கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மஞ்சள் பை 10

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 10

காலையில் எழுந்து குளித்து முடித்து சிறிய அலமாரியில் இருந்த சாமி படங்களுக்கு பூஜை செய்து மனைவியின் படத்திற்கும் பூ போட்டுவிட்டு, "துளசி! இட்லி எடுத்துட்டியா? எடுத்துட்டேன்னா தட்டைக் கொண்டா.. ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டு வேலையை முடிக்கிறேன்.. எட்டு மணிக்கே வாரேன்னாங்க.. முடிஞ்சா அவங்களையும் சாப்பிட வைக்கணும்" என்று காலையிலேயே பரபரப்பானார் தங்கமாரியப்பன்.

அதிசயமான அதிசயமாக அன்று விநாயகமும் விரைவிலேயே எழுந்து கிளம்பி வெளியில் போய் விட்டான். திருப்பணிக்காரர்கள் வந்து காப்பியும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு ரசீது புத்தகத்தைத் திறக்க, அவர்களுக்கு கொடுப்பதற்காக பீரோவைத் திறந்த தங்கமாரியப்பனுக்கு அன்றைய தினத்தின் முதல் அதிர்ச்சி காத்திருந்தது.

பேரனுடன் சேர்ந்து கட்டாக பணத்தை எண்ணி வைத்திருந்த மஞ்சள் பையை காணவில்லை. "இங்கேதானே வச்சேன்.. பேரன் கூட பார்த்தானே.. அதுக்குள்ளேயா மறந்து போயிட்டேன்.. அப்படி ஒரு மறதியா வந்துருச்சு நமக்கு" என்று வழக்கமாக பொருட்களை பத்திரப்படுத்தும் வேறு சில இடங்களிலும் தேடினார். 'ரொம்ப மறதியா இருக்கோ?' என்று மற்றவர்கள் கேட்டபோது ஒத்துக் கொள்ளாமல் இல்லை என்று அவர்களுடன் வாக்குவாதம் செய்தாலும் எனக்கு சில விஷயங்கள் மறக்கின்றன என்பதைக் கொஞ்ச காலமாக உணர ஆரம்பித்திருந்தார்.

அந்த மஞ்சள் பை இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்றான போது படபடப்பு வந்தது அவருக்கு. "துளசி துளசி! இங்க வா!" என்று அவளைக் கூப்பிட்டு, "இதுலதான் ஒன்னரை லட்ச ரூபாய் எண்ணி வச்சிருந்தேன்.. இப்ப காணும்" என்றார். "ஐயையோ!" என்று துளசியும் பதறினாள்.

ஒருபுறம், 'மாமா வேற எங்கேயாவது மறந்து வச்சிருப்பார்' என்று தோன்றினாலும் கணவன் அத்தனை முறை இரவு கேட்டானே, ஒருவேளை எடுத்திருப்பானோ என்றும் தோன்றியது. தானும் வந்து தேடிப்பார்த்தாள். பணம் வைத்திருந்து காலியான மஞ்சள் பைகளும், உபயோகப்படுத்தாத சில பைகளும் அப்படியே இருந்தன. இந்தப் பைக்கான அறிகுறியே இல்லை.

முகுந்தன் அப்போது தான் பள்ளிக்குக் கிளம்பி போய் இருந்தான். "அவன்கிட்ட போய் பள்ளிக்கூடத்துல கேட்டுட்டு வரட்டா?" என்று துளசி கேட்க, "உன் புருஷனை போன் போட்டு உடனே வரச் சொல்லு!" என்று கண்டிப்புக் குரலில் கூறினார் தங்கமாரியப்பன்.

உள்ளே ஏதோ சலசலப்பு என்று தெரிந்து கொண்ட கோயில் தொடர்பானவர்கள், "நாங்க வேணா போயி ஒரு பதினோரு மணிக்கு மேல வரட்டுமா? இன்னும் ரெண்டு இடத்துக்கு வசூலுக்குப் போக வேண்டியது இருக்கு" என்றார்கள். தங்கமாரியப்பன் உடனடியாக பணத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார், அதனால் வசூலை எந்த சங்கடமும் இல்லாமல் வெற்றிகரமாகத் துவங்கியது போல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தவர் அவர்களுக்குமே சிறிய ஏமாற்றம்தான்.

