோ பெற்றோரிடமோ பேசியது இல்லை.

இரண்டொரு முறை சம்மந்தியிடம் பேசியதற்கு, வினயனின் அப்பா ' அவன் யு எஸ் போய் இத்தனை வருஷத்துல நாங்களே ஒரு தடவை தான் போயிட்டு வந்து இருக்கோம். அங்கு அவனும் ஜாஸ்தி இருக்க மாட்டான்... சுத்தி வரையும் யாரும் இந்தியர்கள் இல்லை. நேரம் போறதே ரொம்ப கஷ்டம். அத்தோடு வெதர் கண்டிஷன் நம்மளுக்கு ஒத்துக்காது.அதனால நாங்களே போவதில்லை என்று மறைமுகமாக நீங்களும் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். விநயனின் அம்மா விசுவத்தின் தங்கை முறை ஆகிறாள். அந்த தைரியத்தில் தான் விஸ்வம் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது. ஆனால் சம்பந்தியாக அவள் நடந்துகொள்ளும் விதமே வேறாக இருக்கிறது.

அவர்கள் சொன்னதைக் கேட்டு விஸ்வம் தன் மகள் தனிமையில் எவ்வளவு கஷ்டப் படுகிறாளோ என்று உள்ளூர வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் வாயை திறந்து சொன்னால் வித்யா கலங்கி விடுவாள் என்பதற்காகவே தன்னுள்ளே வைத்துக்கொண்டார். ஒருவேளை, எப்படியாவது மகளைப் பார்ப்பதற்கு சியாட்டல் இரண்டொரு முறை சென்று வந்திருந்தால் மகள் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டாரோ என்ற எண்ணம் அவருக்கு. அவரைப் பொருத்தவரை அங்கு தனிமை தாங்க முடியாமல்தான் அவர் மகள் என்று டிவோர்ஸ் என்ற வார்த்தையை உச்சரிக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். ஆனால் திருமண வாழ்க்கை சரியாக அமைந்து இருக்குமாயின், அந்தத் தனிமையை கூட அவர் மகள் வென்று இருக்கலாம் என்று அவருக்கு இன்னும் தெரியாது .
 
Top