'சரி போய்ட்டு வாங்க' என்று தலையாட்டி அனுப்பி வைத்தாள் துளசி. பல முறை அழைத்த போதும் தங்க விநாயகம் அழைப்பை ஏற்கவே இல்லை. "சின்னக்குட்டி அண்ணன் கடையில தான் இருப்பாக.. நீங்க மனசைத் தளர விடாதீங்க மாமா.. நான் போய்க் கூட்டிட்டு வரேன்" என்று அவள் செருப்பைப் போட்டுக்கொண்டு கிளம்ப,

"நானே போறேன்! ஆம்பளத் தடியனுக இருக்குற இடம்.. பாவம் நீ எதுக்கு அவ்வளவு தூரம் போற?" என்று தானே கிளம்பிவிட்டார்.

அவள் சொன்னதுபோலவே அங்குதான் இருந்தான் விநாயகம். அப்போதுதான் ஏதேதோ பேப்பர்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஒரு ரசீதை வாங்கிக்கொண்டு மஞ்சள் பையில் இருந்த ஒன்றரை லட்சத்தை கேஸ் ஏஜென்சி டீலரிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். 'ரெண்டு லட்சம் குடுக்கணும்ப்பா' என்று சின்னக்குட்டி சொல்லியிருக்க, ஒன்றரை லட்சம்தான் புரட்ட முடிந்தது என்று விநாயகம் கொடுத்திருந்தான்.

"சரி நான் வேணா ஐம்பதாயிரம் தரேன் இரண்டு பைசா வட்டி குடு போதும்.. கரெக்டா குடுத்திருப்பா.. டீல் கைவிட்டுப் போகக் கூடாதுன்னு தான் நான் ரிஸ்க் எடுக்கேன்" என்று பெருந்தன்மையாகத் தருவதுபோல் தன் சொந்தப் பணத்தை கொடுத்து டீலை முடித்திருந்தான் சின்னக்குட்டி. வழக்கம் போல 'இந்த ஏஜென்சியை எடுக்க அவ்வளவு போட்டி.. இவங்க முயற்சி பண்ணுதாங்க, அவங்க முயற்சி பண்ணுதாங்க' என்று ஏகப்பட்ட முன்னோட்டங்களைக் கொடுத்துத் தான் வைத்திருந்தான் சின்னக்குட்டி. இருவரும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகிய மகிழ்ச்சியில் இருக்க, வேகவேகமாக உள்ளே வந்தார் தங்க மாரியப்பன்.

"என் பீரோல்ல இருந்து அந்த மஞ்சள் பையை எடுத்தியா டே?" என்று அவர் எடுத்த எடுப்பிலேயே விநாயகத்தை நோக்கிக் கேட்க,

"எந்த... மஞ்சப்பை?" என்று நக்கலாகக் கேட்டான் விநாயகம். அவன் அமர்ந்திருந்த தோரணையும் கால் மேல் கால் போட்டு மேலே இருந்த காலை ஆட்டி கொண்டிருந்த விதமும் இவன்தான் எடுத்தான் என்று சத்தியமே செய்தன.

"கோயிலுக்குக் குடுக்குறதுக்காக வைத்திருந்த பணம் டா! சாமி குத்தம் சும்மா விடாது.. ஒழுங்கா கொடுத்துருடா!" என்று தங்கமாரியப்பன் கேட்க, "நான்லாம் எந்தப் பையையும் எடுக்கல.. பணத்தையும் பார்க்கலை" என்றான்.

'சாமி ரூபாயா? இந்தப் பய சொல்லவே இல்லையே' என்று சின்னக்குட்டி யோசிக்க,

"மகன் முன்னேறணும்னு அக்கறை இல்லை.. கண்ட பரதேசியும் பண்டாரமும் வந்து பணத்தைக் கேக்குது.. இவரும் எடுத்துக் குடுக்காரு.. நான் எந்தப் பணத்தையும் எடுக்கலை.. எங்கேயாவது கிடைச்சா சொல்லி அனுப்புறேன்.. இப்ப கிளம்பச் சொல்லு!" என்று சின்னகுட்டியிடம் விநாயகம் கூறினான்.

கோபத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்கின மாரியப்பனுக்கு. ஒரு நாற்காலியில் அவரை அமர வைத்த சின்னக்குட்டி, "உக்காருங்க மாமா! எதுனாலும் பொறுமையாப் பேசுவோம்" என்று கூறினான்.

"டேய் டேய்! அஞ்சு வருஷமா ஒத்த ஒத்த ரூபாயா சேர்த்த பணம் டா தாரேன்னு வாக்குக் குடுத்துருக்கேன் டா.. மத்த பணம்ல்லாம் ரொட்டேஷன்ல எடுக்க முடியாதபடிக்கு இருக்கு.. குடுக்கச் சொல்லுடா!" என்று அவனிடமும் கெஞ்சினார் தங்கமாரியப்பன்.

"அந்த மஞ்சள் பையை எடுத்தியா?" என்று ஒப்புக்கு விநாயகத்திடம் சின்னக் குட்டி கேட்க, இல்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினான் விநாயகம்.

"அன்னைக்கே சொன்னா வசந்தா.. பணமா சேர்த்து வைக்காதீங்க அண்ணே! அப்பப்ப இரும்புக் கம்பி செங்கல் மணல்னு கோயில் பக்கத்தில அடிச்சுப் போடுங்க.. சிமெண்ட் கடைசில வாங்கிரலாம்.. தங்கக் கலசம் வீணான செலவு.. யாராவது ஏமாத்திருவாங்க.. பேசாம உங்க மேற்பார்வையில ஒரு கட்டடத்தைக் கட்டிப் போடுங்க.. காலத்துக்கும் நிக்கும்னு சொன்னா.. நான் தான் கேக்கல.." என்று மாரியப்பன் புலம்பினார். எப்போதோ வசந்தா சொல்லியிருந்தது அவருக்கு இப்போது ஞாபகம் வந்தது.

"அந்தக் கிழவிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அது சொல்றத கேட்டுட்டு இவரு ஆடுறாரு.. சொந்த மகன் முக்கியமா, அடுத்தவன் பொண்டாட்டி முக்கியமா? இவருக்கும் அந்தக் கிழவிக்கும் தொடர்புன்னு ஊரே பேசுது.. அப்படி அசிங்கப்பட்டு கெடக்காரு.. இப்ப என்னையே கேள்வி கேக்க வந்துட்டாரு" என்று கூறினான் தங்கவிநாயகம். கேட்ட வார்த்தைகளில் அப்படியே ஆணி அடித்தது போல் நின்றார் தங்கமாரியப்பன்.

அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் வசந்தாவையும் தெரியும். இருவரது பின்புலமும் குணமும் நன்கு அறிவார்கள். யாரும் இப்படிப் பேசியதில்லை. இவனது கோணல் புத்தியால் தான் இப்படித் தோன்றுகிறது. பணம் போனதை விட இந்தப் பழிச்சொல் அவரை அதிகம் காயப்படுத்தி விட்டது. "டேய் டேய்!" என்று கூறியவருக்கு வாயெல்லாம் நடுங்கியது.

"பெரியவங்களை அப்படிப் பேசாதடா!" என்று சின்னக்குட்டி தங்கவிநாயகத்தைத் தட்டுவது போல தட்டினான்.

இந்த சின்னத்தனமான கருத்தைத் தங்கவிநாயகத்தின் மனதில் விதைத்தவனே அவன்தான் என்பதை வசதியாக மறந்து விட்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம், "எனக்கு என்னமோ அந்த வசந்தாக் கிழவி கிட்ட உங்க அப்பா நிறைய குடுத்து வச்சிருக்காருன்னு தோணுதுடா!" என்று கூறி உசுப்பேற்றி இருந்தான். இவர்கள் பற்றவைத்த நெருப்பின் பின்விளைவுகள் தெரியாமல், ஒரு பெரியவரை ஏமாற்றிவிட்ட மகிழ்வில் இருவரும் இருந்தனர்.
 
Top